Wednesday, January 31, 2018

முருகனின் திருக்கல்யாண வைபோகம்..



ஓம் விக்கினேஷ்வராய  நமஹ...



அனைத்துலகங்களையும் தன்னுள்ளே  அடக்கி , ஒவ்வொரு ஜீவராசியும் செய்யும் செயல்களுக்கு அருள்பாலித்து வரும் கணேஷமூர்த்திக்கு முதல் வணக்கம்.


பாலும் தெளிதேனும்  பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்.
கோலம் செய் துங்கக்கரிமுகத்து தூமணியே! நீ
எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா.

என பாடிய ஒளவைக்கு அருள்  செய்த  வேழ முகத்தோனே.
வேலவனின் புகழ் பாட உன் துணை வேண்டினேன்.
தெய்வயானையுடன் வள்ளியை கரம் பிடித்த உன்
இளையோனின்  கதையை செப்பிட வந்தேன். உந்தன்.
இன்னருளாலே வேண்டிய வடிவில் தந்தருள்வாய்!


முருகன், குமரன் அழகன், ஆறுமுகத்தவன் என்று பெற்றவர்களாலும். தேவாதி தேவர்களாலும்.,செல்லமாக அழைத்து வளர்ந்து வந்த வேலவன் திருமண பருவத்தை  வந்தடைந்தார். அதற்கு முன் அவர்  எடுத்த அவதார நோக்கம் பூர்த்தியடைய வேண்டுமே!  அதற்காகத்தானே தேவாதி தேவர்களெல்லாம் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.


பிரம்மனை நோக்கி தவமிருந்த சூரபத்மன் என்ற அசுரன் தானும், தன்னுடன் பிறந்தவர்களும் சிவபெருமானின் புதல்வனால் மட்டுந்தான் அழிய வேண்டுமென வரத்தை பெற்றுக்கொண்டு, அனைவரையும் துன்புறுத்தியபடி மூவுலகங்களையும், கட்டி ஆண்டு கொண்டிருந்தான். விண்ணுலகத்திலிருக்கும் தேவாதி தேவர்களெல்லாம், இதற்கு என்ன விமோசனம் என்று யோசித்தபடியே, அசுரன் தரும் துன்பங்களையெல்லாம் பொறுத்தபடி வாழ்வை நகர்த்தி கொண்டிருந்தார்கள். எதற்கும் ஒரு நேரம் காலம் என்ற ஒன்று வரவேண்டுமே! அதன்படி அனைவரும் ஒருநாள் ஒன்று கூடி சிவனாரின் புதல்வனால்தான் நமக்கு நல்லவழி பிறக்கும்! ஆனால் சிவனின் கடும் தவத்தை எப்படி கலைத்து நாம் படும் துன்பங்களை எடுத்துரைப்பது? என்று செய்வதறியாது பேசிக் கொண்டிருக்கும்  போது, அங்கு வந்த நாரதரின் யோசனையின் பேரில்  கடும் யோக தவத்திலிருக்கும் சிவபெருமானின் மேல் மன்மதனைக் கொண்டு அம்பெய்தி அவர் தவத்தை கலைக்க செய்யவே, கோபம் கொண்ட சிவபெருமானார் நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த தீப்பொறியினால், மன்மதன் எரிந்து சாம்பலானான். எப்போதுமே முக்காலமும் உணர்ந்த நாரதர் கலகம் தீமை ஏதும் விளைவிக்காமல் நன்மையில்தான் முடியும்!. அதன்படி மன்மதனை சுட்டெரித்த அந்த தீப்பொறியானது  முற்றிலும் அடங்காது சுற்றி வரவே அதை வாயு பகவானை அவருடைய சக்தியால் சரவண பொய்கையில் கொண்டு சேர்க்கும்படி நாரதர் கூறினார்.  தடாகத்தில் பூத்திருந்த ஆறு தாமரை மலர்களில் வந்து சரணடைந்த அந்த தீப்பொறி ஆறு அழகிய குழந்தைகளாக உருமாறியது. அந்த குழந்தைகளைக் கண்ட தேவர்கள் மிகுந்த மனமகிழ்ச்சி அடைந்தார்கள். சிவனின்  குழந்தைகளாக ஒன்றில்லாமல் ஆறு குழந்தைகள் உருவாகி விட்டனர். அறுவரில் ஒன்று நம் இன்னல்களை தீர்த்துவிடுமென்று மகிழ்வடைந்தார்கள். ஆறுவரும் ஒன்றாகும் விந்தை கூடிய விரைவில் நடக்குமென்பதை அவர்கள் அறியார். ஆனால் அதே சமயம் தங்கள் நன்மைக்காக எரிந்து சாம்பலான மன்மதனை எழுப்பித்தரும்படி கருணை வடிவான அன்னை உமா மகேஷ்வரியை நோக்கி அனைவரும் பிரார்த்தனை செய்தார்கள்.

 
 

அப்போது அங்கு கோபம் தணிந்து அன்னை உமா தேவியுடன் எழுந்தருளிய சிவபெருமானும், சாந்தமான முகத்துடன் தேவர்களை பார்த்து" இனி கவலையேதும் வேண்டாம்.! தாமரை மலரில் அவதரித்த என் புதல்வன் சூரபத்பனை அழித்து  உங்களை இன்னல்களிலிருந்து விடுவிக்கும் நாள் நெருங்கி விட்டது. உங்கள் விருப்பப்படி மன்மதனை முன்னிலும் சக்தி வாய்ந்தவனாக எழுப்பித்தருகிறேன்.''  என்று ஆசிர்வதித்தார். மீண்டும் உயிர்பித்து எழுந்த மன்மதன் சிவனையும் அன்னையையும் கண்ட மகிழ்வுடன் தான் செய்த பிழை பொறுத்தருளும்படி கேட்டுக் கொண்டான்.  அதன் பின் கார்த்திகை பெண்கள் அறுவரை தாமரை மலர்களில் அவதரித்த அழகான அக்குழந்தைகளை சீராட்டி பாராட்டி வளா்த்து வரும்படி பணித்து விட்டு உமையும் சிவ பெருமானுடன் கயிலைக்கு ஏகினார். குழந்தைகள் வளர்ந்து வரும் நாளில் ஒரு கார்த்திகை தினத்தன்று வளர்ந்து வரும் தன் குழந்தைகளின் நலனைக் காண வந்த அன்னை உமா தேவி அனைவரையும் ஒரு சேர தன்னுடன் அணைத்துக் கொண்டதும் ஒருடலும், ஆறுமுகமும் கொண்ட ஒரே குழந்தையாக மாறி ஆறுமுகன் என்று பெயரையும் பெற்றார் சிவகுமாரர்.





