Showing posts with label அனுபவம்.. Show all posts
Showing posts with label அனுபவம்.. Show all posts

Wednesday, December 26, 2018

தன்னை உணர்தல்..



இருளில் ஒரு ஒளி.... . 


இப்ப எவ்வளவு மணியிருக்கும்?  ஒரே இருட்டாயிருக்கே...!  இன்று காலையிலே கண் திறந்ததும் கும்பலோடு கும்பலாக, இங்கே இவங்க வீட்டுக்கு வந்தாகி விட்டது. இவங்க வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் அன்புடனே அடைக்கலம்  தருகிற மாதிரி என்னோடு காத்திருந்த மிச்ச என சகாக்களோடு, அவங்க அணைத்தெடுத்து கொண்டு சேர்த்த இடத்திலே அமர்ந்து கொண்டேன். குளுகுளுன்னு அந்த இடம் நல்லாத்தான் இருந்தது. பின்னே இதுதானே எங்களுக்குரிய இடம். இந்த குளுகுளுப்பில் இல்லாவிடில் நாங்கள் வாழ்வது கஸ்டம்.


அதுக்கப்புறம் இந்த வீட்டுலேயிருக்கிற இவங்க நிறைய தடவை நாங்க இருந்த இடத்திற்கு வந்து அவங்களுக்கு வேண்டியதை எடுத்துகிட்டு போகும் போது, எங்களையும் பாசமா பார்கிற மாதிரி எனக்குத் தோணும். சரி நம்மை இங்கிருந்து எப்பத்தான் விடுவிப்பார்கள்.   மைண்ட் வாய்சை உணர்ந்த அருகிலிருந்த சகாக்கள் எல்லாம் "உனக்குத்தான் முன்னுரிமை... நீதான் முதலில் தென்படற மாதிரி இருக்கிறாய்". என்றனர்.


 விழி திறந்து காத்திருந்த போது, மறுபடியும் யாரோ நாங்க இருக்கிற கதவை திறக்கிற மாதிரியிருந்தது. திடிரென விளக்கின் ஒளிபட்டு வெளிச்சம் ஒரு கண்ணை சற்று கூச வைத்தது. "யாரது" என்று பார்த்த போது, அவர்களும் என்னை கூர்ந்து பார்த்து வியப்பது புரிந்தது.


அப்புறமென்ன? ஒளியை கூட்டி என்னை விதவிதமாய், வடிவமைத்து அனேக தடவைகள், அவர்கள் கையிலிருக்கும் ஒரு கருவியைக் கொண்டு  மேலும் என் கண்களை கூசச்செய்தார்கள்.


எனக்கு ஒன்றும் புரியவில்லை, ..! "என்னப்பா செய்றாங்க இவங்க?" என்று அருகிலிருக்கும் சகாக்களிடம் அவர்களுக்கு தெரியாமல் மெல்ல கேட்டேன்.  ஒரு சகா அதில்  விபரமறிந்தவர் போலும்! " நீ எங்களை விட மூக்கும் முழியுமாக பளிச்சென்று இருக்கிறாய் இல்லையா.! அதனால்தான் உன்னை வளைத்து வளைத்து புகைப்படம் எடுக்கிறார்கள்." என்றார்.


எனக்கு மிகவும் ஆச்சரியத்தோடு சற்று மகிழ்வும் உதயமானது. அவ்வளவு அழகா நான்..! என்ற ஒரு எண்ணம் வந்த அந்த விநாடியில்  கொஞ்சம் கர்வம் கூட அந்த ஒரு கணம் வந்து போனது. அங்கிருந்த என் சகாக்களுக்கு என் மேல் கொஞ்சம் பொறாமை வந்திருக்கும் என்று கூடத் தோன்றியது.


அந்த புகைப்படக் கருவியை அருகில் வைத்து  மேலும் அழகாக ஒரு படமெடுத்தார்கள். "நீ எப்படி இருக்கிறாய் பார்த்தாயா?" என என்னிடம் காட்டிய போது நானே என் கண்ணையும், அழகையும் கண்டு கொஞ்சம் பூரித்துப் போனேன்..! என்பதை சொல்லவும் வேண்டுமோ.!


பின்னர்  மனம் மகிழுமாறு மேலும் இரண்டு கிளிக்குகள்..



நான் ஆனந்தத்தின் உச்சிக்கே சென்று விட்டேன்.  அடுத்து கதவை மூடி விட்டு படமெடுத்தவர் சென்றதும், சகாக்களிடம் பேசாது அமைதியாக ஒதுங்கியே இருந்தேன்.

 "என்ன சிந்தனை? புகைப்படம் எடுத்து விட்டதால், உன்னை அப்படியே விட்டு விடுவார்களா இந்த மனிதர்கள்.!  நாளை விடிந்ததும் நம்மில் பலர் சென்று விட்ட இடத்திற்கு நாமும் செல்ல வேண்டியதுதான்...! ஒரு நினைவுக்காக உன்னை படம் எடுத்து வைத்துள்ளார்கள். வேறு ஒன்றுமில்லை நன்கு யோசி.!" என்று மறுபடியும் என்னை நோக்கி குரல் வந்தது,.


 உண்மையாகவா? சட்டென்று என் குரல் உடைந்தது.  கண்கள் லேசாக தழும்ப பார்த்தது." இல்லை!  உங்களுக்கு என்மேல் கொஞ்சம் பொறாமை வந்து விட்டதோ".. என எனக்கு தோன்றுகிறது. நான் கிட்டத்தட்ட அழுகைக்கு அருகாமையில் வந்து விட்டேன்.


"என்ன இருந்தாலும் நீ கொஞ்சம் அழகாகத் தான்  இருக்கிறாய்...ஆனாலும் அதில் என்ன பயன்? நாம் அனைவரும் ஒரே இனந்தான்.. நாங்கள் ஏன் உன் மேல் பொறாமை கொள்ளப் போகிறோம்?  நம் அன்னை மடியில் கடைசிவரை வாழ நமக்கு கொடுப்பினை இல்லை.. அதுதான் உண்மை.. நம் அன்னையின் நலனுக்காகவும், அன்னையை காக்கும் இந்த மனிதர்களுக்கு பயனுள்ளதாக வாழ்வதற்காகவும்  மட்டுமே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். புரிந்து கொள்..!



வந்த அழுகை நிறுத்தி நிறைய நேரம் யோசித்த  போது புரிகிற மாதிரி இருந்தது. வேறு வழியில்லை.! மனதை தேற்றிக் கொண்டு எடுத்த படங்களையும், படம் எடுத்தவர்களையும் மறந்து விட வேண்டியதுதான்.! கடவுளால் படைக்கப்பட்டிருந்தாலும், மனிதருக்காக நாம் விதிக்கப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையை ஜீரணித்த வண்ணம் மறு நாள் கடமை ஆற்றுவதற்காக காத்திருந்தேன்.



விடியும் தறுவாயில் மற்றைய சகாக்களுக்கு நன்றி கூறி விடியலுக்கு  தவமிருந்த போது,  கண்ணில் வெளிச்சம் வந்து விழுந்தது. சரி. சரி வெளியில் சென்று கடமையின் நிமித்தம் பயணிக்க எனக்கு விடை தாருங்கள்.  🙏  நன்றி.. 

பி. குறிப்பு....
அன்று என் கண்ணில் பட்ட அந்த நந்தினி பால் பாக்கெட் மிக அழகாக கண்ணும் மூக்குமாக அம்சமாக காட்சி அளித்ததால், இந்த பதிவு உருவானது. படங்களையும் பதிவையும்  பொறுமையுடன் ரசித்தவர்களுக்கு என் நன்றிகளும்.... 🙏...