இன்று உலக இட்லி தினமாம்.
(30.3. 25.)
நம் அன்றாட பாரம்பரிய உணவில் இந்த இட்லி எப்போதும் சிறப்பு மிக்கவைதான்..! ஒரு காலத்தில் அதற்கென்று ஒரு பிரத்தியோகமான தனி மரியாதை இருந்தது. ஒருவருக்கு உடம்புக்கு முடியவில்லையென்றால்,அவரை குணப்படுத்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, "டாக்டர் மருந்துடன் நோயாளி ஆகாரமாக என்ன சாப்பிடலாம்?" என்ற கேள்விக்கு அக்காலத்திய மருத்துவர்கள் முதலில் இட்லியைத்தான் நல்ல உணவாக பரிந்துரைப்பார்கள். (பிறகு காஃபி, கஞ்சி.) (ஆனால், இட்லியை கண்டாலே முகம் சுளித்து எரிச்சல் அடைபவர்கள் இப்போது நிறைய பேர்.) அதுபோல் இப்போது மருத்துவர்களும், "என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம்.." எனக் கூறத் தொடங்கி விட்டனர். ஏனெனில் இட்லியை புறந்தள்ளி நிறைய வெரைட்டி உணவுகள் வீட்டிலேயே இப்போது முதலிடத்தை பெறத் துடித்து வெற்றி கண்டு விட்டதால், இட்லி அவர்களுக்காக கொஞ்சம் பெருந்தன்மையுடன் நகர்ந்து வழி விட ஆரம்பித்து விட்டது. ஆயினும் இன்னமும், பல பெரியவர்களிலிருந்து சில குழந்தைகள் வரை இட்லியை விரும்பி சாப்பிடுவதையும், சில உணவகங்களில் பார்த்திருக்கிறேன்.
இந்த இட்லிக்கு ருசியாக அரைப்பதில் அந்த காலத்தில் கல்லுரலுக்கு பெரும் பங்கு இருந்ததது. அப்போதெல்லாம் சிலர் வீட்டில் தினமும் இட்லிக்கு அரைப்பதை ஒரு வழக்கமாக வைத்திருந்தனர். ஒரு குறிப்பிட்ட மாலை நேரத்தில் கல்லுரலின் "கடமுடா சத்தம்" ஒவ்வொரு வீட்டிலும் முழங்கும். (எங்கள் பிறந்த வீட்டில் எங்கள் அம்மா காலையிலேயே இட்லிக்கென அரிசி அளந்து ஊற வைத்து விடுவார்.) வீட்டில் தினமும் காலை அக்கப்போர்கள் ஏதுமில்லாத, ஆனால், போரடிக்காத இட்லிதான். வாரத்தில் ஒருநாள் அது தோசையாகவோ, பருப்புகள் சேர்த்தரைத்து அடையாகவோ மாறினால், அது அதிசயம். ஏனெனில் இட்லி எளிதில் ஜீரணமாகும் ஒரு உணவு (வஸ்து.) என்பதால், அதுதான் அப்போதைய குழந்தைகள், பெரியவர்களென வீட்டிலிருக்கும் அனைவருக்கும் உகந்ததாக இருந்தது. .
நாளடைவில், தினமும் இட்லிக்கு அரைத்து செய்வது அனைவருக்கும் பெரும் சோம்பலாக தோன்றியதால், வேறு ஏதாவதை காலை சிற்றுண்டியாக மாறுவதற்கு வாய்ப்புகளை தந்தனர். அதற்கு பிற தானியங்கள் சந்தோஷமாக சம்மதிக்க, அவற்றின் உதவியுடன் உப்புமாக்கள், தோசைகள், சப்பாத்தி, பூரியென அவைகள் பூரிப்புடன் வலம் வந்தன. எனினும் காலை நேரத்தில் இட்லியின் சௌகரியம் பிடித்து போன பிறகு மற்ற உணவுகளை தயாரிக்கும் போது ஏற்படும் சிரமங்கள் கண்டுணர்ந்ததில் வீட்டில் பெண்கள் அனைவருக்கும் சிறிது முகம் கோண செய்தது.
பிறகு மாவரைக்கும் பெரிய, கனமான கிரைண்டர்( யந்திரம்) வந்தது. அது வீட்டுக்கு வீடு அவ்வளவாக பரவாத காலத்தில், ஒரு சிறு கைத் தொழிலாக பலருக்கும் வேலை வாய்ப்பைத் தந்தது. வீட்டின் ஒரு இடத்தில் நாலைந்து மெஷின்கள் வாங்கி போட்டுக் கொண்டு மாவரைத்து கொடுப்பதில் மக்கள் வீட்டிலிருந்தபடியே கொஞ்சம் வருமானமும் பார்த்தனர்.
காலை நம் வீட்டில் இட்லிக்கு தேவையான அரிசி, பருப்பு போன்றவற்றை ஊற வைத்து, மதியம் அங்கு கொண்டு தந்தால், அன்று மாலை/ இரவுக்குள் இட்லி மாவு வீட்டில் வந்து சேர்ந்து தயாராகி, மறுநாள் காலை உணவுக்கு அது இட்லியாக வரும் இந்த விந்தை அனைவருக்கும் பிடித்துப் போனதில் மறுபடியும் வெற்றிக் கரத்துடன் இட்லிகள் கொடி பிடிக்க ஆரம்பித்தன.
பின்பு வீட்டுக்கான அளவுடன் சின்னதாக, நவீனமான பல மாவரைக்கும் யந்திரங்கள் வந்த பின் அதில் வீட்டிலேயே கொஞ்சமாகவோ, இல்லை இரண்டு, மூன்று நாட்களுக்கெனவோ இட்லி மாவு தயார் செய்து குளிர் சாதன பெட்டியில் பாதுகாத்து, மக்கள் பயனுற ஆரம்பித்தனர்.
அதன் பின் வந்த காலகட்டத்தில், அவ்விதம் அதைச் செய்யவும் நேரமில்லாமல், நேரங்களுடன் போராடுகிறவர்கள், உடல் நிலைகள் முடியாதவர்கள் என பலரும் பாக்கெட்டுகளில், தயாராகி வரும் மாவு வாங்கி அதில் இட்லி, தோசை என்ற பயன்களை கண்டனர். எப்படியும் இட்லிகளின் ராஜ்ஜியம் தரையிறங்கவில்லை.
"பட்டனை தட்டினா இரண்டு இட்லியுடன், கெட்டி சட்னி வர வேண்டும்" என்ற அந்தகாலத்தில் கலைவாணர் என். எஸ் கிருஷ்ணன் , அவர் மனைவி டி. ஏ மதுரம் அவர்கள் பாடிய நகைச்சுவை பாடல் இன்று பொய்த்துப் போகாமல், மெய்யாகி வருகிறது. இட்லி அரிசிக்கோ ,அதை அளவுடன் ஊற வைத்து பக்குவமாக அரைக்கும் மாவுக்கோ, என எதற்கும் கவலைபடாமல், பட்டனை தட்டினால் பறந்து வரும் இட்லிகள் வந்து விட்டன. (அது எப்படியிருக்குமோ என நான் இன்னமும் பரிசோதிக்கவில்லை.) சாப்பிட்டவர்களுக்குத்தான் அதன் சுவையும், தரமும் புரிந்திருக்கும். இது மனித சோம்பலின் கடைசி படிக்கட்டை எட்டிய விஞ்ஞான யுக்தியின் முயற்சி என நினைக்கிறேன். விஞ்ஞான வளர்ச்சியை இப்படியெல்லாம் வருமென கற்பனையில் பாடி, பேசி நடித்த அவர்களின் (கலைவாணர், அவர் மனைவி) பேச்சுக்கள் உண்மையாகி விட்டது.
அனைத்து உணவகங்களிலும், மற்ற உணவுகளோடு, இட்லி, சட்னி, சாம்பார், இட்லிமிளகாய்பொடி தடவிய நெய் இட்லி, நம் விருப்பப்படி சிறு துண்டுகள் செய்த லேசாக வறுத்த ப்ரைடு இட்லி, வெங்காயம், காய்கறிகளுடன் இணக்கமான காய்கறி மசாலா இட்லி, சாம்பாரில் தோய்ந்த மினி நடனமாடும் மினி இட்லிகள் என்ற பல விதங்களோடு இட்லிகள் இன்னமும் பவனி வந்து கொண்டுதான் உள்ளது.
இட்லி ரவையுடன் உளுந்து மாவை அரைத்து சேர்த்து செய்யும் இட்லிகள் சிலசமயம் ருசியாக அமைவதில்லை. எப்போதும் போல் இட்லி அரிசியை ஊற விட்டு அரைத்துச் செய்யும், இட்லிகள் என்றுமே சோடை போனதுமில்லை. இன்றும் இட்லியின் சிறப்புக்காகவே பிரபலமான உணவகங்கள் உள்ளன.
இன்னமும் இந்த இட்லிகளின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இட்லி தினம் என்ற ஒன்று முடிந்து விடும் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன்.
எப்படியோ உலகில் வந்த நாள் முதல் நம்முடன் இணைபிரியாது அன்று தொட்டு, இன்று வரை இணைந்து வரும் பாரம்பரியமான இட்லிகள் என்றும் வாழ்க...!
இந்தப்பதிவை ரசித்துப் படிக்கும் சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பான நன்றிகள். 🙏.