இவ்வாறாக சிவனாரின் குமாரர் அன்னையின் அன்போடும், அருளோடும் வளர்ந்து பால்ய பருவத்திற்கே உரித்தான குறும்புகளை பெற்றவரும் மற்றவரும் போற்றும்படி செய்து அனைவரையும் மகிழ்வித்து தனக்கென்று ஒரிடம் தன் பக்தர்கள் என்ற ரீதியில் வளர்ந்து வாலிப வயதையடைந்தார். அசுரர்களை போரிட்டு வெல்வதற்காக, படைகளை சிறந்த முறையில் நடத்திச்செல்லும் வீரராக இளமை பருவத்தையடைந்ததும், தந்தையின் ஆஞ்கையை சிரமேற்க்கொண்டவராய், தாயின் சக்தி வேலினையும் பெற்றுக் கொண்டு அசுரனை வெற்றிவாகை சூடிட போருக்கு கிளம்பினார். தேவர்கள் பூக்களை பொழிந்து, "வெற்றியோடு திரும்பி வா குமரா! இந்த நாளுக்காகத்தான் நாங்கள் தவமிருக்கிறோம்.' என்று ஆசிர்வதித்து அனுப்ப சற்றேனும் பயமின்றி ஜெயம் கொண்ட மனதோடு படைகளம் நோக்கிச் சென்றான் மாயோனின் மருகன்.


அசுர்களையெல்லாம்  சம்ஹரிகரித்த கையோடு,  மாயையால் பல வடிவெடுத்துக் கொண்டு போராடிய சூரபத்பனை, அவன் மா மரமாய் மாறிய போது தாயின் சக்தி வேல் கொண்டு அம்மரத்தை இரு கூறாக்கி,  ஒரு புறத்தை மயிலாக்கி அதை தன் வாகனமாயும், மற்றொன்றை சேவலாக்கி அதை தன் கொடியிலும் இருக்கச் செய்தார். அதனால் மயில் வாகனார், சேவற்கொடியுடையோன் என்று வானவர் புகழ் பாட  வெற்றியுடன் படைகளம் விட்டு திரும்பினார் முருகப் பெருமான். ஒருவழியாக அசுரரின் கொடுமைகளிலிருந்து மீண்ட தேவர்களெல்லாம் தத்தம் ராஜ்ஜியங்களை அடைந்து முருகவேளின் பெருமைகளை பற்றி துதி பாடியவாறு  சந்தோஸமாக இருந்தார்கள். நம் துன்பங்களை முற்றிலும் களைந்த செந்தில் நாதனுக்கு பரிசாக தேவர்களின் அரசனான தேவந்திரனின் மகளை திருமணம் செய்வித்தால் பொருத்தமாக இருக்கும்  என்ற தேவ முனி நாரதரின் ஆலோசனைக்கு சம்மதம் தெரிவித்த தேவேந்திரன் மகிழ்ச்சியுடன் சிவபெருமானை சந்தித்து திருமண  விசயத்தை  பற்றி கூறி சம்மதம் வாங்க கைலாயம் புறப்பட்டுச் சென்றார்.


சிவபெருமானின் ஒரு அம்சம்தான் ஆடல் கலை. அத்தகைய  ஆடல் கலையை ஒரு நாள் மிகுந்த ரசிப்போடு ஆடிக் கொண்டிருந்த சிவபெருமானின் ஆனந்த நடனத்தை தாயார் உமா தேவியும், முப்பத்து முக்கோடி தேவர்களும், பிரம்மா, மஹாவிஷ்ணு, சப்தரிஷிகள்,  நந்திஹேஷ்வரர் உட்பட அனைவரும் கண்டுகளித்து ரசித்து கொண்டிருந்த போது, மகா விஷ்ணுவின் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் இரண்டு துளி வெளி வந்தது. அதை அருகிலிருக்கும் மஹா லெட்சுமி தன் உள்ளங்கையில் ஏந்த திருமாலின் அருளாலும், அன்னையின் சக்தியினாலும் அந்த நீர்த்துளிகள் அழகிய இரு பெண் மகவுகளாக உருப் பெற்றனர். அவர்கள் இருவருக்கும் அமுதவல்லி, சுந்தரவல்லி என பெயரிட்டு திருமாலும், மஹா லட்சுமியும் வளர்த்து வந்தனர்.அக் குழந்தைகள்  யோக மார்கத்துடன் வளர்ந்துவரும் போது  தம் இருவருக்கும் கணவராக முருகப் பெருமான்தான் அமைய வேண்டுமென ஒரு மனதாக முருகனை நோக்கி தவமிருந்தார்கள். முருகரும் அவர்கள் முன் தோன்றி" யாம் அரக்கர்களை அழித்து வதம் செய்த பின் உங்கள் எண்ணம் ஈடேறும். ஆனால், அமுதவல்லி விண்ணுலகத்தில் தேவந்திரனின் மகளாக தோன்றி அங்கு வளர்ந்து வர வேண்டும். சுந்தரவல்லி மண்ணுலகத்தில் வேடர்குல தலைவனான நம்பிராஜனுக்கு  மகளாக தோன்றி அங்கு  வளர்ந்து வர வேண்டும். உரிய காலங்களில்  உங்கள் இருவரையும் நான் வந்து மணந்து கொள்கிறேன்.' என்றருளி மறைந்தார்.


அதன்படி தேவந்திரனின் மகளாக,  தேவர்களுக்கெல்லாம் பெரும் புகழ் சேர்க்கும்படியாக தேவலோகத்திலுள்ள நீலோத்பவ தாடகத்தில்அந்த மலர்களிடையே ஒரு மலராக குழந்தை அமுதவல்லி ஜனித்தாள். தேவந்திரனும் அவன் மனைவி இந்திராணியும்  அந்த அழகான குழந்தையை கண்டெடுத்து "தெய்வயானை' எனப்பெயரிட்டு வளர்த்து வந்தனர். மண்ணுலகத்தில், ஒரு சிவ யோகியின் பார்வை பட்டு அழகிய மான் ஒன்றின் கருவுக்குள் தன் யோக சக்தியால் பிரவேசித்து வள்ளிக்கிழங்கை அகன்றெடுத்த குழிக்குள் வள்ளிச்செடிகளுக்கிடையே மறுபிறவி எடுத்தாள்  சுந்தரவல்லி.. அது சமயம் அங்கு வேட்டையாட வந்த வேடுவர்கள் தாங்கள் குழந்தையொன்றை கண்டோமென தங்கள் தலைவனிடம் சென்று பகர, செய்தியறிந்த வேடுவ தலைவன் நம்பிராஜன்  விரைந்து வந்து அக்குழந்தையை  தன் மகளாக ஸ்வீகரித்து வள்ளிச்செடிகளுக்கு இடையே குழந்தையை கண்டெடுத்ததால்," வள்ளி' எனப் பெயரிட்டு பாசமாக வளர்த்து வந்தான்.

இவ்விதமாக அவ்விருவரின் அவதார நோக்கங்கள் பூர்த்தியாகி வளர்ந்து மணப்பருவத்தை அடைந்து கொண்டிருக்கும் போதுதான், நம் முருகப்பெருமான் அசுரர்களை  அழித்து  வெற்றிவாகை சூடி வந்திருந்தார். அப்போது தேவர்கள் எடுத்த முடிவின்படி முருகனுக்கு தெய்வயானையை மணம் கொடுக்க கைலாயம் புறப்பட்டுச் சென்ற தேவேந்திரன், முருகனின் தாய் தந்தையரையும் சந்தித்து கலந்து பேசி முறைப்படி, வேதசாஸ்திரபடி,  தெய்வயானையை முருகனுக்கு  தாரை வார்த்துக் கொடுக்க, முருகன்தெய்வயானை திருமணம் மங்களகரமாய், மிகச் சிறப்பாக , விண்ணோர்கள்  மலர் சொறிய, அனைவர்   மனம் மகிழுமாறு, கோலாகலாமாய் நடந்தேறியது.


முருகன் தேவகுல மகள் தெய்வயானையுடன் அனைவரும் மெச்சும்படிக்கு வாழ்ந்து, அனைவருக்கும் அருள்பாலித்து வரும் நாளில், முருகனுடைய பிறப்பில் மூன்று சக்திகளில ( ஞான சக்தி = ஞான வேல், கிரியா சக்தி = தெய்வயானை ,) இரண்டை பெற்று விட்டதையும், மூன்றாவதாக ஒன்று இருப்பதை( இச்சா சக்தி = வள்ளியம்மை ) அவருக்கு நினைவூட்டினார் தேவமுனி நாரதர். புன்முறுவலுடன் அதை ஆமோதித்த முருகனும், அதற்கான நேரம் நெருங்கி விட்டதென்பதை நாரதருக்கு உணர்த்தி விட்டு அந்த சக்தியை அடைவதற்காக, மண்ணுலகத்திலிருக்கும் வள்ளி மலையை அடைந்தார். அங்கே வள்ளி மலையில் வள்ளியம்மை வளர்ந்து அவர்தம் குல வழக்கபடி திணைக் காவல் காத்து வந்தாள். தோழியரோடு புன்செய் நிலங்களை பறவை இனத்திடமிருந்து அறுவடை காலம்வரை பத்திரமாக காக்கும் பணியை வள்ளி நிறைவேற்றி கொண்டிருந்தாள்.முருகன் தன்னை ஒரு வேடனாக உருமாற்றிக் கொண்டு அவள் முன்னே போய்  நின்றவுடன், "இவன் இதுவரை தங்கள் இனத்தில் பார்த்திராத ஒரு இளைஞன். ஆனால் கண்ணோடு கண் நோக்கிய அந்த ஒரு பார்வையாலேயே  தன் மனதையும், உடலையும் தடுமாற வைக்கும் இந்த சுந்தரன் யார்? இவனால் ஏதும் சங்கடங்கள் வந்து விடுமா? 'என்றெல்லாம் தடுமாறிய வள்ளி தன் தோழியை அனுப்பி  "தன் தந்தை மற்றும் உதவியாக வரும் உறவினர்கள் அனைவரும்  தன்னைக் காண வரும் நேரமாகி விட்டதால், அந்த வாலிபனை அங்கிருந்து  விரைந்து அப்பால் சென்று விடும்படி நான் சொன்னேன்". என்று சொல்லி வரச் சொன்னாள்.


தோழி  சென்று தன் தலைவி சொன்னதை சொல்லியதை முருகனிடம் கூறியதும் இளநகை புரிந்தவாறு , "எங்கு செல்வது? உங்கள் தலைவியையும் அழைத்துக் கொண்டு செல்லத்தானே வந்திருக்கிறேன். என்னை திருமணம் செய்து கொண்டு என்னுடன் இப்போதே வரத்தயாரா? என்று உன் தலைவியிடம் கேட்டு வந்து சொல்." என்று சற்று மிரட்டும் குரலில் கூறவும் தோழி முருகன் கூறியதை வள்ளியிடம் பதற்றமாக வந்து சொன்னாள். அதைக்கேட்ட வள்ளி சற்று கோபமாக தான் காவல் காக்கும் பரணை.விட்டு இறங்கி வந்து அழகுக்கு அழகான முருகனை பார்த்து, " என்ன பிடிவாதம் செய்கிறாய் ? எம் இனமாயிற்றே என்ற மரியாதையில் உம்மீது இரக்கங்கொண்டு என் தந்தையின் கோபத்திலிருந்து உன்னை தப்பித்துக் கொள்ள  உபாயம் கூறினால், நீர் எம்மை மணக்க தூது அனுப்பிகிறீரோ? "என்று படபடத்தவள் முருகனின் ஆழமான  காதல் பார்வையை சந்திக்க இயலாமல் தலை குனிந்தாள்.  வீரமான தன் தலைவி வந்தவரின் முகத்தைப் பார்த்து பேசாமல், தடுமாறி தலை குனிந்ததோடு தாமரைப்பூவாய் அவள் கன்னம்  சிவப்பதையும் அதரங்கள் வெட்கத்தில் நடுங்குவதையும் தோழி கவனித்து வியந்தாள். தலைவிக்கு உதவும் எண்ணத்தோடு ,  அவள் அருகில் வந்து "வள்ளியம்மை என்னவாயிற்று?"என்று  அவள் கைகளை பிடித்தவள் தூரத்தில் நம்பிராஜன் வேடுவ படையோடு வருவதைக்கண்டதும்,. முருகப்பெருமானைப்பார்த்து சென்றுவிடும்படும்படி வேகமாக கையசைத்து விட்டு வள்ளியை அணைத்தபடி தாம் காவல் காக்கும் பரண் இருக்கும் திசை நோக்கி நகர்ந்தாள். முருகனும் அவ்விடத்தற்கு சற்று தொலைவில்  சென்று அவர்கள் வந்து செல்லும் வரை வேறெங்கும் செல்ல மனமின்றி ஒரு வேங்கை மரமாகி உருமாறி நின்றார்.

தாங்கள் வராத இக்குறுகிய நாட்களில்  வளர்ந்திருந்த அம்மரத்தைக் கண்டு வந்த வேடுவ குலம் வியப்பெய்தியது. நம்பிராஜன் தன் மகளுடன் அளவளாவி கொண்டிருந்த போது சில வேடுவர்கள் அவனிடம் வந்து, " புதிதாக தோன்றியிருக்கும் அம்மரத்தினால் ஏதேனும் பாதகங்கள் விளையுமோ என்னவோ! முற்றிலுமாக அந்த மரத்தை வெட்டி அகற்றி விடலாமா?''  என ஆலோசனை கேட்டவே நம்பிராஜன் ஒரு நிமிடம் யோஜித்தான்.அவனும் வரும் போதே மரமொன்று புதிதாக வளர்ந்திருப்பதைக் கண்டான். அதன் விடை புரியாது மகளைக் கண்ட  மகிழ்ச்சியில்  சற்று மறந்திருந்த போது உடன் வந்தவர்கள்  நினைவுபடுத்தவே பதில் கூற யத்தனிக்கும் முன், முருகனருளாளே அவன் வாயினின்று,  "வேண்டாம்! வள்ளிக்கு நல்ல நிழல் தருகிறது. அதனால் அம் மரத்தை ஏதும் செய்ய வேண்டாம்."என்றபடி எழுந்து புறப்பட  ஆயுத்தமானான்.

மறு நாளும்  வேங்கை மரமாகி நி்ன்ற முருகன் வயதான கிழவரை போல உரு மாற்றிக்கொண்டு "வெகு தொலைவிலிருந்து வருகிறேன். கால்கள் பசியினால் துவளுகிறது .மிகவும் பசிக்கிறது" !  என்று வள்ளியிடம் வந்து கேட்கவும்,  வள்ளி தந்த தேனும், தினைமாவையும்  தின்று பசியாறிய பின், தாகத்திற்கு  தண்ணீர் கேட்க சற்று தொலைவிலுள்ள சுனை ஒன்றினுக்கு வள்ளி வழி காண்பித்து, "அங்கு சென்று வேண்டிய மட்டும் நீர் அருந்துங்கள் '. என கூறவும், "இந்த வயதான காலத்தில் என்னை தனியே சுனைக்கெல்லாம் அனுப்புகிறாயே!  நீயும் என்னுடன் துணையாக வரலகாதா? உன் தாத்தாவிற்கு  இந்த உதவி கூட செய்ய  மாட்டாயா? என்று அழமாட்டாத குரலில் கேட்கவும்.,மனமிறங்கிய வள்ளி அவருடன் புறபபட்டாள். சுனை வரை துணையாக வந்தவளிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே வந்த முருகவேள்அவ்விடம் வந்ததும், அவரை  நீர் அருந்தும்படி பணித்து விட்டு அங்குள்ள ஒர்இடத்தில் அமர்ந்தாள். சுனைக்கு சென்று  நீர் அருந்துவதாக பாவனை செய்து மீண்டும் திரும்பிய கிழவரை்க கண்டதும் , "சரி தாத்தா இனி நான் திரும்பிச் செல்கிறேன்.என்னைக்காணாது என் தோழியர் தேடுவார்கள் . நீங்களும் உங்கள் இருப்பிடத்துக்கு பயணபடுங்கள்.' என்றவாறு எழவும், கிழவராக வந்த முருகன், "மலர் மடந்தே! நான் மட்டும் திரும்பி போவதா? நீ இல்லாமல் இனி எனக்கு வாழ்வேது? என்னை திருமணம் புரிந்து கொள். கணவன் மனைவியாக இருவரும் சேர்ந்தே என் இருப்பிடம் ஏகலாம்!"என குறும்புடன் கூறவும், தன் பதட்டத்தை மறைத்துக் கொன்டு வள்ளி கலகலவென சிரித்தாள். தாத்தாவுக்கு ஆசையை பாரேன்!  என மனதுக்குள் நினைத்தபடி, "பெரியவரே! உங்கள் வயதென்ன?  உங்கள் பேத்தி வயதில் இருக்கும் என்னைப் பார்த்து இப்படி பேசலாமா? என் தந்தைக்கு தெரிந்தால் இந்த தள்ளாத வயதில் நீங்கள் பலதுன்பங்களை அனுபவிக்க வேண்டி வரும். உங்கள் வயதுக்கு  மதிப்பு தந்துதான் சில உதவிகள் உங்களுக்கு செய்ய முன் வந்தேன். வருகிறேன் ! என்றபடி வள்ளி நடக்க ஆரம்பிக்க,. முருகனாக வந்த கிழவர் சட்டென அவள் கைகளைப்பிடித்துக் கொண்டார். " பெண்ணே!  நான் விளையாட்டாக கூறவில்லை! உண்மையிலேயே நம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் பொருத்தமாக இருக்கும்.  அது மட்டுமல்ல! நீ இந்தப் பிறவியில் எனக்காகவே பிறந்தவள்! ." என்றபடி  மேலும் விளையாட்டாக அவள் பதட்டத்தை ரசித்தபடி "எனக்கென்ன அப்படி வயதாகி விட்டதென்று நினைத்தாய்?" என்றார்.

வள்ளிக்கு கோபத்தில் முகம் சிவந்தது. ஏய் தாத்தா இத்தனை நேரம் உமக்கு மரியாதை கொடுத்து, வயதானவர்தானே!  என என்  தோழிகள் இல்லாத போதும்,  உம்முடன் அவர்கள் துணையின்றி தனியே வந்தது தப்புதான்! உமக்கு புத்தி பேதலித்து  இருக்கிறது. அதை முதலில்   சரி செய்து கொள்ளுங்கள். நான் எங்கள்  இனத்தில் ஒருவரை சந்தித்தேன்.மணந்தால் அவரை மட்டுந்தான் மணந்து கொள்வேன். இல்லையெனில் எமக்கு திருமணமே இந்தப்பிறவியில் இல்லை! என்றபடி அவர் பிடியிலிருந்து கைகளை விடுவித்தபடி நடக்க ஆரம்பித்தாள்.  முருகன் சிரித்தபடி , அழகு மலரே, யார் அவன் எனக்கு போட்டியாக முளைத்துள்ளான் ? சொல்லிவிட்டு போ! அவனை ஜெயித்து விட்டு உன்னை மணமுடித்துக் கொள்கிறேன். " எனகுறும்பாக கூறி அவளை பின் தொடரவும், "அதை உம்மிடம் கூற வேண்டிய அவசியமில்லை", என்று படபடத்த வள்ளி வேகமாக ஓட தலைப்பட்டாள்.


அவள் ஓட்டத்தை கண்டதும்,. முருகன் தன் அண்ணன் கணபதியை மனதுக்குள் நினைக்கவும், மதம் பிடித்த யானையாக  சத்தமாக பீளிரிட்டபடி அட்டகாசமாக அங்குமிங்கும்  ஓடியபடி,   தன் தம்பிக்கு உதவி செய்ய கணபதி  வள்ளியின் முன் தோன்றினார். வள்ளியின் ஓடிக் கொண்டிருந்த கால்கள் அந்த மதம் கொண்ட யானையை கண்டதும் பீதியில் நடுங்கின. ஏற்கனவே பதற்றத்திலிருந்தவள், மூர்ச்சித்து விழாத குறையாக , திரும்பி ஓடி வந்து என்னைக் காப்பாற்றுங்கள் தாத்தா என்று அவர் கைகளைப் பிடித்துக் கொள்ள, துரத்தி வந்த யானையும் மறைந்தது. முருகவேளும் வேடுவ இளைஞனாக மாறினார். வள்ளியும் மகிழ்ச்சியடைந்தாலும், மனதில் குழப்பம் மிக , இது எவ்வாறு சாத்தியம்? என கேட்டாள். முருகனும் அவளின் பூர்வ ஜென்ம கதையை உணர வைத்து, பன்னிருகை வேலவனாக அவள் முன் தோன்றி அருள் பாலித்தார். வள்ளியும் மண்ணுலக பிறவியின் மாயை தெளிந்து, தன் நிலை உணர்ந்தவளாய் தன் மனதுகுகந்த மணவாளனாய், முருகனே தன்னை ஆட் கொள்ள இப்பூலோகத்திற்கு வந்திருப்பதை கண்டு மன மகிழ்வு எய்தினாள்.


"எப்படியாயினும், என்னை வளர்த்தவர்கள் சம்மதமில்லாமல், தங்களுடன் எப்படி வர இயலும் ? என் திணை காவலும் இன்னமும் சிறிது நாட்களில் முடிந்து எங்கள் ஊருக்கு நான் பயணமாவேன். எனவே நீங்கள் வேடுவ வடிவிலேயே அங்கு வந்தால், என் பெற்றோரிடம் நான் உங்களை விரும்புவதை உணர்த்தி அவர்கள் சம்மதத்துடன்  நம் திருமணம் நடக்கட்டும்."  என மண்ணுலக மரபின்படி வள்ளி கூறவும், முருகனும் அவ்வாறே நடக்கட்டுமென கூறி அவளை திணைப் புலத்துக்கு   அனுப்பி வைத்தார். அதன் காவல் முடிந்து தனது கிராமம் திரும்பிய வள்ளி  முருகனின் நினைவாகவே இருந்தாள். அவனை விட்டு பிரிந்திருக்கும் நாட்களை முற்றிலும்  வெறுத்தாள். அவள் தாயாரும், நெருங்கிய தோழியரும் அவள் வாட்டத்தைக் கண்டு கவலையுற, வள்ளியுடன் பேச்சு கொடுத்து பார்த்ததில். காரணம் தெரிய வந்து அது நம்பியின் கவனத்திற்கு சென்றது. என்னதான் வந்தவன் வேடுவ இளைஞனாக இருப்பினும்., முன் பின் அறிமுகமில்லாத அவனுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுக்க நம்பிராஜன் மறுப்பு தெரிவித்தான். வந்தவர் வேறு எவருமில்லை! இறைவன் முருகவேழ் என்று அவர் பெருமையை மூவுலகும் சுற்றி வரும் நாரதர் வந்து சொல்லியும்  அவன் அதை உணர்ந்தானில்லை.



வள்ளி கூறியபடி ஒருநாள் அவளை  சந்திக்க வந்த முருகப் பெருமான் விபரங்கள் அறிந்து  தோழியின் உதவியோடு வள்ளியை அழைத்துக்  கொண்டு தன்னிருப்பிடம் நோக்கிச் சென்றார். தந்தையின் மறுப்பைக் கேட்டு மனம் தவித்துப்போன வள்ளியும், முருகனி்ன் செயலுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் உடன் சென்றாள். ஆனாலும் அவள் மனதில் பெற்றோர் சம்மதமில்லாமல் திருமணம் செய்து கொள்வதை குற்றமாகவே கருதினாள். முருகன் தன் மகளை தன்னுடைய விருப்பமின்றி விண்ணுலகம் அழைத்து செல்கிறான்  என்பதை அறிந்ததும் கோபம்கொண்ட நம்பி தன் படைகளோடு கிளம்பி தன் மகளை மீட்டு வர புறப்பட்டான். முருகனும் வள்ளியும் செல்லுமிடமொன்றில் தங்கி அளவளாவி கொண்டிருக்கும் போது வேடுவ படை வந்து தன் தாக்குதலை தொடர கோபம் கொண்ட முருகன் தன் சேவலை அனுப்ப சேவலின் ஒரு கர்ஜனையில் நம்பி உட்பட  அனைத்து வேடுவர்களும்  கீழே விழுந்து மாய்ந்தனர்.. வள்ளியம்மை பார்த்து மனம் பதறி அவர்களை மீண்டும் எழுப்பித் தர முருகனை வேண்டவே, சினம் தணிந்த வேலவன் அவர்களை உயிர்பித்தான். அந்நேரம் தேவர்களும், சிவசக்தி சமேதராய் அவ்விடம் எழுந்தருள,  மனம் திருந்திய நம்பி ராஜன் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டபடி தன் மகளின்  மனம் கோணாது தேவர்களும் தாய்தந்தையரும்  வாழ்த்த அவள் விரும்பியபடி முருகனுக்கு வள்ளியை மணம் செய்வித்தான். வள்ளியும்  தன்விருப்பம் நிறைவேறிய மகிழ்ச்சியில் திளைத்தாள். முருகனும் வள்ளியை அழைத்து கொண்டு தெய்வயானை இருக்கும் இடத்துக்கு சென்ற போது , அவளும் அகமகிழ்ந்து  தன் சகோதரியை வரவேற்று  அணைத்துக் கொண்டாள். இவ்வாறாக முருகப்பெருமான் விண்ணிலும்  மண்ணிலுமாக இரு சகோதரிகளையும்  தான் அழித்த வாக்குபடி திருமணம் செய்து கொண்டு வள்ளி தெய்வயானை சமேதராய் அனைவருக்கும் அருள் பாலித்து வந்தார்.

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று.
 ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று.
 கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று.
 குன்றுருவ வேல் வாங்கி நின்றமுகம் ஒன்று.
 மாறுபடு சூரரை  வதைத்த முகம் ஒன்று.
 வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று.
 ஆறுமுகம் ஆன பொருள் நீ அருள வேண்டும்.
 ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

                                                                  சுபம்.


ஞான பண்டிதன் முருகனின் திருமண வைபவங்களை எழுத வைத்த என் தெய்வம் விநாயகபெருமானுக்கும், என்னப்பன் பன்னிருகை வேலவனுக்கும் என் சிரம் தாழ்த்திய அனந்த கோடி நமஸ்காரங்கள்.

                      இதை படிக்கும் அனைவருக்கும் என் இதய பூர்வமான நன்றிகள்.

         எழுதிய எழுத்தில் கருத்தில் ஏதேனும் தவறுகள் இருக்கலாம்! இருப்பினும்


                                                                           முருகா.....
                                                                     


                           எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன்                                          எத்தனை செயினும் பெற்றவன் நீ குரு! பொறுப்பதும் உன் கடன்!                        பெற்றவள் குறமகள் பெற்றவளாமே! பிள்ளை என்று அன்பாய் பிரியம்
                  வைத்து மைந்தன் என் மீது உன் மனமகிழ்ந்தருளி  தஞ்சமென்ற
                                                  அடியார் தழைத்திட அருள் செய்....

                                               சர்வம் சிவார்ப்பணம்..


படங்கள்: நன்றி கூகுள்


































Friday, January 19, 2018

தந்தையின் தனித்துவம்....




   இவ்வுலகத்தில்  அன்னை, தந்தை எனவும், மாதா  பிதா  எனவும் பேச்சு வழக்கில் அன்னைக்குதான் முதலிடம் தருகிறோம். தாயிற்சிறந்த கோவிலுமில்லை ! தந்தை சொல் மிக்க மந்திரமல்லை! என்று தாயை கோவிலாக்கி  தந்தையை வெறும் மந்தரமாக்குகிறோம். பொறுமைக்கு மறு அர்த்தமாக விளங்கும் நாம் வசிக்கும் இந்த பூமியையும், ( நம் அன்னை அந்த பொறுமையின் அவதாரமாகையால்)  தாய் பூமி, எனவும், தாய் நாடு எனவும் தாய் மண் எனவும் அழைக்கின்றோமே தவிர தந்தையை அடை மொழியாக்கி எதையும் கூறுவதில்லை.

அன்னைக்கு முதலிடம் தருவதில் தவறில்லை. பத்து மாதம் தன்னுயிருக்குள், ஒரு உயிராக நம் உயிரையும்  சேர்த்து சுமந்து, பல இன்னல்களையும் மெளனமாக அனுபவித்து, வேதனைகளுக்கு நடுவே சற்றேனும் முகம் சுளிக்காமல் நம்மை பத்திரமாக இவ்வுலகத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பதிலிருந்து, சீராட்டி, பாராட்டி  நம்மை வளர்த்து முழுமையாக நாம் வளர காரணமாயிருக்கும் நம் அன்னைக்கு முதலுரிமை தருவதில் தவறேயில்லை! ஆனால் அன்பு முதற்கொண்டு, வீண் விவாதம் வரை உரிமையுடன் தாயிடம் பகிர்ந்து கொள்ளும் நாம், தந்தையிடம்  சில வேளைகளில், சற்றே பாராமுகமாக நடந்து கொண்டு சில சமயங்களில் அவரை புறக்கணிக்கிறோமே அதுஏன்?

சிறுவயது பருவம் கடந்து  வளர்ந்து வரும் பருவத்தில், நம் நல் வாழ்க்கைக்காக, அவர் செய்யும்  அளப்பரியா தியாகங்களை உணர்ந்து கொள்ளவும் முயற்சிக்காமல்,  அப்பா பேச ஆரம்பித்தாலே  அறிவுரையாக ஏதாவது  (நாம்தான் இந்த அறிவுரை என்ற சொல்லை அகராதியிலிருந்து அகற்ற வாழ்நாள் முழுக்க பாடுபடுகிறவர்களாயிற்றே!  )  சொ(கொ) ல்வார் என்ற திட நம்பிக்கையில்,   எத்தனை அலட்சியங்களை அவருக்கு  பரிசாக சமர்பித்திருக்கிறோம். அத்தனையும்  பொறுத்துக்கொண்டு கண்டும் காணாததும் மாதிரி நடந்து கொண்டு இன்னமும் முன்பை விட அதிகமாக நம்மை கவனித்து பேணி வளர்க்கத் தயாராகும் உன்னத மனிதரல்லவா இந்த தந்தையெனும் மாபிறவி.! அந்தளவிற்கு  நாம் அவருக்கு மதிப்பு தராவிடினும், நம்மை மதித்து போற்றுவதன்றோ தந்தையர் குணம்.

( தந்தையர் தினம் இன்னமும் வரவேயில்லையே!  எதற்காக தந்தை புகழ் பாடும் இந்தப் பதிவு?  என அனைவரும் எண்ணலாம். பெற்றோர்களை பற்றி நினைக்கவும், எழுதவும் அந்தந்த நாட்களை நினைவில் அமர்த்தி அன்றைய நாட்களில்தான் கூற வேண்டுமென்பதில்லேயே!  இரண்டாவதாக தந்தையை பற்றிய, அவர்தம் பெருமையை பற்றிய  பதிவொன்றை நான் படித்தேன். அதனால்  எழுந்ததுவே இந்தப் பதிவு!. அந்தப்பதிவின் வாசகங்களை யார் எழுதியது என அறியேன். ஆனால் அதைப்படிக்கும் போது என் கண்ணில் கண்ணீர் முத்துக்கள் இம்மண்ணில் உதிர்ந்ததென்னவோ உண்மை!. அதை எழுதியவருக்கும் , என்னுடைய பதிவையும் , நான் படித்துப் பகிர்ந்த பதிவையும் படிக்கும் உங்களனைவருக்கும் என்  மனமார்ந்த நன்றிகள்.)

ஆனால், அனைத்து இல்லங்களிலும்,  இந்த மாதிரிதான் என்று நான் சொல்லவில்லை. சிலர்  தந்தையை. தாயை விட அதிகமாக நேசித்து  அவரை பெருமைபடுத்தி மகிழ வைக்கவும் செய்கிறோம் என்பதிலும் ஐயமில்லை.!   அவர்களுக்கெல்லாம்  என் தலை சாய்த்த வணக்கங்களை மண்டியிட்டு தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பொறுத்த வரை தாயும் தந்தையும் ஓருயிர்..! நம்மை பெற்று வளர்த்து நாம் ஒருநிலை எய்துவதற்கு. இருவருமே சமபங்கை, சரிபாதியாக எடுத்துக்கொண்டு செயலாற்றுபவர்கள். ஒரு முகத்திற்கு இரு விழிகள் எந்தளவுக்கு  பயன்பாடோ, அதே மாதிரி ஒவ்வொரு மனிதருக்கும் அவர்தம் பெற்றோரும் என நினைக்கிறேன். சில முரண்பாடான சமயங்களில், தந்தையே தாயுமாகி, அன்னையே அனைத்துமாகும் சூழ்நிலைகளை படைத்தவனால் உருவாக்கப்படலாம். இவ்வாறு நிறைய எழுதலாம்!. பதிவின் நீ..ள..ம் கருதியும், படிப்பவர்களின் (படித்தால்) பொறுமையெனும் நலத்தையும்  நினைவு கூர்ந்து இத்துடன் நிறுத்தி படித்ததை பகிர்கிறேன்.

                     படித்தமைக்கு  நன்றிகள்.




படித்து பிடித்தது.....

*அப்பாவிற்கு அழத்தெரியாது!!*
⚽ குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும்!
⚽ பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய் தேய்ந்த போதும்!
என்னடா வாழ்க்கை இது என
*ஒருநாளும் அழுதிருக்கமாட்டார்!*
⚽ மனைவியை நெஞ்சில் சுமந்து!
⚽ பிள்ளைகளை தோளில் சுமந்து!
⚽ குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்து!
போகும் வழி தெரியாமல்
விழிபிதுங்கி நின்ற போதும்!
தான் கலங்கினால் குடும்பம் உடைந்துவிடும் என கல்லாய் நின்றவர்!
*நாம் அவரை கல்லெனவே நினைத்துவிட்டோம்!*
⚽ அம்மாவிடம் ஒட்டிக்கொள்வோம்!
⚽ அப்பாவிடம் எட்டி நிற்போம்!
⚽ முகம் கொடுத்து பேசிய வார்த்தைகள்
சொற்பம் என்போம்!
ஆனால்,
தோல்வியில் துவளும் போது பிடித்துகொள்ள அப்பாவின் கைகளை தான் முதலில் தேடுவோம்!
நம்மை அள்ளி அணைத்து முத்தமிட்டதில்லை என்றாலும்!
தள்ளி நின்று உணர்ச்சி வெள்ளத்தில் *ததும்பும் ஜீவன் அது!*
⚽ நாம் திண்ணும் சோறும்!
⚽ உடுத்தும் உடையும்!
⚽ படித்த படிப்பும்!
அப்பாவின் வேர்வையில்தான் என
ஒருநாளும் அவர் சொல்லிக்காட்டியதில்லை!
நேரில் நம்மிடம் நாலு வார்த்தை கூட பேசாதவர்!
ஊர்முழுக்க நம்மை பற்றிதான் பெருமையாக பேசி திரிவார்!
அம்மாவின் பாசத்தை அங்கலாய்க்கும் நாம்!
*அப்பாவின் பாசத்தை உணரக்கூட இல்லையோ!*
⚽ நமக்கு மீசை முளைத்தால் அவர்
குதூகளிப்பார்!
தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால்
அவரே உயரமானதாக உணர்வார்!
வாழ்க்கையில் நம்மை முன்னே நடக்கவிட்டு பின்னே நின்று பெருமிதத்துடன் ரசிப்பார்!
நம் வாழ்க்கையின் பின்னால்...
*அப்பா எப்போதுமே இருப்பார்!*
⚽ அப்பாவிற்கு பாசத்தை வெளிபடுத்த
தெரியாது!
⚽ அப்பாவிற்கு கொஞ்ச தெரியாது!
⚽ அப்பாவிற்கு போலியாய் இருக்க தெரியாது!
⚽ அப்பாவிற்கு தன் கஷ்டத்தை வெளிக்காட்ட தெரியாது!
⚽ அப்பாவிற்கு தனக்காக எதையும் சேர்த்து வைத்துகொள்ள தெரியாது!
⚽  *அந்த பைத்தியத்திற்கு*
*அழவும்தெரியாது!*
⚽ வளர்த்த கெடா மாரில் பாய்ந்த போதும்! 
ஒருவேளை சோற்றுக்காக மருமகளுக்கு வேலைக்காரனாய் மாறிப்போன போதும்!
முதியோர் இல்லத்திற்கு தூக்கி வீசப்பட்ட போதும்! அவர் அழுதவரில்லை!
*நம்ச ந்தோசத்திற்காகவே எதையும் தாங்கும் ஆன்மா அவர்!*
⚽ பாசமோ!
⚽ மன்னிப்போ!
⚽ அழுகையோ!
உணர்வுகளை அவரிடம் உடனே  வெளிப்படுத்தி விடுங்கள்!
 ஒருவேளை உங்கள் நண்பனின் அப்பா   
      மரணமோ!
 உங்கள் அப்பா வயதுடைய யாரோ
     ஒருவரின் மரணமோ! 
 உங்களை புரட்டி போட்டு!
     அவர் பாசம் புரிந்து!
     அப்பாவை தேடி ஓடிரும்போது!
 வீட்டில் அப்பா...
      சிரித்துக்கொண்டிருக்கலாம்...
      புகைப்படத்தில்!!
*பாவம்_அவருக்குதான்..*
*அழத்தெரியாதே!!*
படித்தேன்!
பகிர்ந்தேன்!!

Saturday, January 13, 2018

தை மகள் வருகை

வணக்கம் வலையுலக நட்புறவுகளே!

அனைவருக்கும்  இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.




தைமகளின் வருகை.....


தங்க மகள் போன்ற தை மகளாம்,
தளிர் நடை பயின்று வந்தாளாம்.
பூமித்தாயின் இன்முகம் காட்டிய
பாசமிகு  வரவேற்றலில், குளிர்வூட்டும்
புன்சிரிப்பில், அகம் மலர கண்டாளாம்.
பொங்கும் மங்கலம் இனியென்றும்
எங்கும் எதிலும் தங்குமென பூரித்து
மனமகிழ்வு  கொண்டாளாம்.

பசுமை செறிந்த செடி கொடிகளையும்,
பழுத்து நிறைந்த பழவினங்களையும்,
பூத்துக் குலுங்கும் மலர் வகைகளையும்,
பரவசமாக  பார்த்ததுமே, இத்தனையும்,
பூமித்தாயாம் எனதன்னை எனக்காக  
தந்த சீதனமென  பெருமையுடன் நின்றாளாம்.

தாயின் ஏனைய  செல்வங்களை,
தனித்தே சென்று சந்தித்துப் பேசி
நலம் நவின்று விட்டு வருவோமென,
துள்ளும் நடையில்  சுற்றி வருங்கால்,
பழையன  முற்றிலும் களைந்தகற்றி,
புதியன மட்டிலும்  புதிதாய் படைத்து, தன்
வரவுக்கு கட்டியமாய்  பல வண்ணங்களையும்
வார்த்தெடுத்து வைத்திருப்பதும், கண்டு

மங்களம் நிறைந்த மணமான மஞ்சளையும்,
மதிமுகம்  கொண்ட  பண்பான பெண்டிரையும்,
கொஞ்சிடும் அழகில்  மழழைகள் அனைவரையும்,
விஞ்சிடும் பொருளனைத்தும் ஒருங்கே புதைந்த
வீரத்தமிழையும், அத்தமிழர்தம் மரபும் , கண்டு

புத்தம் புது துகில்களை மாந்தர்களும்
பூரண மன நிறைவோடு தாம் உடுத்தி,
புதுப்பானை நிறைத்த புத்தரிசி பொங்கலையும்,
தித்திக்கும் நல் கரும்பை தோகையுடனே வைத்து,
திகட்டாத நல்லெண்( ண )ணெய் தீபச் சுடர்களோடு,
களிப்புடனே பண்டிகையை கொண்டாடி பின்னர்,
களமிறங்கும் வீர செயலனைத்தும், கண்டு

பொங்கிய மகிழ்வில் மனமது நிறைய,
பொங்கும் மங்கலம்  இனியென்றும்,
எங்கும்  எதிலும் தங்கி நிற்கட்டுமென
வாயார வாழ்த்திச் சென்றனளாம்.



பொங்கும் மங்கலம் எங்கும் தழைத்திட வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.


நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.











Monday, January 1, 2018

ஆங்கிலப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்





வணக்கம் நட்புறவுகளே!  உடன் பிறவாவிடினும்., உடன் பிறந்த பாசங்களுக்கு. நிகராக அன்பை பகிர்ந்தளித்து வந்த  வலைபுலக சகோதர சகோதரிகளே, அனைவருக்கும் அன்பான வணக்கம்.

 நான் வலையுலகில், வலம் வந்து உங்களையெல்லாம் சந்தித்து நீண்ட நாட்கள்( இல்லையில்லை! நீண்ட  வருடம் ) ஆகி  விட்டது.எனினும், இன்னமும் மறவா அன்புள்ளங்களுக்கு என் பணிவான நன்றிகள்.

குடும்ப  சூழல்களினால், வலைப்பக்கம் வர இயலாது போப் விட்டது மன்னிக்கவும்.!  வலையினுள் பிரேவேசிக்க முடியாத நேரங்கள், மிகுந்த வருத்தத்தை அளித்த அந்த நாட்கள் வருடமாக  வளர்ந்து  2018 ன் முதல் நாளை தொட்டு விட்ட தருணத்தில், மீண்டும்  என்  சகோதர சகோதரிகளை  சந்தித்து விட்டதை நினைத்து மிகவும் ஆனந்தமடைகிறேன்.


இ்ன்று பிறந்த புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும். அன்பையும், மகிழ்ச்சியையும், மனித நேயங்களையும் குறைவர தந்து, நோய் நொடி இல்லாத இனிதான வாழ்வையும்  மலர செய்யுமாறு,  மலர்ந்து மணம் பரப்ப வேண்டுமென  இறைவனை மனமாற வேண்டிக்கொள்கிறேன்.

அனைவருக்கும் என் அன்பான இனிய 2018 ம்ஆண்டின் ஆங்கிலப்புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்.




இத்துடன் வாட்சப்பில் வந்து படித்த செய்திகளையும் பகிர்ந்துள்ளேன். படித்தமைக்கு மிக்க நன்றி.


*புது வருடம் சிறப்பாய் இருக்க சில குறிப்புகள்..*

1.ஒன்றோ இரண்டோ குரூப்பில் மட்டும் இருந்து கொண்டு மீதி அனைத்து வாட்சப் குழுக்களிலிருந்து வெளியே வந்து விடுங்கள்
2. முகநூல், வாட்சப், ட்விட்டர் என்று அனைத்திற்கும் நாள் ஒன்றிற்கு அரைமணி மேல் செலவழிக்காதீர்கள். அபிமான பதிவாளர்களை மட்டும் தேடிப்படித்து வெளியே வந்து விடுங்கள்
3. ஞாயிற்றுக்கிழமை தோறும் செல்போனை அணைக்கும் வழக்கத்தை முயற்சித்து பாருங்கள்
4. இந்துக்களாக இருப்பின், மாதம் ஒரு ஞாயிற்றுக் கிழமையாவது, குடும்பத்துடன் ஏதோ ஒரு புராதன கோயிலுக்கு (செல்போனை வீட்டில் வைத்துவிட்டு) செல்ல முயற்சியுங்கள்.
5. நாள் ஒன்றிற்கு இருபதே நிமிடம் சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்ய முயலுங்கள், குறிப்பாக பெண்களும், ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவர்களும். கையை மேலே தூக்குவது, கால்களை நீட்டி மடக்குவது, சிறிய மூச்சு பயிற்சிகள் அதில் இருக்கட்டும். பதினைந்தாயிரம் ஜிம்மிற்கு கொடுப்பது, பத்து கிலோ மீட்டர் ஓடுவது போன்றவை தேவையில்லை. எவை நாள்பட தொடர்ந்து செய்ய இயலுமோ அதுவே சிறந்தது என அறிந்து கொள்ளுங்கள்.
6. நாள் ஒன்றிற்கு பத்து நிமிடம் எதுவுமே செய்யாமல் டி வி அணைக்கப்பட்டு எதை பற்றியும் நினைக்காமல் அமைதியாய் இருக்க முயலுங்கள்.
       
7. நம் வீட்டை விட பக்கத்து வீடு பெரியதாகத்தான் இருக்கும், நம் குழந்தைகளை விட மற்றவர்கள் நன்றாகத்தான் படிக்கும், நம்மை விட மற்றவரிடம் அதிகம் வசதி இருக்கத்தான் செய்யும். ஏற்ற தாழ்வுகள் இல்லாவிடில் நமக்கு வாழ்க்கையில் கற்று கொள்ள ஒன்றும் இருக்காது என்று உணருங்கள்.ஆக, இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள்.
8. ஐந்து வயதிற்குட்பட்ட நம் வீட்டு குழந்தையோ, அக்கம் பக்கத்து குழந்தையோ, பத்து நிமிடமாவது முடிந்தால்  நாள் ஒன்றுக்கு அதனுடன் உரையாடுங்கள். புத்துணர்ச்சி பெறுவீர்கள்
9. உங்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர முயற்சியுங்கள். யாரையும் யாரும் திருத்த முடியாது என்று அறியுங்கள். முகநூல் பதிவர்களாக இருப்பின், குதர்க்கமான கருத்துக்களுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள்.  
10. உங்கள் கருத்துக்களை, நம்பிக்கைகளை ஒருபோதும் திணிக்காதீர்கள். மற்றவர்கள் செய்வது தவறு என்று தெரிந்தால் சொல்லிப்ப்பாருங்கள். ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அவரையும் அன்புடன் ஏற்றுக்கொள்ள பழகுங்கள்
11. சின்ன விஷயங்களுக்கும் கூட நன்றி சொல்லப் பழகுங்கள். உங்கள் மீது தவறு, அது சிறியதாக இருந்தாலும் கூட வருத்தம் தெரிவியுங்கள். அது உங்களை உயர்த்தும்.
12 . பணமோ, உடல்நிலையோ, எதிர்காலமோ எதை நினைத்தும் பயப்படாதீர்கள். பயத்துடனேயே வாழ்ந்து மடிவதில் அர்த்தம் இல்லை.
எப்படி கவலையின்றி பிறந்தோமோ, அதே போல் கவலையின்றி இறக்கவேண்டும்.
13. உங்களால் உழைத்து நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்றால் செய்யுங்கள், அது ஒன்றும் தவறில்லை. ஆனால் நேர்வழியில் சம்பாதியுங்கள்.
14. வாரத்திற்கொரு முறை அரை மணியாவது தாய் தந்தையிடரிடம் தனிமையில் அன்போடு உரையாடுங்கள். அவர்கள் அனுபவங்களை செவிமடுத்தி ஆசையோடு கேளுங்கள். அக்கம்பக்கத்தில் வயதானவர்கள் இருந்தால் மாதத்திற்கு ஒருமுறையாவது அவருக்கு பிடித்த ஏதோ ஒரு தலைப்பில்  சும்மாவாவது ஜாலியாக உரையாடிவிட்டு வாருங்கள்.
15  நீங்கள் அறுபது வயதை கடந்த ஆண்களாக இருக்கலாம், இல்லத்தரசிகளாக இருக்கலாம். அது ஓலா எப்படி புக் செய்வது, யூபர் டாக்சியை எப்படி அழைப்பது, முகநூலில் ப்ரொபைல் பிக்சர் எப்படி அப்லோட் செய்வது போன்ற அல்ப விஷயங்களாக இருக்கலாம், வெட்கப்படாமல் கேட்டு தெரிந்து கற்றுக் கொள்ளுங்கள். எந்த வயதிலும் எல்லோராலும் எதையும் கற்க முடியும். மற்றவர்கள் கேலி பேசினால் உதாசீனப்படுத்தி முயலுங்கள்.
16.  உங்களுக்கு பிடித்த விஷயத்தை, ஆசைப்படும் விஷயத்தை செய்ய தயங்காதீர்கள். அது இங்கிலிஷ் பேசுவதாக,கதை எழுதுவதாக , சல்வார் கமீசோ, நைட்டி, ஜீன்ஸ் அணிவதாக,ஸ்கூட்டர் ஓட்டுவதாக, மற்றவர்களை பாதிக்காத எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
17. நாற்பது வயதிற்கு கீழ் உள்ள ஆண்கள்,  வீட்டின் சின்ன சின்ன வேலைகளை செய்ய பழகுங்கள், குழாய் ரிப்பேர், காய்கறி நறுக்குவது,வீட்டை சுத்தம் செய்தல், கழிவறை சுத்தம் செய்தல்.
18 இனிப்புகளை தவிர்க்க முயலுங்கள். மது, புகை  பிடிக்கும் பழக்கம் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து முற்றிலும் விடுபட முயற்சி செய்யுங்கள்.    
   
19 எப்பொழுதும் புன்சிரிப்போடு இருங்கள். சிரித்து வாழுங்கள்..
நீங்க இதையெல்லாம் செய்வீர்களா என்று என்னை கேட்காதீர்கள், உங்களில் ஒருவன் தானே நானும், அதனால் இவற்றில் சிறிதாவது முயற்சி செய்து பார்க்கவேண்டும் என்று "ஆசைப்படுவேன்" .
இவற்றை முயற்சி செய்தால் 2018  மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன் தான் இருக்கும்.