கதையின் 5 ஆவது பகுதி.
ஒரு மனிதன் பிறக்கும் போதே சுயநலத்துடன்தான் பிறக்கிறான்... அவன் தேவைகள், அவன் ஆசைகள் இது மட்டுமே நிறைவேறினால் போதும் என்ற மனதுடன்தான் வளர்கிறான்... வாழ்கிறான்... பிறந்த குழந்தை தன் அன்னையின் அரவணைப்பிலிருந்து இறங்கி நடக்க கற்றுக் கொள்வது கூட, தான் விரும்பும் இடத்திற்கெல்லாம் தவழும் சுயநலத்திற்காகத்தான், இருக்குமோ....?
இப்படி தன் ஆசைக்காக, தன் தேவைக்காக, தான் விரும்பியபடி வாழ ஆரம்பிக்கும் மனிதன் சுயநலத்தின் பிடியில் படிப்படியாக முழுவதுமாக சிக்குகிறான். தன்னை பெற்றவர்களுடனும், மற்றவர்களுடனும், குடும்பத்துடனும், இதர சொந்த பந்தங்களுடனும், தன் குழந்தைகளுடனும், தான் வாழும்போது இதே சிந்தனைதான் அவன் மனதில் மேலோங்கி நிற்கிறது. இறுதியில் வாழ்நாளின் கடைசியிலும் தன் வாரிசுகளை சார்ந்தே இருக்க வேண்டுமென நினைக்கிறான். மடிந்த பின்பும் தன் சந்ததியினர் தன் நினைவு நாளை நினைவாக நினைவு கூர்ந்து கொண்டாட வேண்டுமென எண்ணுகிறான். அந்த அளவுக்கு அவன் சுயநலத்துடன் ஒன்றி போகிறான்.... ..
இப்படி பிறப்பிலிருந்து, இறப்பு வரை தனக்காக மட்டுமே வாழ ஆசைப்படும் மனிதர்கள் வாழும் போது தன்னுடன் வாழும் மற்றவர்களின் உணர்வுகளை மட்டும் ஏன் புரிந்து கொள்ளாமல் போகிறார்கள்.? சரி....... அப்படி அதை உணர்ந்து அந்த குணத்தை சிறிது கஸ்டப்பட்டேனும் மாற்றியமைத்தானேயானால் அவன் உலகில் வாழத் தெரியாதவனாகிறான்.. . "திறமையற்றவன்.... ஒன்றுக்கும் உதவாதவன். .. உபயோகமில்லாதவன்...." இன்ன பிற பட்டங்களை பிறர் சுலபமாக தர அதையும் சுமக்கிறான்.... அப்படி சுயநலமாக வாழும் போதும் மனிதனே மனிதனுக்கு பெரும் பகையுமாகிறான்...... ஆதி பிறப்பிலிருந்து தோன்றிய இந்த மனித வர்க்கங்களின் சுபாவங்கள்தாம் எத்தனை விசித்திரமானது...!!!
மனதில் தோன்றிய இந்த சிந்தனைகள் சதாசிவத்தின் உள்ளத்தை முள்ளாக குத்தி வருத்தியது... "யோசித்து பார்த்தால், நானும் ஒரு வகையில் அப்படிப்பட்ட சுயநலவாதிதானே...!" என்று உண்மையை நினைத்த மாத்திரத்தில் மனசின் மைய பகுதியில் சுரீரென்று வலித்தது.... "நான் வளர்த்த பையன், என் வளர்ப்பு மகனானலும், அவன் என்னையே தஞ்சமென அண்டி இருக்க வேண்டும். வயதான என்னை நான் கண் மூடும் கடைசி காலம் வரை என் சொந்த வீட்டிலேயே சேர்ந்திருந்து அன்புடன் அனுசரித்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தில்தான், அவனுக்கு வேண்டியதெல்லாம் நான் பார்த்து, பார்த்து செய்தேனோ...? " என நினைத்த போது இதயம் வெடித்து விடும் போலிருந்தது...
கண்கள் கலங்க அருகிலிருந்த மரத்தை தழுவி கொண்டார்.... . கைகளால் அதன் சொரசொரப்பை வாஞ்சையுடன் தடவியபோது உள்ளம் சற்று லேசாகியது. அண்ணாந்து சற்றே வீட்டின் பக்கமாக வளைந்திருந்த மரத்தை அதன் உச்சி வரை பார்த்தார். இந்த மரங்கள்தான் எத்தனை மேன்மையானவை..... "பொதுவாக உயரமான மனிதரை... மரம் மாதிரி வளர்ந்திருக்கிறாரே தவிர அறிவு வளரவில்லை..." என்பார்கள். ஆனால் மரத்தின் சிறப்பாம்சங்கள் மனிதனிடம் முழுமையாக இருந்துவிட்டால் அவன் உண்மையிலேயே உயர்ந்தவன்தான்.....
தன்னை நாடி வருபவர்களுக்கு நிழல் தந்து, பறவைகளுக்கு புகலிடமாக இருந்து, சுயநலமில்லாமல், தனக்காக எப்போதும் வாழாமல், தான் வாழும் ஒவ்வொரு காலகட்டத்திலும், பூ, காய், கனி, என மரங்கள் பிறருக்கு உதவியாக இருப்பதுடன், தன் மடிவை சந்தித்தும் மரங்கள் மனிதனுக்கும், பிற உயிர்களுக்கும், எவ்வளவு உதவியாக இருந்து வாழ்ந்து காட்டுகிறது. மரங்களுடன் வேறு எதையும் ஒப்பிட முடியாது. அதனால்தான் மரத்தின் பெருமை விளங்குமாறு, அதனை அத்தனை உயரமாக படைத்திருக்கிறான் இறைவன்......! " எனக்கு அடுத்த பிறவி என்ற ஒன்றிருந்தால் உன் மாதிரி மனிதனை உனக்கே உரித்தான நேயத்துடன் கவனித்து கொள்ளும் உன்னைப்போல் ஒரு மரமாக உன்னருகிலேயே பிறக்கவேண்டும்..... " என்று முணுமுணுத்தவாறு கண்களில் நீர் மல்க மீண்டும் அன்புடன் மரத்தை லேசாக அணைத்துக் கொண்டார் சதாசிவம்.
அவர் சொன்னதை ஆமோதித்து அவரை அமைதிபடுத்துவது போல் மரத்திலிருந்து சில இலைகள் அவர் மீது விழுந்து பின் தரையை தொட்டன.. . .மனஉளைச்சல் தந்த அலுப்பின் காரணமாக கட்டிலின் விளிம்பில் சாய்ந்து படுத்து கண்களை மூடிக்கொண்டார் சதாசிவம்.
"உன்னையும், அவனையும் ஒரே மாதிரியான பாசத்துடன்தானே வளர்த்தேன்... அவன் மனதில் மட்டும் இத்தனை வேறுபாடுகள் இருப்பதாக ஏன் அனைவரும் குறைச் சொல்கிறார்கள்.? அவன் தன்னிடமிருக்கும் பாசமெனும் கிளைகளை ஏன் அவ்வப்போது யாரும் பார்க்காமலேயே வெட்டிக் கொள்கிறான்.
தாய் தந்தையை சிறுவயதிலேயே இழந்து சில உறவுகளின் பாராமுகத்திலும், சில உறவுகளின் பராமரிப்பிலும் எப்படியோ வளர்ந்து, நான் காலூன்றிய போது, நல்ல உண்மையான அன்புக்கு ஏங்கிய போது, அந்த உண்மையான பாசத்தை என் மனைவியின் வடிவில் இறைவன் கைப்பிடித்து கொடுத்தாள். அதன் பின் எங்களுக்காக உங்கள் இருவரையும் அதே பாசத்தின் பிணைப்பில் கட்டுண்டு வளர்த்த போது, அவன் மட்டும் ஏன் இப்படி மனதளவில் வேறானான்.....?
எத்தனையோ சிரமங்கள், மனைவி பிரிந்ததும் ஏற்பட்ட சோகமான எத்தனையோ நினைவுகளை அவனோடு கூட அதிகம் பகிராத வேதனைகளை, மனதோடு உன்னிடம் சொல்லி, பகிர்ந்த போதெல்லாம்.,.... எங்கள் அன்பை புரிந்து கொள்ளும் உன் இயல்பான ஆற்றலோடு, உனக்கு மட்டும் பேசும் சக்தியையும் இறைவன் தந்திருந்தால், நீ எத்தனை ஆறுதலாக என்னோடு வாய் விட்டு பேசி இருந்திருப்பாய்.... !" கண் மூடி தான் வளர்த்த மரத்தோடு பேசிய அவரை, அவர் பேச்சை, அவர் மனதை புரிந்து கொண்ட மனோபாவத்துடன் மரத்தின் கிளைகள் மேலும் அசைந்து, பல இலைகளை அவர் மீது உதிர்த்து தானும் அமைதி பெற்று கொண்டு, அவரையும் ஆசுவாசபடுத்தியது...... !!"
இது நாள் வரை வாழ்ந்த வாழ்க்கை சுவடுகள் மனக்கண் முன் வந்து போயின.. .. இன்றும்,.... அதிகம் பேசாது பிறர் மனம் கோணது, தனக்கென வாழாது, தமக்கென்று வாழ்ந்து மறைந்த மனைவியின் நினைவில், அவள் அன்பின் பிரிவில், மனது அழுததால் அவர் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் கொட்டியது.
நண்பர் பாலு எச்சரித்து சொன்ன விஷயங்கள் வேறு மனதை லேசாக சலனப்படுத்தியது..... .! பட்ட பகலில் எல்லோரும் பார்க்கக் கூடிய பொது இடத்தில் இப்படி சிறு குழந்தையாக உணர்ச்சிவசபடுகிறோமே என்ற வெட்கத்தில் கண்களை அவசரமாக துடைத்தபடி திறந்த போது கண்கள் திறக்க முடியாமல் எரிந்தன. காலையில் சற்று குறைந்திருந்த காய்ச்சல் இப்போது மறுபடி அதிகமாயிருந்தது.
சுசீலா கஞ்சியுடன் கொடுத்துச் சென்றிருந்த , சாப்பிட மறந்து விட்டிருந்த அந்த மாத்திரைகளை எடுத்து போட்டுக் கொள்ள வேண்டுமென்று நினைத்த போதில், "எதற்காக மாத்திரை சாப்பிட்டு அப்படி இந்த உடம்பை பாதுகாக்க வேண்டுமென்ற" வெறுப்பு ஒரு கணம் தோன்றியது.... "யாருக்கும் சிரமம் கொடுக்காமல், என்னையும் சிரமபடுத்தாமல், என்னை அழைத்துக் கொண்டு போய்விடு..." என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டே இருக்கையில், காற்று சில்லென்று அடிக்க, ஓரிரு மழைத் துளிகள் முகத்தில் வந்து விழுந்தது.
கண்களை சிரமப்பட்டு திறந்து பார்த்தார். மதியம் அடித்த வெயிலுக்கு பலத்த மழை வரும் போலிருந்தது. வானம் ஓர் மூலையில் ஒரு கறுத்த பெரிய யானையை போன்ற தோற்றத்துடன் கருமையாக காட்சியளித்தது.. ..கருமை அதிகம் படர்ந்த சூல் கொண்ட மேகங்கள் துரிதமாக ஆங்காங்கே பரவி விரிந்து அழகான நீலவானத்தை தன் மழை மேகங்களினால் மேலும் கறுப்பாக்கி விடும் லட்சியத்தை மிக விருப்பமான மனதுடன் நிறைவேற்றும் பணியில் செயல்பட ஆரம்பித்திருந்தன...
காய்ச்சல் வேகத்தில் எழுந்து நிற்கவே முடியாத சிரமத்துடன் எழுந்து நின்ற சதாசிவம் குடித்து முடித்திருந்த கஞ்சி பாத்திரங்களையும், மாத்திரை கவர்களையும் ஒரு கையில் எடுத்தபடி, மற்றொரு கையால் கயிற்று கட்டிலை மடித்து அருகிலிருக்கும் வீட்டு சுவற்றில் சாய்த்து விட்டு தள்ளாடியபடி நடந்து வீட்டினுள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்..
தொடர்ந்து வரும்.. .