தீப ஒளித்திருநாள்.
அனைவருக்கும் என் அன்பான தீபாவளி பண்டிகையின் நல்வாழ்த்துகள்.
தீபாவளி என்றாலே பாரம்பரியமாக மக்கள் அனைவருக்கும் மனமகிழ்ச்சி தரும் ஒரு பண்டிகை. என்பது அனைவரும் அறிந்ததே.
நம் இரண்டு இதிகாச புராணங்களிலும் கடவுள் தானே மனித அவதாரம் எடுத்து வந்து தர்மத்தை நிலைநாட்டவும், சத்திய வழியில் தவறாது செல்லவும், ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதை இவ்வுலகிற்கு புரிய வைத்தார்.
ஒரு சமயம் உலக மக்களை தன் கொடூர செயல்களால் ஆட்டிப் படைத்து வந்த நரகாசுரன் என்னும் அரக்கனை இந்த ஐப்பசி மாதம் சதுர்தசி/அமாவாசையன்று தன் கணவரான கிருஷ்ணபரமாத்மாவின் துணையுடன் சத்தியமாமா அழித்ததாக புராண கதை சொல்கிறது. அந்த அசுரனும், இறக்கும் தறுவாயில் தான் இறந்த இந்த தினத்தை மக்கள் தன்னைப்பற்றி அவதூறுகள் பேசி கழிக்காமல், அதற்கு மாறாக புத்தாடைகள் உடுத்தி, தங்கள் உறவினர்களுடன் விருந்தோம்பல்கள் செய்து, வீடெங்கும் மங்களகரமான தீபங்கள் ஏற்றி, இறைவனை வழிபட்டு வான வேடிக்கைகளுடன் சிறப்பாக கொண்டாடி மகிழ்வாக இருக்க வேண்டுமென்ற வரத்தை கேட்டு பெற்று பின் உயிர் துறந்தான். இந்த கதையின்படி அன்றைய தினத்தை நாம் "நரகசதுர்தசி ஸ்னானம்" என்றும், "தீபாவளியெனவும்" வழிவழியாக அப்படியே கொண்டாடி வருகிறோம்.
ராமாயண காலத்தில், தந்தை சொல் தட்டாது கானக வாழ்வை தன் மனைவி சீதையுடன் பதினான்கு ஆண்டுகள் முடித்து விட்டு தன் நாடான அயோத்திக்கு திரும்பிய தங்கள் அரசனான ஸ்ரீராமபிரானை அந்நாட்டின் மக்கள் மிகுந்த சந்தோஷத்துடன் வரவேற்று, வீதியெங்கும், ஒவ்வொரு வீடெங்கும், மலர் தோரணங்கள் கட்டி அலங்கரித்து லட்சகணக்கான தீபங்களை ஏற்றி, வானவேடிக்கைகளுடன் குதூகலம் பொங்க தம் உற்றார் உறவினர்களுடன் மகிழ்ந்திருந்த நாளே "தீபாவளி" எனவும் ஒரு கதை உண்டு. ஆக இறைவன் தான் மனித அவதாரம் எடுத்து வாழ்ந்த இரு புராணங்களிலும் இருளை அகற்றும் ஒளியாக இந்த (தீபஒளி) தீபாவளி பண்டிகையை முக்கியத்துவம் பெறச் செய்து நீதியை போதிக்கிறார் எனவும் கொள்ளலாம்.
தீபாவளி என்பதற்கு தீப ஒளி என்ற பொருள்தான் முன்னிலை வகிக்கிறது. இறைவன் ஒளி வடிவானவன். அதனால்தான் நாம் தினமும் அவரவர் வீடுகளில் காலை, மாலை விளக்கேற்றி வழிபடுகிறோம்.
" ஒளி வடிவாக உன்னுள்ளே இருக்கும் இருளை அகற்ற பரமாத்மாவாக நான் உன்னுடன் குடி இருக்கிறேன். ஜீவாத்மாவாகிய நீ என்னைத் இடைவிடாது தேடி, உன்னை தன்னுடன் இணைத்து வைத்திருக்கும் " ஆசை" என்ற மாயையினால் கட்டப்பட்டிருக்கும் அஞ்ஞான இருளை அகற்றி, அதை நீ வென்று விட்டால், பரிபூரண வெளிச்சமாக உன்னுள்ளே வீற்றிருக்கும் என்னைக் காணலாம். இப்பூலகில் உனக்கென உண்டாக்கி வழங்கப்பட்டிருக்கும் பிறவிக் கடலை கடப்பதற்கு இந்த வழிதான் உசிதம்.." என கீதையில் அதே ஸ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனன் மூலமாக மக்களுக்கு உபதேசம் செய்திருக்கிறார்.
அதன்படி நடந்து "அவனை" பரிபூரணமாக உணர்ந்தவர்கள் மஹா ஞானிகளாக, தவசிரேஷ்டர்களாக, யோகிகளாக, வாழ்ந்தும், மறைந்தும் நமக்கு வழி காட்டியிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம். ஆனாலும் , மாயையின் பிடியில் இன்னமும் சிக்குண்டு இந்த சம்சார சாகரத்தில் உழன்று வரும் சாதாரண மனிதர்களாகிய நாம் அகக்கண்களால் "அவனை" ஜோதிஸ்ரூபமாக காண இன்னமும் எத்தனைப் பிறவிகள் எடுக்க வேண்டுமோ?
இன்றைய தினத்தில் இப்போதும் வட நாட்டினர் தத்தம் வீடுகளில் நிறைய தீபங்களை (அகல் விளக்குகள்) ஏற்றி, இறைவனை வழிபட்டு கொண்டாடுவார்கள். நம் தென்னிந்தியாவிலும் இந்தப் பழககம் முற்றிலும் வந்து விட்டது என நினைக்கிறேன். வடக்கில் இமயத்தில் உதயமாகி என்றும் வற்றாது ஓடும் கங்கை நதியும், இந்த ஐப்பசி மாதத்தில் தென்னாட்டு வரை தவழ்ந்து வந்து இங்கிருக்கும் சகல நதிகளிலும் நீராடி கூடி களித்து தன் சாபமொன்றை போக்கி கொள்கிறாள். அதனால் தீபாவளியன்று விடியல் பொழுதில் (நான்காவது சாமத்தில்) நீராடி முடிப்பவர்களை "கங்கா ஸ்னானம் ஆயிற்றா?" என ஒருவருக்கொருவர் கேட்டு பண்டிகையின் உற்சாகத்தை கூட்டும் பேச்சு வழக்கு (மரபு முறை) இன்றும் நம்மிடையே உண்டு.
மேலும் ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி அமாவாசையன்று மாலை முதல் வீட்டு வாசல் படியில் இருபக்கமும் இரு அகல் விளக்கேற்ற தொடங்கி, கார்த்திகை மாதம் வரும் திருவண்ணாமலையார் தீபம் வரையும், அதன் பின் கார்த்திகை மாதம் முழுவதும் வரையும் விளக்கேற்றும் பழக்கம் நம் வீட்டு பெரியவர்கள் மூலமாக நமக்கு எப்போதும் இருந்து வருகிறது.
இவ்விதம் நம் மனதிலிருக்கும் தெய்வீக குணமாகிய, அனைவரிடமும் பாரபட்சமின்றி அன்பு செலுத்துவது, மனித நேயத்தோடு அனைவரையும் நேசிப்பது போன்ற நல்ல குணங்கங்களின் ஒளி கொண்டு, அவ்வப்போது மனதில் தலை தூக்கும் கோபம், பழி வாங்கும் வன்மம், அசூயை, போன்ற அசுர குணமான இருளையகற்றி, வருடந்தோறும் வரும் இந்த தீபஒளி பாரம்பரிய பண்டிகையை போற்றி, நமது இளைய தலைமுறைகளுக்கும் இதன் நோக்கத்தை, அவசியத்தை உணர வைத்து அனைவரும் இறைவனின் இன்னருள்களை பெற்று சிறப்பாக வாழ்ந்திட வேண்டுமாய் இறைவன் அருள வேண்டுமென இந்த நன்னாளில் பிரார்த்தித்துக் கொள்வோம். 🙏.
