Friday, November 28, 2025

கவிதைகளின் தொகுப்பு

சித்திரை திருநாள் சிறப்பான திருநாள். 


பள்ளி விடுமுறை 
நாட்களோடு, 
பகலவன் வெருட்டிய 
வெப்பங்களோடு, 
சைக்கிள் வட்டங்களை 
உருட்டியோட்டி கை கால்கள் 
சலித்துப் போனோம்.

அந்த வெப்பமதின் 
தாக்கத்தை தணிக்க, 
ஆண்டவனை தாங்கி நிற்க 
சின்ன மரச்சட்டங்களை 
ஒருங்கிணைந்து
சத்தமில்லாது அழகுத் தேராக்கி,
சடுதியில் இழுத்து வந்து
கோவில் வாசலோடு 
நிலை சேர்த்து, 
இறையருளை வேண்டிடவே, 
அவனருளால் இந்த 
அவனியெங்கும்
அருள் சிறந்து 
நன்மழை பொழிந்து
அமர்த்திடுமே அந்த 
அனலையெல்லாம்.

ஆதலால் சித்திரை மாதத்து 
விழாக்கள் என்றும் 
ஆண்டுகள்தோறும் 
சிறப்பாகிப் போனதிங்கே....! 

சித்திரைத் திருநாளில் 
தேரோடும் வீதியிலே 
விழி மூடும் நேரத்திலே
வாடாமல் வடம் பிடித்து 
இழுத்து வந்து  நிலை சேர்த்த 
அந்நாளைய பெருமைதனை அங்கலாய்த்து தினம்  பேசி
நீங்கள் தளர்ந்திருக்கும் 
இந்நிலை  இன்று  நாங்களறிவோம்..! . 

வயதாகியதில் வரும் 
இயலாமையால், 
இப்போது வாட்டமுடன் 
நீங்கள் அமர்ந்து விட, 
தேரின் பெரும் வடம் பிடித்து 
எங்கள் தேயாத 
இளமைதனை பறைசாற்றி வாலிபராகும் வரங்கள் வேண்டியே நாங்களின்று 
இவ்வடம் பிடித்தோம். 

இளையவர்களின் பலங்கள் இனி புரிந்திடவே, 
இதுவும் ஒரு முயற்சியன்றோ..! 
வயதில் மூத்தோர்  
விட்டு தந்திட்டால், 
வரும் எங்கள் வாழ்வில் 
ஒரு சுழற்சியன்றோ..! 




மகிழ்வின் மூல(தன)ம். 

சின்னஞ்சிறு  வயதெனினும்,
உயரமெனும் சிகரத்தை 
எட்டி விட்ட களிப்பில்,
உன் சிந்தையிலே 
தெரியுது பார் உவகை ...! 

முத்துப்பல் தெரிய நகை புரியும்   
உன் முகத்தினிடை மகிழ்வில்,
உன் மூச்சு காற்றினிலே 
படருது பார் மலர்ச்சி .. ! 

கைத்தூக்கி காட்டிடும்  
வெற்றிச்சின்னம்..! 
கண்களிலே  தெரியுமந்த 
மகிழ்வலைகள்..! 

அத்தனை வடிவத்திற்கும் 
அற்புத காரணம்... !
உன் கள்ளங்கபடமற்ற உள்ளமதினிலே..!
நீ  இட்டு வளர்த்த 
உன்னதமான மூலதனம்..!
உன் சிரிப்பென்ற ஒன்றுதான்...! 

மேற்கண்ட இரு படத்திற்கும் யாரேனும் ஏதேனும் கவிதை எழுதுங்கள் என அவர் பதிவில் அழைத்தவர் நம் சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்கள். இது கடந்த நான்கைந்து வருடங்களுக்கு முன்பு என நினைக்கிறேன். (சரியாக தெரியவில்லை.) இந்த மாதிரி  அழைப்புக்கள் எனக்கு ஒரு வரப்பிரசாதம். உடனே சில நாட்களில் யோசித்து எழுதி விட்டேன். (உடனே கண் இமைக்கும் நேரத்தில் எழுத நான் என்ன ஸ்ரீராம் சகோதரரா..?இல்லையே..! ) ஏனெனில் இது போல் கவிதைகள் புனைய எனக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். (அதை படிக்கும் எங்களுக்கும் அது (அதுதான் அந்த ஆர்வம்) உண்டாக வேண்டாமா என தயவு செய்து கேட்காதீர்கள்:))   ) ஆனால் அனுப்ப மனம் வரவில்லை. 

நம் கவிதையெல்லாம் ஒரு சிறந்த கவிதையா என்ற யோசனைகள் வளர்ந்து பலமானதில்,என் எழுத்தோடு, அந்தப் படங்களும் டிராப்டில் பல வருடங்களுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டன. அதன்பின் யார் முன்வந்து அவர் தந்த
அப்படங்களுக்கு சிறப்பாக கவிதை எழுதினார்கள் என்பதெல்லாம் நினைவில் இல்லை.(அவர்தான் சொல்ல வேண்டும்.) 

