Sunday, March 25, 2018

ஸ்ரீ ராம நவமி


ஸ்ரீ ராம ஜெயம். 




அயோத்தி அன்று விழாக் கோலம் கொண்டது. மன்னன் தசரதன் மகிழ்ச்சியின் எல்லை தாண்டி சென்று விட்டார்.. இருக்காதா பின்னே? குல குருவின் அனுக்ரஹத்துடன், ஏனைய முனி ச்ரேஷ்டர்கள முன்னிலையிலும் புத்திர காமேஷ்டி யாகத்தை முடித்ததின் விளைவாய் தன் மூன்று பட்டமகிஷிகளின் வயிற்றில் நான்கு புத்திரர்கள் ஜனனமெடுத்திருக்கிறார்களே, அந்த மகிழ்வில் அவருக்கு  தலை கால் புரியவில்லை.  பிறந்த குழந்தைகளுக்கு அன்று பெயர் சூட்டும் விழா.  அயோத்தியின்கொண்டாட்டதிற்கு கேட்கவா வேண்டும். 



மூத்த பட்டமகிஷி கெளசல்யா தேவிக்கு பிறந்த குழந்தைக்கு,  ஸ்ரீ ராமன் எனவும்,   ஏனைய மனைவிகள் சுமத்திரை, கைகேயிக்கு பிறந்த குழந்தைகளுக்கு முறையே, லட்சுமணன் சத்ருக்கணன்  பரதன்  எனவும் பெயர்கள் சூட்டியாகி  விட்டது. மூன்று மனைவிகளை மணம் புரிந்து நல்ல நீதி தவறாது,  மக்களின் மனம் குளிர்ந்த மன்னனாக ஆட்சி செய்து வந்தும், நீண்ட வருடங்களாய் குழந்தை பாக்கியமே இல்லையென்ற நிலையில் வருத்தம் தீரும்படியாக, ஒரே பொழுதில்  இப்போது  நான்கு குமாரர்கள். இளைய மனைவி சுமத்திரைக்கு லட்சுமணன் சத்ருக்கணன் என்ற இரு செல்வங்கள். ஒரு சேர மூன்று மனைவிகளும் கருத்தரித்து  வாரிசாக நான்கு செல்வங்களை தந்ததால், தசரதர் மகிழ்ச்சியில் மிதந்தார் என்றே சொல்ல வேண்டும். 



இராவணன் இந்திரஜித்து போன்ற அரக்கர்கள் வம்சத்தை அழிக்கவும், இப்பூலகில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும் மஹா விஷ்ணு எடுத்த ஏழாவது அவதாரம் ராமாவதாரம் என்பது யாவரும் அறிந்ததே,   மஹா விஷ்ணு மனிதனாக அவதாரம் எடுத்து ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று  தானே  முன்னின்று வாழ்ந்து காட்டிய அவதாரம் ராமாவதாரம். தாய் தந்தை பற்று, பெற்றோர் பேச்சை  மதித்து நடப்பது, சகோதர வாஞ்சை,  குருவை வணங்கும் பண்பு, மூத்தோரை  மதித்து போற்றுவது, நட்புக்கு இலக்கணமாக நண்பர்களை அன்பினால் அணைத்து செல்வது, ஒரு தாரம், ஒர் பாணம், ஒரு பேச்சு என அனைத்திலும் உறுதியாய், இருந்து நல்ல மனிதர்கள் இப்படித்தான் வாழ வேண்டுமென வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ ராம பிரான். 



சோதனைகளும் அதன் தொடர்ச்சியாக வேதனைகளும், இன்பங்களும் அதன் பின்னணியாக சோகங்களும் மாறி மாறி வந்தாலும், மனித வாழ்வில் இது விதியின் சுழற்சிக்கு கட்டுப்பட்டு வருகிறது என்பதில் உறுதியாக இருந்து மனம் தளராமல்,  அனைத்தையும் பக்குவமாக ஏற்றுக் கொண்டபடி பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை மனிதர்களாகிய அனைவருக்கும் உணர்த்த வேண்டி,  அரச வம்சத்தில் தோன்றினும்  விதியின் வளைவுக்கெல்லாம் வளைந்து கொடுத்து வாழ்வின் சாரம்சங்களை நமக்கு கற்று தந்த தெய்வப் பிறவி ஸ்ரீ ராமச்சந்திர  மூர்த்தி. 



பிறப்பிலிருந்து சில காலம் அன்னை தந்தை அரவணைப்போடு அரச போகத்துடன் வாழ்ந்தோடு சரி. அதன் பின்னர் குரு குல வாசம், பின்னர் இளவரசுனுக்கே உரிய வில் வித்தை போன்ற வீரம் மிகும் கலைகளை கற்பது, பின்  அன்னை தந்தையின் பேச்சுக்கு கட்டுப்பட்டு அவர்தம் பெருமையை பறைசாற்றுவதற்காக முனிவர்கள் நலம் காக்க அவர்களுக்கு உதவியாய் உறு துணையாக செல்வது, தன் குலத்திற்கேற்ற குணக்குன்றாம்  சீதையை வீர மரபுடன் மணப்பது, மனைவியுடன் வாழும் சில பொழுதினிலே தந்தை சொல் மதித்து சிற்றன்னையாயினும், கைகேயி தாயின் கட்டளையை ஏற்று மரவுரி  தரித்து ஆடம்பரம் துறந்து ஆசைகளுக்கு அடிமையாகாது, கானகம் செல்வது, சான்றோர்களை  சந்தித்து சத்சங்கம் பெறுவது, எளிய உணவுடன் எளிமையான துறவி வாழ்வுடனிருபபது,   எத்தனை இடர் வரினும் ஏக பத்தினி விரதனாக  இருந்து தனக்காக தன் நிழலாய் வரும்  சீதையின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வது,  அரக்க குலத்தின்  அட்டுழியங்களாலும், விதியின் பயனாலும், தன் நிழலை தொலைத்து வருந்துவது,  அரக்க குலத்தை முற்றிலும் அழிக்க  பக்தியுடன்  பரவசமாய் வந்த நண்பர்களின்  உதவியை பணிவாய் ஏற்பது  அவர் தம் செயல்களுடன் தம் அவதாரத்தின் நோக்கத்தை பூர்த்தி செய்து,  அதர்மத்தை வெல்வது,   சத்தியத்தின் உண்மை தரிசனங்களை மக்களுக்கு மெய்பித்துக் காட்டுவது என்று அடுக்கடுக்காக  ராம பிரான் வாழ்வில்  சோதனைகளும், வேதனைகளுந்தான் சூழ்ந்தது. அத்தனைக்கும் அவர் கையாண்ட ஒரே ஆயுதம்  அன்பெனும் சொற்கள் கொண்டு பேசி பொறுமையெனும்  புன்னகையோடு பகைவனையும் தன்னுடைய நண்பனாக பாவித்ததுதான்.



அத்தகைய பரந்தாமன் பங்குனியில் நவமி திதியன்று  புனர்பூச நட்சத்திரத்தில் பகலில்  பூலோகத்தில்  வாழும் மனிதர்களுக்கு உதாரணபுருஷனாய் ஜனித்தார். இன்று அந்த இனிய நாள் தசரத மகாராஜா அக மகிழ்ந்த நன்னாள்  ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் பிறந்த நாளான இன்று ராமா, ராமா என்று அவரை நினைத்தபடி நம் அகமும் மகிழ்ந்தபடி இனிப்புகளை செய்து அவருக்கு நேவேத்தியம் செய்து அவருக்கு பிடித்தமான பானகம், நீர் மோர் கரைத்து, அவருக்கு சமர்பித்தபடி அவர்  பொன்னான பாதரவிந்தங்களை மனதாற நினைத்து தியானம் செய்தபடி,  மனித குலத்துக்கு நல்லெண்ணங்களை  பூரணமாக விதைத்து  ஒவ்வொரு  மனித உள்ளத்திலும் நீ இருந்து அருள வேண்டும் என மனமுருகி பிரார்த்தனை செய்வோமா. !!!!

                     

  வாழ்க நலம்!! வளர்க அன்பெனும் தாரக மந்திரம்!!


Friday, March 23, 2018

வாழ்வின் இரு பக்கங்கள்.....


இந்த  மனித வாழ்க்கையில் பிறப்பிலிருந்தே ஜனனம், மரணம் என்றும், மற்றும், இறை நம்பிக்கையிலிருந்து மற்ற எந்த ஒரு விசயத்திற்கும், மாறுபட்ட இரு பக்கங்கள் இருந்து வருகின்றன. ஒரு வீட்டின் கதவுக்கு கூட உட்பக்கம், வெளிப்பக்கம் என்றும், ஏன் ஆலயங்களில் கூட உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் என்றும், அனைத்திலும் இந்த இரு பக்கங்கள் இருந்து நம்மை வழிநடத்திச் செல்கின்றன.

இறைவனை வணங்குவதில்,
ஆத்திகம், நாத்திகம் என்றும்
செயல் முறையில்,
சுத்தம், அசுத்தம் என்றும்,
சுவையை குறிப்பிடுகையில்,
இனிப்பு, கசப்பு என்றும்,
குணாதிசயங்களில்,
நல்ல குணம், தீய குணம் என்றும்,
வினைப் பயன்களை அனுபவிக்கையில்,
நல்வினை, தீவினை என்றும்
அதன் விளைவுகள் நெருங்கும் போது,
இன்பம், துன்பம் என்றும்,
இரு பக்கங்களும் நம்மை  சந்திக்கத்தான் செய்கின்றன.  

இன்னமும் இதைப் போல் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் இந்த துன்பம் வரும் சமயம் நம் மனமானது தளர்வுற்று கலக்கமடைந்து வேறு எந்த ஒரு  செயல்களில் ஈடுபட இயலாமல் செய்து விடுகிறது.
 
நாம் சாதரண மனிதர்கள். நமக்குள் தாங்கும் சக்தியாக உடல் பலம், மனோ பலம், ஆத்ம பலம், தெய்வ பலம் இவைகளை தோற்றுவிக்க  எத்தனையோ முயற்சிகள்  எடுக்கவும் இறையருளால் அவை கூடி வர வேண்டும்.


இவர்களுக்கு அது கை கூடியிருக்கிறது  ஏனெனில் இவர்கள் தெய்வங்களின் அருகாமையை உணர்ந்தவர்கள். இவர்களை படிப்பதால் நம் துன்பங்களை சிறிது களைய  முயற்சிக்கலாம். 
*"மனம் கலங்காதிருக்க..."*..... 

நான் படித்ததில் பிடித்தவர்கள்.........
படித்ததில் பிடித்தது........... 

தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் *ப்ரஹ்லாதன்* மனம் கலங்கவில்லை...

❗சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
*ராஜா அரிச்சந்திரன்* மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும் *கைகேயி* மனம் கலங்கவில்லை...

❗உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் *விதுரர்* மனம் கலங்கவில்லை...

❗அம்புப்படுக்கையில்
வீழ்ந்த போதிலும்
*பீஷ்மர்* மனம் கலங்கவில்லை...

❗இளம் விதவையான
சமயத்திலும் *குந்திதேவி* மனம் கலங்கவில்லை...

❗தரித்ரனாக வாழ்ந்த
சமயத்திலும் *குசேலர்*
மனம் கலங்கவில்லை...

❗ஊனமாகப் பிறந்து
ஊர்ந்த போதிலும்
*கூர்மதாஸர்* மனம் கலங்கவில்லை...

❗பிறவிக் குருடனாக
இருந்தபோதிலும்
*சூர்தாஸர்* மனம் கலங்கவில்லை...

❗மனைவி அவமானப்படுத்திய போதிலும் *சந்த் துகாராம்* மனம் கலங்கவில்லை...

❗கணவன்
கஷ்டப்படுத்திய போதும்
*குணவதிபாய்* மனம் கலங்கவில்லை...

❗இருகைகளையும்
வெட்டிய நிலையிலும்
*சாருகாதாஸர்* மனம் கலங்கவில்லை...

❗கைகால்களை வெட்டிப்
பாழுங்கிணற்றில் தள்ளியபோதும்
*ஜயதேவர்* மனம் கலங்கவில்லை...

❗மஹா பாபியினிடத்தில்
வேலை செய்த போதும்
*சஞ்சயன்* மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையை
பறிகொடுத்த போதும்
*பூந்தானம்* மனம் கலங்கவில்லை...

❗கூடப்பிறந்த சகோதரனே
படாதபாடு படுத்தியபோதும்
*தியாகராஜர்* மனம் கலங்கவில்லை...

❗நரசிம்மர் சன்னிதியில்
விஷ தீர்த்தம் தந்த போதும்
*மஹாராஜா ஸ்வாதித் திருநாள்* மனம் கலங்கவில்லை...

❗சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும்*கூரத்தாழ்வான்* மனம் கலங்கவில்லை...

*எப்படி முடிந்தது இவர்களால்..?*

ரகசியம்...

*தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்...*

கடவுள் எப்பொழுதும் கூடவே இருக்கிறான் என்று உணர வழி?

*ஆழ்ந்த நம்பிக்கை...*


அந்த நம்பிக்கை ஏற்பட வழி..?

*முதல் வழி...*
(சொல்லறிவு)

அறிஞர்கள், ஞானிகள் மற்றும்
சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொள்ளுதல்...

*இரண்டாம் வழி...*
(சுய அறிவு)

மன அமைதியுடன்,
நடுநிலை உணர்வுடன், ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து, உண்மை விளங்கும் போது மனம் தெளிவடைந்து... அப்போது ஏற்படுவது...

நம்பிக்கை ஏற்பட்ட பின்...

மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று, உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் பயிற்சியாக...
தொடந்து செய்யப்படும் பிரார்த்தனை முறைகள்...

அந்த பிரார்த்தனைகள்...

*மந்திரமாக இருக்கலாம்...*
*ஜபமாக இருக்கலாம்...*
*தொழுகையாக இருக்கலாம்...*
*கீர்த்தனைகளாக இருக்கலாம்...*
மேலும், அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும்
*"அன்பும், அறநெறியும், உண்மையும், சத்தியமும், நியாய தர்மங்களை காக்கும் பண்புகளாகவும்..."*
இருக்கலாம்.


இவற்றை மாறாமல் கடைபிடித்தால்...
வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்...

என்ன நடித்தாலும், எதை இழந்தாலும்,

*"ஆத்ம திருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்..."*

அந்த ஆத்ம பலமே... எதையும் தாங்கும் சக்தி...ஆதலால் ...
*விடாது நாம் ஜபம் செய்வோம்...*
*தொடந்து தொழுகை செய்வோம்...*
*திடமாக பகவானை வழிபடுவோம்...*
*அன்பே கடவுள் என போற்றுவோம்...*
*உறுதியுடன் உண்மையாக இருப்போம்...*

இதனால் பெற்றிடுவோம்...
மனஅமைதியும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும்...

*இந்த நாள் இனிய நாளாக நல்வாழ்த்துக்கள்...*


மேலே நான் எழுதியதோடு படித்ததில் பிடித்ததும் பதிந்துள்ளேன்.

நீங்கள் படித்தற்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.....

Sunday, March 18, 2018

படித்ததில் பிடித்தது.

சில வரிகள் கேட்கும் போது மனதில் பதிந்து விடும்.
சில வரிகள்படிக்கும் போது மனதில்  தங்கி விடும். அவ்வகையான வரிகளை படித்ததில் பிடித்ததினால் பதிந்திருக்கிறேன். உங்களுக்கும் இந்தப் பதிவில் படிப்பதனைத்தும் பிடிக்குமென நம்புகிறேன்.

படித்ததற்கு நன்றி.


தெரிந்து மிதித்தாலும்  தெரியாமல் மிதித்தாலும்

மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்...!!


========================================================================

நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை

அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட  சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..! 

========================================================================
'சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது 

உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது

உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை


========================================================================

நோய் வரும் வரை உண்பவன்,

உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!


========================================================================

பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல

ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!


========================================================================

பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?  செலவு செய்யுங்க.....!

உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.!


========================================================================

பிச்சை போடுவது கூட சுயநலமே...

புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...


========================================================================

அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை

ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.


========================================================================

வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு 

அதற்கு அவமானம் தெரியாது 

விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!


========================================================================

வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".

வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்" 

========================================================================
திருமணம்

ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்

ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!!


========================================================================

முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்

பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்

அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும். 

========================================================================
மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும் 

என்ற ஒரு காரணத்திற்காகவே 

நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன


========================================================================  
நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை. 

========================================================================
இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட

வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!


========================================================================

பகலில் தூக்கம் வந்தால், 

உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!! 

இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!


========================================================================

துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது

கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..  


========================================================================

தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும்

எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது

========================================================================
#அழகான வரிகள் பிடித்திருந்தால் பகிரவும்...



Thursday, March 15, 2018

கொத்தமல்லி அடை , அவியல் குழம்பு.


ஒரு டம்ளர் இட்லி அரிசி, ஒரு டம்ளர் பச்சரிசி எடுத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு இவை நான்கையும் அரை டம்ளர் வீதம் எடுத்துக் கொள்ளவும். இதில் உளுத்தம் பருப்பை மட்டும் கொஞ்சம் கூடுதலாக எடுத்துக் கொள்ளவும். அரிசிகள், பருப்புகள் இவையை தனியாக அலம்பி ஆறு மணி நேரம் வரை ஊற வைக்கவும். 
................. 



ஊற வைத்த அரிசிகளுடன் கீழே குறிப்பிட்டுள்ள காரங்களை (அவரவர் ருசிகேற்ப கூட குறைத்து)  கறிவேப்பிலை,உப்பு, பெருங்காயம் சேர்த்து சற்று கரகரப்பாக (சின்ன  ஆட்டுரல்) மிக்ஸியிலோஅல்லது (பெரிய ஆட்டுரல்) கிரைண்டரிலோ அரைத்து எடுக்கவும்.  
................. 




பின்னர் ஊறிய பருப்பு வகைகளை கொஞ்சம் நைசாக அரைத்து இரண்டையும் கலந்து வைக்கவும். கலந்து வைத்த மாவிரண்டும் உப்பு காரம் சேர்ந்து கை குலுக்கி கலந்து கொண்டிருக்கட்டும். 
............... 



அதற்குள் நான்கு  பெரிய வெங்காயத்தை அலம்பி விட்டு கீழே படத்திலுள்ளதை மாதிரி நறுக்கி வைத்துக் கொள்ளவும். 
............... 


அத்துடன் கொத்தமல்லி இலைகளையும் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். 
............... 


இவ்விரண்டையும்  சின்ன ஆட்டுரலிலேயே போட்டு நைசாக அரைக்கவும். 
................. 


இந்த அரைத்த விழுதை கை குலுக்கி சமரசமாகியிருக்கும் அடை மாவுடன் கலக்கி வைக்கவும். 
.................. 



பத்து பதினைந்து நிமிடங்கள் இதற்கு சைடிஸ் என்ன செய்யலாம் என யோசிக்கும்  வேளையில், மனசு வெல்லமே போதும் என தீர்மானிக்க,  அடைக்கு வெல்லம் மட்டுந்தானா?  என நாக்கு  அதிகப்பிரசங்தனமாக கேள்வி கேட்டு உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க முடிவு செய்ய, அதன் முடிவைக் கண்ட உள் மனது "அவியல் குழம்பை ரெடி செய்'
 பதிவிலும்  போடலாம்"   என  கூக்குரலிட கைகள் தாமாகவே கேரட், பீன்ஸ் முருங்கைக்காய் கோவைக்காய் உருளைக்கிழங்கு  தேங்காய் என      
 கு.சா. பெட்டியில்  உள்ளதை தேர்வு செய்து சுத்தப்படுத்தி நறுக்கி குக்கரில் வேக வைத்து  விசில் விட்டதும் வாணலியிலும்  மாற்றி விட்டது. 
................. 



அதற்கு தேவையான தேங்காய் பச்சை மிளகாய்  கொஞ்சம்  வர மிளகாய்  கறிவேப்பிலை எடுத்துக் கொண்டு,  சி.  ஆட்டுரலில்  போட்டு நைசாக அரைத்துக் கொண்டு  விடவும். 
..................... 



அரைத்த விழுதை வாணலியில் காத்திருக்கும் காய்களுடன் தேவையான அளவு உப்பும், ஓரிரு சிட்டிகை  மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.  
............... 


அது சேர்ந்து கொதித்து வரும் போது கெட்டியான சற்றே புளித்த மோரை சேர்க்க வேண்டும். 
................ 


அதுவும் சற்றே ஒரு சேர  கொதித்து வந்ததும் அரிசி மாவு கரைசலை விட்டு அடுப்பை சிம்மில் எரிய வைத்து ஐந்து நிமிடத்திற்கு பின்னர் ஒரு ஸ்பூன் பச்சை தேங்காய் எண்ணெய் விட்டு அடுப்பை அணைத்து விடவும். 
.................... 


இப்போது அவியல் குழம்பு என்ற பெயரில் ஜனனமெடுத்து வாணலியிலிருந்து பாத்திரத்தில் மாறி அடைகளுக்காக தவம் இருக்கும் வஸ்தாகிய அவியல் குழம்பு.. 
................ 



நாங்கள் மூவரும்  சேர்ந்து  தயார் நிலையில் இருக்கிறோம்.  நீங்க ஏன் இப்படி .. ?  இப்படியே  க்ளிக்கி கொண்டேயிருக்க உத்தேசமா? என முறைப்புடன் கேட்க ஆரம்பித்த மாவு. .. 
............... 



 அதனால் அவசரமாக அடைக்கல்லை அடுப்பிலேற்றி  தேங்காய்  எண்ணெய்யுடன் நல்லெண்ணெயும் கலந்து வைத்துக் கொண்டு அடைகள்  சுட மெளனமாக மாவு சம்மதித்ததின் விளைவாய் சுடச்சுட உருவாகிய அடைகள்.......   
............... 
                                      

அதில் இடமில்லையென்று  மற்றொரு தட்டில் ஏறி இடம் பிடித்து வாய்க்குள் பயணிக்க காத்திருக்கும் அட்டைகள்.... 
................... 

                    ஸ்... ஸ்.... ஸ்..... அப்பாடா.......              
                            நாங்கள்  ரெடிப்பா........  
............... 
                                      

நாங்க மட்டும் என்னவாம்? 
நாங்களுந்தான் உங்களுக்கும் முன்பே முதலிலேயே ஆஜர்........
......................  


சண்டைகள் எதற்கு?  நாமும் சாப்பிட ரெடியாகி விடலாமே. 


Saturday, March 10, 2018

புடலங்காய் பொரிச்ச குழம்பு .......

புடலங்காய்  பெரியதாக ஒன்று. நன்றாக அலம்பி விட்டு பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அரை கிளாஸ் துவரம்பருப்பை ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். 

கடலை பருப்பு ஒரு ஸ்பூன், துவரம் பருப்பு ஒரு ஸ்பூன், உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன், கொத்தமல்லிவிரை நாலு ஸ்பூன் அரை ஸ்பூன் மிளகு அரை ஸ்பூன் சீரகம் மிளகாய்வத்தல் ஆறு, (காரம் அவரவர்  ருசியை  பொறுத்து  வத்தல் கூடக்குறைய வைத்துக்கொள்ளவும்.) ஒரு சின்ன மூடி தேங்காய் துருவல், சிறிது கறிவேப்பிலை இவையெல்லாம் எடுத்துக்கொள்ளவும். 

ஒரு வாணலியில்  ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம் பருப்பு, ( கொஞ்சம் தாளிப்புக்கு ஏற்றாற்போல்) போட்டு தாளித்த பின் புடலங்காய் நறுக்கியதை  போட்டு நாலு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவு‌ம்.   பாதி கொதித்தப்பின்  ஒரிரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து தேவையான உப்பும் கலந்து கொதிக்க விடவும். (சில புடலங்காய் முதலிலேயே மஞ்சள் உப்பு சேர்த்தால் வேக மாட்டேனென்று பிடிவாதம் செய்யும்.) 

கொதித்துக் கொண்டிருக்கும் புடலங்காய்.........




வேறு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் குறிப்பிட்டுள்ள மசாலா சாமான்களை வறுத்து எடுத்துக் கொண்டு அதிலேயே தேங்காய் துருவலையும் கறிவேப்பிலையையும் லேசாக வறுத்து வைத்துக் கொண்டு சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். புடலங்காய் நன்கு வெந்ததும் அதில் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கும் போது குக்கரில் வேக வைத்து இருக்கும் பருப்பையும் சேர்த்து கொதித்ததும்  அரிசி மாவு கரைசலை சேர்த்து கொஞ்சம்  பெருங்காயத்தூள் போட்டு மீண்டும் ஒரு கொதி வந்ததும் ஒரு ஸ்பூன் பச்சை தேங்காய் எண்ணெய் விட்டு அடுப்பை அணைத்து விடவும்.  
சுவையான புடலங்காய் குழம்பு ரெடி. இதை சூடான சாதத்தில்  நெய் விட்டு சாப்பிட இதற்கு சுட்ட அப்பளம் தொட்டுக் கொள்ள பொருத்தமாக இருக்கும். இட்லி தோசை போனறவற்றிக்கும் தொட்டு கொள்ளலாம்..



வறுபடும் சாமான்கள்.....




 

துருவிய தேங்காய்......  


வறுத்த பின் தேங்காய் துறுவல் ....,



அரைத்த விழுது...... 

வேக வைத்த துவரம் பருப்பு....... 


கரைத்து வைத்துள்ள அரிசிமாவு......



அத்தனையும் சேர்ந்து மொத்த வடிவெடுத்த புடலங்காய் பொரிச்ச குழம்பு...... 



இதுவும் அதேதான். ஒவ்வொன்றாக சேர்த்து கொதிக்க கொதிக்க வைத்தவுடன் கோபத்தில் கொதித்துக் கொண்டிருப்பது.



சுட்ட அப்பளம்......

நான் ரெடி! நீங்க சாப்பிட ரெடியா? என்று சுட்ட வலியில் கேட்பதற்குள் சாப்பிட வரலாமே!





Thursday, March 8, 2018

பிராயச்சித்தம்.....( பகுதி 5)

இல்லம் களைக்கட்டி இருந்தது.  இல்லத்தில் படித்துக்கொண்டருந்த மாணவ மாணவியர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள தங்களை தயார் படுத்திக் கொண்டிருந்தார்கள்.குளிக்காமல் அடம் பிடித்துக்கொண்டிருந்த சின்னக் குழந்தைகளை சமாதானபடுத்தி குளிக்க வைத்து ஆடைகளை  அணியச் செய்து  விழாவுக்கு ரெடியாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் பார்வதியும் மற்றொருவரும். கைகள் சரிவர கடமையை செய்து கொண்டிருக்க மனம் தியாகுவையும், ராஜுவையும் சுற்றி வந்தது.

அன்று பார்வதி அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதும் கோகிலாவும் சற்று நெகிழ்ந்து போனாள்."இவ்வளவு பாசத்தை மனசுலே வச்சிகிட்டு , சொல்லாமே ஏன் இப்படி தவிச்சிருக்கே! நெஞ்சு நிறைய பாரத்தை வச்சிகிட்டு உன் ஒருத்தியாலேதான் சகஜமா இருக்கிற மாதிரி காமிச்சிட்டிருக்க முடியும் அத்தை " என்றவளாய் அவள் அருகில் வந்து தோள்களை அணைத்துக் கொண்டதும், பார்வதி இன்னமும் நொறுங்கி போனாளன்றே சொல்லவேண்டும். மனதின் பாரத்திற்கு கண்கள்தான் வடிகால் என்றே சொல்ல வேண்டும்..  அன்று அவளிடம் சொல்லி வருத்தப்பட்டதும்,  மனசு லேசானதை உணர்ந்தாள்.வயது காரணமாக தற்சமயம் ஏற்பட்டிருக்கும் தள்ளாமையை தவிர்த்து மனசளவில் எதற்கும் தைரியமாயிருக்கும் தான், தியாகுவை பார்த்ததிலிருந்து சற்றே நொறுங்கி தளர்ந்திருப்பதை ஒத்துக்கொண்டாள்.

விழா ஆரம்பிக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டதாலும், விழாவுக்கு கோகிலாவும் வருவதாய் சொன்னதை நினைவு கூர்ந்ததாலும், மனதுக்குள் எழுந்த யோசனைகளை அகற்றிவிட்டு, தனக்களிப்பட்டிருக்கும் அடுத்தடுத்த வேலைகளைமும்மரமாக கவனிக்க ஆரம்பித்தாள் பார்வதி.

குழந்தைகளின்  கலை நிகழ்ச்சிிகள் முடிந்து ,  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை ஊக்குவித்து,. அனைத்து குழந்தைகளும் இனிப்பு வழங்கி, இல்லத்தை தொடங்குவதற்கு ஆதரவாக இருந்திருந்தவர்கள் ஒரிரு வார்த்தைகள் பேசியபின் , இல்லத்தை ஏற்று நடத்தும் கோகிலாவின்  குடும்ப நண்பருமான இல்லத்தின் நிர்வாகி, வந்திருந்தவர்களை வரவேற்று பேசி இல்லம் தொடங்கியதிலிருந்து இன்றுவரை நடந்த முன்னேற்றங்களை கூறி இல்லத்தற்காக சேவை செய்யும் அனைவருக்கும் நன்றி கூறி அதில் பணி புரியும் ஆசிரிய பெருமக்களையும், சிப்பந்திகளையும் பாராட்டி பேசினார். .பார்வதியின் சேவைகளை உயர்த்திப் பேசியவர்," என் குடும்ப நண்பரின் மனைவி கோகிலா, "என் அத்தை இவர், இவருக்காக இவ்வில்லத்தில் ஒரு வேலை கொடுங்கள்! " என்றதையும், அவர் வேலையில் சேர்ந்த நாள் முதற்க்கொண்டு இத்தனை வயதிலும் அவரது அயராத உழைப்பைக்கண்டு தான் வியந்து போனதையும் கூறி, அது மட்டுமல்ல! அவருக்கு மாத ஊதியமாக கொடுக்கும் பணத்தில் அவர் செலவுக்கு போக மிகுதியை சேர்த்து வைத்து இல்லத்திற்கே தானமாக கொடுக்கும் அவர் பண்பையும் குறிப்பிட்டு பேசியதும், கரவொலி எழுந்தது. விழாவுக்கு குடும்பத்துடன் வந்திருந்த கோகிலாவும் பெருமிதத்துடன், எழுந்து வந்து, பாராட்டுகளினால் சற்று சங்கோஜத்துடன் நின்றிருந்த பார்வதியை அணைத்துக்கொண்டாள்.

"பிறகு ஒரு விஷயம்!"  என அவர் மறுபடியும் ஆரம்பித்ததும், அனைவரும் அமைதியாகி அவரை நோக்கவும், "ஒருவாரம் முன்பு ஒருவர் நம் இல்லத்துக்கு வந்து கணிசமாக உதவித்தொகையை தந்ததோடு, நம் இல்லத்திலே ஒரு வேலையும் தரும்படி கேட்டுக்கொண்டுள்ளார். தாராள மனது கொண்ட அவர் செய்த உதவியை சொல்லி பிரகடனபடுத்தக் கூடாதென்றுதான்  சொன்னார். ஆனால் என் மனதில் கூற வேண்டுமென்று நினைத்ததால், சொல்லி விட்டேன்.. இவரை பிள்ளையாய் பெற்றெடுத்த அவரின் பெற்றோர்கள் என்ன தவம் செய்தார்களோ? இத்தனை சின்ன வயதில் அவருடைய சேவை உள்ளம் பாராட்டப்பட வேண்டிய  ஒன்று என நான் நினைக்கிறேன்.! அவரும் நம் பார்வதி அம்மா மாதிரி கோகிலாவுக்கு  உறவு என்று சொல்லி,, அவர்தான் அழைத்து வந்து எனக்கு அறிமுகப்படுத்தினார். இவ்விடம் அவரை அழைத்து அனைவருக்கும் அறிமுகப்படுத்த விழைகிறேன். தயவு செய்து அவர் மேடைக்கு வரவும்." என்றதும் கரவொலிக்கிடையே அமர்ந்திருந்த இடத்திலிருந்து மேடைக்கு வந்து வணங்கியவரை கண்டு பார்வதியின் முகத்தில் சிறு சலனம் தென்பட்டது

நீ  செஞ்சது  உனக்கே சரின்னு படறதா? உன் கடமையை செய்யாமல், எனக்காக இப்படி ஒரு முடிவை ஏன் எடுத்தாய் ? என சற்று கோபமாக கேட்ட பார்வதி "இதற்கு நீயும் அவனுக்கு துணையாக இருந்திருக்கிறாய்? அன்று வந்த போது   என்கிட்டே  ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அத்தனையும் மறைக்கனும்னு எப்படி தோணுச்சு உனக்கு? என்று  கோகிலாவை பார்த்தும், சற்று வருத்தமும் கோபமும் கலந்த குரலில் கேட்டாள் பார்வதி.

"இந்த கேள்வியையே  எத்தனை நேரம் கேட்டுக்கொண்டே இருப்பீர்கள் பாட்டி? " என்றபடி அவள் அருகில் வந்தமர்ந்தான் தியாகு.

இல்லத்தில் அவனை மேடையில் பார்த்ததும் அதிர்ச்சிக்குள்ளாகிய பார்வதி விழா முடிந்து தன் இதர வேலைகளும்  நிறைவுற்றதும் கோகிலாவுடன் கூட சரிவர பேசாமல் வீடு வந்தடைந்தாள். பேரனை பார்த்ததும் ஒரு நிமிடம் தன்னையறியாமல் தன்னுள் மகிழ்ச்சி எழுந்த போதும்,  இன்னமும் தன்னை வறுப்புறுத்தும் நோக்கத்தில், அவன் எப்படியோ கோகியை சந்தித்து, அவள் ஆதரவையும் சம்பாதித்துக்கொண்டு அதே இல்லத்தில்  நற்பெயரும் பெற்றபடி...... இருக்கட்டும்!  இந்த கோகியும் தன்னிடம் ஒருவார்த்தை கூடச் சொல்லாமல் மறைத்திருக்கிறாளே!  என்றெல்லாம் எண்ணியபடி  இருந்தாள்.

மறு நாள் காலையிலேயே தன்னை சந்திக்க வந்திருந்த இருவரிடம்  வருத்தமும் கோபமுமாக கேள்விகளை கேட்டுக் கொண்டேயிருந்தாள்.

கோகிலாவும் வந்து அவளருகில் அமர்ந்தபடி , "அத்தை! உன்னை தேடி வந்த தியாகு நீ உன் உறுதியான முடிவை சொன்னதும் , என்னசெய்வதென்று தெரியாமல்  என் வீட்டுக்கு வந்து என்கிட்டே எல்லா விபரமும் கூறினான். அவனுடைய அன்பான பேச்சும்,  உன்மேலே வச்சிருக்கிற மரியாதையையும் பார்த்ததும்,  என் அண்ணா உனக்கு செஞ்ச துரோகத்தைக்கூட நான் கொஞ்ச நேரம் மறந்துட்டேன். இரண்டாவதா, அவனுக்கு கிடைச்சிருக்கிற தண்டனையை கேட்டதும் , "தான் ஆடாட்டாலும் , தன் சதை ஆடும்னு" சொல்வாங்காளே! அந்த மாதிரி எனக்குள்ளும் ஒரு பச்சாதாபம் உருவாயிடிச்சு! அதுக்கப்புறமா, தியாகு இல்லத்தில் என்னையும் அறிமுகப்படுத்தி விடுங்கள்! என்று சொன்னதும் என்னாலே தட்ட முடியலே! அதைப்பத்தி பேசலாம்னு அன்னைக்கு நான் வந்தப்போ, நீயும் அதை சொல்லி வருத்தப்பட்டதுனாலே தியாகு கூடவே ஒருநாள் இங்கு வந்து பேசாலாம்னு நினைச்சேன். அதுக்குள்ளே இவன்......என்றவளை இடைமறித்தபடி தியாகு ," பாட்டி! இங்கிருப்பது உங்களுக்கு பிடிக்கல்லைன்னா, நான் போயிடுறேன். "என்றான் சற்று உடைந்த குரலில்.

மூவரும் சற்று நேரம் ஒன்றும் பேசாமல் அங்கு ஒரு கனத்த மெளனம் நிலவியது. ஒவவொருவருக்கும் தான்  செய்தது  தவறோவென மனதுக்குள் சுய பரிசோதனை செய்து கொள்வது போல் அமைதியாயிருந்தனர்.
சிறிது நேரத்திற்கு பின் தியாகுதான் மெளனத்தை உடைத்து பேச ஆரம்பித்தான்.

" பாட்டி! நான் உங்களை பார்த்ததில்லை!ஆனால் அப்பா உங்களைப்பற்றிச் சொல்லும் போது நானகவே என் மனசுக்குள் உங்களை ஒரு உருவத்தை கற்பனை செஞ்சு வளர்ந்து வந்தேன். உங்களை பாக்கனும், உங்களோடு பேசி உங்க அன்பு  நிழல்லே வாழனுன்னு,  மனசுலே ஆசையை வளர்த்துகிட்டேன். அதனாலே உங்களை எப்படியாவது என்னோடே அழைச்சிகிட்டு போகனுன்னு முடிவோட புறப்பட்டு வந்தேன். இங்க வந்து பாத்த போது நான் நினைச்ச மாதிரிதான் நீங்களும் இருந்தீங்க!  ஆனா, என்னோட முடிவுபடி உங்களை கூட்டிண்டு போற விசயத்துலே மட்டும் நான் தோத்துட்டேன். அதனாலதான் உங்களை பிரிய மனசில்லாமே, நீங்க வேலை பாக்கிற இல்லத்திலேயே உங்க பார்வையிலே படற மாதிரி இருக்கலாம்னு தோணிச்சு!  கோகிலா அத்தையும் இங்கே இருக்குறாங்கன்னு நா உங்களைபத்தி விசாரிக்கும் போதே தெரிஞ்சுகிட்டதாலே, அவங்களை போய் சந்தித்து பேசினேன்." அவங்க உதவியோடுதான் இல்ல நிர்வாகிகிட்டே வேலையில் சேரவும் சம்மதம் வாங்கினேன். என்கூட நீங்க வரதற்கு பிரியப்படாத போது, நான் உங்க கூட இருக்க நினைக்கிறது தப்பா பாட்டி?. நெகிழ்ச்சியுடன் அவன் கேட்டதும், பார்வதியின் கண்களும் குளமாயின.

"இல்லைப்பா! ஆனால் உங்கப்பா அங்கே எப்படி உன்னை விட்டுட்டு தனியா சிரமபடுவான். நீ அவனுக்கு ஆதரவா இருந்து பாத்துண்டாதானே நல்லாயிருக்கும்.". மகனின் மேல் உள்ள பாசம் பார்வதியை சுமூகமாக பேச வைத்தது.

"பாட்டி! அங்கே அப்பாவை கவனிச்சிக்க அம்மா இருக்காங்க!  அம்மாவின் சொந்தங்கள் அருகருகே இருக்காங்க! ஆனா இங்கே உங்களுக்குன்னு கோகி அத்தையை தவிர யார் இருக்காங்க? இப்போதிலிருந்து உங்களுக்காக  நானும் இருக்கேன். அப்போ அப்பா உன்னை விட்டுட்டு ஏதோ சுயநல புத்தியிலே போனதுனாலே நீங்க எவ்வளவு சிரமங்களை அனுபவிச்சு இருக்கீங்கன்னு கோகி அத்தை சொன்னாங்க! அந்த பாவத்துக்கு பிராயசித்தமா  நான் அப்பாவை விட்டு இருக்கிற வேதனையை கொஞ்ச நாள் அப்பாவும் அனுபவிக்கட்டுமே! அப்படி சோர்வா நின்ன நேரத்திலே கூட நீங்க மனசை தளர விடாமே இல்லத்துலே உங்க வயசுக்கும் மீறிய வேலை செஞ்சு.. உங்க உழைப்பையே  தானமாக்கி தந்து  அந்த புண்ணியந்தான் அப்பா உயிரை காப்பாத்தியிருக்குன்னு நான்நினைக்கிறேன்! .அன்னைக்கு இல்லத்தோட நிர்வாகி பெருமையா உங்களை பத்தி பேசுனப்போ, நான் சேர்த்து வச்ச பணத்தை கொடுத்து அவர்கிட்டே பெருமைபட்டம் வாங்கினது  கூட சின்ன செயலா ஆயிடுத்து.!  தனியொரு மனுஸியா நின்னு வாழ்ந்து காட்டின உங்களுக்கு இந்த வயசான காலத்துலே ஆறுதலுக்கு பிடிசிக்கறதுக்கு ஒரு கரம் வேண்டாமா? அந்த கரமா நான் உங்களோடு எப்பவும்  இருக்கேன். உங்க மனசு மாறி நீங்க எப்போ அப்பாவை பார்க்கப்போகலாம்னு சொல்றீங்களோ அது வரைக்கும் நான் அந்த பேச்சை எடுக்க மாட்டேன். சத்தியமா உங்களை விட்டுட்டு போகவும் மாட்டேன். உங்க கனவையெல்லாம் அப்பாவிற்கு பதிலா  நான் நிறைவேத்தி வைக்கிறேன்." தியாகு பேச பேச பார்வதியின் மனம் இளகியது. கண்களில் கண்ணீருடன் மெளனமாயிருந்தாள்.

கோகிலா,"என்ன அத்தை! தியாகு இவ்வளவு கெஞ்சுறான்! நீ பதிலேதும் சொல்லாமே அமைதியா இருக்கே! என்றதும்,  கண்களை துடைத்தபடி எழுந்து கொண்ட பார்வதி,"கோகி!  என்னோட மன உறுதி என் பேரனுக்கும் இருக்கு! ஆனா அவன் உறுதிக்கு முன்னாடி நான் தோத்துப்போயிட்டேன்.! எனக்கு இந்த வயசான காலத்துலே பக்க பலமா என் பேரனை துணைக்கு கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லி வரலாம்! வா! தியாகு! நீயும் வா ! கோவிலுக்குச் சென்று வரலாம் என்றபடி பாசத்துடன் அவன் கையைப் பற்றிக்கொண்டாள். இனி  தன் வாழ்வு சற்று ஆனந்தமாய் இருக்கும் என்ற நம்பிக்கையில் உடல் வலு கொஞ்சம் கூடியதை உணர்ந்தாள் பார்வதி. மூவரும் நிறைந்த மனதுடன் ஆண்டவனை தரிசிக்க கிளம்பினார்கள்.
முற்றும். 

இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்.
பகுதிகள்:1234

Tuesday, March 6, 2018

பிராயச்சித்தம்.....( பகுதி 4)

சற்று ஆசுவாசபடுத்திக் கொண்டவள் விழி நீரை  துடைத்துக் கொண்டவள் அவன் கைகளை பிடித்து தன் நெஞ்சொடு அணைத்த வண்ணம், "தியாகு! என் செல்லமே! உன்னை என் கண்ணுலே காமிச்சு கொடுத்த அந்த ஆண்டவனுக்கு நா ரொம்ப கடமை பட்டிருக்கேன். எத்தனையோ கெடுதல்களிலும் அவன் சிலது நல்லது பண்ணியிருக்கான். அதுலே இதுவும் ஒண்ணு.  உன்னோட அப்பா என் பிள்ளையாய் பிறக்காமே,  நான் எடுத்து வளர்த்ததுக்கே அவன் இந்த துன்பத்துக்கு ஆளாகியிருக்கான். ஏன்னா என் நேரம் அப்படி ! நான் பிறந்து வந்த வேளை அப்படி! மத்தபடி உன்னை பார்த்ததிலே நான் ரொம்பவே சந்தோஸபடறேன். ஆனா அவ்வளவு சட்டுனு உதறிட்டு உன் கூட என்னாலே வர முடியாது! ஏன்னா இந்த குழந்தைகளோடு என் காலம் முடிஞ்சு போகனுமுன்னு நான் பிரார்த்தனை செய்துகிட்டே இங்கே வேலையிலே சேர்ந்து ரொம்ப வருடங்கள் ஆச்சு. எல்லாத்தையும் ஒரளவு மறந்து ஒரு தவ வாழ்க்கை மாதிரி வாழ்ந்துண்டு வர்றேன்.அவ்வளவு சுலபமா இதை உதறி எறிஞ்சிட்டு என்னாலே வெளியேற முடியாது. ராஜுவை நினைச்சா எனக்கு ரொம்பவே வருத்தமா இருக்கு! ஆனா என்னை விட பத்து மடங்கா கவனிக்க அவன் பிள்ளை இருக்கான். அந்த நிம்மதி இந்தப்பிறவியிலே எனக்கு போதும். அந்த நினைப்போடு  எஞ்சிய காலத்தை கழிச்சிடுவேன். நீ என் பிள்ளை மாதிரி இல்லாமே ரொம்ப தைரியமா இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி இருக்கே...! நீ நல்லா இருக்கனுப்பா!  பத்திரமா போயிட்டு வா! அப்பாவை நல்லபடியா கவனிச்சுக்கோ!" என்றவள் மேலும் அங்கிருந்தால், தன் உறுதி தளர்ந்துவிடுமோ என்ற ஐயத்தில் வரவேற்பு அறையை விட்டு அகன்று உள்ளே சென்று மறைந்தாள்.

