Thursday, January 11, 2024

விதியின் சாகசம்.

பாதையை காட்டி பயணிகளை
பயணிக்க பணித்தான் ;
படைத்தல் ஒன்றையே அந்த 
பாழும் விதியிடம்
பரிசாக பெற்ற " படைத்தவன் ”


அண்டத்தையும், அகிலத்தையும்,
அழகாக, அமைத்து காட்டினான்.
அற்புதங்கள் பலவும் அதில்
அதிசயிக்கவே  நிகழ்த்தி வைத்தான்.


கோடி ஜீவ ராசிகளுக்கும் உயிர்,
தேடியே கொடுத்து 
உலாவச் செய்தான்.
பிழைப்பதற்கும் வழி காட்டினான், மனம் பேதலிக்கவும், வழி வகுத்தான்.


பந்தத்தையும், பாசத்தையும், இரண்டு
பகடை காய்களாக்கி, அதை
பாழும் பிறவிகள், உருட்டி 
பிரட்டி சூதாடுவதை
பார்த்து, பார்த்து ரசித்தான்.


இருப்பினும், இறுதியில்
இறப்பெனும், நிதர்சனத்தை,
விதியிடம், கொடுத்து விட்டு
வேதனையின்றி விலகி நின்றான்.


விதி அவனை படைத்ததா? அல்லது
விதியை அவன் வகுத்தானா?
விளங்காத கேள்விகளில்,
விடை தெ(பு)ரியாத, பதில்களில்,


தலைவிதியை ச(பி)கித்து கொண்டு,
தடுமாறி, தத்தளித்து, 
தவித்து கொண்டு,
படைத்தவன் காட்டிய வழியில்,
கண் மூடி, அவன் கட்டளைகளுக்கு


பய(ணி)ந்து, கடமை தவறாது,
அப்பாதையில், பயணிக்கும்
அப்பாவி பா(தை)த சாரிகள்...!! 
இன்னல்கள் பல பட்டாலும்,
இவர்களின் பிரிவுகள் இரு விதம்.


விதியிடம் அடி வாங்கி வெ(நொ) ந்து  
விருப்பமின்றி எழுந்தோர்க்கு,
விளங்காத கேள்வி….. "இந்த  அதியச
விநோதங்களையெல்லாம்,
விளைவிப்பவன் யார்? அவன் நம்
விரோதியா... இல்லை....நம் 
விருப்பமான நண்பனா??" 

விரும்பிய நண்பனானல், ஏன்
விரோதி போல் 
விலகி நிற்க வேண்டும்.
நண்பனல்லாதவனை, நமக்கு 
நன்மை நினைக்காதவனை, எவ்விதம் நாம்
நட்புடன், நினைக்க தோன்றும்.
( இப்படி ஒரு சாரார் )


விதி வகுத்துத் தந்த 
அதிர்ஷ்டங்களில்
அத்தனை இன்பங்களையும்
அள்ளி பருகுபவர்களுக்கு
ஆண்டவன் ஒரு அரிய வரப்பிரசாதம்’
அவனன்றி ஒர் அணுவும் அசையாது,
அவனன்றி எதுவும் நடக்காது என, 
அவன்பால், அசைக்க முடியாத 
அசாத்திய நம்பிக்கை.  
( இப்படி ஒரு சாரார் )


இவ்விதம் பிரிவுகள் இரண்டாயினும்,
இன்னல்களை பல அருளும் அந்த,
இறைவனின் இருப்பிடத்தை அறிய பல வகையான 
புராணங்களை புரட்டி பார்த்தால்,
புரண்டிருக்கிறான்...!! "அவனும்" விதியிடம்.

பாபங்களையும், அதன் விளைவான 
பல சாபங்களையும்
சந்தித்திருக்கிறான்,
சகித்திருக்கிறான்
விதைத்தலை ,விதியிடம்
விரும்பி பெற்றவன்...! 
அந்த விசுவாசத்திற்குதான் ,
அதற்கு பிரதிபலனாக,
பரிசாக பெற்ற பாவத்திற்காக,,
அறுவடை அத்தனையையும் 
ஆதாயமேதுமின்றி மொத்தமாக,
அதற்கே அள்ளி கொடுத்து
விட்டான் போலும்...! 


விதியின் வஞ்சனையின்,
விளைவால், அந்த விதியிடம்,
அத்தனை உ(ப)யிர்களும், 
ஓர்நாள் சென்றடைந்து 
மடியத்தான் போகிறது.

படைத்தவனையே தொடருமந்த 
விதி, படர விட்டவனால், 
படர்ந்திருப்பவைகளை
படராமல், சற்றும் தொடராமல், 
விட்டு விடுமா என்ன.? 
விதிக்கு முன்னால் யாரும்
விதி விலக்கல்ல போலும்...!!!! 
விதி வலியதுதான்..!! 


இது மன வேதனையில் எப்போதோ உருவானது.வலையுலகிலும் என பக்கத்தில் பதிந்திருக்கிறேன். பத்து வருடங்கள் கழித்து மீண்டும் உங்கள் அனைவரின் பார்வைக்காகவும்...! கருத்துக்கள் எப்போதுமே நேர், எதிரானதுதான். 

நாம் அனைவரும், ஒத்த வடிவமுடைய மனிதர்கள் என்றாலும், நம்முள்ளிருக்கும் மனங்கள் வெவ்வேறானதுதானே...!! கருத்தை தருவோர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வழக்கப்படி எதிர்பாராத சூழ்நிலைகளினால் பதில் தர தாமதமானால், பொறுத்துக் கொள்ளும்படியும் உங்களனைவரிடமும் விண்ணப்பித்துக் கொள்கிறேன். 

34 comments:

  1. கமலாக்கா கவிதை பலரது மனதிலும் எழும் கேள்விகளைச் சொல்லி, எல்லோருக்குமாக எழுதியது போல் அருமை!

    ஸ்ரீராம் கடவுள் நு கேள்வி கேட்டிருக்க நீங்க விதின்னு.!

    சில விஷயங்களுக்கு நம்மால் பதில் சொல்ல முடியாது விளக்கங்கள் கிடைக்காது அப்ப இந்த வார்த்தை வந்துவிடும் அல்லது அவன் கணக்குபடிதானே நடக்கும்னு மேலே பார்ப்போம்! அதென்னவோ அந்த அவன் சக்தியாக நம்மோடும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்க நாம ஏன் ஆகாயத்தை நோக்குகிறோம்!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      /ஸ்ரீராம் கடவுள் நு கேள்வி கேட்டிருக்க நீங்க விதின்னு.!/

      ஆம் சகோதரி. இன்று அவரின் ம இக் தல் பகுதியையும், கவிதையையும் படித்ததும், நான் முன்பு எழு தியது நினைவுக்குள் நர்த்தனம் ஆடியது. அவரின் அர்த்தமுள்ள கவிதைகளுக்கு முன் இதுவெல்லாம் வெறும் கிறுக்கல். இருப்பினும் வெளியிட்டு விட்டேன்.

      தாங்கள் கூறுவதும் சரியே..! இறைவன் சக்தியாகத்தான் நம்முடன் உள்ளான். இருப்பினும் துயர்கள் வரும் போது அவன் அருகாமையை மனம் எதிர்பார்க்கிறது. அவன் இப்படி புறக்கணித்து விட்டானே என மனம் அல்லாடுகிறது. இது எல்லோருக்கும் பொருந்தும். நாட்பட காயங்கள் ஆறினாலும், ஆறாத தழும்பின் வலிகள் மனதை சில சமயங்களில் கலங்க வைக்கின்றன. எல்லாம் விதி வசம் என்ற உண்மை மனதை சமாதானப்படுத்த போராடுகின்றன. என்ன செய்வது? உடனே வந்து தந்த தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.
      .

      Delete
    2. தட்டச்சுப் பிழை... அவரின் பதிவில் முதல் பகுதியையும் எனப் படிக்கவும்.

      Delete
  2. உங்கள் மன eவேதனை வெளிப்படுகிறது.

    10 வருடங்களுக்கு முன் எழுதியது வலையில் பகிர்ந்திருந்ததை இப்போதும் பகிர்ந்திருக்கீங்க கமலாக்கா அப்படி என்றால் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது நீங்கள் மனம் வருத்தத்தில் இருக்கீங்கன்னு பிரதிபலிக்கும் விதத்தில்.

    உளவியல் ரீதியில் சொல்லவேண்டும் என்றால் நாம் இப்படி இருக்க இருக்க நம் உந்து சக்தி - எல்லோருக்குள்ளும் ஒரு ட்ரைவர் இருக்கும். அது எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பொருத்துதான் ஒவ்வொருவரது முன்னே செல்லலும் பின்னே செல்லலும் உங்கள் ட்ரைவரை முடுக்கி விடுங்கள். குதிரைக்குக் கடிவாளம் போடுவது போல! விரைவாக ஓடும்!

    உங்களுக்கு மட்டுமல்ல கமலாக்கா இது எனக்கும் சேர்த்துத்தான்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      இந்த உலக வாழ்வில், வேதனைகள் ஒன்றுடன் ஒன்றாகவோ , இல்லை ஒன்றுக்குப் பின் தொடர்ந்து வருவது இயல்புதானே..! அதைத்தான் விதி என்கிறோம். மனம் இன்னமும் கலங்கியிருப்பது உண்மைதான்.. அதை மாற்றத்தான், வலையுலக நட்புகளுடன் அளவளாவியபடியும் என் அறுவை பதிவுகளையும் வெளியிட்டும் வருகிறேன்.

      /உங்கள் ட்ரைவரை முடுக்கி விடுங்கள். குதிரைக்குக் கடிவாளம் போடுவது போல! விரைவாக ஓடும். /

      தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோதரி. தங்கள் ஆலோஜனைகளையும் வரவேற்கிறேன். தங்கள் அன்பான அறிவுரைகளுக்கு மிக்க நன்றி சகோதரி. தொடர்ந்து என் பதிவுகளுக்கு வாருங்கள். மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. கவிதை வரிகள் பொதுப்படையானது சிறப்பாக இருக்கிறது சகோ

    வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      கவிதை சிறப்பாக உள்ளதென கூறிய தங்கள் பாராட்டு மிக மகிழ்ச்சியை தருகிறது. தங்கள் பாராட்டிற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோதரரே. பதிவுகளுக்கு தொடர்ந்து வாருங்கள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. வணக்கம் சகோதர, சகோதரிகளே

    என் விதியின் பலனால், ஏதேனும் தீடிர் வேலைகள், பத்து நாட்களாக இடைவிடாது வாட்டும் பல் வலியினால் பல தொந்தரவுகள் என என்னை இந்தப்பதிவுக்கு வரும் கருத்துகளுக்கு பதிலளிக்க இயலாது செய்து விடுமோ என முன்னெச்சரிக்கையாக உங்கள் அனைவரிடமும் "என் பதிலளிக்க இயலாத தாமதத்திற்கு மன்னிக்கவும்" என்றபடிக்கு இறுதியில் கேட்டிருந்தேன். ஆனால், இந்த "விதியின் பதிவுக்கு" இன்று இரவு வரை இருவரை தவிர எவருமே வரவில்லை. இதுவும் "விதியின் சாகசந்தான்" போலும்.
    ஹா ஹா ஹா. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் அல்லவா?
    வந்தவர்களுக்கும் , இனி நாளை வரும் அனைவருக்கும்.நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. சோதனை முயற்சியாய் இன்றும் மறுபடி ஒரு கமெண்ட் இடுகிறேன்.  விதி அதை என்ன செய்கிறது என்று பார்க்கிறேன்!!

    நம் சிரமங்களுக்கோ நற் பலன்களுக்கோ காரணம் தெரிந்து விட்டால் விதியை வம்புக்கிழுக்க மாட்டோம்.  கடவுளையும் வம்புக்கிழுக்க மாட்டோம் இல்லையா?!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /நம் சிரமங்களுக்கோ நற் பலன்களுக்கோ காரணம் தெரிந்து விட்டால் விதியை வம்புக்கிழுக்க மாட்டோம். கடவுளையும் வம்புக்கிழுக்க மாட்டோம் இல்லையா?!!/

      ஹா ஹா ஹா. உண்மைதான். என் நற்பலன்கள் நேற்றிரவு தெரியவில்லை. பதிவைக்காண யாரும் வரவில்லையே என்று எழுந்த ஒரு நிமிட வருத்தத்தில் என் விதியை நொந்து, உங்கள் விதியையும் நோக வைத்து விட்டேன். மனப்பூர்வமாக மன்னிக்கவும்.

      நீங்கள் பதிவை படித்து கமெண்ட்ஸ் தந்த விபரங்களை நம் இருவரின் விதி சற்று மறைத்து விளையாடி விட்டது போலும்...! பொதுவாக எது நடந்தாலும் நல்லதுக்கே என்றுதான் நான் நினைப்பேன். அப்படி நினைக்க வைப்பவனும் இறை எனும் சக்திதான் என நம்புவேன். . ஆனாலும், வருத்தங்கள் சமயத்தில் மேம்படும் போது, நம்மையறியாமல் இப்படி வார்த்தைகள் நம் மனதில் உருவாகி விடுகின்றன. அதையும் இறை செயல் எனத்தான் நினைத்து அவனுக்கு நன்றி சொல்கிறேன். .

      நீங்கள் உங்கள் வேலைகளுக்கு நடுவில், இவ்வளவு கமெண்ட்ஸ் எழுதி, அனுப்பியது அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். அதை அறிந்து கொள்ளாமல் எவரும் வரவில்லையே என நான் வருத்தப்பட்டதற்கு மீண்டும் உங்கள் மன்னிப்பை கோறுகிறேன். விதியின் மதியால், ஒளிந்து கொண்டிருந்த அதையெல்லாம் தேடி வேறு கொணர்ந்து கொண்டு சேர்த்த தங்களது அன்புக்கு என் பணிவான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. இன்று இங்கேயே நிற்கிறது.  ஸ்பாமில் தயவு செய்து தேடி பார்க்கவும்.  என் நேற்றைய கமெண்ட்ஸ் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      தாங்கள் தங்களின் கருத்துக்களை சிரமப்பட்டு தேடி கொண்டு வந்ததற்கு மிகுந்த நன்றி. என் கைப்பேசியில் அளவு கடந்த போட்டோக்கள் அமர்ந்து இருப்பதால், மெயில் கூட எனக்கு சரியாக காண்பிப்பதில்லை. அதனால், ஒரே மாதிரியான சில அனாவசியமான போட்டோக்களை நீக்கச் சொல்லி, மகள் என்னிடம் வலியுறுத்தி கொண்டேயிருக்கிறார். அதனால் நீங்கள் கூறிய ஸபாம் பார்ப்பது அவ்வளவு எளிதல்ல எனக்கு. உங்கள் மெயில் கண்டு கொண்டேன். பதில் தருகிறேன். மிகுந்த சிரமபடுத்தி விட்டேனா? மன்னிக்கவும். நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. கொஞ்சம் யோசித்தால் படைத்தவனும் விதியும் ஒன்றுதானோ!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆமாம்.. சில சமயங்களில் இருவரும் ஒன்றானவர்களாகத்தான் தெரிகிறார்கள். ஆனால், இறைவன் மேல் கொள்ளும் பக்தியில், நமக்கு ஏற்படும் துயரமான சமயங்களில் விதியை கரித்தபடி திட்ட மனம் வருகிறது. அதன் விளைவுதான் இந்தப் பதிவு. தங்கள் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. அல்லது படைத்தவனுக்கும் படைக்கவேண்டும் என்று விதி இருக்கிறதல்லவா.. அவன் என்ன செய்வான் பாவம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /படைத்தவனுக்கும் படைக்கவேண்டும் என்று விதி இருக்கிறதல்லவா.. அவன் என்ன செய்வான் பாவம்./

      அதைத்தான் மன உளைச்சலுடன் கூறியுள்ளேன். "விதைத்தலை பரிசாக பெற்றமைக்கு அறுவடை அத்தனையும் அதற்கே அள்ளி தந்து விட்டான் என்று."

      கவிதையை ரசித்து தங்கள் அன்பான கருத்துகளை தந்தமைக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. விதியைச் சொல்கிறோம். நம் கர்மபலன்களை மறந்து விடுகிறோம்! படைப்பதோடு அவன் தொழில் முடிந்தது. பாதை நம் கையில். "விதியின் ரதங்களிலே விரைந்து பயணம் செய்தால் மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா என்று கண்ணதாசன் பாடி இருக்கிறார்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      நம் கர்மபலன்கள்தானே விதி எனப்படுவது..! கவிஞர் கண்ணதாசனின் சிந்தனைகள் என்றுமே தனித்துவமானது. அவர் பாடலை பற்றி விளக்கி கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. "எங்கே பாதை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்.." என்ற அவர் பாடலும் நினைவுக்கு வருகிறது.

      நடப்பதுதானே நடக்கும். நிலைப்பதுதானே நிலைக்கும். அதுதானே விதியின் பாதை. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டதால்தான் வாழ்க்கை நகர்ந்து கொண்டேயுள்ளது. தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. அப்பாடி...  சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொண்டு என் நேற்றைய கமெண்ட்ஸை என் மெயிலிலிருந்து தேடி எடுத்து மறுபடி இங்கே வெளியிட்டு விட்டேன்!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /அப்பாடி... சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொண்டு என் நேற்றைய கமெண்ட்ஸை என் மெயிலிலிருந்து தேடி எடுத்து மறுபடி இங்கே வெளியிட்டு விட்டேன்!!!/

      ஹா ஹா ஹா.. நன்றி. நன்றி. தங்களிடமிருந்து ஒரு கமெண்ட்ஸ்ஸும் காணோமே என நான் நேற்று வருத்தப்பட்டதற்கு ஒன்றுக்கு ஆறாக இன்று தங்களது கருத்துகளை காண நேர்ந்தது. என்னால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும். நன்றி என் விதிக்கும், தங்களின் அன்புக்கும்.🙏.

      அன்புடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. கவிதை நன்றாக இருக்கிறது.மனநிலைக்கு ஏற்றார் போல கவிதை வரிகள் மாறலாம்.
    தாய் அடித்தாலும் குழந்தைகள் தாயின் காலை கட்டி கொண்டு அழும். அது போலவே இறைவன் நமக்கு பல துன்பங்களை கொடுத்தாலும் அவனையே நம்பி அவன் காலை பற்றிக் கொண்டு இருக்கிறோம் , நீயே கதி என்று.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      நீங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் வாஸ்தவமான வரிகள். தாயை அன்போடு நம்பும் பிள்ளைகள் போல பட்ட அடிகளின் வலியைப் பொறுத்தபடி, அவனைத்தான் மீண்டும், மீண்டும் தஞ்சமடைகிறோம். அவன் ஒருவனே கதி என்ற வாஞ்சையுடன் அவனை அணுகும் போது நமக்கான துன்பங்கள் பறப்பது போன்ற உணர்வு வருகிறது. மனம் ஒரு குரங்கு என்பது போல கிளை மாறும் சில சந்தர்பங்களில், இந்த மாதிரியான இறைத் தேடல்கள் வந்து விடுகின்றன.

      நீங்கள்.அழகாக சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் அனைவரது அன்பிற்கும் என் பணிவான நன்றிகள். உங்களின் நல்லதொரு கருத்துக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. இறைவன் அழகாய் உலகை படைத்தான் உண்மை, அதை நாம் மேலும் அழகாய் ஆக்கவில்லை என்றாலும் அலங்கோலம் படுத்தாமல் இருக்கலாம்.
    குடும்பத்தில் பாசம் நம்மை விழ வைக்கிறது. அன்பை மட்டும் கொடுத்து பழக வேண்டும்.
    விதி என்றும் விளங்கா புதிர் தான். ஞானிகள் முற்பிறப்பில் நாம் செய்த செயல் என்கிறார்கள். செயல்விளைவு தத்துவம் என்கிறார்கள், செயலுக்கு ஏற்ற விளைவாய் இறைவன் வருவான் என்கிறார்கள்.

    இந்த பிறவியில் நாம் நமக்கு தெரிந்து நல்லதே செய்கிறோம்
    முடிந்தவரை கடமைகளை செய்வோம் மற்றவைகளை நம்மை படைத்தவன் பார்த்து கொள்வான். அவனிடம் விட்டுவிடுவோம்.

    உங்களை போல அழகாய் கவிதை எழுத தெரியாது.
    நேற்று அமாவாசை, வீட்டில் பூஜை, பக்கத்து கோவிலில் காலை போய் அனுமனை தரிசனம் செய்தேன், இரவு தான் சிறப்பு பூஜை போக முடியவில்லை, கொஞ்சம் உடல் நிலை சரியில்லை. கோவில் நட்பு படங்கள், காணொளி அனுப்பினார்கள், தரிசனம் செய்து கொண்டேன்.
    இன்று நலமாக இருக்கிறேன்.

    தொடர்ந்து எழுதுங்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கி. அதுவே நமக்கு ஆறுதல் அளிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /இறைவன் அழகாய் உலகை படைத்தான் உண்மை, அதை நாம் மேலும் அழகாய் ஆக்கவில்லை என்றாலும் அலங்கோலம் படுத்தாமல் இருக்கலாம்./

      அழகாக சொல்லியிருக்கிகிறீர்கள்.நன்றி சகோதரி.

      /குடும்பத்தில் பாசம் நம்மை விழ வைக்கிறது. அன்பை மட்டும் கொடுத்து பழக வேண்டும்/

      ஆம் உண்மை.. கொடுக்க மட்டுமே பழகிக் கொள்ள வேண்டும். அதற்கு பலனாக மீண்டும் கிடைக்கிறதா என மனம் அலை பாய்வதை நிறுத்த வேண்டும்.

      /நேற்று அமாவாசை, வீட்டில் பூஜை, பக்கத்து கோவிலில் காலை போய் அனுமனை தரிசனம் செய்தேன், இரவு தான் சிறப்பு பூஜை போக முடியவில்லை, கொஞ்சம் உடல் நிலை சரியில்லை. கோவில் நட்பு படங்கள், காணொளி அனுப்பினார்கள், தரிசனம் செய்து கொண்டேன்./

      தங்களுக்கு அனுமன் தரிசனங்கள் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி. தங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றதும் வருத்தமாக இருந்தது. கால் வலியா? உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். உதவுவதற்கு அருகில் யாரேனும் இருக்கிறார்களா?

      /தொடர்ந்து எழுதுங்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கி. அதுவே நமக்கு ஆறுதல் அளிக்கும்./

      ஆம். எழுத வேண்டும். எழுத்தும் போதும், பகிர்ந்ததை உங்களைப்போல மற்றவர்களும் வந்து படித்து ஆறுதலாக கருத்திட்டு பேசும் போதும் ஒரு அமைதி கிடைக்கிறது. தங்கள் ஊக்கம் மிகுந்த வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. கஷ்டங்களின்போது விதியை நினைத்து நொந்துகொள்ளும் மனம் சந்தோஷத் தருணங்களில் சிறகடித்துப் பறந்துவிடுகிறதே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      இன்னமும் பயணத்தில் தான் இருக்கிறீர்களா? பயணம் சிறக்க வாழ்த்துகள்.

      /கஷ்டங்களின்போது விதியை நினைத்து நொந்துகொள்ளும் மனம் சந்தோஷத் தருணங்களில் சிறகடித்துப் பறந்துவிடுகிறதே/

      இல்லை... சந்தோஷ தருணங்களிலும் இறைவனுக்கு நன்றி சொல்லி, "உன்னால்தான் இப்படியெல்லாம் நடத்த முடியும்" என அவன் புகழ் பாடி மனமுருகி கண் கலங்குவதுதான் என் வாடிக்கை. எப்போதும் அவனை மறப்பதில்லை. ஏனெனில் அவன்தான் அழிவில்லாதவன். நிரந்தரமானவன்.

      பயணத்திலும், தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete

  14. பதிவு அருமை..

    தொடர்ந்து எழுதுங்கள் (என்று சொன்னாலும் அதன் சிரமங்கள் எனக்குப் புரிகின்றன..)

    இதுவே நெஞ்சுக்கு நிம்மதி..
    ஆறுதல் ..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      தொடர்ந்து எழுதுங்கள் என்ற தங்களின் ஊக்கமிகு வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

      ஆயினும், தங்களைப்போல இறையருள் தரும் ஒரு வைராக்கியத்தோடு என்னால் எழுத இயலாவிடினும், இப்படி அவ்வப்போது வருகிறேன். மறவாமல் வந்து என் எழுத்துக்கு தாங்கள் தரும் ஊக்கத்தை தொடர்ந்து தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  15. விதி வகுத்துத் தந்த 
    அதிர்ஷ்டங்களில்
    அத்தனை இன்பங்களையும்
    அள்ளிப் பருகியாயிற்று.

    இறைவன் இனிமையானவன்..

    அவன் நம்மைத் தண்டிப்பதில்லை..

    நமது இன்னல்களுக்கு நாமே காரணம்..

    வாழ்க்கை வரப்பிரசாதம்..

    ஆனாலும்,

    காவேரியாறு கஞ்சியாக ஓடினாலும் நாயின் பாடு நக்கித் தான்..

    கோழியின் பாடு கொத்தித் தான்!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      கவிதையை ரசித்து தந்த கருத்துரைக்கு மிக்க நன்றி. அவரவர் விதியை அவரவர் அனுபவித்தானே ஆக வேண்டும். அதில் எந்த மாற்றமும் இல்லை. நல்ல உவமானத்துடன் கூடிய கருத்துரைக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. //விதிக்கு முன்னால் யாரும்
    விதி விலக்கல்ல போலும்...!!!!
    விதி வலியதுதான்..!! ​//

    ​அந்த விதி தான் என்ன என்பதற்கு விளக்கம் இல்லையே!
    கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதத்தில் இதற்கு ஒரு சரியான உதாரணம்/உருவகம் காட்டியிருப்பார்.

    கவிதை தானே ஊற்று பெருக்கெடுத்து வழிகிறது, அளவிலும் தான். கவிதைக்கு பாராட்டுக்கள்.


    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதத்தில் இதற்கு ஒரு சரியான உதாரணம்/உருவகம் காட்டியிருப்பார்/

      அப்படியா? படிக்க வேண்டும். கவிஞர் கண்ணதாசனின் விளக்கங்கள் என்றுமே அர்த்தங்கள் நிறைந்தது. அவரின் சிறப்புக்களை கருத்துரையில் கூறியிருப்பதற்கு மனம் நிறைந்த நன்றி.

      கவிதையை பாராட்டி நல்லதொரு கருத்து தந்தமைக்கும், தங்கள் ஊக்கம் மிகுந்த பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. பல்வலிக்கு மருத்துவரிடம் போஅக்வில்லையா? 10 நாட்களாக ஏன் அவதி பட்டு கொண்டு இருக்கிறீர்கள்
    பல் வலி வந்தால் எதையும் சிந்திக்கவும், செயல்படவும் முடியாதே! குளிர் வந்தாலும் பல் வலிக்கும். தலை குளித்தவுடன் நங்கு காய வைத்து கொள்ளுங்கள், ஈரத்தலையோடு வேலைகள் பார்த்தால் தலைவலி , பல் வலி அதிகமாகும். உடம்பை பார்த்து கொள்ளுங்கள் கமலா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களின் மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி

      தாங்கள் அக்கறையாக மீண்டும் வந்து என் பல் வலி பற்றி கேட்டதும் நெகிழ்ச்சியாகிப் போனேன்.

      நான் மருத்துவரிடம் செல்வதில்லை. இரு வருடங்களுக்கு முன் ஒரு முறை இதே பிரச்சனைக்கு சென்ற போது ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுத்த போது, வேறு அவஸ்தைகளில் சிரமப்பட்டேன்.தவிரவும் கடைவாய் பற்களை அகற்ற வேண்டுமெனவும் கூறினார். ஆனால் சுகர் நிறைய உள்ளதால், அதை குறைத்த பின்னர்தான் அந்த சிகிச்சை எடுக்க வேண்டுமெனவும் கூறினார். எனக்கு சுகர் மாத்திரையும் ஒத்துக் கொள்ளவில்லையே. எப்படியோ நாட்கள் ஓடுகிறது.

      இப்போது என்னால் தாங்க முடியாத இந்த குளிரில்தான் வந்துள்ளது. இல்லை மகன்களுடன் பல ஊர்களுக்கு பிராயாணித்து வந்த இயலாமையிலும் பல வலிகளுடன் இந்த பல் வலியும் வந்துள்ளது. எப்படியும் வந்தால் ஒரு மாதம் அவஸ்தைகள் தந்து விட்டு மீண்டும் ஆறுமாத காலம் கழித்து தலைத் தூக்கும்.

      உங்களின் அக்கறையான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete