Tuesday, January 6, 2015

திருவாதிரை திருநாள்..

ஆதியந்தம் இல்லாத அருள் பிரகாசமாயிருக்கும் சிவபெருமானை சிந்தையில் நிறுத்தி திருவாதிரை திருநாளின் சிறப்பை காண்போம்.

மொத்தம் பன்னிரண்டு தமிழ் மாதங்களில், தை மாதம் தொடங்கிஆறு மாதங்கள் உத்திராயன புண்ணிய காலங்கள் எனவும், பின் ஆறு மாதங்கள் தஷ்ணாயன புண்ணிய காலமென்றும் ௬றுவர். அதில் மார்கழி தஷணாயனத்தின் கடைசி மாதமாகும். அந்த மார்கழி மாதத்தை தேவர்களின் அதிகாலை மாதமென்றும் ௬றுவர். இம்மாதத்தில் தேவர்கள் அதிகாலையில் சிதம்பரத்தில் காட்சி தரும் தில்லையம்பதியை தரிசிக்க ஒன்று ௬டி வழிபட வருவதாக ஐதீகம். அந்த வைகறைப் பொழுது பிரம்ம மூ௬ர்த்தம் என்றும் பொருள்படும். இந்த மாதத்தில், அந்த பிரம்ம மூ௬ர்த்தத்தில், நாமும் அவர்களுடன் சென்று வழிபட நாம் செய்த பாபங்கள் அகன்று நல்லதொரு பலன்கள் உண்டாகும் என்ற நம் முன்னோர்களின் சொல்லை மதித்து இன்றும் அதிகாலையில் எழுந்து நீராடி, கோவில்களுக்குச் சென்று இறைவனை வணங்கி வழிபடும் வழக்கம் நம்மிடையே, இருந்து வருகிறது.


ஒரு சமயம் தாருகாவனத்து முனிவர்களின் மனதில் எழுந்ததான்என்ற செருகினை அடக்க, பிச்சாடனர் வேடத்தில் வந்த சிவபெருமானை, உலகத்துக்கெல்லாம் படியளப்பவனை, மமதையினால் சற்றும் புரிந்து கொள்ளாத முனிவர்கள், சிவபெருமான் நடத்திய  லீலைகளின் இறுதியில் பெருமானை தாக்க, வேள்வியின் வாயிலாக, மதம் கொண்ட யானை, தீப்பிழம்பு, சுழற்றி அடிக்கும் உடுக்கை போன்ற ஆயுதங்கள், இவைகளை அனுப்பினார்கள். இறுதியில் முயலகன் என்ற அரக்கனையும் சிவனை அழித்து வர அனுப்பி வைத்தனர்.

முனிவர்கள் அனுப்பிய மதம் மிகுந்த விலங்குகள், தீப்பிழம்பு, உடுக்கை என்ற ஆயுதம், முயலகன் என்ற அரக்கன், இவற்றை சாதாரணமாக ஏற்று, விலங்குகளின் தோலை தன் இடுப்பில் ஆடையாக அணிந்து, கரங்களில் தீப்பிழம்பு, உடுக்கை போன்றவற்றை ஏந்தி, அரக்கனை வென்று தன் வலதுகாலால் அழுத்தி ஊன்றியபடி இடதுகாலை தூக்கி உயர்த்தியபடி, நடராஜர் வடிவத்தில் நடனமாடியபடி காட்சி தந்து, தான் உலகையே காத்து ரட்சிக்கும் சர்வேஸ்வரன் என்பதை காட்டியருளி, முனிவர்களின் மனதில் எழுந்த அகங்காரத்தை அழித்து, அவர்களின் கர்வத்தை அடக்கி அவர்களை ரட்சித்து அருளினார். அந்நிகழ்வே ஆருத்திரா தரிசனமாயிற்று. ஆருத்திரா என்பது ஆதிரையை (நட்சத்திரத்தை) குறிக்கும் சொல்லாகும்.

பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகிய சிதம்பரத்தில் இந்த நடனமாடிய நிகழ்வு வெகுச் சிறப்பாக வருடந்தோறும் மார்கழி மாதத்தில் பத்து நாள் திருவாதிரை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று அதிகாலையில் நடராஜ பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகளுடன், தேர்த்திருவிழாவும், நடைபெறும் காட்சியைக் காண பக்தர்கள் ௬ட்டம் அலைமோதும். அன்றைய தினம் அடியார்கள் வெளிநாட்டிலிருந்தும் ௬ட வந்திருந்து சிதம்பரத்தில் காட்சி தரும் சிதம்பரநாதனையும் சிவகாமியம்மையையும் வழிபட்டுச் செல்வர்.


இந்த மார்கழியில், வைணவ பக்தர்களின், வைகுண்ட ஏகாதசி திருவிழாவும், சைவ பக்தர்களின், திருவாதிரை திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றவை. இவ்விரு விழா காலங்களிலும் பக்தர்கள் நோன்பிருந்து, இறைவனை தரிசித்து இறையருள் பெறுவார்கள். சிவபெருமானின் நடசத்திரமாம் திருவாதிரை நட்சத்திரத்தில், முழுமதியன்று வரும் அந்த நன்னாளில், பக்தர்கள் விரதமிருந்து அதிகாலையில், சிவதலங்களில், சிவபெருமானின் அபிஷேக ஆராதனைகளை மனங்குளிர கண்டுகந்து சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தி சிவனருள் பெறுவார்கள்.


  சிதம்பரத்திற்கருகே ஒரு ஊரில் சேந்தனார் என்ற ஒரு சிவ பக்தர் வாழ்ந்து வந்தார். இவர் சிவபெருமானிடம் அளவு கடந்த அன்பு கொண்டவர். அவர் தான் தினமும் விறகுகள் வெட்டி விற்று அதன் மூலம் வரும் வருமானத்தில், உணவை தயாரித்து அன்றைய தினம் ஒரு சிவனடியார்க்கு உணவிட்டு, அவர் பசியாற்றி, பின் தான் உணவருந்தி, சிவ சிந்தனையுடன் தனது தொண்டினை சிறப்பாக ஆற்றி வந்தார்.



ஒரு நாள் பலத்த மழை காரணமாக அவர் சேர்த்து வைத்திருந்த விறகுகள் காயாமல் போகவே, அன்றைய தினம் வரும் வருமானமும் தடைபட, நல்ல அரிசியுடன் ௬டிய உணவுக்கு வழியின்றி, கிடைத்த கேள்வரகு தானியத்தில் செய்த களியை வைத்துக்கொண்டு யாராவது சிவனடியார்கள் வந்தால் அவர்களுக்கு தானமிட்டு தொண்டு செய்து அவர்கள் பசியை போக்கிவிடலாமென்று ஆவலுடன் காத்திருந்தார். நேரம் செல்ல செல்ல எவரையும் காணாது சிவபெருமானை துதித்தபடி இருந்தார். பக்தர்களை சோதிப்பதும், பின் அவர்களின் பெருமையை உலகத்துக்கு பறைச்சாற்றுவதும் சிவபெருமானின் லீலைகளில் ஒன்றல்லவா?


இவரின் பெருமையை உலகத்திற்கு அனறைய தினம் காட்டிட உள்ளத்தில் முடிவெடுத்தார் சிவபெருமான். தானே ஒரு அடியார் வேடத்தில், அவரின் இல்லத்திற்கு வந்து அவர் பக்தியுடன் படைத்த களியை இதுவல்லவோ அமிர்தம்”! என்று பாராட்டியபடி, உண்டு பசியாறி, இரவு பசிக்கும் வேண்டுமென, அவரிடம் வேண்டியதை பெற்றுச் சென்றார்.


மறு நாள் சிதம்பரம் கோவில் பூஜைக்காக கோவிலை திறந்து இறைவனை அபிஷேக ஆராதைனைகள் நடத்திட வந்து கருவறை கதவை திறந்த சிவாச்சாரியார்கள், இறைவன் குடிகொண்டிருக்கும், கருவறை முழுதும் ஆங்காங்கே சிதறியிருந்த உணவாகிய களியமுதுகளை கண்டும், இறைவனின் வாயிலும், கரத்திலும் இருந்த களியமுதை கண்டும் திகைத்துப் போய் அந்நாட்டு மன்னனிடம் சென்று முறையிட்டார்கள்.


முன் தினம் அரசனின் கனவில் வந்து சேந்தனார் தமக்குப் படைத்த களியமுதின் பெருமைகளை இறைவன் குறிப்பட்டிருந்ததும், கோவில் அர்சகர்கள் வந்து முறையிடுவதும், ஒத்துப்போகவே அரசன் ஆச்சிரியத்தில் ஆழ்ந்தான். அமைச்சரை வரவழைத்து, அந்த சேந்தனாரின் விபரம் சொல்லி அவரை உடனழைத்து வர ஆட்களை அனுப்பினான்.


பின்அன்றைய தினம் சிதம்பரம் கோவிலில் எழுந்தருளியுள்ள நடராஜரின் ரதோஸ்த்வத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அரசன் முன்னின்று இறைவனை பக்தியுடன் தேரில் எழுந்தருளச்செய்த பின், பக்தியுடன் தேரின் வடம் பிடித்து அரசனும் மற்றும் அனைவரும் ரதத்தை இழுக்க முயல தேர் மழையினால் சேறான இடத்தில் அழுந்திக் கொண்டு நகர மறுத்தது. அவ்வேளையில் அரசனால் தேடப் பட்ட சேந்தனாரும், நடராஜரின் தேர் திருவிழாவை கண்டு களிக்க அங்குதான் வந்திருந்தார். அப்போது ஒரு அதியசம் நடந்தது. “சேந்தனாரே.! என் மீது பல்லாண்டு பாடினால் தேரின் சக்கரம் விடுபட்டு நகரும். நீ பாடுவாயாக.!” என்று வானிலிருந்து ஓர் அசரிரீ குரல் எழுந்தது. அனைவரும் திகைத்தனர். யார் அவர்? எங்கே அந்த சேந்தனார்? என்று அனைவரும் திகைக்க, “இறைவா! எனக்கு பாடவெல்லாம் தெரியாதே! இந்த ஏழைக்கு உன் மீது வைத்திருக்கும் அன்பைத் தவிர எனக்கு என்ன தெரியும்.? என இறைவனின் திருமுகத்தை நோக்கி சேந்தனார் மெய்யுருகி கதற, “உன்னால் இன்று முடியும்! பாடுஎன்ற அசரிரீயின் குரலுக்கு அடுத்த நொடி மீண்டும் ஒரு அதிசயம் நடந்தது.


சேந்தனர் இறைவனின் அருளால் இறைவனை வாழ்த்தி பதின்மூன்று பாட்டாக பல்லாண்டுபாடினார். உடனே பள்ளத்திலிருந்து விடுபட்டு தேர் நகர்ந்தது. அனைவரும் சேந்தனாரின் காலில் விழுந்து வழிபட்டனர். அரசன் சேந்தனாரின் பெருமைகளை தன் கனவில் கண்ட நிகழ்ச்சியினை, அனைவருக்கும் உரைக்க, “இறைவனே வந்து என் கையால் உணவு புசித்தானா?” என்ற மகிழ்வில் பக்தியின் உச்சத்தில் சேந்தனார் மனம் கனிந்து உருகினார்.


இவ்வாறு தன் பக்தனுக்கு சிவபெருமான் அருள் புரிந்ததும் ஒரு திருவாதிரை நாளே! இன்றும் சிவன் கோவில்களில், களி செய்து இறைவனுக்கு படைத்து பிரசாதமாக வழங்குகின்றனர். “திருவாதிரை ஒரு வாய்க் களி! உண்ணாதவருக்கு நரகக் குழி,” என்ற பேச்சு வழக்கும் உண்டு. வீடுகளிலும் இறைவனுக்குப் பிடித்தமான களியமுது செய்து சிவபெருமானுக்கு படைத்து, இறைவனின் அருள் பெற பூஜைகள் செய்து வழிபடுவதும் அன்றிலிருந்து வாடிக்கையாயிற்று.


நாமும் இந்நாளில் பக்தியுடன் சிவ! சிவ! என்று பக்தி பரவசமாய் பஜனைகள் பல செய்து அவனருளை பெற துதிப்போமாக!!!




ஓம் நமசிவாய..ஓம் நமசிவாயஓம் நமசிவாயஓம் நமசிவாய..ஓம் நமசிவாய



திருவாதிரைக் களி செய்யும் முறை


ஒரு ஆளாக்கு பச்சரிசி எடுத்து நன்கு கழுவி உலர விடவும். உலர்ந்ததும் அடுப்பில் வெறும் கடாயில் போட்டு சிறுதீயில் பொன்னிறமாக வறுத்து சூடு ஆறியதும், மிக்ஸியிலிட்டு பொடி ரவையாக அரைத்துக் கொள்ளவும்.

பின் ஒரு மூடி தேங்காயை சன்னமாகத் துருவி அதையும் லேசாக வாசம் வரும்படி வறுத்து வைத்துக்கொள்ளவும்.

வெல்லத்தைப் பொடிசெய்து அடிகனமான பாத்திரத்திலோ, அல்லது அதே கடாயிலோ இரண்டு தமளர் தண்ணீர் விட்டு அடுப்பலேற்றி கரைந்ததும், வடிகட்டி, பின் அந்த வெல்லக்கரைசலில், வறுத்த தேங்காய் பூவைச்சேர்த்து, கொதி வந்ததும் பொடியாக்கி வைத்திருக்கும் அரிசி ரவையை சிறிது சிறிதாக கட்டித்தட்டாமல் சேர்த்து, சிறுதீயில் கொதிக்க விடவும். (தண்ணீர் போதவில்லையென்றால், அவ்வப்போது சிறிது சிறிதாக தெளித்துக் கிளறலாம்.) நன்கு வெந்ததும் ஏலக்காய் பொடி செய்து போட்டு, முந்திரியை துண்டாக்கி நெய்யில் வறுத்து சேர்த்து, கொஞ்சம் நெய்யும் விட்டு கிளறி விடவும். சிறிது மூடி வைத்திருந்தால் இறைவனுக்கு பிடித்தமான உதிர் உதிரான களி தயாராகி விடும்.


தாளதம் (காய்கறிக்௬ட்டு)


அரை கப் துவரம் பருப்பு, கால் கப் கடலைப்பருப்பு இரண்டையும் குக்கரில் வேக வைத்துக்கொள்ளவும்.

தேவையான காய்கறிகள் (காரட், வெள்ளை பூசணி, சிகப்பு பூசணி, புடலங்காய், பீன்ஸ், சவ்சவ், உருளை கிழங்கு, முருங்கைகாய் (கிடைத்தால்) கத்திரிக்காய், கொத்தவரங்காய் அவரைக்காய் ) சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வேகவைத்துக்கொள்ளவும். தேவையான புளி கரைசலை சேர்த்து கொதிக்கும் போது, மஞ்சள் தூள், சாம்பார் பொடியுடன், (அல்லது, தனியா, வத்தல், கடலை பருப்பு துவரம் பருப்பு உளுத்தம்பருப்பு வெந்தயம் அளவுடன் சேர்த்து வறுத்தரைக்கும் பொடியாயினும் சரி)  துருவிய தேங்காய். சிறிது எள்ளையும், வறுத்து  அரைத்து  அதனுடன்  கொதிக்க விட்டு  வெந்த பருப்புக்களை  கலந்து தேவையான  அளவு  உப்புச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் கீழிறக்கி, (சிறிது நீர்க்க  இல்லாமல்  சேரந்தாற்போல்  இருக்க  கடைசியில் கொஞ்சம்  அரிசி  மாவை கலந்து விடலாம். )கடுகு, பெருங்காயம்   தாளித்து   கறிவேப்பிலை,   கொத்தமல்லி, இலைகளை போட்டு  மூடி வைக்கவும்.  இதுவே  தாளதக் ௬ட்டு ஆகும். அந்தக் களிக்கேற்ற  ருசியுடன் ௬டியதாளதமும்  சேர்த்து  இரண்டுமாக  இறைவனுக்கு படைக்கவும்


இந்தப் பதிவை  திருவாதிரையன்று  பதிக்க வேண்டி  முதல் நாள்  இரவு  இரண்டு மணி வரை அமர்ந்து எழுதினேன். ஆனால் அதை தொகுப்பதற்குள், மறுநாள்  தீடீரென்று  வந்த  விருந்தோம்பலில்  நேரம் சரியாக சென்றதினால், இன்று வரை சற்று  தாமதமாகி விட்டது. அனைத்தும் ஈசன் செயல்தான்! வேறென்ன சொல்ல.?


திருவாதிரைக்களி, சூடாக  இல்லையென்றாலும், இனிப்பு  மாறாமல் , இருக்கவேண்டுமென்று, ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்...நன்றி..! 


படங்கள்....௬குள்....நன்றி.. ! 
தகவல்: விக்கிபீடியா நன்றி.. !



9 comments:

  1. தெய்வீக விடயங்கள் நிறைய அறிய வைத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் .
    அன்புடன்
    கில்லர்ஜி

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரரே!

    தங்கள் உடனடி வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரரே!

    தங்களின் நல்ல உற்சாகப்படுத்தும் கருத்துரைகள் என் பதிவுகளை சிறப்பான முறையில், எழுதும் விதமாக அமைக்கிறது. அதற்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் மிகையாகாது. மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. நன்றி..!


    கடவுளின் அருள் அனைவரையும் சிறப்பிக்கட்டும்....

    நன்றி கலந்த நட்புடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. திருவாதிரை பற்றிய பல அரிய செய்திகளை அறிந்தேன். புகைப்படங்கள் மிகவும் அழகாக உள்ளன. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே!

      புகைப்படங்கள் நன்கு உள்ளன எனக்௬றி வாழ்த்தியமைக்கும் என் நன்றிகள். தொடர்ந்து ஆதரவு தர பணிவுடன் வேண்டுகிறேன்.

      மிக்க நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. திருவாதிரை பற்றி அழகான செய்திகளின் தொகுப்பு...
    திருவாதிரை களி, கூட்டு செய்யும் முறை பற்றிய குறிப்பு...
    அழகான படங்கள்...
    அருமையான பகிர்வு சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் அழகான படங்களுடன் ௬டிய பகிர்வு என்ற மனம் திறந்த பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே!
      தொடர்ந்து பதிவுகளைப் படித்து கருத்திட பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி...

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. அழகான அருமையான விளக்கம்...

    சிறப்பான பகிர்வு..

    வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!

      தாங்கள் தொடர்ந்து வந்து கருத்திட்டு என் எழுத்துக்களை ஊக்கப் படுத்துவதற்கும், சிறப்பான பகிர்வு என வாழ்த்தியமைக்கும் என் பணிவான நன்றிகள் சகோதரரே!

      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. வணக்கம் சகோதரரே!

    தாங்கள் என் வலைத்தளத்திற்கு முதல் வருகை தந்தமைக்கு என் பணிவான நன்றிகள்.

    இனிமையான கவியினால், பொங்கல் நல்வாழ்த்துக்களை பரிசாக தந்து சென்றமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும், எனது மனம் நிறைந்த இனிய
    பொங்கல் நல்வாழ்த்துகள்..

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete