ஒத்தையடிப் பாதை மாறி
ஓரங்கட்டும் வாகனங்களை சாடி.
ஊர்ந்து செல்லும் வழிகளை தவிர்த்து
ஊரெங்கும் சடுதியில் கடக்க
நாலு வழிச் சாலை போட்டாச்சு.
மனம் போல் மரணித்தவரை
மனம் இல்லையெனினும்
சாலை வழி நடந்து சென்று
நாலு பேர் சுமக்கும்
ஒரு நியதியும்
நாளடைவில் நின்று போயாச்சு. .
காத வழி பாதைதானே என்ற
கால் நடையான பயணத்தில்
காத தூரமும் கடக்க சோம்பலானதால்
கால்நடைகள் ஊறுதல் பெற்றதோடு,
கார்களோடு உறவு கொள்வது
கண்டபடிக்கு அமோகமுமாயாச்சு.
மகிழ்வூந்து என்ற பெயரோடு,
மனம் நிறைவுறாது தவிக்கும்
அதன் மகிழ்வுக்கென அதற்கேற்ற
அனேக பெயர்களையும் சூட்டியாச்சு.
எங்களால் இயலாதது இவ்வுலகில்
எதுவுமே இல்லையென
மார்தட்டி மமதை கொள்ளும்
மனித வர்க்கமாக மாறியாச்சு.
இவர்களின் இறுமாப்புக்கு
இன்னல்கள் பலதையும்
இவர்கள் வாழ்வினது
வசதிகளின் பெருக்கத்திற்கு நாம்
வாழும் வாழ்வையும் இழந்தாச்சு.
அலட்சியமாய் வெட்டப்படும் நம்
அங்கஹீன வலிகளின்,
அவஸ்தையை உணராத
அன்பில்லா மாந்தர் என்றாயாச்சு.
எம்மோடு ஒப்பிட்டு பேசவும் இனி,
எந்தவொரு ஈரமில்லை எம் நெஞ்சில்
எனினும் உங்களுடன் எம் வாழ்வு
என்று சபித்து விட்ட இறைவனுக்காக
எந்த ஒரு மனகிலேசமுமின்றி
வாழும் முறையையும் கற்றாச்சு.
எங்களின் நல்மனம் மனிதருக்கு
எந்நாளும் இனி வரவும்
எள்ளளவும் வாய்ப்பில்லை என்ற
மரங்களின் முணுமுணுத்தலுக்கு
மறு பேச்சில்லை என ஆகியாச்சு
.
சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் சாலை வசதிகளுக்காக இயற்கையை அழிப்பது குறித்து அருமையாய் எழுதி இன்று அவர் பதிவில் பகிர்ந்ததை படித்துப் போது, மனம் நொந்த மரமொன்று கூறுவதாக சொல்லப்படும் இக்கவி என் மனத்துள் உருவாகியது. எழுத வேண்டாமென மனது எவ்வளவோ தடுத்தும் எழுதிதான் பார்க்கலாமே என என் கவிதை படைக்கும் ஆசை ஆற்றாமையுடன் கூறியது. அதனால் மரங்களின் ஆற்றாமை என்ற தலைப்பையே வைத்தேன். இது எப்படி உள்ளதென கூறுங்கள். கருத்துரைக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றி. 🙏.