Showing posts with label படித்ததில் பிடித்தது.. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது.. Show all posts

Sunday, April 5, 2020

ப(பி)டித்த கதை.

ஸ்ரீ ராம ஜெயம்.

தெரிந்த புராணம்…
தெரியாத கதை!

ஸ்ரீகிருஷ்ணனுக்கு நண்பனாக இருந்து, அவன் அருளால் தரித்திரம் நீங்கி, சுதாமன் எனும் குசேலன் குபேரனான கதை, நம்மில் பலருக்குத் தெரியும். இது ராமாவதாரத்துக்கு அடுத்த கிருஷ்ணாவதாரத்தில் நடந்த கதை.

ஆனால், ராமாயணத்திலும் ஸ்ரீராமன் அருள்பெற்ற ஒரு குசேலன் இருந்தான் என்றால், ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்த ராமாயணக் குசேலனின் பெயர்…அனந்தன்

ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்தில் ஸ்ரீராமன் தனது சகோதரர்கள் லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்னனுடன் வித்யாப்பியாஸம் செய்துகொண்டிருந்தான். அப்போது அவனுக்கு உற்ற நண்பன் ஒருவனும் இருந்தான். அவன் பெயர் அனந்தன். பரம ஏழையான அவன், வசிஷ்டரின் ஆசிரமத்தில் குருவுக்கு சேவை செய்து கொண்டிருந்தான்.

குருகுலத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த ஸ்ரீராம- லட்சுமண சகோதரர்களுக்குத் தொண்டு செய்வதில், அனந்தன் பேரானந்தம் கொண்டான். குறிப்பாக, ஸ்ரீராமன்மீது அவன் வைத்த பற்றும் பாசமும் அளவுகடந்ததாக இருந்தது. பதிலுக்கு அனந்தனிடம் ஸ்ரீராமனும் பேரன்பு காட்டினான். இருவரும் சேர்ந்து ஆனந்தராமனாக குருகுலத்தில் விளங்கினர்.

ஸ்ரீராமனுக்கு ஏடுகளை எடுத்து வைத்தல், எழுத்தாணியைக் கூராக்குதல், வில்லைத் துடைத்தல், அஸ்திரங்களை எடுத்து வைத்தல், உணவு பரிமாறுதல் ஆகிய பணிகளை பெருமகிழ்ச்சியோடு செய்து வந்தான் அனந்தன். 

ஸ்ரீராமனை ஒருநாள் காணவில்லை என்றாலும், அவன் மனம் ஏங்கித் தவிக்கும். ‘சுதாமனும் கண்ணனும் போல’ வசிஷ்டருடைய குருகுலத்தில் அனந்தனும் ஸ்ரீராமனும் நட்பு கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் வனத்துக்குச் சென்று, தர்ப்பைப் புல் பறித்து வரவேண்டியது அனந்தனின் கடமை. அதுபோல் ஒருமுறை அனந்தன் வனத்துக்குச் சென்றிருந்தான். அந்த நேரத்தில் ஸ்ரீராமனின் குருகுலம் முடிந்து, குருவிடம் விடைபெற்று சகோதரர்களுடன் அயோத்திக்குச் சென்றுவிட்டான். வனத்தில் இருந்து திரும்பி வந்த அனந்தன் விவரம் அறிந்து தாங்கமுடியாத வருத்தம் கொண்டான். 

உடனே ஸ்ரீராமனைக் காண அவன் மனம் துடித்தது. உடனே புறப்பட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீராமனின் அரண்மனைக்குச் சென்றான். அங்கே அவனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போதுதான் மகரிஷி விஸ்வாமித்திரருடன் ஸ்ரீராமனும் லட்சுமணனும் யாக சம்ரக்ஷணத்துக்காக வனத்துக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தனர். 

துக்கம் அனந்தனின் தொண்டையை அடைத்தது. ஒன்றும் அறியாத பாலகனான ஸ்ரீராமன் கானகம் செல்ல நேர்ந்ததை எண்ணிக் கலங்கினான். ஸ்ரீராமனைக் காட்டுக்கு அனுப்பிய தசரதனையும், அழைத்துச் சென்ற விஸ்வாமித்திரரையும் மனத்துக்குள் கடிந்துகொண்டான்.

பாவம் ஸ்ரீராமன்! காட்டில் அவன் என்ன செய்வான்? அவனுக்கு யார் சேவை செய்வார்கள்? நித்திய கர்மங்களுக்கு தர்ப்பை, சமித்து போன்றவற்றை யார் சேகரித்துத் தருவார்கள்? இப்படியெல்லாம் அவன் மனம் தவித்தது. எப்படியும் ஸ்ரீராமனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டான் அனந்தன். 

தன் குரு வசிஷ்டரிடம்கூடச் சொல்லிக்கொள்ளாமல், நேராகக் காட்டை நோக்கிச் சென்றான். அடர்ந்த காட்டில், ‘ராமா… ராமா…’ என்று கதறிக்கொண்டு, ஸ்ரீராமனைத் தேடி அலைந்தான். காட்டில் வழி தவறி, ஒரு இருண்ட பகுதிக்குள் அகப்பட்டுக்கொண்டான். அங்கே… பல நாட்கள் ஸ்ரீராமனைத் தேடியும், அவனைக் காணாமல் அனந்தனின் மனம் வாடியது. ஸ்ரீராமனைக் காணாமல் ஊர் திரும்பவும் அவனுக்கு விருப்பமில்லை. ‘ராமா… ராமா…’ என்று ஜபித்துக்கொண்டு, அன்ன ஆகாரமின்றி, அந்தக் காட்டிலேயே ஓரிடத்தில் நிஷ்டையில் அமர்ந்தான். அவன் அமர்ந்த இடத்தில், அவனை மூடியவாறு புற்று வளர்ந்துவிட்டது. ஆனால், அவனது ‘ராம’ ஜபம் மட்டும் நிற்கவில்லை.

காலச் சக்கரம் வேகமாகச் சுழன்றது. இதற்கிடையில், ராமாயண சம்பவங்கள் அனைத்துமே நிகழ்ந்து முடிந்திருந்தன. விஸ்வாமித்திரரின் யாகத்தை முடித்துக் கொடுத்து, சீதையை மணம் முடித்து, தந்தை சொல் காக்கக் கானகம் சென்று, சீதையைப் பிரிந்து, அனுமனின் உதவியால் அவள் இருக்கும் இடம் அறிந்து, இலங்கை சென்று ராவண சம்ஹாரம் செய்து சீதையை மீட்டு, அயோத்தி திரும்பியிருந்தான் ஸ்ரீராமன். அவன் பட்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. இத்தனை நடந்ததும், அது எதுவும் தெரியாமல் புற்றுக்குள் ‘ராமா… ராமா..’ என்று தவமியற்றிக்கொண்டிருந்தான் அனந்தன்.

ஸ்ரீராமனின் பட்டாபிஷேகத்தைக் காண பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் மக்களும், மன்னர்களும், மகரிஷிகளும் அயோத்திக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது காட்டு வழியே சென்று கொண்டிருந்த சில மகரிஷிகள் ‘ராம’ நாமத்தைப் பாடிக்கொண்டே சென்றனர். அவர்களில் ஒருவரது கால் பட்டு அனந்தன் தவமியற்றிக்கொண்டிருந்த புற்று இடிந்தது. அனந்தன் தவம் கலைந்து எழுந்தான். ‘ராமா… ராமா… எங்கிருக்கிறாய் என் ராமா?’ என்று கதறினான். 

காலச் சுழற்சியினால் தனக்கு வயதாகியிருப்பதைக்கூட அவன் அறியவில்லை. பல ஆண்டுகள் முடிந்துபோனதையும் அவன் உணரவில்லை.

இன்னும் குழந்தைபோல ஸ்ரீராமனைத் தேடினான். அப்போது மகரிஷிகள் கூட்டத்தில் ஒருவர், அவன் யாரென்று விசாரித்துத் தெரிந்துகொண்டு, அவனுக்கு ஆறுதல் கூறினார். ஸ்ரீராமன் வனவாசம் முடிந்து பட்டாபிஷேகம் செய்து கொள்ளப் போவதையும், அதற்காகவே எல்லோரும் அயோத்தி செல்வதையும் அனந்தனுக்குத் தெரிவித்தார். ராமனுக்கு ஏற்பட்ட துன்பங்களைக் கேட்டு கண்ணீர் வடித்தான் அனந்தன். இருந்தாலும், ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடக்கப்போகும் செய்தி அறிந்து, அதைக் காண மகரிஷிகளுடன் அயோத்தி புறப்பட்டான்.

அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று பட்டாபிஷேக நாள். எங்கும் வேத கோஷமும், மங்கல இசையும் முழங்கிக்கொண்டிருந்தன. குல குரு வசிஷ்டர், விஸ்வாமித்திரர் முதலானோர் பட்டாபிஷேக ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டிருந்தனர். மக்கள், மன்னர்களுடன், தேவர்களும் தேவ மாதர்களும் அங்கே வந்திருந்தனர்.

ஸ்ரீராமன் அதிகாலையிலேயே மங்கல நீராடி, ஆடை அணிகலன்கள் அணிந்து, தன் குலதெய்வமான சூரிய தேவனையும், தாயார் மூவரையும் வணங்கி, கொலு மண்டபம் நோக்கி கம்பீரமாக நடந்து வந்தான். அப்போது எல்லோரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடையும் வகையில் உரத்த குரலில், ”அடே ராமா! இத்தனை காலம் எங்கிருந்தாயடா? உன்னை எத்தனை காலமாய் தேடுகிறேனடா?” என்று குரல் கொடுத்தபடியே ராமனை நோக்கி ஓடி வந்தான் அனந்தன்.

 ராமனை இறுகத் தழுவிக் கொண்டான்.
கந்தல் உடையில், ஜடா முடியுடன் பரதேசிக் கோலத்தில் பாமரன் ஒருவன், ‘அடே ராமா’ என்று கூவி அழைத்தது கண்டு, அவையினர் அதிர்ச்சியுற்றனர். ‘எவனோ பைத்தியக்காரன் இவ்வாறு செய்கிறான்’ என்று கோபத்துடன் காவலர்கள் அவனைப் பிடித்திழுக்க விரைந்தபோது, ஸ்ரீராமன் அனந்தனை நெஞ்சாறத் தழுவி, அவன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, ”என்னை மன்னித்துவிடு அனந்தா!” என்று உணர்ச்சி பொங்கக் கூறினான்.

”உன்னிடம் சொல்லிக்கொள்ளாமலே குருகுலத்தில் இருந்து வந்துவிட்டேன். என் பிரிவினால் நீ எவ்வளவு துயரம் அடைந்திருப்பாய் என்பதை நான் அறிவேன். என் தவற்றை மன்னித்துவிடு” என்று மீண்டும் சமாதானம் செய்தான். அதைக் கேட்டு எல்லோரும் திடுக்கிட்டனர். தன்னைப் போலவே தன் பிரபுவிடம் பக்தி செலுத்தும் மற்றொரு பக்தன் இருக்கிறான் என்றெண்ணிப் பூரித்த அனுமனின் கண்களிலும் நீர் சுரந்தது.

அப்போது வசிஷ்டர், ”ராமா… இவர் யார்?” என்று கேட்க, ”தெரியவில்லையா குருதேவா? இவன் என் பள்ளித் தோழன். தங்கள் குருகுலத்தில் சேவை செய்த சீடன் அனந்தன். இத்தனை பெரிய அவையில் எல்லோரும் என்னைப் ‘பிரபு’ என்றும் ‘மகாராஜா’ என்றும்தான் அழைக்கிறார்கள். என்னை ‘அடே ராமா’ என்று அழைக்க என் தந்தை தசரதன் இல்லையே என ஏங்கினேன். அந்தக் குறையைத் தீர்த்து வைத்ததன் மூலம் என் தந்தைக்கு நிகரானவன் ஆகிவிட்டான் இந்த அனந்தன்!” என்று கூறினான் ஸ்ரீராமன். வசிஷ்டரும் அனந்தனைக் கட்டித் தழுவி ஆசீர்வதித்தார். எல்லோர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்!

