கதையின் 6 ஆவது (நிறைவு) பகுதி...
வந்தும், வராது ஏமாற்றிக் கொண்டிருந்த மழை அன்று காற்றையும் துணைக்கழைத்துக்கொண்டு இரவின் நடு ஜாமம் வரை தன் மனம் போனபடி கடுமையாக பெய்த சந்தோஷத்துடன் சற்று ஓய்ந்தது. மழை விட்டும், தூறல் விடாத, புலர்ந்தும், புலராத அந்த அதிகாலை பொழுதில், என்னைச் சுற்றி, ஒரு சிறு கூட்டம் கூடியிருந்தது... "நல்லவேளை,.. . அவர் வீட்டின் மேல் விழுந்து அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல், சாலையில் வந்து விழுந்ததே.... .! எத்தனையோ முறை இதை வெட்டுமாறு நாம் அவருக்கு எடுத்துச் சொல்லியும் அவர் இதன் மேல் வைத்திருந்த அன்பு காரணமாக மறுத்து வந்ததற்கு பிரதிபலனாக, இது அவரை காப்பாற்றி விட்டது.. "என்று என்னை புகழ்ந்தும், எனக்கு பாராட்டுரைகள் கூறி கொண்டும் இருந்தார்கள்.
இரவில் அடித்த காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் என் உயிரை கையில் பிடித்துக்கொண்டு, எல்லோரும் கூறியுள்ளபடி, அவர் வீட்டின் மேல் சாய்ந்து விழாமலிருக்க, ஒவ்வொரு நொடியும், இறைவனை வேண்டிக் கொண்டு, மரண அவஸ்தையுடன் ...... மரமாகிய நான்..... பட்ட வேதனை, காலையில் கண் விழித்ததும், சாலையின் குறுக்கே, நான், விழுந்து கிடந்ததை கண்டு களிக்கும், இவர்களுக்கெங்கே புரிய போகிறது. எப்படியோ.... எனக்கு உயிரை தந்து வளர்த்தவருக்கு, கெடுதல் விளைவிக்காமல் இம்மண்ணுலகை விட்டு மறைவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வேரோடு நான் விழுந்து விட்டாலும், எனது ஆணிவேரும் மண்ணும் சற்று உறவாடி கொண்டிருந்ததால், எனது உணர்வுகள் முழுவதும், அற்று போகாத அந்த நிலையில் என் உள்ளம் அவரைத் தேடியது. "எங்கே அவர். .? அவருக்கு உடம்பு பூரண குணமாகி நலமுடன் இருக்கிறாரா. . .? என்னைச் சுற்றி இத்தனை பேர்கள் இருந்தும் அவரைக் காணவில்லையே...? என்னவாயிற்று அவருக்கு... சத்தம் கேட்டு இதற்குள் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்திருப்பாரே. .. . இன்னமுமா உறங்கி கொண்டிருக்கிறார்??? என் உணர்வுகள் முழுவதும் செத்துப்போவதற்குள் அவரை கடைசியாக ஒருமுறை பார்த்து விடலாமே.... ... "என்று நான் அங்கலாய்த்தபடி மனம் தவித்த போது, அவர் வீட்டு வாசலில் நின்றிருந்த சுசீலாவின், ஓ.... வென்ற அலறலில், என்னை சுற்றியிருந்த அத்தனைக்் கூட்டமும் அவர் வீட்டுக்கு ஒடியது. "ஐயோ!!! என்னவாயிற்று அவருக்கு.... தெரியவில்லையே..?" என்று உள்ளம் கீழே விழுந்து கிடந்த அந்த நிலையில் கூட பதறியது.
சாலையின் குறுக்கே நிகழ்ந்த என் சாவு வாகனங்களின் பாதைக்கு இடைஞ்சலாக இருப்பதால், மதியம் வேருடன் உறவாடியபடி மடிந்தும், மடியாமலும், கிடக்கும் என் உடலை வெட்டி அப்புறப்படுத்த கையில் கோடாரியுடனும், இதர ஆயதங்களுடனும் நான்கைந்து பேர்கள் என்னிடம் நெருங்கினார்கள். அவர்கள் பேசிய விஷயங்கள், அவரகள் கையிலிருந்த கோடாரியை விட பலமாக என்னுள் இறங்கின........
இரவு பெய்த பேய் மழையிலும், அவரை சந்தித்து அவர் உடல் நலத்தை பற்றி விசாரித்து அவருக்கு உணவு கொடுத்துச் சென்ற குமாரிடம்,,,, "தனக்கு இப்போது பரவாயில்லை. .. மிகவும் களைப்பாக மட்டும் இருக்கிறது. நன்கு உறங்கி எழுந்தால் நாளை காலை சரியாகிவிடும்....." என்று ௬றி அனுப்பியிருக்கிறார் சதாசிவம். இந்நிலையில் காலையில் வீட்டின் முன் இத்தனை அமர்களமாயிருந்தும் அவர் எழுந்து வராத நிலை கண்டு அவரை எழுப்பி விஷயத்தை சொல்லாமென்று, சுசீலா அவர் வீட்டு கதவை நீண்ட நேரம் தட்டியும் அவர் திறக்காமல் போகவே, அவர் படுத்திருந்த அறை ஜன்னல் வழியே அவரை பார்த்து விட்டு, அவரது நிலை கண்டு சந்தேகித்து.... ஓ... வென்று கத்தியிருக்கிறாள்.
வீட்டின் உட்பக்கம் பூட்டியிருந்ததால், கதவு உடைத்துக்கொண்டு அனைவரும் சென்று பார்த்ததில், அவர் உயிர் இரவு உறக்கத்திலேயே பிரிந்திருந்தது... நேற்று வரை நல்லாயிருந்த மனிதர் இப்படி திடீரென்று போய் விட்டாரே...! எத்தனை நல்ல மனிதர்.....ஒருவரிடமும் கோபபடாமல், அனைவரிடமும் அன்பாக பழகி, அனைவருக்கும் தன்னால் முடிந்தளவு உதவி செய்து வாழ்ந்தவர்....
"இந்த மாதிரி மனிதர்களை பார்ப்பதே கஸ்டந்தான்... !!!! நல்லவர்களுக்குத்தான் இந்த மாதிரி நல்ல சாவு கிடைக்கிறது.. ஆனால் நமக்குத்தான் மனசு தாங்கவில்லை.... ரொம்ப கஸ்டமாயிருக்கு...! அவர் பையனுக்கும் உறவுகாரங்களுக்கும் தகவல் தந்திருக்கிருக்கிறார்கள். இன்று இரவுக்குள் அவர்கள் வந்து விட்டால், நாளை காலை அவர் கிளம்பி விடுவார். அதற்குள் இந்த மரத்தை வெட்டி அப்புறபடுத்தி விட்டால் நல்லது...."
பெருமூச்சு விட்டவாறு கனத்த இதயத்துடன் கண்ணீர் மல்க அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்..
அவர்கள் பேசப்பேச என் இதயம் சுக்கு நூறாக வெடிப்பதை நான் உணர்ந்தேன்...." ஐயோ!!! இரவெல்லாம் மழை, காற்றுடன் நடந்த பெரும் யுத்தத்தில் நான் ஜெயித்து விட்டேன் என்று இறுமாந்து போயிருந்தேனே....! ஆனால் என்னுடன் போட்டியிட்டு கொண்டு அந்த எமனும் ஜெயித்து விட்டானே..... .! அவரை உயிருடன் கடைசியாக அருகில் நேற்று பார்த்தது நினைவுக்கு வந்தது.. அவர் மனதின் வேதனைகளை மனதோடு கேட்கும் ஒரு அனுபவம் கிடைத்தது...... அதுவே போதுமென்று அவரையும் என்னையும் ஒருசேர பிரித்து வி்ட்டாயா இறைவா!!! ஏன் இப்படி செய்து விட்டாய்???" என் உடம்பில் பட்ட வேதனையையும், படும் வேதனையையும், பொருட்படுத்தாமல் மனம் பரிதவித்தது. "கடவுளே!!! இனி எனக்கும் ஒரு பிறவி என்று ஒன்று இருந்தால் அவருடன் சேர்ந்து வாழ மீண்டும் ஒரு மரமாகவே பிறந்து அவருடன் இணை பிரியாமல் இருக்கும்படி செய்வாயா??? என்று வேண்டிக் கொண்டிருந்த போது என் உணரவுகளும் கொஞ்சகொஞ்சமாக மங்க தொடங்கின...
மறுநாள்.... நானும், அவரும்.... இந்த பிறவியில் வெவ்வேறு ஊர்திகளாயினும் ஒரு சேர பயணமாவோம் என்று நினைத்த போது அத்தனை வருத்தத்திலும், இனம்புரியாத ஒரு துளி ஆனந்தம் உதயமானது.
"நானும், அவரும்" என்ற இக்கதை நிறைவுற்றது.
நடிகர் திரு. விவேக் அவர்களின் தீடீர் மறைவு கொஞ்சம் அனைவரையுமே உலுக்கி விட்டது. நல்ல நடிகர். அந்தந்த நகைச்சுவை பேச்சுக்களுக்கு தன் முக பாவங்களில், நடிப்பை தந்து பேசி சிரிப்பை வரவழைத்தது மட்டுமின்றி, பகுத்தறிவு விஷயங்களில் சிந்திக்கவும் வைத்தவர். அவருடன் நடித்த நகைச்சுவை நடிகர்களை தன்னால் இயன்றவரை மிளிர வைத்தவர். அவர் பசுமை திட்டமான மரம் வளர்ப்பில் மரங்களை நேசித்ததும், அவர் நம் மனதில் நிலையாக நின்றிருக்க ஒரு காரணம்.
நடிகர் திரு விவேக் அவர்களின் மறைவு செய்தி ஏனோ முன்பு எழுதிய இக்கதையை எனக்கு நினைவுபடுத்தி மீண்டும் பதியச் செய்தது. நல்லதொரு கலைஞர்... மரங்களின் நேசர்...இயற்கையின் அபிமானம் பெற்றவர்.. என்றெல்லாம் எண்ணியதாலோ என்னவோ.... 🙏.
அன்றே கதையை பகுதியாக பிரித்து வெளியிட நினைத்தேன். இயலவில்லை. நாம் நினைப்பது ஒன்றாயினும், இறைவன் தான் நினைப்பதைதானே இறுதியில். நடத்தி வைக்கிறான்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.... 🙏...
இக்கதையை அப்போது ரசித்துப் படித்து நல்லதொரு விமர்சனம தந்து எனக்கு மென் மேலும் எழுத ஊக்கமும் உற்சாகமும் தந்தோடு மட்டுமின்றி, உடன் வந்த அவரது வலைச்சர ஆசிரியர் அறிமுகத்தில் என்னையும் என் எழுத்தையும் சிலாகித்து எழுதி, அங்கும் இந்தக் கதையை பிரகடனப்படுத்தி என்னை கெளரவித்தவர் சகோதரர் திரு. கில்லர்ஜி அவர்கள்தான். நன்றி. நன்றி கில்லர்ஜி சகோதரரே. . 🙏..
இந்தக் கதையை இப்போது படித்து கருத்துக்கள் தந்த சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். 🙏.