Showing posts with label ராமரும்.. Show all posts
Showing posts with label ராமரும்.. Show all posts

Sunday, September 16, 2018

கோவிலும், அதன் சிறப்பும்..

சென்ற மாதத்தில் ஒரு ஞாயறன்று  இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லலாமென முடிவெடுத்தோம் . காரணம் அதன் அருகிலேயே பூங்கா ஒன்று இருக்கிறது. குழந்தைகளுக்கு (என் குழந்தைகளின் குழந்தைகள்)  அதுதானே மிகவும் பிடித்தமானது.. ஆததால் சீக்கிரமாகவே, (சீக்கிரம் என்பது மாலை நான்கு மணி.)  அந்த டயத்துக்குள்  அவர்களை கிளப்பிக் கொண்டு  செல்வதற்குள்  போதும் போதுமென ஆகி விட்டது. அப்படியும் ஓலாவில்தான் அந்த இடத்துக்குச் சென்றோம்.

அந்த ராமாஞ்சநேயா  கோவில் சின்ன கோவில்தான் எனினும் அழகுடன் அம்சமாக இருந்தது.  கோவிலினுள் செல்ஃபோன் தடை... அதனால் கோவில் வாசலில் இருந்தபடியே போட்டோக்கள் எடுத்தேன். பூங்காவில் நேரம் போனது போக கோவிலுக்கு படியேறி செல்வதற்குள் கொஞ்சம் இருட்டு வர ஆரம்பித்து விட்டது. கோவிலில் மேல் ஸ்ரீ ராம பிரானும், ஆஞ்சநேயரும் ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்தபடி  சிலையாக இருக்கும் இத்தோற்றத்தை எவ்வளவு நேரம் வேண்டுமானலும் பார்த்துக் கொண்டேயிருக்கத் தோன்றும். அன்பும், பணிவும் ஒன்று கலந்த பாவத்துடன் அவர்கள் இருவரின் கண்களிலும் தோன்றும் ஆனந்த பாஷ்யம் நம்மை மெய்மறக்கச் செய்யும். ராமரின் அன்புக்குரிய  பணிவான  தோழரல்லவா ஆஞ்சநேயர்..... அந்த நட்பின் இறுக்கத்தை அங்கு கண்டு கொள்ளலாம். நாங்கள் முன்பெல்லாம் இந்த கோவிலுக்கு பலமுறை சென்றிருக்கிறோம்.


மூலஸ்தானத்தில் ஆஞ்சநேயர் இரு கைகள் கூப்பிய தோற்றத்துடன் தரிசனம் தருகிறார். கோவிலின் எதிரில், அரசும், வேம்பும், இணைந்த  பெரிய மரம்.. கீழே நிறைய வரிசையாக நாகர்கள். அந்த இடத்திலிருந்தும்  ராமரும் ஆஞ்சநேயரும் இணைந்திருந்த போட்டோ எடுத்தேன். சுற்றிலும் பூங்கா. அதன் நடுவில் மேலெழுந்தவாரிய இந்த அழகான ஆஞ்சநேயர் கோவில்.  இனி நான் எடுத்த புகைப்படங்களினால் இதன் சிறப்பை பார்ப்போமா.....


ராமரும், ஆஞ்சநேயரும் ஒருவரையொருவர் அன்பால் பிணைத்துக் கொண்ட காட்சி. 


சற்று இருள் வர ஆரம்பித்து விட்டது. அந்த பின்னணியிலும். அவர்களின் அன்பு மனதை நிறையச் செய்கிறது. 


கண்ணையும் மனதையும் கவர வெட்டி விடப்பட்ட செடிகள். பூக்கள், மரங்கள் என ரம்மியமான ஒரு பகுதி.....


பெரிய பாறைகளும். மரங்களுமாக மற்றொரு பகுதி...


"இருண்ட கிளைகளுக்கு ஊடே சிறிது ஒளியையும் புகைப்படம் எடுக்கும் உங்களுக்குகாகத்தான் தக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். " என விரைவு படுத்திய பூங்கா.


மாலை ஐந்தரை மணி வெளிச்சத்தில், கொஞ்சம் பளபளப்பு காட்டும் பூங்கா.


பூங்காவின் நெடியதாக  வளர்ந்த மரங்களில் கலராக இலைகள்.பூக்கள்.


மரங்கள் பாறைகள், புல்வெளிகளுக் கிடையே நானும் கொஞ்சம் இருக்கிறேன் என்று நினைவுபடுத்திய வானம்....


பூங்காவிலிருந்து  கோவிலுக்கு ஏறிச் செல்ல உதவும் படிகள்..

படிகளில் ஏறும் போது கோவிலின் பக்கவாட்டு தோற்றம்.! முழு முதற் கடவுளும், முப்பெரும் தேவிகளும் சுவரில் இருந்தபடி படி ஏறி வருபவர்களுக்கு ஆசி வழங்கும் காட்சி ...


கோவிலுக்குச் செல்ல படி ஏறும் முன் ஒரு இயற்கை காட்சி...


மரங்களும், புல்வெளிகள், பாறைகளுமாக அமைக்கப்பட்ட ஒரு பகுதி...


பல அடர்ந்த மரங்கள் பாறைகள் சீராக்கப்பட்ட புல்வெளிகளுடன் பூங்காவின் ஒரு தோற்றம்... 


சற்று இருளானது சூழலாமா.. வேண்டாமா? என யோசிக்கும் தறுவாயில் சட்டென எனது செல் முடிவெடுத்த ஒரு தருணத்தில் மீண்டும் ஒருமுறை கோவிலின் பக்கவாட்டு தோற்றம்...


கோவிலின் முன் பகுதியில் நின்றபடி நேராக எடுத்தப் புகைப்படம். முன் மண்டபம் ஏறிச் சென்றால் கோவிலினுள் பிரேவேசிக்கலாம். அங்கே கை கூப்பிய நிலையில் அடக்கத்தின் பிரதிபலிப்பாக ஆஜானுபாகுவாக,  கம்பீரமாக, உயரமான  கோலத்துடன் நின்றிருக்கும் ஆஞ்சநேய ஸ்வாமி....


அரசும் வேம்புமாக கை கோர்த்து இணைந்து  தன் காலடியில் அமர்ந்திருந்த நாகர்களின் துணை தந்த தைரியத்தில், பெரிதாக கிளை பரப்பி வளர்ந்திருக்கும் காட்சி....


இதுவும் நாங்கள்தான்.. எம்மை தினமும் பக்தியுடன் பிரதட்சணம் செய்தால், ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரோடி நீங்கள் வாழ்வீர்கள். என்கிறாரோ.. இந்த மரங்களுக்கு அரசன்.


கோவிலின் முகப்பு சேர்ந்து தெரிகிற மாதிரி எடுக்கப்பட்டது. இருள்தான்  வெற்றி யடையப் போகிறது என உணர்ந்த பின்னும் அதை தற்காலிகமாக வெல்ல நினைத்து ஒளி உமிழும் விளக்குகள்...


அடர்ந்த கிளைகளும் எங்கும் வியாபிக்கத் துடிக்கும் உள்ளம் கொண்ட இலைகளுமாக உன் சிறு செல்லின் இடம் முழுவதையும் ஆக்கிரமித்து விட்டேன் பார்த்தாயா? என்று பரிகாசமாய் என்னைப் பார்த்து வினவும் விருட்ச ராஜா....

=================================================================================
இந்த கோவில் பார்த்து தரிசனம் முடித்ததும் அருகில் மற்றொரு சிவன் கோவிலுக்குச் சென்றோம். அங்கும் கோவிலில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. இதேப் போல் வாசலிலிருந்து எடுத்தோம். அதை அடுத்தப் பதிவாக எழுதுகிறேன்.
இதைப் படிக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி. 🙏