பி. குறிப்பு... இது எ. பிக்காக சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் அவசரமாக ஒரு தீபாவளிக்கு முன்தினம் ஏதாவது எழுதச் சொன்னதில் தீபாவளி கட்டுரை என்ற பெயருடன் உருவானது. மறுநாள் தீபாவளியன்று எ. பியிலும் வெளி வந்ததற்கு எ. பிக்கும், அதன் ஆசிரியர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். அப்போது அந்தப் பதிவுக்கு கருத்துக்கள் அளித்தவர்களுக்கும் என் பணிவான நன்றிகள். இன்று என் வலைப் பதிவிலும் ஒரு சேமிப்பாக இருக்கட்டுமென இது அதே அவசரத்துடன் (வேறு எதாவது எழுத வீட்டின்்வேலைகள் இடம் தரவில்லையெனினும், என் சோம்பலும், ஒரு காரணம்.) வெளியாவது.
மறக்க இயலாத தீபாவளி நினைவுகள்....! படித்த அன்றிலிருந்து ஒவ்வொரு தீபாவளியன்றும் பிரபல எழுத்தாளர் கு. அழகிரி சாமி அவர்கள் எழுதிய "ராஜா வந்திருக்கிறார்" கதை நினைவுக்கு வர தப்புவதில்லை. நல்ல எழுத்து. அனேக மாற்றங்களினால் காலங்கள் எவ்வளவு மாறினாலும் என் மனதை விட்டு நீங்காத கதை.
அனைவருக்கும் என் அன்பான நன்றிகளுடன் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கு நன்றி.
"கங்கா ஸ்னானம் ஆயிற்றா?" என ஒருவருக்கொருவர் கேட்டு பண்டிகை அன்று செய்த பண்டங்களை அக்கம் பக்கம் , உறவினர்கள், இல்லாதவர்களுக்கு பகிர்ந்து மகிழ்வோம்.
கு. அழகிரி சாமி அவர்கள் எழுதிய "ராஜா வந்திருக்கிறார்" கதை நினைவுக்கு வரும் எனக்கும். இந்த கதையை நானும் பகிர்ந்து இருக்கிறேன். ஏழ்மை நிலையிலும் அந்த தாய் எங்கிருந்தோ வந்த சிறுவனுக்கு தன்னால் முடிந்ததை கொடுத்து மகிழும் தாய் , பணக்கார வீட்டு பையன் ''என்னிடம் சில்க் சட்டை இருக்கு உனக்கு இருக்கா" என்று கேட்கும் போது "எங்க வீட்டுக்கு ராஜா வந்து இருக்கிறார் உங்கள் வீட்டுக்கு வந்து இருக்கிறாரா" ஏழை வீட்டு பையன் பெருமிதமாக கேட்பது காதுகளில் ஒலித்து கொண்டே இருக்கும்.
உங்கள் தீபாவளி பதிவு அருமை.
நல்ல குணங்களின் ஒளியை ஏற்றி மனதில் உள்ள இருள் பகுதியை வெளியே விரட்ட சொன்னது அருமை.
//இளைய தலைமுறைகளுக்கும் இதன் நோக்கத்தை, அவசியத்தை உணர வைத்து அனைவரும் இறைவனின் இன்னருள்களை பெற்று சிறப்பாக வாழ்ந்திட வேண்டுமாய் இறைவன் அருள வேண்டுமென இந்த நன்னாளில் பிரார்த்தித்துக் கொள்வோம். 🙏.//
ஆமாம், பிராத்தனை செய்து கொள்வோம்.
நன்றி.
வணக்கம் சகோதரி
Deleteதங்களது அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி. தாங்கள் பதிவை ரசித்து படித்திருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது. உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் மகன், மகள் குடும்பத்திற்கும் என் அன்பான தீபாவளி நல்வாழ்த்துகள். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் அன்பின் தீபாவளி நல்வாழ்த்துகள்..
ReplyDeleteவாழ்க பல்லாண்டு..
வணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் என் அன்பான தீபாவளி நல்வாழ்த்துகள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இறைவன் அருள் புரிய வேண்டுமென இந்நன்னாளில் வேண்டிக் கொள்வோம்..
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி. அனைவரும் நலமாக வாழ இந்நன்னாளில் பிரார்த்தனைகள் செய்து கொள்வோம். நன்றி சகோதரரே
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எபியில்வந்ததன் மீள் பதிவா? தீபாவனி சிந்தனை சுவாரஸ்யம்தான்.
ReplyDeleteநீங்கள் சொல்லியிருக்கும் கு அ கதை நான் படித்ததில்லை என்று நினைக்கிறேன்.
ReplyDelete