Tuesday, March 18, 2014

நீ ஒரு கணினிப்பெண்….



நிலா   நிலை குலைந்து ,நின்றது!
இந்நிலமாது   என்னொளியை, எங்கணம்?
தன்னொளியாய் தக்க வைத்து கொண்டாளென்று!!!!
நீள்வீச்சு கதிரவன், தன் நிம்மதியை,
நீண்ட பெருமூச்சொன்றில், தொலைத்தது.
தன் அந்திச் செம்மை எவ்வாறு?
தன்  நிலை  சிறிதும்  மாறாது,
தன்னிடம் எதுவும் கேளாது ,
தன்னை தவிக்க வைத்து விட்டு, இந்த
தளிர் மேனியிடம் அடகாய் போனதென்று!!!!
வானம் வியந்து போனது! தான்
வாரியிறைக்கும் வண்ண நிறங்களை,
வார்த்தைகளில்  அடங்காத, தன்
வர்ண ஜாலங்களை, வெகு விரைவில் , இவ்
வஞ்சிக்கொடி தன்வசப்படுத்தி கொண்டாளென்று!!!!
நட்சத்திரங்கள்  சற்றே நாணி கோணியது1
நானறியா  பொழுதினிலே, நகருமென்னை
நங்கை இவள்  சிறிதும் நலுங்காமல்,
காலங்காலமாய் கண் சிமிட்டி,மானிடரை
கவர்ந்திழுக்கும்  தன் ஜொலிப்பை,
கண்ணிமைக்கும் நேரத்தில், சிறிது
கண்ணயர்ந்த  வேளையிலே,
கவர்ந்து கொண்டது எப்படியென்று!!!!
 பெண்ணே ! இப்படி இயற்க்கையோடிணைத்து,
இயன்ற வரை உனை இகழாமல், இன்னும்
பூக்களுடனும் இணைத்து பாக்களாய்,
புகழ வைத்து, இறுமாப்புற செய்தும்,
புதுமைப்பெண்ணாய்,  நீ  புவனத்தில்,
புதுத்தோ் ஏறி புறப்பட இயலாமல்,
புதுமலராகவே, உதிர்ந்து நின்றது,
            அந்தக்காலம்!!!!
இன்று இமயம் தொட்ட குளிர்ச்சியில்,
இதயம் நிறைத்த மகிழ்ச்சியில்,
திக்கெட்டும் கொடி நாட்டி, வெற்றியுடன்,
திக் விஜயம் செய்து வருவது,
           இந்தக்காலம்!!!!
இன்  இயற்க்கை  எப்பொழுதும்,
இயற்க்கையாயிருக்கட்டும்!!!!
இயற்க்கையோடிணைக்கும் இனிய மதுவுக்கு,
வசப்படாத வண்டாக வளர்ந்து,
வானில் வட்டமிட்டு வருபவள்….. நீ…...
 படிப்பிலும், பணியிலும்,
பாரினில், சரிபாதியாக,
பரிமளித்து, பட்டங்கள் பல சுமந்து, புது
பரிதியாக பிரதிபலிப்பவள்……நீ…..
  கடமையையும், கருணையையும், இரு
கண்களாகக்  கருதி  வீட்டின்,
கண்மணி இவளென கருதும்,
கணிப்பை உருவாக்கியவள்…..நீ…..
துன்பங்களை, துச்சமாக்கி,
துயர்களை, துகள்களாக்கி,
தூரத்தள்ளி, வாழ்க்கையின்,
தூணாகி போனவள்……நீ…..
நாட்டுடன்,  நன்றாய் வீடும்,
நலங்கெடாது சிறப்பாய் வாழ,
நன்மைகள் பல புரிந்து, பாரதியின்,
நல்லதோர் வீணையானவள்…..நீ…….
காலத்தோடிணைந்த, கணணியில்,
காலம் நேரம்  பார்க்காமல், கவனமான
கருத்துடன்  காரியமாற்றி,
கணினிப்பெண்ணாக உலாவருபவள்……..நீ……
இனி இவ்வையத்தில்,வாழ்வாங்கு
வாழ்க நின் புகழ்,
வளர்க நின் பணி!.

Friday, March 14, 2014

தோழியின் சாதுர்யம்



ந்தி சாயும் முன்பே,
அந்தப்புரம் ஏகிவிடலாமென,
அந்தரங்க தோழியின், அதி
அற்புத யோஜனையில்,
புரம் விட்டு விலகி, அவள்
கரம்  பிடித்து  குலாவி,
தனித்துச்சென்று  வர,
தந்தையின் அனுமதி பெற்று,
புரவி ஏறி விரைந்து, விழிகண்ட
புதுப்புனலில்  நீராடி,
பச்சைப் பைங்கிளிகளாய் சுதி பாடி,
பழந்துகில்களை  களைந்து,
பட்டாடை தனை உடுத்தி,
பரவசித்து, வரும்வழியில்,
கற்த்தூண்  மண்டபமும்,
கண்கவர் சோலையழகும் கண்டு,
“இங்கு சற்று இளைப்பாறலாமா? “என
இன்பமுடன் வினவிய சேடிக்கு,
இமை அசைவால் இசைவு தர,அங்கிருந்த
தடாகக்கரை ஒரம் அமர்ந்து,
தலை கேசம் தனை உலர்த்தி,
தளர்வாய்  பின்னலிட்டு,
தலை கொள்ளா பூச்சூட்டி, என்னை
தழுவிக்கொண்ட தோழி!”என்
கண்ணான தலைவியே! தற்சமயம்,” தங்கள் மனம்
கவர்ந்த கள்வர் இங்கிருந்தால்,
என்னவளின் இணையற்ற அழகிற்க்கு,
என்ன விலை தருவதென்று,?
விளங்காமல், விக்கித்து,
வியந்திருப்பார்!” என்றவுடன்,
வெட்கிச் சிவந்த , என்
வதனத்தை  தொட்டணைத்து,
வருடியவள்,” ராஜகுமாரி! இந்த
மகிழ்வான நேரத்தில், தங்கள்
மனம் கவர்ந்த,மிக பிடித்தமான,
கண் கட்டி விளையாட்டை,
களிப்புடன் ஆடலாமா? என
விளம்ப , விரும்பி தலையசைக்குமுன்,
விசையாய் என் விழி கட்டி,
“உங்கள் ஆசைகள் நிறைவேறும்
உன்னதமான நேரமிது!...
தங்கள் தவிப்பகன்று, தனிமை மறையும்
தருணமிது!..”. என செவி ஓரம்
புதிரிட்டவள், என்னறிவில் சிறிது
புலப்படும் முன்னே!, என்னை
புறந்தள்ளி, என் புஜம் பற்றி,
புழுதி பறக்க சுற்றிச்சுழல விட்டு,
புள்ளி மானாய் துள்ளி மறைந்தாள்.

           குரல் வந்த திசை  நோக்கி, கை
விரல் நீட்டி தட்டு தடுமாறி,
பயனித்த  பாதையில்,
பாதம் வருடியது,  அப்பரந்த
சோலையின், வளமையான
செடிகளும், கொடிகளும்.
“ பூம் பாவை! எங்கிருக்கிறாயாடி?..”
பதட்டத்துடன்  குரல்  எழும்பி,
பரிதவித்து வந்தொலித்த மறுநொடி,
“பூம்பாவையை தேடும் பூங்கோதையே!.. இந்த
புது மலரின் வருகைக்கும்,
வருகை தரும் இனிய உறவுக்குமாய்,
வந்து காத்திருக்கும், இந்த
மன்னனையும்,  சற்று
மனம் கனிந்து திரும்பி பார்!”…
காற்றுடன் குரல் காதில் கலக்க,
கண்மூடிய திரைச்சீலையை,
கணநேரத்தில் கைப்பிரிக்க,
கண்எதிரே நின்ற கட்டிளம்
காதலனை கண்டதும், கன்னம் சிவக்க, மனம்
களிப்புற்றாலும், கலக்கமான குரலில்,
“நீங்கள் எங்கணமிங்கே?..
நீங்கள்  இவ்விடம் வந்தது,
பூம்பாவை அறியுமுன் நீவிர்
 புறப்பட்டு செல்வீராக!”..என
சொல்லி முடிக்கும் முன்
எள்ளி நகையாடினான்,, அந்த
எதிர் நாட்டு மன்னனவன்…
அருகில் வந்து கரம் பற்றி
அழைத்துச்சென்று மலர் மேடையில்
அமர வைத்தவன் , “தேவி! உனைக்காண
இந்நந்தவனத்து வண்டுகளுடன் ,ஒருவண்டாக
இந்நேரம் நான் சுற்றியதை  உன்
இனிய தோழியும் அறிவாள்! உன்
பூந்தோட்ட புறப்பாடு,உன் தோழி
பூம்பாவையின் ஏற்பாடு!
சந்தேகமெனின் உன் தோழியை
சடுதியில் அழைத்துவரவா?...”
பரிகாச பேச்சுக்களை,அவன் பலவாறு
பகிர்ந்து கொண்டிருந்தாலும், தோழியின்
சாதூா்யத்தை எண்ணி மனம் மட்டற்ற
சந்தோஸமடைந்திருந்தது….
“வரட்டும் ! அவள் !,கள்ளி, பேசிக்கொள்கிறேன்!”
வாய்க்குள் கறுவிக்கொண்டாலும்,தற்சமயம்
வந்து விடாமலிருக்க, மனம் கணநேரமும்
விடாது வேண்டிக்கொண்டிருந்தது!……….