”இத்தனை நாட்கள் எனக்காகத் தவமிருந்து, இடையறாமல் என் நாமத்தை ஜபித்து, என்னைத் தேடிக் கண்டடைந்த இவனுக்கு நான் இந்த அவையில் மரியாதை செய்யக் கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறிய ஸ்ரீராமன் அனுமனை நோக்கி, ‘உன்னைப் போலவே என்னை நேசிக்கும் இவனுக்கு என்ன கௌரவம் தரலாம்?” என்று கேட்டான்.

”பிரபு! தங்கள் தந்தைக்குச் சமமானவர் இவர் என்று கூறினீர்கள். தாங்கள் சிம்மாசனத்தில் அமரும் முன்பு, இவரை அதில் அமர்த்தி மரியாதை செய்வது இவருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பெருமை!” என்று கூறினான் அனுமன். எல்லோரும் அதை ஆமோதித்தனர்.

இத்தனை பெரிய மரியாதைக்குத் தான் தகுதியானவனா என்றெண்ணிக் கூனிக் குறுகினான் அனந்தன். அவன் வேண்டாம் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் அவனைச் சிம்மாசனத்தில் அமர்த்தி, மாலை அணிவித்து மரியாதை செய்து, பாத பூஜையும் செய்தான் ஸ்ரீராமன். அதன் பின்பே, ஸ்ரீராமன் பட்டாபிஷேகம் ஆரம்பமானது.

ராமாவதாரத்தில் பகவானின் அன்பினால் கட்டுண்டு ஆனந்தமடைந்த அனந்தனே, ஒருவேளை அதே பேரானந்தத்தை மீண்டும் அனுபவிக்க கிருஷ்ணாவதாரத்தில் குசேலனாக வந்தானோ என்று தோன்றுகிறது அல்லவா?!

🙏ஸ்ரீ ராம ! ஜெய ராம !
 ஜெயஜெய ராமா !🙏


இது வாட்சப்பில் எனக்கு வந்த கதை. இந்த கதை எனக்குப் புதிது. ஸ்ரீராம நவமி அன்று இரவு ஒரு 9 மணி வாக்கில் நான் படிக்க நேர்ந்தது. அன்று மாலை வரை என்ன எழுதுவது என நான் சற்று குழம்பிய நேரத்தில் இது வந்ததை கவனிக்க விடாமல், கொடிய கொரோனாவிற்காக பிரார்த்தனை செய்து என்னை எழுத வைத்தார் ஸ்ரீ ராமர். இல்லாவிடில் இதையும் என்னை பகிர வைத்திருப்பாரோ என்னவோ..!  எல்லாம் அவன் செயல் அல்லவா?. 🙏. இதைத்தவிர நம் கைகளினால் வேறெதும் பலனில்லை. 

இதை ஏற்கனவே நீங்கள் அறிந்திருக்கலாம். இல்லை என்றால் இந்த மாதிரி வாட்சப்பில் வந்து படித்திருக்கலாம். இதை என் பதிவிலும்  பகிர ஆசை வந்து அன்புடன் பகிர்ந்தும் விட்டேன். இங்கு  இதைப் படிப்பவர்களுக்கும் என் அன்பான நன்றிகள். 🙏. 

Thursday, May 17, 2018

அன்னை ...


இந்த ஒரு சொல்லுக்குள்தான் எத்தனை பாசங்கள் இழையோடி அழகாக அமர்ந்திருக்கிறது. அன்னையர் தினம் நம்மை கடந்து சென்று விட்டது. அன்னையர் நினைவுகள் நம்மை என்றும் கடக்காது.. கடக்கவும் விட மாட்டோம். 

கடந்த ஒருவார காலமாக  காய்ச்சல், பல்வலி, இருமல் என உடல்நல குறைபாடு. இதில் ஒவ்வொரு நாளும் நம் கடமைகளை செய்யும் போது (சமையல், இதர வேலைகள்)  வேலைகளில் விருப்பபின்மை இல்லாது, ஏதோ சுவாரஸ்ய குறைவோடு,  என்னை நான் கடந்து கொண்டிருந்த போது  அன்னையர் தினம் என்னை கடந்து விட்டது. அதற்காக பதிவெல்லாம் ரெடி பண்ணி எழுத நினைத்தது இயலாமல் போய் விட்டது. 

என் சிறு வயதில் விடாமல் 20 நாட்களுக்கும் மேலாக துரத்திய ஜுரமொன்றில், என் அன்னை என்னை நினைத்து கலங்கியது இன்னமும் என் நினைவின் அடித்தளத்தில் பதிந்திருக்கிறது. அப்போதெல்லாம் இந்த மாதிரி தெருவுக்கு தெரு டாக்டர்  என்ற வசதி கிடையாது. ஒரு காய்ச்சலுக்கு, சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, அரத்தை, இஞ்சி இதை விட சிறந்ததாக எதுவும் கிடையாது என்ற நம்பிக்கையே காய்ச்சலை அலறி அடித்து ஓடிப் போகச் செய்து விடும்.  ஆனால் அந்த தடவை அது அலறாமல், தைரியமாக டாக்டரை சந்திக்காமல் நகர மாட்டேன் எனவும், ,எந்தவசதியும் இல்லாத எங்கள் இடத்திலிருந்து, சோர்ந்திருந்த என்னை தூக்கிக் கொண்டே நடந்து,  நீண்ட தொலைவிலுள்ள மருத்துவரிடம் சென்று காண்பித்து,  அவர் பரிசோதனை செய்த பின் "டைப்பாயிடு" எனவும் அதற்கும் கலங்கி, (அப்போது  அந்த ஜுரம் அனைவரையும் பயமுறுத்துவது ) எனக்கு குணமாகிற வரைக்கும் கண்ணின் மணியென காத்த என் அம்மாவின் நினைவு இப்போதும் ஜுரம் வந்தவுடன் வந்து விட்டது.  அன்னையிடம் சொல்லி ஆறுதல் பட முடியாததை இந்த அன்னை பதிவில் உங்களைவரிடமும்  சொல்லி,  மன ஆறுதல் அடைகிறேன். 

அன்னையர் தினம் கடந்து விடினும், அன்னையை தினமும்  மனந்தனில் சுமப்பவர்களுக்கு
தினமும் அன்னையர் தினமே..... 


படித்ததில் பிடித்ததாக மற்றொன்றும்.. 

வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.

அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.

அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன்
தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள்.
அதைப் பற்றி இப்ப என்ன? என்னுடைய கடமையைத் தானே செய்தேன்… அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும்.  நீ விரும்பினாலும், எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்?

இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செய்தாக வெண்டுமென நினைத்தான்.  தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். அம்மாவும் மறுத்தலித்து வந்தாள்.

ஒரு கட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த தாய், மகனிடம்,
சரி…..நீ தொடர்ந்து கேட்பதால், ஒன்று சொல்கிறேன். அதை நிறைவேற்றினால் போதும் –  என்றாள்.

மகனுக்கு ஒரே சந்தோஷம். அம்மா என்ன வேண்டும் சொல்லுங்கள் – என்றான் மகன்,

ஒன்றுமில்லை மகனே, நீ குழந்தையாக இருந்த போது எனது அருகில் படுத்து உறங்கினாயே, அதைப் போல இன்று ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு – எனக் கூறினாள் தாய்.

அம்மா, நீ கேட்பது, வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் அது உனக்கு மகிழ்ச்சியை தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு, தனது தாயின் படுக்கையில், தாயுடன் படுத்துக் கொண்டான்.

தனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய், எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து, தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தாள்.

தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தான்.

அங்கே சென்று மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து அவன் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினாள்.

மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் இடம் நோக்கி நகர முயன்றான்.

சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும் போது, தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து, கோபமாக,

என்ன அம்மா செய்கிறாய்… தூங்க கூட  விட மாட்டேன் என்கிறாய்? ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர் பார்க்கிறாய் – எனக் கேட்டான் மகன்.

அப்போது தாய் அமைதியாக சொன்னாள்:

மகனே.. அம்மாவின் தியாகத்துக்கு ஈடுகட்ட, திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய்.  நீ குழந்தையாக இருக்கும்போது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய்.

உடனே நான் எழுந்து உனக்கு  உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்து விட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக் கொள்வேன். முடியுமானால், உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஒரு இரவு தூங்க முடியுமா? – என்றாள் தாய்

மகன் திகைத்து நின்றான்.

