Monday, July 16, 2018

உடைத்த அரிசி கொழுக்கட்டைகள்.

தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ,  ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு  கட்டளை இடுகிறது. என் மனசு மட்டுமில்லை... வீட்டிலுள்ளவர்களின் மனங்களுந்தான். சரி . நமக்கு தெரிந்த சிற்றுண்டி செய்யலாம் என்றால் வீட்டில் அனைவரிடமிருந்தும் ஒவ்வொரு வகை பட்டியல் கிளம்பி விடும்.  பரோட்டாவிலிருந்து, சப்பாத்தி, பூரி, வந்து இட்லி, தோசைக்கு தாவி, உப்புமா "போம்மா ஒரே போர்" என்ற விமர்சனம்  செய்து அப்புறம் உன் விருப்பம் உனக்கு எது சுலபமோஅதைச்செய்.. என பச்சை கொடி காட்டியதும், நாம் எது கொஞ்சம் மெனக்கெடனுமோ, அதை தேர்ந்தெடுப்போம்.  அதுதான் நம் ராசி... அரிசி உடைத்து உப்புமா கொழுக்கட்டை செய்யலாமென்று ஆரம்பித்த போது, ஆளாக்கில் எடுத்த அரிசிகள் பேச ஆரம்பித்தன. (பயம் வேண்டாம்... ஒரு கற்பனைதான். இந்த பதிவுக்காக மட்டும் என்னுள் எழுந்தவை.. )  

ஒரு வித்தியாசத்திற்காக இன்று எங்களை பயன்படுத்தி செய்யப்படும் பதார்த்தத்தை நாங்களே சொல்லுகிறோமே.... என்றன ஒவ்வொரு அரிசியும். 
அவைகளின் வேண்டுகோளுக்கு நான் அரை மனதாக இணங்கினாலும்,  "நானும் நடுநடுவில் கொஞ்சம் எடுத்துக் கொடுக்கலாம் என்ற முடிவுடன் "சரி" என்றேன். 


நான்கு டம்ளர் பச்சரிசி  எடுத்துக் கொண்டு அலம்பி கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு பத்து நிமிடங்கள் ஊற வைத்து பின் ஒரு பெரிய தட்டில் அரிசியை எடுத்து போட்டு உலர வைக்கவும்.
என் நா வழக்கத்தை மாறாது சொல்ல ஆரம்பித்ததும், 

"அட..சே.." இந்த மனிதர்களே இப்படித்தான் சரி யென ஒரு சொல் கூறி விட்டு உடனே மாறி விடுவார்கள்.. படபடவென அரிசிகள் ஒன்றுக்கொன்று பேசி நொடித்துக்கொண்டன. 

உடனே நான் அவசரமாக "ஸாரி" என்றதும்


இது  ஊறிக்கொண்டிருக்கும் அரிசிகளாகிய நாங்கள்...என்று அரிசிகளும் அவசரமாய் ஆரம்பித்தன. 

நாங்களே எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு நாங்கள் உருவாகும் விதத்தை கூறுகிறோம் என்றதற்கு சரியென சொன்னீர்களே.. என ஊறும் அரிசிகள்"உர் "ரென கோபிக்க... 

"சரி, சரி" இனி நீங்களே துவங்கலாம் என சமாதானப்படுத்தி நான் அமைதியானேன். 


இதுவும் நாங்கள்தான் ..ஆனால் எங்களை ஒன்றிரண்டாக உடைத்து "உப்புமா" என்ற பெயர் சூட்டு விழாவுக்கு ஆஜர் ஆகச் சொல்லியதால், அவசரமாக மிக்ஸியில் புகுந்து சுற்றி  வந்ததில் சற்றே துகள்களாக மாறியிருக்கிறோம் .......சற்று களைப்பாக வேறு இருக்கிறோம். கொஞ்சம் நிதானிக்கிறோம்.... என்ற அவகாசத்தில்... 


ஒரு ப்ரெஷர்பேனில் கடுகு அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன் , காய்ந்த  மிளகாய் ஒரு ஆறு கிள்ளி போட்டு  தாளிக்கவும். கடுகு வெடித்ததும் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து கொஞ்சம் பெருங்காயபொடி   போட்டு நான்கு பச்சைமிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து வதங்கி கொணடிருக்கையில், ஒரு சின்ன மூடி தேங்காய் துருவல் சேர்த்து சற்று பிரட்டியதும்  ஒரு டம்ளர் அரிசிக்கு மூன்று என்ற கணக்கில் 12 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.  தண்ணீர் நன்றாக கொதித்ததும்........ என்று கோர்வையாக நான் மீண்டும் பழக்கதோஷத்தில் சொல்லிக் கொண்டே போகும் போது, 

அரிசிகள் சுயபுராணம் சொல்ல போவதாக சொன்னது நினைவு வந்து நிறுத்தி திரும்பி உடைத்து வைத்ததை பார்க்க, அனைத்து அரிசி குருணைகளும் என் மேலெழுந்த கோபத்தில், மெளன விரதத்தை  தாங்கள் கையாண்டு விட்டதாக அருகில் அஞ்சறைப் பெட்டியில் இருந்த கடுகு உ. ப,  வத்தல் போன்றவற்றிடம் கூறி மெளனமாகி விட்டதாக அவைகளும் ( இதுவும் ஒரு கற்பனையே..) பேச ஆரம்பித்தது... 

சரி.. "நானே கூறி முடித்து விடுகிறேன். "  என்று நான் ஆரம்பிக்க, 

"ஏன் நாங்களும் இதில் உண்டல்லவா? அரிசிகள் மெளன முடிவெடுத்தால், மிச்சத்தை நாங்கள் கூறி முடிக்க கூடாதா என்ன? "என உ. ப, வத்தல் கடுகு போன்றவை கோபத்தில் கடுப்பாக, அதிலும் கடுகு கொஞ்சம் கூட பொறுமையின்றி எண்ணெய்யில் போடாமலே மிகவும் கடுப்பாகி சிடுசிடுத்தது, 

நானும் வேறு வழியின்றி சிறு கடுகுதானே எனஅலட்சியபடுத்தாமல் கடுகுக்கு விட்டுக்கொடுத்து வாய் மூடிய மெளனியானேன். 

(கடுகு சிறுத்தாலும், காரம் குறைவதில்லையில்லையா...) அஞ்சரைப் பெட்டியில் நாங்கள் "வந்த கதை போன கதை" என அளவளாவி கொண்டிருந்த போது  எங்களை தனித்தனியே பிரித்தெடுத்து அழைத்து வந்து நெருப்பின் சூட்டுடன் விளையாடச் சொல்லி, பரிசாக தந்த " தாளிதங்கள்" என்ற மற்றுமொரு பெயரையும், வேறு வழியின்றி நாங்கள் சகித்துக் கொள்ளும் தருணத்தில், தேங்காய் துருவல் வேறு எங்களை எட்டி நோக்கி "நானும்" என்றபடி எங்களுடன் குதித்தது.


நாங்கள் சூட்டில் வறுபடுவது போறாதென்று  எங்களுடன் தேங்காய் பூவும் வறுபட்டு  தன் நிறத்தை "கலரிங்" செய்து பெருமைப்பட்டுக் கொண்டது.அதன் பின் எங்களின் கோபச்சூடு கொஞ்சம்  தணிந்த நேரத்தில், எங்களுக்கு குளிப்பாட்டுவது போல், தண்ணீரை எங்களுடன் கலந்ததும், எளிதில் கோபம் களைந்து குளிர்வானோம். ஆனால்,  பெயர் சூட்டு விழாவுக்கு மணியாகிறதென்றும்,  அனைவரும் ஆசி கூறி பின் சாப்பிட காத்திருக்கிறார்கள் என்பதாலும், மறுபடியும் அவசரபடுத்தி தண்ணீருடன் எங்களை கொதிப்படைய செய்து, எங்களுடன் முதலிலிருந்தே உடைபட்ட மனதுடன் வருத்தத்துடன் வாடிய முகத்துடன், மெளனச் சாமியாராக அமர்ந்திருந்த அரிசி குறுமணிகளையும்  எங்களுடன் சேர்த்து கிளறியதும்  நாங்கள் உப்புமா என்ற நாமகரணம் பெற்று அனைவரின் ஆசி(சை) களுக்காகவும், ஆனந்தமாக ரெடியாகி காத்திருந்தோம்..

ஒன்று சேர்ந்த எங்களை ஒரு தட்டில் ஆற அமர வைத்து அழகு பார்த்ததும் நாங்கள் அகமகிழ்ந்து போனோம். பிறகுதான் தெரிந்தது.... மறுபடியும் எங்களை உருமாற்றி எங்கள் பெயருடன் மற்றுமொரு புனைப்பெயரையும் இணைத்து விடத்தான் இத்தனை பிரயத்தனம் என்று புரிந்து கொண்டோம். எத்தனை பெயர்தான் என அலுத்துக்கொள்ளக்கூட எங்களுக்கு  அவகாசமில்லை. சின்ன சின்ன பந்துகளாக மாறிய பின் மற்றொரு சூட்டில் அமர்ந்து வெளிவந்ததும், "உப்புமா கொழுக்கட்டை" என்ற புதுப் பெயருடன் பளபளவென்றிருந்த எங்களைக் கண்டு எங்களுக்கே பெருமையாக இருந்தது. "நாம் எவ்வளவு அழகாக இருக்கிறோம்"  என்று கூடிப் பேசி மகிழ்ந்து கொண்டேயிருக்கையில்,  மொத்தமாக இருந்த நாங்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சட்டென பிரிபவர்களை மாதிரி கொஞ்ச நேரத்தில் காணமல் போய்க் கொண்டேயிருந்தோம். கூட்டமாக குழுமியிருந்த நாங்கள் எங்கே  எப்படி போகிறோம்... என்று ஒன்றும் புரியாத நிலையில், கடைசியில் ஒன்றிரண்டு மீதமானவர்களுடன் அளவளாவி ஐயத்தை போக்கியதில், 

"நாம் பிறந்த பயனை அடைந்து விட்டோம். நமக்கு முன்னால் பிறந்த மனிதர்களின் சித்து வேலைகளில் இதுவும் ஒன்று. கடவுள்களின் துணையுடன், அவர்களால் உருவாக்கப்பட்டு, அவர்களால் புதிது புதிதாக  பெயர்களை அவர்களின் விருப்பங்களுக்கேற்ப வைக்கப்பட்டு, அவர்களின் ஆத்ம பூஜைக்காக, அவர்களின் வாய் எனும் குகைக்குள் பயணித்து புண்ணியம் அடைவதே நமது பணியாக இறைவன் நம்மை  படைத்திருக்கிறார் என்ற தகவல்கள் புரிபட்டன . வேறு வழி... மீதமிருந்த நாங்களும் கடவுளின் கட்டளைப்படி கடைசி யாத்திரைக்கு பயணமாக, பக்குவமான மனதுடன் காத்திருக்க ஆரம்பித்தோம்.

"இதற்குத்தான் உங்களை அழகாக படமெடுத்த நானே சுலபமாகவும் உங்களை ஒரு உருவமாக உருவாக்கிய கதைகளை சொல்லி முடிக்கிறேன் என்றேன். கேட்டீர்களா? பிறந்ததிலிருந்து புரியாததையெல்லாம், புரிந்த மாதிரி நினைத்துக்கொண்டு, ஒன்றும் புரியாமலேயே நடித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு துணையாகத்தான் உங்களையும் ஆண்டவன் படைத்துள்ளான் என்பதை  உணர்ந்தும், உணராத மாதிரி வந்து சொல்லி உணர்ந்ததும் வீணில் மன வருத்தமடைய வேண்டுமா?" என நான் மெளனம் கலைந்து உபதேசம் செய்து கொண்டிருக்கையில், 

அங்கு மீதமிருந்த பல கொழுக்கட்டைகளும் ஆத்ம பூஜைக்காக குகை நோக்கி பயணப்பட்டு கொண்டிருந்தன.
30 comments:

 1. மீயேதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ... ஆடிப்பிறப்புக் கொழுக்கட்டை எனக்கே எனக்கா.... நாங்களும் நாளைக்கு கொழுக்கட்டையும் கூழும் செய்யும் ஐடியாவில் இருக்கிறோம்:).

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோதரி. முதல் வணக்கம்...

   முதலில் வந்த தங்கள் வருகையை மகிழ்வாக நன்றியுடன் வரவேற்கிறேன். அருமையான கருத்துக்கள் தந்து ஆடிப்பிறப்பு கொழுக்கட்டை என்றமைக்கும் மிகுந்த நன்றிகள்.
   இன்று கொழுக்கட்டைகளும் கூழும் (கமபங்கூழா
   செயது விட்டீர்களா? மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. அரிசியை ஊறவச்சு உப்புமாவாகக் கிண்டிச் சாப்பிடுவதை விட்டுப்போட்டு இவ்ளோ சுத்துச் சுத்தி.. சொதி வைத்து அதனுள் ஊத்தி, பின்பு குழைத்து உருட்டி.. ஓ மைக் கடவுளே பின்பு கொழுக்கட்டையாக அவிச்சிருக்கிறீங்க. ஆனா உண்மையில் சுவை சூப்பராகவே இருக்கும். என்னைப் பொறுத்து கொழுக்கட்டை பிடிக்க முன்பே உப்புமாப்போல சாப்பிடலாம்.

  அருமையான முயற்சி.. பாட்ட்டுக் கச்சேரி ஆரவாரத்தோடு, நான் நினைக்கிறேன் குல தெய்வம் தரிசனம் போனமையால உங்களுக்கு எனர்ஜி வந்திருக்குது ஓவரா என:)) ஹையோ கமலா சிஸ்டர் கலைக்கிறா.. மீ ரன்னிங்:).

  ReplyDelete
  Replies
  1. அதிரா அரிசி உப்புமா ஒரு டேஸ்ட் என்றால் அதில் செய்யப்ப்டும் கொழுக்கட்டை அது ஒரு தனி டேஸ்ட்....

   அதிரா கமலாக்காவின் கொழுக்கட்டை சாப்பிட்டு உங்களை மாதிரி ஞானியாயிடலாம்னு பார்த்தேன் அப்புறம் ஞானியாகிட்டா திங்க அட்டச்மென்ட் விடனும்...உங்களைத் துரத்த முடியாதேனு யோசிக்கறேன்...ஹா ஹா ஹா ஹா

   கீதா

   கமலாக்கா ஸ்டார்ட் ம்யூஸிக் போட்டாச்சு இல்லையா அதிரா...

   கீதா

   Delete
  2. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   வெறும் அரிசி உப்புமா மாதிரியும் சாப்பிடலாம் சகோதரி. அதை விட இது கொஞ்சம் உருவத்தில் மாறுபாடாய் கொஞ்சம் கூடுதல் சுவையாய் இருக்கும். வெறும் உப்புமாக்கு கத்திரிக்காய் கொத்ஸு நல்லாயிருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள வெல்லம் பொருத்தமானதாக இருக்கும். இனிப்பு பிடிக்காதவர்கள் சட்னி எடுத்துக்கொண்டும் சாப்பிடலாம்.

   /அருமையான முயற்சி.. பாட்ட்டுக் கச்சேரி ஆரவாரத்தோடு, நான் நினைக்கிறேன் குல தெய்வம் தரிசனம் போனமையால உங்களுக்கு எனர்ஜி வந்திருக்குது ஓவரா என:)) /

   ஆமாம்.. பாட்டு கச்சேரி எங்கேயிருக்கிறது? புரியவில்லை.. டியூப் என நீங்கள் சிரிப்பது மட்டும் புரிகிறது. ஹா ஹா ஹா ஹா இது முன்பே எழுதியதுதான்... சில திருத்தங்களுடன் இப்போது அம்மன் அருளும் சேர்ந்து வரப்பிரசாதமாக வெளி வந்திருக்கிறது. நன்றி ரசித்தமைக்கும்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  3. வணக்கம் கீதா சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தங்கள் கருத்தைத்தான் நானும் சொன்னேன். /கமலாக்காவின் கொழுக்கட்டை சாப்பிட்டு உங்களை மாதிரி ஞானியாயிடலாம்னு பார்த்தேன் அப்புறம் ஞானியாகிட்டா திங்க அட்டச்மென்ட் விடனும்/
   உண்மை உண்மை தின்னதானே பலம்.. ஆனா அதிரா ஞானியானாலும், பாரபட்சம் பாராமல் அனைத்து பதிவுகளுக்கும் வலம் வருகிறாரே.. உண்மையான ஞானியின்
   மனோபலத்தை பெற்று விட்டார் போலும்..

   ஆமாம் தாங்களும் ம்யூஸிக் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். ஒன்றும் புரியவில்லை.. என்ன அந்த பரிபாஷை?
   விளக்கினால் நன்று. டியூப்புக்கு மண்டை காய்கிறது. ஹா ஹா ஹா ஹா..

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 3. நாங்களும் செய்வோம். அதிலும் என் பாஸுக்கு இது மிகவும் பிடித்த உப்புமா! தொட்டுக்கொள்ள ஒரு சட்னி.

  அவையவை தங்களுடைய பங்கை சொல்வது போல ஒரு புது பாணியில் சொல்லி இருப்பது ரசித்தேன்.

  நாங்கள் சீரகம் சேர்க்க மாட்டோம். ஆனால் மிளகு சேர்ப்போம்.

  நன்றாக வந்திருப்பதை படங்கள் உறுதி செய்கின்றன. நா ஊறுகிறது!!!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே
   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தங்கள் பாஸுக்கு பிடிக்குமென்றால், உங்களுக்கும் பிடிக்குந்தானே.. ஆமாம் இதற்கு தேங்காய் சட்னி நன்றாகவே இருக்கும். வெறும் வெல்லமும் தொட்டு கொண்டால் நன்றாக இருக்கும்.

   /நாங்கள் சீரகம் சேர்க்க மாட்டோம். ஆனால் மிளகு சேர்ப்போம்./

   மிளகு சேர்த்து வேறு ஒரு அரிசி கொழுக்கட்டை பதிவு வெளியிடலாம் என படமெடுத்து வைத்துள்ளேன். விரைவில் அதையும் எழுதி விடுகிறேன்.

   புது பாணியையும், படங்களையும் ரசித்துப் பாராட்டியமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. பதிவு ரசனையாக இருந்தது சகோ.
  இருந்தாலும் சின்னோண்டு கடுகு கடுப்பாகியது ஆச்சர்யம்தான்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /இருந்தாலும் சின்னோண்டு கடுகு கடுப்பாகியது ஆச்சர்யம்தான்.../

   ஆமாம் சகோ.. சின்னோண்டு கடுகாயிருந்தாலும், கடாயில் மற்ற சாமன்களுடன் போட்டதும் அதுதானே கோபம் கொண்டு வெடித்துச்சிதறி நம் உடலை பதம் பார்க்கிறது. அதனால் அது கடுப்பாவது நியாயம்தானே..

   பதிவை ரசித்தமைக்கும் பாராட்டியதற்கும் நன்றிகள் சகோ.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. நாம் பிறந்த பயனை அடைந்து விட்டோம். நமக்கு முன்னால் பிறந்த மனிதர்களின் சித்து வேலைகளில் இதுவும் ஒன்று. கடவுள்களின் துணையுடன், அவர்களால் உருவாக்கப்பட்டு, அவர்களால் புதிது புதிதாக பெயர்களை அவர்களின் விருப்பங்களுக்கேற்ப வைக்கப்பட்டு, அவர்களின் ஆத்ம பூஜைக்காக, அவர்களின் வாய் எனும் குகைக்குள் பயணித்து புண்ணியம் அடைவதே நமது பணியாக இறைவன் நம்மை படைத்திருக்கிறார் என்ற தகவல்கள் புரிபட்டன . வேறு வழி... மீதமிருந்த நாங்களும் கடவுளின் கட்டளைப்படி கடைசி யாத்திரைக்கு பயணமாக, பக்குவமான மனதுடன் காத்திருக்க ஆரம்பித்தோம்.//

  அருமை.பக்குவமனது வேண்டும் எல்லோருக்கும்.

  உண்டு பண்ணி வைக்கிறான் கொண்டு கொண்டு போகிறான் பாடல் நினைவுக்கு வருது. (மாயவித்தை செய்கிறான் அம்பலவாணன் பாடல் தொடங்கும்)


  படங்கள் அழகு.

  //"நாம் எவ்வளவு அழகாக இருக்கிறோம்"//


  கொழுகட்டை அழகுதான். சாப்பிட ஆவலை தூண்டுகிறது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ஆம் சகோதரி. பக்குவமான மனது எல்லோருக்கும் தானாக அமைந்தால் நலம். அதையும் ஆண்டவன்தான் அருள வேண்டும்.

   /உண்டு பண்ணி வைக்கிறான் கொண்டு கொண்டு போகிறான் பாடல் நினைவுக்கு வருது. (மாயவித்தை செய்கிறான் அம்பலவாணன் பாடல் தொடங்கும்/

   நல்லதொரு பாடலை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். நானும் கேள்விபட்டுள்ளேன். எல்லாமே அவன் லீலைகள்தானே.. அவனின்றி ஒர் அணுவும் அசையாதல்லவா...

   படங்கள் அழகு என்ற பாராட்டிற்கும், பதிவை ரசித்தமைக்கும் என்மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 6. சொன்ன விதத்தை ரொம்பவே ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /சொன்ன விதத்தை ரொம்பவே ரசித்தேன்/

   ரசித்துப் படித்து தந்த கருத்துக்கு மிக்க நன்றிகள் சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 7. ஆஜர் கமலாக்கா...இதோ பார்த்துட்டு வரேன்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோதரி வாங்க.

   நிதானமாக வந்து படித்து தந்த கருத்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 8. ஆஹா!! உப்புமா கொழுக்கட்டையின் இடையே தத்துவமும் கலந்து கட்டி வித்தியாசமான நடையில் உ கொ தயாராகியிருக்கிறதே!!! ஆ அக்கா இந்தக் கொழுக்கட்டையைச் சாப்பிட்டால் நானும் "ஞானி"யாகிடுவேனா??!!!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...ஏதோ ஒரு ஞானி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு சொல்லும் சத்தமும் கேக்குது!! ஹிஹிஹீய்,...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி

   /ஆஹா!! உப்புமா கொழுக்கட்டையின் இடையே தத்துவமும் கலந்து கட்டி வித்தியாசமான நடையில் உ கொ தயாராகியிருக்கிறதே!!! ஆ அக்கா இந்தக் கொழுக்கட்டையைச் சாப்பிட்டால் நானும் "ஞானி"யாகிடுவேனா??!/

   அதெல்லாம் உ. கொ சாப்பிட்டாத்தான் நாம் ஞானி ஆயிடுவோமோ என்ற பயம் வேண்டாம். ஏன்னா நாம் எல்லோரும் ஏற்கனவே ஞானிகள்தான். இப்பத்தான் ஏதோ கர்ர்ர்ன்னு சத்தம் கேட்குது. பின்னே போட்டிக்கு நிறைய ஆட்கள் சேர்ந்தா உண்மையான ஞானிக்கு கோபம் வராதா? ஹா ஹா ஹா ஹா. பாராட்டிற்கு நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 9. இதே ரெசிப்பிதான் ஜீரகம் சேர்ப்பதில்லை....எனக்கு மிகவும் பிடிக்கும்....தொட்டுக் கொள்ள சட்னி அல்லது தக்காளி வெங்காயம் வதக்கியது...(மீக்கு வெங்காயம் இருந்தா ரொம்பப் பிடிக்குமாக்கும்...அப்போ நான் ஞானியாக முடியாதல்லோ?!! ஹா ஹா ஹா ஹா...பரவால்ல எனக்கு அதுக்காக இதெல்லாம் விட முடியாத சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன வயதாக்கும்.....ஹா ஹா ஹா ஹா)

  அருமை கமலாக்கா....கொழுக்கட்டை பார்க்கவே சூப்பரா இருக்கு ...பார்த்துட்டேனா..அதுவும் இன்று ராத்திரி என்ன செய்வது என்று யோசனை ஓடிக் கொண்டிருந்த நேரம்....ஸோ இதோ அரிசி ஊறப் போட்டுட வேண்டியதுதான்...ஹா ஹா ஹா...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   அம்மா வீட்டிலிருந்த போது ஜீரகம் சேர்த்ததாய் நினைவில்லை. ஆனால் தேங்காய் கொஞ்சம் அதிகமாய் பயன் படுத்துவார்கள்.வீட்டைச்சுற்றி நிறைய தென்னை மரங்கள். அந்த உ. கொ அவ்வளவு சுவையாக இன்னமும் மனத்துள் மணம் வீசிக் கொண்டிருக்கிறது. திருமணத்திற்கு பின் சென்னை வந்த பின் நாலணாவுக்கு தேங்காய் பத்தைகள் வாங்கி சமையல் பாகங்களை செய்ய வேண்டிய நிலை. வீட்டைச்சுற்றி வீடுகள்தான்.. தென்னை மரத்துக்கு எங்கே போவது? அதிலிருந்து தேங்காயின் பயன்பாட்டை சற்று குறைத்து அதற்கு பதிலாக சீரகம், பெருங்காயம் என வாசனைக்கு எல்லாம் சேர்க்க பழகி விட்டது.

   சின்ன வெங்காயம் சேர்த்து தனியாக சட்னியோ, அல்லது தக்காளியுடன் சேர்த்து வதக்கியோ நீங்கள் சொல்வது போல் இதற்கு தொட்டுக்கொள்ளலாம். இப்போதெல்லாம் சின்ன வெங்காயத்தில் வாசனையை இல்லை. அதுவும் நம் சின்ன்ன்ன்ன வயதோடேயே போய் விட்டது போலும். ஹா ஹா ஹா

   /கொழுக்கட்டை பார்க்கவே சூப்பரா இருக்கு ...பார்த்துட்டேனா..அதுவும் இன்று ராத்திரி என்ன செய்வது என்று யோசனை ஓடிக் கொண்டிருந்த நேரம்....ஸோ இதோ அரிசி ஊறப் போட்டுட வேண்டியதுதான்/

   ஓ. கே இன்னேரம் உ. கொ தயார் செய்து ஆத்ம பூஜை நடத்தியிருப்பீர்கள் என நம்புகிறேன். ஹா ஹா ஹா ஹா

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.


   Delete
  2. ஹா ஹா ஹா ஹா கமலாக்கா தின்னவேலிதானே நீங்களும் ஆமாம் மீ டூ...உ கொவுக்கு எங்கள் வீட்டிலும் தேங்காய் நிறைய சேர்ப்பார்கள் மற்றொன்று தேங்காய் எண்ணையில்தான் தாளிப்பது எல்லாமே...ஹையோ அந்த வாசனை..அதே போல தின்னவேலில சி வெ தான் அதிகம் பயன்படுத்துவார்கள். ஆமாம் அக்கா அன்று உங்கள் கொழுக்கட்டை பார்த்து எங்கள் வீட்டிலு உ கொ தான் ஆத்ம பூசை செமையா நடத்தினேன் ஹா ஹா ஹா

   கீதா

   Delete
 10. வித்தியாசமா அரிசியே ரெசிப்பி சொல்லுது...ஆஹா அருமை..


  சுவையான பதார்த்தம்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   /வித்தியாசமா அரிசியே ரெசிப்பி சொல்லுது...ஆஹா அருமை../

   ஒரு வித்தியாசத்திற்குதான் அவைகளே சொல்ல ஆசைப்பட்டன. தங்களின் ரசிப்புக்கும், பாராட்டுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

   வெறும் உப்புமாவை விட இது கொஞ்சம் கூடுதலாக சுவையானதுதான்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 11. இந்தக் கொழுக்கட்டை அடிக்கடி செய்வேன். அரிசியை ஊற வைச்சு அரைச்சும் செய்திருக்கேன். ரவையாக உடைச்சும் செய்திருக்கேன். இதோடு தித்திப்பும் பண்ணுவேன். என் அம்மா வீட்டில் பிள்ளையாருக்குப் போடும் பிடி கொழுக்கட்டைக்கு அரிசியைச் சிவப்பாக வறுத்துப் பொடித்து அல்லது இயந்திரத்தில் அரைத்து, வெல்லம், தேங்காய், ஏலக்காய் சேர்த்துக் கிளறி இப்படித் தான் பிடிப்பார்கள். இப்போத் தான் போன வெள்ளியன்று அந்தக் கொழுக்கட்டையும் செய்தேன். ஆனால் எது செய்தாலும் எங்க புக்ககத்தில் கூடவே உப்பும் செய்யணும். இரண்டுமாகத் தான் செய்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   நலமா? தற்சமயம் முற்றிலும் குணமடைந்து விட்டீர்களா?

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   /இந்தக் கொழுக்கட்டை அடிக்கடி செய்வேன். அரிசியை ஊற வைச்சு அரைச்சும் செய்திருக்கேன். ரவையாக உடைச்சும் செய்திருக்கேன்./

   இது பழைய காலத்திலிருந்தே இருப்பதுதான் சகோதரி. நம் அம்மா பாட்டி காலத்திலேயே இது தெரிந்த சிற்றுண்டிதான். என்ன ஒரு வித்தியாசம்ன்னா, அவர்கள கல் திருகையில் திரிப்பார்கள். விறகடுப்பில் வெண்கல உருளியில் கிளறுவார்கள். அந்த ருசி, மணம் இப்போது இல்லவேயில்லை.

   அரிசியை ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து செய்வது, நீங்கள் சொல்வது "நீர் கொழுக்கட்டை" தானே.. சேவை நாழியிலும் அதை போட்டு பிழியலாம் அதுதானே நீங்கள் குறிப்பிடுவது .. அதை நாங்கள் அம்மம்மா கொழுக்கட்டை என்போம்.

   அரிசி வறுத்தரைத்து கொண்டு இனிப்பு கொழுக்கட்டை பிள்ளையார் கொழுக்கட்டையும் நீங்கள் சொல்வது போல் செய்துள்ளேன்.

   நானும் இனிப்பும், காரமுமாக இரண்டும் சேர்ந்து செய்தால் ஒன்றுககொன்று தொட்டு கொண்டு சாப்பிட ஏதுவாக இருக்குமென்று உங்களைப் போல் இரண்டையும் செய்வேன்.

   உங்கள் அனுபவங்களையும் மனம் விட்டு பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்வாக இருக்கிறது. மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  2. கீதாக்கா எங்க வீட்டுலயும் உப்புக் கொழுக்கட்டை செய்யும் போதே இதே தித்திப்புக் கொழுக்கட்டையும் செய்வதுண்டு பிறந்தகத்தில். இங்கு சென்னைக்காரர்கள் அதிகம் டிஃபனே செய்வதில்லை. அதுவும் உ கொ எல்லாம் வெகு அபூர்வம்.

   கமலாக்கா அம்மம்மா அலல்து அம்மணிக் கொழுக்கட்டை குட்டிகுட்டியாய் ஹையோ செமையா இருக்கும். நீர்க்கொழுக்கட்டையும் செய்வதுண்டு. சம்பா பச்சரிசியில் செய்தால் சுவை செமையா இருக்கும்....

   கொழுக்கட்டையிலேயே நிறைய ....அம்மணிக் கொழுக்கட்டை பருப்பு உசிலி கூட செய்யலாம்.

   கீதா

   Delete
 12. உங்க கொழுக்கட்டை பார்க்கவே நல்லா இருக்கு. இன்னொரு முறை செய்து பார்க்க ஆவலைத் தூண்டுகிறது. இங்கே ஒரு பக்ஷணக் கடையில் இதுவும் செய்து விற்கின்றனர். வாங்கினது இல்லை. :))))

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   படங்கள் இன்னொரு முறை செய்து பார்க்கத் தூண்டுகிறது என்ற பாராட்டிற்கு மனம் மகிழ்கிறேன். நன்றி.

   பக்ஷணக் கடையில் இதை கூடவா விற்கிறார்கள்? ஆச்சரியம்தான். காலம் மாறி விட்டது. எதையுமே வீட்டில் செய்ய நேரமில்லை இப்போ.. "கடையிலே வாங்கி மனையிலே வை" என்ற காலமாகி விட்டது. என்ன செய்ய?
   தகவலுக்கு நன்றி..

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 13. பதிவு மிக அருமை கமலா சிஸ்டர்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   பதிவு மிக அருமை என கூறியது கண்டு மனம் மகிழ்ந்தேன்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete