Saturday, October 3, 2020

விதியும், கவியும்..

பொதுவாக பிறப்பு எப்படி ஒருவருக்கு மகிழ்வை தருகிறதோ அதற்கு நேரெதிர் இறப்பு. ஒருவர் வருடக் கணக்காக உடல்நிலை சரியில்லாமல், படுத்த படுக்கையாக பிறருக்கு பாரமாக இருந்தால் கூட, அவர் டிக்கெட் எடுத்த இடம் வந்து இறங்க நேர்ந்தாலும், "இன்னும் கொஞ்ச நாள் இருக்கக் கூடாதா? அதற்குள் என்ன அவசரம்.. இப்படி எங்களை விட்டு போகுமளவிற்கு.." என்று ஆற்றாமையோடு, காலம் முழுக்க அவரை, அவர் பிரிவை நினைக்க வைத்து, கண்ணீர் வடிக்க செய்து விடும் அந்த மறைந்த ஒருவரின் பாசம் அனைத்தையும்  முழுமையாக பெற்று வாழ்ந்த  அவரது நெருங்கிய உறவுகளுக்கு....! (ஆனால்  நன்றாக நலமுடன் இருந்தவர் படுத்து நான்கைந்து நாட்களுக்குள் அவரின் இறப்பை அவசரமாக எதிர்பார்க்கும் உறவுகளும் இந்த உலகில் இருக்கிறார்கள். அது வேறு விஷயம்..:) )  

அனைவருக்குமே காதறுந்த ஊசியின் முனை கூட நம்முடன் வாராது என்பது தெரியும். ஆனாலும்  "நான்.. எனது.. என் பொருள்" என்ற எண்ணத்தை, ஒரு ஆழ்ந்த பற்றை இறுதி வரை எவராலும்  விட இயலவில்லை. ஒரு வேளை அது அனைவருக்கான விதியின் சாபமோ? ஒருவருக்கு அவர் வாழ்ந்த காலத்தில் எடுத்த நற்பெயரெனும் புகழ் ஒன்றுதான் அவர்  உடல் மறைந்த பின்னும் சில காலமாவது அவரைச் சுற்றி படர்ந்திருக்கும் ஒரு மாயை. அதுவும் காலப்போக்கில் கரைந்து வேறு பல வடிவங்களுக்கு இடம் கொடுத்து மாறுபட்டு விடும்  இயல்புடையது.  சம்பந்தமில்லாமல் என்ன உளறல் இது? என உங்களை  சிந்திக்க வைப்பதற்கு கொஞ்சம் மன்னிக்கவும். 

இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்பு காலை ஒரு கனவு. ஒரு உறவுக்கு பரிந்து மற்றொரு உறவிடம் பேசுகிறேன். என்ன பேசினேன்.. யார் அந்த உறவுகள்... என்பதெல்லாம் சுத்தமாக மறந்து விட்டது. கனவில் யாருக்கு அனுசரணையாக பேசினேனோ, அவரே  மிகவும் கொஞ்ச நேரத்தில் கோபமாக வெளியிலிருந்து வந்து கையிலிருக்கும் ஒரு இரும்பு  "வாளி" போன்ற கனமான பொருளை என் மேல் வீசுகிறார். முகத்தில் வந்து வேகமாக விழுந்த அதன் பாரம் தாங்காமல் நான் அப்படியே கீழே சுருண்டு விழுகிறேன். கொஞ்ச நேரம் கழித்து என்னுடன் பேசிக் கொண்டிருந்த வேறொருவர் என் பெயரை பல முறை கூவி அழைக்க நான் நனவுலகத்திற்குள் வந்து  விழுந்து அவசரமாக பதற்றத்துடன் எழுந்தேன்.

கனவுகள் பலதும் அர்த்தம் இல்லாமல் சிலசமயம் வருகின்றன. நாம்தான் அதற்கு ஒரு அர்த்தம் உண்டு பண்ணி கலக்கம்/மகிழ்ச்சி என்று அடைகிறோமோ என நான் எப்போதும் நினைப்பதுண்டு. 

எல்லா கனவுகளும் அதன்படியே வாழ்வில் நடப்பதில்லை. சில கனவுகள் நடந்து விடுமோ என்ற பயத்தை  நமக்குள் ஏற்படுத்தி நடத்திக்காட்டி விதியின் அருகில் இருக்கும் தைரியத்தில் நம்மை பார்த்து எக்களிப்புடன் சிரிக்கும் சுபாவம் கொண்டவை. ....சமயத்தில் சில மழையில் நனைந்த தீபாவளி வெடியாய் பிசுபிசுத்து நம்  பயத்தை பற்றிய  அக்கறை கொள்ளாதது போல் ஒதுங்கி விடும் பழக்கங்களை உடையவை.. .. 

அன்றாடம் நாம் பேசும் பேச்சுக்களே, நடந்த விஷயங்களே சில நேரம் கனவாக வருவதுண்டு. பலசமயம் எதற்கும், யாருடனான சம்பந்தமே இல்லாமலும்  கனவுகள் வருவதுண்டு.

 சில கனவுகள் விடியலில் கண் திறந்ததும் மறந்து விடும். ஆனால், இது நான் கண் விழித்ததே இந்த கனவினால்தான் என்பதினால், "இது காலன் என் மீது தன் பாசம் வீசி கொல்லும் கனவாக எனக்கு அன்று காலையிலிருந்து ஒரே கலக்கம்..." ஏற்பட்டது. "அதிகாலை கடந்த அந்தக் காலையில்,  கொஞ்சம் தாமதமான பொழுதில் வந்ததுதான் இந்த கனவு எனவே பலிக்காது என வீட்டிலுள்ளவர்கள் சமாதானபடுத்தினாலும், அன்றைய தினம் முழுதும் கனவின் நிஜப்பார்வைகள் வந்து  என்னை சலனபடுத்தியபடி இருந்தது." அதன் பின் தினசரி வெவ்வேறாக  வந்த கனவுகளில் அது இப்போது மறக்கவும்  தொடங்கி விட்டது. மற்றபடி எப்போதும் நடப்பதை (விதியை) யாரால் தடுக்க முடியும்? 

தான் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் தன் காலிலுள்ள காற்றை நம்பி வாழும்   "இதைப்"  பற்றிய ஒரு சிந்தனையில் எழுந்த ஒரு கவிதை.... பதிவுலகத்தில் எத்தனையோ பேர்களின்  ஆழமான அழகான கவிதைகளை படித்த பின், இதை கவிதை எனச் சொல்வதற்கும் எனக்கு மனமில்லை. . இருப்பினும்.... ஒரு...உரைநடைக் 

கவிதை. . பாராமுகம்...  .

விரும்பிச் சொல்லும்

சிறு விஷயங்களையும், 

விருப்பமின்றி புலம்புவதையும், 

விருப்பத்தோடு ஆமோதித்து, 

வித்தியாசங்கள் ஏதுமின்றி, 

"உச்" கொட்டியுள்ளாய்... 

என் வேதனைகள் தீர்ந்திடவே

வெகு நாட்களுக்கு பின், 

வேலை ஒன்று கிடைத்ததை

வேறெங்கும் சொல்லாமல், 

நான் வீடு தேடி வந்ததும் 

விருப்பமாய் உன்னிடம் பகர்ந்தும், 

உன் முகமும் காட்டவில்லை. 

"உச்" சென்ற  ஒலியும் எழுப்பவில்லை.

இது நாள் வரை என்

பார்வையில் மட்டும் பட்டு, 

என் வெறுமை என்னும்

கனத்த போர்வை விலக்கி, 

பழகிய பாசத்திற்காகவோ ,

இல்லை, நீ இருக்குமிடத்திற்கு

குடக்கூலிகள் என்ற ஏதும்

நிர்பந்திக்காத என்

நியாய உள்ளத்திற்காகவோ, 

பதிலுக்கு உன் விடைகளாய், 

"உச்" சென்ற ஒலியை மட்டும்

பாரபட்சம் ஏதுமின்றி, 

பகிர்ந்து வந்த பல்லியே.. .!

இதற்கெல்லாம் இனியதாய் ஒர்

பதிலேதும் சொல்லாமல்,  

பயங்கர அசட்டையுடன் நான்

பல தடவைக்கும் மேல், 

பாராமுகங்கள் காண்பித்ததில், 

பரிதவித்த ஒரு மனதோடு

இன்று  நீ என் 

பார்வையில் படாமல், உன்

பாதை மாறி போனாயோ...? 

ஒரு வாரத்துக்கு மேலாக இது மேலே பரணின் கதவில் நின்று கொண்டு தினமும் காலையிலிருந்து இரவு வரை பார்வையில் பட்டதோடு மட்டுமில்லாமல்,"எங்கே ஏதாவது உணவு பண்டங்களை சுவைக்கும் ஆசையில் அருகே நெருங்கி வந்து விடுமோ..?" என்ற கவலையில் மேலே ஒரு பார்வையும், கீழே அடுப்பில் ஒரு பார்வையுமாக ஒருவார காலம் தள்ள வைத்தது. பின், என் பார்வையின் சூடு பொறுக்காமல், அது இடம் மாறி அதன் விதித்த விதிப்படி எங்கோ சென்றதில் எழுந்த "கவி" தைதக்கா, தைதக்கா என வந்து குதித்தது. எப்படி உள்ளதென நீங்கள்தான் சொல்ல வேண்டும். 

நான் பதிந்த இரண்டின் இறுதியிலும் விதி என்றதும், விதியின் கணக்கும் ஒரு கவியாக "நானும்" என்றபடி ஆசையோடு வந்துதிக்க, . உங்களுக்கும் ஆட்சேபனைகள் ஏதும் இருக்காதென்ற நம்பிக்கையில் அன்புடன் அதையும் இந்தப் பதிவுக்குள் இறங்க சம்மதித்தேன். 

அந்தக்.. . 

கவிதை..விதியின் கணக்கு... 

பூட்டிய வீடு என்றாலும்,

புழங்கும் வீடாகி போனாலும்,

தினமும், ஒரே மாதிரி 

கூட்டிக் கழித்து, பெருக்கிப்

பார்த்தால், இறுதியில்

குவிவது குப்பைகள்தான்

நம் மனதாகிய மாளிகையிலும், 

அன்றாடம் குவியும் கணக்கற்ற 

குப்பைகளை களைவதும், 

களைந்ததை கழிக்காமல், 

கூட்டிப் பெருக்கி, வகுத்துப் 

பார்த்து பத்திரப்படுத்துவதும்

கடவுள் போடும் நான்கு விதிப்

பயன்களை ஒத்த கணக்குதான். 

அவ்வாறான மனக்கணக்குகளில்

கணக்குகள் பிறழ்ந்தால், 

கணக்கின்றி துயர் பெறும் நாம்

விதி(யின்) விலக்காக வரும் 

விடைகளை மட்டும் விரும்பி, 

நம்முடையதான கணக்கில்

சேர்த்து நம் பயி(முய)ற்சி என்கிறோம். 

இதில் வகைகள் வேறாயினும், 

இறுதி வடிவம் பெறுவது 

விதியின் விருப்பத்தில் விளையும்  

வித்தியாசமற்ற விடைகள்தான்.. 

வலியதாகிய விதியின் கணக்கில்

வரும் விடைகள் அனைத்துமே

அவை ஆரம்பத்திலேயே

வலியுறுத்தி நிர்ணயத்தவைதான்.

விபரங்கள் யாவும் அறிந்தும், 

விபரமில்லாமல், மனம் வருந்தி, 

விதியை சபித்து, நொந்து போவதும்

வாழ்வில் நாம்  பெற்று வந்த 

விதி தந்த  வரங்கள்தான்.. 


இப்பதிவை படித்து  நல்லதொரு கருத்துக்களை தரும் என் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு என் பணிவான நன்றிகள்.... 🙏... 


59 comments:

  1. சில கனவுகள் அர்த்தம் இருக்கோ இல்லையோ, நம் நிம்மதியை சில மணி நேரங்கள் குலைத்துவிடும் தன்மை கொண்டது.

    கனவைப் பகிர்ந்து மனக் கலக்கத்தைக் குறைத்துக் கொண்டுள்ளீர்கள். எனக்கென்னவோ நீங்கள் பார்க்கும் சீரியல்களின் கலவையாகத் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் முதல் வருகை தந்து கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

      உண்மைதான்.. அன்று முற்பகல் வரை அந்த கனவு வந்து சிறிது நிம்மதியை குலைக்கத்தான் செய்தது. அன்றிரவு மறுபடியும் அது தொடருமோ என்ற எண்ணமும் உறங்க ஆரம்பிக்கும் முன் வந்தது. வீட்டில் அனைவரிடம் சொல்லியதை போல பதிவிலும் அனைவரிடமும் சொன்னதில் கலக்கம் குறைந்து விட்டது. நான் எந்த சீரியலும் பார்ப்பதேயில்லை. எனக்கு அதற்கு நேரமும் இல்லை. நீங்கள் யதிவுக்கு வந்து தந்த நல்லதொரு கருத்திற்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. கவிதை (மடக்குக் கவிதை) ரசிக்கும்படி இருந்தது. உங்களுக்குள் நிறைய திறமைகள் ஒளிந்துள்ளன. பாராட்டுகள்.

    அது சரி... காரையிலேயே த்த்துவ விசாரத்தில் படிப்பவர்களை இறங்க வைப்பது நியாயமா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /கவிதை (மடக்குக் கவிதை) ரசிக்கும்படி இருந்தது./

      இந்த வரிகள்தான் எனக்கு நினைவுக்கு வரவில்லை நான் இதை உரைநடை கவிதை என்று எழுதி விட்டேன். "முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதையாய்" கவிதைகள் எழுத ஆசையாக உள்ளது. ஏதோ எழுதி வைத்திருக்கிறேன். அதையும் நன்றாக இருப்பதாக பாராட்டியது மனதில் பெரும் உற்சாகத்தை தருகிறது. நன்றி.

      /அது சரி... காரையிலேயே த்த்துவ விசாரத்தில் படிப்பவர்களை இறங்க வைப்பது நியாயமா?/

      ஹா.ஹா. இருப்பினும் இந்த தத்துவ விசாரங்கள் நாம் பிறக்கும் போதே நம்முடன் பிறந்து வளர்ந்து வருவதல்லவா..? அதனால் அனைவருக்கும் அது பழகிய ஒன்றாகத்தான் இருக்குமென நினைத்து விட்டேன். விசாரங்கள் அதிகப்படியாக வருத்தியிருந்தால் மன்னிக்கவும்.

      தங்களின் அன்பான கருத்துக்களுக்கு என் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. நல்லவேளையாகப் பெரும்பாலான கனவுகள் எனக்கு நினைவில் இருப்பதில்லை. அதிலும் நான் கனவு கண்டு கத்துவதாகச் சொல்லும் என் கணவர் என்ன கனவுனு கேட்டால் விழிப்பேன். சொல்லத் தெரியாது. ஆனால் இன்று காலையிலேயே ஓர் கனவு! அதைக் கனவென்பதா? நினைவென்பதா? புரியலை. ஏப்ரல் மாதம் சென்னையில் நடந்திருக்க வேண்டிய ஓர் திருமணம் பற்றியும் அந்த மணப்பெண்ணின் அப்பா நேரில் வந்து ஒத்திப் போட்ட திருமணம் நடக்கவிருப்பதாய்ச் சொல்லி அழைக்க வந்திருப்பதாயும் கனவு/அரை நினைவு! அப்போத் தான் நம்மவர் என்னை அழைத்தார், காலை ஐந்து மணி ஆகிவிட்டதே! என்று!

    ReplyDelete
    Replies
    1. அப்போதான் நம்மவர் அழைத்தார்... என்ன கனவு கண்டு கொண்டிருக்கிறாய்.. கல்யாணத்துக்குப் போக ஆட்டோக்காரன் பத்து நிமிஷத்தில் வந்துவிடுவான் - என்று முடிப்பீர்களோ என எதிர்பார்த்தேன்

      Delete
    2. சொல்லலாம் தான். ஆனால் இன்னமும் கல்யாணம் எப்போனு தெரியலை. ரொம்ப நாட்களாய் எதிர்பார்த்துக் காத்திருந்த திருமணம்! :( அதோடு ஆட்டோவில் எல்லாம் போக முடியாது, வண்டியில் தான் போகணும்.

      Delete
    3. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      எனக்கும் இரவில் கண்ட எந்த கனவுகளும் கோர்வையாக நினைவுக்கு வராது. சிலது இந்த மாதிரி உறங்கி எழுந்த பின்னும் நினைவில் நின்று விடும். அப்படியே ஒரு நாள் நினைவிலிருந்ததை வீட்டில் அனைவரிடம் சொல்லியதை எப்போதும் நினைவுக்கு கொண்டு வந்து சொல்லவும் முடியாது. மொத்தத்தில் கனவுகளே ஒரு புரியாத புதிர்தான்.

      எ. பியிலும் சகோதரர் ஸ்ரீராம் அவர்களுடன் அவரின் பதிவுகளில் இந்த கனவுகளைப் பற்றி நிறைய கருத்துக்களை பகிர்ந்துள்ளோம். சகோ இந்தப்பதிவுக்கு கருத்திட இன்னமும் வரவில்லை. அவர் வந்தால் அவரின் கனவு அனுபவங்களையும் பகிர்வார்.

      தங்களுக்கு வந்த கனவு நல்ல கனவுதான். சீக்கிரமே ஒத்திப் போட்ட தங்கள் உறவின் அந்த திருமணம் நல்லபடியாக நடந்திட நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. மிகச் சமீபத்தில் நான் கண்டா கனவு ஒன்று பகிரக்கூட முடியாத அளவு...   நினைத்தாலே நடுங்குகிறது.

      Delete
    5. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்களைத்தான் எதிர்பார்த்து கொண்டேயிருந்தேன். உடன் வந்து கருத்துக்கள் தந்தமைக்கு என் மன மகிழ்ச்சியுடன் கூடிய அன்பான நன்றிகள்.

      /மிகச் சமீபத்தில் நான் கண்டா கனவு ஒன்று பகிரக்கூட முடியாத அளவு... நினைத்தாலே நடுங்குகிறது/

      உண்மைதான்.. கனவுதான் என்றாலும் அது ஏதோ உண்மை சம்பவத்தை கண்ணாற காண்பது போல் சமயத்தில் இருக்கிறது. அவ்வளவு பயங்கர கனவிலிருந்து மீண்டு வருவது சற்று சிரமந்தான். ஆண்டவன் அந்த மன உறுதியை தங்களுக்கு தந்து எவ்வித இன்னல்களுமின்றி நற்செயல்கள் நடந்தேற நானும் அந்த ஆண்டவனை மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. உங்கள் கவிதைகள் இரண்டும் அருமையான கருத்துடன் அமைந்துள்ளன. மிகத் திறமையாகவும் பொருள் பொதிந்து இருக்கும்படியும் கவிதையானாலும் சரி பதிவானாலும் சரி நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் பாராட்டுகளுக்கு என் எழுத்துக்கள், கவிதைகள் முழு தகுதி பெற்றவையா என்பது தெரியவில்லை. ஆனால், தங்களது பாராட்டுக்கள் எனக்கு மனமகிழ்ச்சியை அளிப்பதுடன், இன்னமும் நிறைய எழுத வேண்டுமென்ற ஊக்கத்தையும் தருகிறது. தங்கள் வாழ்த்துக்கள், மற்றும் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. நெல்லை சார் சரியான பின்னூட்டம் எழுதியுள்ளார். கவிதை 6 அல்லது 8 வரிகளுக்கு மேற்படாமல் சொல்லவேண்டிய விசயத்தை நச்சென்று  சொல்ல வேண்டும். தங்களுடைய கவிதையை கவிதை என்று சொல்ல மனம் வரவில்லை. ஆனால் முதல் கவிதையில் உள்ள எதிர்பார்ப்பு ஈர்க்கிறது. இரண்டாவது கவிதையில் தத்துவம் உரைக்கிறது. 

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதை எழுதுவதைப்பற்றி தங்கள் குறிப்பிட்டதை நினைவில் இருத்திக் கொண்டேன். மிக்க நன்றி. கவிதை எழுத ஆசை படும் நான் ஆரம்பிப்பது என்னவோ தாங்கள் கூறியபடிதான். ஆனால் எழுதும் வேகத்தில் வார்த்தைகள் நிறைய வந்து ஒட்டிக் கொள்கின்றன இருப்பினும் என் எழுத்தையும் ரசித்து பாராட்டி இருப்பதற்கு தங்களுக்கு பணிவான நன்றிகள். உங்களைப் போன்ற சிறப்பானவர்கள் என் பதிவுக்கு வந்து பதிவை பாராட்டுவதற்கு நான் பெருமை கொள்கிறேன். தங்கள் ஊக்குவிப்பிற்கு மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. அடிக்கடி கனவுகள்...
    ஏதேதோ சம்பவங்கள்.. என் தந்தை காலமாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே கனவில் வந்து உணர்த்தினார்.. அப்போது குவைத்தில் இருந்தேன்...

    அது 1994. சரஸ்வதி பூஜை நாள்... மறுநாளில் இருந்து ரபால் தந்தி ஊழியர்களின் நாடு தழுவிய அறப் (!) போரட்டம்.. தந்தை மறைவு பற்றிய மேல் தகவல் எதுவும் கிடைக்க வழியின்றிப் போனது...

    பதினோரு நாள் கழித்து தான் ஊருக்கு வர முடிந்தது...

    சரி. இதற்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்?..

    கனவுகளைப் பற்றி சொல்லியிருப்பதற்காக...

    பிறகு வருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் கனவு அனுபவத்தின் சோகம் என்னை மிகவும் வருத்தப்படச் செய்தது.அந்த நேரத்தில் உங்கள் மனம் எவ்வளவு வேதனைகள் அடைந்திருக்கும் என்பதை நான் உணர்கிறேன். அவ்வாறே எங்கள் தந்தை இறப்பதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்,அவர் தவறிப் போவதாக ஒரு கனவு எனக்கும் வந்தது. உடன் இருப்பவர்கள் அவ்வாறு ஒருவர் கனவில் இறப்பதாக வந்தால் அவருக்கு ஆயுள் கெட்டியென ஆறுதல் படுத்தினார்கள். ஆனால் அவர் எங்களை விட்டு பிரிந்ததாக அடுத்த பதினைந்து நாட்களில் தி. லி யிலிருந்து அண்ணா தகவல் தந்ததும், அப்போது சென்னையிலிருந்து நாங்கள் மூன்று குழந்தைகளுடன் அந்த ராத்திரியில்,இரண்டு மூன்று பஸ் மாறி வந்தும் என் தந்தையை பார்க்க முடியவில்லை. அந்த சோகம் இன்றும் என்னுள் ஆறாத தழும்பாய் இருக்கிறது.

      . /இதற்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்/

      சம்பந்தமே இல்லை. என் கவிதை என்ற பெயரில் நான் ஏதோ எழுதியதை பக்கபலமாக இருந்து தூக்கி நிறுத்த என் கனவும், கனவு சம்பந்தபட்டவைகளும் உபகாரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அவைகளையும் பதிவில் இணைத்தேன். அவ்வளவுதான்.. பிறகு மறுபடியும் கருத்திட வருகிறேன் என்று சொன்னதற்கும், தாங்கள் இட்ட கருத்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. கனவுகள் - பல சமயங்கள் நமக்கு வருத்தம் தருபவை. பெரும்பாலும் கனவுகளையோ அதன் பலன்களைப் பற்றியோ யோசித்தது இல்லை.

    பகிர்ந்து கொண்ட கவிதைகள் - நன்று. சிந்திக்க வைத்தது உங்கள் வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உண்மைதான்...கனவுகள் நினைவிருக்கும் வரை வருத்தம் தரக்கூடியவைதான்.

      /பெரும்பாலும் கனவுகளையோ அதன் பலன்களைப் பற்றியோ யோசித்தது இல்லை. /

      அதுதான் நல்லது. அவைகளை மறப்பதற்கு நம் மனதை பிற வேலைகளில் கவனம் செலுத்தி அதைப்பற்றி யோசிக்காமல் மறந்து விட்டால் நல்லது.

      என் எழுத்தை ரசித்து பாராட்டியிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஊக்கமிகுந்த கருத்துரைகள் என் எழுத்தை செப்பனிட உதவும் என மனமார்ந்த நன்றிகளுடன் கூறிக் கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. கனவுக்கான காரணத்தை விஞ்ஞான ருதியாக இதுவரை உறுதியாக சொல்லப்படவில்லை.

    இருப்பினும் சிலருக்கு நடக்கப்போகும் நிகழ்வை கனவு காட்டி விட்டு செல்கிறது உண்மைதான்.

    கவிதைகள் அருமை ரசிக்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் கருத்து உண்மைதான்.. காலங்காலமாய் கண் மூடினால் வரும் கனவுகளுக்கு காரணம் கண்டு பிடிக்கவில்லை. நல்லதாக இருந்தால், மகிழ்ச்சியடைகிறோம் . கொஞ்சம் கெட்ட கனவாக வந்தால் மனவுளைச்சல் அடைகிறோம்.

      /சிலருக்கு நடக்கப்போகும் நிகழ்வை கனவு காட்டி விட்டு செல்கிறது உண்மைதான்./

      ஆமாம்.. மேலே சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் அனுபவ கருத்தையும் அதற்கு பதிலாக என் அனுபவ பதில் கருத்தையும் படித்துப் பாருங்கள். இந்த மாதிரி நிறைய பேருக்கு கனவு உண்மையாகி விடும் சோகம் எவ்வளவு மன வேதனைகளை தருகிறது என்பதை உணர்கிறோம்.

      கவிதைகளை ரசித்து பாராட்டியமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. இரண்டு கவிதைகளும் மிக மிக அருமை.தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் என் பதிவுகளுக்கு வந்து பதிவுகளையும். கதை மற்றும் இது போன்ற கவிதைகளையும் பாராட்டி ஊக்குவிப்பது என் எழுத்துக்களை சீரமைத்துக் கொள்ள சௌகரியமாக உள்ளது என்பதை மனம் நிறைந்த நன்றிகளுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பதிவுலகில் அடியெடுத்து வைத்த என் ஆரம்ப பயணத்திலிருந்தே உங்கள், கருத்துக்களும், சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களது கருத்துக்களும் என பதிவுகளுக்கு துணையாக வந்திருக்கின்றன. இப்போது என் பதிவுகளுக்கு தொடர்ந்து வந்து அன்பான கருத்துகள் தரும் அனைவருக்குமே நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. உங்கள் கனவு மனதை சங்கடபடுத்தி விட்டது.
    நல்லது செய்தாலும் இப்படி சிலநேரம் மனசங்கடங்கள் வரும் என்பதை கூறுகிறது கவிதை. வேறு ஒன்றும் இருக்காது பயப்பட வேண்டாம்.

    மாயவரத்தில் இருந்த வீட்டில் பல்லிகள் நாம் என்ன பேசினாலும் உச் கொட்டும். இங்கு உள்ள பல்லிகள் மெளனவிரதம் இருக்கிறது.

    உங்கள் கவிதைகள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    உங்கள் திறமைகள் வியக்க வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நல்லது செய்தாலும் இப்படி மனசங்கடங்கள் வரும் என்று சொல்கிறது கனவு. இப்படி வர வேண்டும், கவிதை என்று தவறாக எழுதி விட்டேன்.

      Delete
    2. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      என் கனவைப் பற்றிக் கூறி உங்கள் மனதை சங்கடபடுத்தி விட்டேனா சகோதரி. ஆனால், எனக்கு உடன் பிறந்த சகோதரி என்று எவரும் இல்லை. உங்களிடமெல்லாம் உரிமையாக இதை கூறும் போது சகோதரர் நெல்லைத் தமிழர் கூறுவது போல் சற்று மனக்கலக்கத்தை குறைத்துக் கொள்வதாக உணர்கிறேன்.

      தாங்கள் பயப்பட வேண்டாம் என்று கூறியது ஆறுதலாக இருந்தது. அந்தக் கனவைப் பற்றிய பய உணர்ச்சி இப்போது சற்று நீங்கி விட்டது. உவ்கள் ஆறுதலான வார்த்தைகளும் எனக்கு உறுதுணையாக உள்ளது. ஆறுதலாக சொன்ன உங்களுக்கு மிகவும் நன்றி.

      இறைபக்தியில் மனதை செலுத்த அந்த ஆண்டவன் எனக்கு நல்ல பக்குவத்தை தர வேண்டுமென தினமும் பிரார்த்தித்து கொண்டேயிருக்கிறேன்.

      பல்லிகளைப் பற்றிய தங்கள் அனுபவங்களை விளக்கியிருப்பது சிறப்பாக இருந்தது.

      கவிதைகளை நன்றாக இருப்பதாகக் கூறி, பாராட்டியமைக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      உங்கள் அனைவரின் திறமைகளுக்கு முன் என் செயல்பாடுகள் மிக குறைவுதான். தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வணக்கம் சகோதரி

      மீள் வருகை தந்து விளக்கியிருப்பதை புரிந்து கொண்டேன். நல்லதை நினைத்து, நல்லதை செய்து வந்தாலும், ஊழ்வினைப்பயனால், தீமைகள் வரும் போது மனம் பதறுகிறது.

      தாங்கள் தவறாக டைப்பிங் செய்து விட்டோமென வருந்த வேண்டாம். தவறான வார்த்தைப் பிழைகள் நம்மையறியாமல் அனைவருக்குமே நிகழ்வதுதானே.. மிக்க நன்றி சகோதரி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. அன்பு கமலா,
    கவிதை இனிமை.
    கனவுகளின் பயங்கரம் எனக்கும் உண்டு. நல்ல வேளையாக மறந்து
    போகின்றது.
    இல்லாவிட்டால் நினைவில் நின்று யோசிக்க வைக்கும்.
    நம் வாழ்வின் அதிர்ச்சி நிகழ்வுகளை
    வேறு வடிவத்தில் மனம் சிந்திக்கிறதோ
    என்னவோ.

    பல்லிகள் உறுத்து விழித்த நாட்கள் எனக்கும் உண்டு.
    பல்லிகளைத் துரத்த பெஸ்டிசைட் ஆட்கள் வந்து விரட்டிச் சென்றார்கள்,
    அவர்கள் கை தட்டினதும் அவைகள் வந்து விழுந்தன.

    சமையலறையில் அவைகளின் ஆதிக்கம்
    நடுங்க வைக்கும் ஒன்று.
    இப்போது வீடு எப்படி இருக்கிறதோ.
    இதுவும் ஒரு கனவாக வருமோ:)
    நல்ல பகிர்வு மா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம் சகோதரி. கனவுத் தொல்லைகள் இல்லாமல் நல்ல ஆழ்ந்த உறக்க வரப் பெற்று ஆரோக்கியமாக வாழ்வும் ஒரு கொடுப்பினை வேண்டும். சில அனாவசியமான கனவுகள் தூக்கத்தை கலைத்து விடும். தூக்க குறைபாடு பல ஆரோக்கிய குறைகளையும் உடனழைத்து கொண்டு வந்து விடும். நீங்கள் சொல்வது போல் அவை சில நாட்களில் மறந்து விடுகிறது. அது வரைக்கும் ஷேமம்.

      பல்லிகளைப்பற்றி தங்கள் அனுபவங்களை கூறியது மிகச் சிறப்பு. அது நாம் விரட்டும் போது முறைப்பதை நானும் பார்த்திருக்கிறேன்

      /இதுவும் ஒரு கனவாக வருமோ:)/

      அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளே முக்கால் வாசி கனவுகளையும் ஆக்கிரமித்து கொண்டு விடுகிறது. சமயத்தில் நாம் நினைக்காத ஒன்று அதுவாக கனவில் வந்து நடத்திக் காட்டும் போது பயங்கள்/மகிழ்ச்சிகள் என வருகிறது. அனைவருக்கும் நல்ல கனவுகள் வர வேண்டுமென தினமும் இன்றிலிருந்து பிரார்த்தித்துக் கொள்கிறேன்

      தங்களுடைய கருத்துக்களுக்கும், கவிதையை குறித்த பாராட்டுகளுக்கும் என மன மகிழ்ச்சியுடன் நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. முதல் இரண்டு பாராவில் ரொம்ப யோசிக்க வைத்து விட்டீர்கள்.  கனவுகள் எனக்கு ரொம்ப சகஜம்.  சில  நன்றாகவே நினைவில் நிற்கும்.   அதைப்பற்றி அவ்வப்போது பதிவுகள் எழுதி பக்கங்கள் நிரப்பி இருக்கிறேன்!

    உங்கள் கவிதைகள் அருமை.   நீங்கள் சொல்ல வந்தது பல்லி என்றதும் பக்கென்று சிரித்து விட்டாலும், அந்த வெறுமை என் மனதையும் தாக்கியது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆமாம்.. உங்கள் பதிவில் நிறைய கனவுகளைப் பற்றி அலசி பேசியிருக்கிறோம். இதை எழுதி வெளியிடும் போதும் உங்களையும், உங்கள் கனவு பதிவுகளையுந்தான் நினைத்து கொண்டே வெளியிட்டேன். சென்ற பதிவுக்கும் உங்களை காணவில்லையே என நினைத்துக் கொண்டேயிருந்ததால், இந்த கனவு பதிவுக்கு உங்களை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்தேன், நினைத்தவுடன் நீங்கள் வந்து பதிவை ரசித்து படித்து சிறப்பித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதைகள் அருமை என்ற பாராட்டு மகிழ வைக்கிறது. உங்களைப் போல் எழுதும் திறமை எனக்கில்லாவிடினும், பல்லி கவிதையில் அந்த வெறுமை தங்கள் மனதையும் தாக்கியதாகக் சொன்னதில் அதனுடைய பாராட்டுக்கள் என்னை முழுமையாக வந்தடைந்ததை மகிழ்வுடன் உணர்ந்தேன். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. கவிதை வரிகள் பலவற்றை எண்ண வைக்கின்றன... அருமை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உங்களைத்தான் காணவில்லையே என நினைத்திருந்தேன். உங்களின் வேலைச் சுமையிலும், வந்து பதிவை ரசித்துப்படித்து நல்லதொரு கருத்தை தந்தற்கும், பாராட்டிற்கும் மன மகிழ்ச்சியடைந்தேன். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. சற்று ஆழமான, கனமான பதிவு. சற்றே இளக்கமாக முதல் கவிதை. 
    சற்று ஆழமான, கனமான பதிவு. சற்றே இளக்கமாக முதல் கவிதை. காணும் சில கனவுகள் பலிப்பதால் எல்லா கனவும் பலித்து விடுமோ  என்று அச்சம் வரும். 

    ReplyDelete
  15. வணக்கம் சகோதரி

    தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பதிவை ரசித்து நல்லதொரு கருத்துக்களை கூறியமைக்கு என் மன மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்

    /காணும் சில கனவுகள் பலிப்பதால் எல்லா கனவும் பலித்து விடுமோ என்று அச்சம் வரும்./

    அச்சம் வந்தாலும், செய்வதற்கொன்றுமில்லை. நடப்பது நடந்து கொண்டேதானே இருக்கும். அதை தாங்கும் மன வலிமைகளை மட்டும் இறைவன் அருள வேண்டும். கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  16. நல்ல பதிவு, எனக்கும் இது போல் கனவுகள் விட்டு விட்டு வரும், எழுந்ததும் ஒன்றும் புரியாது. பல் லிக்கு பல்லவி சூப்பர் 🙂

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அதிரா சகோதரி.

      தங்கள் வருகை கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நன்றி.

      நன்றியுடன்.
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. வணக்கம் சகோதரி

      தங்களின் முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      முதலில் என தவறுக்கு உங்களிடம் தாழ்மையான மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பெயரை ஆழ்ந்து படிக்காமல், நம் அதிரா சகோதரியென நினைத்து அவசரமாக பதிலளித்து விட்டேன். (அவர்களை நீங்கள் அளித்திருக்கலாம்.) உங்களைப் போன்ற சிறந்த பதிவர்கள் என் தளம் வர நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். வந்து பதிவை படித்து சிறப்பித்து பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள். மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. நல்ல பதிவு, எனக்கும் இது போல் கனவுகள் விட்டு விட்டு வரும், எழுந்ததும் ஒன்றும் புரியாது. பல் லிக்கு பல்லவி சூப்பர் 🙂

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரா வணக்கம்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல்லிக்கு பாடிய பல்லவி கேட்டடு ரசித்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்தப்பதிவுக்கும் வந்து நல்லதொரு கருத்துக்கள் தந்தமைக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. கமலாக்கா இது நம்ம பூனை இல்லை!!!!! இவர் மற்றொரு ப்ளாகர்.

      இந்த பூசார் இப்படிப் பேர் வைப்பதினால் உங்களுக்குக் குழப்பம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.ஹா ஹா ஹா ஹா ஹா பாருங்க அவங்க ப்ராக்கெட்டுக்குள்ள சஹானா இணைய இதழ்னு கொடுத்திருக்காங்க..

      கீதா

      Delete
    3. வணக்கம் சகோதரி

      வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகட்டும். இப்போதுதான் உங்களை எ. பியில் நல்வரவு கூறி விட்டு வந்தேன். இங்கு என் பதிவில் உங்கள் கருத்து. நூறு வயது உங்களுக்கு.


      /கமலாக்கா இது நம்ம பூனை இல்லை!!!!! இவர் மற்றொரு ப்ளாகர்./

      ஆகா.. இப்போதுதான் பார்க்கிறேன். இவர்களை நான் சகோதரி கீதா சாம்பசிவம் பதிவில் அறிந்திருக்கிறேன். கருத்து வந்த அன்றைய முதல் நாள் இரவு தூக்கமில்லாத உடல் அசதியுடன் கூடிய கலக்கத்தில், (நீங்கள் சொன்ன மாதிரியான குழப்பத்தில்) நானும் தவறுதலாக அப்பாவி தங்கமணி அவர்களுக்கு அதிரா என மாற்றி பதிலளித்து விட்டேன்.போலும்... அன்று நான் பார்க்கும் போது சஹானா இணைய இதழ் என்று இல்லை. ஒரு வேளை அவரே என் தவறைப் பார்த்து பின் அதை இணைத்துள்ளாரோ? தெரியவில்லையே...! தங்கமணி அவர்களும் என்னைப்பற்றி என்ன நினைப்பார்.? தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் தங்கமணி சகோதரி... ( அன்றுதான் சகோதரி அதிரா நீண்ட நாட்கள் கழித்து வலைத்தளம் சுற்றி வந்து கொண்டிருந்தார். இங்கும் வந்திருக்கிறார் என நினைத்து விட்டேன். அதே நினைவில் இப்படியான தவறு நடந்து விட்டது எ நினைக்கிறேன். ) சுட்டிக் காட்டியமைக்கு உங்களுக்கும் மிக்க நன்றி கீதா சகோதரி. அதிரா வந்தால் இதை வைத்தே ஒரு கலாய்ப்பது கலாய்த்து விடுவார்.. ஹா ஹா ஹா. நன்றி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. ஹாஹா, கமலா இவங்க பெயர் தங்கமணி இல்லை. அப்பாவி தங்கமணி என்பது வலைப்பதிவுகளுக்காகச் சூட்டிக் கொண்ட பெயர். வலைப்பதிவுகளின் ஆரம்ப காலத்தில் பதிவுகள் எழுதும் பெண்களைத் தங்கமணி எனவும் ஆண்களை ரங்கமணி எனவும் விளையாட்டாகச் சொல்ல ஆரம்பித்தனர். அதை வைத்துத் தான் நானும் அவ்வப்போது என் கணவரை நம்ம ரங்க்ஸ் என்று சொல்லுகிறேன். ஏதோ திரைப்படங்களில் கணவன்மார் ரங்கமணி எனவும் மனைவிமார் அனைவரும் தங்கமணி எனவும் சொல்லப்பட்டு நகைச்சுவைக் காட்சிகள் வந்திருக்கின்றன. அதை வைத்து இதை ஒருத்தர் ஆரம்பித்து வைக்க அந்த நாட்களில் எல்லோருமே ரங்கமணி தங்கமணி தான். அதை என் போன்ற சிலர் இன்னமும் கடைப்பிடிக்கிறோம். இவங்க அப்படி அப்பாவியான தங்கமணி. உண்மைப் பெயர் புவனா கணவர் பெயர் கோவிந்த். மகள் பெயர் சஹானா. மகள் பெயரில் தான் இப்போது மின்னிதழ் ஆரம்பிச்சிருக்காங்க. அதான் அடைப்புக்குள் வந்திருக்கு. பழக இனிமையானவர். நகைச்சுவை உணர்ச்சி தூக்கலாக இருக்கும். பிரமாதமாகக் கதைகள் எழுதுவார். அமேசானில் இவரின் நாவல்கள் விற்பனையில் சக்கைப்போடு போடுகின்றன. என்ன ஒண்ணே ஒண்ணு! இவங்க கையில் அகப்ப்ட்டுக்கொண்டு அந்த "இட்லி" தான் படாத பாடு படும். இஃகி,இஃகி, இஃகி, ஏடிஎம், இது போதுமா? முக்கியமா இட்லியைப் பத்திச் சொல்லிட்டேன். :))))))

      Delete
    5. அப்பாவியின் (அப்போதைய) இட்லி ரொம்ப பேமஸ்...    அதைப் பற்றியும் கேளுங்க!

      Delete
    6. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி.

      தாங்கள் வருகை தந்து விபரமாக சொல்லியிருப்பதை புரிந்து கொண்டேன். ஆமாம்.. அவர் பெயர் புவனா கோவிந்த் என உங்கள் தளத்திலும், சகோதரர் வெங்கட் நாகராஜன் தளத்திலும் அறிந்திருப்பது இப்போது நீங்கள் சொன்ன பிறகுதான் நினைவுக்கு வருகிறது. அவரின் (அப்போதைய அனைவரின்) புனைப்பெயர் வரலாறுகள் சுவாரஸ்யமாக இருக்கிறது. அவரைப்பற்றி நீங்கள் தந்த தகவல்களுக்கு மிக்க நன்றி. கண்டிப்பாக விரைவில் அவர் தளம் சென்று அவரின் நகைச்சுவை பதிவுகளை படிக்கிறேன்.உங்கள பதிவுகள் அவர் மின்னிதழில் வந்த போதே, கண்ணில் பட்ட ஒன்றிரண்டு அவரின் பதிவுகளை படித்தேன். மிகவும் நகைச்சுவையாக எழுதி இருந்தார். இட்லி எனக்கு பிடித்தமான உணவு. அவரின் கைவண்ணத்தில் எப்படி உதிர்த்துள்ளார் என்பதையும் அறிந்து ரசிக்கிறேன்.

      அது திரு. எஸ்.வி.சேகர் அவர்களின் தங்கமணி, ரங்கமணி படம் மாதிரி நகைச்சுவையான காலங்கள் போலும்...! எப்படியோ.. இப்போது இந்த பழைய பதிவும் அடுத்தச்சுற்றில், இன்று இந்த அப்பாவி தங்கமணியின் (கமலா ஹரிஹரன்) கலாட்டாவில் களை கட்டுகிறது. ஹா.ஹா.ஹா. எல்லாம் நன்மைக்கே...! தகவல்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    7. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே

      தாங்களும் வந்து (கலாட்டாவில் கலந்து கொண்டதற்கு நன்றி. ஹா. ஹா.. இதில் சம்பந்தபட்ட சகோதரி அதிராவைத்தான் இன்னமும் காணோம். வருவார்கள் என நினைக்கிறேன். ) விபரங்கள் தந்தமைக்கு மிக்க நன்றி. நகைச்சுவை பதிவுகள் எனக்கு பிடித்தமானது. தாங்கள் கூறியபடி கண்டிப்பாக இட்லி புராணத்தை சென்று படிக்கிறேன்.மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    8. ஹா ஹா ஹா கமலாக்கா சொல்லியதால் இங்கு வந்து பார்த்துவிட்டேன்:)).. ஒரு அப்பாவி இருக்க[என்னைச் சொன்னேனாக்கும்:)] இன்னொரு அப்பாவி வந்ததால் இவ்ளோ குழப்பம் ஹா ஹா ஹா:))

      Delete
    9. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நான் அழைத்ததும் வந்து பதிவையும், கருத்துரைகளையும் படித்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியை தந்தது.

      . /ஒரு அப்பாவி இருக்க[என்னைச் சொன்னேனாக்கும்:)] இன்னொரு அப்பாவி வந்ததால் இவ்ளோ குழப்பம் ஹா ஹா ஹா:))/

      இந்த அப்பாவி (என்னைத்தான்) யையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அன்று எ. பியில் உங்கள் வருகையை கண்டதும், இங்கும் நீங்களாகத்தான் என்ற எண்ணத்தில் பதில் கருத்தையும் போட்டு விட்டு அக்காடா என்று இருந்து விட்டேன். கீதா சகோதரி வந்து சொல்லியிருக்காமல் இருந்திருந்தால் இன்னமும் கவனித்திருக்க மாட்டேனோ, என்னவோ..அதன் புபின் கீதா சாம்பசிவம் சகோதரி, ஸ்ரீராம் சகோ மூலமாக சகோதரி புவனா கோவிந்த் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டேன்.:) இன்று உங்கள் அன்பான கருத்துக்களுக்கும் நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  18. வணக்கம் கமலா ஹரிஹரன், என்னை விசாரித்தது அறிந்து மகிழ்ச்சி.
    நான் கொலு வேலையால் ஒரு வாரம் இங்கு வர முடியவில்லை. காலை பேரன் அவங்க வீட்டு கொலுவை காட்டி பாடுவான், அப்புறம் மற்ற உறவினர்கள் காணொளியில் கொலு பார்ப்பார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரம் வருவார்கள் அதனால் வலைத்தளம் வர முடியவில்லை.

    வேலை அதிகமானதால் உடல் நலமும் கொஞ்சம் பாதிக்கபட்டு இப்போது நலம்.

    ReplyDelete
  19. வணக்கம் சகோதரி

    இப்போதுதான் எ. பியில் தங்களின் பதிலை பார்த்தேன் சகோதரி. விபரம் அறிந்த பின் மனதுக்கு மகிழ்வாக இருந்தது. தாங்கள் கொலு வேலைகளில், உங்களது பொழுது சரியாக இருந்ததையும், வேலைகளின் அயர்ச்சியிலிருந்து தற்சமயம் உடல் நலம் பெற்று இருப்பதையும் அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நான்கைந்து பதிவுகளாக எ. பியிலும் சரி, மற்றவர்களின் பதிவிலும் உங்களை காணாததால் சற்று கவலையாக இருந்தது. அதனால்தான் எ. பியில் அன்றே விசாரித்தேன். உங்களுக்கே மெயில் அனுப்பி விசாரிக்க நேற்றுத்தான் எனக்குத் தோணியது. ஆனால், அதற்குள் உங்கள் கருத்துக்களை எல்லா பதிவிலும் கண்டதோடு மட்டுமின்றி, எ. பிக்கு நேற்றைய பதிவுக்கு வந்து கருத்திட்ட உங்கள் கருத்தை கண்டதும், உங்களிடமே கேட்டு விட்டேன்.இந்த நான்கு வருடங்களாக உங்களிடம் பழகிய பழக்கத்தில்,உங்களை தொடர்ந்து நான்கு நாட்களாக எந்தப் பதிவிலும் காணவில்லையென்றதும், மனசு கவலையடைகிறது. என் தேடலுக்கு மதிப்பளித்து நீங்களும் அன்புடன் வந்து எனக்கு பதிலை, எ. பியில் தந்ததோடு மட்டுமின்றி, என் தளத்திலும் வந்து விளக்கமளித்த தங்கள் அன்பான நட்பை நானும் பெரிதும் மதிக்கிறேன். நம் நட்பு என்றும் இப்படியே தொடர்ந்து நீடித்திட இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நன்றி சகோதரி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வேலைகள் காரணமாய் எங்கும் வர முடியவில்லை, எல்லோரும் தேடுவீர்கள் என்று தெரியும் தினம் சந்திக்கும் எங்கள் ப்ளாக்கில் இனி விடுமுறையை சொல்லி விட நினைத்து இருக்கிறேன்.
      இப்போது இருக்கும் காலசூழ்நிலையில் கவலை தரும் வரவில்லை என்றால்.

      கொரோனா ஆரம்பித்த இந்த ஏழு எட்டு மாதமாக காலை , மாலை நலன் விசாரிக்க தினம் மகன், மகள், பேரன் பேத்திகள் பேசுவதால் காலை நேரம் வலைத்தளம் வர முடியவில்லை.நினைத்த நேரம் வருகிறேன்.

      உங்கள் எல்லோர் நட்பும் எனக்கு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
      நானும் நம் நட்பு நீடிக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
      நன்றி கமலா.

      Delete
    2. வணக்கம் சகோதரி

      பதில் கருத்துக்கு பதில் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  20. கமலாக்கா நான் பல நாள் கழித்து இன்று வலை வந்திருப்ப்பதால் உங்களுக்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டு அவ்வப்போது வருவேன்!!!

    கனவுகள் பலதும் அர்த்தமற்றதாகிவிடும் ஆனால் ரொம்ப நடுங்க வைக்கும் அளவும் இருக்கும் , ஒரு சில நடக்கும் என்றும் கேள்விப்பட்டதுண்டு. மீக்கு வருவதே அபூர்வம் ஆனால் அப்படி வந்தாலும் எதுவும் நினைவில் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அதை ரொம்ப யோசித்ததில்லை என்னவோ தெரியவில்லை.

    கவிதை நன்றாக இருக்கு கமலாக்கா. நீங்க பன்முகத் திறமையுள்ளவர்!!! வாழ்த்துகள் அக்கா.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      நலமா சகோதரி.? தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தங்கள் வருகை என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இனி அடிக்கடி வலைத்தளம் வாருங்கள். வலைத்தளத்திற்கு முன்பு போல் வரமுடியாத உங்களின் பிரச்சனைகள் சுமூகமாகி உள்ளதா?

      ஆமாம்... சில கனவுகள் வரும் சமயம் அது உண்மை போலவே அச்சம் கொள்ள வைக்கும். பிறகு சில நாட்களில் மறந்து விடும். சில கனவுகள் நடந்ததுண்டு.(அதில் என் தந்தை எங்களை விட்டு நிரந்தரமாக பிரிவதாக கண்ட கனவு அப்படியே நடந்தது.) உங்களுக்கு கனவுகள் வராத தூக்கம் அமைவது நல்லதுதான். அப்படியும் உங்கள் அம்மாவை குறித்து ஒரு கனவு வந்து அது பலித்ததாக நீங்கள் ஒருசமயம் உங்கள் பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள். அதுவும் வருத்தமான நிகழ்வே...! என்னவோ நடப்பது நல்லவையாக கனவின் வழி இல்லாமல்,நடக்கட்டும்.

      பதிவை ரசித்து கவிதையை பாராட்டி வாழ்த்துக்கள் தந்தமைக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
  21. நான்.. எனது.. என் பொருள்" என்ற எண்ணத்தை, ஒரு ஆழ்ந்த பற்றை இறுதி வரை எவராலும் விட இயலவில்லை. //

    இதற்கு நாம் பழகிக் கொண்டுவிட்டால் மனம் மிகவும் இலகுவாக இருக்கும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      உண்மைதான் சகோதரி. அந்த எண்ணங்களை விட மனம் மிகவும் பக்குவமடைய வேண்டும். இறைவன் மேல் ஆழ்ந்த பற்று வந்து விட்டால், பிற பொருள்கள், பந்த பாசங்கள், என்ற எதுவும் ஒரு பொருட்டாகத் தெரியாது. முதலில் அவ்வாறு அவன் மேல் அசைக்க முடியாத பற்றை இறைவன் வரமாக தர வேண்டும்.அதைத்தான் நான் தினமும் இறைவனிடம் வேண்டிக் கொண்டே உள்ளேன். என் பிரார்த்தனைக்கு அவன் செவி சாய்ப்பான். கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  22. கனவு வந்ததால் கவிதை வந்ததோ?, இல்லை.., கவிதை எழுத வைக்கவே கனவு வந்ததோ?:)) ஹா ஹா ஹா பை வன் கெட் வன் ஃபிறீ என்பதைப்போல ஒரு கனவுக்கு இரண்டு கவிதைகளோ? அருமை அழகு.. அசத்தி விட்டீங்கள்..

    உங்கள் கனவு நல்ல கனவெனத்தான் நான் நினைக்கிறேன், அதாவது உங்களது பிரச்சனை ஒன்று நல்லபடி முடிவடையப்போகிறது எனவும் அர்த்தம் கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பதிவை ரசித்து நல்லதொரு கருத்துக்கள் பதிந்திருப்பதைக் கண்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      /கனவு வந்ததால் கவிதை வந்ததோ?, இல்லை.., கவிதை எழுத வைக்கவே கனவு வந்ததோ?:)) ஹா ஹா ஹா பை வன் கெட் வன் ஃபிறீ என்பதைப்போல ஒரு கனவுக்கு இரண்டு கவிதைகளோ/

      உங்கள் கருத்தைப் படித்ததும்எனக்கு பழைய பாடலொன்றும் நினைவுக்கு வருகிறது."காற்று வந்ததும் கொடி அசைந்ததா.. கொடி அசைந்ததால்.." என்ற பழைய பாடல்.. /பை வன் கெட் வன் ஃபிறீ என்பதைப்போல/ ஹா.ஹா.ஹா. எப்படியோ நீங்கள் கவிதைகளை ரசித்து தந்த பாராட்டுக்கள் எனக்கு மன மகிழ்வை தருகிறது. மிகவும் நன்றி சகோதரி.

      ஓ.. கனவின் பலன் இனிமையானதுதானா? அப்படியானால் பயமேதும் இல்லை. விபரம் தந்தமைக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  23. அன்புள்ள கமலா ஹரிகரன் அவர்களேஉங்களுக்கும் , உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் அன்பான தீபாவளி வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தவறாக நினைக்க வேண்டாம். இதை இப்போதுதான் நான் பார்க்கிறேன். இரண்டொரு நாட்களாக நான் எந்தவொரு வலைத்தளமும் பார்வையிடவில்லை. தங்கள் அன்பான வாழ்த்துக்கள் கண்டு மிகுந்த மன மகிழ்வடைந்தேன். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள் என்றென்றும் உண்டு. மிக்க நன்றி.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete