Thursday, August 25, 2016

ஆழ்ந்த பக்தி

சுயநலன்கள் ஒவ்வொரு மனிதரையும்  அவர் அறியாமலே,  பிடித்து வாட்டும் ஒரு  நோய்!  அந்த நோயை கடவுளிடம் பக்தியோடிருத்தல் என்ற மருந்தின் மூலம் சற்று புரையோட விடாமல், காப்பாற்றலாம்..

நீ என்னையே அனுதினமும் நினை! ஏனெனில் நான் எப்போதும்  உன்னில்தான் உள்ளேன்.  நீ வேறு , நான் வேறு அல்ல! என்றான் பரந்தாமன்.


துவாரகை  நகருக்குள் நுழைந்த  அந்த   ஏழை  அந்தணனரால்,  தான் காண்பது கனவா,  நனவா  என்று அனுமானிக்க    முடியாமல்   தத்தளித்துக் கொண்டிருந்தார். பார்க்கும் இடங்களெல்லாம்  மாட மாளிகைகளும்,  கூட கோபுரங்களும்  மனதில் ஒரு  வகையாக அச்சுறுத்தின.  எங்கு பார்த்தாலும், செல்வத்தின் செழிப்புதான்!. பின்னே! பரந்தாமனும்,  அவனில் பாதியான செல்வத்தின் நாயகியுமான  திருமகளும் வாசம் செய்யும் புண்ணிய பூமி சுவர்க்கமயமாகத் தானே  திகழும்.  அந்த  ஏழை அந்தணருக்கு மனதிற்குள் பெருமிதம் பொங்கித் ததும்பியது. இளமையில், பால்ய  காலத்து நண்பன், குரு குல வாசத்தில் ஒன்றாக  படித்தவன்,  அழகே உருவானவன், வீர தீரங்களில் வல்லவன், மாயா ஜாலங்களில்  நிகரற்றவன், காண்போரின் மனதையெல்லாம் கவர்ந்தவன், அன்பு தாய், தந்தையரைப் பெற்றவன், அநீதிகளை அழிக்க வென்றே அவதரித்தவன்,  இத்தனைக்கும் மேலே  ஏராளமான சிறப்புக்கள் பெற்ற சாட்சாத்  அந்த பமன்நாராயணனின் அம்சமான கிருஷ்ண பரமாத்மாவை , இத்தனை வருடங்கள் கழித்து காணும் பேறு பெற்றமைக்கு, பிறந்திலிருந்து இதுவரை இல்லாத சிறு கர்வமொன்று, மனதுக்குள்  பந்தாக எழும்பி அங்குமிங்கும் அலைபாய்ந்தது.

நகரில்  கிருஷ்ணனின்  அரண்மனையை விசாரித்து  உள்ளே  நுழைந்தாகி விட்டது. வாசலில் கண்ணனை காண தவமிருக்கும்  ஏராளாமானவர்களை எப்படியோ கடந்து இதோ! தன் முறை வரும் வரை  பொறுமை காத்து காவலாளியின் முன் வந்து தடங்கலுடன்,  உள்ளே செல்ல அனுமதியின்றி, தடைபட்டு நிற்கும் அவல நிலை வருமென சற்றும்  நினைக்கவில்லை அந்த அந்தணர்.

"எங்கள் மன்னனை  பார்க்கவெல்லாம்  உன்னை அனுமதிக்க  முடியாது. போ! போ!  போய் உன் உடைகளை மாற்றிக்கொண்டு பார்க்கிற தகுதியோடு வா! இல்லையென்றால்,  அவரை காணும்  எண்ணத்தை கைவிட்டு விட்டு  இவ்விடம் நில்லாது  திரும்பிப் போ!'' காவலாளி   தயவு  தாட்சண்யம் இல்லாமல் விரட்டியபடி இருந்தான்..

"தான்  வந்த  நோக்கம்  நிறைவேறாமல்  போய் விடுமோ?  மனது  அனலாக கொதிக்க,  பல  நாட்கள்  பட்டினியாய்  கிடந்த தேகம்  தள்ளாட,  காடு ,.மலை பாராமல்  நடந்தோய்ந்த  புழுதி படர்ந்த  கால்கள் நடுங்க,  கிழிந்த  தன் மேலாடையால் , ஆறாகப் பெருகிய  வியர்வையை  துடைத்தபடி, '' ஐயா !  நீர் போய் இன்னார்  வந்திருக்கிறார் என்றால்,  எம்பெருமான் மகிழ்வடைவார். கண்டிப்பாக என்னை  காண்பதற்கு  ஆவலோடு  என்னை அழைத்து வரச் சொல்லுவார். தயவு செய்து என்னை மறுக்காமல் உள்ளே அனுப்புவதற்கு ஆவணச் செய்யுங்கள்.''  என்றார்  அந்த  அந்தணர்  குரலில்  சிறிது  கெஞ்சல் மிகைப்பட்டது.

அவரது  தோற்றமும்   அழுக்கடைந்த  கந்தல் ஆடைகளினால் , உடம்பை மூடவியலாது  படும்  சிரமங்களுடன்  அவர்  நின்றிருந்த  கோலமும்,   கண்களை உறுத்தினாலும்,. அவர் முகத்தில்  கற்றறிந்த  களை ஒரு தனிக் களையாய் ஜொலித்தை   கண்ட  காவலாளிக்கு, "இவரை  கண்ணனை பார்க்க அனுப்பா   விட்டால், பின் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால்  என்ன  செய்வது? அதற்காக கண்ணன் கடிந்து கொண்டால்  எப்படி சமாளிப்பது? ''  என்ற சிந்தனை கொஞ்சம் தலை தூக்கவே,  "சரி! மன்னர் கேட்டால் நான் யார் வந்திருப்பது என்று சொல்வது? அப்படியே கூறிய பின்னும், அவர் காண விருப்பமில்லை என்று சொல்லி விட்டால், நீர் இந்த இடத்தை விட்டு அகன்று விடவேண்டும். சம்மதமா?'' என்ற ஒப்பந்ததத்தின்  முடிவில்  காவலாளி  சற்று தளர்ந்து வந்தான்.

அந்தணருக்கு  அப்போதே கண்ணனை  கண்ட  மாதிரி ஒரு ஆசுவாச உணர்வு ஏற்பட்டது. நிம்மதி பெருமூச்சுடன், அப்பா! நீ நன்றாகவிருப்பாய்!  உங்கள் மன்னனிடம்  சென்று உங்கள் பால்ய சிநேகிதன் சுதாமகன் உங்களை காணும் ஆவலோடு  வந்திருக்கிறான் என்று சொல்லு!  அதற்குபின் அவர் என்னை காண பிரியபடவில்லையென்றால். நான் உன்னை எந்த சிரமத்திற்கும் உட்படுத்தாமல், கிளம்பி விடுக்றேன்.''  என்றார்.

காவலாளியும் அரைகுறை மனதோடு  கண்ணனைக் கண்டு விபரங்கள் சொல்ல மாளிகையுள் பிரேவேசித்தான்.

தங்கள் வறுமை நீங்க  ஏதேனும் பொருள் பெற்று வரும்படி தன்னை இவ்விடம் அனுப்பி வைத்த தன்  மனைவி சுசீலையை ஒரு  விநாடி  நினைத்த போது சுதாமகருக்கு,  தான் அவ்விடத்திலிருந்து  கண்ணனிடம்  பொருள் யாசிக்க கிளம்பும்  முன், தனக்கும் அவளுக்குமிடையே நடந்த வாக்குவாதங்கள் நினைவுக்கு வந்தன." என்னதான் பால்ய சிநேகிதன், குரு குலத்தில் ஒன்றாக படித்தவர்கள் என்றாலும், வளர்ந்து வாலிபத்தை எட்டி கிரகஸ்த வாழ்வைத் துவக்கி,  வெவ்வேறான பின்னும், பால்ய நினைவுகளை  சுட்டிக் காண்பித்துக் கொண்டு உதவி கேட்க, சுதாமகருக்கு கொஞ்சமேனும் விருப்பமில்லை!. ஆனால், சுசீலையும் என்ன செய்வாள்?  தான் தினமும் கொண்டு வந்து தரும் சொல்ப தான்யங்களை  வைத்துக்கொண்டு, இருபத்தேழு குழந்தைகளையுடைய தங்கள் பெருங்குடும்பத்தை எவ்விதம் சமாளிப்பாள்? தினமும் கால் வயிறும், ஒரோர் நாள் பட்டினியுமாக  அவர்கள் அனைவரும் பசியின் கொடுமையால்  அழுது அரற்றி  தூங்கிப்போகும் காட்சியை  ஒரு அன்புள்ள தாய் எப்படி சகிப்பாள்?  மிகுந்த   பொறுமைசாலியான  தன் மனைவி நாட்டில் பஞ்சம் வேறு தலைவிரித்து ஆடியவுடன், வேறு வழியின்றி தன்னிடம் , "உதவி செய்ய  உறவுகள் ஒருவரும் இல்லை! குழந்தைகளின் பசி மயக்கத்தை  ஒவ்வொரு நாளும் காண சகிக்கவில்லை. அதனால் குழந்தைகளுக் காகவாவது  தாட்சண்யம்  பாராமல், பார்த்துப்பேசி விட்டு வாருங்கள்! ''என்று பால்ய நண்பன் கண்ணன் நாட்டையாளும் மன்னனாய் இருப்பதை  உணர்த்தி, அவனிடம்  பொருளுதவி பெற்று வர தன்னிடம் வாதம் புரிந்து  அதில் வெற்றி பெற்று,  இதோ! துவாரகையின்  வாசல் வரை வந்து நிற்கும்படி  செய்து விட்டாள்.

வறுமைதான்! என்னசெய்வது? அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துதானே ஆக வேண்டும். வீடு நிறைய குழந்தை செல்வங்களை கொடுத்தவன் அவர்களை வைத்து சம்ரட்சணை  பண்ணவும் ஒரு உபாயத்தை கொடுப்பானில்லையா? பொறுப்போம்!  என்று மனைவியிடம் தினமும் வலியுறுத்தி, காலம் கடத்தி வந்த சுதாமகருக்கும், நாளாக,  நாளாக நண்பனை காணும்  ஆவல் உந்தித்தள்ள,  ஒரு நாள்  பொறுக்க முடியாமல்  சென்று வருகிறேன்'' என்றவுடன் , இருப்பதில் கொஞ்சம் நல்ல ஆடையை எடுத்து அவரை அணியச் செய்து,  கண்ணனுக்குப் பிடித்தமான அவலை எப்படியோ அங்குமிங்கும் அலைந்து கொஞ்சம் பிரயத்தனத்தில்  ஏற்பாடு செய்து கொடுத்து, நல்ல செய்தியோடு வாருங்கள்!  காத்திருக்கிறோம். என அனுப்பிவைத்து விட்டாள். யாசகம் பெற இயலாது போயினும், நண்பனை  கண் குளிர,மனம் நிறைய தரிசனம் செய்ய வாய்ப்பு வந்ததேயென, கால் கடுக்க ஒடி வந்தவனை இங்கு காவலாளி ஆயிரம் காரணம்  சொல்லித் தடுத்து நிறுத்துகிறான். "வேறு சிறப்பான உடை அணிந்து வந்தால், மன்னனை காண வழிவிடுகிறேன்'' என்கிறான். இதை விட சிறப்பான உடைக்கு தாம் எங்கே போவது?  வந்திருக்கும் அந்த சூழலிலும், தம் நிலை குறித்தெழுந்த சிந்தனையில், இளநகை ஒன்று அவர் இதழ்களில் எழுந்து மறைந்தது.

"தன்னைப்போலவே கண்ணனும் தன்னை மறவாதிருப்பானா?  குரு குலவாசத்தில் தன் ஏழ்மை நிலையை பொருட்படுத்தாமல், தன்னை அரவணைத்து அன்பு செலுத்தியவன் இப்போதும் அதேபோல் அன்புடன் நேசம் காட்டி பேசுவானா? இல்லை ,  மன்னனுக்குரிய குணநலன்களில்,  பால்ய நட்பை மறக்க முயற்சித்திருப்பானா? '' காவலாளி  வெளியே வந்து சொல்லப்போகும் அந்த விநாடிக்காக  உயிர் துடிக்கும் அவஸ்தையோடு காத்திருந்தார் சுதாமகர்.


பரந்தாமன் கண்ணன்  வாயில் காப்போன் வந்து சொன்னதும்,  சிறிதும் தாமதியாது,  வாசலுக்கே  விரைந்து வந்து விட்டான்.  ''வாசலிலேயே அவரை யார் என்று  விசாரித்து அனுப்பு  என்றோ, இல்லை  அவருக்கு வேண்டிய  உதவி யாது? என விபரமாக கேட்டு  அதற்கு வேண்டியதை  தக்கபடி செய்து அனுப்பு !என்றோ  மன்னன் கூறுவான் என்று எதிர்பார்த்து  விபரம் சொல்ல வந்தவன் மூர்ச்சித்து விழாத குறையாக திக்பிரமையடைந்து  நின்று விட்டான். சிறிது தெளிந்து கண்ணனை பின் தொடர்ந்து  அவனும் ஓட  வாசலில் கண்ட காட்சி அவனை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"வா! வா! சுதாமகா ஏன் வாசலோடு நிற்கிறாய்! எபபோது  வந்தாய்?  வந்தவன் நேராக என்னை தேடி வராமல் தாமதித்து கொண்டு  கால்  கடுக்க இங்கேயே ஏன் நிற்கிறாய்?  இந்த  சேவகன்  உன்னை விட மறுத்தானா?  என்றபடி ஓடி வந்து மார்போடு தழுவிக்கொண்ட  கண்ணனைக்  கண்டதும் ,சுதாமகர் ஆனந்தத்தின் உச்சிக்கு சென்று விட்டபடியால், பேச நாவெழும்பவில்லை! கண்களில் நீர்வடிய  கண்ணனின் செய்கையால் மெய் சிலிர்த்து நடுங்கிய தன் தேகத்தை அவன் அணைப்பிற்குள், இன்னும் சற்று ஒடுக்கியபடி,  நாத்தடுமாற கண்ணா,  கண்ணா என்று அரற்றலானார்.

கண்ணன், அன்பின் மிகுதியினால் சுதாமகரை  அரவணைத்து கொண்டபடி., ""சொல்லு சுதாமா, நீ வந்ததை முன்பே தெரிவித்திருக்க கூடாதா?  இந்த சேவகன்தான் தாமதபடுத்தி விட்டானா? கண்ணன் மேலும், மேலும் துருவி கேட்க, தன்னை  ஒருவாறு சாளித்தவாறு, " இல்லை! இல்லை  கண்ணா நான் இப்போதுதான் வந்தேன். உன்னைக் காணவேண்டுமென்று சொன்னதும், அவர் ஓடோடிச் சென்று உன்னிடம்  நான்  வந்திருப்பதை கூறியதும்தான் உன்னை காணும் பாக்கியம் எனக்கு உடனடியாக உன் அரண்மனை வாசலிலேயே கிடைத்தது.'' என்ற சுதாமகரின் பதிலால் பயத்தின் பிடியிலிருந்த காவலாளி நெகிழ்ந்து சுதாமகரை பார்த்து நமஸ்கரித்தான்.


அடுத்து வந்த இருதினங்களிலும், நண்பனின் இனிய  உபசாரங்களில் மூழ்கித் தவித்தார் சுதாமகர். தாம் எங்கிருக்கிறோம்!  தாம் யார்?  எதற்காக இங்கு வந்திருக்கிறோம்!  என்ற சுயசிந்தனை சற்றும் எழாமல் கண்ணனின் நட்பு , பாசம் பெரும் கயிறாக அவரை கட்டிப் போட்டது.  அன்று வாசலில் சந்தித்தவுடன், தன் மனைவி  ருக்மணிதேவியின் உதவியுடன் தங்கத் தாம்பாளத்தில்  தான் தடுத்து நிறுத்தியும்  கேளாமல்,  தன் காலில் நிறைந்திருந்த புழுதியைப் பற்றி கூட  கவலையுறாது,  பாத பூஜை செய்வித்து தன்னை உள்ளே அழைத்து சென்றதிலிருந்து , இன்று வரை அவனுடைய  ராஜ்ஜிய பரிபாலனையை கூட அவசர கதியில் முடித்து விட்டு, தன்னுடனேயே பொழுதைப்போக்கி தனக்கு ராஜ உபசாரம் செய்வதை  மட்டும் கண்ணும் கருத்துமாக எண்ணி  செய்து வந்த கண்ணனை நினைத்து,  நினைத்து மெய்யுருகிப் போனார்.  அன்று வாசலில் நின்றிருந்த    போது  தன்னை சந்திப்பதில் அக்கறை எடுத்துக்கொள்வானோ இல்லையோ?  என்று ஒரு விநாடி  அவனை  தான் சந்தேகித்தது எத்தனை பெரிய பாவம்!  அந்தப் பாவத்தை எங்கே கொண்டு கரைக்க போகிறோம்  என்று மனதுக்குள்  அடிக்கடி  சஞ்சலமடைந்தார்.

இவ்விதமாக  இரு தினங்கள் கழிய  மூன்றாவது நாள் சுதாமகருடன்  பழைய நினைவுகளை அசை போட்டு கொண்டிருந்த  கண்ணன்,  "சுதாமா, நீ என்னை தேடி வந்த நோக்கத்தை இது வரை நான் அறிந்து கொள்ள முயற்சிக்கவே இல்லை பார்!  நீயும் சொல்லவேயில்லை!  நானும் நாள் கடந்து உன்னை சந்தித்த  மகிழ்ச்சியில் அதைப்பற்றி  கேட்கவில்லை பார்த்தாயா?  என்னால் உனக்கு ஏதாவது உபகாரம் வேண்டுமா?  நீ எது வேண்டினும் தருகிறேன்.'' என்றதும்தான், தன்னுடைய பழைய உலகிற்கே திரும்பினார் சுதாமகர். மனைவியின்  நினைவும,  பசியில் கரைந்துருகும்  குழந்தைகளின் முகங்களும், நினைவுக்கு  வர,  தாம்  யாசகம்  வேண்டி  இங்கு  வந்ததன்  நோக்கம்  ஞாபகம் வந்தது.. ஆனால்,  இத்தனை  பிரியத்துடன்  நட்பை பொழிந்தவனிடம், "பொருளுதவி  வேண்டிதான்  உன்னைக்காண  வந்தேன்.'' என்று  சொல்ல மனம் வரவில்லை.   தன் மனைவி "சென்று வாருங்கள்'' என்று வறுப்புறுத்திய போது கண்ணனை கண் குளிர தரிசிக்க வேண்டும்  என உள்மனதில் ஆசை எழுந்ததை நினைவு கூர்ந்தவராய், "நோக்கம் எதுவுமில்லை பரந்தாமா! உன்னைப்பார்த்து நீண்ட  வருடங்கள்  ஆகிவிட்டபடியால், பார்த்து விட்டு செல்லலாமென  வந்தேன். உன் அளவு கடந்த உபசரிப்பினால், என் பிறவி முழுக்க  பெரும் ஆனந்தம்  கொள்ளும்படி செய்து விட்டாய்!  இந்தப்பிறவியில் உன்னுடனிருந்த இந்த நினைவுகளை ரசித்துக்கொண்டே  காலத்தைகழித்து விடுவேன். பார்த்தாயா!  உன்னுடன் இருந்த இந்த நாட்களில்  என் மனைவி மக்களை மறந்தே  போனேன். என் வரவுக்காக அவர்கள் காத்துக்கொண்டு இருப்பார்கள்!  எனக்கு விடை கொடு!  நான் கிளம்புகிறேன். '' என்றார்.

கண்ணன் உள்ளூர  நகைத்துக்கொண்டான்.  அத்தனை ஏழ்மையிலும், நண்பனென்ற போதும்,  பொருளுக்காக பிறரை அண்டாத உத்தம குணம் படைத்த தன் நண்பனை நினைக்கையில்,  மனதில்  பெருமிதம் மூண்டது. இவன் எதுவும்  வேண்டாமலே,  இவனுடைய  சிரமங்களை குறைக்கும் காலத்தை கொடுக்கும் கடமை  தன்னை நெருங்கி விட்டதை உணர்ந்தவராகையால், " சரி சுதாமா! நீ சென்று  வா! உன் மனைவி குழந்தைகளை விசாரித்தாகக் கூறு.! அடுத்த தடவை அவர்களையும் சந்திக்க நான்  பிரியப் படுவதாக  சொல்!  ஆமாம் ! நீ என்னை காணவரும் போது வெறும் கையோடாகவா வந்தாய்? அப்படியே நீ என்னை காணும் ஆவலில் வந்திருந்தாலும் ,  என் அண்ணி அவ்விதம் அனுப்பியிருக்க மாட்டார்களே? ஏதாவது கொடுக்கச்சொல்லி தயாரித்து தந்திருப்பார்களே''என்று அனைத்தும் அறிந்த கண்ணன் கேலியாக வினவவும், சுதாமகருக்கு சங்கடமாகப் போயிற்று.

பழைய அழுக்கான கந்தல் அங்கவஸ்தரத்தில் முடி போட்டு கொண்டு வந்திருந்த அவலை "இதுதான் நான் உனக்காக கொண்டு வந்த வஸ்து ' என்று கூறி அதை எடுத்துத்தர அவமானமாய் இருந்தது.  யசோதையின் மைந்தனாய் அன்றிருந்த இளமை காலத்து நிலையில், வேண்டிய உணவோடு அவலும், அவனின் பிரியமான உணவாக இருந்திருக்கிறது. ஆனால், கண்ணன் இன்றிருக்கும் ராஜ வாழ்வில் இதை அங்கீகரிப்பானா? இதுதான் நாங்கள் உனக்காக தயாரித்து வந்த அன்பின் அடையாளம்'' என்று எப்படி  தருவது என சுதாமகர் தயங்கி நிற்கும் சமயத்தில், கண்ணன் அவரின் மேலாடை மறைவிலிருந்த அவலைக்  கைப்பற்றி, "ஆஹா!! எனக்கு மிகவும் பிடித்தமான  அவலைத்தான் கொண்டு  வந்திருக்கிறாயா? அதுதானே  பார்த்தேன். !அண்ணி  என்னை ஒரு நாளும்  மறந்ததில்லை, என்றபடி ஒரு பிடி  அவலை எடுத்த வாயில் போட்டு மென்றார்.  மற்றொரு பிடியும் வாயில் போட்டபடி ஆஹா! என்ன ஒரு ஆனந்தம். பழைய நினைவுகள் மீணடும்  வருகிறதே சுதாமா'' என்றபடி. மூன்றாவது பிடியை கையில் எடுத்தவுடன், அதுவரை இவர்கள் சம்பாஷனையை அருகிலிருந்தபடி கேட்டுக் கொண்டிருந்த ருக்மணி தேவி, "போதும், உங்கள் விளையாட்டு! தங்கள்  சிறு பிள்ளை விளையாட்டை  துவக்கி விட்டால், என்னைக்கூட மறந்து விடுவீர்களே!  எனக்கும் தங்கள் நண்பர் கொண்டு வந்திருக்கும் அவலில் ஒரு பங்கு வேண்டாமா?'' என்றபடி தன் கணவரிடமிருந்த அவலை தான் பெற்றுக்கொண்டாள்.

தான் கொண்டு வந்த  எளிய பொருளை,  கணவனும் மனைவியும் பெருந்தன்மையாக  போட்டி போட்டு உண்பதைக் கண்ட சுதாமருக்கு பரமானந்தமாக இருந்தது.எப்படியோ யாசகம் ஏதும் பெறாமல்..கண்ணனிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டு கண்ணனுடன்  கழித்து ஆனத்தித்த நினைவுகளை மனதில் இருத்தியபடி  சுதாமகர் தன்  ஊரை  அடைந்தார். மனைவி குழந்தைகளை வறுமையினின்றி எப்படி சமாளிக்க போகிறோம்? என்ற கவலையும், நடுநடுவே எழுந்தாலும்,  தான்பெற்ற கிருஷ்ண தரிசனமே, தன் குழந்தைகளை  வறுமை பிடியிலிருந்து   காப்பாற்றி கொண்டு வந்து விடும் என்ற நம்பிக்கையுடன் ஊரினுள் கால் பதித்தவர் .தன் ஊரே துவாரகையாக மாறி இருந்ததை கண்டவுடன் திகைத்தப்போனார்.

உற்றமும்  சுற்றமும் ஊரில் உள்ளவர்களும் தன் மனைவி மக்கள் அனைவருமே அடையாளம் தெரியாதபடிக்கு செல்வச்செழிப்புடன் மாறியிருந்த விந்தை கண்டும், தான் துவாரகையிலிருந்து  கிளம்பும் நேரத்தில்தான் ,இவ்வித அதிசயம் நிகழ்ந்தது என சுசீலை கூறவும்,  சுதாமகருக்கு அனைத்தும் புரிந்தது. அள்ள, அள்ளக்குறையாத  மஹாலெஷ்மியின் மணாளன், மாயா ஜாலங்களை பிறந்ததிலிருந்து செய்து  மற்றவர்களுக்காக வாழும் தன்னுயிர் நண்பன் கண்ணனின் அதி அற்புத விளையாடல்களில் இதுவும் ஒன்றென  விளங்கியது.

"பரந்தாமா! எங்களூரின் வறுமை அகல என்னை ஒரு காரண கர்த்தாவாக்கி  நீ செய்த இந்த திருவிளையாடலை என்னவென்று எடுத்துரைப்பேன் . உன்னையே சரணடைந்தவர்களை  நீ என்றுமே கை விட்டதில்லை என்பதற்கு வேறு என்ன சாட்சி வேண்டும் '' என்று கண்களில் நீர் வடிய மெய்யுருகி  நின்ற சுதாமகர் முன்னிலும் அதிகமாக இறைவன் கண்ணனிடம் பக்தியுடன் நட்பு கொண்டு  வாழ்ந்து வந்தார்.


நாளை கண்ணன் அவதரித்த நாள்!  (ஜன்மாஷ்டமி)  சுதாமகரை போன்று நாமும் கண்ணனிடம் தூய நட்பு கொண்டு  அவன் மிகவும் விரும்பும் அவலை (நாம் எத்தனையோ பட்சணங்கள் அவனுக்காக செய்து நிவேதனம் செய்தாலும்) அவனுக்கு மனதாற படைத்து ,  எத்தனை பிறவி எடுத்தாலும் அத்தனையிலும் அவனை மறவாதிருக்க வேண்டி  பிரார்த்தனை செய்து, பூஜிப்போமாக....
                       
                                         வாழ்க இறையருள் .









8 comments:

  1. அற்புதமான சிறப்புப் பதிவு
    இரசித்துச் சொல்லிச் சென்றதால்
    இரசித்தும் படிக்க முடிந்தது
    நீளமொரு பொருட்டாகத் தெரியவில்லை
    படங்கள் அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் உடனடி வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இரு பகுதிகளாக வெளியிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு எழுதியதால், பிரிக்க வேண்டாமென தோன்றியது.நீளமாக எழுதி விட்டேனே! என்ற கவலையிருந்தது.ஆனால். நீளத்தை பொருட்படுத்தாமல், ரசித்து படித்த தங்கள் கருத்ததுரையை படித்ததும் மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது. தங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. என்னை கண்கலங்கச் செய்யும் கதை. என்ன ஒரு நட்பு, இல்லை? சிறு வயதில் "ஒரு பிடி அவல் தின்றானே.." என்று படித்த பாடல் நினைவுக்கு வருகிறது. க்ருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும், மனமுருகி சொன்ன கருத்துப் பகிர்வுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

      தங்கள் கருத்து உண்மைதான்.இது நட்பை பற்றிய பக்திக் கதைகளில் சிறப்பான கதை! இந்தமாதிரி கதைகளை நாம் நினைவில் கொள்வதால்தான் இன்னமும் பக்தி, நட்பு என்ற வார்த்தைகளின் அர்த்தம் சற்றும் தன் பொலிவை இழக்காமல் இருக்கிறது என்று நினைக்கிறேன். இல்லையா? என்னை இன்று இக்கதையை எழுத வைத்த பரந்தாமனுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.

      தங்களுக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள். நன்றி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. வணக்கம் !

    ஒவ்வொரு வரியும் படிக்கும் போது மெய்மறந்து போனேன்
    கண்ணனின் லீலைகள் அருமை அருமை தொடர வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும். மனமுவந்த பாராட்டுடன் கூடிய கருத்துப்பகிர்வுக்கும், வாழ்த்துக்களுக்கும்,என் மனமார்ந்த நன்றிகள்.

      தாமதமாக பதிலிடுவதற்கு மன்னிக்கவும்.

      தங்களது கருத்துப்பகிர்வுகள் என் எழுதும் எண்ணங்களை வளமையாக்குகிறது. மிக்க நன்றி.

      நன்றியுடன்.
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. கண்ணனின் லீலைகளிலேயே என்னைக் கவர்ந்தது இந்த திருவிளையாடல் தான். நட்பில் மட்டும் தான் ஏற்றத்தாழ்வுகள் காணாது போகின்றன.
    அருமை. நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தாங்கள் என் வலைத்தளத்திற்கு முதல் வருகை தந்து கருத்துப்பகிர்வுடன், பாராட்டியமைக்கு, என் மனமார்ந்த நன்றிகள்.

      என் தாமதமான பதிலுரைக்கு தயவுடன் மன்னிக்கவும்.

      மிக்க நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete