Showing posts with label குணங்கள். Show all posts
Showing posts with label குணங்கள். Show all posts

Sunday, April 5, 2015

நற்குணங்கள் பகுதி 2...

மனித மனங்கள் என்னைப்பொறுத்தவரை (என்னையும் சேர்த்துதான் சொல்கின்றேன்.) சற்றே விசித்திரமானது. விலங்குகளுக்கு தந்த ஐந்தறிவை விட, ஆறறிவாக “பகுத்தறிவு” என்ற பெயருடன் இறைவன் நமக்கு தந்தால், நம்மல் எத்தனை பேர் இந்த ஆறாம் அறிவை முறையாக பயன்படுத்துகிறோம்.? பேசுவதற்கும், யோசிப்பதற்கும் எதையும் ஆராய்ந்து முடிவு எடுப்பதற்கும், பயன்படும் இந்த ஆறாம் அறிவால், நம்முடன் வாழும் பிற மனித மனதினை புண்படுத்தாமல், இதமாக பேசிப்பழகி, உதவியாக உடன் நின்று சுமைகளை தோள் சுமந்து, அன்பாக அரவணைத்து, “உனக்கு எப்போதும் நானிருக்கிறேன்” என்பதை வருத்தம் வாராது சுட்டிக்காட்டி, ஒரு கலங்கரை விளக்காய், படகுக்கு உதவும் துடுப்பாய், நிழல் கொடுக்கும் மரமாய், நிம்மதி தரும் உறவாய் எத்தனை பேர் உலகில் உலாவி வருகிறோம்.?

எதிலும் எந்த ஒரு விஷயத்திலும், போட்டி, பொறாமை, பிறருக்கு கஷ்டம் வந்தால் அதைப்பார்த்து வெளிக்காட்டாவிடினும், மனதின் ஓரத்தில் ரசித்து அனுபவிக்கும் ஈவு இரக்கமற்றத்தன்மை, எதையும் தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும். யார் எப்படி போனால் என்ன? என்ற தர்மம் மறந்த சுயநலமனப்பான்மை, எதையும் தன் நன்மைக்காக மட்டும் சாதித்துக்கொள்ளும் (அதனால் மற்றவர்கள் மனது எப்படி புண்பட்டாலும் சரி! நமக்கென்ன?) பிடிவாத குணம், பழி வாங்கும் ரோசத்தினால் ஏற்படும் அன்பை மறந்த வன்மகுணம், பிறரை எதற்கெடுத்தாலும் மட்டம் தட்டி தன் செய்கையும் பேச்சுமே சிறந்தது என தலைகர்வம் கொள்ளும் குணம், இவ்விதமான குணங்கள் தாம் சற்று நம்மிடையே மேலோங்கி இருக்கிறது என்பது என் அனுபவ அபிப்பிராயம். (இக்குணங்களைப்பற்றி தெரியாதவர்கள், அறியாதவர்கள் இவ்விதமான குணங்கள் முற்றிலும் இல்லாதவர்களை, என் எழுத்துக்கள் காயப்படுத்துகிற மாதிரி இருந்தால், இப்படி எழுதியமைக்கு என்னை மன்னிப்பீர்களாக.!)

ஆனால் இத்தகைய குணங்களின் மொத்த உருவாக இருக்கும் மனித உயிர்கள், சில பல சமயங்களில் மற்றவர்களுக்காக தத்தம் குணங்களை தளர்த்திக்கொண்டு, சிறிதாவது பிறருக்கும், தன்னை சார்ந்தவர்கும், “விட்டுக்கொடுக்கும்” பண்பினை உண்டாக்கிக்கொண்டு, அன்பினை உணவாக்கி, பரிவையும், பாசத்தையும் நிழலாக்கித்தந்து, மற்றவர்களை ஆரோக்கிய பாதையில் அழைத்துச் சென்றால், அந்த இடம் ஆயிரத்திற்கும் மேலாக ஒருசேர வளர்ந்து நிற்கும் மரங்களுக்கு நடுவே கிடைக்கும் குளிர்ச்சியையும், சுகமான சுகந்தம் வீசும் சூழலையும் தருமே.! யோசிப்போமா?

ஒரு கதை...

இதில் தான் நினைத்ததை கெடுதலுக்காக சாதித்து காட்டும் பிடிவாத குணமுடைய ஒரு பெண்ணைப்பற்றிய கதை.. எப்போதோ படித்தது! (இப்போதும் அடிக்கடி படித்துக் கொண்டிருப்பது...) “ஸ்ரீராம கிருஷ்ண மட வெளியீடாக” என் மகனின் பள்ளிப் பருவத்தில் பரிசாக வந்த புத்தகத்தில் படித்தது. சில கதைகள் படித்ததுமே மனதின் அடிஆழத்தில் சென்று நிரந்தரமாகி வேரூன்றி விடும். அப்படிபட்ட ஒருகதை இது… பொதுவாக ஒரு கதை மனதில் படியும் சமயம், இந்தக் கதை மாந்தர்கள் மாதிரி கெட்டவர்களாக நாம் இருக்கக்௬டாது.! இல்லை அந்த கதையில் வரும் நல்லவர்கள் மாதிரி நாமும் வாழ்ந்து வாழ்க்கையை முடிக்க வேண்டும்.! இந்த மாதிரி நல்ல எண்ணங்கள்தாம் கதையின் பாதிப்பாக வந்து நம்மிடையே ஒட்டிக் கொள்ளும். அதனால்தான் நல்ல விசயங்கள் ௬றும் கதைகளையே பெரும்பாலும் தேர்ந்தெடுப்போம். இதை ஏற்கனவே நீங்களும் படித்து இருக்கலாம். எனினும் என் பதிவிலும் படிப்பதற்கு என் பணிவான நன்றிகள்…

முன்னொரு காலத்தில் “கரவீரபுரம்” என்ற ஊர் ஸஹ்யாசலம் என்ற மலையடிவாரத்தில் இருந்தது.. அவ்வூரில் உத்தம குணங்கள் நிறைந்த தர்மதத்தர் என்பவர் அவரது வழக்கப்படி கார்த்திகை மாத ஏகாதசியன்று முறைப்படி பெருமாளை வழிபட்டு வந்தார். அன்றும் இரவு முழுவதும் கண் விழித்து உபவாசத்துடன் விரதமிருந்து கடைசி ஜாமத்தில் இறைவனை பூஜித்து தொழுவதற்காக பூஜை சாமான்களை சேகரித்தபடி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். சென்ற வழியில் பயங்கர சப்தமிட்டபடி ஒரு அரக்கி தன் எதிரில் ஒடி வருவதை கண்டவுடன், ஏற்கனவே பட்டினியுடன் தளர்ந்திருந்த அவரது உடல் பயத்தினால் மேலும் தளர, இறைவனின் நாமத்தை இடையறாது அவரது வாய் உச்சரித்து கொண்டிருந்தாலும், தப்பித்துக் கொள்ளும் நோக்கம் யதேச்சையாக அவர் சிந்தையில் எழவும், பூஜைத் தட்டை அந்த அரக்கியின் மேல் விட்டெறிந்தார்.

சிறந்த பக்தியுடனும், முறைப்படி பெருமாளை பூஜித்து வருபருமான பக்தரின் கையால் தன்மேல் விழப்பட்ட பூஜா பொருள்களினால் (துளசிதளம், தீர்த்தம்) அந்த அரக்கிக்கு பழவினைகள் அகன்று பூர்வ ஜன்ம நினைவுகள் வந்தன. உடனே அவள் தர்மதத்தரின் காலில் விழுந்து வணங்கி, “தன் பூர்வஜன்ம வினையால் தான் அரக்கியாக உலாவி வருவதாகவும், சிறந்த பக்தராகிய தங்கள்தான் தன்னை நல்ல நிலையடைய ஒரு வழி செய்திட முடியுமென்று பணிவுடன் வேண்டிக் கேட்டுக்கொண்டாள்.” இரக்க குணம் மிகுந்த தர்ம தத்தரும், “உன் பூர்வஜன்ம கதையை ௬று. பகவான் அருளினால் நானும் ஏதாவது உதவி செய்ய முடிந்தால் செய்து உன் பாபத்தை போக்குகிறேன்.” எனவும் அரக்கி தன் முந்தைய வரலாற்றை உரைக்கலுற்றாள்..

செளராஷ்டிர நகரில் பிக்ஷு என்ற பெயருள்ளவருக்கு மனைவியாக கலகா என்பவள் வாழ்ந்து வந்தாள். அவள் பெயரைப்போலவே, அவள் குணங்களும், செய்கைகளும் அமையப் பெற்றிருந்தன. அவள் தன் கணவனை ஒருபோதும் மதித்ததே கிடையாது. அவர் ஏதாவது நல்லதை செய்யச் சொன்னால், அதை பொருட்படுத்தாமலும், தீங்கானவற்றை சுட்டிக்காட்டி “அதை செய்யாதே” என்றால், அதை முன்னின்று முதலில் செய்வதுமாக, அவர் மனதை தன் செய்கைகளினால் துன்புறுத்தி வந்தாள். அவருக்கு அவள் போக்கு தர்ம சங்கடமாயிருந்ததால், கவலையடையந்த மனமுடையவராய் வாழ்ந்து வந்தார். தன் கணவன் சொன்னபடி அவருக்கு பிடித்தமான சமையலை செய்தாலும், வெளியில் சென்ற அவர் திரும்பி வருவதற்குள் அவருக்கு பிடித்தனவற்றையெல்லாம் தான் உண்டு விட்டு மிச்சம் மீதி இருக்கும் உணவுகளை அதுவும் அவருக்கு பிடிக்காத உணவுகளைத்தான் அவருக்கு பரிமாறுவாள்.. இவ்வித குணமுடையவளை மணந்த பாவத்துடன் செய்வதறியாமல் காலந்தள்ளி வந்தார் பிக்ஷு.

ஓருநாள் தூரத்திலுள்ள தன் நண்பனின் வருகையை ஒட்டி, அவனுக்கு விருந்துடன் உணவு பரிமாற ஆசை கொண்டார் பிக்ஷு. ஆனால் மனைவியிடம் அவனுக்கு சமையல் செய்யச் சொன்னால், அவள் அன்று அடுப்படிக்கே போக மாட்டாள். என்ன செய்வது? என்று யோசித்த போது அவருக்கு ஒரு யோசனை வந்தது. தன் மனைவியை அழைத்தவர், “இதோ பார் கலகா! இன்று என் நண்பன் வெகு தொலைவிலிருந்து வரவிருக்கிறான். அவன் ஒரு சாப்பாட்டு பிரியன். இங்கு வந்து நல்ல சாப்பாடாக கேட்பான். அதனால் நீ இன்று அடுப்பே மூட்டாதே! அவனுக்காக நீ எதையும் பண்ண வேண்டாம்..!” என்றதும், கலகா விழுந்தடித்துக்கொண்டு நல்ல சமையலாக தேர்ந்தெடுத்து நல்லவிதமாக பண்டங்கள் தயாரித்து பரிமாறி, வந்த நண்பனை நன்றாக கவனித்து அனுப்பி வைத்தாள். எப்படியோ தன் ஆசை நிறைவேறியதே! என்று மனசுக்குள் சந்தோஷப் பட்டுக்கொண்டார் பிக்ஷு.

இதே மாதிரி தான் செய்ய வேண்டுமென விருப்பப் பட்ட செய்கைகளை நேர் மாறாகச்சொல்லியே ஒரளவு சமாளித்து வந்தார். தன் தந்தையின் திவசத்தையும் தான் செய்யப் போவதில்லை என்று சொல்லி, கடைசியில் அவளுக்காக வேண்டா வெறுப்புடன் பண்ணுவதாக ஒரு பிரமையை உண்டாக்கி தந்தையின் திவச காரியங்களை நிறைவேற்றிக் கொண்டார். ஆனால் இப்படி எத்தனை காலந்தான் சாமளித்து வருவது?

திருந்துபவர்களை எதையாவது இப்படிச்செய்து நல்ல பழக்கத்துக்கு ஆட்பட செய்து திருத்த முற்சிக்கலாம். திருந்தாத பிறவிகளை எப்படி திருத்துவது? இவ்வாறே நேருக்கு மாறாக எத்தனை காலந்தான் சொல்லி வருவது? தப்பி தவறி எதையாவது மாற்றச் சொல்லி விட்டால், முதலிலிருந்தே கோணலாகி விடும் செய்கைகளை எப்படித் திருத்துவது? அப்படியும் அவள் திருந்தின மாதிரி ஒருநாளாவது தெரியவில்லை.! நாளடைவில் அவருக்கும் வாழ்க்கை வெறுக்கவே. உறவும் ஊரும் நிர்பந்திக்க, அவளுக்குத் தெரியாமல், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தன் வாழ்க்கையை தொடங்கினார்.

தன் கணவன் தனக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது கலகாவுக்கு தெரிந்ததும், வழக்கத்திற்கு மாறாக எந்த ஆர்பாட்டமும் செய்யாது, தன்னுயிரை தானே போக்கிக் கொண்டாள். யமதூதர்கள் வந்து அவள் உயிரை மீட்டு யமதர்ம ராஜனின் முன் நிறுத்தினர். யமதர்மன் அந்த உயிரின் பாவ புண்ணியங்களை அருகிலிருந்த சித்ர குப்தனிடம் கேட்க, அவளின் பாப கதை கேட்ட யமதர்மன் பைசாச உருவில் நிறைய காலங்கள் பூலோகத்தில் அலைய விட ஆணைப் பிறப்பித்தான். அவ்விதமாக மூன்று உடலில் புகுந்த பின்னும் நற்கதி அடைய முடியாமல், அலைந்து கொண்டிருக்கும் போதுதான், மேற்௬றிய தர்மதத்தரை தான் சந்தித்ததாக தன் கதையைக் ௬றி முடித்தாள் அந்த அரக்கி உருவிலிருந்த கலகா.

தர்மதத்தர் அவள் கதை கேட்டு அவள்மீது இரக்கம் கொண்டார். தன் வாழ்நாளில் இதுவரை ஏற்று செய்து கொண்டிருக்கும், கார்த்திகை மாத ஏகாதசி விரதப்பலனில் பாதி புண்ணியத்தை அவளுக்கு அளித்தால், அவளின் அரக்க வடிவம் நீங்கப்பெற்று, அவள் புண்ணியலோகம் செல்வாள் என நிச்சயமாக நம்பி, ஸ்ரீமன் நாரயணனின் திருமந்திரத்தை மனமுருகி உச்சரித்து அவளின் பாபம் களைய எம்பெருமானை வேண்டவும் அங்கு ஒர் அதிசயம் நிகழ்ந்தது. கோர வடிவத்திலிருந்த கலகா தன் பாபங்கள் நீங்கப்பெற்று அழகிய மங்கையாக காட்சித்தர அவளை புண்ணிய லோகத்திற்கு அழைத்துச் செல்ல பகவான் விஷ்ணுவின் தூதர்கள் புஷ்பக விமானத்தில் எழுந்தருளினார்கள்.

அவர்களை கண்டவுடன் பணிந்த தர்மதத்தரை நோக்கி, “தர்மதத்தரே! உங்களின் செயல் அற்புதமானது. முன் பின் தெரியாத இவளுக்காக உங்கள் புண்ணியத்தில் பாதியை தானமாக்கிய உமது செயலால் இவள் பாபங்கள் களையப்பெற்று விஷ்ணு லோகத்தில் இவள் ஆயுள் முடியும் வரை தங்கியிருப்பாள்.. அப்போது நீங்கள் தானமளித்த புண்ணியம் பலமடங்கு பெருகி தங்களை வந்தடையும். அதன் பலனால், தாங்களும், தங்களின் இரு மனைவியரும் இப்பூலோக வாழ்க்கை முடிந்ததும், புண்ணிய லோகம் வந்து சில காலம் வசித்தப்பின், அடுத்த பிறவியாக அயோத்தியை ஆளும் மன்னனாக “தசரதன்” என்னும் பெயருடன், பிறப்பீர்கள். தங்களின் இரு மனைவியரும், அந்தப் பிறவியிலும் தங்கள் மனைவியராக, “கோசலை, சுமித்திரை” என்ற பெயருடன் தங்களுடன் வாழ்வார்கள். இந்தப் பிறவியில் தங்கள் புண்ணியத்தைப் பெற்ற காரணத்திற்காக இந்தப் பெண்ணும், தங்களின் மனைவியாக “கைகேயி” என்ற பெயருடன் தங்களை மணம் புரிவாள். அந்தப் பிறவியில் தங்களுக்கு மகனாக பகவான் ஸ்ரீமன் நாராயணனே, வந்து அவதரிப்பார்.” என்ற விபரங்கள் ௬றிய தூதர்கள் பாபங்கள் நீங்கிய அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு விஷ்ணுலோகம் ஏகினர்.

புண்ணியங்கள் ஏகமாய் பெற்றாலும், அந்த “அரக்க” மனம் சிறிதளவு அவளிடம் ஒட்டியிருந்ததால் தான், அரச வம்சத்தில் பிறந்து செளபாக்கிய வாழ்வை பெற்றும் “கைகேயி” ராமரின் வனவாசத்திற்கு ஆதாரமாயிருந்து, தன் மணவாழ்வு முடிவதற்கும் காரணமாயிருந்தாளோ, என்னவோ என்பதாக கதை முடிகிறது…

ஆக, அத்தனைப் புண்ணியம் பெற்றவளுக்கும், அடுத்தடுத்த பிறவிகளுடன் பிறவி வாசம் தொடரும் போது, நம்பாடு எப்படியோ? நாம் வாழும் நம் உயிர்களுக்குள் எத்தனை “கலகாக்கள்” இடம் பெற்று தன் குணங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனவோ? ஆனால் அந்த மாதிரி புண்ணியம் நமக்கு ஒருபோதும் கிடைக்க வாய்ப்பில்லை.. நம் குணங்களை மாற்றியமைத்து வாழவேண்டுமென நான் முதலில் எழுதியது போல் நினைத்தாலும், “முழுதாக” மாற இன்னும் எத்தனைப் பிறவிகளோ.? இந்தக்கதையும் “பிடித்(வா)தமாக” என் மனதில் பதிந்ததால் படித்ததில் ((பிடிவாதமாக) பிடித்ததாக பதிவில் பதிந்து விட்டேன். படித்தமைக்கு நன்றி…

(நீதான் அந்த கலகாவின் அடுத்தடுத்த பிறவியோ? என்று நீங்கள் மனதுக்குள், எனக்கு கேட்காமல் முணுமுணுத்தாலும், எனக்கு தெளிவாக கேட்கிறது…)

நன்றி.. ஸ்ரீராம கிருஷ்ண மடத்திற்கும்.. இக்கதையை எழுதிய “சரஸ்வதி” என்ற எழுத்தாளருக்கும்…

Friday, November 7, 2014

நற்குணங்கள் ...... (1) பொறுமை

ஒவ்வொரு மனிதனும் பிறந்ததிலிருந்து தன் “பிறவி சுபாவம்” என்ற குணங்களின் அடிப்படையில்தான் வளர்ந்து வாழ்ந்து வருகிறான். அவனின் குறை, நிறைகளை, பிறர் சொல்லும்போது, தாய் தந்தை மற்றும் நெருங்கிய உறவுகளின் சுபாவங்களை சுட்டிக்காட்டி “அப்பாவை போலவே இருக்கிறான்.! என்றும், இல்லையில்லை.! இவன்  அம்மாவின் குணம் அப்படியே வந்திருக்கிறது! என்றும், இல்லை, நான் பார்த்த வரை அவன் மாமா போலவே நடை உடை பாவனை என்றும், அவரவர்களுக்கு மனதில் எது தோன்றுகிறதோ, அதன்படி ௬றுவார்களே அன்றி அவனுக்கென்று தனித்திருக்கும் மற்ற சுபாவத்தை மறந்து (மறைத்து) விடுவார்கள்.! (அவனுக்கும் சுத்தமாக மறக்கடித்து விடுவார்கள்.)

இது இப்படியிருக்க, மனிதனுக்கே இருக்க வேண்டிய குணங்களாகிய பொறுமை, நிதானம், தர்மம், (ஈகை) இன்சொல் பகருதல், ஒழுக்கம் போன்ற இத்யாதி நல்ல குணங்கள், தோன்ற காரணமாயிருப்பவை, இந்த கோபம், பொறாமை, ஆத்திரம், வன்சொல் ௬றுதல், பகையுணர்ச்சி, போன்றவைதான்.! ஆமாம்! இதையெல்லாம் ஒரு மனிதன் என்று, தலைமுழுகி தீக்கிரையாக்கி, துகள்களை, மனதில் ஓடும் சிந்தனை என்னும் புண்ணிய நதியில் கரைத்து விடுகிறானோ..! அன்று, அவன் மனதில் மேற்க்௬றிய நல்ல குணங்கள் துளிர்த்து தளைத்து, வளர்ந்து, விருட்சமாகி, நிலைத்து தங்கி விடும்தானே..! ஆக எப்போதும் இருக்க வேண்டிய நல்ல குணங்களுக்காக, தானாக வந்த அத்தீய குணங்களை அழிக்க வேண்டியது சரியான தீர்ப்புதானே..! (யார்ரா அது! தீர்ப்பையெல்லாம், மாத்தி போடறது..!) சத்தமாக ஒரு குரல் ஒலிக்க, ((ஐயோ.!மூக்கை கொஞ்சம் சுற்றி தொட்டு விட்டேனோ..?) என்று உள் மனசு பதற (சரி! சரி! எப்படியோ! சொல்ல வந்த கருத்தை கொஞ்சம் வளர்த்து விட்டாலும் புரிந்தால் சரிதான்.!) என்று என் மனசு உள் மனசையும், குரலையும் பொய்யாக சமாதானபடுத்தியது.!)

முதலில், இந்த பொறுமை என்ற குணமே மிகவும் சிறந்ததாகும்.! (ஆமாம்! எழுதும் உனக்கும், அதைவிட படிக்கும் எங்களுக்கும் இல்லாத சிறப்பா, அதற்கு வந்துவிடப் போகிறது..? என்ற லேசான, இல்லை, இல்லை சற்று பலமான முணுமுணுப்பு கேட்கிறது..!) சரி! சரி! விஷயத்துக்கு வருவோம்.! “பொறுத்தாள்வார் பூமியாள்வார்”! என்றும் “பொறுமை கடலினும் பெரிது..” என்றும்  பொறுமைக்கு சில உதாரணங்கள் சொல்வார்கள்.! பொறுமைக்கும் பூமிக்கும் அப்படி என்ன சம்பந்தம் என்றால், பூமித்தாய் மிகவும் பொறுமையுடன் இருப்பதால்தான், பொறுமையின்றி (சமயத்தில் பொறுப்புமின்றியும்) இருக்கும் நம் மனித பிறவிகளை, தினமும் தூக்கி சுமந்தபடி இருக்கிறாள்.! அந்த குணம் இப்பூமியில் அவள் குழந்தைகளாய் பிறந்து, எதையாவது சாதித்து அவளை பெருமைபடுத்த உலவும், நம்மிடமும் அவசியம் இருக்க வேண்டியது அத்தியவசியமான ஒன்றல்லவா…?

அந்தக்கால மன்னர்கள், முனிவர்கள், பெரியோர் சான்றோர், பெண்கள் என எத்தனையோ பேர் “பொறுமைக்கு” முதலிடம் கொடுத்திருப்பதை படித்திருக்கிறோம்..! கஜனிமுகமது நம் நாட்டை அடைய எத்தனையோ முறை படையெடுத்தும், தோல்விகளை அடுக்கடுக்காய் சந்தித்தும், “பொறுமையாக” மீண்டும் மீண்டும் தன் படையெடுப்பை தொடரவில்லையா..? “பொறுமைக்கும்” ‘பொறுமையால்” கிடைத்த சாதனைகளுக்கும் இன்னும் ஏராளமான உதாரணங்கள் உள்ளது..! (எனக்குத்தான் மேலும் விஸ்தாரமாய் சொல்ல இப்ப கொஞ்சம் பொறுமையில்லை..! மன்னிக்கவும்..)
 
பெண்களுக்கு இக்குணம் சற்று இயல்பாக அமைந்து விடுமென்று  (அப்படி அமைந்து விடவேண்டுமென்று பண்டைய காலத்திலிருந்தே, வலியுறுத்தியும் வறுப்புறுத்தியும் பழக்கப்பட்டும் இருக்கலாம்..!) நினைக்கிறேன்.! ஏனென்றால் சுமப்பது “பூமித்தாய்” அல்லவா..? (“தாய்” என்பது பெண் பால்தானே..) ஆண்களுக்கு இக்குணம் அநேகமாக,  (இருங்கள்! இருங்கள்..!சொல்ல வருவதை முழுவதுமாக கேட்காமல் “பொறுமையிழந்து” கையில் கிடைப்பதை எடுத்து விடாதீர்கள்..!) சிலரை தவிர்த்து இருந்து கொண்டுதான் இருக்கிறது..! இப்போது இருக்கும் கால கட்டத்தில், “பெண்களை விட எங்களுக்குதான் பொறுமை நிறைய இருக்கறது..!” என்று ஆண்கள் பொங்குவது ( பொருமுவது ) புரிகிறது..! பொறுமையுள்ளவர்தானே, (அது ஆணாகினும், பெண்ணாகினும்) எதையும் சாதிக்க முடியும்..! இன்றைய மாறி வரும் உலகச்சூழலில்,   “வாழ்க்கை”யெனும் கடலில், “ஒருநாள்” என்னும் படகில் பயணிக்கவே “பொறுமை” எனும் துடுப்பை மிகவும் பலமுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.!. ஆக “பொறுமை” என்பது நம் அனைவருக்கும் (ஆண், பெண் பாகுபாடின்றி ) சமம் எனப்புரிந்து கொண்டு, நாம் வளர்த்துக்கொள்ளும் குணங்களில் ஒன்றென உணர்ந்து கொண்டு, “இனி எதற்கும் பொறுமையுடன் இருப்போம்”! என்று உறுதி எடுத்துக்கொண்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்..!


ஒரு கதை..! (பழைய கதைதான்..! என் செளகரியத்திற்கு சற்று கற்பனையை கலந்துள்ளேன்..!)

ஓர் வயதான ஆமை தன் பேரனுக்கு பழைய கதைகளை சொல்லிக்கொண்டு இருந்தது..! (இந்தகாலத்தில், நம்மிடையே தன் வாரிசுகளின் வாரிசுக்கு கதைகள் சொல்வதும், அவர்கள் கேட்பதும் அரிதாகி விட்டது. அவர்கள்தான் பள்ளியிலிருந்து வந்தவுடன் இரவு தூங்குவதற்கு இடைப்பட்ட நேரத்தில் தாங்கள் சென்று வந்த கராத்தே, பாட்டு, விளையாட்டு பயிற்சி, போன்றவிடத்தில் நடந்த சம்பவங்களை நகைச்சுவையாக, (அதுவும் அவர்களுக்கு மனமிருந்தால்) விவரிக்கிறார்கள்.! நாமும் திறந்த வாய் மூடாது கேட்போம்..! (நாமெல்லாம் இந்த மாதிரி ‘பொறுமையா” எங்கேயும் போனது கிடையாது..!) மற்றபடி கதைச்சொல்லு பாட்டி என்று நச்சரிப்பது நம்காலத்தோடு போய் விட்டது. எங்கேனும் அது அரிதாக தொடரலாம்..) சரி நான் கதையை விட்டு எங்கோ சென்று விட்டேன்..!

அந்த பேரன் ஆமை தன் பாட்டியிடம், “பாட்டி! நம் தாத்தா முயலுடன் ஒட்டப் பந்தயம் வைத்து ஜெயித்த கதையை சொல்லு!” என்றதும் பாட்டி ஆமையும், பெருமையுடன் அந்தக்கதையை ஒரு வரி விடாமல் “பொறுமையுடன்” சொல்லி முடித்தது..! (நமக்கு நம் பாட்டியிடம் கேட்டு கேட்டு “பொறுமை” போய் விட்டதால் இங்கு விவரிக்கவில்லை..!)

கதை முழுவதும், “பொறுமையுடன்” கேட்ட குட்டி ஆமை “என்ன இருந்தாலும், பாட்டி நாமனைவரும், சோம்பேறிகளாம்..! அந்த முயல் தாத்தா ரொம்ப சுறுசுறுப்பாம்..! அதனாலே அவங்க இந்த கதையையே, மாத்தி மாத்தி சொல்லி, என்௬ட சேர்ந்து விளையாட வரும்போது “உங்க தாத்தா ஒன்னும் ஜெயக்கவேயில்லை..! எங்க முயல் தாத்தாதான் உங்க தாத்தாவுக்கு விட்டுக்கொடுத்தாங்க..! நீங்க நடக்கற நடைக்கு உங்களுக்கு ஓட்டப்பந்தயம் வேறா”ன்னு கிண்டல் பண்ணுறாங்க பாட்டி..! என்று வருத்தத்துடன் ௬றியது..!

“சொன்னா சொல்லிட்டு போகட்டும்..! நாம ஜெயிச்சதென்னவோ உணமைதானே..!” என்று பேரனை சமாதானபடுத்தியது பாட்டி ஆமை..! ஆனாலும் பாட்டி நாம இப்படி மெள்ள நடக்குறோமே..! ஏன்..? என தன் சந்தேகத்தையும் பாட்டியிடம் வைத்தது.. அந்த குட்டி ஆமை.!.

“இதோ பார்.. நமக்கு நிதானங்கிற செல்வத்தை தந்தது அந்த கடவுள்! அந்த நிதானம்தான் “பொறுமைக்கு” அடிப்படை குணம்.! அதனால் நாம் எல்லா செயலையும், “மிகப்பொறுமையாக” செய்வதால், நம் ஆயுளுக்கும் ஆபத்து இல்லாமல், நீண்டநாள் உயிரோடு இருக்கிறோம்.!.  நிதானமான நம்ம செய்கையை பார்த்து நம்மை சோம்பேறி”ன்னு கிண்டல் செய்ரவங்களை பத்தி நீ கவலைபடாதே.! நிதானமா, யோசிச்சு, “பொறுமையா” செய்யும் எந்த ஒரு செயலும் “சாதனையை” நமக்கு பரிசா தரும்..! அதனாலேதான் முயலுடன் ஒடிய போது பதட்டபடாமே மெள்ள போனாலும், “பொறுமையா” போனதுனாலே, உங்க தாத்தா அந்த முயல் தாத்தாவை ஒரு “சாதனையா” ஜெயிச்சாரு..! அவசரபட்டு வேகமா போயிருந்தா, நாம அன்னைக்கு மூச்சு வாங்கி தோத்துதானே போயிருப்போம்…? அதனாலே “பொறுமைக்கு” முக்கியம் கொடுத்து நாம என்னைக்குமே நிதானமாவே நடந்துப்போம்..! சரியா! நீ இப்ப எதை பத்தியும் கவலைபடாமே, உங்க தாத்தா ஜெயிச்சாருங்கற சந்தோஷத்திலே நிம்மதியா தூங்கு பார்க்கலாம்…!” என்று பாட்டி “பொறுமையாக” சொன்ன அறிவுரையில் குட்டி ஆமை மயங்கி தூக்கத்தை தழுவி கொண்டு தூங்க ஆரம்பித்தது..!

என்ன “பொறுமையாக” ஒரு கதை படித்த உங்களுக்கும் தூக்கம் வருகிறதா..? சரி மேலும் உங்களை தொந்தரவு செய்ய போவதில்லை..! இனி மற்ற குணங்களைப்பற்றியும் அப்பப்ப எப்பவாச்சும் இப்படி ஒரு அலசு அலசுவோமா..?

(என்ன முணுமுணுப்பு? என் கேள்விக்கு பதிலையே காணோமே..? என்ன சொல்லறீங்க..? காதுலேயே விழல்லியே…! உங்க பொறுமையே போயிடிச்சா..! இனி என் பதிவை பார்க்க ௬ட வர மாட்டிங்களா..? கடவுளே..! ஹலோ…ஹலோ….! கொஞ்சம் சத்தமாத்தான் கேக்கற மாதிரி சொல்லுங்களேன்..!)