என்னை உங்கள் அப்போதைய பகிர்வான படங்களுக்கு கவிதைகள் எழுத வைத்தமைக்கு நன்றி வெங்கட் நாகராஜ் சகோதரரே. 🙏. 


இன்று எ.பியில் ஒரு மரம், பல பறவைகள் படத்திற்கு ஏற்ற கவிதைகளை நம் எ. பி குடும்ப நட்புகள் அனைவரும் சிறப்பாக புனைய, என் மனமும் உடனே எழுத இயலாத ஆதங்கத்தில் ஒரு புழுவாக நெளிந்தது .எப்படியும் ஒரு நாலுவரியாவது எழுதிட வேண்டுமென அது பிடிவாதம் செய்ததில், பல வேலைகளுக்கு நடுவில் அதற்கும் எப்படியோ  மதியத்தில் யோசித்து ஒரு கவிதை எழுதி  விட்டேன்.

இன்றைய மரம் பறவைகளுக்கான என் கவிதை. 

தன்னம்பிக்கை கொள் மர(ன)மே

பிறந்தவுடனே சில காலத்திய

பிணைப்பென்றாலும்

எங்களைப் போன்ற சிறு 

ஜீவன்களாகிய

பறவைகளுக்குத்தான் புரியும்

பந்தமும் பாசமும்  வெறும்

பகட்டானதா, இல்லை
 
பரிகாசமானதாவென்று..! 


பற்றில்லா இலைகள் 

தன் வழக்கமான

பழக்கத்தில் பற்றறுத்து

பாதை மாறிப் போனதந்த 

வருத்தத்தைப் போக்க உன்

வேர்களுக்கு துணையாக

வேறெந்த உறவையும் நாடாது 

உன் வேதனையில் பங்கெடுக்க 

வேண்டி வந்து அமர்ந்துள்ளோம்


வருந்தாதே அன்பு மரமே.!  

உன் மனவலி(மை) கண்டும் 

இங்கு வந்திறங்கி உள்ளோம்.

இலைகள் இல்லாத போதினிலும்

இவைகளின் அன்புக்கு விலை

ஏதுமில்லையென உன்

உள்மனதுக்குள்

சற்று இறுமாப்புக் கொள்...!


கறுத்த மேகங்கள் மனமிறங்கி

மழையும், குளிருமாய் வந்து

விரட்டிடும் விரைசலில், 

விரைவில் துளிர்த்திடும்

பசுந்தளிர்கள். தங்களின் பரிசாக

உன் மேல் தன் பங்களிப்பாக 

பாசப் போர்வையை 

போர்த்தியதும்

பளபளவென மின்னும் உன்

அற்புத அழகை ஆராதனை 

செய்வதற்கு தினந்தினம் 

அப்போதும் நாங்கள்

தப்பாமல் வருவோம்.


அக்கணம் எங்கள் வாழ்வின்

ஆனந்த குடியிருப்பிற்கு

அங்கலாய்ப்புடன் கூடிய 

ஆட்சேபனைகள் ஏதும் 

கூற மாட்டாய்..! மாறாக

அமைதி கொண்டு வரவேற்பாய் 

என்ற ஆனந்தத்தில் இப்போது 

ஆழ்ந்து லயித்துள்ளோம்

நானோ ஒரு தருமி. இருப்பினும், சிறப்பாக அங்கு  கவிதையை செதுக்கியவர்கள் இதையும் படித்து பாண்டிய மன்னனாய் ஒரு நல்ல கருத்தை முன்வைத்தால் பெருமகிழ்ச்சியடைவேன்.

இப்போது பழையது, புதியது என அனைத்தையும் சேர்த்து தொகுத்து இங்கு என் பதிவிலேயே  வெளியிட்டுள்ளேன். 

அனைவரும் வந்து படித்தால் நலம். படித்த பின் கவிதைகளுக்கு ஒரு நல்ல கருத்துரை தந்தால், அது என் எழுத்துக்கும் ஒரு நல்ல பலம். 🙏. நன்றி சகோதர சகோதரிகளே..! 🙏. 

68 comments:

  1. ஓ..  கவிதை மழை... 

    பொதுவாக சென்னையில் புயல், சென்னையில் மழை என்பார்கள். 

    நாங்களும் காத்திருக்க, அது சத்தமில்லாமல் விசாகப்பட்டினத்துக்கோ, இன்னொரு ஊர் குஜராத்தா அங்கும் சென்று மழை பொழியும்.  மாப்பிள்ளைக்காகக் காத்திருந்த மணமகள்..  இருங்கள் இப்போது இந்த உவமை பொருந்தாது...  மாற்றிச் சொல்வோம்..  மணமகளுக்காகக் காத்திருந்த மணமகன் ஏமாறுவது போல நாங்கள் ஏமாறுவோம்! 

    அதுபோல வியாழன் பதிவில் 'உங்கள் கவிதையையும் இங்கு பகிருங்கள்' என்று சொல்லி, கேட்டு, ரீமைண்டர் எல்லாம் போட்டு நாங்கள் காத்திருக்க.. 

    கவிதை மழை இங்கு பொழிந்திருக்கிறது.  பனி மூட்டமோ, பிளாக்காட்டமோ அதைக் காண முடியாமல் எங்களைத் தடுத்து வைத்திருக்கிறது!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான உடனடி( பதிவைப் பற்றி நான் அங்கு கோடிட்ட உடனேயே) வருகைக்கும், தங்களின் அன்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      சென்னை மழைக்கும், என் கவிதைக்குமான ஒரு தொடர்பை சொன்ன உங்கள் எண்ணங்கள் பிரமாதம். ஆனால், நேற்றைய பதிவுக்கு கடைசி பெஞ்ச் மாணவியாக அங்கு பதிவதை விட ஏற்கனவே சிறைப்பட்டிருக்கும் இரண்டையும் இதனுடன் சேர்த்து விடுதலை பண்ணலாம் என எனக்குத் தோணியது. ஆனாலும், உங்களை காத்திருக்க வைத்தமைக்கு மன்னித்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை அதை மட்டும் அங்கு பகிர்ந்திருந்தால் கூட இதுவரை நான்கு பேர் படித்திருப்பார்கள். ஆனால், கண்டிப்பாக ரசித்திருக்க மாட்டார்கள். :)) ஏனெனில் அங்கு நல்ல கவிகள் பல அரங்கேறியிருந்தன. அதையெல்லாம் மிகவும் ரசித்தேன். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. முதல் கவிதை படம் நீங்களே எடுத்ததா?   அருமை.. 

    உங்கள் கற்பனை அருமை.  இளமை, முதுமை என்று எங்கேயோ போயிட்டீங்க..  ஹா..  ஹா.. ஹா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      முதல் இரு படங்களுக்கும் விளக்கம் கூற வந்தேன். பதிவில் நான் விளக்கியதை நீங்களும் பார்த்து விளங்கி கொண்டிருப்பதை பின் வந்த உங்கள் கருத்தில் கண்டு கொண்டேன்.

      படத்துல இடம் பெற்ற முதியவர்களையும் சேர்த்து என் கற்பனைக் கடிவாளமின்றி சென்றதால், கவிதை சற்று நீளமும், இளமை, முதுமை என்ற பொருளையும் தொட்டுக் சென்றது. உங்களது ஊக்கம் மிகுந்த கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  3. சிரிக்கும் சிறுமியின் (சிறுமிதானே?) படமும் நீங்கள் எடுத்ததா"  பல் என்று படித்ததும் சற்றே சோகமாகி விட்டேன்.  நேற்று மதியம் வந்து படுத்தவன் இன்று காலைதான் வலிநீங்கி எழுந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      இப்போது பல்வலி குணமா? பல் எடுக்கும் சோதனையா? இல்லை பல் உபத்திரவம் நீங்க மருத்துவமா ? இத்தனை வலியிலும், சென்னை மழையை போலில்லாமல், கருத்து மழை பெய்து விட்டீர்கள். உங்களின் அன்புக்கு என்ன விலை தரப்போகிறேனோ?

      எனக்கும் பல பற்கள் தட்டாமாலை ஆடிக் கொண்டிருக்கின்றன. (என்னை விட்டு பிரிய மனமில்லாமல்) எப்போது அவைகள் தாமாக கழன்று விழுமென காத்திருக்கிறேன். அதற்கும் தெரியவில்லை. எனக்கும் தெரியவில்லை. அதனால் ஏற்படும் வலிகளை (ஏ)மாற்ற இப்படி கவிதை மழைகளை (செய்கை மழை மாதிரி) உற்பத்தி செய்து அதில் நானே நனைகிறேன். சமயங்களில் உங்களனைவரையும் நனையச் செய்கிறேன். ஹா ஹா ஹா

      உங்கள் பல் வலிகள் விரைவில் குணமாக இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி சகோதரரே

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. நன்றி...  பல் ஆஸ்பத்திரியில் மெனு கார்ட் பார்த்து அதில் இருக்கும் எல்லாவற்றையும் 'டிக்' செய்து வைத்திருக்கிறேன்.  அவஸ்தையும் செலவும் தொடரும்.!!

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      கேட்கவே வருத்தமாக உள்ளது. பல் மருத்துவம் சற்று செலவைத்தருமென நினைக்கிறேன். ஆனால் பிற்பாடு நல்ல பயனையும் தருமென சொல்கிறார்கள். எனக்குத் தெரிந்த உறவில் ஒருவர் மருத்துவத்திற்கு பின் லகரத்தில் புதிய பற்களுடன் நலமாகி உள்ளார்.உங்களுக்கு பிரச்சனைகள் தொந்தரவின்றி சரியாகி விடட்டும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  4. நல்ல கவிதை.  கடைசி வரி உன் சிரிப்பென்ற ஒன்றும்தான் என்று மாறினால் இன்னும் நன்றாயிருக்கும் என்று தோன்றியது.  குழந்தைக்கு ஒரு மூலதனம்தான் இருக்குமா என்ன!

    'முத்துப்பல்' என்று படித்ததும் ஒரு பாடலும், 'நகை' என்று படித்ததும் ஒரு பாடலும் நினைவுக்கு வந்தது என் பலவீனம்!  என்ன பாடலாயிருக்கும் என்று யூகியுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      "முத்துப்பல் சிரிப்பென்னவோ" பாடல் முந்திரி கொட்டையாய் முன்னுக்கு வந்து நன்று சொல்ல வைக்கிறது. பாருங்கள்..! இத்தனைக் கருத்துகளுக்கும் ஒவ்வொன்றாக நிதானமாக பதில் தராமல், எனக்கும் என்ன அவசரமென்று..! நகை பாடல் மனத்துள் சட்டென வரவில்லையே..! என்ன பாடலாக இருக்கும்? கொஞ்ச நேரம் யோசித்து விட்டு அத்தனைக்கும் பதில் தருகிறேன். கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. வணக்கம் சகோதரரே

      இல்லை. நூறில் இன்னும் ஐம்பதை பெறவில்லை.

      நீங்கள் சொல்லியபடி "ஒன்றுந்தான்" என மாற்றினால் நன்றாக இருக்கும். நீங்கள் சொன்னால் அது சரியாகத் தான் இருக்கும். மாற்றி விடுகிறேன். நல்லதொரு கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      Delete
    3. வணக்கம் சகோதரரே

      இரண்டாவதாக சொன்ன "நகை" ப் பாடல் "முத்து நகையே உன்னை நானறிவேன்" என்பதா? மற்றொரு ஐம்பது மார்க்கும் கிடைக்குமா.? இல்லையா என்பதை கூறவும். யோசித்ததில், அப்போதே இதை கூற வேண்டுமென நினைத்தேன். கொஞ்சம் வெளியில் வர வேண்டியதாகி விட்டது. அதனால் தாமதம்.
      நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    4. நன்றி சகோதரரே. இப்போதுதான் 100 மார்க் வாங்கிய திருப்தி வருகிறது. நேற்றெல்லாம் பல பாடல்களை மனத்துள் பாடிய வண்ணமிருந்தன. வேறு வேலைகளில், அவ்வளவாக வனங்கள் செல்லவில்லை. நீங்கள் எப்படித்தான் எல்லாப் பாடல்களையும் பார்த்தவுடனேயே மனதுக்குள் ரிக்கார்டு செய்து வைத்துள்ளீர்களோ?
      you are very great. நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  5. கண்ணிமைக்கும் நேரத்தில் எழுதுவதா?  நான் ஒரு அவசரக்குடுக்கை என்று தெரிகிறதே...  உங்கள் படமா,  நீங்கள் எடுத்ததா என்று கேட்டுக்கொண்டே வந்து இங்கு நீங்கள் வெங்கட் தளத்தில் எடுத்தது என்று படித்தேன்.  அவசரம்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      நீங்கள் மட்டுமல்ல..! நானும் ஒரு அவசர குடுக்கைதான். இதிலென்ன ஐயம்..! . வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு இப்பதிவின் மூலம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரால்தான் இக் கவிதை கள் உருவாயின. உங்கள் மற்றும், சகோதரி கீதாரெங்கனின் கவிதைகளைப்படித்ததும், நான் எழுதியிருப்பதும் ஒரு கவிதை வகையை சார்ந்ததா? என்ற சந்தேகம் வருவதை தடுக்க இயலவில்லை. மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  6. நெல்லையின் படத்துக்கு கவிதை சொல்ல வரும் கருத்து  ஓகே என்றாலும்,  'எங்களை போன்ற சிறு பறவைகளாகிய' என்பது  மரத்துக்குப் பொருந்துமா?  மரம் பெரிய உருவமாச்சே!!!  ஹிஹிஹி...   என்ன சொல்றீங்க? 

    அது சரி பகட்டானதா, பரிகாசமானதா..  உங்கள் தீர்ப்பு என்ன?  ஏனெனில் இரண்டுமே தாற்காலிகம்தான். அதாவது மரம், பறவை இரண்டின் பாசங்களும் 

    ReplyDelete
  7. இலைகளின் மறைவுக்கு துக்கம் கேட்க ஆறுதலாய் வந்துள்ளன என்கிறீர்கள் இரண்டாவது கவிதையில்.  நல்ல கற்பனை.  

    கவிதையின் தொடர்ச்சி, தங்கள் சொந்த ஆதாயத்துக்காக அரசியயவாதிகளை நாடிச் சென்று துண்டு போடும் வட்டச்செயலாளர் வண்டு முருகன்கள் நினைவுக்கு வருகிறார்கள்!

    ReplyDelete
  8. 1)  சிறிய கரங்களுக்கு 
    சிரமமான சுமை 
    இறைவனை அருகில் 
    இழுக்கும் 
    இனிமையான முயற்சி 
    பழகிக் கொண்டால் 
    பந்தாடி விடலாம் 
    வாழ்க்கைச் சுமையை  

    ReplyDelete
  9. 2)  தோளேறியதும் 
    இறைவன் தெரிந்து விட்டான் 
    என்றுதான் 
    இந்த உவகைச் சிரிப்பா 
    ஒருகை தேரில் வரும் 
    இறைவனைச் சுட்ட, 
    மறுகை 
    தோளில் தாங்கியிருக்கும் 
    இறைவனைப் பற்றி இருக்கிறதே 
    தோளில் ஏற்றி இருப்பவனும் 
    தந்தை எனும் 
    இறைவன்தான் 
    என்று 
    அறிந்து கொண்ட சிரிப்பா 

    கள்ளமில்லா சிரிப்பில் 
    உள்ளம் கொள்ளை 
    போகுதடி 
    பிள்ளை வரமாய் வந்த 
    நீயும் 
    எனக்கு இறைவன்தான் 

    ReplyDelete
    Replies
    1. கடைசி வரியில் 'இறைவன்தான்' என்பதை 'தெய்வம்தான்' என்று சொன்னால் நன்றாயிருக்குமோ...

      Delete
    2. ஆகா.. இதைத்தான் சொன்னேன். கண்ணிமைக்கும் நேரத்திறகுள் கவிதை என..! ஒவ்வொன்றிக்கும் அட்டகாசமாக எழுதி விட்டீர்கள்.

      வாழ்த்த வாயில்லை. (இங்கிருந்து சொன்னாலும் கேட்காதே) ஆனால், எழுத வார்த்தையெனும் கருவியும், கைப்பேசியும் உள்ளதே..! வாழ்க உங்கள் கவிதைகள். வாழ்த்துகள், பாராட்டுக்கள். உண்மையிலேயே நீங்கள் ஒரு பிறவி கவிஞர். நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. என்னையும் கவிஞர் என்று சொல்லி, குழந்தையை சந்தோஷப்படுத்துவது போல மகிழ்விக்கும் உங்கள் வெள்ளை / நல்ல உள்ளத்துக்கு நன்றி!!!

      Delete
    4. வணக்கம் சகோதரரே

      தங்களது வரவுக்கும், பல கருத்துகளுக்கும், மிக்க நன்றி.

      முதல் தேர்வடத்தை பற்றிய படத்திற்கு, சிறுவர்களின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் முதியவர்களையும் என் கவிக்குள் இழுத்தேன். நச்சென தங்களுக்கு தோன்றிய மாதிரி நாலு வரியில் சொல்லி விட்டு நகர இயலவில்லை. தங்கள் கவிதை மிக நன்றாக உள்ளது. அப்போதே சகோதரர் வெங்கட்நாகராஜ் பதிவுக்கு நீங்களும் இது போன்று எழுதி அனுப்பினீர்களோ என்னவோ..! அதுவும் நினைவில் இல்லை. ஆனாலும் உங்களதுதான் முதலிடம் பெற்று மனதில் நிற்கிறது.

      தந்தையை இறைவனாக்கி எழுதிய இரண்டாவதும் அருமை. மாதா, பிதா, குருவிற்கு பின்தானே இறைவனும் அங்கு அடக்கமாக நிற்கிறார்.

      அதில் தெய்வம் என்ற வார்த்தையும் பொருத்தமாகத்தான் இருக்கும். இதை நான் ஆமோதித்தால், ,குருவுக்கு மிஞ்சிய சிஷ்யை ஆகி விடுவேன்.

      இன்னமும் ஒரு படங்களை பார்த்தவுடன் வார்த்தைகள் வளைந்து வந்து உங்களிடம் வசமாகும் வித்தையை எண்ணி வியக்கிறேன். உங்களது இந்த திறமைக்கு எப்போதும் என் 🙏. நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    5. ஸ்ரீராம் சரிதான்....தெய்வம் இன்னும் நன்றாக இருக்கும்

      கீதா

      Delete
    6. அதுதான் நானும் சொல்லியுள்ளேன் சகோதரி. சகோதரரைப்போல சட்டென கவிதை எழுத முடியாது. இப்போது அந்த லிஸ்டில் நீங்களும் கலந்து விட்டீர்கள். நான் எப்போதும் போல் தருமிதான்.

      Delete
    7. கவிதை அருமை ஸ்ரீராம்

      Delete
    8. நன்றி கோமதி அக்கா.

      Delete
  10. தான் பிறந்த இடத்துடன் பறவைகளின் பந்மும் பாசமும்,

    இலைகள் பற்றில்லை என்பதால் மரத்தைவிட்டு நீங்கியதோ. அதுதான் தற்காலத்தில் குடும்பங்களில் நடந்து வருகிறதோ

    புதிதாக இலைகள் துளிர்க்கும்போதும் வருவோம், இலைகள் போனதைப் பற்றிக் கவலைப்படாதே

    கூடுகள் கட்ட மரங்களும் ஆட்சேபணை தெரிவிக்கலாம், காற்றின்போது வேகமாக அசைந்து ஆடுவதன் மூலம்.

    அனைத்துக் கவிதைகளையும் ரசித்தேன்.

    சித்திரை என்றதும் கசகச வெயிலில் ஒரு தடவை மதுரையில் தங்கி அழகர் ஆற்றில் இறங்கியதைப் பார்த்த நினைவு வந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      பதிவில் கவிதையை ஒவ்வொரு வரியாக ரசித்து ஒவ்வொன்றிக்கும் அருமையாக விளக்கம் தந்து கருத்துரை சொல்லியுள்ளீர்கள். நான் கூட இவ்வாறெல்லாம் யோசிக்கவில்லை.

      அத்தனையும் நன்றாக உள்ளதென கூறியமைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி சகோதரரே.

      சகோதரர் வெங்கட்நாகராஜ் அவர்களும் ஒரு தடவை இந்த சித்திரை திருவிழாவைப்பற்றி அவர் பதிவில் கூறும்போதுதான் இந்தப்படங்களையும் பகிர்ந்திருந்தார் என நினைக்கிறேன். தங்களது நினைவுகளையும் அது தூண்டி விட்டது குறித்து மகிழ்ச்சி.

      மதுரைப் பக்கம் இருந்தும் கூட இந்த விழாக்களுக்கு ஒரு தடவை கூட நாங்களும் சென்றதில்லை. கூட்டம் அலர்ஜி. இறைவனை டிவியில் பார்ப்பதோடு சரி..! உங்களின் அருமையான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  11. சென்னையில்தான் புயல் மையம் என்றால் இங்கு பெங்களூர் தளத்தில் கவிதை மழையா புயலா!!!!!

    மையம் கொண்ட
    கவிதைப் புயல்
    தாமதமாக வந்து
    புயலுக்குப் பின்
    மழையாய்
    இங்கே கொட்டியது
    கவிதை மழையாய்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      கொஞ்சம் வெளியில் வந்திருப்பதால் தங்கள் கருத்துக்கு பதில் தர இயலவில்லை. இப்போதும் இன்னமும் வீட்டுக்குத் திரும்பவில்லை..

      /மையம் கொண்ட
      கவிதைப் புயல்
      தாமதமாக வந்து
      புயலுக்குப் பின்
      மழையாய்
      இங்கே கொட்டியது
      கவிதை மழையாய். /

      ஆஹா..! அற்புதம்..! நீங்கள் மட்டுமென்ன..! கவிதையில் கலக்குகிறீர்கள்.. இந்தளவிற்கு என்னால் சட்டென எழுத வராது/முடியாது. யோசித்து, யோசித்து எழுதுவதற்குள் வார்த்தை மேகங்கள் சிதறி, கவிதை மழை பொழிவாக பெய்யாமல் சிறு தூறலாகிப் போகும். உண்மையில் அதையும் நீங்கள் சிலாகித்து கூறுவது மகிழ்வாகத்தான் உள்ளது.ஆனாலும், உங்கள் அளவிற்கு சட்டென உதயமாகும் கவிதை எழுத முடியவில்லையே என்ற ஆதங்கம் எப்போதும் உண்டு மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்துக்கு.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    2. சரியாக சொன்னீர்கள் கீதா, கவிதை மழையில் நனைந்தோம் நாம்.

      Delete
    3. உண்மை. அனைவருக்கும் எனதன்பான நன்றிகள்.

      Delete
  12. இரண்டு கவிஞர்களுக்கிடையில் (அதாங்க ஸ்ரீராம் ஒரு புயல்னா நீங்க ஒரு புயல்!!!) மாட்டிக் கொண்டு நசுங்கிய சின்ன எலி நான்!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      நீங்கள் எலியல்ல..! கவிதை எழுதுவதில் புலி என நிருபித்து விட்டீர்கள்.( அதுவும் ஸ்ரீ ராம் அவர்களைப் போல சட்டென எழுதுவதில்) . கதைகளாட்டும், கவிதைகளாட்டும் சும்மா பந்தாடி வெல்கிறீர்கள். உங்கள் திறமைக்கு முன் நான் ஒரு எலியாக அங்குமிங்கும் ஒடுகிறேன் உங்கள் திறமைகளை கண்டு வியக்கிறேன். இன்னமும் வியப்பு அடங்கவேவயில்லை. சகோதரி. மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  13. கடினமான வாழ்க்கைத்
    தேரை இழுப்பதைவிட
    தெய்வத்தின் தேரை
    இழுப்பதெளிது!


    எதிர்கால
    வாழ்க்கைத் தேரை
    இழுத்திட
    தெய்வத்தின் தேரை
    இழுத்து வேண்டுதலோ!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சிறுவர்கள் எதிர்கால பயமில்லாமல் தேரை இழுக்கட்டும் கீதா.

      Delete
    2. வாழ்க்கைத் தேரை கையில் இழுக்க 
      வாகாய் ஒரு பயிற்சி.
      வடம் எடுக்கையில் 
      படமெடுத்தவர் யாரோ?

      Delete
    3. வணக்கம் சகோதரி

      உங்களது கவிதை மிக அருமையாக உள்ளது பதிலுக்கு இசைப்பாடியிருக்கும் ஸ்ரீ ராம் சகோதரரின் கவியும் அருமை. போட்டிப் போட்டுக் கொண்டு கவிதைப்பூக்கள் என் வலைப்பூவில் மலர்ந்துள்ளதை பார்க்கும் போது மனதுக்குள் மகிழ்ச்சிப் பூக்கள் ஆயிரம் மலர்கின்றன. நன்றி, நன்றி அனைவருக்கும். 🙏.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  14. உங்க முதல் கவிதை சூப்பர் கமலாக்கா!!

    கீதா

    ReplyDelete
  15. மொட்டை என்றாயா?
    ஹெ!
    பார்த்துக் கொள்...
    மொட்டு நான் மலர்ந்து
    சாதித்துக் காட்டுகிறேன்!
    போடா முட்டள் பயலே!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /மொட்டு நான் மலர்ந்து
      சாதித்துக் காட்டுகிறேன்!/

      கவிதை மழைகளில் நானும் நனைந்தேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  16. இரண்டாவது கவிதையும் நல்லாருக்கு கமலாக்கா

    //(உடனே கண் இமைக்கும் நேரத்தில் எழுத நான் என்ன ஸ்ரீராம் சகோதரரா..?இல்லையே..! ) //

    அதைச் சொல்லுங்க...நானுமே அவரை கவிஞரே என்று தான் சொல்லியிருந்தேன்!!!! பின்ன டக்கு டக்கு பொக்கு பொக்குனு வந்து விழும் அவருக்கு....

    பொடிப்பையனைப் போய் சகோதரரே சகோதரரேன்னு ...அட போங்கக்கா....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      அப்படியே பழகி விட்டது. மாற்ற இயலவில்லை. அண்ணா, என அழைக்கவா, தம்பி என தட்டச்சு செய்யவா என புரியவில்லை. சகோதரர் என்பது நன்றாக உள்ளது. அதனால் அப்படியே தொடர்கிறேன். கவிதைகளை ரசித்தற்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  17. நீங்களும் நல்லா எழுதறீங்கக்கா எதுக்கு குறை?

    மொட்டை மரம் தான்
    எங்கள் அரங்கம்!
    அதனால் என்ன?
    வாருங்கள்!
    இதோ எங்கள்
    இசைக் கச்சேரி ஆரம்பம்!
    'பறவைகளின்' கீதத்தில்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மொட்டை மரம் மேடை கவிதையை இன்னும் சுருக்கலாம். ஒரு ஹைக்கூ போல.

      Delete
    2. இலையில்லா மரமேடையில் 
      இடைவிடாத  சங்கீதம். 
      பறவைக்கூச்சல்.

      Delete
    3. மாலை நேரம் கூச்சல் போடும் கூடு திரும்பும் போது

      Delete
    4. அழகான, அருமையான கவிதைகள். மிகவும் ரசித்தேன். நன்றி சகோதர சகோதரிகளே.. 🙏.

      Delete
  18. வயதில் மூத்தோர்
    விட்டு தந்திட்டால்,
    வரும் எங்கள் வாழ்வில்
    ஒரு சுழற்சியன்றோ..! //

    ஆமாம், வயதானவர்கள் ஒதுங்கி நின்று இளைய தலைமுறையை செயல்பட விட்டு அவர்களை பெருமிதமுடன் பார்த்து ரசிக்கலாம் . வாழ்த்தி மகிழலாம்.

    ReplyDelete
  19. //சின்னஞ்சிறு வயதெனினும்,
    உயரமெனும் சிகரத்தை
    எட்டி விட்ட களிப்பில்,
    உன் சிந்தையிலே
    தெரியுது பார் உவகை ...! //

    உண்மை உண்மை.
    சின்னஞ்சிறு வயதில் தந்தை , தோளில் அமர்ந்து கள்ளம் , கபடம் இல்லாமல் சிரித்த சிரிப்பு சிகரத்த எட்டி விட்ட களிப்புதான்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      கவிதைகளின் வரிகளை குறிப்பிட்டு எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தரக்கூடியதாக வரிகளை தெளிவாக விவரித்துக் கூறி, அருமையான பல கருத்துரைகள் தந்து விட்டீர்கள். உங்களது அன்பிற்கு என் மனம் நிறைந்த நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  20. //உன் மனவலி(மை) கண்டும்

    இங்கு வந்திறங்கி உள்ளோம்.

    இலைகள் இல்லாத போதினிலும்

    இவைகளின் அன்புக்கு விலை

    ஏதுமில்லையென உன்

    உள்மனதுக்குள்

    சற்று இறுமாப்புக் கொள்...!//

    இலைகளோ, கனிகளோ எதுவும் இல்லை கொடுக்க என்ற போதும் தன்னை தேடி வந்த அமர்ந்த பறவைகளை கண்டு
    இறுமாப்பு கொள்ளும் , பறவைகளுக்காக மீண்டும் துளிர்க்க வேண்டும் என்ற பலமும் பெறும் அன்பு மரம்.

    இவற்றின் பாச பிணைப்பைப்பார்த்து மழை அன்பை பொழியும் அன்பால் உயிர்கள் தழைக்கும்.

    அற்புத கவிதைகள். அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /இலைகளோ, கனிகளோ எதுவும் இல்லை கொடுக்க என்ற போதும் தன்னை தேடி வந்த அமர்ந்த பறவைகளை கண்டு
      இறுமாப்பு கொள்ளும் ,

      பறவைகளுக்காக மீண்டும் துளிர்க்க வேண்டும் என்ற பலமும் பெறும் அன்பு மரம்.

      இவற்றின் பாச பிணைப்பைப்பார்த்து மழை அன்பை பொழியும் அன்பால் உயிர்கள் தழைக்கும்./

      அழகாக பொருத்தமாக அந்த மரத்தின் நிலையுணர்ந்து
      சொல்லியுள்ளீர்கள். அருமையான வார்த்தைக் கோர்த்தல்.மிகவும் ரசித்தேன்.

      தங்களது கவிதை ரசித்தலுக்கும், விளக்கமான கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி. ஊக்கம் தரும் இந்த மாதிரி கருத்துரைகளை நான் மனம் மகிழ்வுடன் மென்மேலும் ஏதாவது எழுதிக் கொண்டேயிருக்க வேண்டுமென தோன்றுகிறது. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  21. அனைத்து கவிதைகளுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
    நேரம் கிடைக்கும் போது எல்லாம் கவிதை எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      பதிவின் கவிதை கண்டு உங்களது பல அருமையான கருத்துக்களை பதிந்ததற்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன் சகோதரி. உங்கள் அன்பிற்கும், ஊக்கம் நிறைந்த ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  22. படங்களுக்கேற்ற தங்களது கவிதை அருமை.

    க(விதை)க்க எனக்கு
    ஆசைதான் ஆனால் நான் ஸ்ரீராம்ஜி இல்லையே....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      நலமா? தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /க(விதை)க்க எனக்கு
      ஆசைதான் ஆனால் நான் ஸ்ரீராம்ஜி இல்லையே..../

      உண்மை. அதேதான் நானும் பதிவில் சொல்லியிருக்கிறேன்./சொல்லிக்கொண்டேயும் இருக்கிறேன். அது அவருக்கென்றே கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.

      பதிவில் எ(ங்கள்) ன் கவிதைகளையும், ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி சகோதரரே.🙏.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  23. ஆஹா...... காலை நேரத்தில் மனம் மகிழச் செய்யும் பதிவு..... பதிவில் நான் எடுத்த இரண்டு நிழற்படங்கள், அதற்கான கவிதைகள் என பார்த்த எனக்குள்ளும் மகிழ்ச்சி மழை.....

    எப்போதோ நான் எடுத்த நிழற்படங்கள் இன்றைக்கு இங்கே பார்த்ததோடு அந்த படங்களுக்கான கவிதைகளையும் படித்த பூரிப்பில் நான்.....

    அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /ஆஹா...... காலை நேரத்தில் மனம் மகிழச் செய்யும் பதிவு..... பதிவில் நான் எடுத்த இரண்டு நிழற்படங்கள், அதற்கான கவிதைகள் என பார்த்த எனக்குள்ளும் மகிழ்ச்சி மழை...../

      ஆம். எங்கள் நெஞ்சங்களிலும் இரு தினங்களாக மகிழ்ச்சி மழைதான். உங்கள் இரு படங்களுக்கும் இந்தக்கவிதைகளை எழுதி பல வருடங்கள் ஆகி விட்டன. ஆனால், இப்போதைய வெளியீட்டில் அவைகளும் கண்டிப்பாக மகிழ்ச்சி அடைந்திருக்கும். உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி சகோதரரே.

      /எப்போதோ நான் எடுத்த நிழற்படங்கள் இன்றைக்கு இங்கே பார்த்ததோடு அந்த படங்களுக்கான கவிதைகளையும் படித்த பூரிப்பில் நான்..../

      ஆம். இந்தப் பூரிப்பில், சகோதரர் ஸ்ரீராம், சகோதரி கீதாரெங்கன் இருவரும் பல கவிதை மழைகளை பெய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும், உங்களுக்கும் என் மனப்(பூரிப்பான)பூர்வமான நன்றிகள் சகோதரரே. 🙏.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  24. வணக்கம் அனைவருக்கும்

    அனைவருக்கும் என் நன்றி.இங்கு கவிதை மழைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. பதிவின் க(ருத்து)விதை மழைகளிலும் நான் பெருமகிழ்ச்சி கொண்டேன். /கொள்கிறேன் உடனுக்குடன் சென்ற பதிவைப் போல பதில் தர இயலாமல் சில வேலைகள் இச்சமயம் பார்த்து குறுக்கிடுகின்றன. ஊக்கம் தரும் கருத்துக்களை தந்த அனைவருக்கும் விரைவில் பதில் தருகிறேன். அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  25. மிக அழகான கவிதை சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி

      தங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      கவிதை குறித்த உங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete