Showing posts with label இனிப்பு. Show all posts
Showing posts with label இனிப்பு. Show all posts

Thursday, November 24, 2022

இனிய அனுபவங்கள்.

 ரவா வெல்ல கேசரி புராணம்...


ஸ்ரீ விக்னேஸ்வரனே அனைவருக்கும் துணை. 

அருள் மிகும்  விநாயகர் இந்த தடவையும் என் பதிவில் இடம் பெற வந்து விட்டார். அதுவும் முன்னாடி பதிவிலேயே (கதைப் பதிவுக்கும், அதற்கடுத்த  முந்தைய பதிவுகளுக்கும்) தங்கள் விருப்பமாக கருத்துக்கள் சொன்ன  என் அன்பான சகோதர சகோதரிகளின் அன்பான வேண்டுகோளிற்கு இணங்கி வந்த அவருக்கு என் பக்தியுடன் கூடிய நமஸ்காரங்கள். 🙏. 

அவரை வரவழைத்த உங்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏. 

இந்த பாம்பே ரவையை கேசரி செய்து சாப்பிட்டு எல்லோருக்கும், பழக்கந்தான்.. அதிலும் ஒரு ஆண், பெண் வாழ்க்கைப் பயணத்தில் அறிமுகமாகும் ஒரு நன்னாளில், இது இல்லாமல், இதன் அனுமதி இல்லாமல் அந்த காலத்தில் எந்த வித இனிப்பும் தலை காட்ட முடியுமா? போதாகுறைக்கு வாழைக்காய் பஜ்ஜியையும் இது துணைக்கு அழைத்துக் கொள்ளும். அதன் துணை இதற்கு ஒரு வாழ்க்கைத்துணை மாதிரி. பெயர் பொருத்தமும் பஜ்ஜி ஜொஜ்ஜி என இணையாகவும், பொருத்தமாகவும்  வைத்துக் கொண்டபடி அனைவரும் அவரவர் வாழ்க்கைத்துணை களை தேர்ந்தெடுக்கும் சமயங்களில் இதன் உலா அக்காலத்தில்  தொடரத்தான் செய்தது. ஆனால், காலங்கள் மாற மாற வேறு இனிப்புகள், காரங்கள் இதன் இடத்தைப்பிடித்து இவைகளின் அதிருப்தியை சம்பாதித்து கொண்டன. அதன் பின்னும் வந்த காலத்தில், ஒரு காப்பி, டீ, ஏதாவது பழ ஜூஸ், இல்லை வெறும் தண்ணீர் என்ற காலங்கள் மாறி, மேற்படி பையனும், பெண்ணும் உயர்தர உணவகத்தில் விலையுயர்ந்த ஒரு காஃபியை வாங்கி சிறிது சிறிதாக நீண்ட நேரம் அருந்தி, பெரிது பெரிதாக தங்கள் வாழ்க்கையைப் பற்றி அலசி ஆராய்ந்து, தங்கள் ஒப்புதல்களை பெரியவர்களுக்கு தரும் நாளை தீர்மானித்து, முடிவில் சேர்ந்தோ, அல்லது விலகியோ போகும் நவநாகரீக காலங்கள் என்று இப்போது வந்த பின் இந்த ரவை கேசரி வெட்கி தலைகுனிந்து இந்த சுபமான வைபவங்களுக்குள் கலந்து கொள்ளாமலே விலகி விட்டதோ என நான் நினைக்கிறேன். (தப்பித்தவறி இதற்கு இருந்த மதிப்பு இன்னமும் அநேக இடங்களில் நிலையாக இருந்தால், இதைப்பற்றி  இப்படி எழுதும் என்னை மன்னித்து விடுமெனவும் ஆணித்தரமாக நம்புகிறேன். :)))) ஏனென்றால் ரவா கேசரி எங்களுடைய பிடித்தமான உணவு. முன்பு நாங்கள் குழந்தைகளுடன் சேர்ந்திருந்த போது, சனி ஞாயறுகளில், மாலை ஏதாவது ஒரு காரமான ஸ்நாக்ஸாக வடை, பஜ்ஜி உ. கி. சேர்த்தோ , இல்லை உளுந்து போண்டா, குணுக்கு போன்றவற்றையோ செய்யும் போது இனிப்பான இது எங்களை மறக்காது அடிக்கடி இதுவும் வந்து உடன் சேர்ந்து கொள்ளும். ) 

எனக்கு தெரிந்து எனக்கும் சரி, என்னை சார்ந்த  என் இனிய சுற்றங்களுக்கும் இந்த ரவை கேசரி படலம் வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தின் முதலாவதாக தொடர்ந்தது . சென்னையிலிருந்து  என் கணவர்  என்னை பெண் பார்க்க வரும் போது காலை நேரம். பத்து பதினொன்று என அந்த நேரத்தில் கேசரியும், பஜ்ஜியும் அத்தனை பேருக்கும் முன்னால் அமர்க்களமாக அணிவகுத்து நின்றன. இத்தனைக்கும் காலை சீக்கிரமாகவே எழுந்து காலை டிபனை (வழக்கப்படி இட்லிதான்) முடித்து விட்டு வீட்டிலிருந்த நாங்கள் அனைவரும்  காத்திருந்தோம். அவர்களும்  (அவர்கள் அக்கா வீட்டிலிருந்து) காலை டிபனை முடித்து விட்டு வந்திருந்தார்கள். பெண் பார்க்கும் வைபவங்கள் முடிந்த பின் பெரியவர்களுக்குள் பேச்சு வார்த்தைகள் முடிந்ததும், உடனே மாலை நிச்சயதார்த்தம் என முடிவானது. ஏனென்றால் அப்போது சென்னையிலிருந்து அடிக்கடி வந்து போவது கொஞ்சம் கடினம். அவர் அலுவலகத்தில் அடிக்கடி விடுமுறையும் எடுக்க இயலாது என்பதினால், பெரியவர்கள் கலந்தாலோசித்து இந்த அவசர முடிவு. 

அன்றைய மாலைக்குள் எங்கள் அம்மா (அப்போதெல்லாம் யாரையும் உடனடியாக சமையலுக்கு அழைக்கும் வசதி கிடையாது) வடை பாயாசத்துடன் இனிப்பு வகைகளையும் செய்து சமையலையும்  (அதுவும் நவீன வசதிகள் ஏதுமற்ற சூழ்நிலைகளில் ) தடபுடலாக முடித்து நிச்சயதார்த்தத்திற்கு மனையிலும் அப்பாவுடன்  வந்தமர்ந்தார். அதற்குள் வாத்தியார் ஏற்பாடு, பிற வேலைகள் என அப்பாவும், அண்ணாவும் மன்னியும் பயங்கர பிஸி. வீட்டிலேயே நடைபெற்ற அந்த அவசர விழாவுக்கு அக்கம் பக்கம் உறவினர்கள், தெரிந்தவரகள் என நிறைய பேர்களை விழாவில் கலந்து கொள்ளவும் , சாப்பிடவும்,  அழைத்திருந்தோம் .மாப்பிள்ளை வீட்டை சார்ந்தவர்கள் பத்து பேர்களுக்கு மேல் வந்திருந்தனர். மனையில் வைக்க சீர்  பட்சணங்களும் (அதை முதல்நாளே நிச்சயதார்த்திற்கென அம்மா, பாட்டி செய்து வைத்து விட்டார்கள். "என்னம்மா இது  இன்னும் முதல்படியிலேயே கால் பதியவில்லை... அதற்குள் இரண்டாவது படி மேல் காலை வைக்க முயற்சி செய்கிறாயே" என நாங்கள் கேட்டும், அம்மாவுக்கு  என்னவொரு அசைக்க முடியாத நம்பிக்கை....!! "சுபமஸ்து எல்லாம் நல்லபடியாக நடந்து விடும்.. அப்படியில்லையென்றால், நமக்கு இதையெல்லாம் சாப்பிட வாய் இல்லையா என்ன?" என்று உறுதியுடன் பதிலளித்து விட்டு மாலாடு, ரவாலாடு, தேன்குழல், திரட்டுப்பால் என எல்லாம் வகையாக செய்து விட்டார்.)  தயார் நிலையில் இருந்தன. 

இத்தனை பேருக்கும் சமையல், வீட்டிலுள்ள எங்களுக்கு காலை டிபன், பின் இடையில் வந்தவர்களுக்கும் இனிப்பு காரத்துடன் டிபனும் (இட்லிகளும்) என பரபரப்புடன் அவர்கள் (எங்கள் அம்மாவும், பாட்டியும். ) விடாமல் செய்ததை என்னால் இன்னமும் மறக்க இயலாது. இப்போது உள்ளவர்களால் இப்படி தனியாக அத்தனையும் செய்யவே இயலாது. நல்லவேளை...! என் முதல் பெண் பார்க்கும் படலத்துடன் அத்தனையும் சுபமாக முடிந்தது. மேலும் நிறைய தடவைகள் இந்த பஜ்ஜி கேசரி சிரமங்களை என் பெற்றோருக்கு நான் தர வைக்கவில்லை அந்த இறைவன். 

திருமணமாகி எங்களுக்கு குழந்தைகள் பிறந்த காலத்திற்கு பின் என் புகுந்த வீட்டின் ஒரு சுற்றத்திற்காக  ஒரு இடத்தில் பெண் பார்க்கும் படலத்திற்கு சென்றிருந்தோம். பெண் வீட்டுக்காரர்கள்  ஏற்கனவே எனக்கு மிகவும்  அறிமுகமானவர்கள். (அக்கம்பக்கமாக ஒரு இடத்தில் முன்பு ஒரு சமயம் நாங்கள் குடியிருந்ததில் ஏற்பட்ட  நெருங்கிய நட்பு) நாங்கள் உறவு என கூட்டமாக அவர்கள் வீட்டுக்கு பெண் பார்க்கப் போனதோ கிட்டத்தட்ட பத்து பதினைந்து பேர். அத்தனை பேருக்கும் அவர்கள் சுடச்சுட வாழைக்காய் பஜ்ஜிகள், நெய் சொட்ட கேசரி என அமர வைத்து போதும் போதுமென தடுத்தும் அன்போடு விடாப்பிடியாக பறிமாறினார்கள். பிறகு நல்ல பெரிய டம்ளர்களில் காஃபி. மயங்கி கீழே விழாத குறையாக சாப்பிட்ட (சாப்பிட வைத்தார்கள்) பிறகு பெண் பார்க்கும் படலம் முடிந்தது. 

அந்தப் பெண்ணை நான் ஏற்கனவே பல தடவைகள் பார்த்து பேசியுள்ளேன். ஆனால், மாப்பிள்ளை உறவுகள்  அப்போதுதான் பார்க்கிறார்கள். இறுதியில் வீட்டுக்கு வந்ததும் அந்தப் பெண் வேண்டாமென மாப்பிள்ளை பையன்  சொன்னதும் எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. (அடாடா.. அவர்கள் வீட்டில் அன்று  தின்றதிற்காகவாவது ஒத்துக்கொள்ள கூடாதா? என்று என் மனதிற்குள் அந்தப்பையனிடம் பல முறை கேட்டு கேட்டு அலுத்து விட்டேன்.) என்னசெய்வது? "இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று" என்ற மாதிரி பிறக்கும் போதே இதையெல்லாம் முடிப் போட்டல்லவா இறைவன் அனுப்பி வைக்கிறான். 

பெண் வீட்டுகாரர்களுடன் அநநிகழ்வுக்குப் பின்னும் நான் பேசி பழகினேன். எனக்குத்தான்  சங்கடமாக இருக்கிறதென்று  வருத்தமாக அவர்களிடம்  சொல்லும் போதெல்லாம் அவர்கள்தான்" "இது எல்லாம் உலகில் சகஜந்தான்" என என்னை சமாதானபடுத்துவார்கள். அவர்களின் நல்ல மனதை எண்ணி நானும் அவர்களுடன் எப்போது பேசும் போதும் வியந்திருக்கிறேன். இன்று அந்தப் பையனுக்கும், பெண்ணிற்கும் வெவ்வேறு இடங்களில் திருமணமாகி நலமாக, வளமாகத்தான் இருக்கிறார்கள். இதைதான் "இறைவன் செயல்" என்கிறோம். 

அட......! இன்னமும் இவர் தலைப்புக்கு வரவில்லையே...!  என நீங்கள் எண்ணலாம். நான் இப்போது ஒரு தினம் இதைச் செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் போட்டு செய்தேன். கடவுளுக்கும் நேவேத்தியமும் செய்யலாம். சர்க்கரை சேர்க்கக் கூடாத என்னைப் போன்றவர்களும் இது மாதிரி செய்தால் கொஞ்சம் (கொஞ்சந்தான்) சாப்பிடலாம் என்ற நினைப்பில் வெல்லம் சேர்த்து செய்தேன். 

இதைப் பகிர நினைக்கும் போது, இந்த கேசரி  சம்பந்தபட்ட நிறைய புகைப்படங்களை நான் எடுக்கவே இல்லையே என்ற நினைவு வந்தது. அதனால், என் மனதின் எண்ணங்களும் ரவையோடு சேர்ந்த வெல்லமாய் உடன் கலந்து  பதிவாக வந்து விட்டது. ரவையின் அளவுடன் கண்ணளவாக வெல்லம் கரைத்து வடிகட்டி சேர்த்து கிளறும் போது நெய்யும் சேர்த்து நன்றாக வந்த இந்த வெல்ல கேசரியை நீங்களும் கொஞ்சம் எடுத்து சுவைக்கலாமே.. மேலும் மு. ப. , ஏலப்பொடி போட்டவைகளை படங்கள் எடுக்கவேயில்லை.அதறகாக என்னை மன்னிக்கவும். ஆனாலும் சுவையாக வந்த கேசரிக்காக நீங்கள்  அனைவரும் இந்தப் பதிவையும் படிப்பீர்கள் என அன்புடன் நம்புகிறேன். உங்களனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 


   
வெல்ல கேசரியையும், என் சுவையான  அனுபவ எண்ணங்களையும் முறையே பார்த்து படித்து ரசித்தமைக்கும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் அன்பான நன்றி... 🙏.. .

இது இப்போது எங்கள் வீட்டின் சின்னக் குழந்தைகளுக்காக கிளறிக் தந்த ரவா ஜீனி கேசரி. நான் வெல்ல கேசரி பதிவை எழுதி முடித்ததும் அதற்குப்போட்டியாக இதுவும் வந்து விட்டது.



குழந்தைகளுக்கு மு. ப. உடைத்து வறுத்துப் போட்டால் அது அவ்வளவாக அவர்களுக்கு பிடிக்கவில்லை. தனியே எடுத்து வைத்து விடுகின்றனர். அதனால் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி வறுத்து இறுதியில் ஏலக்காய் பொடியுடன் சேர்த்து இதையும் கேசரியுடன் கலக்க  வைத்திருக்கிறேன். 


பதிவை படித்து இரண்டு விதமான கேசரிகளை எடுத்துச் சுவைத்த அனைவருக்கும் மிக்க நன்றி. 🙏. . 

Sunday, August 19, 2018

மை (MY) மா

இதை பதிவில் போட வேண்டுமென்று எழுதி நாட்களாகி விட்டன. அதன் பின் ஏதேதோ இடுக்கைகள் தற்செயலாய் அமைந்து விட்டன. ஆனால் எந்த ஒரு செய்கைக்கும் ஒரு காரணம் வந்து, பிடிமானமாக நின்று தள்ளி விடும். இல்லை தள்ளிக்கொணடு போகும். இது இயற்கையின் நியதி. அதுபோல்,  சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் பதிவில் அடுத்தடுத்து, ஜீரா மைசூர்பாகு, மொறு மொறு மைசூர்பாகு என இரு பதிவுகள் வெளி வந்த காரணம், என் இந்த பதிவையும் பிடிவாதமாக தள்ளி வெளி கொணர்ந்தது.  நன்றி சகோதரி தங்களுடைய மைசூர் பதிவுகளுக்கு.. 
என் பேத்தியின்( மகளின் மகள்) மூன்றாவது பிறந்த நாளுக்கு ஒரு இனிப்பு செய்யலாமென்று இருந்தேன். வழக்கப்படி அதுவா, இதுவா என்று ஆயிரம் இனிப்பு பட்டியல்..  ஆயிரமா? அவ்வளவு செய்வீர்களா...என்று நீங்கள் அதிசயப்பது புரிகிறது... (அதில் ஒன்று கூட உருப்படியாக வரும் என்பதற்கு அப்போதைக்கு என்னிடம் எந்த ஒரு அத்தாட்சியும் இல்லை என்பது வேறு விஷயம்....) அப்புறம் கேக் வேறு இருக்கே, வேறு இனிப்பு எதற்கு? பேசாமல் பாயா (கூடவே "சம்" சேர்த்து கொள்ள வேண்டும்.)  வைத்து விடு என்ற ஆலோசனைகள் வேறு நடுநடுவில்..  நீலகிரி எக்ஸ்பிரஸ் படத்தில் நடிகர் "சோ" வின் காமெடியை பார்த்த பின் (டி. வியில் அந்தப் படம் நான்கைந்து முறை பார்த்தாகி விட்டது.)  நாங்கள் அப்படித்தான் அதை விளிப்பது வழக்கம். சரி.. என நானும் மனதுக்குள் "மை"யை (எழுதும் "மை" "இங்க்" அல்ல... மைசூரின்  நிஜமான "மைசூர்பாகை" ) நினைத்துக் கொண்டு மெளனமாயிருந்து விட்டேன்.  இதை சிம்பிளாக செய்கிறேன் என்றால், இது எதற்கு அம்மா? இதை விட லட்டு, பாதுஷா என்று "ஆயிரத்தில் ஒன்றாக" மறு சுழற்சி மறுபடியும் ஆரம்பித்து விடும்.

சிறிது  நேரத்தில் அவரவர் பணிகளில் அவரவர் மும்முரமாக , என் பணி துவங்கியது. வேறென்ன? "மை" சூரை சீரமைக்கும் பணிதான்...

ஒரு கிளாசில் கோபுரமாக கடலைமாவு சலித்து எடுத்துக்கொள்ளவும். அதை அளவில் 2, அல்லது  இரண்டரைஅளவு சர்க்கரையும் எடுத்துக்கொள்ளவும். மாவை வெறும் கடாயில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு, லேசான பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.


அதே அளவு கிளாஸ் நிறைய நெய்யை உருக வைத்து தயாராக வைத்துக் கொள்ளவும்


ஒரு பெரிய அகலமான தட்டில் உருக வைத்த நெய் கொண்டு அதன் விளிம்புகளிலும் நெய் படுமாறு நன்றாக தடவி வைத்துக் கொள்ளவும். அப்போதுதான் சூடான "மை" துண்டுகள் சிரமமின்றி ஒரே மாதிரி உருப்பெறும். 


கடலை மாவை வறுத்த பின் நெய் உருக வைத்து எடுத்து கொண்ட அதை கடாயில் தயாராக எடுத்து வைத்திருக்கும் இரண்டரை அளவு சர்க்கரையை அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.


சர்க்கரை பாகு பதமெல்லாம் அவசியமில்லை.  நன்கு கரைந்து, போட்ட சர்க்கரை (ஜீனி) உருகி வந்த நிலையில், வறுத்து வைத்திருக்கும் கடலைமாவு சிறிது சிறிதாக சேர்த்து கட்டி தட்டாதபடிக்கு, கை விடாமல் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். நல்ல கெட்டியாகும் வரை உருக வைத்திருக்கும் நெய்யையும், அடிக்கடி விட்டு கிளற வேண்டும். ஒன்று சேர்ந்து பூவாக சற்று நுரைத்து வரும் தருணத்தில், நெய் தடவி வைத்திருக்கும் தட்டில் கொட்டி, நன்றாக ஒரே மாதிரி சற்று அழுத்தி நிரப்பி விடவும்.


வறுத்த பின்பும் மறுபடியும் சலித்து வைத்திருக்கும் கடலை மாவையும் சேர்த்து, கை விடாது கிளறும் போது அந்தப் படம் எடுக்க முடியவில்லை. (எங்கே..? கிளறுகிற பதந்தான் கைகளை விடாது பிடித்திருக்கிறதே ... . இரண்டாவதாக உதவிக் கரங்களை நாடலாமென்றால், அவரவர்கள் அவர்கள் பணியில் மும்மரமாக நான் கிச்சனில் "மை" யை கிளறியது கூட அறியாமல் ஈடுபட்டிருந்தார்களே...  அதனால் "போனஸாக" அதே படம் மறுபடியும் இடம் பெற்று மகிழ்கிறது.


ஒரு பத்து நிமிடம் தட்டில் கொட்டியவை ஆசுவாசப்படுத்திக் கொண்டதும், நமக்குப் பிடித்த கோணத்தில், சிறு சிறு துண்டுகளாக ஒரே மாதிரி வெட்டிக் கொள்ளவும். சதுரமாகவோ, முக்கோணமாகவோ, நீளவாக்கிலோ, எப்படியோ வட்டத்திலிருந்து வேறுபட்ட வடிவமாக பிரித்து அவரவர் விருப்பபடி அதை மாற்றிக் கொள்ளவும்.



மேலும் ஒரு ஐந்து நிமிடத்தில் அந்த தட்டுடன் எடுத்து வேறு ஒரு தட்டில் கவிழ்த்தால், "மை" துண்டுகள் பொல பொலவென அழகாக நாம் விரும்பி வெட்டிய உருவத்தில் உதிர்ந்து விடும். அதற்குதான் அந்த தட்டில் ஆரம்பத்தில் சிறிது தாராளமாகவே நெய்யை தடவச் சொன்னேன்.

நான் அந்த கிளறிய கடாயிலேயே கவிழ்த்து ஆரம்பித்த முதல் இடத்திலேயே "மை"யை சரணாகதி ஆகும்படி பணித்து விட்டேன். அதுவும் இன்றைய தினம் நான் சொன்ன பேச்சுக்கு மறுபேச்சின்றி கட்டுப்பட்டது. (புகைப்படங்களுக்கு போஸ் தரும் ஆவலினால் வேறு,  அதன் வால்தனத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு அமைதியாக என்னுடன் ஒத்துழைத்தது.) அதற்கு ஒரு நன்றி.. தேங்கஸ் "மை" ம்மா...(நான் அதற்கு வைத்திருக்கும் செல்லப் பெயர்.)


அப்புறமென்ன... அழகாக தட்டில் வரிசைப் படுத்திய "மை" கள் பேத்தியின் பிறந்த நாளுக்கு "நாங்க ரெடி..... நீங்க........ யா? என்றது.


இதெல்லாமே, இத்தனை நேரம்  "மை"க்காகவும்," My" காகவும், பொறுமையுடன் உடனிருந்து பார்த்து கேட்டு ரசித்த உங்களுக்காகத்தான்... யோசிக்கவே வேண்டாம்.. எடுத்துக் கொள்ளுங்கள்... சுவையில் எப்படி இருக்கிறது? பதிலாகவே சொல்கிறேன் என்கிறீர்களா?  மிக மிக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளேன்  நான் மட்டுமல்ல... "மை" ம்மாவுந்தான்.

                                     🎆🙏🎆
                                     நன்றி ..
===================🌼===================
நன்றி படம் மட்டும்=======கூகுளுக்கு நன்றி................

                                     

Friday, June 5, 2015

இனிப்புடன் ஆரம்பம்...



வலைத்தளம் ஆரம்பித்து எழுத (கிறுக்க) வந்த போதே  என் தமயந்தி பாகத்தையும்  (ஆண்கள் சமையல் என்றால் நள பாகமாகும் போது பெண்களின் சமையலை தமயந்தி பாகம் என்று சொல்லக்  ௬டாதா..? ) அவ்வப்போது வெளியிட எண்ணம் கொண்டேன். ஆனால் அது உண்மையாகவே “தமயந்தி பாகமாகி” விட்டால் என்ன செய்வது என அமைதி காத்து விட்டேன். (ஏனெனில், அரச குடும்பத்தில் பிறந்து செல்வ செழிப்பில் வாழ்வின் முதல் அத்தியாயத்தை கழித்த தமையந்தி சமையல் அறையே எவ்விடம் உள்ளது என அறியாதவளாகத்தானே இருக்க முடியும். அதன் பின்புதானே சமைப்பது..!) ஆனால் அரசனாகப்பிறந்தும், விதியின் பரிசாக ஆய கலைகள் அறுபத்திநான்கிலே ஒன்றான சமையல் பக்குவத்தில் கைமணமாக செய்து முடிக்கும் திறன் நளனிடம்  இயல்பாகவே வரப்பிரசாதமாக குடி கொண்டிருந்தது. நளனுக்கு நிகர் வேறு யாருமில்லை (இன்றளவும்) என்னும் வண்ணம் “நள பாகமென்ற” அடை மொழி அந்த அரசனிடமிருந்து சுவையாக சமையல் செய்யும் அனைவரிடமும்  ஆண் பெண் பேதமின்றி ஒட்டிக்கொண்டது. ஆனால் சந்தர்ப்பவசத்தால் ஆண்கள் உணவு தயாரிக்கும் போது பொதுவாக “இன்று நள பாகந்தான்” என்று அலுத்துக் கொள்வது மாதிரி சொல்லிக்கொள்ளும் வழக்கம் வந்து விட்டது. உண்மையில் சுவையான பாகந்தான் “நள பாகம்”. அந்த மாதிரி சுவையான உணவு கலையில் பல சகோதரிகள் வலைத் தளத்தில் கலக்கி கொண்டிருக்க, என் சமையல் குறிப்புக்கள் தமையந்தி பாணியில் அமைந்து விட்டால் என்ன செய்வது என்ற தயக்கம் இது நாள்வரை கைகளை கட்டி விட்டது. இன்று ஒரு மாற்றத்திற்காக இந்தப்பதிவில் என் சமையலையும் சற்று இனிப்பாக ஆரம்பிக்கட்டுமா.?
வேறு வழியில்லை.! சகித்துதான் ஆகவேண்டும். விதிதான் அவ்வளவு சுலபமாக எல்லோரையும் விட்டு விடுமா என்ன.? (உங்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.)


மைசூர் பாகு….


 கடலை மாவு சலித்தது இரண்டு கப்

சர்க்கரை நாலு கப் (மாவுஒன்றுக்கு இரண்டு சர்க்கரை என்ற கணக்கில் சொல்லியுள்ளேன். இனிப்பு அதிகம் தேவைபடுகிறவர்கள்  ௯ட அரைக் கப் எடுத்துக் கொள்ளலாம்.)

நல்ல நெய் இரண்டு கப் (அவ்வளவு கொழுப்பா உனக்கு ..?என்று என்னை கேட்பவர்கள்) அதிகம் என நினைத்தால் அரைக் கப் குறைத்துக் கொள்ளவும். வாயில் போட்ட மறுநிமிடம் கரைய வேண்டுமென நினைத்தால் அந்த மாதிரி கேள்வி ஏதும் கேட்காதீர்கள்.!

ஒரு வட்ட( ஓவல் ) வடிவ சற்று ஓர விளிம்பு உயரமாக உள்ளத் தட்டில் (அதன் விளிம்பின் சுவர்களில் நன்கு படியுமாறு ) தட்டு முழுவதும் உட்பக்கம் நெய் விட்டு பரவலாக தடவி வைத்துக் கொள்ளவும்.

அவ்வளவுதான் ! இனி மைசூரை (ஊரை இல்லைங்க) கிண்ட போகலாமா?

கடலை மாவை ஒரளவு பச்சை வாசம் போகும் வரை சற்று நிறம் மாறும் வரை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். அதை ஒரு தட்டில்  கொட்டிக் கொண்டு அதே கடாயில் சர்க்கரையை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து அது மூழ்கும் வரை (ஒரு கப்) தண்ணீர் விட்டு கிளறினால் சற்று நேரத்தில் சர்க்கரை கரைந்து கொதி வரும். அப்போது வறுத்து வைத்திருக்கும் கடலை மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டித் தட்டாமல் கிளறவும். இரண்டு கலவையையும் சேர்ந்து கை விடாது கிளறும் போது சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளற கிளற இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக வரும் போது, ஏற்கனவே நெய் தடவி வைத்திருக்கும் தட்டில் கொட்டி சமன்படுத்தி சற்று ஆறிக் கொண்டுள்ள போதே, வில்லைகள் செய்து வேறு ஒரு பெரிய தட்டில் அதை கவிழ்த்தால், சூடான சுவையான மைசூர் பாகு கட்டிகள் தயார்.

இந்த மைசூர் பாகு இருக்கிறதே.! அது வாயில் விண்டு போட்டால், (முதலில் விண்டு போடும் அளவுக்கு இலகுவாக இருக்க வேண்டும். கை விரல்களின் எலும்பை உடைத்து விடும் அளவுக்கு இரும்பை ஒத்ததாக இருக்க ௯டாது. கிளறும் போது விள்ளும் பதத்தை அதுவோ, இல்லை நாமோ கொஞ்சம் மறந்து விட்டாலும் இரும்பு கட்டிகளாகும் நிலை சாதாரணமாக சொல்லிக் கொள்ளாமல் உருவாகி விடும். எனவே எச்சரிக்கை.!) வாயில் கரைய வேண்டும். கண்கள் இரண்டும் கடாயிலிருக்க கவனம் முழுதும் மைசூரில் இருக்க வேண்டும். நான் சொல்வது நாம் செய்யும் “மைசூர் பாகில்” இருக்க வேண்டும். அதை விடுத்து சென்ற தடவை சென்று வந்த எழில் மிகும் பிருந்தாவனத்தையும், அருள் தரும் சாமுண்டிஸ்வரி கோவிலையும், கண் கவரும் அரண்மனை அழகையும், இன்னும் விழிகளில் மிச்சம் மீதி இருக்கும் உண்மையான “மைசூர்” அழகையும் அசை போட்டபடியிருந்தால், மைசூருக்கே சென்று கல் கொண்டு உடைத்தாலும் நாம் செய்யும் மைசூர் பாகு உடையாது. (இப்படி ஆதியில் யாராவது செய்து பார்த்துதான் இதற்கு இந்த நாமகரணம் உருவானதோ என்னவோ.? அது வேறு விஷயம்.)

அந்த காலத்தில் முன்பெல்லாம் வார மாத பத்திரிக்கை இதழ்களில் தீபாவளி சிரிப்பு வெடிகள் என்றால், புது மாப்பிள்ளையும், இந்த மைசூர் பாகும்  அனாசயமாக இடம் பெற்று விடும்.

அந்த வகையில் ஒரு நகைச்சுவை … 
தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு வந்து கொண்டாடி விட்டு தன் வீட்டிற்கு திரும்பும் போது கணவன் மனைவியிடம் ௬றுகிறான்.

“நான் தீபாவளிக்கு எதிர்பார்த்து வந்த மாதிரி உங்க வீட்டிலே சீர் செனத்தி ஏதும்தான் கிடைக்கலே. விரல்லே இருக்கறதே தெரியாத மாதிரி ஒரு மோதிரமும், ஊர் போய் சேர்றதுக்குள்ளே கிழிய மாதிரி ட்ரெஸூம் எடுத்து கொடுத்து உங்க அப்பா தீபாவளியை ஓட்டி விட்டுட்டார். உங்கம்மா செஞ்ச தீபாவளி பலகாரத்துலே, அந்த மைசூர் பாகையாவது ஒருநாலு ௬ட கேட்டு வாங்கிக்கோ.” என்று கணவன் “அன்பாய் “மனைவியிடம் கட்டளை போடுவான்.

மனைவி “ஏனாம்!  நேத்தைக்கு ௯ட ரெண்டு போட்டுக்கோங்கன்னு அம்மா ஆசையா போட வந்தப்போ, எனக்கு ஏற்கனவே “பல் வலி” அத்தைன்னு, சொல்லி அம்மாவை வருத்தப்பட வச்சேளே.! இப்ப ௯ட வேறே கேட்டு வாங்கனுமாக்கும்.? என்று அழகாய் நொடிக்க,

அட! ஒரு காரணமாய்தாண்டி சொல்றேன்.! கல்யாணத்துக்கு சீரா உங்கப்பா கொடுத்த கட்டிலின் கால் ரெண்டு சரியில்லை.! படுத்தா ஆடிண்டேயிருக்கு இப்போ  உங்கம்மா செஞ்ச  மைசூர் பாகை முட்டு கொடுத்தாவது ஆட்டத்தை நிறுத்தினா  மனுசன் இனியாவது நிம்மதியா தூங்குவேனில்லையா.? என்று மேலும் கணவன் கிண்டலடிப்பான்.

இப்படியான  நகைச் சுவைகளை மனதில் நிறுத்தியபடி, வீட்டுக்கு வந்திருக்கும் என் பெண்ணிற்காக நானும் இந்த மைசூர்பாகை செய்து (இதற்கு முன் நிறைய தடவை செய்து மைசூரூக்கு மிக அருகேயோ, இல்லை, அதையும் தாண்டியோ, ஓடிய அதை விடாமல் பிடித்திழுத்து பெயர் சூட்டு விழா நடத்தியாயிற்று. ) வீட்டிலிருக்கும் அனைவரும் சாப்பிட்டோம். (நல்ல வேளை! விடுமுறைக்கு வந்திருந்த என் மாப்பிள்ளைக்கு பல்வலி ஏதுமில்லை.! மைசூரும் வாயில் போட்டதும், (எங்களுருக்கு கொஞ்சம் அருகில் இருப்பவள்  இவள் என்று இரக்கப்பட்டதால் “அது” என் பெயரை காப்பாற்றி விட்டதோ என்னவோ?)  நன்றாகவே கரைந்தது. மாப்பிள்ளையும் ஊருக்கு போகும் போது “பார்சல்”ஏதும் கேட்கவில்லை!



நீங்களும் இதை எடுத்துக்கொண்டு கரைகிறதா, நன்றாகயிருக்கிறதா ?என்று சொல்லுங்களேன். ரொம்பவும் நன்றாகவேயிருக்கிறது என்று சொல்லபவர்களுக்கு (“பல்வலி” என்று பொய்யாக ஏதேனும் ௯றித் தப்பிக்க மட்டும் செய்யாதீர்கள் ..!) இதுமாதிரி சமையல்களை சுவையாகச் செய்து அவ்வப்போது பரிசாகத் தருகிறேன்.
                                      சாப்பிட்டவர்களுக்கு  நன்றி.!

           மறுபடியும் வேறு ஒரு சமையல் டிப்ஸுடன் வந்து சந்திக்கிறேன்.