Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Saturday, February 7, 2026

எலி வளைகள்.

அன்பான வணக்கங்கள் என் சகோதர சகோதரிகள் அனைவருக்கும். 

நான் இங்கு என் (வலைப்பூவில்) பதிவுகள் எழுதி,பல மாதங்கள் ஆகி விட்டது. இந்த வருடம் ஆரம்பம் ஆனதிலிருந்து முதல் ஒரு மாதமும் விரைவாக ஓடி விட்டது. சென்ற வருடம் டிராப்டில் அவ்வப்போது ஏதோ எழுதியது எல்லாம் பாதி,பாதியாக உள்ளது. 

இதில் எதை முடித்து எதை வெளியிடுவது என்ற சலிப்பு ஒருபுறம். தொடர்ந்த மழை, குளிரில், உடம்பு இரண்டு நாட்களுக்கு நன்றாக இருந்தால், தொடர்ந்து இருபது நாட்களுக்கு ஏதோ உபாதையுடன், வாழ்ந்துதான் பார்ப்போமே என்று முடிவு எடுத்ததில் வந்த அலுப்பு ஒருபுறமென நாட்களைத் தள்ளிச் செல்ல, அவை முன்னேறி  மாதங்களாகி விட்டன. 

அப்படியும் சென்ற வருட இறுதியில் சென்று வந்த கோவில்களைப் பற்றி கடவுளின் துணையுடன் ஏதாவது எழுதி இறை நாமத்தில் சற்று உபாதைகளை மறக்கலாம் என மனம் அல்ப ஆசைகளுடன் முடிவெடுக்கும் போதினில், வந்த உபாதை மறைந்து, புதிய பிரச்சனைகள் உருவாகும் போது ஏற்படும் வெறுப்பு  என மாறி மாறி அலைக்கழித்ததில், பதிவுகளை தொட(ர)வே இயலாமல் போக, இப்போது இதை ஒரு முன்னுரையாக எழுதும் போது, ஒரு பாடல் நினைவுக்கு வந்தது./ வருகிறது. என்ன பாடல் தெரியுமா? 

"வேலை செய்ய சோம்பல் வரும். 
வீட்டில் கூட வெறுப்பு வரும். 
வேதனையில் மலரும் பூ என்ன பூ.!!

இதற்கு பதிலை (சலிப்பு) பதிவின் ஆரம்பத்திலேயே எழுதி விட்டேன். 

சரி..! இந்த வருடத்தின் முதல் மாதம் கழிந்தும், மனதுக்குள் ஆர்வமாக எழுவதை இப்படி ஏதும் எழுதாமல், மற்ற பதிவுகளுக்கும் முறையாக போகாமல் முடங்கி இருந்தால், உன்னைச்சுற்றி உன்மீது அபரிமிதமான அக்கறை வைத்திருக்கும்  நட்பு "வளை"யத்தின் ஆதரவை எப்படி தக்க வைத்துக் கொள்ள இயலும்..! இப்படியே இருந்தால் உன் மீது நீ வைத்திருக்கும் மதிப்பு  என்னும் தன்னம்பிக்கை குறைவது மட்டுமின்றி. மற்றவர்களின் அன்பும் குறைந்து போகுமே..! என்ற மன ஆதங்கத்தில்,இவ்வருட முதலில் இறைவனின் துணையாக "தைப்பூச பதிவொன்று" மனதிற்குள் வந்து அதுவும் எழுத்தோடு பதிவாக வாராமல் பாதியிலேயே  நின்று அகன்று போனதும் என் அதிர்ஷ்ட குறைவே..! 

"பதினெட்டு புராணங்கள் 
படைக்கும் முன் வியாசரும்
பணிந்திட மறந்ததை
அறிந்த பின் உதவினே" 

என்று தனது "அண்ணனை" குறித்த அருமையான பாடலை அந்த  "இளையோன்"லேசாக குறிப்பால், என் நினைவில் பகிர, என் மனதில் என்றும் நிலையாக இருக்கும் "முழுமுதற்கடவுளை" துணையாக கொண்டபடி எப்போதோ பாதி எழுதி வைத்த பதிவு இப்போது அரங்கேற தயார் ஆனது. ஏனெனில் "அவர்" அன்போடு அழைத்ததும் வர மறுப்பு  ஏதும் சொல்லாத ஜீவன் அல்லவா இந்தப்  பதிவோடு தொடர்பு உடையது. 

இப்போது என் மனதில் எப்போதும் களைய முடியாத உறுதியான இரும்பு "வலையொன்றை" வீசி கரும்பு  போன்ற இனியவராய் வீற்றிருக்கும் "அவர்," அதற்குப்பின், அவரை தினமும் ஆனந்தமாக சுமக்கும்"வளையோடு" சம்மந்தபட்ட ஜீவனைப்பற்றிய பதிவென்ற ஒன்றையும் பகிர்ந்துள்ளேன். இதை அனைவரும் தவறாது படித்து ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கை, தும்பிக்கையானின் அருளோடு என் மனதில் வருகிறது.🙏. படிக்கும் அனைவருக்கும் என் நன்றி. 🙏. 

  அண்ணனோடு தம்பியும் இணைந்திருப்பது என் விருப்பம் என்றதால்,அவரும் வந்து, தடையேதும் சொல்லாமல் பிரியத்துடன் சேர்ந்து கொண்டார். 


இனி பதிவாகிய, 
எலி வளை. 


முன்பெல்லாம்
 
ஒரு வீடென்றால், அதில் தாய் தந்தை, தந்தையை பெற்ற தாய், தந்தை, தந்தையுடன் பிறந்த அண்ணன், தம்பிகள், அவர்களின் மனைவிகள், அவர்களின் வாரிசுகள் என நிரம்பி வழிந்த குடும்பமாக இருந்தது. இது போக, தாயை சார்ந்தவர்களோ, இல்லை தந்தையின் சகோதரிகளோ , (அவர்கள் குடும்பம் என்ற படகுகளில் ஏறி ஒருங்கிணைந்து பயணிக்கும் போது, விதியினால், துணை இழந்து தடுமாறுபவர்களாக இருக்கும் பட்சத்தில்..) அவ்வப்போதோ, அல்லது நிரந்தரமாகவோ, வந்து இணைந்து இருப்பார்கள். இது அக்கால முறைகளின்படி தாயை சார்ந்தவர்களை விட, தந்தையின் உறவு முறைகளைத்தான் ஊரும், உறவும் ஏதும் சொல்லாமல், ஏற்றுக் கொள்ளும். இதிலும் அக்குடும்பத்தில் ஏகப்பட்ட மனஸ்தாபங்கள் வரலாம், மனச் சஞ்சலங்களும், கருத்து வேறுபாடுகளும், அதனால், சண்டைகளும் வரலாம். ஆனாலும், ஊர் வாய்க்கு அவலாவதை விட மௌனங்கள் சிறந்ததென கருதி, குடும்பத்துடன் அனுசரித்துப் போனவர்கள் பலர். (அனுசரிப்பில் அவஸ்தைப்பட்டு, "போனவர்களும்" பலர்..!:))) ) 

அதன் பின்னர்தான் காலமாற்றங்கள் அவர்களுக்கு தன் நலத்தையும், அதனால் ஏற்படும் சுகபோகங்களையும் சுட்டிக்காட்டி வளர்த்தது. (இதில் காலங்களின் மேலும் தவறில்லை. மாறி வந்த இளைய தலைமுறைகளின் விருப்பங்கள், ஆசைகள்,சுகங்களின் விதையாக மாறி அங்கு சுயநல விருட்சங்கள்  உருவாகின.) குடும்பத்தின் பணத்தேவைகளுக்கு  போதிய வருமானம் ஒன்றே வழியென்பதை சுட்டிக் காட்டி, பல பிணக்குகளை குடும்பத்திற்குள் ஏற்படுத்திக் கொள்ளச் செய்தது. இதனால் குடும்பத்தின் பிணக்குகள் முகம் சுணங்கி காட்டி மட்டும் திருப்பாது, ஒரேடியாக பிரியச் செய்து சந்தோஷபட்டுக் கொண்டது. 

கூட்டுக் குடும்பங்கள் பொருளாதாரம் , அநாவசியமான பிரச்சனைகள், வேலை மார்க்கங்கள் என பிரிவுக்கு ஒரு காரணங்களை எடுத்துக்கூறி, ஒரு நீதிமன்றம் இல்லாத, ஒரு நீதிபதி இல்லாத வழக்காக தன் பொய்யான "மனசாட்சியை" மட்டும் வைத்துக் கொண்டு வழக்காடி பிரிவை பலப்படுத்தி காலத்தின் வேகத்தில் கரை(பிரி)ந்தும் போயின.

அதுமட்டுமா? நகரங்களின் வளர்ச்சியை கண்டு, பச்சைப் பசேலென்றிருந்த சிறு கிராமங்களும், ஒரளவு நகரமாக மாறி தன்னை அலங்கரிக்க கற்றுக் கொண்டன. கிராமங்களை விட்டு  தப்பித்தவறி நகரங்களில் ஒன்றாக வாழ வந்த கூட்டுக்குடும்பங்களும், நாகரீக போக்கின்படி, வாழ ஆசை கொண்டு தனித்தனியாக வாழ்ந்துதான் பார்க்கலாமே என யோசிக்கத் தொடங்கின. 

விளைவு கட்டிடங்களின் பெருக்கம் காரணமாக நகர்ப்புறச் சாலைகளும் திணறியது. சாலை வசதிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மரங்களின் பரிதாப நிலைக் கண்டு, வானம் தன் போர்வையான மழையை எங்கு போர்த்தலாம் என யோசிப்பதற்குள், மழையாகிய அந்தப் போர்வையே அதன் வசமின்றி ஆங்காங்கே விழுந்து தன்னை காயப்படுத்தி கொண்டன.தன்னால் பிறருக்கு எப்போதுமே பயனுள்ளதாக இருக்கும் தன் செய்கையை மறந்து விட்டு தனக்குத்தானே பெரும் அழிவையும் ஏற்படுத்திக் கொண்டது

காலம்  மேலும் உருண்டோட குடும்பங்கள் அவரவர்களுக்கு "தனி வலையானாலும், ஒரு எலி வளை" (அப்பாடா...! பதிவின் தலைப்புக்குள்  ஒரு வழியாக அந்த எலி மாதிரியே நுழைந்தாகி விட்டது.) கண்டிப்பாக அவசியம் என்ற ஸ்திரமான  எண்ணத்துடன் பிரிய ஆரம்பித்தனர். வீடுகள் சின்னதானாலும், தங்களின் சுதந்திரத்தை எண்ணி  மகிழ்வடைந்தவாறு அந்த சின்ன வளை(வீடு)களில்"எலிகள்"மாதிரியே நடமாடி வளைய வருகின்றனர். 

இனி கூகுளில் நான் ப(பி)டித்த வரி(எலி)கள்

எலிகளில் சுண்டெலி, வெள்ளெலி, மூஞ்சூறு, கல்லெலி, சரெவெலி, இந்தியப் பெருச்சாளி, வயல் எலி, வீட்டெலி எனப் பல வகைகள் உள்ளன. இவை தவிர, நார்வே எலி, கூரை எலி, மான் எலி மற்றும் வெள்ளை-கால் எலி போன்ற அமெரிக்காவில் காணப்படும் பொதுவான வகைகளும் உள்ளன. 

வீட்டு எலி: வீட்டில் காணப்படும் எலி வகை.

மான் எலி: அமெரிக்காவில் காணப்படும் பொதுவான எலி வகைகளில் ஒன்று.

வெள்ளை-கால் எலி: அமெரிக்காவில் காணப்படும் மற்றொரு பொதுவான எலி வகை.

நார்வே எலி: கூரை எலியைப் போலவே, இதுவும் வட அமெரிக்க வீடுகளில் காணப்படும் ஒரு பொதுவான வகையாகும்.

கூரை எலி: வட அமெரிக்க வீடுகளில் காணப்படும் மற்றொரு பொதுவான வகை.

பருஞ்சாளி/வங்கு எலி/ வயல் எலி: வயல்களில் காணப்படும் பெரிய எலி வகை.

சுண்டெலி: சிறிய எலி வகை.

வெள்ளெலி: ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் வெள்ளை நிற எலி வகை.

மூஞ்சூறு: மூஞ்சூறு போன்ற தோற்றமுடைய எலி.

கல்லெலி: கல் நிறைந்த பகுதிகளில் வாழும் எலி.

சரெவெலி: சரளைக் கற்களில் வாழும் எலி.

இந்தியப் பெருச்சாளி: இந்தியாவை தாயகமாகக் கொண்ட பெரிய எலி.

வயல் எலி: வயல்வெளிகளில் வாழும் எலி வகை.

எலி வளை" என்பதற்கு ஆங்கிலத்தில் "rat hole" அல்லது "mouse hole" என்று சொல்லலாம். ஒரு பழமொழியின் பகுதியாக இது வரும்போது, "எலி வளையானாலும் தனி வளை வேண்டும்" என்பதற்கு "East or west, home is the best" அல்லது "Every bird must hatch its own eggs" போன்ற சொற்றொடர்கள் இணையாகப் பயன்படுத்தப்படுகின்றன, அதாவது ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான தனி இடம் வேண்டும் என்பது இதன் பொருள். 

Rat hole / Mouse hole: "எலி வளை" என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு இது. 

"East or west, home is the best": "எலி வளையானாலும் தனி வளை வேண்டும்" என்ற பழமொழியின் ஆங்கில இணையாக இது கருதப்படுகிறது. 

"Every bird must hatch its own eggs": இதுவும் மற்றொரு பொருத்தமான ஆங்கிலப் பழமொழி. இதன் பொருள், ஒவ்வொருவரும் தங்கள் காரியங்களை தாங்களே கவனிக்க வேண்டும்.

வசிப்பதற்கான வளைகளைப் பெரும்பாலும் ஆண் எலிகளே அமைக்கின்றன. ஆண் எலிகள் அமைக்கும் வீடுகளை நம்பி வாழ வேண்டியிருப்பதால், பெண் எலிகள் பெரும்பாலும் ஆண் இனத்தைச் சார்ந்தே வாழ்ந்துவிடுகின்றன

எலிகள் வருடத்திற்கு ஐந்து ஈற்றுகள் வரை ஈனும், மேலும் அவை ஒப்பீட்டளவில் குறுகிய கர்ப்ப காலங்களைக் கொண்டிருக்கின்றன, பெரும்பாலான இனங்களுக்கு சுமார் 21 நாட்கள் மட்டுமே ஆகும்.

சராசரியாக, காடுகளில் ஒரு எலி ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை வாழும். பெண் எலிகள் பொதுவாக ஆண் எலிகளை விட அதிகமாக வாழ்கின்றன

நன்றி கூகுள்.

இந்த எலிகளிலும், ஆண் எலிகள்தாம் தன் ஆளுமையை பெண் எலிகளிடம் காட்டுமாம்.(அட..! வியப்புத்தான்..!) தன் அடக்கு முறையில் பெண் எலிகள் இருக்கவேண்டும் என விரும்புமாம். இரவில் இவைகளுக்கு கண் பார்வையும், காது கேட்கும் திறனும் அதிகமாக இருக்கும். தன் வழியான பாதையை இரவில் கூட தவற விடாது, இரவானால் புத்திசாலிதனமாக ஒரே பாதையை நினைவில் வைத்தபடி கடந்து சென்று உணவு தேட தொடங்கி விடும். 

என்ன..!! அன்றாடம் அதன் உணவை மட்டும் நாடித் தின்றால் பரவாயில்லை...! அட்டை, பேப்பர் மரச்சாமன்கள், வயர்கள் என பாரபட்சமின்றி, கொரித்து பாழ் பண்ணும் அளவுக்கு மோசமான விலங்கு இந்த எலிகள். அதைச்சொல்லியும் குற்றமில்லை. அதன் பற்களின் வளர்ச்சிகள் இப்படிச் செய்ய அதனை  தூண்டுகிறது. எதையாவது  கொரித்தால்தான் அதன் பற்கள் நல்ல  ஆரோக்கியமாகவும்,மேலும்  நீண்டு  வளராதும் இருக்குமாம். 

(நாம் சின்ன வயதில் சரியாக சாப்பிடாமல் சாப்பாட்டை கைகளால், அளைந்து  கொண்டேயிருந்தால், "என்ன இப்படி எலி மாதிரி கொரிக்கிறாய்..? சரியாக சாப்பிடு. கொஞ்ச நேரத்தில் மீண்டும் பசிக்கிறது என்பாய்..!!" என்று நம் வீட்டுப் பெரியவர்களிடமிருந்து திட்டுக்கள் விழும். "இப்போது நல்லா வயிறு முட்ட திங்காதே..! கொஞ்சமாக, கடித்து மென்று சாப்பிடு. அப்போதுதான் உடம்புக்கு ஆரோக்கியமென" ஆயிரம் அட்வைஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன.ஒரு விதத்தில் அதுதான் மாபெரும் உண்மையும் கூட." நொறுக்கித் தின்றால் நூறு வயது" என்பதை அக்காலத்தவர்களே சொல்லியுள்ளார்களே ..!! ஆனால், இப்போது நொறுக்கு தீனிகள்தான் அவ்வப்போது உணவாகிப் போகிறது. 

அதைப் போல சாதத்தை விட டிபன் வகையறாக்கள்தான் இப்போதைய குழந்தைகளுக்குப் பிடித்தமானதாக ஆகி விட்டது. அதிலும், ஜங்க் ஃபுட்கள் பிரபலமாகிப் போனதில், அதையைத்தான் விரும்புகின்றனர். 

ஆக, அந்தக்காலம் போல சாதம், சாம்பார், காய்கறிகள் ரசம் தயிர் என முறையாக உணவருந்த இப்போது எவருக்கும் பிடிக்கவில்லை. அதை தினமும் தொடர்ந்து செய்யவும் ஒருவருக்கும் மனமில்லை. எலிகளைப் போல சுதந்திரமாக இருக்க விரும்பியே, தங்களுக்கென இப்படி ஒரு "எலிவளைகளை" உண்டாக்கிக் கொள்கிறார்கள். 

அதற்கு தகுந்தாற் போல், படிப்பும், அதற்கேற்ற வேலைகளும் ஒரு சுதந்திரமாகி போனது. வெளிநாடுகளும்,வாழும் நாடாக சகஜமாகிப் போனது. அப்போது குடும்பத்தில் இவ்வாறு பிரிவதற்கு மனமில்லாமல் இருந்தவர்கள், குடும்பத்தில் பிரிவினையை ஏற்க முடியாமல் மன உளைச்சலில் உழன்றவர்கள் காலப்போக்கில், தங்களை பக்குவபடுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். "உன் வழி எதுவோ அதில் நீ பயணித்து விடு." என பச்சைக்கொடியை இளையதலைமுறைகளும், முதியவர்களும் கைகோர்த்து ஆட்டி காண்பிக்க பிரிவதற்கு எவ்விதத்திலும் தயக்கமில்லாதவர்களாக மனதளவில் மாறி விட்டனர். இனி எலிகளுக்கு இடமில்லாதவாறு மனித "வளைகளான" வீடுகள் அடுக்கடுக்காக உற்பத்தி ஆனதை/ஆவதை எப்படி தடுக்க இயலும்..!

நிஜமான எலி வளை, எலிகளின் நடவடிக்கைகள், தகவல்கள் என என் பதிவுக்கு உதவியது கண்டு பொறாமை கொண்டு  மனித எலிகளும் வந்துதவியது அந்த எலிகளுக்கே சற்று ஆச்சர்யத்தை உண்டு பண்ணியிருக்கும்..!!! நன்றி அனைத்து எலிகளுக்கும். 


எலி படத்திற்கும் கூகுளுக்கு நன்றி. . 

Friday, August 15, 2025

நாங்களே எங்களைப் பற்றி...!

 முருகா.. முத்துக்குமரா.. வேலவா... 

இந்த வருடம் ஆடி மாதத்தில் மிகவும் விஷேடமாக இரண்டு கிருத்திகை நட்சத்திரம் வந்திருக்கிறது இரண்டிலுமே முருகப்பெருமானின் கோவில்களில் பக்தர்கள் அபிஷேகம், ஆராதனை, காவடிகள் எடுப்பதென பூஜைகள் செய்து, விரதமிருந்து  கொண்டாடி வருகின்றனர்.ஒரு சில பிரபல  கோவில்களில் மாதத்தின் முதலில் வந்த கிருத்திகையன்றும், சில பிரபல கோவில்களில் நாளையும் என பக்தர்கள் பக்தியுடன் முருகனை போற்றித் துதித்து  கொண்டாடுகின்றனர். 

மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரமே நம் முருகனுக்கு உகந்த நாள் என்றால், ஆடி மாதமும், தை மாதமும் வரும் கிருத்திகை மிகச்சிறந்தது என அனைவரும் அறிந்ததே..! தமிழ் வருட முதலில் வரும் ஆடி மாதத்தில் ஆடிக்கிருத்திகை தட்சிணாயண புண்யகாலத்தில் வருகிறதென்றால் மற்றொன்று தைக்கிருத்திகை உத்திராயண புண்யகாலத்தில் தை மாதத்தில் வருகிறது என்பதும் அனைவரும் அறிந்ததே. 

சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் சரவண பொய்கையில் இருந்த ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக மாறின. இந்த ஆறு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பு ஆறு கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முருகப் பெருமானை வளர்த்தெடுத்ததால் சிவ பெருமான் இவர்கள் ஆறு பேரையும் சிறப்பிக்கும் விதமாக அவர்களை கார்த்திகை நட்சத்திரமாகவும், அன்றைய நாள் முருகனுக்குரிய விரதமாக போற்றப்படவும் வரமளித்தார். அதனால் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனை வேண்டிய விரதம் இருந்தால் கார்த்திகை பெண்களின் அருளாளும், முருகப் பெருமானின் அருளாளும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.



ஆறுமுகமும், அழகிய விழிகளும், நீண்ட புருவமும், நீறிடும் நெற்றியும், பன்னிரு கண்களும், பரந்த தோள்களும், பவளச் செவ்வாயும் பார்த்தால், பார்த்த உங்களின் பார்வையை அகற்றத் தோன்றாமல், இருக்கச் செய்யும் முருகப் பெருமானாகிய நான். ..! 
முருகன் என்றால் அழகன் என்ற மறு சொல்லும் எனக்குண்டு. அந்த அழகில் மயங்கி என்னை நாடி வரும் உங்களை நிலைத் தடுமாறி விடாமல் அணைத்துக் கொள்வதே என் தந்தை, தாய், நான் தோன்றிய நாள் தொட்டு எனக்கிட்ட கட்டளை. அதன்படி நான் நித்தமும் செயலாற்றி வருகிறேன். 


எங்கள் இறைவனின் கையிலிருக்கும் வீரம் மிகும் வேலும் மயிலாகிய நாங்களும் உங்களுக்கு என்றுமே துணையென  இருப்போம். வாருங்கள்..! அந்த கந்த வேளின், அவர் கையில் நிரந்திர வாசம் செய்யும் வேலோடு தரிசனம் பெறலாம். அதற்காகத்தான்,  இந்த வரவேற்புக்காகத்தான் கோவிலின் வாசலிலேயே நாங்கள் தினமும்  காத்திருக்கிறோம். 


இதோ..! கோவிலுக்கு முன்பாக முகஸ்துதி கூறி, வரவேற்ற என் தம்பியின் வாகனமான  மயில்களை கடந்து பல படிகள் ஏறி  வந்ததும் நான்தான் பஞ்சமுக கணபதி என்ற பெயருடன் இங்கே குடிக் கொண்டுள்ளேன். என் தம்பி கந்தனுக்கு நான் எப்போதுமே ஒரு பக்கபலம். அவனை நாடி, தேடி வரும் பக்தர்கள் என்னைத்தான் முதலில் வழிபட வேண்டுமென்பது அவன் விருப்பம். அவன் சொல்லுக்கு மறுப்பேதும் சொல்லாதபடிக்கு என்னை அவனது  அன்பினால் கட்டி வைத்திருக்கும் ஆசைமிகும் தம்பி அவன். அவனுக்காக இங்கு நான்தான் முதலில் அமர்ந்துள்ளேன். 


என்னை நீங்கள் மதித்தாலும் சரி, மிதித்தாலும் சரி, அதைக்குறித்து சற்றும் கவலைப்படாமல், சந்தோஷமாகவே உங்களை எங்களின் தெய்வமான முருகனிடம் கொண்டு சேர்த்து  அவனருளை நீங்கள் பெற உதவுவேன் அதற்கெனவே அமைக்கப்பட்ட நான் இப்பிறவியில் என்ன புண்ணியம் செய்திருக்கிறேனோ..! "எனக் கூறும் அழகான படிக்கட்டுகள் நாங்கள். 

ஆனால் ஒன்று "படியாக நான் மாற வேண்டும். மெய்யடியார்கள் திருப்பாதம் முத்தாட வேண்டும்." என்ற பாடலின்படி என்றும் எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும்,இப்படி படிகளாக மட்டும் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம்." 


உங்களுக்கு படியேற உதவிய நாங்கள் மலையில் குடிகொண்டிருக்கும் என்னப்பன் முருகனை சந்தித்து அவரை தரிசித்த மகிழ்வோடும், நிம்மதியுடனும், இறங்கி வரவும், (உங்களை இறக்கி விடவும்) என்றென்றும் உதவியாக இருக்கிறோம். 

எனக்கு காவலாக எப்போதும் என் நலனுக்காக என்னுடனே இருக்கும் என் அண்ணனுக்காக மலை மேலேயும் அவர் அமர்ந்து  கொண்டிருக்கும் சன்னதியின் விமானம் இது..! 


ஐயனும் அம்மையும் என்றுமே என்னருகில்தான். தந்தையின் துணையுடன், தாயின் அரவணைப்புடன் இங்கு எப்போதுமே என் ராஜ்ஜியம். 


கொடிய அசுரர்களை அழிக்க எனக்கு வேல்  வழங்கி, ஆசிர்வதித்த எங்கள் தாயின் ஆயுதமான சூலமும், அதனுடன் இணைந்து, தந்தையின் கையில் இணை பிரியாது அமர்ந்திருக்கும் உடுக்கையையும் கொண்டு, அனைவரின் கண்கள் கவரும் வண்ணம் சேர்ந்து செய்து அமைக்கப்பட்டதால், இது இந்த கோவிலையே அழகுறச் செய்து பெருமிதப்படுத்துகிறது. 


இது தந்தை, தாயின் அடையாளம். "வேலுண்டு வினையில்லை" என என்னை நீங்கள் குறிப்பிடுவது போல், "சூலமும், உடுக்கையும்" , அவர்களின் கையிலிருக்கும் வரப்பிரசாதங்கள். அவர்களை பக்திப் பா(பரவ)சத்தோடு வழிபடும் போது, உங்கள் முற்பிறவியின் சூழ்நிலைகளால்,  உங்களுக்கு வரும் துன்பங்களையும், துயரங்களையும் இந்த "உடுக்கை" அடித்து நொறுக்கி, விலக்கி வைக்கும். உங்கள் தீவினைகளை குறித்தந்த பயங்களை அந்த "சூலமும்" அச்சமின்றி போகுமாறு அகற்றி அப்புறபடுத்தும். அதைக் குறிப்பிட வேண்டியே அவர்கள் இந்த ஆயுதங்களை கையிலேந்தி உங்களை அன்போடு காத்து வருகிறார்கள். 


இது தந்தை, தாயின் இருப்பிடம்/ வசிப்பிடம். முதலில் மலையேறும் போதே கீழே அண்ணனை தரிசித்த கையோடு, பிறகு படியேறி அப்பா, அம்மாவை கண்டு மகிழ்ந்து பிறகு என்னைப் பார்க்க வருவதுதானே முறை. என்ன சொல்கிறீர்கள்.? 


இமயமலையைப்  போன்ற அமைப்போடு பக்தர்கள் உருவாக்கி தந்திருக்கும் இந்த இடத்தை காணும் போது எங்கள் தாய் தந்தை அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். 
 

கொஞ்சம் என் இருப்பிடத்தை சுற்றியுள்ள இயற்கையையும் உங்கள் ரசனைப்படி ரசித்து விட்டும் வரலாம். 


இதோ..! மலை மேலேயும் என்னருகில் அண்ணன் கணேசன் ஆசையுடன் குடி கொண்டுள்ள இடம். அவரை காணாது அப்படியே என்னிடம் வருவதற்கு நானும் விரும்ப மாட்டேன். எனவே அவரை பிரியத்துடன் வணங்கி பின் அவர் ஆசைப்படி அவர் சன்னதியை ஒரு சுற்றுச் சுற்றி விட்டு மேலே வாருங்கள். 


"என் அண்ணன் இல்லாமல் நானா? எங்கும் எத்திசையிலும், எத்தனை விதமான வடிவங்களுடன் அவர் என்னைச் சுற்றிலும் தெரியுமா?" என்ற சந்தோஷமும் எப்போதும் எனக்குண்டு. 


எத்தனை விதமான வடிவங்களில் அவர். "பிடித்து வைப்பதெல்லாம் பிள்ளையார்" என்ற சொல்லுக்கு ஏற்றபடி அவர்  பக்தர்களின் கைவண்ணங்களினால் விதவிதமான வடிவெடுத்தபடி என்னருகில் அமர்ந்திருக்கிறார். 


எத்தனை முறை சுற்றி வந்தாலும், எந்த வடிவத்திலும் அவரைக்காண வரும் பக்தர்கள் சலித்துக் கொள்வதில்லை. என்பது நிஜம். என்னைச் சுற்றிலும் அவர்தான் ஆர்வத்தோடு, அங்கிங்கெனாதபடி ஆக்கிரமித்திருக்கிறார். 


சற்று மேலே அண்ணாந்து பார்த்தால், இதோ..! என் ஆறுபடை ஸ்தலங்கள் அழகாக வரையப்பட்ட  உருவங்களோடு ஒன்றிணைந்த  ஓவியங்கள்


ஆறுபடை ஓவியங்கள். 


ஆறுபடை ஓவியங்கள். 


ஆறுபடை ஓவியங்கள். 


மலை மேலேறி, கோவிலின் பல இடங்களை சுற்றியப் பின்னர் என் கருவறை தரிசனமும் உங்களுக்கு இல்லாமலா?  வள்ளி, தெய்வானையின் ஆசிகளோடு என் பரிபூரண ஆசிகளும் என்றும் உங்களுக்காக....!


இக்கோவிலை குறித்த தரிசன பகிர்வு முருகன் அருளால், இன்று என் பதிவில் வடிவுகொண்டு வந்தமை(வந்தமர்)ந்ததும் நிச்சயமாக ஒரு தெய்வ சங்கல்பந்தான்.  இப்பதிவின் மூலம் அனைவருக்கும் ஆடிக்கிருத்திகை முருகனின் தரிசனமும் பரிபூரணமாக கிடைத்திருக்குமெனவும் "அவனருளால்"நம்புகிறேன்.🙏. 

அண்ணனோடு என்றும் உறைபவா சரணம்.🙌. 
முருகா சரணம். 🙌
முக்கண் மைந்தா சரணம்.🙌
உமையவள் குமரா சரணம்.🙌
கார்த்திகை பாலா சரணம்.🙌
சரணம். சரணம். சரணமப்பா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Sunday, March 30, 2025

இட்லிகளின் ராஜ்ஜியம்.

இன்று உலக இட்லி தினமாம்.

(30.3. 25.) 

நம் அன்றாட பாரம்பரிய உணவில் இந்த இட்லி எப்போதும் சிறப்பு மிக்கவைதான்..! ஒரு காலத்தில் அதற்கென்று ஒரு பிரத்தியோகமான தனி மரியாதை இருந்தது. ஒருவருக்கு உடம்புக்கு முடியவில்லையென்றால்,அவரை  குணப்படுத்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, "டாக்டர் மருந்துடன் நோயாளி ஆகாரமாக என்ன சாப்பிடலாம்?" என்ற கேள்விக்கு அக்காலத்திய மருத்துவர்கள் முதலில் இட்லியைத்தான் நல்ல உணவாக பரிந்துரைப்பார்கள். (பிறகு காஃபி, கஞ்சி.) (ஆனால், இட்லியை கண்டாலே முகம் சுளித்து எரிச்சல் அடைபவர்கள் இப்போது நிறைய பேர்.) அதுபோல் இப்போது  மருத்துவர்களும், "என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம்.." எனக் கூறத் தொடங்கி விட்டனர். ஏனெனில் இட்லியை புறந்தள்ளி நிறைய வெரைட்டி உணவுகள் வீட்டிலேயே இப்போது முதலிடத்தை பெறத் துடித்து வெற்றி கண்டு விட்டதால், இட்லி அவர்களுக்காக  கொஞ்சம் பெருந்தன்மையுடன் நகர்ந்து வழி விட ஆரம்பித்து விட்டது. ஆயினும் இன்னமும், பல பெரியவர்களிலிருந்து சில குழந்தைகள் வரை இட்லியை விரும்பி சாப்பிடுவதையும், சில உணவகங்களில் பார்த்திருக்கிறேன்.

இந்த இட்லிக்கு ருசியாக அரைப்பதில் அந்த காலத்தில் கல்லுரலுக்கு பெரும் பங்கு இருந்ததது. அப்போதெல்லாம் சிலர் வீட்டில் தினமும் இட்லிக்கு அரைப்பதை ஒரு வழக்கமாக வைத்திருந்தனர். ஒரு குறிப்பிட்ட மாலை நேரத்தில் கல்லுரலின் "கடமுடா சத்தம்" ஒவ்வொரு வீட்டிலும் முழங்கும். (எங்கள் பிறந்த வீட்டில் எங்கள் அம்மா காலையிலேயே இட்லிக்கென அரிசி அளந்து ஊற வைத்து விடுவார்.) வீட்டில் தினமும் காலை அக்கப்போர்கள் ஏதுமில்லாத, ஆனால், போரடிக்காத இட்லிதான். வாரத்தில் ஒருநாள் அது தோசையாகவோ, பருப்புகள் சேர்த்தரைத்து அடையாகவோ மாறினால், அது அதிசயம். ஏனெனில் இட்லி எளிதில் ஜீரணமாகும் ஒரு உணவு (வஸ்து.) என்பதால், அதுதான் அப்போதைய குழந்தைகள், பெரியவர்களென வீட்டிலிருக்கும் அனைவருக்கும் உகந்ததாக இருந்தது. . 

நாளடைவில், தினமும் இட்லிக்கு அரைத்து செய்வது அனைவருக்கும் பெரும் சோம்பலாக தோன்றியதால், வேறு ஏதாவதை காலை சிற்றுண்டியாக மாறுவதற்கு வாய்ப்புகளை தந்தனர். அதற்கு பிற தானியங்கள் சந்தோஷமாக சம்மதிக்க, அவற்றின் உதவியுடன் உப்புமாக்கள்,  தோசைகள், சப்பாத்தி, பூரியென அவைகள்  பூரிப்புடன் வலம் வந்தன. எனினும் காலை நேரத்தில் இட்லியின் சௌகரியம் பிடித்து போன பிறகு மற்ற உணவுகளை தயாரிக்கும் போது ஏற்படும்  சிரமங்கள் கண்டுணர்ந்ததில் வீட்டில் பெண்கள் அனைவருக்கும் சிறிது முகம் கோண செய்தது. 

பிறகு மாவரைக்கும் பெரிய, கனமான கிரைண்டர்( யந்திரம்) வந்தது. அது வீட்டுக்கு வீடு அவ்வளவாக பரவாத காலத்தில், ஒரு சிறு கைத் தொழிலாக பலருக்கும் வேலை வாய்ப்பைத் தந்தது. வீட்டின் ஒரு இடத்தில் நாலைந்து மெஷின்கள் வாங்கி போட்டுக் கொண்டு மாவரைத்து கொடுப்பதில் மக்கள் வீட்டிலிருந்தபடியே கொஞ்சம் வருமானமும் பார்த்தனர். 

காலை நம் வீட்டில் இட்லிக்கு தேவையான அரிசி, பருப்பு போன்றவற்றை ஊற வைத்து, மதியம் அங்கு கொண்டு தந்தால், அன்று மாலை/ இரவுக்குள் இட்லி மாவு வீட்டில் வந்து சேர்ந்து தயாராகி, மறுநாள் காலை உணவுக்கு அது இட்லியாக வரும் இந்த விந்தை அனைவருக்கும் பிடித்துப் போனதில் மறுபடியும் வெற்றிக் கரத்துடன் இட்லிகள் கொடி பிடிக்க ஆரம்பித்தன. 

பின்பு வீட்டுக்கான அளவுடன்  சின்னதாக, நவீனமான பல மாவரைக்கும் யந்திரங்கள் வந்த பின் அதில் வீட்டிலேயே கொஞ்சமாகவோ, இல்லை இரண்டு, மூன்று நாட்களுக்கெனவோ இட்லி மாவு தயார் செய்து குளிர் சாதன பெட்டியில் பாதுகாத்து, மக்கள் பயனுற ஆரம்பித்தனர். 

அதன் பின் வந்த காலகட்டத்தில், அவ்விதம் அதைச் செய்யவும் நேரமில்லாமல், நேரங்களுடன் போராடுகிறவர்கள், உடல் நிலைகள் முடியாதவர்கள் என பலரும்  பாக்கெட்டுகளில், தயாராகி வரும் மாவு வாங்கி அதில் இட்லி, தோசை என்ற பயன்களை கண்டனர். எப்படியும் இட்லிகளின் ராஜ்ஜியம் தரையிறங்கவில்லை. 

"பட்டனை தட்டினா இரண்டு இட்லியுடன், கெட்டி சட்னி வர வேண்டும்" என்ற அந்தகாலத்தில் கலைவாணர் என். எஸ் கிருஷ்ணன் , அவர் மனைவி டி. ஏ மதுரம் அவர்கள் பாடிய நகைச்சுவை பாடல் இன்று பொய்த்துப் போகாமல், மெய்யாகி வருகிறது. இட்லி அரிசிக்கோ ,அதை அளவுடன் ஊற வைத்து பக்குவமாக அரைக்கும் மாவுக்கோ, என எதற்கும் கவலைபடாமல், பட்டனை தட்டினால் பறந்து வரும் இட்லிகள் வந்து விட்டன. (அது எப்படியிருக்குமோ என நான் இன்னமும் பரிசோதிக்கவில்லை.) சாப்பிட்டவர்களுக்குத்தான் அதன் சுவையும், தரமும் புரிந்திருக்கும். இது மனித சோம்பலின் கடைசி படிக்கட்டை எட்டிய விஞ்ஞான யுக்தியின் முயற்சி என நினைக்கிறேன். விஞ்ஞான வளர்ச்சியை இப்படியெல்லாம் வருமென கற்பனையில் பாடி, பேசி நடித்த அவர்களின் (கலைவாணர், அவர் மனைவி) பேச்சுக்கள் உண்மையாகி விட்டது. 

அனைத்து உணவகங்களிலும், மற்ற உணவுகளோடு, இட்லி, சட்னி, சாம்பார், இட்லிமிளகாய்பொடி தடவிய நெய் இட்லி, நம் விருப்பப்படி சிறு துண்டுகள் செய்த லேசாக வறுத்த ப்ரைடு இட்லி, வெங்காயம், காய்கறிகளுடன் இணக்கமான காய்கறி மசாலா இட்லி, சாம்பாரில் தோய்ந்த மினி நடனமாடும் மினி இட்லிகள் என்ற பல விதங்களோடு இட்லிகள் இன்னமும் பவனி வந்து கொண்டுதான் உள்ளது. 

இட்லி ரவையுடன் உளுந்து மாவை அரைத்து சேர்த்து செய்யும் இட்லிகள் சிலசமயம் ருசியாக அமைவதில்லை. எப்போதும் போல் இட்லி அரிசியை ஊற விட்டு அரைத்துச் செய்யும், இட்லிகள் என்றுமே சோடை போனதுமில்லை. இன்றும் இட்லியின் சிறப்புக்காகவே பிரபலமான உணவகங்கள் உள்ளன. 

இன்னமும் இந்த இட்லிகளின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இட்லி தினம் என்ற ஒன்று  முடிந்து விடும் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன்

எப்படியோ உலகில் வந்த நாள் முதல் நம்முடன் இணைபிரியாது அன்று தொட்டு, இன்று வரை இணைந்து வரும் பாரம்பரியமான இட்லிகள் என்றும் வாழ்க...! 

இந்தப்பதிவை ரசித்துப் படிக்கும் சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பான நன்றிகள். 🙏. 

Wednesday, March 19, 2025

விதி வலியது.

அகோ வாரும் பிள்ளாய்..! அதாகப்பட்டது இந்த விதி ரொம்பவே பலமானது...!வலியது..! வலிமையானது..! உண்மைதானே..! 

அந்தக்காலத்தில் தேவர்கள், இறைவனார்கள், முதற்கொண்டு, செல்வ செழிப்புடன் சிறப்பாக கொடி கட்டி வாழ்ந்த அரசர்கள், பக்குவப்பட்ட மாந்தர்கள், மகான்கள் என அனைவரையுமே "விதி" என்பது தலைகீழாக புரட்டி எடுத்து விட்டு சந்தோஷமடைந்திருப்பதை எத்தனை புராணங்களில், பழங்கால கதைகளில் பார்த்துள்ளோம். "விதி வலியது. அதை வெல்ல இயலாது என்று கூறும் போது சமயங்களில், நம் மதியில்னால்தான் ஒரு செயல் நடந்தது/நடக்கிறது/ நடக்கப் போகிறது என சிலர் பெருமை கொள்கிறார்கள். ..! இது அசட்டுத்தனமல்லவா..! என எனக்கு எப்போதும் தோன்றும்." விதியை, மதியால் வெல்வதற்கு, அந்த விதியும் சற்று  வளைந்து தந்தால்தான் அது (அதாவது நாம் நினைத்த மாதிரி ஒரு செயல் நடப்பதென்பது...! ) நிறைவேறும். இது காலங்காலமாய் செயல்பட்டு வருவதல்லவா..? 

சரி இப்போது இந்த "விதி" புராணம் எதற்கென்றால், தினமும் ஒரு செயல் அது பாட்டுக்கு தேமேன்னு நடந்து கொண்டிருக்கும் போது, அது மாறுபட்டால், அதன் பெயர் "விதி"யின் செயல்தானே...! 

சென்ற புதனன்று காலை உணவு முடிந்ததும், மதிய சாப்பாட்டிற்கு சுத்தம் செய்து பாலக் கீரையை அரிந்து கொண்டிருந்த போது,  இயற்கை அழைப்பிற்கு கட்டுப்பட்டு குளியலறைக்கு சென்றவள், கால் அலம்பி வெளியேறும் போது, அந்த ஈர கால்களோடு, என்  (விதியின்) செயல்பாடும் உடன்பிறப்பாக வந்து சேர்ந்து கொள்ளுவோமென்று சற்றாவது அந்த "விதி" எச்சரித்திருக்க கூடாதா? (அதற்குதான் பேச தெரியாதே..! செயல்பாட்டில் மட்டும் தன் வேகத்தை காட்டி விட்டு சந்தோஷபட்டுக் கொள்ளும்.) விளைவு, படி தாண்டி கால் வைத்து, ஈரக்கால் வழுக்கியதில், கீழே கோணலும் மாணலுமாக விழுந்ததில் பல இடங்களில் நல்ல அடி எனக்கு மட்டுந்தான். (அப்போது குளியலறை  வாசலில் இருக்கும் மிதியடியில் கால் வைத்து நான் கால்களின் ஈரம் ஆற்றக்கூடாதா என உங்களுக்குத் தோன்றும். ஆனால், அந்த மிதியடியும் அப்போது விதியின் பக்கம் பலமாக சாய்ந்து அப்புறப்படுத்தபட்டிருந்தது...) எனக்கு காதில் விழாது என்ற சந்தோஷத்தோடு, அந்த "விதி" கைகொட்டி சிரித்திருக்கும் 

அத்தோடு "அப்போது வீட்டில் யாருமில்லை.. அனைவரும் அவரவர் வேலையாக வெளியில் சென்றுள்ளனர் என்ற தைரியமும் அதன் (விதியின்) கூடுதல் சந்தோஷம்." ஆங்காங்கே பட்ட அடிகள்... அடிகளுக்கு கிடைத்த வேதனை என்ற பரிசுகளோடு நான் எழவே சிறிது நேரம் பிடித்தது. மெள்ள தைரியத்தை வரவழைத்துக் கொண்டு (உனக்கு மட்டும்தான் தைரியமா? எனக்கும் சிறிதளவு இருக்கக் கூடாதா..? என்று கண்ணுக்கு மறைவாக இருக்கும் விதியுடன் பேசியபடி சிரமத்துடன் எழுந்தேன்.) அப்படியே சிறிது நேரம் சமையலை புறக்கணித்து அவர்களுடனே வெளியில் சென்றிருந்தாலும், விதி வெளியிலேயே ரோடில் வழக்கப்படி விழவைத்து, வேறென்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்குமோ. .? என அத்தனை வலியிலும் நினைத்துக் கொண்டேன். 

ஹாலுக்கு வந்தவுடன், உடனே கைவசம் இருக்கும் அயோடக்ஸ், நீலகிரி தைலம் என மருந்துகளை தேடி எடுத்து எனக்கு கிடைத்த வெகுமதிக்கு கூலியாக்கினேன். கால் மணி நேரம் வலிகளை,எங்கெங்கு என நிர்மாணித்து / தீர்மானித்து உபயோகிக்கும் போது,  "நல்லவேளை..! ரத்த காயங்களை தராமல், பிசகு, குளியலறை படியில் இடுப்பு, மூட்டு என அடிபட்ட கடுமையான வலியை மட்டும் தந்தமைக்கு, இறைவனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டேன்." 

மேலும், ஒரு கால் மணி நேரம் அமர்ந்திருத்து விட்டு பின், கைகளை சுத்தம் செய்து கொண்டு பாக்கி நறுக்காமல் இருந்த "பாலக்கை" பொடிதாக அரிந்து கடாயில் கொதிக்க வைத்து, ஏற்கனவே வெந்திருந்த பாசிப்பருப்புடன் கூட்டு செய்ய ஒரு தேங்காயையும் உடைத்து துருவி மிக்ஸியில் அரைத்து சேர்த்து கூட்டாக்கி விட்டு. குக்கரில் சாதத்தையும் வைத்து விட்டு நிமிர்ந்தால், நிமிரவோ, குனியவோ முடியாமல், பின் இடுப்பு வலி (முதுகு தண்டின் அடிபாக எலும்பு.) அதிகமாக தெரிந்தது. கூடவே, வலது கால் மூட்டு, வலது கால் பெருவிரலோடு சேர்ந்து கால் பாதம் என அனைத்து இடங்களும், சுளுக்கு வீக்கம், வலி என போட்டிப் போட்டுக் கொண்டு "விதி"தன் வெற்றியை கொண்டாட ஆரம்பித்தது. 

ஆகா..! வெளியில் சென்றிருந்தவர்கள் வந்தால், "கவனமாக இருக்க வேண்டாமா." என்ற திட்டு வேறு கிடைக்குமே என்ற படபடப்பில், நேரங்கள் நகர்ந்து அவர்கள் வரவும் ஆயிற்று. 

வெளியிலிருந்து வந்தவர்களிடம், விதியின் விளையாட்டை விவரித்தப்பின், வலிகளின் கோர முகங்களும் மூன்று நாட்களுக்கும் மேலாகவே கடுமையுடன் தொடர்ந்தன. நீ.கி,தைலம், அயோடக்ஸ் போன்ற தொடர்ந்த மருந்தோடு, வெந்நீர், ஐஸ்பாக்ஸ் ஒத்தடங்களோடு எனக்கு தினமும்  பெரும்பாலும் மன  ஆறுதலை தந்தது உங்கள் அனைவரின் பதிவுகள்தாம்...! அனைவரின் பதிவையும், படித்து கருத்திட்டு என் வலிகளை தாங்கினேன் என்றால்  அது மிகையல்ல..! நிஜமான உண்மை. 

எப்போதும் போல் ஐந்தாறு  நாட்கள் நொண்டியடி நடந்து என் கடமைகளை செய்து கொண்டேதான் இருக்கிறேன்.  பழைய வலி இல்லாத நாட்களை மீண்டும் எதிர்பார்த்தபடி...!  

வந்து விடும் அந்த வலியில்லாத நாட்கள்.. ஏனெனில், நம் உடலை, நம் உடலே சரி செய்து கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு இறைவன் தந்த ஒரு வரம். அந்த வரம் என் வாழ்வின் இறுதி வரை தொடர வேண்டுமெனவும் இறைவனை அன்போடு பிரார்த்திக்கிறேன். 

பதிவின் முதல் வரிகள் எத்தனை உண்மையானதென இப்போது கூறுங்கள்

இப்போது சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவை படித்துப் பார்த்ததும், அவர்களுக்கு ஏற்பட்ட விதியின் உபத்திரவங்களை எண்ணி மனம் மிகவும் வருத்தப்பட்டது. தீடிரென எதிர்பாராமல் விளைந்த அவரின் கால் வலியும், வேதனையும் விரைவில் சரியாக வேண்டுமென இறைவனிடம்  பிரார்த்தனைகள் செய்து கொண்டேன். 

ஒருவரின் பிரார்த்தனைகள் கண்டிப்பாக  அவரின், மற்றும், மற்றையவர்களின் உடல், மன நலன்களை குணப்படுத்தும் என்ற நம்பிக்கை (இன்று எ. பியிலும் கேள்வி பதிலில் இது இடம் பெற்றுள்ளதை படித்தேன்.) எனக்கு நிச்சயம் உண்டு. 

இன்றோடு எட்டு நாட்களும் கடந்து கொண்டிருக்கிறது. ஏனோ உங்களிடமும் இதை சொல்ல வேண்டுமென தோன்றியதால், இரண்டு நாட்களுக்கு முன்பு எழுதியதை இப்போது நிறைவு செய்து  இங்கு பகிர்கிறேன்.

படிக்கும் நட்புறவுகள் அனைவருக்கும் அன்பான நன்றிகள் .🙏

Thursday, November 7, 2024

கந்த சஷ்டி.


உலகத்தை காத்து உலக மக்கள் அனைவருக்கும் அருள் பாலிக்கும் சிவபெருமானின் கோப கனலில் இருந்து தோன்றியவர் "முருகப் பெருமான்" என்பது நாமறிந்த விஷயம். 

அவரின் குழந்தை ஒருவரால்தான் தேவர்களை சித்ரவதைபடுத்தும் அசுரர்களை வதைக்க முடியும் என்ற காரணத்தால், அவரின் மோனதவத்தை  கலைத்து, அவர் மீது தன் மலர் அம்பை ஏவி,அவரின் கோபத்தை தூண்டிய மன்மதன் அக்கணமே எரிந்து சாம்பலானாலும், அந்த நெருப்பு ஜுவாலைகள் அணைய பெறாததால், அதனின் வெப்பம் தாங்க மாட்டாமல், தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி யோசித்து  வாயுபகவானின் உதவியோடு அந்த தீ ஜுவாலையை சிவனின் "சேயோனாக" பாவித்து சரணவ பொய்கையில் ஆறு தாமரை மலரில் கொண்டு சேர்த்தனர். 

பின்னர் மன்மதனின் மலர் அம்பில் தன் தவம் கலைத்த சிவனிடம் உண்மை நிலையை தேவர்கள் எடுத்தியம்பியதும் அவர் கருணை கொண்டு, மன்மதனையும் உயிர்பித்து தாமரை மலரில் சரணடைந்திருக்கும் தீ ஜுவாலைகளையும் ஆறு ஆண்மகவு குழந்தைகளாக உயிர்பித்தருளினார். கூடவே அவரின் அருளால் ஆறு சேடிமார்களும் உருவாகி அந்த குழந்தைகளை சீராட்டி பாராட்டி வளர்த்து வந்தனர்.

ஒரு சமயம் தன் சதி பார்வதியுடன் தேவியுடன் சரவண பொய்கைக்கு வந்த சிவபெருமான் தான் தேவர்களுக்கு அளித்த வாக்கின்படி, தன் தேவியிடம் "இவை நம் குழந்தைகள்.என்  கோபத்தீயின் வெப்பத்தில் உருவானவர்கள். எனவே இவர்கள் உன் பிள்ளைகளும் ஆவார்கள். உன்னருளால் இவர்களை ஒரே ஒரு குழந்தையாக்கி தேவர்களின் இன்னலை தீர்ப்பாயாக.." என்று கூறவும், இறைவி தன்னை நோக்கி ஓடி வந்த ஆறு குழந்தைகளை "ஆறுமுகா"என்று அன்போடு அழைத்து தன் கைகளால், வாரி ஒன்று போல் சேர்த்து  அணைக்கவும், அனைவரும் ஒன்று சேர்ந்த "முத்துக்குமரன்" அங்கு உருவானான்."அம்மா, அப்பா" என்று வாய் நிறைய அழைத்த அந்த " சிவசக்திபாலனை"  கண்டு தந்தையும், தாயும் அகமகிழ்ந்தனர். 

அதுவரை குழந்தைகளை வளர்த்து வந்த அந்த சேடிமார்களை அழைத்து எங்கள் மகன் "கார்த்திகேயனை" நீங்கள் இதுவரை கவனமாக நான் கூறியபடி பராமரித்து வளர்த்ததினால், நீங்கள் அனைவரும் கார்த்திகை நட்சத்திரமாக அவதரித்து வானுலகில் சிறப்புடன் வாழ்வீர்களாக..உங்களை கார்த்திகை பெண்கள் என அனைவரும் போற்றி வழிபடட்டும்" என்று சிவபெருமான் உரைத்ததும் அவர்கள் அன்று முதல் வானில் நட்சத்திரமாக இருக்கும் பாக்கியத்தைப் பெற்றார்கள். சிவனும், தன் மனைவி பார்வதி தேவியுடன், இது நாள்வரை சரவண பொய்கையில் வளர்ந்த தன்னருமை மகனான, "சரவணனை" அழைத்துக் கொண்டு தன்னிருப்பிடமான சிவலோகத்திற்கு சென்றார். 

காலங்களின் வேகங்களில் அங்கே தேவர்கள் அசுரர்களால் துன்படுவதை நாரதர் சிவனிடத்தில் வந்து சுட்டிக் காட்டி உரைத்தார். தக்க தருணத்தில் வீரமான வாலிப வயதை எட்டியிருந்த தம் மகனை அழைத்து, "உமைபாலா.! " நீ தேவர்களின் இன்னல்களை தீர்ப்பதற்காக பிறந்தவன். அந்த நேரம் இப்போது நெருங்கி விட்டது. என்னை நோக்கி பல்லாயிரம் காலம் தவம் செய்து, என்னிடம் அழியா வரம் வாங்கி என்னைப் போல உள்ளவரால் தான் தனக்கு மரணம் வர வேண்டுமென வரம் பெற்ற சூரபத்மனை, என் அம்சமாக பிறந்த நீதான் அழித்து வர வேண்டும். உன்னால் மட்டுமே அவனுக்கு அழிவு என்பது அவன் பெற்ற வரம். அதனால், நீ சென்று அவனை வென்று வா..! " என கட்டளையிட்டார். 

தாயின் ஆசிபெற சென்ற அழகெல்லாம் ஒன்று திரண்ட "முருகேசன்" அன்னையை தொழுது அவளருளை வேண்டி நின்றார். பார்வதி தேவியும் பாசத்துடன் தன் மைந்தனை ஆரத்தழுவி உச்சி முகர்ந்து, தன் சக்தியினால் உருப்பெற்ற சக்திவேலை அவனிடம் தந்து அந்த "வடிவேலவனை" வாழ்த்தி விடை தந்தாள்.

 "கந்தகுருநாதன்" களைப்பின்றி களிப்புடன் படை செலுத்தி சென்று சூரபத்மனை அழித்து தேவர்களை காத்து தன் வீரச் செயலுக்காக தேவர்கள் அனைவரும் நிச்சயித்த வண்ணம் தேவேந்திரன் மகளை மணமுடித்து திருச்செந்தூரில் அம்மையப்பனாக அனைவருக்கும் அருள் புரிந்தார். 

முருகா, முத்துக்குமரா, சிவகுருநாதா, ஆறுமுகா, சிவபாலா, கந்தா, கடம்பா, கார்த்திகேயா, சரவணா, உமை பாலா,  முருகேசா, வடிவேலா, கந்தகுருநாதா, சிவகுமரா, சண்முகா, வேல்முருகா என்ற நாமாவளிகளோடு இன்று என்னை பதிவு எழுத வைத்த எந்தையே..! என்கண் தந்தையே...! 

உன் அன்பின் கருணை எனக்கென்றும் வேண்டுமென உன் தாள் பணிந்து வேண்டிக் கொள்கிறேன். 🙏🙏🙏.🙏🙏🙏. 

கீழுள்ள இந்த தகவல்கள் மட்டும் மாலை மலரில் படித்ததினால், அதையும் என் பதிவோடு சேர்த்துள்ளேன்

சூரபத்மனை அழித்து வரும்படி முருகனுக்கு உத்தரவிட்டார். முருகனுக்கு துணையாக செல்ல பெரும் படையையும் ஈசன் உருவாக்கி கொடுத்தார். மனிதர்களின் ஆணவத்தை ஒழித்த முருகப்பெருமான் இதற்காக ஈசன் திருவிளையாடல் ஒன்றை அரங்கேற்றினார்....

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தை தாங்கமுடியாது சிவனின் அருகில் இருந்த பார்வதிதேவி பயந்து ஓடினார். அப்போது பார்வதிதேவியின் பாதச் சிலம்புகளில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன.

அந்த நவமணிகள் மீது இறைவனின் பார்வை பட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் (வீரவாகுவை மாணிக்கவல்லியும், வீரகேசரியை மௌத்திகவல்லியும், வீர மகேந்திரனை புஷ்பராகவல்லியும், வீர மகேசுவரரை கோமேதகவல்லியும், வீர புரந்தரை வைடூரியவல்லியும், வீர ராக்கதரை வைரவல்லியும், வீர மார்த்தாண்டரை மரகதவல்லியும், வீராந்தகரை பவளவல்லியும், வீரதீரரை இந்திரநீலவல்லியும் பெற்றெடுத்தனர்) வீரவாகுதேவர் முதலான ஒரு லட்சத்து ஒன்பது பேர் (100009) தோன்றினர். இவர்கள் அனைவரும் முருகனின் படைவீரர்கள் ஆனார்கள்.

இதையடுத்து பார்வதி தேவியும் தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கி அதனை தனது சக்திகள் யாவும் கொண்ட ஓர் வீரவேலாக உருமாற்றினார். வெற்றிதரும் அந்த வீரவேலை முருகனிடம் வழங்கினார். ஈசனும் தன் அம்சமாகிய பதினொரு ருத்திரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார்.

அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேரேறி தெற்கே இருந்த வீரமகேந்திரபுரியை நோக்கி சென்றான். 

நன்றி.. மாலை மலருக்கு. 🙏. 

உண்மையில் "சிவகுமாரன்"    மனிதர்களாகிய நம் மனங்களில் தோன்றும் காம, குரோத, லோப, மோக, மத, மாற்சரியங்கள் என்ற ஆறு வகை குணங்களை அழிக்கத்தான் சிவபெருமானின் அம்சமாக உலகில்  பிறப்பெடுத்திருக்கிறான்...! இந்த ஆறும்தான் அசுரனாக, ஒரு சூரபத்பனாக நம்முள் இருப்பவை. மாறாக அவனை தூய உள்ளன்போடு வணங்கி, அவன் தாளையன்றி வேறொன்றும் நினையாமல், வாழ்ந்து வந்தால், வீடுபேற்றை (மறு பிறப்பொன்று இல்லாத நிலை.) தருவான்.அதை அந்த "சண்முகநாதனை" தர விடாமல் தடுப்பதும் நம்முள் குடி கொண்டிருக்கும் இந்த ஆறு குணங்கள்தாம்.  அந்த ஆணவ நிலையை உணர்ந்து அந்த சூரபத்மனை போல "சிவசக்தியின்" புனிதமான வேலை ( அவன் நாமங்களை எப்போதும் இடையறாது நினைத்து ஜபிப்பது)  நம்  மார்பினில் வாங்கி சேவலாகவும், மயிலாகவும் நம் அகம்,புறத்தை இருகூறாக்கி, அந்த "வேல்முருகனின்" பாதங்களோடு ஐக்கியமாக்குவதே இந்த சஷ்டி விரதத்தின் நோக்கம். 

கந்த குரு கவசம்

நிழல் வெயில் நீர் நெருப்பு மண் காற்று வானதிலும்

பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்

உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்

யானெனதற்ற மெய்ஞ்ஞானமதருள்வாய் நீ

முக்திக்கு வித்தான முருகா கந்தா

சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா

ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா

ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்

தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்

சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்

பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ

ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ

அடியனைக் காத்திட அருவாய் வந்தருள்வாய்

உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா

தேவாதி தேவா சிவகுரோ வா வா வா

வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா.. 🙏🙏.

கந்தவேல் தன் கைவேல் கொண்டு நம்மை எப்போதும் காத்து ரட்சிக்க மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.🙏.

தீடிரென இந்தப்பதிவை எழுத என்னை நினைக்க வைத்ததும் "அவன்" அருள்தான். இரவு மணி 1ஐ நெருங்கியும் விடாது எழுதி முடிக்க வைத்ததும் "அவன்"அருள்தான்.🙏. 

அனைவருக்கும் கந்தசஷ்டி வாழ்த்துகள். கந்தன் அருள் அனைவருக்கும் கிடைத்திட பிரார்த்தித்துக்கொள்கிறேன். 🙏. 

முருகன் அருளால் எழுதிய இப்பதிவுக்கு வந்து படிக்கும் அனைவருக்கும் என் அன்பான பணிவான நன்றிகள். 🙏. 

Thursday, October 31, 2024

இருள் களையும் விழா. .

 


                            தீப ஒளித்திருநாள்

அனைவருக்கும் என் அன்பான தீபாவளி பண்டிகையின் நல்வாழ்த்துகள். 

தீபாவளி என்றாலே பாரம்பரியமாக மக்கள் அனைவருக்கும் மனமகிழ்ச்சி தரும் ஒரு பண்டிகை. என்பது அனைவரும் அறிந்ததே. 

நம் இரண்டு இதிகாச புராணங்களிலும் கடவுள் தானே மனித அவதாரம்  எடுத்து வந்து தர்மத்தை நிலைநாட்டவும்,  சத்திய வழியில் தவறாது செல்லவும்,  ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதை இவ்வுலகிற்கு புரிய வைத்தார். 

ஒரு சமயம் உலக மக்களை  தன் கொடூர செயல்களால் ஆட்டிப் படைத்து  வந்த நரகாசுரன் என்னும் அரக்கனை இந்த ஐப்பசி மாதம் சதுர்தசி/அமாவாசையன்று  தன் கணவரான கிருஷ்ணபரமாத்மாவின் துணையுடன் சத்தியமாமா அழித்ததாக புராண கதை சொல்கிறது. அந்த அசுரனும், இறக்கும் தறுவாயில் தான் இறந்த இந்த தினத்தை மக்கள் தன்னைப்பற்றி அவதூறுகள் பேசி கழிக்காமல், அதற்கு மாறாக புத்தாடைகள் உடுத்தி, தங்கள் உறவினர்களுடன் விருந்தோம்பல்கள்  செய்து, வீடெங்கும் மங்களகரமான தீபங்கள் ஏற்றி, இறைவனை வழிபட்டு வான வேடிக்கைகளுடன் சிறப்பாக கொண்டாடி மகிழ்வாக இருக்க வேண்டுமென்ற வரத்தை கேட்டு பெற்று பின் உயிர் துறந்தான். இந்த கதையின்படி  அன்றைய தினத்தை நாம் "நரகசதுர்தசி ஸ்னானம்" என்றும், "தீபாவளியெனவும்" வழிவழியாக அப்படியே கொண்டாடி வருகிறோம்.

ராமாயண காலத்தில், தந்தை சொல் தட்டாது கானக வாழ்வை தன் மனைவி சீதையுடன் பதினான்கு ஆண்டுகள் முடித்து விட்டு தன் நாடான அயோத்திக்கு திரும்பிய தங்கள் அரசனான ஸ்ரீராமபிரானை அந்நாட்டின் மக்கள் மிகுந்த சந்தோஷத்துடன்  வரவேற்று,  வீதியெங்கும், ஒவ்வொரு வீடெங்கும், மலர் தோரணங்கள் கட்டி அலங்கரித்து  லட்சகணக்கான தீபங்களை ஏற்றி, வானவேடிக்கைகளுடன்  குதூகலம் பொங்க தம் உற்றார் உறவினர்களுடன் மகிழ்ந்திருந்த நாளே "தீபாவளி" எனவும் ஒரு கதை உண்டு.  ஆக இறைவன் தான் மனித அவதாரம் எடுத்து வாழ்ந்த இரு புராணங்களிலும்  இருளை அகற்றும் ஒளியாக இந்த (தீபஒளி) தீபாவளி பண்டிகையை முக்கியத்துவம் பெறச் செய்து  நீதியை போதிக்கிறார் எனவும் கொள்ளலாம். 

தீபாவளி என்பதற்கு தீப ஒளி என்ற பொருள்தான்  முன்னிலை வகிக்கிறது. இறைவன் ஒளி வடிவானவன். அதனால்தான் நாம் தினமும் அவரவர் வீடுகளில் காலை, மாலை விளக்கேற்றி வழிபடுகிறோம்.

 " ஒளி வடிவாக உன்னுள்ளே இருக்கும் இருளை அகற்ற பரமாத்மாவாக நான் உன்னுடன் குடி இருக்கிறேன். ஜீவாத்மாவாகிய நீ என்னைத் இடைவிடாது தேடி, உன்னை தன்னுடன் இணைத்து வைத்திருக்கும் " ஆசை" என்ற மாயையினால் கட்டப்பட்டிருக்கும் அஞ்ஞான இருளை அகற்றி, அதை நீ வென்று விட்டால், பரிபூரண வெளிச்சமாக உன்னுள்ளே வீற்றிருக்கும் என்னைக் காணலாம். இப்பூலகில் உனக்கென உண்டாக்கி வழங்கப்பட்டிருக்கும் பிறவிக் கடலை கடப்பதற்கு இந்த வழிதான் உசிதம்.." என கீதையில் அதே ஸ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனன் மூலமாக மக்களுக்கு உபதேசம் செய்திருக்கிறார். 

அதன்படி நடந்து "அவனை" பரிபூரணமாக உணர்ந்தவர்கள் மஹா ஞானிகளாக, தவசிரேஷ்டர்களாக, யோகிகளாக, வாழ்ந்தும், மறைந்தும்  நமக்கு வழி காட்டியிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்.  ஆனாலும் , மாயையின் பிடியில் இன்னமும் சிக்குண்டு இந்த சம்சார சாகரத்தில் உழன்று வரும் சாதாரண மனிதர்களாகிய நாம் அகக்கண்களால் "அவனை" ஜோதிஸ்ரூபமாக காண இன்னமும் எத்தனைப் பிறவிகள் எடுக்க வேண்டுமோ? 

இன்றைய தினத்தில் இப்போதும் வட நாட்டினர்  தத்தம் வீடுகளில்   நிறைய தீபங்களை (அகல் விளக்குகள்) ஏற்றி, இறைவனை வழிபட்டு கொண்டாடுவார்கள். நம் தென்னிந்தியாவிலும் இந்தப் பழககம் முற்றிலும்  வந்து விட்டது என நினைக்கிறேன். வடக்கில் இமயத்தில் உதயமாகி என்றும் வற்றாது ஓடும் கங்கை நதியும், இந்த ஐப்பசி மாதத்தில் தென்னாட்டு வரை தவழ்ந்து வந்து இங்கிருக்கும் சகல நதிகளிலும் நீராடி கூடி களித்து தன் சாபமொன்றை போக்கி கொள்கிறாள். அதனால் தீபாவளியன்று  விடியல் பொழுதில் (நான்காவது சாமத்தில்) நீராடி முடிப்பவர்களை "கங்கா ஸ்னானம் ஆயிற்றா?" என ஒருவருக்கொருவர்  கேட்டு பண்டிகையின் உற்சாகத்தை கூட்டும் பேச்சு வழக்கு (மரபு முறை) இன்றும் நம்மிடையே உண்டு. 

மேலும் ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி அமாவாசையன்று  மாலை முதல் வீட்டு வாசல் படியில் இருபக்கமும்  இரு அகல் விளக்கேற்ற தொடங்கி, கார்த்திகை  மாதம் வரும் திருவண்ணாமலையார் தீபம் வரையும், அதன் பின் கார்த்திகை மாதம் முழுவதும் வரையும் விளக்கேற்றும் பழக்கம் நம்  வீட்டு பெரியவர்கள்  மூலமாக நமக்கு எப்போதும் இருந்து வருகிறது. 

இவ்விதம் நம் மனதிலிருக்கும் தெய்வீக குணமாகிய, அனைவரிடமும் பாரபட்சமின்றி அன்பு செலுத்துவது, மனித நேயத்தோடு அனைவரையும் நேசிப்பது போன்ற நல்ல குணங்கங்களின் ஒளி கொண்டு, அவ்வப்போது  மனதில் தலை தூக்கும் கோபம், பழி வாங்கும் வன்மம், அசூயை, போன்ற அசுர குணமான இருளையகற்றி, வருடந்தோறும் வரும் இந்த தீபஒளி பாரம்பரிய பண்டிகையை போற்றி, நமது  இளைய தலைமுறைகளுக்கும் இதன் நோக்கத்தை, அவசியத்தை உணர வைத்து அனைவரும் இறைவனின் இன்னருள்களை பெற்று சிறப்பாக வாழ்ந்திட  வேண்டுமாய் இறைவன் அருள வேண்டுமென இந்த நன்னாளில் பிரார்த்தித்துக் கொள்வோம். 🙏. 

பி. குறிப்பு... இது எ. பிக்காக சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் அவசரமாக ஒரு தீபாவளிக்கு முன்தினம் ஏதாவது எழுதச் சொன்னதில் தீபாவளி கட்டுரை என்ற பெயருடன் உருவானது. மறுநாள் தீபாவளியன்று எ. பியிலும் வெளி வந்ததற்கு எ. பிக்கும், அதன் ஆசிரியர்கள்  அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். அப்போது அந்தப் பதிவுக்கு  கருத்துக்கள் அளித்தவர்களுக்கும் என் பணிவான நன்றிகள். இன்று என் வலைப் பதிவிலும் ஒரு சேமிப்பாக இருக்கட்டுமென இது அதே அவசரத்துடன் (வேறு எதாவது எழுத  வீட்டின்்வேலைகள் இடம் தரவில்லையெனினும், என் சோம்பலும், ஒரு காரணம்.) வெளியாவது. 

மறக்க இயலாத தீபாவளி நினைவுகள்....! படித்த அன்றிலிருந்து  ஒவ்வொரு தீபாவளியன்றும் பிரபல எழுத்தாளர் கு. அழகிரி சாமி அவர்கள் எழுதிய "ராஜா வந்திருக்கிறார்" கதை நினைவுக்கு வர தப்புவதில்லை. நல்ல எழுத்து. அனேக மாற்றங்களினால் காலங்கள் எவ்வளவு  மாறினாலும் என்  மனதை விட்டு நீங்காத கதை. 

அனைவருக்கும் என் அன்பான நன்றிகளுடன் மனம் கனிந்த இனிய  தீபாவளி நல்வாழ்த்துகள். 

Saturday, October 26, 2024

காரண காரியங்கள்

இந்தப்பதிவுச்செடி இங்குமுளைத்தற்கு உதவியாக இருந்தது சென்ற சனியன்று எ. பியில் வெளிவந்த "சாப விமோசனம்" என்ற கதை. அதைப் படித்த பின் நான் அதற்கு சொன்ன கருத்துக்கு பதிலாக வந்த இந்த பதில் கருத்துக்கள்தான் இதன் காரண விதைகள்.

நானும் இன்று காலையிலேயே நல்ல புகழ் பெற்ற இந்த  எழுத்தாளரின் கதைகளை படித்து விட்டேன். ஆனால், கருத்து சொல்ல யோசனையாக உள்ளது. (மாறுபட்டு விட்டால் என்ன செய்வதென்ற மனக்குழப்பங்கள்.) இது நான். 

கவலையே படாதீர்கள்... தயங்காதீர்கள்.. அதுதான் வேண்டும். மாறுபட்ட கருத்துக்கள்தான் வேண்டும்...இது சகோதரர் ஸ்ரீராம். 

கமலாக்கா தயங்கவே வேண்டாம். மாறுபட்ட கருத்துகள் வேண்டும். அப்போதுதான் சிந்தனைகள் பிறக்கும் யோசிக்கும் திறன் வலுவடையும்.

சும்மா ஒரே குட்டைல இருந்தால் மனமும் மூளையும் நாறிப் போகும்!! கமான் கமலாக்கா உங்கள் கற்பனை, எண்ணங்கள் கருத்துகள் சிறகடிக்கட்டும். இது சகோதரி கீதாரெங்கன். 

தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரரே & சகோதரி. உங்களிருவரின் ஊக்குவிப்புக்கு என் மனதில் பட்டதை எ. பியில் கருத்து சொல்ல ஆரம்பித்தேன். அது பதிவாக நீண்டு விட அதை இங்கேயே கொண்டு வந்து சிறைப் பிடித்து தங்க வைத்து விட்டேன். வந்து படிக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 

இவ்வகையான புராண கதைகள் பல விதங்களில் பலரால் அலசப்படுவது இந்த கதைகளின் சுவாரஸ்யந்தான் காரணமா? இல்லை. மனிதர்களாகிய நம் மன விகாரங்களின் வேறுபாடுகளா?

அகல்யை ஒரு கற்புக்கரசி. சிறந்த அழகி. அவள் பெயர் காரணமே அதைதான் குறிக்கிறது தர்மம் வழுவாத ரிஷி பத்தினி. தேவலோக தலைவனான இந்திரனின் மனதில் ஏற்பட்ட காமம் அவள் தலையெழுத்தை மாற்றி, தன் கணவரின் வாயாலேயே கடுமையான சாபம் பெற்று கல்லாக (ஆனால், அவள் பெயரிலேயே கல் உள்ளதே.! அதுவே அவளுக்கு ஒரு பிறவி சாபந்தான் போலும்..!) போகச் செய்தது. 

பின்னர் இராமாயண காலத்தில் ஸ்ரீ ராமரின் கால் (பாத துளிகள்.) அவள் மேல் பட்ட விநாடி அவள் மீண்டு சாபவிமோசனம் பெற்று, பழைய நிலைக்கு உருப்பெற்றாள். (இது இறைவனின் அவதாரமாக அவதரித்த ஸ்ரீ ராமரின் மகத்துவத்தை காட்டக் கூடியது.) அதன் பின் கௌதம மகரிஷி அவளை ஏற்றுக் கொண்டார் என்பது வரைதான் புராண காலத்து இப்பத்தினி பெண்மணியின் சிறப்பாக நாம் நம் வீட்டு பெரியவர்களின் கதை சொல்லி வளர்க்கும் திறனோடு பால காண்டமாக சொல்லி நாம் அறிந்தது.

அதன் பின் அகல்யை கல்லாக மாறவில்லை. தன் சாப விமோசனத்திற்காக மனம் கல்லாக இறுகி ஸ்ரீ ராமனின் வரவுக்காக காத்திருந்தாள். தவிரவும், அவளும், தன் பால்ய வயதில் மனதில் பல ஆசைகளை வளர்த்துக் கொண்டிருந்தாள்..! என்கிற மாதியான கதைகளை கேட்(படிக்)கும் போதெல்லாம், புராணங்களில் வரும் கதை மாந்தர்களை நாம் (மனிதர்கள்) எப்படியெல்லாம் மாற்றியமைத்து கதைகளை கயிறாக...! ஒரு நூலாக....! (அப்படி திரிக்கும் நூல் என்ற பெயரைத்தான் நாம் தயாரிக்கும் புத்தக வடிவிற்கும் "நூல்கள்" என வைக்கிறோமோ..?:)) ) திரிக்கிறோமோ என எண்ணும் போது, புராணங்களில் மேல் நமக்கிருந்த கொஞ்ச நஞ்ச ஆர்வங்கள் ( நமக்கு மட்டுமென்ன.. எதையும் முழுதாக நம்பும் ஆர்வங்களா? ஆயிரம்  சந்தேகங்களுடன் கூடிய ஆர்வ கோளாறுகள்தான். :)) ) இனி நம் சந்ததிகளுக்கு சுத்தமாக வராதோ என்ற நினைப்பும் எழுகிறது.

இளவயதில் தான் பழகி, தனக்கு பிடித்த இந்திரனையே தன் திருமண பிராயத்தில் "தன் விருப்பம் இவர்தான்.." என சொல்ல முடியாத மனநிலையில் இருந்திருக்கிறாள் அகல்யை. ஆனால், தன்னைப் படைத்த தந்தையான பிரம்மதேவர் கௌதமரை அவளுக்கென வரித்த போதும் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. மாறாக அன்றே அவள் மனது கல்லாகி போனது. (மானசீக காதல்கள் அப்போதே அந்த புராண காலத்திலேயே தோற்றுப் போய்யுள்ளது.)

பிரம்மதேவர்  தான் படைத்த பெண் ஒரு சிறந்த தவமுனிவருக்கு பயனுள்ளவளாக இருக்க வேண்டுமென நினைத்தாரே ஒழிய அப்பெண்ணின் உள்ளத்து மனநிலையை கேட்டறியவில்லை. (அவரின் "தான் சொல்வதை அவள் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்ற குருட்டு நியதிகள் இன்று வரை நம்மையும் (அவர் படைத்த மனிதர்களாகிய நம்மையும். ) விடாது துரத்துகின்றன.:)) 

இந்திரன், கௌதமர் இருவருமே அகல்யையை மணமுடிக்க ஆசைப்பட்டால்,  பிரம்மன் இந்திரனுக்கும், கௌதமருக்கும் இடையே வைத்த ஒரு சுயவரப் போட்டியின்படி, முன்னும் பின்னும் ஒரே முகம் கொண்ட ஒரு பசுவை வலம் வந்த பின் சாட்சியுடன் முதலில் வருபவருக்கு அகல்யை பரிசாக கிடைப்பாள் என்ற முடிவு. கௌதமரும் முன்னும், பின்னும் ஒரே முகமுடைய ( அந்த பசு தன் வயிற்று சிசுவை அந்நாள் வரை சுமந்து பின் அதை ஈன்று பெறும் தருணம். ) ஒரு பசுவை நாதரின் யோசனையின் பேரில் கண்டு அதை  மூன்று முறை சுற்றி வந்து நாதரின் சாட்சியோடு  போட்டியில் வென்று அகல்யையை கைப்பிடித்தார். 

இந்திரன் தன்  ஐராவதி வாகனத்தில் மூவுலகும் சுற்றி அப்படிபட்ட பசுவைத் தேடி அலைந்து ஏமாற்றத்துடன் திரும்பிய போது கௌதமருக்கு, அகல்யை உரிமையாகி இருந்தாள்.  (பல பல யாகங்கள் செய்து இந்திர பதவியை தன் வசம் பெற்றிருந்த இந்திரனுக்கு அவ்விதமான பசுவைப் பற்றிய சூட்சுமம் தெரியாதா? இல்லை நாரதர்தான் இந்திரனுக்கு எதிரியா?) எல்லாம் பிரம்மன் போட்ட முடிச்சு. அவர் கணக்கு என்றும் தப்பாது. அந்த மாயைதான் இன்று வரை உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் மாறு(வேறு)பாடில்லாமல், நடமாடி கொண்டுள்ளது. 

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற வாக்கின்படி அகல்யை கௌதமருக்கு மனைவியாகி ஒரு நல்ல சதி தர்மத்துடன் நடந்து வந்தாலும், அவள் மனதில் இந்திரனின் மேல் தான்  ஆசைப்பட்டதையும், தன் பிதாவாகிய பிரம்மன் அது தெரிந்திருந்தும், தன்னை ஒரு வார்த்தை கூட கேட்காது கௌதமருக்கு பாணிக்கிரணம் செய்து தந்தது முதல் அவள் மனது கல்லாகி போனதென இப்போது ஒரு கதையில் படித்தேன்.

பெண்ணின் மனது எத்தனை முறைதான் கல்லாகும்படி அக்கால சூழ்நிலைகள் அவளை பாடாக படுத்திருக்கின்றன. அதன்பின் இந்திரனின் செய்கையால், அதைக்கண்டு கணவர்  சபித்ததினால் அவள் உயிருள்ள கல்லாகி போனது வேறு. அதுதான், ( இப்படி கல்லாகி போவது) ஏற்கனவே அவளுக்கு பல முறை பழக்கமானது ஆயிற்றே..!  

இந்திரனும், தன்னை மணப்பதற்காக அகல்யை காந்தர்வ முறையைச் சொல்லி வறுப்புறுத்திய போது கூட "அவசரம் கூடாது. தர்ம நியதிப்படி பெரியவர்களின் ஆசிகளோடுதான் நாம் மணந்து கொள்ள வேண்டுமென" அறிவுரை கூறினாராம். இதுவும் அந்த கதையில் தான் படித்தேன். 

இப்போது எ. பியில் சனியன்று வெளிவந்த பிரபல  எழுத்தாளர் புதுமை பித்தன் அவர்கள் எழுதிய "சாப விமோசனம்"  என்ற கதையில் அகல்யை ஸ்ரீ ராமரின் மூலம் சாப விமோசனம் பெற்றபின், நிறைய இன்னல்களையும், தன்னோடொத்த பிற ரிஷி பெண்களின்  அவச்சொற்களையும் அவமானத்தோடு சந்தித்த பிறகு மனம் வெறுத்து துவண்டு போயிருக்கும் போது, அந்நிலையில் அவள் மிகவும் அல்லலுறுவதை கண்டு ஒரு நாள் அவளைத் தேற்ற வரும் கணவனின் அன்பையும், அருகாமையையும்  உணருங்கால்  அவள் மனது மீண்டும் கல்லாவது போல் கதை  வடித்து தந்துள்ளார். நல்ல எழுத்து. சிறந்த உவமானங்கள். 

இந்நிலையில் இடையே கௌதமர் அகல்யை இருவருக்கும் ஒரு மகன் பிறந்து சதானந்தர் என்ற பெயருடன் மிதிலையின் மன்னர் ஜனகருக்கு அரசசபையில் தத்துவ விசார ஆலோசகராக இருந்து வருவதோடு துறவு வாழ்க்கையிலும் ஈடுபட்டு வருகிறார். அவரும் தந்தை தாய் படும் தீர்க்க இயலாத  மனதின் துக்கங்களை கண்டு தன் மனம் வாடுகிறார். 

இவர்களுக்கு ஒரு மகளும் இருப்பதாக மற்றோர் இடத்து கதையிலும் படித்தேன். அந்த மகளின் பெயர் அஞ்சனை. இவரது மைந்தர்தான் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் ஆவார். 

கற்பில் சிறந்த பஞ்ச கன்னிகைகளில் முதலில் இடம் பெறுபவர் அகல்யைதான். அதன்பின் சீதை, திரௌபதி, தாரா, மண்டோதரி இவர்கள். இதில் தங்கள் கற்பின் திறனை வெளிப்படுத்த தன்னை தீயில் இட்டு அது பூக்களாக்கி குளிர்வித்து தர தங்கள் கற்புத்திறனை உலகிற்கு மெய்பித்தவர்கள் சீதை, திரௌபதி, தாரா ஆகியோர். அகல்யை தன்னை சுற்றியுள்ளவர்களால் தன் வாழ்நாள் முழுவதும், மனம் கல்லாகி இறுகி இருந்தாள் என்றால், மண்டோதரியும் தன் கணவனின் குறுகிய செயல்களில் மனம் குன்றி, அவர் மீது பாசம் மிகுந்த மரியாதையை தந்த போதும் தன் மனதை கல்லாக்கிக் கொண்டவள். 

ஆக பெண் எனப்பட்டவள் அந்த காலங்களில் தங்கள் சூழலின்படி பல விதமான சுக துக்கங்களை அனுபவித்தே வந்திருக்கின்றனர். அவர்களின் தொடர்ச்சியாக  பரசுராமரின் தாய் ரேணுகா தேவி, அனுசுயாதேவி, தமயந்தி, சந்திரமதி, பக்த மீரா, சக்குபாய் என ஆசிரமங்களின்  பெண்களும், ராஜவாழ்வில் பிறந்த பெண்களுமாக தொடர்ந்து அல்லல்களும், இன்னல்களும் பட்டுக் கொண்டேதான் இருந்தனர். 

இன்றைய காலத்திலும், இப்படி கஸ்டபடும் பெண்கள் இருக்கிறார்கள். அப்படி அல்லாமல், இந்தப் பிறவியில் நல்லவிதமாக வாழும் பெண்கள்.  தன் வாழும் வாழ்விற்கு இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். 

நான் மெத்த படித்தவளும் இல்லை. பல புராணங்களை ஆழ்ந்து படித்து விவாதித்து அலசியதுமில்லை. ஏதோ என் சிற்றறிவுக்கு புலப்பட்டதை இங்கு  எழுதியுள்ளேன். இதில் ஏதேனும் தவறிருந்தால், படிக்கும் அனைவரும் மன்னிக்கவும். 🙏.

படிக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏. 

Thursday, September 5, 2024

காஃபியின் வழி முறைகள்.

 இந்த காஃபி குடிப்பது கெடுதல் என்ற பழக்கம் இப்போதுதான்  வந்ததா? இல்லை, காஃபி குடிப்பது என்ற வழக்கம் வந்த  ஆரம்பத்திலிருந்தே வந்ததா? என்றிலிருந்து வந்தது எனத் தெரியவிலலை. ஆனாலும் காஃபியில் இருக்கும் காஃபின் என்ற பொருள், நமது உடலை சுறுசுறுப்பாக வைக்கும், எண்ணங்களை தோற்றுவிக்கும் நமது மூளைக்கு நல்லதொரு செயல்பாட்டை தருமென்பது ஒரு கருத்து. 

