Friday, June 1, 2018

கன்னி, ஆனால் தாய் - பகுதி 2

தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தை தீடிரென்று வீறிட்டு அழுதது. எதற்குமே கலங்காத நிர்மலா நளினாவின் சோகத்தை சுமந்த பாரத்தில் சற்று கண்கள் கலங்க அவசரமாக குழந்தையை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள்.

அவள் அணைப்பில் ஆறுதல் அடைந்த குழந்தை மறுபடி கண்மூடி உறங்க ஆரம்பித்தது. கைகளில் மெய்மறந்து உறங்கி கொண்டிருந்த ஷீலாவை மெல்ல தொட்டிலில் படுக்க வைத்தாள் நிர்மலா. 


"இந்த குழந்தையை விட்டு செல்லவதற்கு எப்படி நளினாவுக்கு மனது வந்தது.... அவள் வாழ்க்கையை பற்றி சமயம் வரும்போது தெரிந்து கொண்டு அவள் மனதை பக்குவமாய் மாற்றி நல்லதோரு வாழ்வை அவளுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென்றுதானே நினைத்து கொண்டிருந்தேன் .பாவிப்பெண்... அதற்குள் இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டாளே...." நிர்மலாவின் மனம் பரிதவித்தது...


கடற்கரை .....
"சேகர்! ஏதோ முக்கியமான விஷயம் கூற வேண்டுமென்றீர்களே!" என்று கேட்டவாறு தோளிலிருந்த ஷீலாவை இறக்கி விட்டுவிட்டு அவன் அருகில் அமர்ந்தாள் நிர்மலா.

அவளை ஏறிட்டு பார்த்து விட்டு குழந்தையை பார்த்த சேகர் "குழந்தை" என்று இழுத்தான்.

அவனது தயக்கத்தை புரிந்து கொண்ட நிர்மலா, "கவலைபடாதீர்கள்! நாம் பேசுவது அவளுக்கு ஒன்றும் புரியாது," என்றாள் புன்னகையுடன்.

"நம் காதலைப்பற்றி, இத்தனை நாள் பழக்கத்துடன் நம் காத்திருந்தலைப் பற்றி என் வீட்டில் விளக்கமாக கூறினேன் நிர்மலா. கொஞ்ச நேர தயக்கத்திற்கு பின் சம்மதம் தந்து விட்டார்கள். ஆனால்..."

"ஆனால்"?

"வீட்டுக்கு மருமகள் வரும் போதே தாத்தா, பாட்டியாக அவர்களுக்கு பிடிக்கவில்லை, அதாவது..." எப்படிசொல்வது என்று தயங்கினான் சேகர்.

"புரிகிறது, சேகர்.." அவனை கையமர்த்தினாள் நிர்மலா.

"என்னைப் பற்றி எல்லாவற்றையும் கூறிவிட்டீர்களா சேகர்? அதாவது நான் இவளுக்கு தாயாகவேண்டிய சூழ்நிலையைப்பற்றி...."

" எல்லாவற்றையும் கூறிவிட்டேன் நிர்மலா!"

பேச்சுக்கள் அங்கு தடையாக, அவரவர் சிந்தனைகள் சற்று மேலோங்க, சிறிது நேரம் மௌனம் நிலவியது இருவரிடமும்.

"சரி சேகர்! நான் கிளம்புகிறேன், ஷீலா பாவம் பசியோடிருக்கிறாள்! காத்திருப்பதுதான் நாம் பழகிய ஒன்றாயிற்றே.... அடுத்த முறை  ஒரு முடிவான பதிலை கேட்டு வந்து சொல்லுங்கள்" என்று நிர்மலா அவனிடம் விடை பெற்றுக் கொண்டு நடந்தாள்.

"நளினா வீட்டைவிட்டு போய் இரண்டு வருடங்கள் ஓடி மறைந்து விட்டது. இதுவரை அவளை சந்திக்கும் சந்தர்ப்பம் வரவில்லை. இனி எப்போதோ?

பேதைப்பெண்! என்னோடு இருந்திருந்தால் என்னக்கு பாரமாக இருக்குமென்று போய் விட்டாள். இப்போது மட்டும்... நான்கு வருடமாக நேசித்து வருபவரை திருமணம் செய்து கொள்ள முடியாமல் குறுக்கீடாக நிற்கிறதே அவள் குழந்தை."

சட்டென்று உள்ளத்தில் உதயமான இந்த எண்ணத்தால் வெட்கினாள் நிர்மலா.
"சே! என்னமடத்தனம்: பிஞ்சுபோன்ற முகம், மலரைப் போன்ற மென்மையான இதயம், தன்னையே தாயென்று நினைத்து அன்பு முழுவதையும் தனக்கே வாரி வழங்கும் இந்த குழந்தை, இவளைப் போயா குறுக்கீடு என்று நினைத்தோம்!"

சாட்டையால் அடித்தது போல் வலித்தது இதயம்....... 

கண்களில் நீர் நிரண்டது. தன் பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்த குழந்தையை இழுத்து அன்புடன் அணைத்துக் கொண்டாள் நிர்மலா.

"யாராலும் என்னை இவளிடமிருந்து பிரிக்க முடியாது என்றுமே.. என் வாழ்நாள் உள்ளளவும் ஏன் நளினாவே  வந்து என் குழந்தை என்று உரிமை கொண்டாடினாலும், நான்தான் இவளுக்கு தாய்.. அதில் எள்ளளவும் மாற்றமில்லை " என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள் நிர்மலா. 


அந்தளவிற்கு பாசக்கயிறு தங்கள் இருவரையும் பிணைத்திருப்பதை அவளால் உணர முடிந்தது. 


ரு  வாரகாலம் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் கழிந்தது.

வார இறுதியில் மறுபடியும் அதே கடற்கரையில் சேகருக்காக காத்திருந்தாள் நிர்மலா. 
குழந்தை அவள் அருகே மணலில் விளையாடிக்கொண்டிருந்தது.

தூரத்தில் அவளை தேடிக்கொண்டு சேகர் வந்து கொண்டிருப்பதை கண்ட நிர்மலா கையசைத்து தான் இருக்குமிடத்தை அவனுக்கு உணர்த்தினாள்.

அவளை பார்த்த மகிழ்ச்சியில் அவள் அருகில் வந்தமர்ந்தான் சேகர்.

"சேகர், இப்போதாவது உங்கள் பெற்றோர்களின் முடிவான பதிலை கேட்டு விட்டீர்களா? என்ன சொல்கிறார்கள்?" என்று ஆர்வமான குரலில் நேரடியாகவே ஆரம்பித்தாள் நிர்மலா.

"கேட்பதென்ன, கெஞ்சி பார்த்துவிட்டேன் நிர்மலா.. அவர்கள் முடிவிலிருந்து விலக மறுக்கிறார்கள்." தயக்கமான குரலில் சேகர் றினான்.

"சேகர், உங்கள் பதில்?  நீங்களுமா என்னை சந்தேகிக்கிறீர்கள்?" சற்று தழுதழுத்த குரலில் கேட்டாள் நிர்மலா.

"சே! சே! சத்தியமாக இல்லை நிர்மலா, இந்த நான்காண்டு கால பழக்கத்தில் உன்னைப்பற்றி எனக்குதெரியாதா? நளினாவை நான் பார்த்து பேசாவிட்டாலும் நீ அவளைப்பற்றி சொன்னதையெல்லாம் கேட்டு உன்னுடன் நானும் அவளுக்காக இரக்கப் படவில்லையா, அவளுக்கு ஒரு புதுவாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்து விட்டு, அதற்கு பிறகு நம் காதலை அவளிடம் சொல்லி நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நீ சொன்னதை ஆமோதித்து, நான் இத்தனை காலம் காத்திருக்கவில்லையா? இருந்தாலும்..... நீ...." தயக்கத்துடன் நிறுத்தினான் சேகர்.

"சொல்லுங்கள் சேகர், எதையோ சொல்ல வந்தீர்களே.." என்ற நிர்மலா அவன் கண்களை உற்றுநோக்கினாள்.

"நீ தவறாக நினைக்காதே, நிர்மலா. என்  பெற்றோர்கள் மட்டுமில்லை, நானும்.... என் மனைவி வீட்டுக்கு வரும் போதே ஒரு குழந்தையோடு வருவதை விரும்பவில்லை...." சற்று  தயங்கியவாறு படபடத்த குரலில் கூறினான் சேகர்.

திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள் நிர்மலா.

"ஒரு அருமையான யோஜனை கூறுகிறேன் நிர்மலா, பேசாமல் ஷீலாவை அநாதை ஆசிரமத்தில் சேர்த்து விடு. அதற்கு வேண்டிய உதவிகளை நான் செய்கிறேன். நம் திருமணத்திற்கு பிறகும், நீ அவளை அடிக்கடி சென்று பார்த்து விட்டு வரலாம். அதற்கு நான் தடையொன்றும் சொல்ல மாட்டேன். இது உறுதி! என் பெற்றோர்களிடமும் இந்த விபரத்தை விளக்கி கூறி, அவர்கள் சம்மதத்தையும் வாங்கி விடுகிறேன்... என்ன சொல்கிறாய்?" அவனது அவசர பேச்சில் அவளை எப்படியாவது இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற வெறி மட்டுமே இருப்பதை புரிந்து கொண்டாள் நிர்மலா.

சிறிது நேரம் மெளனம் நீடித்தது இருவரிடமும்...

எதுவும் உணராத குழந்தை இருவரையும் பார்த்து தன் மழலை மொழியில் எதையோ கூறி விட்டு, முகம் மலர சிரித்து, நிர்மலாவின் மடியில் ஏறி அமர்ந்து அவள் கழுத்தை இறுககட்டிக்கொண்டது.

நிர்மலாவும் அவளை அன்புடன் அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

சட்டென்று உறுதியான முகத்துடன் அவ்விடத்திலிருந்து எழுந்த நிர்மலா, தன் புடவையில் ஒட்டிக்கொண்டிருந்த மணலை தட்டியவாறு மடியிலிருந்து இறக்கி விட்ட குழந்தையை எடுத்து தோளில் சாற்றிக் கொண்டாள்.

"மிஸ்டர் சேகர், சாதாரணமான மனிதர்கள் கணக்கில் இத்தனை சீக்கிரம் நீங்கள் சேர்ந்து விடுவீர்களென்று நான் கனவிலும் நினைக்கவில்லை. உங்களை எவ்வளவோ உயர்ந்த மனிதர் என்றுதான் இந்த நான்காண்டு கால பழக்கத்தில் நினைத்திருந்தேன்.

என்னையே நம்பி என்னிடம் ஒப்படைத்து விட்டு போயிருக்கும் நளினாவின் குழந்தையை, என் அன்பு சகோதரி குழந்தையை, ஏன்.... நான் பெறாமல் வளர்த்து வரும் என் வளர்ப்பு மகளை நான் உங்கள் அரிய யோஜனையின்படி நான் கைவிட தயாரில்லை. அதற்காக என்னை மன்னித்து விடுங்கள். என்றாவது ஒருநாள் அவள் நல்ல நிலமையில் வந்து என்னை சந்திப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு கண்டிப்பாக இருக்கிறது.  அவள் நம்பிக்கையை குலைக்க எனக்கு இஸ்டமில்லை.

நீங்கள் உங்கள் விருப்பபடி உங்கள் பெற்றோர்க்கு பிடித்தமான பெண்ணை மணந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்,  எனக்கு எந்த ஆட்சேபனையும்  இல்லை.... அல்லது, என்னை புரிந்து கொண்டு, என்னையும், என் குழந்தையையும் ஏற்றுக்கொள்ள என்று மனமுவந்து முன்வருகிறீர்களோ, அன்று அந்த நாளில் நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்.

அதுவரைக்கும் அது எத்தனை ஆண்டு காலமானலும்சரி... காத்திருப்பேன்..  ஏனென்றால், நான் உங்களை  மனமாற நேசித்திருக்கிறேன். இப்போதும் நீங்கள் குழந்தையை அநாதையாக விட்டு விடுமாறு சொல்லும் யோஜனையை தவிர்த்து, உங்களிடமிருக்கும் பிற நல்ல குணங்களுக்காக, இத்தனை நாள் நாம் பழகிய கண்ணியமான நட்புக்காக உங்களை நேசிக்கிறேன்.

தவிர என்றோ உங்களையே  என் கணவராகவும்  என் மனதில்  வரித்து விட்டேன். மனதில் அமர்ந்திருக்கும் ஒருவரை தூக்கி எறிந்து விட்டு மற்றொருவரை மணந்து கொள்ள எனக்கு தெரியாது.  என்னால் முடியவும் முடியாது,  நான் வருகிறேன்."

சொற்களை சிந்திய வேகத்தில் அவனிடமிருந்து எந்த ஒரு பதிலையும் எதிர்பாராமல்  நடந்து சென்றாள் நிர்மலா.

அவளின் நிதானமான பேச்சில், உறுதியுடன் கூறிய முடிவில், மேற்கொண்டு என்ன பேசுவது  என்று தெரியாமல், தடுத்து நிறுத்தவும் தோன்றாது, திரும்பியும் பாராது செல்லும் அவளையே திகைப்புடன் பார்த்தவாறு, அமர்ந்திருந்தான் சேகர்.



முற்றும்.

இதன் முந்தைய பகுதியை காண இங்கே சொடுக்கவும்.

பகுதி: 1

16 comments:

  1. எனக்கு நளினாவின் மேல் அதிருப்தி வருகிறது. நல்ல மனங்களுக்கு துன்பம் செய்கிறோம் என்கிற உணர்வு கூட இல்லாத பெண். சுயநலமாகி விட்ட பெண். நிர்மலாவின் உறுதி எதிர்பார்த்த ஒன்றுதான். சேகரைக் குறை சொல்லியும் பயனில்லை. ப்ராக்டிகலாக இருக்கிறான்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் முதலில் வருகை தந்து தந்த கருத்துப் பகிர்வினுக்கு, என் மனமார்ந்த நன்றிகள்.

      /எனக்கு நளினாவின் மேல் அதிருப்தி வருகிறது. நல்ல மனங்களுக்கு துன்பம் செய்கிறோம் என்கிற உணர்வு கூட இல்லாத பெண். சுயநலமாகி விட்ட பெண். நிர்மலாவின் உறுதி எதிர்பார்த்த ஒன்றுதான்/

      ஒருவர் அதிருப்தி ஆகியதால்தான் மற்றவர் மேல் இயல்பாக திருப்தி வரும். நிர்மலா உறுதி தளராமல் இருக்கும்படி அவளை படைத்துள்ளேன்.அவள் நம்பிக்கை வீண் போகாது.. கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. இதில் எனக்கும் சேகர்மீதோ, குடும்பத்தினர்மீதோ குற்றமாக தெரியவில்லை.
    அதேநேரம் நிர்மலாவின் நிலையும் சட்டென குழந்தையை விட்டுவிட இயலாத சூழல்.

    இதில் நளினாதான் குற்றவாளியாக தெரிகிறாள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      /அதேநேரம் நிர்மலாவின் நிலையும் சட்டென குழந்தையை விட்டுவிட இயலாத சூழல்.

      இதில் நளினாதான் குற்றவாளியாக தெரிகிறாள்./

      நிர்மலாவின் தைரியத்தை எடுத்துக் காட்டுவதே கதையின் கரு. அவள் வாழ்வில் ஒரு விபத்து போல் வந்தவள் நளினா.. அதைக் கண்டு கலங்காதவள் போல நிர்மலாவை படைத்துள்ளேன்.
      குற்றங்கள் என்றேனும் ஒரு நாளில் சரியாகலாம். தவறுகள் சில நேரங்களில் மன்னிக்கபடலாம். மன்னிப்பது மனித குணங்களில் ஒரு சிறப்பான அம்சந்தானே..

      தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /மனம் போல் வாழ்வு../

      ஆம். அவள் நல்ல மனதிற்கு நல்ல வாழ்வு கிடைக்குமென்று நம்புவோம்.
      நம்பிக்கை என்றும் நலம் தரும்.
      தங்கள கருத்திற்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. நான் முந்தைய பதிவில் சொன்னதுதான் சகோ. நளினாவின் மேல் ஏனோ கோபம் வருது. அடைக்கலம் கொடுத்த நிர்மலாவுக்கு இப்படி செய்துவிட்டுப் போவதுநல்லதில்லை. அடைக்கலம் கொடுக்காவிடினும் தன் குழந்தையை மற்றொரு பெண்ணிடம் இப்படி விட்டுச் செல்வது சரியில்லை. சுயநலக்காரி. நிர்மலாவின் வாழ்க்கையை எண்ணிப் பார்த்திருக்க வேண்டாமா? இப்போது அவளது வாழ்க்கை அல்லவா நஷ்டமாகியிருக்கிறது.

    சேகரைக் குற்றம் சொல்ல இயலாது. ஏனென்றால் நளினாவின் குழந்தையை அவன் ஏற்றுக் கொண்டாலும் எதிர்காலத்தில் பிரச்சனைகள் வரலாம்...

    நிர்மலாவின் முடிவு எதிர்பார்த்தேன்...

    நளினா குற்றவாளியே...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /நான் முந்தைய பதிவில் சொன்னதுதான் சகோ. நளினாவின் மேல் ஏனோ கோபம் வருது. அடைக்கலம் கொடுத்த நிர்மலாவுக்கு இப்படி செய்துவிட்டுப் போவதுநல்லதில்லை. அடைக்கலம் கொடுக்காவிடினும் தன் குழந்தையை மற்றொரு பெண்ணிடம் இப்படி விட்டுச் செல்வது சரியில்லை. சுயநலக்காரி. நிர்மலாவின் வாழ்க்கையை எண்ணிப் பார்த்திருக்க வேண்டாமா? இப்போது அவளது வாழ்க்கை அல்லவா நஷ்டமாகியிருக்கிறது./

      தங்கள் கோபம் புரிகிறது. ஆனால் நிர்மலாவின் நல்ல உள்த்தைதான் இங்கு புடம் போட்டு காட்டியுள்ளேன்.
      அவளின் தியாகத்தை, நம்பிக்கையை உணர்வதே இக்கதையின் கரு.
      அதை மனதில் வைத்துதான் நிர்மலா பாத்திரம் உருவாகியுள்ளது. குற்றங்களை சுலபமாக மன்னிக்க கூடிய மனப்பான்மை அவளின் சிறப்பு..

      தங்களின் மனம் திறந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. நிர்மலா இவ்வாறு தான் முடிவு எடுப்பாள் என எதிர்பார்த்தேன்.
    சேகரையும், அவர்கள் குடும்பத்தாரையும் குறை சொல்ல இயலவில்லை. நளினா அடைக்கலம் கொடுத்தவளுக்கேஇப்படி செய்தது நியாயம் இல்லை. குழந்தையுடன் அவள் வாழ்க்கையை போராடி இருந்தால் தைரியமாக வாழ்வாள் என்ற நம்பிக்கை வரும். ஆனால் அவள் எப்படி திரும்பி வருவாள் என தோன்றுகிறது...
    2 அத்தியாயத்தையும் படித்து விட்டேன் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      நலமா? தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

      நீண்ட நாட்கள் கழித்து வருகை தந்த தாங்கள் என் வலைதளம் வந்து கதை படித்து கருத்து தெரிவித்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

      /அவள் வாழ்க்கையை போராடி இருந்தால் தைரியமாக வாழ்வாள் என்ற நம்பிக்கை வரும். ஆனால் அவள் எப்படி திரும்பி வருவாள் என தோன்றுகிறது.../

      தங்கள் கோபங்கள், வருத்தங்கள் புரிகிறது. நிர்மலாவின் தைரியமான வாழ்க்கையை பார்த்து கற்ற பின்தான் அவளை நம்பிதான் தன் குழந்தையை விட்டுச் சென்றுள்ளாள் நளினா.. அந்தளவிற்கு நிர்மலாவை நல்ல குணத்துடன் படைத்துள்ளேன். அவள் நம்பிக்கை வீண் போகாது. விரைவில் அவள் திரும்பலாம்.

      தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. அருமையான பதிவு. வாழ்த்துகள்.

    சிகரம் வலைத்தளம் சிகரம் செய்தி மடல் - 0015 - சிகரம் பதிவுகள் - 2018 #SIGARAMCO #சிகரம் #NEWSLETTER #SIGARAMNEWS
    #சிகரம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  7. Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      /நல்ல நடை. சரியான முடிவு./

      பாராட்டுக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  8. நிர்மலா கன்னிதாயாக மாறிவிட்டள். எதிர்பார்த்த முடிவு.
    ஆனால் நளினாவால் இப்படி ஆகி விட்ட்தே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

    அருமையாக கதையை கொண்டு சென்றீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வணக்கம் சகோதரி

    தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோ.

    /நிர்மலா கன்னிதாயாக மாறிவிட்டள். எதிர்பார்த்த முடிவு.
    ஆனால் நளினாவால் இப்படி ஆகி விட்ட்தே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை/

    உண்மைதான் சகோதரி. ஒருவரின் செயல்கள் சிலசமயங்களில்,மற்ற சிலரையும் பாதித்ததுதான் விடுகிறது. நிர்மலாவின் உயர்வை எடுத்துக் கூற போக, நளினாவின் மேல் பழி வந்து விட்டது.

    தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சகோதரி. உங்களது கருத்துக்கள் என் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கிறது. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete