Saturday, December 14, 2019

நானும் எழுதுகோலும்...

             
          என்(னை) ஊன்று(ம்) கோலும் கூட.... 


பிறந்தவுடன் கண் திறந்தேன்! அரும் 
பிறவி இதுவென்று உணர்ந்தேன்!
தாயின் மாறாத அன்புடனே, 
தந்தையின் மாசற்ற அறிவையும் 
தடையின்றி சுவாசித்தேன்..!
அடைக்கலமும் இதுதானென்று
ஆத்ம திருப்தியுடன் 
அறிந்து கொண்டேன்..!

நிறங்களை நிமிடத்தில் 
கண்டு கொண்டேன்..!
நிதசர்சனங்கள் இவையெல்லாம் 
என உணர்ந்து கொண்டேன்..!
கானம் பலவும் காதுடன் கேட்டேன்!
காதிலும் தேன் பாயுமென 
புரிந்து கொண்டேன்!

பாடும் பறவைகளுடன் பறந்தேன்!
பக்குவமான மனம் அமைய பெற்றேன்!
பச்சைப் புல்வெளியைப் பார்த்தேன்!
பகைமையில்லா மனதுடன் 
பரவசமாகி போனேன்!
தெய்வங்களை தரிசித்தேன்!
தென்றலெனும் வாழ்வடைந்தேன்!

நீலவானம், இரவு வானத்தில் 
நீலமாணிக்கமாய் விண்மீன்கள்,
நீரின் அசைவுகள், அதில்
நீங்காது நீந்தும் மீன்கள்,
உதிக்கும் சூரியன், அதில்
உதயமாகும் பொழுது,
உயர்ந்த மலைகள், அதை
வருடும் அந்திச்செம்மை,
இரவின் இருள், அதன்
குரலாய் மெளனமான நிசப்தம்,
இருண்ட வானம், அதன்
வேராய் பெருமழை,
மரங்களுடன், மலர்கள், அதை
தழுவும் மதியின் அழகு,
மதிய வெயில், அதன் இறுதியாய்
மங்கிய மாலை வேளை,
அடர்ந்த காடு, அதை
அன்போடு குளிர்விக்கும் அருவி,
அழகிய சோலை, அதை
அலங்கரிப்பு செய்யும் மலர்கள்,

இவை அனைத்தும்,
அழகென்று உவகையுற்றேன்!
இயற்கை தந்த சீதனமென்றும்
தெரிந்து கொண்டேன்!   
அதிசயத்து, பலமுறை 
வியந்து நின்றேன்!
இது அற்புதமான உலகமென்றேன்! 
இன்னும் எத்தனையோ, 
படைப்பு கண்டேன்!
" படைத்தவனை"தவிர்த்து 
இப்படைப்பை உருவாக்க வேறு 
எவராலும் எளிதில்லை இது.. !
எனவும் புரிந்து கொண்டேன்!

அள்ளக் குறையாத
பல பல மொழிகள்
பயிலவும் நினைத்தேன்! 
ஆயினும் அருமையான தமிழ் மொழி பால்
ஆசையுடன், அளவிற்கடங்காத 
காதலும் கொண்டேன்!

காட்சிகளின் தாக்கங்கள்,
கனவிலும் வந்து களிநடனம் புரிய,
கண் விரட்டும் உறக்கத்தையும்,
களைந்தெறிந்து, கற்பனை உலகில் 
காலமெல்லாம் மிதந்திருந்தேன்!

கண்ணில் கண்டதை கவி பாடினேன்!
கதைகள் புனைந்து களிப்புற்றேன்!
காகிதத்தில் அதை பதித்து வைத்து,
கருத்துக்ளுக்கு காத்திருந்தேன்!
கசடுகள் நிறைந்த கவியென்றும்,
கட்டுக்கதைகள் இவையென்றும்,
கசப்புடன் காலம் சொல்லிச் செல்ல,
கனமான மனதுடன் உடல் நொந்தேன்!

இத்தனை பார்த்தும், ரசித்தும்,
இன்னும் ஏகமாய், ரசித்துப்
பார்க்க நினைத்தும், நான்
மறந்து போனது ஒன்றுதான்! மற்ற,
மனிதரின் மனதை ரசிக்கவில்லை!
மமதையில்லா உள்ளம் பெறவில்லை!
மகிழ்ச்சியில், மனமது நிறைந்திட, அவர்தம்
மனவியல் படிக்கத் தவறி விட்டேன்!

எது எப்படியாயினும், இன்று வரை,
என்னுடன் உறவாடும் எழுதுகோல், என்
உறவை பிரிய மனமின்றி, தன்
உயிரையும் எனக்கு தந்தபடி, "உன்
உற்றத் தோழனாய் நானிருக்க,
உவகையான,உள்ளத்துடன்,
உன் உதிரம் உலர்ந்து போகும் வரை.
உலகில்  நீ ரசித்ததை எல்லாம்
உண்மையுடன் உணர்த்தி விடு! அது
உன்னதமாகும் ஒரு நாளில்!!" என்றது!

அது அன்புடன் சொன்னதில்,
அகம் குளிர்ந்து, ஆசையாய்,
அதை அரவணைத்து, என் மனதின்
ஆறா தழும்பையும், ஆற வைக்க,"என்
ஆறாம் விரலாய் நீ இரு.. !!" 
என யாசித்தேன்.  

ஆறுதலாகவே அது"அவ்விதமே
ஆகட்டும்" என அனுகிரஹித்து"என்
ஆயுள் பரியந்தம்  உன்னுடன்
ஆதர்சமாக வாழ்வேன்" என்றது. 

இது மீள் பதிவு என்றாலும், சில திருத்தங்களுடன் ஏதோ ஒரு மனத்திருப்திக்காக மறுபடியும்.... 
படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் .🙏. 

24 comments:

  1. அருமை வார்த்தை ஜாலங்களை ரசித்தேன்.

    இது மீள்பதிவு என்றால் முன்பு படத்த நினைவு இல்லையே....

    இருப்பினும் வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் உடனடியாக முதலில் வந்து படித்து தந்த கருத்துக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோ.

      இது மீள் பதிவு மட்டுமில்லை..! நிறைய வார்த்தைகளை புதிதாக சேர்த்து கொஞ்சம் மாற்றங்களும் செய்துள்ளேன். தாங்களும் புதிதாகவே இதை படித்து ரசித்தமைக்கும், பாராட்டுகள் தந்தற்கும் என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. அருமையாக எழுதி இருக்கிறீர்கள். வார்த்தைகள் சர்வ சகஜமாக வந்து விழுந்திருக்கின்றன. கவிதை எழுதும் திறனுக்கும் குறைவில்லை. எழுதுகோல் என்றென்றும் உங்களுக்குத் துணையாக இருக்கும். வாழ்த்துகள். நான் முன்னர் படித்தது இல்லை. இப்போத் தான் முதலில் படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      மறுபடியும் புதிதாக பதிந்த இந்த கவிதையை வந்து படித்து தாங்கள் நல்லதொரு கருத்துக்களை தந்தமைக்கும், அன்பான பாராட்டுக்கும், வாழ்த்துக்களும் என் மனம் நிறைந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள். தங்களைப் போன்றோரின் கருத்துக்கள் என்னை மேலும் உற்சாகப்படுத்துகின்றன. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. அருமையான கவிதை.  மிகவும் ரசித்தேன். நிச்சயம் இதை நான் முதல்முறை வாசிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதை நன்றாக உள்ளது என்ற நல்லதொரு கருத்தை பதிந்தது என் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்களே... கவிதையும் உங்களுக்கு சரளமா வருதே... பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதையை ரசித்துப் படித்து நல்லதாக தந்த கருத்துக்களை, மற்றும் பாராட்டுக்களை கண்டும் என மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.தங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் என் எழுத்தார்வத்தை மென்மேலும் ஊக்குவிக்கும் என நம்புகிறேன். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. கவிதை அருமை.
    இப்போதுதான் இந்த கவிடையை படிக்கிறேன்.

    ஆயுள் பரியந்தம் உன்னுடன்
    ஆதர்சமாக வாழ்வேன்" என்றது. //

    வாழட்டும் உங்களுடன்.
    அருமையாக கவிதைகள் படைத்து மகிழுங்கள்.
    நாங்களும் படித்து மகிழ்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இப்போது மீண்டும் புதிதாக பிறந்த இக்கவிதையை ரசித்துப் படித்தீர்கள் என அறிந்து மிகவும் சந்தோஷமடைந்தேன் சகோதரி.

      தங்கள் அன்பான வருகையும் தங்களின் நல்ல பாராட்டும்படியான கருத்துக்களும் என் எழுத்தை வாழ வைக்கும் என நம்புகிறேன். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. கவிதையை படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தட்டச்சுப் பிழைகள் சாதரணமாக அனைவருக்கும் வருவதுதானே சகோதரி. மீண்டும் வந்து குறிப்பிட்டமைக்கு நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. முன்பெல்லாம் கவிதை நாடகம் என்று வரைவார்கள்....

    அழகு நடையில்
    அது தான் இது...

    அருமை... அருமை...
    மணக்கும் தமிழில்
    மனமெலாம் இனிமை...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதையை படித்து நல்லதோர் கவியாய் பதில் கருத்துக்கள் தந்தது மட்டுமின்றி. என் எழுத்துக்களை பாராட்டியமைக்கும் என் மன மகிழ்வுடன் பணிவான நன்றிகள். தங்கள் கருத்துக்கள் என் எழுத்துக்கு பலம்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      தாங்கள் கவிதையை படித்து ரசித்தமைக்கு நான் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். தங்களது ஊக்கமிகுந்த பாராட்டுகளும் என் எழுத்துக்கு உரம் சேர்க்கிறது. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  9. அருமை! சுருக்கமாக ஒரு சுய சரிதமே தந்து விட்டீர்கள். வாழ்த்துகள். உங்கள் எழுது கோல் மட்டுமல்ல, ரசிக்க நாங்களும் இருக்கிறோம் தொடர்ந்து எழுதுங்கள். 

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதையை படித்து ஊக்கமிகுந்த விரிவான கருத்துக்கள் தந்ததை கண்டு மிகுந்த மகிழ்வெய்தினேன்.

      என் எழுத்தை ரசிப்பதற்கு நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கைத்தான் என் கற்பனைக்கும், எழுத்துக்கும் நல்லதொரு உரமாக இருந்து பலமளிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் என ஊக்கமளித்தமைக்கும், பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  10. வார்த்தைகளின் வர்ண ஜாலத்தில் மிளிர்கிறது அழகாய் ...ஆஹா ...

    கண் திறந்து பார்த்து ...

    காது குளிர கேட்டு...

    ஆஹா எத்தனை அற்புத இயற்கையை வியந்து ....

    அங்கு சொக்கி தான் போனேன் உங்கள் வரிகளில் அற்புதம்



    படைத்தவனை புகழ்ந்து ...

    மொழியில் மூழ்கி ..வியந்து

    கள்ள மனங்களை கண்டு ..கடின பட்டு ...

    கடைசி காலத்தில் பற்றும் ஊன்றுகோல் போல

    நிகழ்கால ஊன்றுகோல் ஆன எழுதுகோலை பற்றியதில் மிக மகிழ்ச்சி ....


    வாழ்த்துக்கள் ...பல முறை வாசித்து ரசித்தேன் ...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      ஆஹா..! அருமையான தங்கள் கருத்துரைகளை மிகவும் ரசித்தேன்.என் கவிதையை ரசித்து படித்து பதிலுக்கு நீங்கள் ஒரு கவிதையாகவே கருத்துரை தந்து என்னை மிகவும் மகிழ்ச்சிகுள்ளாக்கி விட்டீர்கள். நன்றி.!நன்றி..!

      உங்கள் வாழ்த்துக்களுக்கும், கவிதையை பல முறை வாசித்து ரசித்தமைக்கும் நான் மீண்டும் மகிழ்ச்சியுடன் கூடிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களைப் போன்றவர்களின் ஊக்குவிப்புக்கள் என் எழுதுகோலுக்கு உரம் தரும் மருந்தாகும்.

      நேற்று தங்களுக்கு பதில் தர இயலவில்லை. நேற்று முழுவதும் வலைதளம் வர முடியவில்லை. தாமதமாக வந்து பதில் தருவதற்கு மன்னிக்கவும். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. வருவேன்ன்ன்ன் ... தாமதத்துக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      வாங்க.. வாங்க.. நலமா சகோதரி ? உங்களைத்தான் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தேன்.எந்த இடத்திலும் தங்களை அதிகமாக காணாததால், தங்களுக்கு வேலை பளு அதிகமாக உள்ளது எனவும் அனுமானித்தேன். ஆனால் தங்கள் வருகை எனக்கு மிகவும் மகிழ்வை தருகிறது. நீங்கள் எப்போது வந்து பதிவைப் பார்த்து கருத்துக்கள் தந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான்.அவசரமே இல்லை. உங்களுக்கு எப்போது சௌகரியபடுகிறதோ அப்போது வந்து கருத்து தாருங்கள். ஆனால் நானும் தங்களுக்கு சற்று தாமதமாகத்தான் பதில் தருகிறேன். நீங்களும் என்னை மன்னிக்கவும். ஹா. ஹா. ஹா. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  12. ஆஹா முழுவதும் படித்தேன் மிக அழகு... ஆனாலும் ஒரு வரி மிஸ்ஸிங்:)...
    அதாவது
    கண்ணில் பட்ட
    அதிராவின் குழைசாதத்தைச்
    செய்து உண்டு மகிழ்ந்து
    நாவின் சுவையையும் அறிஞ்சேன்
    எனவும் வந்திருக்கோணும்:)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அதிரா சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      கவிதையை (அல்லது கவிதை மாதிரி இருப்பதை) முழுவதுமாக படித்து அருமையான கருத்து தந்து என்னை சந்தோஷமடையச் செய்ததற்கு மிக்க நன்றி சகோதரி.

      /ஆனாலும் ஒரு வரி மிஸ்ஸிங்:)...
      அதாவது
      கண்ணில் பட்ட
      அதிராவின் குழைசாதத்தைச்
      செய்து உண்டு மகிழ்ந்து
      நாவின் சுவையையும் அறிஞ்சேன்
      எனவும் வந்திருக்கோணும்:)/

      ஆஹா..! என்ன மறந்தாலும் நான் இதை மறக்காமல் நினைவூட்டி இருக்க வேண்டும். மறந்து விட்டேனே..! நினைவுபடுத்தியமைக்கு நன்றி.. அடுத்த தடவை ஏதோவொன்றில் முதலாகவே தங்கள் ரெசிபியை கண்டிப்பாக எழுதி விடுகிறேன். ஹா ஹா. ஹா.

      தங்கள் கருத்தை மிகவும் ரசித்தேன் சகோதரி. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete