ஓம் கணபதியே நமஃ.
ஓம் நமசிவாய நம ஓம்.
வணக்கம் அன்பான சகோதர சகோதரிகளே
இது பசவன்குடி புல்டெம்பிள் நந்திகேஸ்வரர், தொட்ட கணபதி ஆலயம் குறித்த பகிர்வு. இந்த வருடம் பிறந்தது முதல் என்னால் வலையுலகிற்கு இயல்பாக வர முடியாத நிலைகள் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வருடத்திலும் எப்போதும் போல் ஏதாவது பதிவுகள் கொஞ்சமாகவேனும் எழுத வேண்டுமென எண்ணியிருந்தேன். அது கைகூடவில்லை. ஏனெனில் இறைவனின் விருப்பந்தானே எப்போதும் நம்மை அசைக்கும் கருவி. இருப்பினும் இன்று என்னை எழுத வைத்த அந்த இறைவனுக்கு என் மனம் நிறைந்த நன்றியை கூறிக்கொள்கிறேன்.
என் நட்புகளாகிய நீங்களும் வலையுலகில் பதிவெனும் எழுத்துகளோடு என் வரவை எதிர்பார்த்திருப்பீர்கள் என்பதையும் நான் அறிவேன்.
சகோதரி கோமதி அரசு அவர்கள் என்னை ஏதாவது பதிவு எழுதச் சொல்லி இரண்டு மூன்று முறை வலியுறுத்தி கூறி விட்டார்கள். அவர்களின் அன்புக்கு நான் எப்பொழுதும் கடமைப்பட்டுள்ளேன்.(நன்றி சகோதரி. உங்களின் ஊக்கம் மிகுந்த வார்த்தைகள்தான் மீண்டும் என் கைகளில் பதிவெனும் ஓலையில் எழுத எழுத்தாணியை கொண்டு தந்துள்ளது.)
எங்கே வாழ்க்கை தொடங்கும். அது எங்கே எவ்விதம் முடியும்.
இதுதான் வாழ்க்கை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது.
பாதையெல்லாம் மாறிவரும். பயணம் முடிந்து விடும்.
மாறுவதை புரிந்து கொண்டால், மயக்கம் தெளிந்து விடும்.
இந்த திரைப்பட பாடல் வரிகள் எனக்கு மிக, மிக பிடிததமானவை. ஏனோ இதையும் இங்கு குறிப்பிடவும் விருப்பம் கொண்டு பதிந்து விட்டேன்.
நல்லதாக இனி எழுதும் பதிவுகளின் மூலமாக இப்போதுதான் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திக்கும் ஆவலில் வந்துள்ளேன். ஆனாலும் என்னை தினமும் மறவாத உங்கள் அன்பு உள்ளங்களுக்கு என் பணிவான நன்றிகள் எப்போதும் உண்டு. 🙏.
இந்த பசவன்குடி கோவிலுக்கு முன்பு இங்கு வந்த புதிதில் அடிக்கடி சென்றுள்ளோம். (அந்த இடத்திற்கு இரண்டு கி. மீ தொலைவிலேயே அப்போது நாங்கள் இருந்ததினால், அடிக்கடி கால் நடையாகவே நடந்து சென்று விட்டு வந்து விடுவோம்.) இப்போது இன்னமும் தொலைவில் எங்கள் ஜாகை அமைந்து விட்டபடியால், ஓலாவில் எப்போதாவது பயணித்து தொட்ட கணபதியையும், நந்திகேஸ்வரையும் தரிசித்து விட்டு வருகிறோம். நடுவில் தொற்று காரணமாக இரண்டு மூன்று வருடம் எங்குமே செல்லவில்லை. அருகிலேயே ஒரு பெரிய பூங்கா இருப்பதால், மகன், மகளின் குழந்தைகளுக்கு ஓடி விளையாட ஒரு இடமும் கிடைத்த மாதிரி இருக்குமென்பதால் இந்த மாதிரி அந்த இடத்திற்கு அன்று விஜயம்.
இது தொட்ட கணபதி ஆலயம்.
அருள் தரும் பெரிய பிள்ளையார். ஒரே பாறையில் உருவாகி பெரிதான உருவத்துடன் அருள் புரியும் இவரை கோவில் வாசலிலிருந்தே அழகாய் சேவிக்கலாம். விநாயகரே எளிமையானவர். அதிலும் இவரை சந்திப்பதும் மிக எளிது. அடிக்கடி வெண்ணெய் காப்புடன் இவரது பிரதியோக தரிசனம் அனைவரும் கிடைக்கும்.
இதுதான் அழகிய பெரிய உயரமான நந்திகேஸ்வரர். பெங்களூரை நிர்மானித்த நிறுவனர் கெம்பே கவுடாவால் 1537 ம் ஆண்டில், 4.5 மீட்டர் உயரமும், 6.5 மீட்டர் நீளமுமாக ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்ட கம்பீரமான சிலை.
விநாயகரை வழிபட்டு விட்டு சற்றே உயரமான பாறை மேல் படிகளின்
மூலமாக ஏறினால் இவரை தரிசிக்கலாம். எல்லா சிவன் கோவிலிலும் நந்தி தேவர் சிவனை வணங்கியபடி அவரைப் பார்த்தபடி அமர்ந்திருப்பார்.இங்கு எம்பெருமானையும், தன்னையும் வணங்கப்போகும் மக்களை வரவேற்றபடி அவர் திருக்கோலம் கொண்டுள்ளார். கோவிலுக்குள் நுழைந்ததும் கம்பீரமாக காட்சி தரும் நந்திதேவரை வணங்கிய பின் அவரை சுற்றி வலம் வரும் போது, சர்வேஷ்வரன் லிங்க வடிவில் சிறியதாக அருள் காட்சி தருகிறார். நந்தியின் பின்பக்கமாக அமர்ந்திருந்து தன் வாகனமான நந்தி தேவருக்கு முதலில் தனிச்சிறப்பை தந்து, அவரை மக்கள் முதலில் ஆராதிப்பதைக் கண்டு, அதில் ஆனந்தம் அடைந்து அருள் பாலிக்கிறார்.
இங்கு நவம்பர் மாதம் கடலைக்காய் திருவிழா தொடர்ந்து மூன்று, நான்கு நாட்களாக நடக்கும். அப்போது மக்கள் கூட்டம் எப்போதும் சாலைகளில் நடக்கக் கூட இயலாமல் இருக்கும். போக்குவரத்து பேருந்துகளும் இடம் மாற்றி சுற்றிச் செல்லுமென கேள்வி.
முன்பு, (கிட்டத்தட்ட 300,400 வருடங்களுக்கு முன்பு) பெங்களூரின் அக்கம்பக்கம் உள்ள கிராம விவசாயிகளின் ஆதாரமான கடலைத்தோட்டத்தின் விளைச்சல்களை தொடர்ந்து ஒரு காளை மாடு சேதமாக்கியதில், விவசாயிகள் மிகவும் வருத்தமடைந்ததினால், இந்த நந்தி தேவருக்கு ஒவ்வொரு வருடமும் நிலக்கடலை அறுவடையானதும், தங்கள் வண்டிகளில் கொண்டு வநது படைத்து விட்டு, மக்களுக்கும் குறைந்த விலைகளில் போணி செய்து வியாபாரம் செய்வதாய் வேண்டிய பின், அந்தக் காளையினால் பயிர்கள் சேதமின்றி வளர்ந்து விவசாயிகள் தங்கள் கவலைகளிலிருந்து மீண்டு நல்ல நிலையை அடைந்தார்களாம். அதிலிருந்து இந்த முறை பாரம்பரியமாக தொடர்ந்து நடைபெறுகிறதாம். இதை இங்கு வந்த பின் கேள்விபட்டுள்ளேன். ஆனால், அந்த சமயத்தில் அங்கு சென்றதில்லை.
இது இப்போது நந்திகேஷ்வரரை தரிசிக்க பெரிய விநாயகரை வணங்கி விட்டு மேலே ஏறும் போது பக்கவாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட தத்ரூபமாக கடலைக்காய் திருவிழாவை காட்டும் அழகிய சிலைகள். முன்பெல்லாம் நாங்கள் சென்றபோது இல்லை. இப்போது புதிதாக அமைத்திருக்கிறார்கள் போலும். ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்த வண்ணம் சென்றோம் . இதைக்குறித்து எனக்கு தெரிந்த தகவல்களோடு, இதையும் இங்கு பகிர்ந்துள்ளேன்.
என்ன.. சகோதர, சகோதரிகளே, படங்களை ரசித்தீர்களா? அப்படியே அங்குள்ள பிரபலமான உணவகத்திற்கு சென்று மசால் தோசைகள் உண்பதற்காக வழக்கப்படி பெயர் கொடுத்து, உணவகத்திற்கு வெளியே நிறைய நேரம் காத்திருந்த பின் எங்கள் இருக்கை கிடைத்ததும் உள்ளே சென்று தோசையை சாப்பிட்டு வீடு வந்தோம். ஆனால் ஆரம்பத்தில் நாங்கள் இங்கு வந்ததும் சென்று சாப்பிட்ட அந்த ருசி நிறையவே மிஸ்ஸிங். தினசரி எல்லாம் மாறும் போது இது மட்டும் மாறாதிருக்க இயலுமா?ஆனால் விலை மட்டும் ஏற்றம். பதிவை ரசித்து கருத்திடப் போகும் உங்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றி. 🙏.