Wednesday, February 28, 2018

பிராயச்சித்தம்.....

அவன் பயணித்திருந்த பயணம் கடமையின் நிமித்தம் ஏற்பட்டது எனலாம். இல்லை, மனதுக்குள் எழுந்த மனிதாபிமான விளைவாகவும் இருக்கலாம். ஆனால், இது கண்டிப்பாக ஒரு பிராயச்சித்தமாகும் என்று அடிக்கடி தனக்குள் கூறிக் கொண்டான். ஆச்சு!  நாளை காலை அங்கு சென்று சேர்ந்ததும். அருகிலிருக்கும் அந்த ஊரையடைந்து தேடிப்பிடித்து தன் பிராயச்சித்தத்தை நிறைவேற்றி விடலாம். மனது பீறிட்ட  மகிழ்ச்சியில் உடலில் ஒரு வலுவேறியது போன்ற சந்தோஸம் வந்தது.

"அவங்க என்னோட வருவாங்களா? " இந்த கேள்விக்கு ராஜுவால் பதிலேதும் கூற முடியவில்லை. ஆனால் அவர் கண்களில் கண்ணீருடன் தோன்றிய பாவம், "நீ அழைத்து வந்து விட்டால் அதை விட சந்தோஸம் நமக்கு இந்த பிறவியில் வேறொன்றுமல்லை என்றுதான் தோன்றுகிறது!" எனக் கூறியதை நினைவு கூர்ந்தவனுக்கு,  " இருக்கும் இருப்பிடத்தை எப்படியோ விசாரித்து தெரிந்து கொண்டாயிற்று!  ஆயிரம் ஆறுதல் வார்த்தைகள் கூறி அழைத்து செல்ல அருகதை உள்ளவனா நான். தெரியவில்லை! ஆனாலும் , செய்த பாவங்களுக்கு பரிகாரமாக எப்படியாவது எங்களை சேர்த்து வை இறைவா!" என வேண்டிக் கொள்ள தோன்றியது.


பார்வதி சாப்பிட்ட பின் நாலு பாத்திரங்களை கழுவி வைத்தாள்.அதை பிறகு கூட நிதானமாக தேய்த்துக் கொள்ளலாம். யாரும் கேட்கப்போவதில்லை. ஆனாலும் அப்படியே பழக்கப்பட்டக்  கைகளுக்கு  சாப்பிட்டவுடன் சற்று அமர, சாய்ந்து கொள்ள அனுமதிக்க  தோன்றவில்லை. ஒற்றை மனுஸிக்கு என்ன சாப்பாடோ? என்று தினமும் அலுத்துக் கொண்டாலும்,  பத்துபத்தரைக்குள் வயிற்றில் எரியும் நெருப்பை அணைக்க அடுப்பில் நெருப்பை  ஏற்றி வைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். ஒரு முறை சமைப்பதையே இரு தடவையும் சாப்பிட்டு ஒரு நாளின் பொழுதை கழித்துக்கொண்டிருந்தாள்.காலை மாலை இரு வேளைகளிலும் அருகிலிருக்கும் கோவில்களுக்கு சென்று கடவுள்களிடம் சிறிது பேசி விட்டு வருவதையும் தன் வாடிக்கையாக வைத்திருந்தாள.

"இந்த கடவுள் நம்பிக்கைதான் உங்களை இந்த அளவுக்கு
இத்தனை வயதிலும், திடமாய் வைத்திருக்கிறது.'  என்று   தெரிந்தவர் அறிந்தவர் விமர்சிக்கும் போது ஒட்டிய கன்னம் சற்றே அகல லேசாக சிரிப்பாள்.

"வேறே வழி! எனக்கு இத்தனை கஷ்டம்   தந்துட்டான்!  அதையெல்லாம் சமாளிச்சுக்கற தைரியமும் இவகிட்டே இருக்ககா இல்லையான்னு , அவன் தெரிஞ்சுக்க வேண்டாமா? அதான் அவன்கிட்டே தினமும் போய் நின்னு "பாத்துக்கோப்பா சமாளிசிண்டுதான் இருக்கேன்'னு  ஆஜர்  கொடுத்திட்டு வர்றேன்" என்று பதில் கூறி விட்டு நகர்வாள்.

உள்ளுக்குள்  ஆறாய் பொங்கும்  சோகங்களை யாரிடம் கூறி ஆற்றிக்கொள்ள முடியும். சொன்னால், "எங்களுக்கில்லாததா? என்பார்கள். நம் கஸ்டத்தை அவர்களிடம் சொல்லி ஆற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கும் போது, அவர்களின் சோகங்கள் என்றுமில்லாமல், அன்றுதான் அதிகம் அவர்களுக்கு நினைவுக்கு வர,  "பழகிக்கோ ! அப்படித்தான்... .. என்ன செய்வது? "என்றபடி மனச்சுமையை அதிகரிப்பார்கள். .தீயினுள்  இட்ட  இரும்பை அடித்தடித்து வளைப்பதை போல்  படைத்தவன் அடித்து வளைக்கிறான். ஏனப்பா இப்படி? .. என்று  அவனிடமே சென்று முறையிட்டு வந்து விட்டால்,  பாரங்கள் சற்று குறைந்தாற்போலவும், இருக்கும். மனதும் இறுகி இரும்பை போல் உறுதியாக ஜொலிக்கும்.  என்று உள்ளுக்குள்சொல்லிக்கொள்வாள் பார்வதி.

பிறந்த வீட்டில் சற்று சிரமங்களுடன் வளர்ந்து வந்த பார்வதி, புகுந்த வீடு வந்ததிலிருந்து கொஞ்சம் செளகரியத்தை அனுபவித்து  வந்தாள்  எனலாம்.
சந்தோஸமாய் வாழ்க்கையை கழித்து வந்த போது, அதை கெடுப்பது மாதிரி தன்னையும், கணவரையும் பத்து மாதம் சுமந்தெடுத்த  உறவுகளை அடுத்தடுத்து தன்னிடம் அழைத்துக் கொண்ட கடவுளிடம் மனம் விசனப்பட்டு புலம்பியபடி இருந்தாள்.  ""திருமணமாகி , பத்து  வருடங்கள் ஆகி விட்டன! உனக்கு ஒரு குழந்தையை கொடுக்க மாட்டானா அந்த ஆண்டவன் ? ''என்று தன்னையும், கணவரையும் நினைத்து விசாரப்பட்டுக் கொண்டிருந்த அந்த உயிர்களை தன்னிடத்தே வரவழைத்து கொண்ட மகிழ்ச்சியிலிருந்த கடவுள்களை,  "ஏன் இப்படி பண்ணிட்டே?  என் மேலே உனக்கென்ன அவ்வளவு கோபம்! "என்று தினமும் கேட்பதையே வாடிக்கையாய் வைத்திருந்தாள்.

பார்வதியின் தாக்கங்கள் ஒருவேளை அந்த கடவுளை பாதித்ததோ என்னவோ, அவள் வயிற்றில் வாரிசொன்றை சுமக்க வைத்தான். "மனக்கவலைகளுக்கு மருந்தாக இறைவன் தந்திருக்கிறான்.இனி கவலையேதும் படாதே!  என்று உற்றார் உறவினரின்  ஆறுதல் மொழிகளில்., அவள் மனந்தேறி காலத்தின் ஓட்டத்தில், கலந்து  இருபது வருடங்கள் ஒடிய பின் ஆண்டவன் மறுபடி அவளை சோதித்தான். தன் ஒரே மகனுடன், தன் ஒன்று விட்ட நாத்தனாரின் ஐந்து குழந்தைகளில், மூன்றாம் மகனையும், அவளின் வறுமை காரணமாக தத்து எடுத்து வளர்த்து வந்தாள்.  தன் மகனை விட  அவனிடம் பாசம் வைத்து வளர்க்க, அவனும் இந்தக்குடும்பத்துடன் நன்கு ஒட்டிக்கொண்டான். இருவரும் சகோதர வாஞ்சையுடன், ஒன்றாகவே வளர்ந்து வந்தனர். "அந்த வளர்ப்பு மகனே உனக்கு போதும்! சொந்த மகன் எதற்கு? "என்று நினைத்த ஆண்டவன் மறுபடி ஒரு புயலில் அந்த வீட்டை தத்தளிக்க செய்தான்.  உறவுகளுக்கு எப்படி சமாதானம் செய்வது எனத்தெரியவில்லை!..... அடிமேல் அடி விழுந்த வேகத்தில் கணவரின் உடல் நிலை பாதிப்படைய  "நீ எப்படியோ சமாளிச்சுக்கோ! என்று மேலும் ஒரு புயலை  அவளுக்கு  தந்தபடி அவரும் மறைய. தன் வளர்ப்பு மகனை ஒரே கைப் பிடியாக நம்பியபடி மனதை இரும்பாக மாற்றிக்கொண்டு, அங்கிருக்க பிடிக்காமல், இந்த ஊருக்கு வந்து சேர்ந்தாள்.
(தொடரும்...)

10 comments:

 1. இந்த மாதிரி எத்தனையோ பார்வதிகள் இநத சமூகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

  பாவம் பார்வதி தொடர்கிறேன்....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தாங்கள் உடனடி வருகை தந்து நல்லதொரு கருத்தை தந்தமைக்கு பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். உடனடி முதல் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனக்குதான் பதிலழிக்க சற்று தாமதமாகி விட்டது. வருந்துகிறேன்,

   இனி வரும்.பகுதிகளை "தொடர்கிறேன்' என்றமைக்கு நன்றி கலந்த மகிழ்ச்சிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 2. பெற்றோரால் வளர்க்கப்படாமல், பெற்றோர் இருந்தும் சில காரணங்களால் பிறரால் வளர்க்கப்படும்போது அவர்களுடைய மனதில் எழுகின்ற வித்தியாசமான எண்ணங்களும், வேதனைகளும் மறக்கமுடியாதனவாகும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் உண்மையான கருத்துரைகளுக்கும் எனக மனமார்ந்த நன்றிகள்.
   தங்களின் கூற்றும் உண்மைதான். பெற்றவர்களுக்கு நிகராக இருந்து உறவினரின் குழந்தையை எடுத்து வளர்த்து வரும் போது, சூழ்நிலைகள் காரணமாக அக்குழந்தையின் மனம் மாறும் போது வளர்த்தவர்களின் வேதனையும் கொடுமைதான். அப்படியான ஒரு உறவின் வேதனையினால் விளைந்த சோகம் என் மனதில கதையாக வடிவெடுத்தது.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்

   Delete
 3. சம்பவங்கள் ஜெட் வேகத்தில்... அடுத்தடுத்த தாக்குதல்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும், கதையினை படித்து கருத்துக்கள் தந்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   "சம்பவங்கள் ஜெட் வேகத்தில்...அடுத்தடுத்த தாக்குதல்கள்."

   கதையில் கற்பனையில் மட்டுமல்ல! மனித வாழ்க்கையில் சிலரது வாழ்விலும் இச்சம்பவங்கள்,தாக்குதல்கள் நொடிப் பொழுதில் அடுத்தடுத்து நடந்து விடுகின்றன.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 4. "வேறே வழி! எனக்கு இத்தனை கஷ்டம் தந்துட்டான்! அதையெல்லாம் சமாளிச்சுக்கற தைரியமும் இவகிட்டே இருக்ககா இல்லையான்னு , அவன் தெரிஞ்சுக்க வேண்டாமா? அதான் அவன்கிட்டே தினமும் போய் நின்னு "பாத்துக்கோப்பா சமாளிசிண்டுதான் இருக்கேன்'னு ஆஜர் கொடுத்திட்டு வர்றேன்" என்று பதில் கூறி விட்டு நகர்வாள்.//

  உண்மை. கவலைகளை தாங்கும் சகதியும் அவன் தான் தர வேண்டும். தாங்கும் சகதி உடையவர்களூக்கே துன்பத்தை தருகிறான் என்று நினைக்க தோன்றுது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்களது முதல் வருகைக்கும் விளக்கமான கருத்தப் பகிர்வுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.


   /உண்மை. கவலைகளை தாங்கும் சக்தியும் அவன்தான் தர வேண்டும். சக்தி உடையவர்களுக்கே துன்பத்தை தருகிறான் என நினைக்க தோன்றுகிறது./

   நிஜமான வார்த்தைகள்.தாங்கும் சக்தி உள்ளவர்களுக்குத்தான் சோதனை மேல் சோதனை வருகிறது.

   கதையினை படித்து மேற்க்கோள் காட்டி குறிப்பிட்டமைக்கு மிகுந்த நன்றிகள் சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
 5. கதை முழுவதும் எல்லா பகுதியும் வாசித்துவிட்டு கருத்திற்கு வருகிறேன் சகோதரி ஓகேயா...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   அவசரமேயில்லை! தங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது நிதானமாக படித்து விட்டு கருத்துரை இடுங்கள்.

   உங்களைப் போன்ற பதிவர்களின் ஊக்கமிகு கருத்துக்களினால்தான் என் எழுத்துக்கள் வளருமென நம்புகிறேன்.
   என் தளம் வந்து அனைத்தையும் பார்த்து கருத்திட்டமைக்கு என் மனமுவந்த நன்றிகள் சகோ.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete