வணக்கம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்.
அதென்னவோ நான் எழுதினால், எப்போதுமே எனக்கு நீ.. ண்... ட.. பதிவுகள், கதைகள், படங்கள் பல விதங்களுடன் எடுத்த சமையல் குறிப்பு பதிவுகள் என வந்து விடும். என்றேனும் ஒருநாள் நானும் சுருக்கி எழுதலாம் என நினைத்து எழுதியதை, வெளியிடலாம் என ப்ரிவியூவில் போய் பார்க்கும் போது அதை பார்த்ததுமே மனசு "அட.. சே.. ! என்ன கஞ்சத்தனம் உனக்கு.. இவ்வளவு சின்னதாகவா எழுதுவது.? " என இடிக்க ஆரம்பிக்கும். சரியென்று... மறுபடி வெளி வந்து ஒன்றிரண்டு வாக்கியங்களை உருவாக்கி, இல்லை, பதிவு சம்பந்தபட்ட வேறு ஏதேனும் சேர்த்து நிறைய உருவாக்கி விட்டோமோ எனஅச்சத்துடன் மறுபடி ப்ரிவியூவில் சென்று பார்க்கும் போது "இப்பத்தான் சூப்பர் .".. என அந்த மனசு குதூகலிக்கும். ஆனால் படிக்கும் போது உங்கள் அனைவருக்கும் "என்ன... இந்த சகோதரி எல்லா பதிவுமே மிதி வண்டி மாதிரி எழுதாமல், தொடர் வண்டி மாதிரி நீ.. ள.. மா..க எழுதுகிறார்களே.." எனத் தோன்றும் என்பதை என் உள் மனசு உணர வேண்டாமோ....... ? சரி.. அதுதான் போகட்டும்.... எல்லோரும் எழுதும் பதிவுகளிலும் என் கருத்துரை மட்டும் வித்தியாசமாக பெரியதாக இருப்பதையாவது இந்த மனசு புரிந்து கொண்டதா என்றால் அதுவுமில்லை. எனக்கு மட்டுந்தான் கருத்திட்டு விட்டு படிக்கும் போது நீளமாக இருப்பது தெரியும். அந்த நீ... ள.. மே.... என்னை அங்கிருந்து விரட்டி வெளிகொண்டு வந்து துரத்தி விடும்.
சரி. ... இந்த தொடர்கதை என்ற பதிவை (நானும். அவரும்) பாகமாக பிரித்து போடலாம் என நான் நினைத்தவுடன், ஏதேதோ சம்பவங்கள் நடந்து பதிவை போட விடவில்லை. சரி.. ஒருவழியாக அதற்கான நேரம் என்ற ஒன்று வந்ததும், சற்றே நெடுங்கதையாக எழுதியதை, பிரித்து (இதிலாவது ஒவ்வொன்றும் சிறிதாக காணக் கிடைக்குமே என அற்ப சந்தோஷம்... எனக்கு மட்டுமில்லை... படிப்பவர்களுக்கும் வருமே என்ற ஒரு சந்தோஷம்.. வந்தது. ) தினமும் ஒரு பதிவாக ஆறு நாட்கள் தொடர்ந்து போட்டு வரும் கருத்துக்களுக்கு பதிலும் எழுதி, ஆங்காங்கே சென்று பிறரின் பதிவுகளை படித்து, அதற்கும் கருத்துக்கள் தந்து இதெல்லாம் இந்த கைப்பேசிக்குள் என்னால் முடியுமா...?" என நான் எப்போதும் போல் தயங்க, மனசு "உன்னால் முடியும் "என்ற தன்னம்பிக்கை ஊட்டி வெளியிட வைத்தது.
ஆனால், நாலாவது பதிவிலே ஆட்டம் ஆரம்பித்து விட்டது. வழக்கமாக வரும் தலை, பல் வலிதானே என சமாளித்து வரும் போது, ஜுரமும் என் வலிகளுடன் தன் தலையை பிடிவாதமாக காட்ட, ஐந்தாவதில் கொஞ்சம் திண்டாட்டந்தான். தொடர் கதையையும் உடனுக்குடன் தந்தால்தான் சுவாரஸ்யமாக இருக்கும். நாள் விட்டுப் போனால் படிப்பவர்களுக்கு நினைவிருக்க வேண்டாமா? என்பது என் எண்ணம் வேறு.....! அதனால் எப்படியோ ஆறாவதையும் அன்றே வெளியிட்டு விட்டேன்.
அன்று இரவு முழுவதும் எனக்கு நல்ல ஜுரம். கொஞ்சம் கூட தூங்கவேயில்லை. அன்று இரவிலிருந்து மறுநாள் காலை, மதியம் என ஆயுரவேத மருந்து சாப்பிட்டதில், மறுநாள் மாலைக்கு மேல் கொஞ்சம் கடுப்பாகி அது என்னை விட்டு விலகியது. உடம்பு அதன் வலியில் கண்மூடி படுக்க மட்டுந்தான் அனுமதி கேட்ட வண்ணம் இருந்தது / இப்பவும் இருக்கிறது. அதனால் அன்று என்னால் அனைவருக்கும் உடன் பதிலளிக்க இயலவில்லை. அனைவரும் என்னை மன்னிக்கவும். அதனால்தான் பதில் கருத்து தர தாமதமாகும் என்பதை மட்டும் பதிவில் குறிப்பிட்டேன்.
இப்போதெல்லாம், மனசாட்சிக்கு பயப்படுகிறோமோ இல்லையோ, லேசான ஜுரம் வந்தாலே பயப்படுகிறோம்...அது வேறு.. ஜுரத்தை விட உடம்பை பலகீனமாக்குகிறது. (எங்களை இந்த மாதிரி சாதாரண ஜுரத்திற்கு பிறந்த வீட்டிலிருக்கும் போது சிறுவயதிலிருந்தே ஆங்கில டாக்டரிடம் அழைத்துச் சென்றது கிடையாது. காலை வெறும் வயிற்றில் இஞ்சி சாறு எடுத்து,அதில் லிங்க செந்தூரத்தை அளவோடு கலந்து கொடுப்பார்கள். (எங்கள் மாமாதாத்தா நல்ல நாட்டு வைத்தியர். ,அவர் தயாரித்து தரும் நாட்டு மருந்துகள், தலைக்கு தேய்த்து குளிக்கும் மூலிகை எண்ணெய்கள் என எங்கள் வீட்டில் நிரந்தரமாக இருக்கும்.
எந்த ஒரு உபாதைகளும் எங்களில் யாரையாவது கிட்ட வந்து பயமுறுத்தினால், கடிதம் எழுதி துவரங்குறிச்சியில் இருந்த (அந்தக் காலத்தில் கடிதந்தானே. . .) அவரை எங்கள் வீட்டுக்கு வரவழைத்து விடுவோம்...அவரும் வந்து உடனிருந்து நாட்டு மருந்துகள் வாங்கி தயாரித்து தந்து எங்களை நலமாக்கி விட்டுத்தான் பிறகு செல்வார்..) மதியம், இரவு உணவு புழுங்கல் அரிசி கஞ்சிதான். (அப்போதுதான் விதவிதமாக சாப்பிட வேண்டுமென நாக்கு பரபரக்கும். எப்போதும் சாப்பிடச் சொல்லி, நாம் வேண்டாமென மறுத்த பிடிக்காத உணவை கூடவாவது தர மாட்டார்களா என மனசு ஏங்கும். ) இரவு அவர் ஆலோசனைபடி மிளகு, சுக்கு, திப்பிலி, நறுக்குமூலம், நிலவேம்பு, அக்கரா, சித்தரத்தை என்ற மருத்துகளை உரலில் இடித்து பொடி செய்த பின் அதைக் கொண்டு தயாரிக்கும் கஷாயம் என ஜுரம் இரண்டு நாட்களில் சொல்லாமல் வந்தது போல், சொல்லாமல் ஓடியும் விடும். மழை நாட்களில் கபத்துடன் கூடிய ஜுரம் வந்தால் ஆடாதொடை இலை, துளசி இலைகளும் அந்த கஷாயத்தில் ஐக்கியமாகும்.. . (எப்போதாவது சில சமயங்களில் எங்களுக்கே போக்கு காட்டும் சில விடாத ஜுரத்திற்கு ஆங்கில மருந்துகளை நாடி குணப்படுத்தி கொண்டுள்ளோம்.. ) ஒரு நாள் அடிக்கும் ஜுரமே ஆறுமாத பலத்தை அபகரித்து கொண்டு விடும் என எங்கள் பாட்டி சொல்வார்கள்.
திருமணமான பிறகு வாழ்ந்த காலத்தில் நடுவிலெல்லாம் இந்தமாதிரி நீடிக்கும்படியான காய்ச்சல் எங்களுக்கும் சரி.. எங்கள் குழந்தைகளுக்கும் சரி வந்தால், சமயத்தில் ஆங்கில மருத்துவரிடம் சென்றிருக்கிறோம். பின் அவர்கள் தரும் மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடுவோம். சரியாகி விடும். குழந்தைகளுக்கு பொதுவாக ஊசியெல்லாம் போட மாட்டார்கள். பெரியவர்களுக்கு காய்ச்சலின் தீவிரத்தை பொறுத்து ஊசி உண்டு. ஊசிக்கும் அடங்காவிடில் டெஸ்ட் உண்டு. மறுபடியும் டெஸ்டுக்கு ஏற்ற மருந்து, ஊசி என உண்டு இல்லையென ஆக்கிய பின் விடாக்கண்டனான ஜுரம் வேறு வழியின்றி ஓடி விடும். இப்போதுதான் இந்த பயங்கள் வந்திருக்கின்றது.
அப்புறம் அந்த காலத்தில் வெறும் காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவரிடம் செல்லும் போது நிறைய பேர் என்ன சாப்பிட வேண்டுமென எப்போதும் விடாப்பிடியாக ஜுரததில் சாப்பிடும் உணவை பற்றிய கருத்தை கேட்பார்கள். அவரும், காஃபி, கஞ்சி, ரொட்டி, இட்லி, வெந்நீர் என்று சொல்லி சலித்துப் போவார். (இவர்கள் கொடுக்கும் வைத்திய தட்சணையான ஐந்து ரூபாய்க்கு அவர் ( மருத்துவர்) ஜுர அளவை கணக்கிட்டு, மருந்துகள் எழுதி கொடுத்து, "பயப்பட வேண்டாம் .. இரண்டு நாளில் சரியாகி விடும்.. . .." என்ற தைரியமளிக்கும பேச்சுக்களைத் தவிரஅவரை நிறைய பேச வைக்கும் எண்ணம் இவர்களுக்கும் இருக்குமோ என்னவோ?) குடும்ப மருத்துவராக ஆகி விட்டால், அவரே இவரிடம் தொடர்ந்து வரும் இவர்களைப் பற்றிய குடும்ப விஷயங்களை பற்றி கேட்டு தெரிந்து அளவளாவிய பின்தான் நிம்மதியாவாரோ என்னவோ அதுவும் தெரியவில்லை. எப்படியோ நோயாளிகளுக்கும், அவர்கள் அடிக்கடிச் செல்லும் மருத்துவருக்குமிடையில் மனிதநேய பண்(உடன்) பாடு இருந்தால் சரிதான்....!
மருத்துவர் கடைசியாக தான் பரிந்துரைத்த மாத்திரைகளுடன் அந்த மிக்ஸரை கலந்து தரும்படி தன்னுடைய உதவியாளரை( கம்பெளண்டர் ) சொல்லும் போது இவர்கள் (நோயாளிகள்) லாலாகடை மிக்ஸரை கற்பனையில் நினைத்துக் கொண்டு,, அத்தனை ஜுரத்திலும், நாக்கின் சுவையை கூட்ட உதவிய மருத்துவரை வாழ்த்துவார்கள். இது குறித்து அந்த கால திரைப்படங்களிலும் சரி,, பத்திரிக்கைகளிலும் நகைச்சுவை பகுதிகளாக வந்திருக்கிறது. இப்போதெல்லாம் அந்த மாதிரி மருந்தெல்லாம் இருக்கிறதா என்று கூட தெரியாது.
இந்த தடவை அனுபவத்தில் மனதிலுள்ளதை ஒரு பதிவாக எழுத உதவிய அந்த ஜுரத்திற்கும் அவசியம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். (கொஞ்சமாவது சின்ன பதிவாக வந்திருக்கின்றதா ?) படிக்கும் அன்புள்ளங்களுக்கும் என் பணிவான நன்றிகள். 🙏.
பி. கு. இப்போது பூரண நலமாகி விட்டேன். உடல்நலம் பாதித்த மறுநாளே எழுதி வைத்த பதிவு இது. தொடர்கதை இறுதிக்கு என்னிடமிருந்து பதில் கருத்துகள் வரவில்லயே என நீங்கள் எதிர்பார்த்திருக்கும் போது வந்திருக்க வேண்டியது. "வழக்கப்படி நீ.. ள. ம்.... மற்றும் தாமதம் என்றேன் நான். நீ.. ள. மா? இன்னும் எனக்குள்ளும் நிறைய விஷயங்கள் இதைப்பற்றி உள்ளது. அதை உனக்கு நினைவுபடுத்தி எழுத வைக்கலாம் என நினைத்தேன். சரி... போ.... எப்படியோ உருப்படியா எழுதியது வெளியாகிறதே என்றது மனசு." 😁😁😁😀... நன்றி. 🙏.

























