Showing posts with label அப்பளம். Show all posts
Showing posts with label அப்பளம். Show all posts

Saturday, March 10, 2018

புடலங்காய் பொரிச்ச குழம்பு .......

புடலங்காய்  பெரியதாக ஒன்று. நன்றாக அலம்பி விட்டு பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அரை கிளாஸ் துவரம்பருப்பை ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். 

கடலை பருப்பு ஒரு ஸ்பூன், துவரம் பருப்பு ஒரு ஸ்பூன், உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன், கொத்தமல்லிவிரை நாலு ஸ்பூன் அரை ஸ்பூன் மிளகு அரை ஸ்பூன் சீரகம் மிளகாய்வத்தல் ஆறு, (காரம் அவரவர்  ருசியை  பொறுத்து  வத்தல் கூடக்குறைய வைத்துக்கொள்ளவும்.) ஒரு சின்ன மூடி தேங்காய் துருவல், சிறிது கறிவேப்பிலை இவையெல்லாம் எடுத்துக்கொள்ளவும். 

ஒரு வாணலியில்  ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம் பருப்பு, ( கொஞ்சம் தாளிப்புக்கு ஏற்றாற்போல்) போட்டு தாளித்த பின் புடலங்காய் நறுக்கியதை  போட்டு நாலு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவு‌ம்.   பாதி கொதித்தப்பின்  ஒரிரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து தேவையான உப்பும் கலந்து கொதிக்க விடவும். (சில புடலங்காய் முதலிலேயே மஞ்சள் உப்பு சேர்த்தால் வேக மாட்டேனென்று பிடிவாதம் செய்யும்.) 

கொதித்துக் கொண்டிருக்கும் புடலங்காய்.........




வேறு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் குறிப்பிட்டுள்ள மசாலா சாமான்களை வறுத்து எடுத்துக் கொண்டு அதிலேயே தேங்காய் துருவலையும் கறிவேப்பிலையையும் லேசாக வறுத்து வைத்துக் கொண்டு சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். புடலங்காய் நன்கு வெந்ததும் அதில் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கும் போது குக்கரில் வேக வைத்து இருக்கும் பருப்பையும் சேர்த்து கொதித்ததும்  அரிசி மாவு கரைசலை சேர்த்து கொஞ்சம்  பெருங்காயத்தூள் போட்டு மீண்டும் ஒரு கொதி வந்ததும் ஒரு ஸ்பூன் பச்சை தேங்காய் எண்ணெய் விட்டு அடுப்பை அணைத்து விடவும்.  
சுவையான புடலங்காய் குழம்பு ரெடி. இதை சூடான சாதத்தில்  நெய் விட்டு சாப்பிட இதற்கு சுட்ட அப்பளம் தொட்டுக் கொள்ள பொருத்தமாக இருக்கும். இட்லி தோசை போனறவற்றிக்கும் தொட்டு கொள்ளலாம்..



வறுபடும் சாமான்கள்.....




 

துருவிய தேங்காய்......  


வறுத்த பின் தேங்காய் துறுவல் ....,



அரைத்த விழுது...... 

வேக வைத்த துவரம் பருப்பு....... 


கரைத்து வைத்துள்ள அரிசிமாவு......



அத்தனையும் சேர்ந்து மொத்த வடிவெடுத்த புடலங்காய் பொரிச்ச குழம்பு...... 



இதுவும் அதேதான். ஒவ்வொன்றாக சேர்த்து கொதிக்க கொதிக்க வைத்தவுடன் கோபத்தில் கொதித்துக் கொண்டிருப்பது.



சுட்ட அப்பளம்......

நான் ரெடி! நீங்க சாப்பிட ரெடியா? என்று சுட்ட வலியில் கேட்பதற்குள் சாப்பிட வரலாமே!