அவள் பேச்சில் கட்டுண்டவன் மாதிரி் அமைதியாயிருந்த தியாகு மேற்கொண்டு செய்வதறியாமல் சற்று நேரம்  சிலையாய் நின்றிருந்தான்.

சில வார காலம்  நிமிடமாய் ஓடியது தெரியவில்லை. பார்வதிக்கு..... ! ஆனால் ஒவ்வொரு  நாளும்  சில மணி நேரமாவது தியாகுவின் முகமும் பேச்சுக்களும் அவள் முன் வந்து நின்று போயின. ராஜு தன்னுடன் இருக்கும் போது அவனுக்கு மணமுடித்து,  அவன் குழந்தையை எடுத்து வளர்த்து என்று எல்லோரையும் மாதிரி அவளும் கனவு கண்டாள். அதெல்லாம் பொய்த்துப் போய் விட்டது என மனசை தேற்றிக்கொண்டு வாழக்கற்றுக் கொள்ளும் போது எதிரில் வந்து நின்று" பாட்டி" என உரிமை கொண்டாடி, மனதை சலனப்படுத்துகிறான்.  அமைதியாக பேசி மனதை அலைக்கழிக்கிறான். இன்னமும் இவனை மறந்து பழையபடியாக எவ்வளவு நாட்களாகுமோ? என்ற எண்ணத்தில் பெருமூச்செறிந்தாள். இந்த கவலையில் கோகிலாவும் இத்தனை நாட்களாக தன்னை பார்க்க வராதது நினைவுக்கு வரவே "அவளுக்கு என்ன பிரச்சனையோ? " என்று எண்ணியபடி இல்லத்துக்கு கிளம்ப எத்தனித்தாள்.

அப்போது "அத்தை"! என்ற குரலோடு கோகிலா வீட்டினுள் நுழையவும்,  " வா கோகி! இப்பத்தான் உன்னை நினைச்சேன். உனக்கு நூறு வயது!" என்றபடி அன்போடு அவளை வரவேற்றாள் பார்வதி.

" வேண்டாம் அத்தை! உன் வாய் பேச்சு பலிச்சிட போறது.அப்புறம் கஸ்டப்படறது நானில்லையா? " என்று சிரிப்போடு சொன்னவள்" நீ அதுக்குள்ளே கிளம்பிட்டியா!  ரொம்ப. நாளாச்சா? அதான் இன்னைக்கு உன்னை பாத்துட்டு போகலாம்னு வந்தேன்." என்றவளிடம் ," சரி உக்காந்துக்கோ! நானும் உன்னை பாக்கனும்னு நினைச்சேன் .இல்லத்துலே ஆண்டு விழாவுக்கு ஏற்பாடு பண்ணிடிருக்காங்க! அதான் சீக்கரமா கிளம்பறேன். சரி! ஒரு அரை மணி தாமதமா  போனா தப்பில்லை!  நா சொல்லிக்கிறேன். என்று அவளருகில் அமர்ந்தவள்," கொஞ்சம் இரு என்று அடுக்களைக்குள் சென்று ஒரு கிண்ணத்தில் பாயாசத்தை கொண்டு வந்து தந்தாள். "என்னஅத்தை! இன்று இனிப்பெல்லாம் பலமாக இருக்கிறது." என்று அதை வாங்கிக்கொண்டாள் கோகிலா.

"இன்று அவன் பிறந்த நாள்! அவன் இங்கு இருக்கும் போது அவனுடைய பிறந்த நாளன்னைக்கு அவனுக்கு வேண்டியதை பார்த்துப் பாரத்து செஞ்சேன் .அன்று கட்டாயம் இந்த இனிப்பிருக்கும். அவன் என்னை விட்டு போனதிலிருந்து, கோவிலுக்கு செல்லும் போது அவனுக்காக வேண்டுவதோடு சரி!  இன்னைக்கு கோவிலுக்கு சென்ற போது அவன் பெயரில் அர்ச்சனை பண்ணினேன். வீட்டிலும் பாயசம் செஞ்சு விளக்கேற்றி சுவாமிக்கு படைத்து ..... என்னவோ போ! எனக்கு மனசே சரியில்லை! பத்து நாளைக்கு மேலா  உன்கிட்டே சொல்லனும்னு மனசுக்குள்ளே நினைச்சிகிட்டேயிருக்கேன்... .அவன் விபத்துலே கால்களை இழந்து என்னை, எனக்கிழைத்த தப்பை நினைச்சபடி,  தவிச்சிண்டு இருக்கானாம். அவன் பிள்ளை எப்படியோ நான் இங்கிருக்கிற விபரத்தை சேகரிச்சிண்டு வந்து "அப்பா இந்த மாதிரி உன்னை நினைச்சி வருத்தப்படுறார். என்னோடவந்துடுன்னு" வறுப்புறுத்தினான். நான் தான் எனக்கு அங்கெல்லாம் சரி வராதுன்னு திருப்பி அனுப்பிட்டேன். என்னை பார்க்க ரொம்ப ஆவலா இருக்கான்னு சொல்றான். நான் இங்கே இருபது வருஷமா ஆண்டவன்கிட்டே மனசுக்குளளே கதறிண்டிருக்கேன்.என் உயிர் பிரியருதுக்குள்ளே ஒரு தடவை அவனை கண்ணுலே காட்டுன்னு!  அது சரி! அதெல்லாம் எப்படி அனுமன் மாதிரி நெஞ்சை பிளந்து காட்ட எனக்கு சக்தி இருக்கா?  உறவெல்லாம் ஒவ்வொருத்தரா போன நிலையிலே இவன்தான் ரத்தமும் சதையுமான என் உடம்புலே உயிரா , சுவாசமா இருக்கான்னு எப்படி அவனுக்கு விளக்குவேன் அது புரிஞ்சிருந்தா அவன் என்னை விட்டு போவானா? எந்த ஒரு பிரச்சனையே வரட்டுமே! அப்படியே வந்தாலும், இந்த உறவை வெட்டிண்டு "அப்புறமா பாத்துக்கலாம்னு மனசை இறுக்கிண்டு, நாளை தள்ளிப் போட்டுகிட்டு இருந்திருப்பானா?  நான் இங்கே ஒருநாள் பட்ட வேதனையை அவன் நாளொன்றுக்கு ஒரு நிமிடமாவது பட்டிருப்பானா? ." மேற்கொண்டு பேச முடியாமல் கண்களில் இத்தனை நாளாக மனதை இரும்பாக்கி கண்களை வற்ற வைத்ததின் விளைவாய்  வெளியேற வழியின்றி தவித்துக் கொண்டிருந்த கண்ணீர் சுனை காத்திருந்த மாதிரி கொட்ட ஆரம்பித்தது.

இத்தனை நாட்களாக மனதில் இறுக்கிய சோகங்கள் கரைந்து போகும் வரை அவள் அழட்டும் என கோகிலா வாளாதிருந்தாள்.

(தொடரும்...)

இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்.
பகுதிகள்:123


Sunday, March 4, 2018

பிராயச்சித்தம்.....( பகுதி 3)

"பார்வதி அம்மா உங்களை பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள்!" காவலாளி வந்து சொன்னவுடன், மதிய உணவு உணடதும்  தூங்காமல்  இருந்த சில குழந்தைகளை தூங்க பண்ணும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பார்வதி எழுந்து அருகிலிருந்த உதவியாளரை பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு வரவேற்பறையை நோக்கி நடந்தாள்.

இவள் சென்றதும் இவள்தான் பார்வதி என புரிந்து கொண்ட வந்தவன் இவள் அருகில் வந்து," பாட்டி என் பெயர் தியாகு!  நான்தான் உங்களை தேடி வந்திருக்கிறேன். நீங்கள்தான் பார்வதி என நினைக்கிறேன்!"  என்று சரளமாக பேச ஆரம்பிக்கவும்,  "உரிமையுடன் பாட்டி எனஅழைக்கும இவன் யார்? என்றபடி அவனை ஏறிட்டு கூர்ந்து பார்த்தவளுக்கு சற்று அதிர்ச்சியாயிருந்தது.

"நீ....யாரப்பா? உன்னை.எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!  .... நீ ராஜுவோட பிள்ளைதானே ? எனக்கு தெரியும் என்றாவது ஒருநாள் அவனை பார்ப்போம்ன்னு உள் மனசு சொல்லிண்டேயிருக்கு. எங்கே அவன்?  அவன் எப்படிப்பா இருக்கான்? நல்லா இருக்கானா? பார்வதி சற்றே உணர்ச்சிவசப்பட்ட குரலில் படபடத்தாள்.

என்ன இருந்தாலும், சொந்த மகனைப் போல் வளர்த்து , வயிற்றில் பிறந்தவனை பறி கொடுத்ததிலிருந்து   அவனையே உயிராக நினைத்து வாழ்ந்து வரும் போது பிரிந்தவனாயிற்றே!  அந்த நாட்களை நினைத்த மாத்திரத்தில். அவன் மேல் இருந்த கோபங்கள், வருத்தங்கள் நொடியில் காணாமல் போக, பாசத்தினால் அவன் நலம் விசாரிக்கையில் பார்வதியின் குரல் தளர்ந்து கண்களில் நீர் துளிகள் வெளிப்பட்டன.

தான் நினைத்தது ஒரளவு நடக்கும் என்ற நம்பிக்கை தியாகுவின் மனதில் தோன்றியது. பார்வதியின் இரு கரம் பிடித்து கண்ணில் ஒற்றிக்கொண்டவன் "என்னை ஆசிர்வதியுங்கள் பாட்டி!" என்றவனாய் அவள் காலில்  விழுந்தான். சட்டென்று "நன்றாயிருப்பா" என்றவள், "நீ யாரப்பா சொல்லவேயில்லையே? நானாக ஏதோ நினைத்து கேட்டதற்குக் கூட நீ பதில் சொல்லவில்லையே? " சட்டென அவள் குரலில் சுதாரிப்பு தெரிந்தது.

எழுந்து நின்ற தியாகு அவள் கைகளை பிடித்தபடி, "பாட்டி! நான்தான் உங்க பேரன். உங்க ராஜுதான் என் அப்பா! இளமையிலே அவர் செஞ்ச தப்புக்கு அவர் தண்டனை அனுபவிக்கிறார். அதனாலே அவர் நினைசாலும் இங்கே வரமுடியலே.  அவர் தப்பையெல்லாம் அவர் சொன்னதுனாலே அதை சரி பண்ண  அவருக்கு   பதிலா நா வந்திருக்கேன். உங்க கால்லே  விழுந்து மன்னிப்பு கேட்டாத்தான் இந்த  பிறவியிலே நல்லகதி கிடைக்கும்னு சொல்லிகிட்டே இருக்கார் பாட்டி! அதனாலே செய்த தப்புக்கெல்லாம் பிராயசித்தமா உங்களை எங்களோடவே நிரந்தரமாக  வச்சுக்க ஆசைப்பட்டு உங்களை அழைச்சிகிட்டு போக வந்திருக்கேன். எங்களையெல்லாம் மன்னிச்சு ஏத்துகிட்டு எங்க கூட வந்து தங்குவீங்களா பாட்டி?" என்று உள்ளம் உருக பேசிக் கொண்டே போனவனை தடுத்த பார்வதி, "என்னப்பா ஆச்சு அவனுக்கு? என்றாள் பதட்டமான குரலில்.

"பாட்டி! அவர் எந்த சூழலில் உங்களைவிட்டு  சென்றார் . சென்றவிடத்தில் வந்த ஏமாற்றங்கள், சறுக்கல்கள் அதன் பின் அம்மா வீட்டு உறவின் மூலம் அவர் சற்று நிமிர்ந்து நி்ன்றது , அதனால் வந்த வசதிகளும், கண்டிப்புகளும் உங்களை மறக்க வைத்த சந்தர்பங்களை உருவாக்கியதையும், நான் பிறந்து வளர்ந்து ஒரளவு அனைத்தையும் புரிந்து  கொள்ளும் பக்குவம் அடைந்ததும் என்னிடம் கூறியிருக்கிறார்....நல்லா போய்கிட்டே இருந்த எங்கள் வாழ்க்கையில் அப்பாவுக்கு மீண்டும் ஒரு பலமானஅடி.! . இதில் அவர் உயிர் பிழைத்து இரு கால்களை இழந்து தவிக்கிறார்.. எப்படியோ என் படிப்பு முடிந்து  ஒரு வேலையும் பார்ககிறேன்.. பழையதை நினைத்து வருத்தப்படும் போதெல்லாம் ,"நம்பிக்கையுடன் காத்திருந்த அம்மாவை  விட்டு விட்டு வந்த பாவந்தான் இப்படியாகி விட்டது. நிர்கதியாய் எனக்காக காத்திருந்த அம்மாவை தவிக்கவிட்டு ஒடி வந்த கால்களை ஆண்டவன் எடுத்துக்கொண்டு ஒரடி கூட எடுத்து வைக்க முடியாத நிலைமையை உண்டாக்கி விட்டான் ! .இனி எப்படி அவங்க முகத்திலே முழிப்பேன், எப்போ எப்படி சந்திச்சு அவங்ககிட்டே மன்னிப்பு கேட்பேன்! அப்படியே கேட்டாலும், அவர்கள் என்னை மன்னித்து தன் மகனா ஏத்துப்பாங்களா?   என்று சொல்லிச்சொல்லி வருத்தபடுவார். உறவுகளையெல்லாம் மறந்து தொலைத்து விட்ட ஒரு நிலையிலே உங்களை எப்படியாவது கண்டு பிடிச்சு ,அப்பாவுக்கு அந்த பாக்கியத்தை என் மூலம் ஏற்படுத்தி தரலாம்னு அங்கே இங்கே விசாரிச்சு இப்போ உங்ககிட்டே வந்து நிக்கிறேன் பாட்டி!. எனக்காக என்கூட வருவீங்களா பாட்டி.!  கெஞ்சிய குரலில் சுருக்கமாக தான் அங்கு வந்த விபரத்தை கூறினான் தியாகு.

கண்ணில் வழிந்த நீரை துடைத்தெறிய மறந்து அவன் கூறியதை கேட்ட பார்வதியின் மனம் தவித்துக் கொண்டிருந்தது. "தன்னை விட்டு விட்டு சென்றதற்கு அவனுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா ? கடவுளே இது உனக்கே நியாயமாயிருக்கிறதா? அன்று கோகி கூட "கடவுள் அவனுக்கு தண்டனை கொடுப்பான்னு" சொன்னாளே!  அதுக்காக இப்படியா?  ஐயோ! இதை என் பிள்ளை எப்படி இதுநாள் வரைக்கும் தாங்கியிருப்பான்! "வளர்த்த பாசத்தில் மனசுக்குள் சோகம் தாக்கி சற்றே நிலை குலைய செய்தது. "கடவுளே! இன்னும் என்னை என்னவெல்லாம் சோதிக்கப் போகிறாய்?"எனப் பெருமூச்சு விட்ட போது கனத்த மனசில் வலி தெரிந்தது.
(தொடரும்...)

இதன் முந்தைய பகுதிகளை காண இங்கே சொடுக்கவும்.
பகுதிகள்:12


Friday, March 2, 2018

பிராயச்சித்தம்.....( பகுதி 2)

வளர்ப்பு மகனின் அன்பான அரவணைப்பு  அவளுடைய  மனக்காயத்தை சிறிது குணப்படுத்தியது.  "நான் இருக்கிறேன். அம்மா ! நீ அழுதது போதும். இனி உன் கண்களில்  கண்ணீரின்  நிழல் கூட படாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.'' என்று உருக்கமாக சொன்ன சொல்லில்,  இதயம் கரைந்து  விழிகளில் நீர் எட்டிப்பார்த்தது. அவன் கைகளை பிடித்து,  அவனை லேசாக அணைத்தபடி , அவன் நெற்றியில் முத்தமிட்டாள்..நீ.எனக்ககுன்'னு, இருக்கிற  தைரியத்தில் தான் எல்லாரும் என்னை விட்டுட்டு போயிட்டாங்கடா!  போதும் !  நீ ஒருத்தனாவது, ஆயுசோட இருக்கனும்டா!''என்று அழுது கொண்டே சொன்னவள் தன்னை  சிறிது நேரத்தில் ஆசுவாசபடுத்திக்கொண்டாள். காலம் மெள்ள நகர்ந்தது.. தன் சொந்த மகனைப்போல்  படிப்பில் இவன் ஆர்வமாக படிக்காவிடினும்,  படிப்புகேற்றபடி  அவன் வேலைதேடி  சோர்ந்து போனதும் , அவனை தட்டிக் கொடுத்தபடி,. ஆறுதலுடன் தேற்றினாள்.


ஒருநாள் தான் நண்பர்களுடன்  சேர்ந்து பிஸினஸ்  தொடங்க போவதாக கூறியதும், தன் கணவரின் சேமிப்பிலிருந்து  அவன் கேட்ட தொகையை எடுத்து தந்து ஊக்கப்படுத்தினாள்.  சற்று சறுக்கலும், சொஞ்சம் செழிப்புமாக  அவன் வளர்ந்து வரும் போது, சொந்தத்தில் ஒரு பெண்ணைப்பார்த்து  அவனுக்கு திருமணம் செய்து விட்டால்,  "அக்காடா'' என்று நிம்மதியாக இருக்கும் வாழ்நாளை  கழித்து விடலாமே  என்று  தோன்றியது..வடக்கே வேலை விசயமாக சென்று வருகிறேன் என்று போனவன் அப்படியே தன் உறவையும், ஊட்டி வளர்த்த அன்பையும் முறித்துக் கொள்வான் என கனவீல் கூட நினைக்கவில்லை. நாள் செல்லசெல்ல அவனிடமிருந்து ஒரு தகவலும் வரவில்லை..அறிந்தவர் தெரிந்தவர் கேட்கும்போது கூட ,அவனை விட்டுக்கொடுக்காமல், " வருவான். ! வாழ்க்கையில் ஜெயித்து விட்டு நீ கொடுத்த பணத்தை பன்மடங்காக்கி உன்னிடம்  கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறான். அதை நிறைவேற்றும்  மனதோடு இருக்கிறானோ என்னவோ"!  என தனக்காவும் சேர்த்து சொல்லி சமாதானபடுத்திக் கொள்வாள்.


காலம் யாருக்காகவும் காத்திராமல் இயல்பான வேகத்தில் ஓடிய ஒரு நாளில்., நாத்தனாரின் கணவர் வகை சொந்தமான ஒருவர் ஒரு நாள் இவளை இங்கு சந்தித்த போது.. " உங்களுக்கு விசயமே தெரியாதா?  அவன் வடக்கிலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு நல்ல வசதியோடு வாழ்கிறான்.ஒரு குழந்தைக்கும் தந்தையாகி விட்டான். " என்ற செய்தியை கூறியதும் அவள் சற்று அதிர்ச்சியடைந்து போனாள். வாழ்க்கையில் எத்தனையோ  இடிகளை பொறுத்துக் கொண்டவளுக்கு இந்த இடி சற்று நேரே தலையில் விழுந்த பிரமையை ஏற்படுத்தியது. ஆனாலும் பொறுத்துதான்  ஆகவேண்டும்! வேறு என்ன செய்வது என்ற மனநிலையை உண்டாக்கி கொண்டாள். "பெற்றவனை பிரித்து அழைத்துக்கொண்ட ஆண்டவனுக்கு வளர்த்தவனை பிரிக்க கஸ்டமா என்ன ?"என்று தோன்றிய நிலையில், இறைவனிடம் சென்று நாலு கேள்வி கேட்டு புலம்ப தூண்டிய மனதை " உன் விதி! அவன் என்ன செய்வான்?" எனக்கூறி சாமாதானபடுத்திக்கொண்டாள்.

பழைய நினைவுகளுடன் படுத்து தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவள் "அத்தை" என அழைத்துக்கொண்டே கோகிலா வரவும் எழுந்து அமர்ந்தாள் .

"அத்தை உடம்புக்கு என்ன ? நீ இன்னைக்கு வரல்லைன்னு இல்லத்திலே சொன்ன உடனே ஓடி வர்றேன். நீ அங்கேதானே இந்த நேரத்திலே இருப்பேன்னு உன்னைப் பார்க்க நேரே அங்கேதான் போனேன் . என்னாச்சு?" என்றபடி படபடத்த அவளை  நோக்கி லேசாக புன்னகைத்தாள் பார்வதி.

"எனக்கு ஒன்றுமில்லை கோகி! காலையிலே லேசா தலை சுத்தின மாதிரி இருந்திச்சு.  எப்பவும் சாப்பிட்ட உடனே போயிடுவேன்..இன்னிக்கு என்னமோ கொஞ்சம்... ஒன்னுமில்லே! என்னாலேயும் அங்க போகமே ஒருநாள் கூட இருக்க முடியாது.. ஏதோ உன் புண்ணியத்திலே பழசை மறந்து நான் நிம்மதியா இருக்க ஆண்டவன்  வழி பண்ணியிருக்கான். அதை கெடுத்துக்கிற மாதிரி நா நடந்துப்பேனா? நாளைக்கு கண்டிப்பா நா அங்கேயிருப்பேன். என்றாள் சிறிது தடுமாறிய  குரலில்.

"ஐயோ அத்தை! இப்போ உன்னை நா ஏன் அங்கே போகலைன்னு கேக்கவா வந்தேன். உனக்கு என்னாச்சோ, ஏதோன்னு ஓடி வந்திருக்கேன். உனக்கு முடியலைன்னா  நீ பேசாமே எங்கூட வந்து தங்கிடு. நா எப்போதிருந்தே அதைதான் சொல்றேன். நீதான் பிடிவாதமா அதை தட்டி கழிச்சிட்டு இப்படி இல்லத்துலே சேவை செய்யற வேலையை  ஏத்துண்டு தன்னந்தனியா இப்படி கஸ்டப்படறே ...நா உன்னை.... "என்று மேற்கொண்டு பேசிச் சென்றவளை கைகளை பிடித்து  தன் தளர்ந்த கைகளில் ஏந்திக் கொண்டாள் பார்வதி.

"எனக்கு தெரியாதா கோகி!  எவ்வளவோ மனோபலத்துடன் இருந்த நான் கையிருப்பும் கரைஞ்சி அதுக்கப்புறம் என்ன பண்ண போறொம்னு திகைச்சு நின்ன வேளையிலே தெய்வம் மாதிரி நீ வரல்லைன்னா, என் வாழ்க்கை அதோகதியா ஆயிருக்கும்.நீ எப்படியோ என்நிலை தெரிஞ்சி  இங்கே வந்து உன் கையோட கூட்டிக்கிட்டு போவேன்னு ஒத்தகாலோடு நின்னதையும் என்னாலே மறக்க முடியுமா?  நீ கூட்டுக்குடும்பத்திலே மூத்தவளா நின்னு எல்லோரையும் எப்படி கட்டி காப்பாத்திகிட்டு வர்றேங்கிறதே அப்பதான் நா தெரிஞ்சிகிட்டேன். இதிலே நா வேறே!  உனக்கு பாரமா அங்கேவர மாட்டேன்னு நா பிடிவாதமா நின்னதும், மாசாமாசம் என் செலவுக்கு நீ பணம் குடுக்கப் போக, அப்பதான் எனக்கு அந்த யோசனை வந்தது. உன் வீட்டுகாரரோட நண்பர்  ஆரம்பிச்சு நடத்திகிட்டு வர்ற இல்லத்திலே ஒரு வேலை கேட்டப்போ, எனக்கு வயசானாலும் பரவாயில்லைன்னு அங்கேயிருக்கிற குழந்தைகளை பாத்துக்கிற வேலை வாங்கி கொடுத்தே!   நா இப்போ கவலை இல்லாமே சாப்பிடவும் செய்றேன். குழந்தைகளை பார்த்து அவங்க சந்தோஸத்தை பார்த்து  அவங்களை மாதிரியே கவலை இல்லாத ஒரு மனுஸியா வாழ்ந்துகிட்டும் வர்றேன். இதெல்லாம் உன் தயவில்லாமே எனக்கு கிடைச்சிருக்குமா?  போகட்டும்! எது வரைக்கும் வாழ்வு போறதோ அது வரைக்கும் போகட்டும்!  இவ்வளவு கஸ்டபடுத்தின ஆண்டவன் என் கடைசி நிமிஷத்தை எப்படி....அவளை முடிக்க விடாது அவள் வாயை பொத்தினாள் கோகிலா.

"போதும் அத்தை! கடைசி புராணமெல்லாம்! இப்ப என்ன உனக்கு  தெம்பு இருக்கிற வரை, இல்லையில்லை! உனனோட சந்தோஸத்துக்கு மட்டுந்தான் நீ இந்த வேலையிலே சேர விட்டேன் .நீ இப்ப உம்னு சொன்னா கூட என்னோட அழைச்சிண்டு போய் உன்னை ராஜாத்தி மாதிரி பாத்துப்பேன். வர்றியா?" எங்கண்ணா பண்ணிய தப்பை நான் செய்ய மாட்டேன். அவனை என் கூடப்பிறந்தவன்னு சொல்லிக்கவே எனக்கு வெக்கமா இருக்கு! உன்னை பத்தரமா பாத்துக்குவான்னு அம்மா சொல்லி சொல்லி பூரிச்சிட்டிருந்தா!  ஆனா அவன் இப்படி உன் தலையிலே கல்லைத்தூக்கி போடுவான்னு யார் கண்டா? அம்மா இருக்கிற கடைசி காலம் வரைஅதை சொல்லிண்டேயிருந்தா!  அவன் எங்கேயிருக்கானோ!  ஆனா உனக்கு அவன்பண்ணின பாவத்துக்கு வேண்டாம்! கடவுள்பாத்துப்பான்! ஆனா நா இப்ப கடவுள் புண்ணியத்திலே நா நல்லாயிருக்கேன். உன்னை கண் கலங்காமே பாத்துக்க வேண்டியது  என் பொறுப்பு. நீ எதுக்கும் கவலை படாதே! " என்றாள் கோகிலா லேசாக கண் கலங்கியவாறு.

" கோகி  எதுக்கு பெரியவார்த்தை யெல்லாம் சொல்றே! யாரும் யாருக்கும் எந்த தீங்கும் பண்ணலே! அததது நடக்கிற விதத்திலே நடந்துதான் தீரும். யாருமே எந்த செயலுமே மனசாற நினைச்சு பண்றது கிடையாது.  ஏதோ நினைப்புலே அவங்க அறியாமே பண்றது  கூட தெய்வ சங்கல்பந்தான். அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தேதான் ஆகனும். நா அவனை இப்படியெல்லாம் நினைச்சதே கிடையாது எங்கே இருந்தாலும் அவன் நல்லா இருக்கட்டும்.. என்று பார்வதி கூறியதும், "உன் மனசு யாருக்கும் வராது அத்தை!" என்றபடி அவளை அன்போடு அணைத்துக் கொண்டாள் கோகிலா.
(தொடரும்...)

இதன் முந்தைய பகுதியை காண இங்கே சொடுக்கவும்.
பகுதி: 1