நிலா, நிலா. அழகு நிலா..
இது மூன்றாம் பிறையில்
முத்தெனவே முளைத்து வந்த நிலவு.
பொதுவாக மூன்றாம் பிறை
பார்க்கச் சிறந்தது. ஆயினும்,
பார்வையில் படாமல்
பார்ப்பதரிது என எண்ண வைப்பது.
மேல் திசை காதல் பார்வையால்
மேக குவியலில் முகம் மறைத்து
மேகங்களுடனே நகர்ந்து, தன் மனது
மோகத்தையும் வெளி காட்டாது
மறுநாள் நாலாம் பிறையில், தன்
மனதை வெளிப்படுத்த எவ்வித
தயக்கமின்றி, தடங்களின்றி அது
உற்சாகமாய் உதித்து வருவது
உலகறிந்த விஷயமாகும்.
இப்படி காணக் கிடைக்காதது அன்று
இவ்வாறாக கண்களில் பட்டது.
ஆழ் கடலில் உறங்கச் சென்ற
ஆதவனின் வெப்பத்தில்
கசிந்துருகி கனிந்துருகி, அந்த
நீலக்கடலின் நிறம் பெற்று
நிறம் மாறியதோவென
நினைக்க வைத்த வானம்.
எப்போதும் தன்னிலை உணர்ந்து
தன்னை அரவணைத்துச் செல்லும்
தன் நண்பனான மேகப்
பொதிகளை காணாததால் தன்
பொலிவினை சிறைப்பிடித்து
தன் காதலை தங்குதடையின்றி
தக்க வைத்து விட்டார்களே என்ற
நாணம் கொண்டு நீலவானத்தின்
போர்வைக்குள் மறைந்தெழுந்து
ம(மு)கிழ்ந்திருந்த நிலவு.
நாணும் நிலவும் ஒருவித அழகு.
நாணம் பெண்களுக்கும் ஒரு அழகு.
அம்புலியும் அழகும் இணைந்த
அதிசயத்தால் "நிலவு ஒரு
பெண்ணாகி உலவுகின்ற அழகோ"
என்ற பாடலும் உதித்ததோ ?
எத்தனை நிலவு பாடல்கள்..
அத்தனையும் நிலவின்
அசையாத சொத்துக்கள்.
நிலவிருக்கும் வரை நம்
நினைவிலிருந்து நீங்க மறுக்கும்
நிதர்சனமான வைரங்கள்.
நிலா பாடல்களை நித்தமும் ரசித்து நினைவு கூர்பவருகளுக்கு நிலா சார்பில் எனது வாழ்த்துகளும், நன்றிகளும். 🙏.