Showing posts with label 2020ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பொது. ஒரு பார்வை.. Show all posts
Showing posts with label 2020ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பொது. ஒரு பார்வை.. Show all posts

Wednesday, January 1, 2020

புது வருட வாழ்த்துகள்...

வெள்ளம் உயர்ந்தால் மலர் உயரும். உள்ளம் உயர்ந்தால் நீ உயர்வாய்..
என்றபடி "நான் போய் வரட்டுமா?" என்ற பழகிய குரல் கேட்க திரும்பி பார்த்தேன். 2019 மூட்டை முடிச்சுகளோடு நின்றிருந்தது. 

"அப்பாடா கிளம்பி விட்டாயா? நீ இந்த வருடம் கொஞ்சம் படாய்தான் படுத்தி விட்டாய்.. . இரு காலிலும் பாரபட்சமின்றி  அடிகள், கடுமையான ஜீரங்கள், என மாறி மாறி வரும் போது நெருங்கிய உறவுகளின் நிரந்தர பிரிவுகள், அதனால் மன சலனங்கள் என்றிருந்த வேளையில், கடைசி இந்த மாதத்தில் இருபது நாட்களாக வயிற்றில் வலி, வலி தந்த எரிச்சல், அதை கண்டு கொள்ளாமல் இருந்ததில் "நான் விட மாட்டேனே .! கண்டுப்பேனே," என்று அது செய்யும் அழிச்சாட்டியங்கள், அதைத்தவிர வீட்டிலிருக்கும் சின்னக் குழந்தைகளின் அவ்வப்போதைய முடியாமைகள்  அதைக்கண்டு  மன வேதனைகள்... .அப்பப்பா..! தாங்க முடியவில்லை..! போய் வருகிறாயா? நல்லது.. நீ போகும் வேளையாவது என் துன்பங்கள் அகலட்டும்...! " என்று  வாய் வரை வந்த வார்த்தைகளை அதன் முகம் லேசாக வாடியிருந்ததைப் பார்த்து  சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே விழுங்கினேன். 

கடந்த வருடமாகிய 2019 பிறந்து வளர்ந்து நம்மோடு உறவாடி மகிழ்ந்து, இல்லை நம்முடன் அதுவும் துன்புற்று "இதோ! விடை பெற்றுக் கொள்கிறேன். விடை தா.! எனும் போது  நம் கண்களிலும், ஒரிரு கண்ணீர் துளிகள் நம்மையறியாமல் பூத்திருந்ததை உணர முடிந்தது . . பழகிய நட்பின் பிரிவு கொஞ்சம் மனதை சலனபடுத்துமே அந்த மாதிரி அது பேசி விடை கேட்டதும் மனது லேசாக கனத்துப்போய் விட்டது . 

" நான் போனாலும் என்னுடன் இருக்கும் உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்ள  என் உறவாகிய 2020 வருகிறது. அதனுடனாவது நீங்கள் கஸ்டப்படாமல் சுகமாக இருங்கள்" என அது லேசாக முணுமுணுத்துக் கொண்டே விடை கேட்டது வேறு மனதை என்னவோ செய்தது.

 "ஏன் இப்படி சொல்கிறாய்?" என ஏதாவது சொல்லி சமாதானப்படுத்தி விடை தரலாம்..! என நினைக்கும் போது, " நான் முதலில் உங்களுக்காக உதயமாகும் போதும் இப்படித்தான் பட்டாசின் சத்தங்களோடு நள்ளிரவில் நான் பிறந்த நேரத்தை கொண்டாடி உங்களுடன் இரண்டற கலந்தேன். அப்போதும்  2018 கொஞ்சம் வருத்தத்துடன் விடை பெற்றது. இதெல்லாம் எங்களுக்கு சகஜந்தான்..! நீங்கள்தான் ஏதோ ஒரு குறைகளுடன் எங்களுடன் வாழ்ந்து வருட இறுதிக்குள் எங்களை வெறுத்து அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறீர்கள். " என்றது. 

" எப்படி என் மனதிலுள்ளதை அறிந்து கொண்டது இது? என்னும் வியப்பு மேலிட அதை பார்த்த போது, "உன் மனது சொல்ல நினைத்ததை நான் எப்படி தெரிந்து கொண்டேன் என பார்க்கிறாயா? நாங்கள் வரும் போதிலிருந்தே  உங்கள் மனதுடன் கலந்து வாழந்துதானே  செல்கிறோம்.! எங்களுக்கு உங்கள் மனம் புரியாதா? நீங்கள்தான் எங்களுடன் மனமொப்பி இருப்பதில்லை..!" என்றது சற்று கேலியாக.

உண்மை  சற்று நெஞ்சை சுட " "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை..! ஏதோ கஸ்டங்கள் வரும் போது அப்படி நினைக்கத் தோன்றுகிறது.!"என பொய்யான பேச்சை துவக்கியதும், "போதும்.! நான் மறுபடியும் இந்த மூட்டையை அவிழ்க்காமலே கிளம்புகிறேன். சற்று சிரித்த முகத்தோடு விடை மட்டும் கொடு..! என்றது. 

அப்போதுதான் எனக்கு நினைவே வந்தது." ஆமாம்..! இதென்ன மூட்டைகள்.. வரும் போது நீ எதையும் கொண்டு வரவில்லையே! . என்றேன் ஆச்சரியத்தோடு.. 

" ஆமாம். பிறந்து வரும் போது கைவீசி கொண்டே சந்தோஷமாக இருக்கலாம் என்று வரும் நாங்கள் போகும் போது, நீங்கள் தரும் பரிசாக உங்களுடைய வருத்தங்கள், சோகங்கள், கஸ்டங்கள், வேதனைகள், வசவுகள் என அத்தனையம் மூட்டைகள் கட்டிக் கொண்டு கிளம்புகிறோம். அப்படியும் உங்களுடன் கடந்து வந்த எங்களை நினைவாக வைத்து மறுபடியும் வசைபாடி, வரும் 2020க்கு சுமைகளாக இவைகளை தந்து விடுவீர்கள். சரி.. சரிி.. எனக்கு பேசிக்கொண்டிருக்க நேரமில்லை.. மகிழ்ச்சியுடன் இரு.. . இனியாவது உன் வினைகள் உனக்கு தரும்  மகிழ்ச்சி. துயரம்  இரண்டையும் சமமாக பார். எங்கள் மேல் கோபங்கள் வராது.  எங்களுடன் நீங்களும் ஒத்துழைத்துப் பாருங்கள்.. நான் சொல்வது உனக்குப்புரியும் . போய் வருகிறேன். 
உன்னுடைய மனப்பாங்குதான் உன் உயர்வையும் தீர்மானிக்கிறது.  என்றபடி 2019 விடை பெற்றுச் சென்றது.
அது கூறிச் சென்ற உண்மையை இப்போதைக்கு உணர்ந்தவளாய், 2020 ஐ வரவேற்று  வாழ்த்த தயாராகினேன். 

நட்புறவுகள் அனைவருக்கும்  இனிமையாக பிறந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.  புத்தாண்டு அனைவருக்கும் நலமுடன் வளம் சேர்க்க இறைவனை மனமுருக பிரார்த்தனை செய்கிறேன்.
                                          நன்றி. 
                          🙏  🙏  வாழ்க வளமுடன். 🙏🙏