இது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன்   – என்றாள் தாய்.

நண்பர்களே, உலகில் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும், ஒன்றைத் தவிர. அதுதான் தாயின் தியாகம்.  

தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது.
தாய் காட்டிய அரவணைப்பு, அன்பு, காலநேரம் பாராது, தனது மகனை சீராட்டி, உணவூட்டி. வளர்த்து, தனது தேவைகளை தியாகம் செய்து தனது மகனே உலகம் என்று அவனது வளர்ச்சியில் ஆனந்தம் கொண்டு, தனது குழந்தைக்காக தன்னையே வழங்கிய தாயிற்கு நீ எதை திருப்பி கொடுத்து ஈடுகட்ட முடியும்? நீ அவளுடைய சதையும், ரத்தமுமாகும், தாயில்லாமல் நான் இல்லை  என்பதை நினைவில் கொள், ஏனென்றால் உனது தாய் இதை என்றுமே மறந்ததில்லை.

எவ்வளவுதான் வயதானாலும், தாயின் நினைவு நமது வாழ்வில் தினமும் ஒரு அங்கம் தான்.  நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான்

Friday, March 23, 2018

வாழ்வின் இரு பக்கங்கள்.....


இந்த  மனித வாழ்க்கையில் பிறப்பிலிருந்தே ஜனனம், மரணம் என்றும், மற்றும், இறை நம்பிக்கையிலிருந்து மற்ற எந்த ஒரு விசயத்திற்கும், மாறுபட்ட இரு பக்கங்கள் இருந்து வருகின்றன. ஒரு வீட்டின் கதவுக்கு கூட உட்பக்கம், வெளிப்பக்கம் என்றும், ஏன் ஆலயங்களில் கூட உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் என்றும், அனைத்திலும் இந்த இரு பக்கங்கள் இருந்து நம்மை வழிநடத்திச் செல்கின்றன.

இறைவனை வணங்குவதில்,
ஆத்திகம், நாத்திகம் என்றும்
செயல் முறையில்,
சுத்தம், அசுத்தம் என்றும்,
சுவையை குறிப்பிடுகையில்,
இனிப்பு, கசப்பு என்றும்,
குணாதிசயங்களில்,
நல்ல குணம், தீய குணம் என்றும்,
வினைப் பயன்களை அனுபவிக்கையில்,
நல்வினை, தீவினை என்றும்
அதன் விளைவுகள் நெருங்கும் போது,
இன்பம், துன்பம் என்றும்,
இரு பக்கங்களும் நம்மை  சந்திக்கத்தான் செய்கின்றன.  

இன்னமும் இதைப் போல் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் இந்த துன்பம் வரும் சமயம் நம் மனமானது தளர்வுற்று கலக்கமடைந்து வேறு எந்த ஒரு  செயல்களில் ஈடுபட இயலாமல் செய்து விடுகிறது.
 
நாம் சாதரண மனிதர்கள். நமக்குள் தாங்கும் சக்தியாக உடல் பலம், மனோ பலம், ஆத்ம பலம், தெய்வ பலம் இவைகளை தோற்றுவிக்க  எத்தனையோ முயற்சிகள்  எடுக்கவும் இறையருளால் அவை கூடி வர வேண்டும்.


இவர்களுக்கு அது கை கூடியிருக்கிறது  ஏனெனில் இவர்கள் தெய்வங்களின் அருகாமையை உணர்ந்தவர்கள். இவர்களை படிப்பதால் நம் துன்பங்களை சிறிது களைய  முயற்சிக்கலாம். 
*"மனம் கலங்காதிருக்க..."*..... 

நான் படித்ததில் பிடித்தவர்கள்.........
படித்ததில் பிடித்தது........... 

❗தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் *ப்ரஹ்லாதன்* மனம் கலங்கவில்லை...

❗சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
*ராஜா அரிச்சந்திரன்* மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும் *கைகேயி* மனம் கலங்கவில்லை...

❗உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் *விதுரர்* மனம் கலங்கவில்லை...

❗அம்புப்படுக்கையில்
வீழ்ந்த போதிலும்
*பீஷ்மர்* மனம் கலங்கவில்லை...

❗இளம் விதவையான
சமயத்திலும் *குந்திதேவி* மனம் கலங்கவில்லை...

❗தரித்ரனாக வாழ்ந்த
சமயத்திலும் *குசேலர்*
மனம் கலங்கவில்லை...

❗ஊனமாகப் பிறந்து
ஊர்ந்த போதிலும்
*கூர்மதாஸர்* மனம் கலங்கவில்லை...

❗பிறவிக் குருடனாக
இருந்தபோதிலும்
*சூர்தாஸர்* மனம் கலங்கவில்லை...

❗மனைவி அவமானப்படுத்திய போதிலும் *சந்த் துகாராம்* மனம் கலங்கவில்லை...

❗கணவன்
கஷ்டப்படுத்திய போதும்
*குணவதிபாய்* மனம் கலங்கவில்லை...

❗இருகைகளையும்
வெட்டிய நிலையிலும்
*சாருகாதாஸர்* மனம் கலங்கவில்லை...

❗கைகால்களை வெட்டிப்
பாழுங்கிணற்றில் தள்ளியபோதும்
*ஜயதேவர்* மனம் கலங்கவில்லை...

❗மஹா பாபியினிடத்தில்
வேலை செய்த போதும்
*சஞ்சயன்* மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையை
பறிகொடுத்த போதும்
*பூந்தானம்* மனம் கலங்கவில்லை...

❗கூடப்பிறந்த சகோதரனே
படாதபாடு படுத்தியபோதும்
*தியாகராஜர்* மனம் கலங்கவில்லை...

❗நரசிம்மர் சன்னிதியில்
விஷ தீர்த்தம் தந்த போதும்
*மஹாராஜா ஸ்வாதித் திருநாள்* மனம் கலங்கவில்லை...

❗சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும்*கூரத்தாழ்வான்* மனம் கலங்கவில்லை...

*எப்படி முடிந்தது இவர்களால்..?*

ரகசியம்...

*தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்...*

கடவுள் எப்பொழுதும் கூடவே இருக்கிறான் என்று உணர வழி?

*ஆழ்ந்த நம்பிக்கை...*


அந்த நம்பிக்கை ஏற்பட வழி..?

*முதல் வழி...*
(சொல்லறிவு)

அறிஞர்கள், ஞானிகள் மற்றும்
சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொள்ளுதல்...

*இரண்டாம் வழி...*
(சுய அறிவு)

மன அமைதியுடன்,
நடுநிலை உணர்வுடன், ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து, உண்மை விளங்கும் போது மனம் தெளிவடைந்து... அப்போது ஏற்படுவது...

நம்பிக்கை ஏற்பட்ட பின்...

மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று, உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் பயிற்சியாக...
தொடந்து செய்யப்படும் பிரார்த்தனை முறைகள்...

அந்த பிரார்த்தனைகள்...

*மந்திரமாக இருக்கலாம்...*
*ஜபமாக இருக்கலாம்...*
*தொழுகையாக இருக்கலாம்...*
*கீர்த்தனைகளாக இருக்கலாம்...*
மேலும், அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும்
*"அன்பும், அறநெறியும், உண்மையும், சத்தியமும், நியாய தர்மங்களை காக்கும் பண்புகளாகவும்..."*
இருக்கலாம்.


இவற்றை மாறாமல் கடைபிடித்தால்...
வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்...

என்ன நடித்தாலும், எதை இழந்தாலும்,

*"ஆத்ம திருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்..."*

அந்த ஆத்ம பலமே... எதையும் தாங்கும் சக்தி...ஆதலால் ...
*விடாது நாம் ஜபம் செய்வோம்...*
*தொடந்து தொழுகை செய்வோம்...*
*திடமாக பகவானை வழிபடுவோம்...*
*அன்பே கடவுள் என போற்றுவோம்...*
*உறுதியுடன் உண்மையாக இருப்போம்...*

இதனால் பெற்றிடுவோம்...
மனஅமைதியும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும்...

*இந்த நாள் இனிய நாளாக நல்வாழ்த்துக்கள்...*


மேலே நான் எழுதியதோடு படித்ததில் பிடித்ததும் பதிந்துள்ளேன்.

நீங்கள் படித்தற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.....