காஃபின் என்றால் என்ன?

இது ஒரு இயற்கை தூண்டுதலாகக் கருதப்படுகிறது. இது உலகளவில் பரவலாக நுகரப்படும் பானங்களில் ஒன்றாகும். இது பொதுவாக தேயிலை, காபி மற்றும் கொக்கோ செடிகளில் காணப்படுகிறது. காஃபின் உட்கொள்வது உடலுக்கு சில வழிகளில் நன்மைகளைத் தருகிறது. சோர்வு ஏற்படும் போது காஃபின் எடுத்துக் கொள்வது சுறுசுறுப்பைத் தருகிறது. இது மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், விழிப்புடன் இருக்க வைக்கவும் உதவுகிறது.

காஃபின் உட்கொண்ட பிறகு, அது குடலில் இருந்து இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுகிறது. அதன் பிறகு இது கல்லீரலுக்குச் செல்கிறது. கல்லீரலிலிருந்து இது பல்வேறு கலவைகளாக உடைந்து, பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. காஃபின் முக்கியமாக மூளை செயல்பாட்டில் வேலை செய்கிறது. அதாவது அடினோசினின் விளைவுகள், மூளையைத் தளர்த்தி சோர்வடையச் செய்யும் நரம்பியல் கடத்தியாக அமைகிறது. ஆனால் காஃபின் உட்கொள்ளல் அடினோசின் வேலை செய்வதைத் தடுத்து சோர்வு மற்றும் மந்தத்தன்மையைத் தவிர்க்க உதவுகிறது.

இதனால் பல தீமைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. 

பொதுவாக காஃபின் உட்கொள்வது உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். காஃபின் ஒரு டையூரிடிக் அமிலமாக இருப்பதால், இவை உடலில் இருந்து அதிக சிறுநீர் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். அதே சமயம், சர்க்கரையுடன் கூடிய காபி மற்றொரு மோசமான கலவையாக அமைகிறது. இது கோடை வெப்பத்தில் நீரிழப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது.

மற்றும், கோடைக்காலங்களில் உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் போது, அது தூக்க முறைகளை சீர்குலைத்து விடலாம். மேலும், கோடையில் அறையின் வெப்பநிலையும் அதிகமாக இருப்பதால் தூங்குவது கடினம். இந்த நேரத்தில், காஃபின் எடுத்துக் கொள்வது அது உடல் வெப்பத்தை மேலும் அதிகரிக்கும். இது தூக்கமின்மையை ஏற்படுத்தும். இதனால், எரிச்சல் மற்றும் சோர்வு ஏற்படும்.

அதிகளவிலான காஃபின் உட்கொள்ளலால் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் இரண்டும் அதிகரிக்கப்படும். குறிப்பாக, கோடையில் காஃபின் உட்கொள்வது இருதய அமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனால் இதய பாதிப்பை ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இது உடல் அசௌகரியம் அல்லது பிற உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது  

ன்றி கூகுள்.

காஃபி குடிப்பது கெடுதலா , நன்மையா என்பது ஒரு பக்கமிருக்கட்டும். காஃபி போடுவதே ஒரு கலை என வாதிடுபவர்கள்தான் எனக்குத் தெரிந்த வரை நிறைய பேர்  (உறவுகள்) இருக்கிறார்கள். காஃபி பில்டரில் புது டிகாஷன் இறக்குவதிலிருந்து, பாலை காய்ச்சி, அதற்கு தகுந்த சர்க்கரை சேர்த்து, (அல்லது சர்க்கரை இல்லாமலோ) நல்ல சூட்டில் (கவனிக்கவும். நல்ல சூட்டில்..) கலந்து தருவதை ஒரு அசுவமேத யாகத்தை எவ்வித குறையுமின்றி, தான் பூரணமாக செய்து முடித்த அளவுக்கு திருப்தியடைபவர்கள் நிறைய பேர். சரி..! இவர்கள் எப்போதும் ஒரே மாதிரி இவ்விதம் செய்து அனைவருக்கும்.  (இங்கும் கவனிக்கவும்... தினமும் வீட்டிலிருக்கும் அனைவருக்கும், தவிர எப்போதாவது வெளியிலிருந்து வரும் விருந்தாளிகளுக்கும் இப்படி காலை, மாலை, இடையில் அவர்கள் காஃபி என கேட்கும் போது என்று அவர்களுக்கு கலந்து தரும் அளவுக்கு  பொறுமை உள்ளதா என்றால், அங்கு அதுதான் மிஸ்ஸிங்.)

சிலர் இந்த டிகாஷன் நன்றாக அமைந்தால்தான், காஃபி நன்றாக இருக்குமெனவும், சிலர் பாலின் தரம் சிறப்பாக இருந்தால்தான் காஃபி சுவையாக இருக்குமெனவும், வாதிடுவார்கள். மேலும், காஃபி பில்டரில் உள்ளிருக்கும் காஃபி பொடியில் கொதிக்கும் வென்னீர் மழை விடும் போது அதற்கு குடை வைப்பவர்களும் , குடையை ஒதுக்கி அது நன்றாக மழையில் நனையட்டுமென விடுபவர்களும் உண்டு. இதிலும், குடை தேவையா, இல்லை அவசியமில்லையா என்ற இருவகை கருத்துக்கள் வாதிடுபவர்களுக்குள் எழுவதுண்டு. 

சிலர் அந்தக்காஃபி பொடி சரியில்லை, இதில் காஃபித் தூளில் கலக்கும் சிக்கரி நிறைய வந்து விட்டது எனவும், காஃபி கொட்டையாக கடையில் வாங்கி வீட்டில் அரைத்து நாமே தேவையான அளவு சிக்கரி  கலந்து போட்டால்தான் நன்றாக இருக்குமெனவும், சிலர் சிக்கரி இல்லாமல் காஃபித்தூளை முறையான அளவில் கலந்து உபயோகித்தால் மட்டுமே காஃபியின்  சுவை நன்றாக இருக்குமெனவும், சிலர் பசும்பாலை விட எருமைப்பாலில்  காஃபி திக்காக நன்றாக வருமெனவும், சிலர் பசும்பால்தான் நல்லது எனவும், அவரவர் கருத்துகளை முன்னிறுத்தி, இறுதியில் அதைதான் ஸ்திரமான ஆணித்தரமான உறுதியும் ஆக்குவார்கள்.

காஃபி போடுவதையே விதவிதமாக பழக்கம் வைத்திருப்பவர்களும் உண்டு. சிலர் பில்டர் காஃபியை தவிர்த்து வேறு எந்த முறையிலும் போட முயல கூட  மாட்டார்கள். சிலர் ஒரு பாத்திரத்தில் காஃபித்தூளை போட்டு வென்னீர் கொதிக்க வைத்து அந்த காஃபி பொடியில் ஊற்றி நன்கு கலந்து அதில் சிறிது தண்ணீர் தெளித்த பின் கெட்டியான காடா துணி உதவி கொண்டு மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி காஃபி தயாரிப்பார்கள், அவர்களுக்கு இந்த பில்டர் தேவையேயில்லை. சிலர் இப்போது ஏராளமாக வந்திருக்கும் "தீடிர் காஃபி" பொடியில் காஃபி கலந்து குடித்து விட்டு, வீட்டுக்கு வருபவர்களுக்கும் தந்து விட்டு எதைப்பற்றியும் கவலைபடாமல் "அக்காடா" என்றிருப்பார்கள். சிலர் காஃபி குடிக்கிறீர்களா என வீட்டுக்கு  வந்தவர்களை ஒரு உபசாரத்திற்கு கூட கேட்க மாட்டார்கள். (கேட்டால்தானே இந்த வம்புபெல்லாம்.?:)) ) சிலர் அந்தப் பழக்கத்தை சிறு வயதிலிருந்தே ஏற்படுத்திக் கொள்ளாமல், அல்லது நடுவில் விட்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு எங்கு சென்றாலும், எந்த பிரச்சனையுமில்லை. (அவர்களால் பிறருக்கும் பிரச்சனைகள் இல்லை.) 

சில பேர்கள் இப்படி திக்காக ஒரே சகதி மாதிரி சிலர் வீட்டில் தருகிறார்கள் எனவும், டிகாஷன் அதிகம் கலக்காமல் பால் நிறைய கலந்து கொடுப்பவர்களை காயத்தால் கால் வீங்கியவர் கால்களை போன்ற மாதிரி வெள்ளையாக அவர்கள் வீட்டில் காஃபி இருக்கிறது எனவும் கிண்டல் செய்வார்கள். 

 (ஆக மொத்தம் நாம் அருந்தும் ஒரு குவளை காஃபியில்தான் எத்தனை வேறுபாடான கருத்துக்கள்? இந்தக் காஃபி அளவுக்கு அதிகமாக அதாவது தினமும் ஓரிரு தடவைகளுக்கு மேலாக குடித்தால் சிலருக்கு தலைச்சுற்றல் வரலாம். சிலருக்கு பழக்கத்தினால் வராமலும்  இருக்கலாம். இது அவரவர் உடல் வாக்கைப் பொறுத்தது. ஆனால், எனக்குத் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பாணிகளில், இந்த காஃபி போடும் விபரங்களை பல விதங்களில் ஒரு குற்றப் பத்திரிக்கையாக என் முன்னே வைத்து பரிசீலனை செய்யும் போது நிஜமாகவே எனக்கு தலைச் சுற்றத்தான் செய்கிறது.:)) )

நாங்கள் பிறந்து வளர்ந்த  அந்தக்காலத்தில் காஃபியுடன் வேறு பல சத்துள்ள பானங்கள் என வரிசையாக வந்து விட்டாலும், பொருளாதார வசதி காரணமாக, எங்கள் அம்மா வீட்டில் எங்களுக்கு காஃபி குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள். அது இத்தனை ஆண்டுகளாக தொடர்வதால், அதை முற்றிலும் நிறுத்தவும் இயலவில்லை. இன்று வரை ஒரு நாளைக்கு சில சமயம் காலை மட்டுமாவது ஒரு தடவையேனும் இந்தக் காஃபிக்கு அடிமையாகிறேன்.

திருமணமானவுடன், புகுந்த வீட்டில்,எல்லோரும் சேர்ந்திருக்கையில் (கூட்டுக் குடும்பம்) எனக்கு மட்டும் மூன்றாம், நான்காம் தடவையாக பில்டரில் விட்டு இறக்கிய காஃபி காலை, மாலை என முதல் தடவையாக கிடைத்தது. (முதல், இரண்டாவது எல்லாம்  பெரியவர்கள்தான் குடிக்க வேண்டும் என்ற தீர்மானம் அந்த வீட்டில் இருந்ததும், நான் அப்போது அவர்களை விட மிக,மிகச்சிறியவள் என்பதும் அந்தப் 19 ஆவது வயதில் அப்போதுதான் எனக்குப் புரிந்தது. :)) ) அப்போதாவது இந்த மேற்படி பானத்தை ஒரேடியாக வெறுத்து ஒதுக்கி கை கழுவி விட்டிருக்கலாம். (அந்த காஃபியே ஒரு கை கழுவும் தண்ணீராகத்தான் இருந்தது. ஹா ஹா ஹா.) விபரம் தெரிந்த நாளிலிருந்து அம்மா வீட்டில் நல்ல காஃபியை குடித்து விட்டு இங்கு மாறுபடும் போது நாக்கு வித்தியாசத்தை காட்டியது. ஆனால், ஒருவரின் மனது நோக ஒரு சொல் சொல்வதும், ஒரு உணவுப் பொருளை வேண்டாமென்று மறுக்கவும், ஒதுக்கவும் தெரியாத மனது என்னுடையது. இதுவரை அப்படியேதான் இருக்கிறேன். தொட்டில் பழக்கம் கட்டை வேகும் வரை மாறாதது என்பது உண்மைதானே..!

அது என்னவோ காஃபியைப்பற்றி கூறும் போது இந்தப்பாடலும் நினைவுக்குள் வந்து விடுகிறது. 

"காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி. அது கையில் கிடைத்த பின்னும் துடிக்கிது ஆவி." என்ற பாடலை மறக்க முடியுமா? 



(என்னவோ போங்கள்.. இந்த காஃபியைப்பற்றி இப்படி அலச வேண்டுமென ஒரு காஃபி அருந்தும் வேளையில் எனக்கு தோன்றியது பாருங்கள். இது அந்த காஃபிக்கு வந்த சோதனையா? இல்லை பெருமையா?தெரியவில்லை. ஆனால், காஃபி அருந்துபவர்களின் மனதில் வரும் கருத்துக்களுக்கும், இல்லை அருந்தாதவர்களின் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களுக்கும், இந்தப் பதிவு ஒரு பாலமாக இருக்கும்.:))  ) 

உங்கள் அன்பான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.அதற்கு நான் என்  கைப்பேசியிலேயே பதில் கருத்துக்கள் தருவதால் கொஞ்சம் தாமதமாகிறது. அதற்காக அனைவரும் மன்னிக்கவும் இருப்பினும் அன்புடன் உடனே வந்து கருத்துக்கள் பகிர்வோர்க்கு என் பணிவான நன்றிகள் . 🙏. 

Thursday, February 1, 2024

கவசங்கள்.

 இது சமீபத்தில் (நான் எழுத ஆரம்பித்த போது இந்த சமீபத்தில்...... இப்போது அதைக் கடந்த செய்திகள் இதை தொலை தூரம் ஆக்கியிருக்கலாம் .எனவே இந்த  சமீபத்திய என்ற வார்த்தையை கண்டு கொள்ளாதீர்கள். :)))).) எ. பியில் தினமும் செய்தி அறை என்ற புதிய பகுதி (ஒரு சில  மாதங்களுக்கு முன் சென்ற வருடமென நினைக்கிறேன்) வந்து கொண்டிருக்கும் போது அதில் படித்த ஒரு செய்தி. 

/அமெரிக்காவில் ஒரு ஷு கடைக்குள் நுழைந்து வலது கால் ஷுக்களை மட்டும் திருடிய திருடர்கள்😀- சிரிப்புத் திருடர்கள். /

செய்தி கருத்துக்குப் பதிலாக "ஒரு கால் ஷுவை மட்டும் வைத்து அவர்கள் என்ன செய்வார்கள்?" என்று நான் கேட்டிருந்தேன்.

இதனைப் படித்ததும்  நாங்கள் இங்கு வந்த புதிதில்,  (இந்த ஏரியாவுக்கு) சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. பழைய வீட்டிலிருந்து  அப்போதுதான் நாற்பது வீடுகளுக்கு மேலிருக்கும் அந்த அப்பார்ட்மெண்டுக்கு குடி வந்திருந்தோம். எங்களைப்போல் ஒரு பதினைந்து, இருபது பேர்கள்தான் வந்திருந்தாரகள். பாக்கி வீடுகளில் ஒவ்வொருவராக வர ஆரம்பித்ததும் விட்டார்கள்.அதுபோல் தொடர்ச்சியாக அடுத்தடுத்து மூன்று அப்பார்ட்மெண்ட்கள். அங்கும் நாற்பது வீடுகளில் பேர்பாதிதான் வந்திருந்தனர். 

அன்று இரவு நேரம். மதியம் ஷிப்ட் வேலைக்குப்  போயிருக்கும் என் குழந்தைகள் ஒவ்வொருவராக வந்து சாப்பிட்டு படுக்கவே பத்து பதினொன்று ஆகி விட்டது. மகள் மட்டும் நைட் ஷிப்ட் முடிந்து மூன்று மணிக்கு மேல்தான் வருவாள். சமயத்தில் நாலு மணி கூட ஆகிவிடும். எனக்கு அப்போதெல்லாம்  என்றுமே அதுவரை உறக்கம் கிடையாது. அவள் வந்த பிறகு கொஞ்சம் பேசி விட்டு நான்கு நாலரைக்கு மேல் மணிக்கு உறங்கி காலையில் 6 6.30க்கு எழ வேண்டும்.(காலையில் வேலைக்குப் போகும் மகன்களுக்கு ஏதாவது சமையல் செய்து தர.) 

நான் வாசலில் போய் நிற்காமல் பால்கனிக்கும், (பால்கனியிலிருந்து பார்த்தால் அவள் வரும் கேப் அப்பார்ட்மெண்ட் வாசலில் வந்து நிற்பது தெரியும்.) ஒரு பெட்ரூம் அருகிலேயே வீட்டு வாசல் இருப்பதால்  அங்குமாகவும் அலைந்து கொண்டிருப்பேன். அவள் வீடு வந்து இறங்கும் நேரத்தில் ஃபோன் செய்வாள். இருப்பினும் எனக்கு கண் அசந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம்.

ஒரு மூன்றரை மணி போலே வாசல் பெட்ரூம் ஜன்னல் வழியாக திரை விலக்கி பார்த்த எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. ஷுரேக் கதவகள் இரண்டும்  திறந்திருந்தது. ஒரு வேளை மகள் ஃபோன் செய்ய மறந்து போய் மாடியேறி வீட்டு வாசலுக்கே வந்து விட்டாளோ..? அவள்தான் கதவை திறந்து காலணிகளை வைப்பதற்காக காலணிகள் வைக்கும் கதவை திறந்துள்ளாளோ...? என நினைத்து விரைந்து வந்து வாசல் கதவை திறந்தால் யாரையும் காணவில்லை. மறுபடியும் ஹாலுக்கு அருகிலிருக்கும் பெட்ரூம் ஜன்னல் வழி சென்று பார்த்தால் அந்த செருப்பு வைக்குமிடம் கதவுகள் ஹோ.....வென திறந்தேதான் இருந்தது. கொஞ்ச நேரம் முன்பு கூட மூடியிருந்தது நினைவுக்கு வரவே மறுபடி பால்கனி பிரவேசம். ஒரு மாதிரியான குழப்பத்தற்கு நடுவே யாரோ திருடன்தான் வந்திருப்பானோ....! மகள் வரும் சமயமாயிற்றே.. நாங்கள் இருப்பது மூன்றாவது மாடி. அவள் சமயங்களில் மின் தூக்கியை உபயோகிக்காமல் படிகளில் ஏறி வந்து விடுவாள்... என பலதும் எண்ணவும், என் இதய படபடப்பு கூடியது.

அவ்வளவுதான்...! வீட்டில் இருப்பவர்களை எழுப்பும் படலம். அவர்களால் சட்டென  எழுந்திருக்கவா முடிகிறது.  அதற்குள் மகள் நான் நினைத்தபடி மாடிப் படியேறி வந்தே விட்டாள். நான் பத்து நிமிடமாக தவிப்புடன்  வீட்டிற்குள் அங்குமிங்கும் அலைந்ததில் அவளின் மிஸ்ட்கால் எனக்கு கேட்கவில்லை. அவளைப் பார்த்தவுடன்  அதிர்ச்சியோடு நான் விஷயத்த்தை  சொல்ல, அவள் சொன்ன விஷயம் மேலும் அதிர்ச்சியை தந்தது. "ஆமாம் அம்மா.. எல்லா ப்ளோரிலும் காலணிகள் வைக்கும் அலமாரி திறந்துதான் இருக்கிறது. நானும் ஒரு வித ஆச்சரியத்தோடுதான் பார்த்தபடி படியேறி வருகிறேன்." என்றாளே பார்க்கலாம்..! 

பிறகு அவசரமாக ஒரு மட்டும் மகன்களை எழுப்பி விஷயத்தைச் சொல்லி புரிய வைத்து, அவர் அப்பார்ட்மெண்ட் வாசலில் இருக்கும் செக்யூரிட்டிக்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொல்லி, அவர் வந்து ஒவ்வொரு வீட்டிலும் காலிங் பெல் அழுத்தி தகவலைச் சொல்லி மொத்தத்தில் அன்றைய நாள் எனக்கு  அந்த இரண்டு மணி நேர உறக்கமுமின்றி விடிந்தே விட்டது. 

அது ஸ்பிரிங் உள்ள கதவு. எல்லா வீட்டிலும் முக்கால்வாசி அப்படித்தான். (கதவை கவனமாக கைகளால் பிடித்தபடி சார்த்தாவிடில் "டக்"கென்ற சத்தம் கேட்கும்) என்பதால் வந்தவன்/ வந்தவர்கள் ஜாக்கிரதையாக கதவை சார்த்தாமல், அதிலுள்ள பல ஷூக்களை மட்டும் லவட்டிக் கொண்டு கிளம்பியிருக்கிறான்./ கள். அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் அத்தனை பேர் செருப்புகள், ஷுக்களும் இதைப் போலவே அபேஸ். ஒவ்வொருவரும் ஆகா... இப்போதுதான் வாங்கினேன். 3000,4000 போச்சே.. என புலம்பினார்கள். எங்கள் மகன்களின் புது ஷுக்களும், அப்போதுதான் வாங்கிய  நல்லச் செருப்புக்களும் போயே போச்சு.

இதுதான் வியப்பு என்றால் அருகருகே இருக்கும் மற்ற மூன்று அப்பார்ட்மென்டிலும் இதே நிகழ்வு அந்த ஒரு இரவுக்குள் அதே நேரத்தில் நடந்திருக்கிறது. நாங்கள் அனைவரும் கூடிக்கூடி மறுநாள் மதியம் வரை பேசி என்ன பயன்? பிறகு அதன் பலனாக வாசல் கேட்டுக்கு புதிதாக இரண்டு மூன்று காவலாளிகள் (இரவு நேரத்திற்கென) நியமிக்கப்பட்டார்கள். திருட்டை முதலில் பார்த்துச் சொன்னவர்கள் என்ற பேரும் புகழும் எனக்கு கிடைத்ததா என்றால் அதுவும் தெரியவில்லை. ஹா ஹா ஹா. 

அது சரி..! இந்த வகையறாக்களை கொண்டு சென்றவர்கள் அதை என்ன செய்வார்கள்..? தெரிந்த கடைகளில் கம்மியான விலையில் தள்ளி விடுவார்களோ ? இல்லை எங்ககேனும் பிளாட்பாரத்தில் கடை விரித்து  போட்டிருப்பார்களோ? புரியவில்லை. கடை முகவரி பலகைகள் ஏதும் இல்லாது சிலசமயம் பிளாட்பாரத்தில் ஷூ, செருப்பு கடைகளை அப்போதெல்லாம் பார்க்கும் போதெல்லாம்  எனக்கு இதில் நம் வீட்டு காணாமல் போன ஷூக்களும் இருக்கும் எனத் தோன்றுவதுண்டு. ஆனால், இங்கு வந்த புதிதில் பார்த்த இக்கடைகளை இப்போது ஏனோ அவ்வளவாக காண்பதில்லை. 

அதே நாங்கள் இங்கு வரும் முன்பு ஒரு இடத்தில் வாடகைக்கு இருந்த போது, (அதுவும் மூன்றடுக்கு மாடி) இப்படியான ஒரு சம்பவம்  ஒரு இரவில் வாசலில் வைத்திருந்தில் நடந்து (எங்களுக்கு மட்டும்.) பல ஷீக்கள் செருப்புகள் மாயமாகி உள்ளது. அந்த திருட்டை எப்போது நடந்தது எப்படியென கண்டு பிடிக்கவே முடியவில்லை. காலையில் கண் விழித்ததுந்தான் பார்த்தோம் .அதுவும், அந்த வாசலில் கம்பி கேட்டுக்கு முன் அது எங்கள் பகுதியாகையால், கொடி கட்டி துணிகள் உலர்த்துவோம. அதில் பெரிய துணியாக ஒன்றை எடுத்து அதில் ஷீக்களையும், செருப்புக்களையும் வைத்து அழகாக பேக் செய்து எடுத்துக்கொண்டு போய் விட்டார்கள். மூன்று அடுக்கு வீட்டின் மேல் மாடியில்தான் வீட்டு உரிமையாளர்கள் இருந்தனர். அவர்களும் மறுநாள் நாங்கள் விஷயம் சொன்னவுடன் "அப்படியா....! இதுவரை இப்படி நடந்ததில்லையே ..!! என ஆச்சரியபட்டார்கள். அத்தோடு போச்சு...!!" ஷீக்களையும் காலணிகளையும் நாம்தான் போட்டுக் கொண்டு நடப்போமே தவிர அது தானாகவே ஒரு போதும் நடந்து வெளியில் சென்றிருக்க முடியாது..!" என மெளனமாக அந்த விஷயத்தை ஜீரணித்துக் கொண்டோம். :)) வேறு வழி...? 

அது போல அங்கிருந்த போது ஒரு மாலை நேரம் யாரோ ஒருவர் தன் இருச்சக்கர வாகனத்தை தெருவில் ஓரமாக நிறுத்தி விட்டு, அதன் கைப்பிடியிலேயே தன்  தலைக் கவசத்தையம் மாட்டி விட்டு அருகில் உள்ள கடைகளுக்கு செல்வதையும் யதேச்சையாக ஜன்னல் வழியாக கவனித்தேன். பிறகு கொஞ்ச நேரத்தில் அக்கம்பக்கம் பார்த்தபடி வேறொருவர்  வந்து (திருட்டுத்தனமாக) அந்தக் கவசத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வேறொரு பக்கமாக விரைந்து  நடந்து செல்வதை பார்த்து அதிர்ந்தேன். இப்படியும் நடக்குமா? என்பதே சும்மா ரோடை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு பதட்டமான ஆச்சரியத்தை ஏற்படுத்தியது . இந்த மாதிரி கவசங்கள் அவரவர்களுக்கு பொருத்தமாகத்தான் பார்த்து  வாங்க முடியுமென அப்போது வீட்டிலுள்ளவர்கள் சொல்லி தெரிந்து கொண்டேன். பிறகு எப்படி இப்படி? 

தலைகவசங்கள் கடைகள் மட்டும் இன்றும் பிளாட்பாரங்களில் ஜோராக நடைபெறுவதை பார்க்கிறேன்.ஆனால், நேர்மையான அவர்களையும் யாரோ ஓரிருவர் இப்படிச் செய்யும் தவறுதான் இப்படியெல்லாம் சந்தேகிக்க வைக்கிறது இல்லையா ?

கடந்த வருடம் ரொம்ப நாட்களாக பதிவுகள் ஏதும் போட முடியவில்லை. இதை எ. பியில் இந்த  செய்தி அறை பகுதியில் இந்தச்செய்தி வந்தவுடன் இந்த நினைவு வந்து எழுத ஆரம்பித்தும் முடிக்கவும் இயலவில்லை. இன்னமும் எழுத நிறைய உள்ளது. மனம் இருப்பனும் மார்க்கம் அமைய வேணடாமா? அப்போது எழுதியதில் சிலதை இந்த வருட துவக்கத்தில் முடித்து வெளியிடுகிறேன். 

ஒவ்வொரு நாட்கள்தாம் இறக்கையை கட்டிக் கொண்ட மாதிரி எப்படி பறக்கிறது. அதோடு நாமும்...ஆனால், நமக்கே தெரியாத அந்த நம் இறக்கையை ரிவர்ஸில் அடித்துக் கொண்டு பறக்கும் சக்தியை இறைவன் அனைவருக்குமே  தந்தானென்றால், பழைய உறவுகளோடு (பெற்றோர், உடன்பிறந்தோர்) மகிழ்ந்திருக்கும் மகிழ்வை பெறுவதோடு மட்டுமின்றி, ஆரோக்கியமான அந்த வாழ்வையும் திரும்பவும் பெறலாம் இல்லையா?  

(என்னடா..! பதிவு சின்னதாக இருக்கிறதே என நீங்கள் ஆச்சரியத்துடன் நினைக்கும் போது, என் வழக்கமான அறுவை கற்பனையையும் அளித்து விட்ட திருப்தயும் என்னுள்.. ஹா ஹா ஹா.) 

இரண்டாவதாக நம் சகோதரி கோமதி அரசு அவர்கள் கொஞ்ச கொஞ்சமாக உங்களால் இயலும் போது பதிவுகள் ஏதேனும் எழுதி வாருங்கள் என ஊக்கம் தந்து கொண்டேயிருந்தார் . அவர் சொல்படி அப்போது எழுத ஆரம்பித்தேன். விட்டுப் போனதை இப்போது நிறைவு செய்து விட்டேன்.அவருக்கும் என் மனமார்ந்த நன்றி🙏.

சென்ற வருடம் இறுதியில் எழுதத் தொடங்கிய இதை ஒரளவு முடித்தும் என் இளைய மகன் வரவினால், நேரம் சரியாகப் போகவே இந்த வருடம் வெளி வருகிறது. பதிவை படிப்போர்க்கும், கருத்துக்கள் தருவோர்க்கும் என் மனமார்ந்த நன்றி. 🙏.