Tuesday, July 22, 2014

முருகா! இவையொன்றாக நான் பிறந்திருந்தால்!!!


உன் ஒரு திரு முகத்தின்
இரு விழிகள், என்னைக் கொஞ்சம்
பார்த்தும், பாராமலுமிருக்க, மற்ற
இரு முகத்தின், இரு விழிகளின்,
ஓரப்பார்வை, என்னைச்சிறிது
தொட்டும், தொடாமலுமிருக்க, தொடர்ந்திருக்கும்,
மூன்று முகங்களின் முழுப்பார்வையும்,
முழு திக்கிலும், பரவி விரிந்திடவே,
முயற்சிக்கும் போதினிலும், முருகா!
முழுமதியான உன் முகத்தில்,
மெளனமாக உன் இதழ் சிந்தும்,
மெளனப் புன்முறுவல், என் வாய் பேசாத,
மெளனத்தை கலைத்து உன்னிடமிருந்து, மறு
மொழியொன்றையும், தினம் எதிர்பார்க்கின்றதே!
 பறவையாய் நான் பிறந்திருந்தால், என்
பறக்கும் திறனினால், பந்தென கிளம்பி,
உனைச்சுற்றும் சில பறவைகளோடு,
உளம் களிக்க உனைத் தொட்டு, என்
சிறகுகளால், உனை தினம் வருடி,
சிறகடித்து, வானில் வட்டமிடும் பிற
பறவைகளோடு, ஒரு பறவையாய், உன்னை
பலகாலம் சுற்றி வருவேன்.

 

 மலர்களாய், நான் மலர்ந்திருந்தால்,
மணம் வீசும் அச்சிறு பொழுதில், உன்
மார் மீதும், தோள் மீதும், மணம் மிகும்,
மலர் மாலைகளாக நான் மாறி,
மணந்திருக்க, மகிழ்ந்திருப்பேன்.
வாசமுள்ள மனதுடனே, உன்னருளினால்,
வாடாத மல்லியாய் என்றும், நான்
வாழும் வரை வசித்திருப்பேன்.

மேகமாய், நான் ஊர்ந்திருந்தால்,
மோகமுற்ற மனதுடனே, கடும்,
வேகமாய் அவ்விடம் விட்டு நகராது,
வேறிடம் ஒன்றிருப்பதையும் அறியாது,
ஏகமாய் உனை விரும்பும் விருப்பத்துடனே,
எத்திக்கும் பொழியும் மழை மேகமாகி,
தாவி உன் பூ முகம் அணைந்திடவே,
தங்கு தடையில்லா, நீர் தாரையாவேன்.

நிலவாய் நான் நீந்தியிருந்தால்,
நீக்கமுற நிறைந்திருக்கும், என்
தன்னொளியால், உந்தன் தங்கத்
தளிர் வதனம் கண்டு மனமுவந்து,
இரவின் பொழுதெல்லாம், உனை
இரசித்து, கரையாமல், கரைந்திடவும்,
இமையோன் மைந்தா! உன்னிடம் என்
இமை மூடா வரம் கேட்டுப் பெற்றிடவும்,
இயன்றவரை முயன்றிருப்பேன்

உமையவளின் அருமைந்தா!
உனைச்சுற்றிச் சூழ்ந்திருக்கும், மற்ற
மரங்களினிடையே, ஒரு மரமாக
மண்ணோடு நான் நின்றிருந்தால், என்
கிளைகள் ஆடும் அவ்வேளையில்,
கிளுகிளுக்கும் மணியோசை போல்,
காற்றுடன் காற்றாக நான் கலந்து, உன்
காதோடு தினம் உறவாடி, என்னை
காக்க! காக்க!, என்றே துதி பாடி, நின்
கழலடியை மறவாதிருக்க பண் பாடி, என்
மனதின், எண்ணமெல்லாம், இந்த
மால் மருகனை விட்டகலாது, ஒருநாளில்,
மண்ணின் மடியில் சாய்ந்தாலும்,
மமதையின்றி வீ்ழ்ந்திடும் வரத்தை,
கண் மூடி, மனம்கசிந்து நான் பெற்றிடவே,
கண்ணின் கருமணியாம், எந்தன்
கந்தனை வேண்டியபடி, நின்றபடியிருந்தாலும்,
காலமெல்லாம் களித்திருப்பேன்.

இவற்றிலொன்றிலும், நான் பிறவாமல்,
இந்த மண்ணுலகின் மாந்தரென்று,
பிறந்து விட்ட ஒரு காரணத்தால்,
பிறவியின் பயன் தொட்டு, உன்னைத்
தொடவும் நேரம்  பிறக்கவில்லை!
தொடரவும், வழி அமையவில்லை! என்னைத்
தொடர்ந்து வரும் பாபங்களினால்,
கடமையெனும் கயிறானது, இறுகவே
கட்டி விட்டது கண்களையும்,
கைகால்களையும்! தற்சமயம் நின் கருணை, அக்
கட்டவிழ்த்து போனதில், உந்தன்
காட்சி கிடைத்திட, என் கவலை அகன்றிட,
கந்தா! எனை நோக்கி இனியேனும், மனம்
களிப்புற கருணைக்கண் திறவாய்.!
   என் சிந்தனை என்றென்றும்,
உன்னிடம் சிரத்தையோடிருக்க,
கந்தனே, உன் சிந்தைதனில், நீ
எந்தனையும், சற்று நினைத்திருக்க,
வந்தனையோடு துதிக்கின்றேன்.! அவ்
வரம் வேண்டி தவிக்கின்றேன்.! என்
மரணம் என்னை தொடும் வரை, உன்னை
மறவாத வரம் தந்தருள வேண்டுகின்றேன்.! 
மறவாது அவ்வரத்தை, தந்திடுவாய் என,
மனமாற வணங்கிப் போற்றுகின்றேன்.!!!!
மனதாற துதித்து யாசிக்கின்றேன்.!!!!


7 comments:

  1. Replies
    1. வணக்கம் சகோதரரே!
      தங்கள் உடன் வருகைக்கும், கருத்துப்பகிர்விற்கும்,வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கும் மிகவும் நன்றிகள் சகோதரரே!
      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன் .

      Delete
  2. வார்த்தைகளுக்கு தகுந்த புகைப்படங்களும் அருமை சகோதரி.
    எனது ''தாலி'' பதிவுக்கு வந்து கருத்துரையிட்டதற்க்கு சிறப்பான நன்றிகள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!
      என் இளைய மகனின் உதவியுடன்தான், புகைப்பட தேர்வுகளும் சிறப்புற அமைந்து வருகின்றன.பாராட்டுக்கள் மகனுக்கும் உண்டு.
      என் பதிவுக்கு வருகை தந்து கருத்து தெரிவித்தமைக்கும், பாராட்டி வாழ்த்தியமைக்கும், என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே!
      நன்றியுடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே!
      தங்கள் உடன் வருகையும், கருத்துப்பகிர்வும், வாழ்த்துக்களும், என் எழுதும் திறனை அதிகமாக்கும், என நம்புகிறேன். என் பதிவை ரசித்தமைக்கும், வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றிகள் சகோதரரே!
      நட்புடன்,
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. வணக்கம் சகோதரரே.!

    தங்களின் அன்பான வருகைக்கும், என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி, அதை என் தளத்திற்கு வந்து சொல்லி வாழ்த்தியமைக்கும் என் பணிவான நன்றிகள் சகோதரரே..

    வலைச்சரம் வந்து நானும் தங்களுக்கு நன்றி தெரிவித்து கருத்துரை தெரிவித்திருக்கிறேன். இனியும் தொடர்ந்து கருத்துக்களிட்டு ஆதரவளிக்க வேண்டுகிறேன். நன்றி சகோ..

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete