Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Monday, July 13, 2026

மணம் வீசும் கதம்ப மாலை

 கதம்பம்.

பொதுவாக கதம்பமென்றால், பல் சுவை நிகழ்ச்சிகளை சுவைபட தொகுத்துத் கலை நிகழ்ச்சியாகத்  தருவது, தத்தம் ஊர்களில் கிடைக்கும் பல்வேறு மணம் வீசும் மலர்களை கதம்ப மாலையாக்கி கட்டி இறைவனுக்குச் சூட்டுவது, பெண்கள் வீட்டின் விஷேடங்களுக்காக அந்த கதம்ப மாலைகளில் வீட்டை அலங்கரிக்கவும், கதம்ப மலர்ச் சரங்களைச் சூடி தங்களை அலங்காரம் செய்து கொள்வது  போன்றவையாலும் அப்பெயர் பெற்றது. 

மேலும், பல்வேறு காய்கறிகளை ஒன்றாகச் சேர்த்து சமைத்து கதம்ப உணவும் தயார் செய்யலாம். இதையும் கதம்பச்சாப்பாடும், எனவும், எல்லாவிதமான காய்களை சேர்த்துச் செய்யும், கூட்டுக்கு கதம்ப கூட்டு எனவும், கதம்ப சாம்பார் எனவும் வகைப்படுத்தி ரசிப்போம். உண்போம். 

இங்கு (பதிவுலகில்) நம் பதிவுலக நட்புகளும், கதம்பமென்ற பெயரில், பல செய்திகளை தொகுத்து வாரம் ஒருமுறையோ, இல்லை மாதமிருமுறையோ தருகின்றனர். முன்பிருந்தே அவ்விதம் அடிக்கடி நானும் ஏதாவது எழுத நினைப்பேன். (ஆமாம்..! ஒரு செய்தியையே ஒழுங்காக முடித்துத் தர இயலவில்லை. இதில் உனக்கு பல செய்திகளை கதம்பமாக கட்டி எழுதும்  ஆசை வேறா? என என் மனது பொறுக்க இயலாமல் பொங்கி எழுந்து  கண்டிக்கிறது./ கர்ஜிக்கிறது.😡 👺. :)) ) ஆனால், என்னால் இப்போதெல்லாம் என்னவோ எழுதவே இயலாமல் போய் விட்டது. அத்தோடு, சென்ற பதிவுக்கு முன் பதிவுக்கு வந்தவர்களை வரவேற்கவும், அவர்கள் கருத்துக்கு பதில் கருத்து தரவுமே அவகாசங்கள் ஏதும் இல்லாமல் போய் விட்டதை நினைத்து உண்மையிலேயே மிகவும். வருத்தமடைகிறேன்.இந்த இடத்தில் என் சகோதர சகோதரிகள் எல்லோரும் தயை கூர்ந்து என்னை மன்னிக்கவும். 🙏. 

ஆனால், முன்பு போல் என் நட்பு பதிவர்களின் அனைத்து தளங்களுக்கும் சென்று கருத்துக்கள் மட்டும் அளித்து வருகிறேன்.அதுவே சில சமயங்களில் ஒரிரு பதிவுகளுக்கு என் பல பிரச்சனைகளில் செல்ல இயலாமலும் போய் விடுகிறது. அதற்கும் மன்னிக்கவும். 

சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் தன் சிறப்புமிக்க கவிதைகள், அசத்தலான சிறுகதைகள், போன்றவைகளை  பதிவர்களாகிய நாங்கள் நேசிக்கும் "எங்கள் விருப்பமான எ. பியில்" வியாழனன்று சிறந்த பலர் படிக்காத செய்திகளை தொகுத்து கொடுப்பதுடன், செய்தியின் இணைப்பை இணைத்தும் தருகிறார். வெள்ளியிலும் அவ்வாறே அவர் பதிவு அலங்கரிக்கப்படுகின்றன. அமர்க்களப்படுகின்றன. அதிசயக்கப்படுகின்றன. ஆச்சரியப்படுத்தவும் வைக்கின்றன. 

அது போலவே வார முதல் நாளான திங்களில், "தின்ன தின்ன ஆசை" பிறக்கும் வண்ணம் பலரின் கைவண்ணங்களையும், அவரின் சொந்த தயாரிப்புகளையும் அவர் தளத்தில் பகிர்வதை காண முடியும்.

பின் மறக்கவியலாத பல சிறந்த எழுத்தாளர்களின்  பொக்கிஷங்களுடன், எழுத்தின் சிறப்பை உணர்த்(தி)த வரும்  இன்றைய (பதிவர்கள்) எழுத்தாளர்களின் பட்டியலோடு, மறுநாளைய செவ்வாயும் அங்கு மலர்கிறது. இங்கும் பல நேரங்களில் அவர் எழுதிய அற்புதமான கதைகளும், அன்று  கொடிகட்டிப் பறக்கும். 

நவகிரஹங்களில் படிப்பறிவான புதனின் பார்வையோடு, பதிவர்களின் பண்பட்ட கேள்வி பதில்கள், பக்குவப்பட்ட, பல உள்ளங்களின் தொகுப்பாக வெளி வரும் புகைப்படங்கள், சிறந்த சிந்தனை சிறதல்களுடன் வெளி வரும் கதைகள், அனுபவங்கள் என சகோதரர் கௌதமன் அவர்களின் முயற்சியில், மணம் வீசும் மலரொன்று புதன்தோறும் தன் மணம் பரப்பி நம் மனங்களை கொள்ளை கொள்ளும். 

வாரத்தின் இறுதி நாட்களாகிய சனி, ஞாயறாகிய இரு நாட்களும்  பல்சுவை களஞ்சியமாக திகழ்ந்து வரும் சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்களின் தெய்வ பக்தியுடன் கலந்த  அறிவு பூர்வமான எழுத்துக்கள் அங்கு மலர்ந்து மணம் வீசுகின்றன. அவரால் அவர் சிறப்பாக சென்ற இடங்களில் எல்லாம் படமெடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் நடமாடும் உண்மை சித்திரமாக அங்கு ஒளி வீசி கொண்டிருக்கின்றன. தெய்வீக பக்தியுடன், நாம் பார்த்தறியாத பல இடங்களிலுள்ள,பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை அறிமுகப்படுத்துவதிலும், பழங்கால சரித்திரங்களை நன்கு படித்தறிந்து அலசுவதிலும் இவருக்கு நிகர் இவரே. 

மேலும்  வாரம் ஒரு சிறந்த கதையாக சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் அதே சனிதோறும் எபியில்  பங்களிக்கிறார். பல சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை அவரால் படித்தறிய முடிகிறது. அவருடன் சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களும், சகோதரி கீதாரெங்கன் அவர்களும் சகோதரர் ஜீவி அவர்களும் கைகோர்த்து கொண்டு பிரபல எழுத்தாளர்களின் கதைகளை தேர்ந்தெடுத்து தந்து படிப்பவர்கள் மனதை சந்தோஷமடைய வைக்கிறார்கள். 

இதில் சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் தன் வலைத்தளத்தில், பல அனுபவங்கள்,அவர் எழுதிய சிறுகதைகள், ஆன்மிக கட்டுரைகள் என பகிர்ந்தளிக்கிறார். 

அதுபோல், சகோதரி கீதாரெங்கன் அவர்களும் தன் வலைப்பூவில், உளவியல் சம்பந்தமான கட்டுரைகள், அருமையான, யதார்த்தம் மிகுந்த பல சிறுகதைகள், தான் பார்த்து ரசித்த இடங்களின் இயற்கை வனப்புக்களைப் பற்றிய கட்டுரைகள், சிறந்த கற்பனை கதைகள் என எழுதி படிக்கும் வாசகர்களை மகிழ்வுறச் செய்கிறார். 

தன் வாழ்வின் சிறப்பான அனுபவங்களை, கதையாகவும், கவிதையாகவும் ஒருசேர திரட்டித் தந்து நம்மை சிந்திக்க வைக்கும் நல்ல மனமும், பண்பு நிறைந்த குணமும் கொண்டவரான சகோதரர் கில்லர்ஜி அவர்களின் பதிவை நாம் படிப்பதே ஒரு வரமென நினைக்க வேண்டுமென்ற வண்ணம்  அவரின் அற்புதமான கற்பனைகள் அவர் பதிவுகளில் சிறகடிக்கின்றன. என் ஆரம்பகால வலைத்தள வருகையிலிருந்து இன்று வரை என் எந்தவொரு பதிவுகளுக்கும் தவறாமல் வந்து படித்து, சிறந்த கருத்துகளை தந்து, என் எழுத்துக்களை ஊக்கமுற செய்தவர் இவர். இவரின் அன்பான நட்பும் என்னை மேன்மையுற செய்கிறது. 

தாம் "சந்தித்ததை, சிந்திக்கச் செய்யும்" வண்ணமாய் தன் எழுத்தால் கம்பீரநடை போடும் சகோதரர் வெங்கட்நாகராஜ் அவர்கள் தான் இதுவரைச் சென்ற பயணங்களின் கட்டுரைகள், மற்றும் பல செய்திகளைச் சொல்லும் கதம்பங்கள், தன் நண்பர்களை ஊக்குவிக்கும் விதமாக தம் நட்புகளின் அருமையான  எழுத்துக்கள் என அனைத்தையும் அவர் தம் வலைப்பூவில்  பகிர்ந்தளிக்கிறார். 

அவரின் துணைவியான ஆதி வெங்கட் அவர்களின் சிறப்பான பகிர்வுகளும், புதுமையான சமையல்களுடன் கலக்கி வரும் அவரின் எழுத்துக்களும் அவர் வலைப்பூவை சிறப்புறச் செய்கின்றன. அவர்களது குடும்பமே ஒரு கலைக் குடும்பமாக திகழ்கிறது.

சகோதரி கோமதி அரசு அவர்கள், அவர்கள் "பக்கமாக" அவர்கள் வலைப்பூவில் பல பதிவுகளுடன் சிறப்பாக பங்களித்து வருவதை வாழ்த்தவோ, பாராட்டவோ வார்த்தைகளே கிடையாது. அவர் பறவைகளின் நேசராக, பாசம் மிகுந்த அன்னையாக, நட்புகள், உறவுகள் அனைவரையும் எப்போதும் "வாழ்க வளமுடன்" என்ற அன்பான ஒரு  வார்த்தையாலேயே கட்டிப் போடும் அழகை விவரிக்க என்னிடம்  வார்த்தைகளே இல்லை. மாறாக என் பணிவான வணக்கங்களை அவருக்குத் தெரிவித்து மகிழ்கிறேன். 

சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் வலைத்தளம் மிக பிரசித்தி பெற்ற வலைத்தளம். அவரது "எண்ணங்களாக" அவரது பதிவுகளில் மலரும் மலர்கள் அனைத்தும் அதிக நறுமணமுள்ளவை.  அதில் அவரின் வாழ்வியல் அனுபவங்கள், ஆன்மீகம், சிறப்பான சமையல் என அவரின் பங்களிப்புகள் ஏராளமானவை. அவரது திறமையை பார்த்து அப்போதிலிருந்து இப்போது  வரை வியக்கிறேன். மதிக்கிறேன். அவர் என் நட்பானதை நினைத்து  மனது கொள்ளாத பெருமிதமும் அடைகிறேன். 

மேலும் வலைத்தளத்தில் தாம் அறிந்தவற்றை, நமக்குப் புரியும்படி தமது தெள்ளிய தமிழில், யார் மனமும் கோணாதபடிக்கு சிறந்த பதிவுகளை தந்து வரும் சகோதரர் துரைசெல்வராஜ் அவர்களது எழுத்துக்களும் சிறந்த வகையை சார்ந்தவை. எத்தனை நயமான  குடும்ப கதைகள், கவிதைகள், என இவரின், கற்பனை சிந்தனைகளிலிருந்து தோன்றி வந்துள்ளது என்பதை கணக்கிடவே இயலாது. அது தவிர ஆன்மீகம், இறைபக்தி என்ற ஊற்று இவரின் மனதில் புறப்பட்டு, எழுத்தால் அது ஏனைய பதிவர்களை தெய்வ பக்தியில் மனம் குளிரச் செய்வதும் இவரின் வாடிக்கைகளில் ஒன்று. இவரின் எழுத்துக்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். 

பதிவர்கள் வரிசையில், நீண்ட காலமாக தன் அனுபவங்களை, கதைகள் மாதிரியும், அவ்வப்போது உண்மை நிகழ்வாகவும், அன்புடன் சொல்லி வரும் சகோதரி வல்லிசிம்ஹன் அவர்களது திறமையை மனம் நிறைந்து எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதிலும் அவர்களின் ஆன்மீக பதிவுகள், சமையல் பதிவுகள் என தம் பதிவை அலங்கரிப்பதில் வல்லவர். மொத்தத்தில் இவர் அன்பே உருவானவர். இவருடன் சமீப காலமாக நான் பெற்ற நட்பும், என்னை பெருமையடைய வைக்கும். 

அதிரடியாக வந்து பல கருத்துக்களை, பதிவுகளுக்கு தந்து தன் நகைச்சுவைப் பேச்சால் நம் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் சகோதரி அதிரா அவர்களின் வலைப்பூவும், மறக்கவொண்ணா அவரின் பல திறமைகளை பறைசாற்றும். திறமையான அவரின் சமையல், பல அறிவார்ந்த விஷயங்கள், என பகிர்ந்தளிப்பதே அவர் பதிவுகளின் நோக்கம். அவரின் பதிவுகளை படிப்பதே நம் அறிவுக்கு விருந்தாக அமையும். மேலும் தன் நகைச்சுவைப் பேச்சால் நம் இதயங்களை கட்டிப் போடும் நுணுக்கங்கள் அறிந்தவர். வலையுலகில் இவரின் நட்பும் நான் செய்த பெருந்தவமே. 

இன்னமும் நான் முதலில் வலைத்தளமொன்றை ஆரம்பித்த போது, என் ஒவ்வொரு பதிவுக்கும் விடாமல் வந்து ஊக்கம் மிகுந்த கருத்துக்களைத் தந்து என் எழுத்துக்களை சிறப்புறச் செய்த "திருக்குறள் வித்தகர்"சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், மற்றும், கவிதையிலும்,,பல நல்ல கருத்துள்ள பதிவுகளாலும் தன் வலைத்தளத்தை செவ்வனே நடத்தி வரும்  சகோதரர் யதோ ரமணி அவர்கள், மற்றும் சிறந்த தன் வலைத்தளத்தில் பல செய்திகளையும், சிறப்பான கட்டுரைகளையும் தம் அனுபவங்களையும்  பகிர்ந்து வரும் சகோதரர் திரு.   DR.B.ஜம்புலிங்கம் அவர்கள் என அனைவருக்கும்  என் பணிவான நன்றிகள் எப்போதும் உண்டு.🙏. 

இது போக நான் எப்போதேனும் படித்து ரசித்த பதிவுகள்,மற்றும் அதன் உரிமையாளர்களான பதிவர்களுக்கும்,அதுபோல் என் பதிவுக்கும் அவ்வப்போது வந்து என்னை என் எழுத்துக்களை உற்சாகப்படுத்தி சென்றிருக்கும் அன்பான பதிவர்களுக்கும் என் பணிவான நன்றிகள்.

மேலும் நான் வலைத்தளம் ஆரம்பித்த போது வந்து கருத்துக்கள் தந்த பல பதிவர்கள் எதனாலேயோ அவர்களால்  வர இயலாமல் போய் விட்டது என் துரதிர்ஷ்டமே. 

இப்போது இவர்களின் அறிமுகங்கள்  ஏன் என அறிமுகமானவர்களுக்கே ஒரு கேள்வி வரலாம். என் வலைத்தள பிரவேசத்திற்குப் பின் எனக்கு கிடைத்த, என்றுமே வாடாத மணம் வீசும் மலர்கள் இவர்கள். அதனால் இவர்களைக் கொண்டே சிறந்ததொரு கதம்பமாக மாலை சூடி இங்கு  தொடுத்துள்ளேன். 

ஏனெனில் நான் என் வலைத்தளமென்ற ஒன்றை  ஆரம்பித்து, இந்த வருடத்துடன் பதினாறு வருடங்களாகி விட்டன. இது வரை நான் எழுத்துலகில்  சாதித்தது (வெறும் பூஜ்யந்தான்)  ஒன்றுமில்லையென்றாலும், இந்த காலகட்டத்தில், சிறப்பு மிக்க இத்தனை வலைத்தள நட்"பூ"களைப் பரிசாகக் பெற்றுள்ளேன். இன்று வரை இவர்கள் அனைவரும் நான் ஏதோ கோணல்மானலாக எழுதி வரும் என் எழுத்துக்களுக்கு உரமாக,உயிராக இருந்துள்ளனர்./ இருக்கின்றனர். அதனால், அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும், இந்த கதம்ப மலர் மாலை என் மனதில் ஒரு பதிவாக உருவானது. 🙏. 

இப்படியொரு கதம்பமாலை தொடுத்ததில் என் கவனப்பிசகாக ஏதேனும் தவறிருந்தாலும், குறையிருந்தாலும் அனைவரும் என்னை மன்னிக்கும்படியும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள். 🙏. 

Sunday, March 30, 2025

இட்லிகளின் ராஜ்ஜியம்.

இன்று உலக இட்லி தினமாம்.

(30.3. 25.) 

நம் அன்றாட பாரம்பரிய உணவில் இந்த இட்லி எப்போதும் சிறப்பு மிக்கவைதான்..! ஒரு காலத்தில் அதற்கென்று ஒரு பிரத்தியோகமான தனி மரியாதை இருந்தது. ஒருவருக்கு உடம்புக்கு முடியவில்லையென்றால்,அவரை  குணப்படுத்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, "டாக்டர் மருந்துடன் நோயாளி ஆகாரமாக என்ன சாப்பிடலாம்?" என்ற கேள்விக்கு அக்காலத்திய மருத்துவர்கள் முதலில் இட்லியைத்தான் நல்ல உணவாக பரிந்துரைப்பார்கள். (பிறகு காஃபி, கஞ்சி.) (ஆனால், இட்லியை கண்டாலே முகம் சுளித்து எரிச்சல் அடைபவர்கள் இப்போது நிறைய பேர்.) அதுபோல் இப்போது  மருத்துவர்களும், "என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம்.." எனக் கூறத் தொடங்கி விட்டனர். ஏனெனில் இட்லியை புறந்தள்ளி நிறைய வெரைட்டி உணவுகள் வீட்டிலேயே இப்போது முதலிடத்தை பெறத் துடித்து வெற்றி கண்டு விட்டதால், இட்லி அவர்களுக்காக  கொஞ்சம் பெருந்தன்மையுடன் நகர்ந்து வழி விட ஆரம்பித்து விட்டது. ஆயினும் இன்னமும், பல பெரியவர்களிலிருந்து சில குழந்தைகள் வரை இட்லியை விரும்பி சாப்பிடுவதையும், சில உணவகங்களில் பார்த்திருக்கிறேன்.

இந்த இட்லிக்கு ருசியாக அரைப்பதில் அந்த காலத்தில் கல்லுரலுக்கு பெரும் பங்கு இருந்ததது. அப்போதெல்லாம் சிலர் வீட்டில் தினமும் இட்லிக்கு அரைப்பதை ஒரு வழக்கமாக வைத்திருந்தனர். ஒரு குறிப்பிட்ட மாலை நேரத்தில் கல்லுரலின் "கடமுடா சத்தம்" ஒவ்வொரு வீட்டிலும் முழங்கும். (எங்கள் பிறந்த வீட்டில் எங்கள் அம்மா காலையிலேயே இட்லிக்கென அரிசி அளந்து ஊற வைத்து விடுவார்.) வீட்டில் தினமும் காலை அக்கப்போர்கள் ஏதுமில்லாத, ஆனால், போரடிக்காத இட்லிதான். வாரத்தில் ஒருநாள் அது தோசையாகவோ, பருப்புகள் சேர்த்தரைத்து அடையாகவோ மாறினால், அது அதிசயம். ஏனெனில் இட்லி எளிதில் ஜீரணமாகும் ஒரு உணவு (வஸ்து.) என்பதால், அதுதான் அப்போதைய குழந்தைகள், பெரியவர்களென வீட்டிலிருக்கும் அனைவருக்கும் உகந்ததாக இருந்தது. . 

நாளடைவில், தினமும் இட்லிக்கு அரைத்து செய்வது அனைவருக்கும் பெரும் சோம்பலாக தோன்றியதால், வேறு ஏதாவதை காலை சிற்றுண்டியாக மாறுவதற்கு வாய்ப்புகளை தந்தனர். அதற்கு பிற தானியங்கள் சந்தோஷமாக சம்மதிக்க, அவற்றின் உதவியுடன் உப்புமாக்கள்,  தோசைகள், சப்பாத்தி, பூரியென அவைகள்  பூரிப்புடன் வலம் வந்தன. எனினும் காலை நேரத்தில் இட்லியின் சௌகரியம் பிடித்து போன பிறகு மற்ற உணவுகளை தயாரிக்கும் போது ஏற்படும்  சிரமங்கள் கண்டுணர்ந்ததில் வீட்டில் பெண்கள் அனைவருக்கும் சிறிது முகம் கோண செய்தது. 

பிறகு மாவரைக்கும் பெரிய, கனமான கிரைண்டர்( யந்திரம்) வந்தது. அது வீட்டுக்கு வீடு அவ்வளவாக பரவாத காலத்தில், ஒரு சிறு கைத் தொழிலாக பலருக்கும் வேலை வாய்ப்பைத் தந்தது. வீட்டின் ஒரு இடத்தில் நாலைந்து மெஷின்கள் வாங்கி போட்டுக் கொண்டு மாவரைத்து கொடுப்பதில் மக்கள் வீட்டிலிருந்தபடியே கொஞ்சம் வருமானமும் பார்த்தனர். 

காலை நம் வீட்டில் இட்லிக்கு தேவையான அரிசி, பருப்பு போன்றவற்றை ஊற வைத்து, மதியம் அங்கு கொண்டு தந்தால், அன்று மாலை/ இரவுக்குள் இட்லி மாவு வீட்டில் வந்து சேர்ந்து தயாராகி, மறுநாள் காலை உணவுக்கு அது இட்லியாக வரும் இந்த விந்தை அனைவருக்கும் பிடித்துப் போனதில் மறுபடியும் வெற்றிக் கரத்துடன் இட்லிகள் கொடி பிடிக்க ஆரம்பித்தன. 

பின்பு வீட்டுக்கான அளவுடன்  சின்னதாக, நவீனமான பல மாவரைக்கும் யந்திரங்கள் வந்த பின் அதில் வீட்டிலேயே கொஞ்சமாகவோ, இல்லை இரண்டு, மூன்று நாட்களுக்கெனவோ இட்லி மாவு தயார் செய்து குளிர் சாதன பெட்டியில் பாதுகாத்து, மக்கள் பயனுற ஆரம்பித்தனர். 

அதன் பின் வந்த காலகட்டத்தில், அவ்விதம் அதைச் செய்யவும் நேரமில்லாமல், நேரங்களுடன் போராடுகிறவர்கள், உடல் நிலைகள் முடியாதவர்கள் என பலரும்  பாக்கெட்டுகளில், தயாராகி வரும் மாவு வாங்கி அதில் இட்லி, தோசை என்ற பயன்களை கண்டனர். எப்படியும் இட்லிகளின் ராஜ்ஜியம் தரையிறங்கவில்லை. 

"பட்டனை தட்டினா இரண்டு இட்லியுடன், கெட்டி சட்னி வர வேண்டும்" என்ற அந்தகாலத்தில் கலைவாணர் என். எஸ் கிருஷ்ணன் , அவர் மனைவி டி. ஏ மதுரம் அவர்கள் பாடிய நகைச்சுவை பாடல் இன்று பொய்த்துப் போகாமல், மெய்யாகி வருகிறது. இட்லி அரிசிக்கோ ,அதை அளவுடன் ஊற வைத்து பக்குவமாக அரைக்கும் மாவுக்கோ, என எதற்கும் கவலைபடாமல், பட்டனை தட்டினால் பறந்து வரும் இட்லிகள் வந்து விட்டன. (அது எப்படியிருக்குமோ என நான் இன்னமும் பரிசோதிக்கவில்லை.) சாப்பிட்டவர்களுக்குத்தான் அதன் சுவையும், தரமும் புரிந்திருக்கும். இது மனித சோம்பலின் கடைசி படிக்கட்டை எட்டிய விஞ்ஞான யுக்தியின் முயற்சி என நினைக்கிறேன். விஞ்ஞான வளர்ச்சியை இப்படியெல்லாம் வருமென கற்பனையில் பாடி, பேசி நடித்த அவர்களின் (கலைவாணர், அவர் மனைவி) பேச்சுக்கள் உண்மையாகி விட்டது. 

அனைத்து உணவகங்களிலும், மற்ற உணவுகளோடு, இட்லி, சட்னி, சாம்பார், இட்லிமிளகாய்பொடி தடவிய நெய் இட்லி, நம் விருப்பப்படி சிறு துண்டுகள் செய்த லேசாக வறுத்த ப்ரைடு இட்லி, வெங்காயம், காய்கறிகளுடன் இணக்கமான காய்கறி மசாலா இட்லி, சாம்பாரில் தோய்ந்த மினி நடனமாடும் மினி இட்லிகள் என்ற பல விதங்களோடு இட்லிகள் இன்னமும் பவனி வந்து கொண்டுதான் உள்ளது. 

இட்லி ரவையுடன் உளுந்து மாவை அரைத்து சேர்த்து செய்யும் இட்லிகள் சிலசமயம் ருசியாக அமைவதில்லை. எப்போதும் போல் இட்லி அரிசியை ஊற விட்டு அரைத்துச் செய்யும், இட்லிகள் என்றுமே சோடை போனதுமில்லை. இன்றும் இட்லியின் சிறப்புக்காகவே பிரபலமான உணவகங்கள் உள்ளன. 

இன்னமும் இந்த இட்லிகளின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இட்லி தினம் என்ற ஒன்று  முடிந்து விடும் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன். 

எப்படியோ உலகில் வந்த நாள் முதல் நம்முடன் இணைபிரியாது அன்று தொட்டு, இன்று வரை இணைந்து வரும் பாரம்பரியமான இட்லிகள் என்றும் வாழ்க...! 

இந்தப்பதிவை ரசித்துப் படிக்கும் சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பான நன்றிகள். 🙏. 

Thursday, October 31, 2024

இருள் களையும் விழா. .

 


                            தீப ஒளித்திருநாள். 

அனைவருக்கும் என் அன்பான தீபாவளி பண்டிகையின் நல்வாழ்த்துகள். 

தீபாவளி என்றாலே பாரம்பரியமாக மக்கள் அனைவருக்கும் மனமகிழ்ச்சி தரும் ஒரு பண்டிகை. என்பது அனைவரும் அறிந்ததே. 

நம் இரண்டு இதிகாச புராணங்களிலும் கடவுள் தானே மனித அவதாரம்  எடுத்து வந்து தர்மத்தை நிலைநாட்டவும்,  சத்திய வழியில் தவறாது செல்லவும்,  ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதை இவ்வுலகிற்கு புரிய வைத்தார். 

ஒரு சமயம் உலக மக்களை  தன் கொடூர செயல்களால் ஆட்டிப் படைத்து  வந்த நரகாசுரன் என்னும் அரக்கனை இந்த ஐப்பசி மாதம் சதுர்தசி/அமாவாசையன்று  தன் கணவரான கிருஷ்ணபரமாத்மாவின் துணையுடன் சத்தியமாமா அழித்ததாக புராண கதை சொல்கிறது. அந்த அசுரனும், இறக்கும் தறுவாயில் தான் இறந்த இந்த தினத்தை மக்கள் தன்னைப்பற்றி அவதூறுகள் பேசி கழிக்காமல், அதற்கு மாறாக புத்தாடைகள் உடுத்தி, தங்கள் உறவினர்களுடன் விருந்தோம்பல்கள்  செய்து, வீடெங்கும் மங்களகரமான தீபங்கள் ஏற்றி, இறைவனை வழிபட்டு வான வேடிக்கைகளுடன் சிறப்பாக கொண்டாடி மகிழ்வாக இருக்க வேண்டுமென்ற வரத்தை கேட்டு பெற்று பின் உயிர் துறந்தான். இந்த கதையின்படி  அன்றைய தினத்தை நாம் "நரகசதுர்தசி ஸ்னானம்" என்றும், "தீபாவளியெனவும்" வழிவழியாக அப்படியே கொண்டாடி வருகிறோம்.

ராமாயண காலத்தில், தந்தை சொல் தட்டாது கானக வாழ்வை தன் மனைவி சீதையுடன் பதினான்கு ஆண்டுகள் முடித்து விட்டு தன் நாடான அயோத்திக்கு திரும்பிய தங்கள் அரசனான ஸ்ரீராமபிரானை அந்நாட்டின் மக்கள் மிகுந்த சந்தோஷத்துடன்  வரவேற்று,  வீதியெங்கும், ஒவ்வொரு வீடெங்கும், மலர் தோரணங்கள் கட்டி அலங்கரித்து  லட்சகணக்கான தீபங்களை ஏற்றி, வானவேடிக்கைகளுடன்  குதூகலம் பொங்க தம் உற்றார் உறவினர்களுடன் மகிழ்ந்திருந்த நாளே "தீபாவளி" எனவும் ஒரு கதை உண்டு.  ஆக இறைவன் தான் மனித அவதாரம் எடுத்து வாழ்ந்த இரு புராணங்களிலும்  இருளை அகற்றும் ஒளியாக இந்த (தீபஒளி) தீபாவளி பண்டிகையை முக்கியத்துவம் பெறச் செய்து  நீதியை போதிக்கிறார் எனவும் கொள்ளலாம். 

தீபாவளி என்பதற்கு தீப ஒளி என்ற பொருள்தான்  முன்னிலை வகிக்கிறது. இறைவன் ஒளி வடிவானவன். அதனால்தான் நாம் தினமும் அவரவர் வீடுகளில் காலை, மாலை விளக்கேற்றி வழிபடுகிறோம்.

 " ஒளி வடிவாக உன்னுள்ளே இருக்கும் இருளை அகற்ற பரமாத்மாவாக நான் உன்னுடன் குடி இருக்கிறேன். ஜீவாத்மாவாகிய நீ என்னைத் இடைவிடாது தேடி, உன்னை தன்னுடன் இணைத்து வைத்திருக்கும் " ஆசை" என்ற மாயையினால் கட்டப்பட்டிருக்கும் அஞ்ஞான இருளை அகற்றி, அதை நீ வென்று விட்டால், பரிபூரண வெளிச்சமாக உன்னுள்ளே வீற்றிருக்கும் என்னைக் காணலாம். இப்பூலகில் உனக்கென உண்டாக்கி வழங்கப்பட்டிருக்கும் பிறவிக் கடலை கடப்பதற்கு இந்த வழிதான் உசிதம்.." என கீதையில் அதே ஸ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனன் மூலமாக மக்களுக்கு உபதேசம் செய்திருக்கிறார். 

அதன்படி நடந்து "அவனை" பரிபூரணமாக உணர்ந்தவர்கள் மஹா ஞானிகளாக, தவசிரேஷ்டர்களாக, யோகிகளாக, வாழ்ந்தும், மறைந்தும்  நமக்கு வழி காட்டியிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்.  ஆனாலும் , மாயையின் பிடியில் இன்னமும் சிக்குண்டு இந்த சம்சார சாகரத்தில் உழன்று வரும் சாதாரண மனிதர்களாகிய நாம் அகக்கண்களால் "அவனை" ஜோதிஸ்ரூபமாக காண இன்னமும் எத்தனைப் பிறவிகள் எடுக்க வேண்டுமோ? 

இன்றைய தினத்தில் இப்போதும் வட நாட்டினர்  தத்தம் வீடுகளில்   நிறைய தீபங்களை (அகல் விளக்குகள்) ஏற்றி, இறைவனை வழிபட்டு கொண்டாடுவார்கள். நம் தென்னிந்தியாவிலும் இந்தப் பழககம் முற்றிலும்  வந்து விட்டது என நினைக்கிறேன். வடக்கில் இமயத்தில் உதயமாகி என்றும் வற்றாது ஓடும் கங்கை நதியும், இந்த ஐப்பசி மாதத்தில் தென்னாட்டு வரை தவழ்ந்து வந்து இங்கிருக்கும் சகல நதிகளிலும் நீராடி கூடி களித்து தன் சாபமொன்றை போக்கி கொள்கிறாள். அதனால் தீபாவளியன்று  விடியல் பொழுதில் (நான்காவது சாமத்தில்) நீராடி முடிப்பவர்களை "கங்கா ஸ்னானம் ஆயிற்றா?" என ஒருவருக்கொருவர்  கேட்டு பண்டிகையின் உற்சாகத்தை கூட்டும் பேச்சு வழக்கு (மரபு முறை) இன்றும் நம்மிடையே உண்டு. 

மேலும் ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி அமாவாசையன்று  மாலை முதல் வீட்டு வாசல் படியில் இருபக்கமும்  இரு அகல் விளக்கேற்ற தொடங்கி, கார்த்திகை  மாதம் வரும் திருவண்ணாமலையார் தீபம் வரையும், அதன் பின் கார்த்திகை மாதம் முழுவதும் வரையும் விளக்கேற்றும் பழக்கம் நம்  வீட்டு பெரியவர்கள்  மூலமாக நமக்கு எப்போதும் இருந்து வருகிறது. 

இவ்விதம் நம் மனதிலிருக்கும் தெய்வீக குணமாகிய, அனைவரிடமும் பாரபட்சமின்றி அன்பு செலுத்துவது, மனித நேயத்தோடு அனைவரையும் நேசிப்பது போன்ற நல்ல குணங்கங்களின் ஒளி கொண்டு, அவ்வப்போது  மனதில் தலை தூக்கும் கோபம், பழி வாங்கும் வன்மம், அசூயை, போன்ற அசுர குணமான இருளையகற்றி, வருடந்தோறும் வரும் இந்த தீபஒளி பாரம்பரிய பண்டிகையை போற்றி, நமது  இளைய தலைமுறைகளுக்கும் இதன் நோக்கத்தை, அவசியத்தை உணர வைத்து அனைவரும் இறைவனின் இன்னருள்களை பெற்று சிறப்பாக வாழ்ந்திட  வேண்டுமாய் இறைவன் அருள வேண்டுமென இந்த நன்னாளில் பிரார்த்தித்துக் கொள்வோம். 🙏. 

பி. குறிப்பு... இது எ. பிக்காக சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் அவசரமாக ஒரு தீபாவளிக்கு முன்தினம் ஏதாவது எழுதச் சொன்னதில் தீபாவளி கட்டுரை என்ற பெயருடன் உருவானது. மறுநாள் தீபாவளியன்று எ. பியிலும் வெளி வந்ததற்கு எ. பிக்கும், அதன் ஆசிரியர்கள்  அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். அப்போது அந்தப் பதிவுக்கு  கருத்துக்கள் அளித்தவர்களுக்கும் என் பணிவான நன்றிகள். இன்று என் வலைப் பதிவிலும் ஒரு சேமிப்பாக இருக்கட்டுமென இது அதே அவசரத்துடன் (வேறு எதாவது எழுத  வீட்டின்்வேலைகள் இடம் தரவில்லையெனினும், என் சோம்பலும், ஒரு காரணம்.) வெளியாவது. 

மறக்க இயலாத தீபாவளி நினைவுகள்....! படித்த அன்றிலிருந்து  ஒவ்வொரு தீபாவளியன்றும் பிரபல எழுத்தாளர் கு. அழகிரி சாமி அவர்கள் எழுதிய "ராஜா வந்திருக்கிறார்" கதை நினைவுக்கு வர தப்புவதில்லை. நல்ல எழுத்து. அனேக மாற்றங்களினால் காலங்கள் எவ்வளவு  மாறினாலும் என்  மனதை விட்டு நீங்காத கதை. 

அனைவருக்கும் என் அன்பான நன்றிகளுடன் மனம் கனிந்த இனிய  தீபாவளி நல்வாழ்த்துகள். 

Tuesday, November 30, 2021

விருந்தும், மருந்தும்.

 வணக்கம் அன்பான சகோதர சகோதரிகளே.

அந்தக் காலத்தில் மருந்தும், விருந்தும் மூன்று நாட்கள் என்பார்கள். .அதன் அர்த்தம் உண்மையில் உணர்ந்து சொல்லப் பட்டதுதான் போலும் . 

எதிர்பாராமலோ இல்லை, எதிர்பார்த்தோ, விருந்தாளிகள்  வீட்டிற்கு வந்து விட்டால்,((அது போல் எதிராளி அவர்கள் வீட்டுக்கு சென்றாலும் சரி..இதே நிலைமைதான். .. ) அன்று முழுவதும் உபசாரம் காலை, மதியம், இரவு என தடபுடலாக இருக்கும். தனக்கு தெரிந்த சமையல் ஐட்டங்களை எல்லாம் வந்த விருந்தாளிகளுக்கு செய்து கொடுத்து அவர்களிடம் பாராட்டுகளை  எப்படியாவது பெற்று விட வேண்மென்ற  அவா அன்று முழுவதும் ஓய்வில்லாமல் வீட்டிலிருப்பவர்களை உழைக்கச் செய்து விடும். 

வரும் மறுநாளுடன் இரண்டொரு நாட்களில் கொஞ்சம் நார்மலாகி, வெளியில் எங்காவது கோவில், குளம், பூங்கா, சினிமா என்ற பயணங்களுடன் மாறுதலுக்கு ஒரு பொழுது அவர்களுக்கு (கவனிக்கவும்.. வந்து சந்தோஷிக்கும்  விருந்தினர்களுக்கு அல்ல....)  பிடித்தமான உணவகங்களுக்கு அழைத்துச் செல்லல், அங்கு அவர்களுக்கு (இங்கும் விருந்தாளிகளுக்கு அல்ல....) பிடித்தமான உணவை வாங்கி தருவது என பொழுது முடிந்து விடும். 

மூன்றாவது, நான்காவது நாளில், இல்லை ஐந்தாவது நாளில், காலை எழுந்திருக்கும் போதே வந்த விருந்தினரை விட வீட்டிலிருப்பவர்களுக்கு ஒரு சோம்பல்,  இனம் புரியாத ஒரு கடுப்பு இவைகள் அன்றைய சூரிய உதயத்துடன் அவர்களுக்குள்ளும் உதயமாகி விடும். இரண்டொரு நாள் உபசாரத்தின் பலனாக அன்று சிம்பிளான உணவே போதுமென அவர்களே முடிவு செய்து விடுவார்கள். 

மறுநாள் வந்தவர்கள் பெட்டியை கட்டும் போது, "இன்னும் ஒரு வாரம் இருந்து விட்டு போகலாம்... அதற்குள் காலில் கஞ்சியை கொட்டிக் கொண்ட மாதிரி என்ன அவசரம்?  எப்போது வந்தாலும் இப்படித்தான் நீங்கள் அவசரப்பட்டு செல்கிறீர்கள்....அடுத்த முறை வரும் போது ஒரு வாரம் தங்குகிற மாதிரி வாருங்கள்.... இன்னும் நிறைய இடங்களுக்கு உங்களை சுற்றிப்பார்க்க அழைத்துப் போக வேண்டுமென நினைத்தோம் ...தெரியுமா? " என்ற உபசார வார்த்தைகளை  அள்ளி வீசுவார்கள். (அதுவும் அவர்கள் கிளம்புவதை உறுதி செய்து கொண்ட பின்தான்...:) )  ) வந்த விருந்தாளிகளுக்கும் தெரியும். இது வெறும் உதட்டளவில் இருந்து வரும்  வாய் வார்த்தைதான்... உள்ளத்திலிருந்து வரவில்லை என்பது.... அவர்களும் புன்னகையுடன்" அதற்கென்ன....! அடுத்த முறை வரும் போது தங்கி விட்டால் போச்சு....! நீங்களும்  எங்கள் வீட்டுக்கு எப்போது வந்தாலும் அரக்கப்பரக்கத்தான் கிளம்பி விடுகிறீர்கள். நிதானமாக தங்கிச் செல்லும்படி ஒரு முறையாவது வாருங்கள்." என்று அன்பொழுக மறுமொழி சொன்னாலும், உள்ளுக்குள்  எங்கே அந்த மாதிரி வந்து விடுவார்களோ என்ற அச்ச உணர்வும், எச்சரிக்கையாக எட்டிப் பார்த்தபடி இருக்கும். இவர்களுக்குள்ளும் அதே உணர்வு இருக்கையில் எப்படி அந்த மாதிரி செல்வார்கள். 

ஆக விருந்தோம்பல்கள் இந்த மாதிரியான எண்ணங்களுடன் நாட்களை கடத்தி விடும் என்பதை நிஜமாக என் அனுபவத்தின் மூலமாக நான் இங்கு சொல்லவில்லை. (நம்பாதவர்களும் நம்பித்தான் ஆக வேண்டும் என தாழ்மையுடன் சிரம் தாழ்த்தி கேட்டுக் கொள்கிறேன்.... :) ) இது விருந்தோம்பல்கள் செய்தவர்கள், விருந்தோம்பலில் திளைத்தவர்கள் என ஒவ்வொருவரும் கதையாகவோ/ கற்பனையாகவோ, எழுதி/ சொல்லி, கேள்விபட்டதை மட்டுந்தான் சொல்கிறேன். 

முன்பு  இந்த விருந்தோம்பலை குறித்து  ஒரு கதை எப்போதோ சிறுவயதில் படித்தது நினைவுக்குள்  வருகிறது. 

ஒரு குடும்பம் தங்கள் வீட்டுக்கு வேறு உறவுகள் இரண்டொரு நாள் தங்கிச் செல்வதாக வரும் கடிதம் (அந்த காலத்தில் கடிதந்தானே. )  கண்டு, அவர்கள் வருவதையும், அவர்களுக்கு உபசாரங்கள் செய்வதை விரும்பாதவர்களாவும் , அவர்கள் கடிதம் போட்டதே வந்து சேராத மாதிரி காட்டிக் கொள்வதற்காவும் அவர்கள் வருவதற்குள் பக்கத்து ஊரிலிருக்கும் வேறு ஒரு உறவினர் வீட்டுக்கு  இரண்டு நாட்கள் தங்கி வரலாமென அவசரமாக கதவை பூட்டிக் கொண்டு கிளம்பிச் செல்வார்கள். ஆனால் அங்கு அவர்களும், அன்றுதான் இதைப்போல் எண்ணம் கொண்டவர்களாக அருகிலிருக்கும் ஊரில் உள்ள  வேறொரு சொந்த உறவின் வீட்டுக்கு கிளம்பி போயிருப்பதாகவும், வருவதற்கு இரண்டொரு நாள் ஆகுமென கூறிச் சென்றதாகவும், பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் சொல்வார்கள். அவர்கள் சென்று தங்க விருப்பம் கொண்ட அந்த உறவு  யாரென இவர்கள் விசாரிக்கும் போது, பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் தங்களுக்கு   தெரிந்த வரையில் ஊர், பெயர் எனச் சொன்னது  தாங்களாக இருக்கக் கண்டு அதிர்ச்சியடைவார்கள். வேறு வழியின்றி திரும்ப கிளம்பி தங்கள் வீட்டிற்கே சென்றால், அங்கு "இரு பக்க மேளமே" என எண்ணி அக்குடும்பத்தின் தலைவரும்  தலைவியும் பேசிக் கொள்வதென்று கதை  மிகவும் நகைச்சுவையாக இருக்கும். கதையின் பெயர் "விருந்து சாப்பாடு." என நினைக்கிறேன். யார் எழுதியது என்றெல்லாம் நினைவில்லை. எங்கள் அம்மா பள்ளி கோடை விடுமுறை நாட்களில், இது போன்ற நகைச்சுவை கதைகளை படித்து சொல்வார்கள். எழுத்தின் சுவாரஷ்யத்தில் நாங்களும் மறுபடி படிப்போம். அதனால் ஏதோ நினைவிலுள்ளது. 

அதே போல் சிறுவயதில் பாட்டியிடம் கேட்ட கதை ஒன்றும் நினைவில் உள்ளது. 

ஒரு புதிதாக திருமணமான மாப்பிள்ளை தன் மாமியார் வீட்டிற்கு மகிழ்ச்சியோடு விருந்தோம்பலுக்கு செல்வார். அவர் மனைவியும் தன்னையும், கணவரையும்,  விருந்துக்கு அழைக்க வந்த தன் தாய் தந்தையருடன் தங்கள் வீட்டுக்கு வரும்படி  வறுப்புறுத்தி கணவரை அழைத்து விட்டு, தன் தாய் தந்தையாருடன் தன் அம்மா வீட்டிற்கு ஒரு வாரம் முன்பாகவே சென்றுள்ளார். எனவே இந்த மாப்பிள்ளை அடுத்த வாரத்தில் ஒருநாள், தன் அம்மாவிடம் தான் ஒரு வாரத்திற்கும், மேலாக அங்கு சென்று தங்கி விட்டு வரும் போது தன் மனைவியையும் அழைத்து வரப் போகிறேன் எனச் சொன்னதும், தாயின் முகத்தில் தெரிந்த கவலை கண்டு, "என்னம்மா. . நான் அங்கு சென்று கொஞ்ச நாட்கள் போல தங்குவது உனக்கு பிடிக்கவில்லையா? எனக் கேட்டதும்,  "மகனே, நீ உன் மாமியார் வீட்டிற்கு சென்று வருவதில், எனக்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை. ஆனால் " விருந்தும், மருந்தும் மூன்று நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் "என்ற (மூத்தோர் சொல்வாக்கு) பழமொழி உனக்கு தெரியாதா? அதை நினைத்தேன் கவலை வந்தது" என்றாள் தாய். 

"அம்மா. அவர்கள் வீட்டில் அனைவரும் வருந்தி, வருந்தி அழைக்கிறார்கள். நம்மை விட அதிகப்படியாக வயல் வரப்பும், கன்றும், மாடுமாக இருக்கும் அவர்களை விட, நாம் கொஞ்சம் வசதி குறைந்தவர்கள்தான்.. ஆனாலும் அவர்கள் விரும்பிதானே இங்கு வந்து மணமுடித்தார்கள். எனவே அங்கு எனக்கென்றும் ராஜ உபசாரந்தான் நடக்கும். எனவே வீணாக கவலைப்படாதீர்கள்." என சமாதானபடுத்தியதும், அம்மா சொல்வாள். 

" மகனே, உன் நம்பிக்கைக்கு ரொம்ப சந்தோஷம். உனக்கு நல்ல உபசாரங்கள் செய்வார்கள் என நானும் நம்புகிறேன். நீ எனக்கு ஒரே பிள்ளை. உனக்கு கிடைக்கும், பெருமைகள் என்னை மிகவும் சந்தோஷபடுத்துவதைப் போன்று உன் அவமானங்கள் என்னை காயமும் படுத்தும் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். சரி.. போய் விட்டு வா.... ஆனால், அங்கு உனக்கு இலையில் என்று வெறும் சோறும், பருப்பில்லாத குழம்பும், அலட்சியமாக வந்து  அமர்கிறதோ அன்று கிளம்பி வந்து விடு... அதற்கு மேல் அங்கிருந்தால்  உனக்கும்  சரி, எனக்கும் அங்கு மதிப்பில்லை.. " என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தாள். 

இவர் அங்கு கிளம்பி போனதிலிருந்து இரண்டொரு நாள் அந்த மாமியார் வீட்டில் உண்மையிலேயே ராஜ உபசாரந்தான். காலை விதவிதமான பலகாரங்களுடன், மதியம், இரவென தலைவாழை இலை போட்டு, சிறப்பான உணவுகள் பறிமாறியதுடன், வெள்ளி டம்ளரில் பாயாசமுமாக அமர்க்களமான உபசாரங்களுமாக திணறிப் போனார் நம் மாப்பிள்ளை. 

மனைவியின் அன்பிலும், மாமனார். மாமியாரின் மரியாதையிலும், மனைவியின் உடன் பிறந்தவர்களின்  அன்பான கேலி குறும்பு கலகலபேச்சுகளிலும் இவர் உலகத்தையே மறந்து விட்டார் என்று கூடச் சொல்லலாம்.( இதில் தன் அம்மாவின் நினைவு எங்கிருந்து வரும். அந்த நேரம் வானத்திலிருந்துதான் நீ உதித்தாய் என யாராவது சொன்னால் கூட ஆமென்று தலையாட்டி ஆமோதித்து விடுவார்.) 

மேலும் வந்த  இரு தினங்களில், இனிப்புகள், வடை பாயசத்தோடு என உணவுகள் தினுசு, தினுசாக இல்லையென்றாலும், வாய்க்கு ருசியாக பலவித காய்களோடும், கனிகளோடும் உபசாரமாக இருந்தது 

அந்த நாட்களும் மறுநாளுக்கு  நகர அன்று அதுவரை உணவருந்தும் வேளாவேளைக்கு மாமனாரோ, இல்லை, புடவை தலைப்பை இழுத்து போர்த்தியபடி மரியாதையுடன் வந்தழைக்கும் மாமியாரையோ தவிர்த்து அந்த ஐந்தாவது நாள், அவர்களின் கடைக்குட்டி பையன் வந்து மாப்பிள்ளை தங்கிருந்த அறையை தட்டி, "வாங்க.. தட்டு போட்டாச்சு. அப்பா சாப்பிட அழைக்கிறார்.. " என அழைத்ததும்தான் கொஞ்சம் அங்குள்ள இங்கிதம் புரிய ஆரம்பித்தது நம் மாப்பிள்ளைக்கு. 

அது வரை தலைவாழை இலையிருந்த இடத்தில் ஒரு தட்டும் டம்ளரில் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தது. தட்டில், வெறும் சோறும், பருப்பில்லாத ஒரு புளிக்குழம்பும் ஆங்காங்கே காய்ந்தும், சில இடங்களில் காயாதபடிக்கு ஒரு சுட்ட அப்பளமும் வந்தமர்ந்தவுடன் தன் அன்னையின் நினைவு லேசாக வந்தது நம் மாப்பிள்ளைக்கு. 

அதுவரை அவர் முதலில் இலையில் கை வைத்து சாப்பிட ஆரம்பிப்பதற்காக பல தடவைகள் அவருக்காக காத்திருந்த மாமனார், "வாங்க மாப்பிள்ளை சாப்பிடுங்க.. என்றபடி, அன்று சாப்பிட்டு முடிந்தற்கான அறிகுறியுடன் எழுந்து கையலம்ப பின்பக்கம்  போனார். அருகிலிருந்த மனைவி," அப்பா, அம்மாவுக்கு கொஞ்சம் வெளியில் வேலை இருக்கு. அதான் இன்னைக்கு சமையல் சரியில்லை. இவ்வளவுதான்....இன்னைக்கு அம்மாவால் பண்ண முடிஞ்சது.. " என்றபடி சொன்னாலும், "இது பண்ணியதே பெரிய விஷயம்" என்ற  அலட்சியம் வெளியில் கிளம்பி கொண்டிருந்த மாமியாரின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. 

" அதன் பின் அன்று மாலையே  வலுக்கட்டாயமாக, உடனடியாக தன்னுடன் தீடிரென கிளம்ப மறுத்து சில நாட்கள் கழித்து, தன் தந்தையுடன் வந்து சேருகிறேன்.. " என்ற தன் மனைவியை, மேலும் வறுப்புறுத்தாது அவள் விருப்பப்படி அவளை அங்கு விட்டு விட்டு தன் அம்மாவின் அறிவுரையை நினைத்து வியந்தபடிக்கு தன் ஊருக்கு அந்த அன்பான தாய்க்கு மகனாகிய அந்த மாப்பிள்ளை வந்து சேர்ந்தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ. .. ...? 

இந்தக் கதை ஒரு மனிதரின் மான அவமானங்களை குறிப்பிடுவதற்காக எவராலோ கற்பனை செய்யப்பட்டு செவி வழி  கதையாக சுற்றி வந்ததோ, அதுவும் தெரியாது. ஆனால், விருந்து என்பது செய்பவர்களுக்கும், சாப்பிடுவர்களுக்கும் பொதுவாக நீண்ட நாட்களுக்கு நிலைத்து  நின்று எடுபடாது என்பதை புரிய வைக்கிறது. 

அது சரி...! இதற்கும் மருந்துக்கும் என்ன சம்பந்தம் எனப் பார்த்தால், அந்த காலத்திலிருந்தே உடல் நிலை பாதிக்கும் போது, மூன்று வேளையோ, இல்லை அதிகப்படியாக மூன்று நாட்களுக்கோ மருந்தை கையாள சொல்லி, மருத்துவர்கள் தருவார்கள். அதற்குள் அந்த நோயும் அந்த மூன்று வேளை, இல்லை மூன்று நாட்கள் மருந்துக்கு கட்டுப்பட்டு, படிப்படியாக நம்மை விட்டு அகன்று விடும். விருந்தும் தினசரி ஒரேடியாக விதவிதமாக திகட்டும்படி சாப்பிட்டால், வயிறு ஒவ்வாமை வந்து விடும். அதனால், இந்த விருந்துக்கும், மருந்துக்கும் ஒரு முடிச்சு போட்டு அந்தக்கால பெரியவர்கள் இவ்வாறு கூறி வந்தனர். (அப்பாடா.. கடைசியில் பதிவின் தலைப்புக்கு  ஏற்றபடி ஒருவழியாக விளக்கம் தந்து விட்டேன் என நினைக்கிறேன். :) ) 

இதில் சில உபாதைகளுக்கு சிலருக்கு வாழ்நாள் முழுக்க மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சிலரை நலம் விசாரிக்கும் போது," ஏதோ இந்த மருந்துகளின் துணையால்தான் நடமாடிக் கொண்டிருக்கிறேன். " என்பார்கள். சிலருக்கு ஒன்று மாற்றி ஒன்றாக ஏதேதோ உபாதைகள் வந்து படுத்திக் கொண்டேயிருக்கும். (சற்றேறக்குறைய என்னைப் போல என வைத்துக் கொள்ளுங்களேன். . ) எதற்கென்று மருத்துவரை அணுகி, எதற்கென்று மருந்து சாப்பிடுவது? அப்படியே போனாலும், நம் பாலாஜிக்கு  விவேக் (கடவுள் அல்ல... ஆனால், அவரும் அப்படித்தான் சொல்வார். :)) சொல்வது போல் "ஏதாவது ஒண்டிரண்டு உபாதைகள் எனச் சொன்னால் பரவாயில்லை. உன் வியாதிகளுக்கு ஒரே ஒரு மருந்துதான்  தீர்வு" எனச் சொல்லி விடுவார்களோ என கொஞ்சம் தயக்கமாக உள்ளது.... :) எப்படியோ எல்லோரும் நோய் நொடிகளின்றி நலமாக வாழ அவரவர்களுக்காவும், மற்றவர்களுக்காகவும் இடைவிடாது இறைவனை பிரார்த்தித்துக் கொள்வோம்.🙏.

ஏதோ எனக்குள் தோன்றிய சாதாரண எண்ணங்களை பகிர்ந்துள்ளேன்.  இப்போதுள்ள இந்த காலகட்டத்தில் மேற்சொன்ன கதைகளின்படி எதுவும் நடவாது. நகைச்சுவையாக எழுதி பகிர்ந்ததை நகைச்சுவைக்காக படித்தவர்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏. 

Thursday, April 23, 2015

இடை (வெளி) வேளை…

காலங்காலமாய்  இந்தக் கதைகள்  என்பது நம்மிடையே ஒன்றி விட்டது. கதைகள் சொல்வதும் கேட்பதும் படிப்பதுமாய், நம் அன்றாட பணிகளின் நடுவே  முக்கியத்துவம்  வாய்ந்ததாய் கதைகளும் காலூன்றி கொண்டு விட்டன. ஒரு குழந்தை வளர்ந்து வரும் போது அந்த வீட்டின் பெரியவர்கள்( தாத்தாக்கள், பாட்டிகள் ) தாங்கள் படித்த, பார்த்த. கேட்ட கதைகளை அப்படியேவோ, இல்லை சற்று புனைந்தோ, தம் வாரிசுகளின் மனதில் பதிய வைத்தனர்.( நான் அந்த காலத்தை சொல்லுகிறேன்.) குழந்தைகளின் அறிவை பற்றிய கதைகள், நீதிக்கதைகள், ராஜா ராணிக் கதைகள், நகைச்சுவைக் கதைகள், விலங்கு, பறவையினத்தின் ஒற்றுமை சார்ந்த கதைகள், வாழ்வின் தத்துவக் கதைகள், ஏன் சமயத்தில், நம் விருப்பத்திற்காக பேய் கதைகள், என்று எத்தனையோ கதைகளுடன் நம்மையும் வளர்த்து வந்தனர்.

பள்ளி பாடங்களுடன் இந்தக் கதைகள் அத்தனையையும் தினமும் நம் மனது அசை போட்டாலும், அவ்வப்போது பேய் கதைகள் ஒரிடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டு இரவு பகலாக மனதில் உலா வந்தபடியே இருக்கும். அதுவும் நடுநிசி  12 மணி என்று ௬ட பாராது நம்மை தட்டி எழுப்பி “உலாவ போகலாம் வருகிறாயா? ‘என்று கேட்டுத் தொலைக்கும். நாமும் உள்ளுக்குள் பயந்து நடுங்கினாலும், மறுநாள் காலை நம் பள்ளி தோழர், தோழிகளுக்கிடையே, நம் வீரத்தை வெளிக்காட்டும் விருப்புடன் அந்த கேட்ட கதைகளுக்கு நடுவே நிறைய விசயங்களை உட்புகுத்தி, ( நமக்கும் பிறந்தவுடனே இந்த புனையும் திறன் அதுவாக வந்து விடுமல்லவா ?)  முதல்நாள் இரவு பேயை கண்டதாகவும், அதனிடம் பேசியதாகவும், அது தன்னை எழுப்பியதாகவும், “கதைகளை” கட்டி விடுவோம். இப்படியே இந்த மாதிரி பெரியவர்கள் நமக்கு சொன்ன எல்லா கதைகளும் கை கால் முளைத்து  தன்னை தானே பிறருக்கு பரிமாறிக் கொண்டு வளர்ந்து, வேகமாக பரவி ஒருநாள் கதை சொன்ன நம் வீட்டு பெரியவர்களுக்கே நம் மூலமாகவே வந்து சாரும்போது அவர்கள் “அந்தக்கதை” கேட்டு பெரும் ஆச்சரியபடுவார்கள். (இப்படி ஒரு கதை உண்டா என்று?) வாழ்வே நித்தமும் ஒரு கதை என்று வாழ்ந்து அனுபவித்திருந்த அவர்களுக்கா புரியாது.. ஆனாலும் நமக்காக திகைப்பை வெளிப்படுத்தி,  நம் திறமையை, நம்முள் ஒளிந்திருக்கும்  கற்பனாசக்தியை வெளிக்கொணர்ந்த பெருமையோடு பாராட்டும் உத்தி அது.

அவர்கள் காலத்தில் நாடகங்கள், தெருக்௬த்து இவைகளின் மூலமும் நல்ல கதைகளை கேட்டு பார்த்து ரசித்தாக சொல்லக் கேட்டு  வளர்ந்தோம். மெளன  படங்கள் என்று வெறும் காட்சிகளை மட்டும் படமெடுத்து திரையிலிட்டு ஓடவிட்டு, திரைக்கு முன் அதன் வசனத்தை சொல்லி இருவர் விளக்க, அதையும் கதைகளுக்காக ரசித்து பார்த்தனர் . காலம் முன்னேற மேம்பட்டு மெளனப் படங்கள் பேசும் படங்களாக மாறி திரைக்கதையை வளர்த்து வசனங்களை அதனூடேயே இணைத்து ரசிகத் தன்மையை ௬ட்டின. பின் நாமும் வளர்ந்ததும்  தரமான கதைகள் என புத்தகங்கள் பலவும் படித்து ரசித்து பரிமாறிக் கொண்டோம். திரைப்படங்களும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நம் முன் காட்சியாக்கி காசுடன் அவையும் வளர்ந்தன. எத்தனையோ கடமைகள் நம் கையை இறுக பிடித்திருந்தாலும், ஒரே மாதிரி அடித்துச்செல்லும்  மன அலைகளின் நடுவே, வித்தியாச மனநிலை வேண்டி கதைகளை விரும்பினோம், கலையாக வளர்த்தோம்,  பாடமாக மதித்தோம், வாழ்வாகவும் ஏற்றோம், புகழுக்காக  அரவணைத்தோம், பொன்னெவும் போற்றினோம். இப்படியாக அது நம் வாழ்வில் இன்று அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது.

தலைப்புக்கும் இத்தனை கதைகளுக்கும் இப்போ என்ன சம்பந்தம்?  என நீங்கள் குழம்புவது  கொஞ்சம் தெளிவாகவே எனக்குப் புரிகிறது, சொல்கிறேன்.  (“நாசமாபோச்சு! இனிமேதான் சொல்லவே ஆரம்பிக்க போறியா?” முணுமுணுக்கும் சத்தம்  கேட்கிறது ) யார் அது?  யாருங்க அது? ஏன் இப்படி இடையிலே வந்து ஒரு பதிவை எழுத விடாமே…  ( யாராயிருந்தா என்ன? சீக்கரம் முடித்து வை.! பொறுமைபோவதற்குள்.! சத்தத்தின் சீற்றம் சற்றே பெரிதாகிறது.  )

சரி சரி விசயத்துக்கு வருகிறேன்..!  நாம் இன்றும் எந்த ஒரு திரைப்படம் கண்டு களிக்க திரையரங்கிற்கு போனாலும் படம் முடிவதற்குள் நடுவில் நம்மை பிடித்து வைத்திருக்கும் கதையோட்டத்தின் பிடியிலிருந்து சிறிது விச்ராந்தியாக நம் மனதை திசை திருப்ப, ஒரு பதினைந்து நிமிடங்களை “இடை வேளை” என்ற பெயருடன் ஒதுக்குவார்கள்.  அந்த இடைவெளியில் கண்ணுக்கும். மனதுக்கும் ஓய்வு தந்து, வாய்க்கும் வயிற்றுக்கும் வேலை தந்து அதன் பின் நம் இருக்கைக்கு திரும்பி  திரையில் கவனம் செலுத்துவோம். (சிலர் கதையின் கொடுமையில் இருந்து தப்பிக்க அந்த இடைவெளியை பயன்படுத்தி வெளியேறி விடுவர். அது வேறு விஷயம். அவரவர் மன நிலையை பொறுத்த விஷயம்.) அந்த காலத்தில் இடைவேளையில் விளம்பர படங்கள், அடுத்து அந்த திரையரங்கில் வெளிவரப் போகும்  படங்களின் சில காட்சிகளை பாடலுடன், இதயம் அதிரும் ஒலியோடு சண்டை காட்சிகளின் சில பகுதிகள் என திரையிடுவார்கள். அதையும் விருப்பம் இருப்பவர்கள் அமர்ந்து  ரசிப்பார்கள். இதெல்லாம் ஒரு மாறுதலை ரசிக்கும் சமயத்திலும் வரும் மாறுதல்தான்.  இப்போதெல்லாம் அந்த முறை இல்லையென நினைக்கிறேன்.  இப்படி திரைப்படங்கள் நல்ல கதைகள் என்று மெனக்கிட்டு  கொண்டிருந்த காலம் போய். மனதின் திசை மாற்றத்திற்காக  டி.வி,  கணிணி  என புது புது பொழுது  போகும் அம்சங்கள் வந்து விட்டன.

(விசயத்துக்கு வாம்மா! சும்மா வளவள”ன்னு கையில் மவுஸை ரம்பமாக நினைத்துக் கொண்டு அறுக்காதே... மறுபடியும் முணுமுணுப்பு...)

அட.! கொஞ்சம் இருங்க.!  சொல்ல வந்ததை  இதோ.! சொல்லி  முடித்து விடுகிறேன்…மேலே சொன்ன மாதிரி ஒரு மாறுதலுக்கு நிறுத்தி, “இடைவேளையை” பதிய வைத்து (எப்படியோ!  நானும் ஒரு  பதிவு போட்ட மாதிரி ஆச்சில்லையா ?) இடைவேளை முடிந்தவுடன் நாளை தொடர்கிறேன். “இடைவேளை” நேரத்தை அதிகரித்து விட்டால் “இடைவெளியும்” இடம் பிடித்துவிடுமென்பதால், நாளையே தொடங்கி விரைவில் “சுபம்” போட்டு விடுவேன். (அட! என்ன கஷ்டகாலம்டா.! என்ன பதிவு இது? இடைவேளை, இடைவெளி என்று, இப்படி பெரிசா எழுதி பொறுமையெல்லாம் சோதிச்சி… கதை எழுதி கிழித்ததில் இவங்களுக்கு நிஜமாவே முத்தி போச்சு போலே! இவங்களுக்கு முத்தினது போறாதுன்னு நம்மையும் அந்த கேஸ்லே சேர்த்துடுவாங்கன்னு நினைக்கிறேன். குரல் பலமாக ஒலித்தது.)

ஓ இவங்களா? இப்பத்தான் யாருன்னு புரிஞ்சது.. சரிங்க  இதோ முடிச்சிடுறேன்.   அந்த நால்வரின் மனதைதான் இன்று நிறுத்தி நாளை  தொடருகிறேன் என்றேன். இடை வேளையின் இடைவெளியில் கண்ணுக்கு குளிர்ச்சியாக விளம்பர படத்துக்கு பதிலாக  இதைப் பாருங்களேன். நன்றி ( போ!! இது வேறேயா….? )










படங்கள்: நன்றி கூகுள்

Sunday, March 1, 2015

கனவு 2 ( இரண்டு )

நல்ல அசதியான தூக்கம்..!  கண்கள் மூடியிருக்க இருளாக இருந்தது.ஆனாலும் எங்கிருந்தோ வந்த சிறு வெளிச்சத்தில் நிறைய உருவங்கள் தெரிந்தது. கனவுமாதிரியும் இருந்தது, ஆனால் அது கனவாகவும் தோன்றவில்லை.! இல்லையில்லை, நிஜமான உருவங்கள்தான், எல்லா கடவுள்களும் வாய்மூடி மெளனித்து ஆனால் இள நகையுடன் அமர்ந்திருக்க, கொஞ்சம் தள்ளி மனித உருவங்களாய் சிலரது உருவங்கள், அட! நமக்கு தெரிந்த உருவங்களாய் இருக்கிறதே.! என்று அருகில் நான் சென்று பார்க்க அனைவருமே ஒட்டு மொத்தமாக,கண் திறந்து வருக.! வருக!  என்றார்கள்.

நானும் புன்முறுவலுடன் வந்தனம் செய்து விட்டு, “உங்களையெல்லாம் இங்கு பார்ப்பேன் என்று கனவில் ௬ட நினைக்கவில்லை.!” என்று ஆரம்பித்தேன்.

“இப்போது மட்டும் என்ன? அதில்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.!” அருகிலிருந்து  சரேலென ஒருகுரல் என்னை தாக்கியது. யார் சொல்வது என்று பார்ப்பதற்குள், “என்ன  இப்போதெல்லாம்  எழுத்துலகில், எங்களை பற்றியெல்லாம், இல்லையில்லை! எங்களைப் போலெல்லாம் எழுதி, நீங்கள்  மறு சுழற்சி செய்கிறீர்களாமே.? “கணீரென்ற குரல் காதுக்குள் வந்து விழுந்தது.

அட யார்.? நம்ப முண்டாசு கவிஞர்..!  “ஐயா நலமா.?ஆமாம். ஏதோ உங்கள் புண்ணியம்.. உங்கள் பேர் சொல்லி நாங்களும் வாழப் பார்க்கிறோம்..! என்ன இருந்தாலும், தங்களை போல் நாங்கள் எல்லாம் வர முடியுமா.? “என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்?” என்று தாங்கள் எதிர்பார்த்தபடி, இன்று எங்கள் சுதந்திரத்தின் தாகங்கள் தீர்ந்து” என்று  நான் ஆரம்பித்த உடனே தொண்டையில் ஏதோ அடைத்த மாதிரி பேச்சே வரவில்லை.!  “மறுபடியும் தாகமா.?” அவர் குரலில் தொனித்தது, ஏளனமா? கோபமா? என்று ஒரு கணம் யோசிப்பதற்குள், எப்படி? நீங்களெல்லாம் எப்படி? என்றார் அதே குரலில்.....!  தொண்டையை செருமியபடி, “நீங்களின்” அர்த்தத்தை  நான்  உள்வாங்கியபடி, “நீங்கள் எதிர்பார்த்தபடி பெண்ணுலகம் இப்போது புதுமையாக முன்னேறி இருக்கிறது. புதுமை பெண்களாக…நாங்கள் புவனத்தில்” முடிப்பதற்குள் “பார்த்தேன்! பார்த்தேன்! பார்த்துகொண்டேதான் இருக்கிறேன்.”என்ற குரலின் முரட்டுத்தனத்தில், மேற்கொண்டு பேச எனக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை.!

“யாகவராயினும் நா காக்க ! என்ற அமைதியான குரலில் சற்று தெளிந்து நான் திரும்ப, ஏடுடன் என்னை  ஏறிட்டார் வள்ளுவனார்..! திருவள்ளுவரா.! சரி..! சரி..! முதலாமவருடன் சற்று சமாதானமானதும் அப்புறமாக பேசலாம் !என்று முடிவெடுத்துப் பின் இவரை கண்ட மகிழ்வில், ”வணக்கம் ஐயா! தங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி! தங்கள் குறள் வழியில் நாங்கள் நடக்கிறோம்.! ஒவ்வொன்றும், சிறு வயதிலிருந்தே கற்ற சிறந்த குறளின்படி .. முடிப்பதற்குள் இவரும் இடைப் புகுந்தார்.

சரி.! “சொற்க் காத்து சோர்விலாள் பெண்!” என்ற குறள் நினைவிலுள்ளதா.? என்று தேர்வில் கேட்பது போல் அவர் வினவவும், “தெரியுமே.! என்றபடி அவசரமாக, “தற்காத்துத் தற்கொண்டான்ப் பேணி..”என்று ஆரம்பிக்க, “நிறுத்து! உனக்கு தெரியுமென்பது எனக்கும் தெரியும். நீங்கள் அவ்வழியில் நடக்கிறீர்களா.?” என்றபடி பதிலை எதிர்பாராத முக பாவத்துடன் அவர் ஏட்டைப் புரட்டியபடி சிந்தனையில் மூழ்கிப் போனார். “என்னடா இது.? எதைப் பேச வந்தாலும் அனைவரும் ஏதோ “பொடி” வைத்தே பேசுகிறார்களே.! என்று என் மனம் புலம்ப,  இருப்பினும் துணிவை வரவழைத்தபடி, “ஐயனே.! எனக்கு உங்களைப் பற்றி, நீங்கள் அக மகிழ்ந்து தமிழுக்கு தந்த விலை மதிப்பில்லாத, ஈரடி செய்யுள் குறித்து ஏதேனும் திறம்பட நான் எழுதி வரும் என் உலகில் எழுத வேண்டும் என்ற அவா.! தாங்கள்தான் மேலும் உதவி செய்ய வேண்டும்..! மேலும்.. நான் என் உலகம்  என்று ,சொல்ல  வந்தது,” நான் முடிப்பதற்குள், இடைமறித்தவர், "அதுதான் தமிழ் என்றுமே மணமாக  இருக்க, மணக்க, மணக்க ஒருவர் என் குறள் அணைத்தினையும், மனனம்  செய்து அதற்கு தக்கபடி ஒவ்வொரு சிறப்பான கட்டுரைகளை எழுதி,திருக்குறளினால், என்னையும் பெருமை படுத்தி,தானும் பெருமையுடன் உயர்ந்து  வருகிறாரே.! அதையும் கெடுக்கலாம் என்ற  நினைப்பா.? என்றபடி, “இவருக்கு ஏதோ உதவி வேண்டுமாம்.! என்று அருகிலிருந்தவரிடம், ஏதோ முணுமுணுத்து விட்டு, “அப்பாடா…! எவ்வளவு நேரம்  அமர்ந்திருப்பது.! கால்கள்  மரத்தே போய் விட்டது.! இதில்  இந்த  அம்மையாரின்  தொந்தரவு வேறு.! என்றபடி எழுந்து மறைந்தே போனார்..

திடும்மென அவர் மறைந்து விட்ட அதிர்ச்சியோடு முண்டாசு கவிஞர் இருந்த இடம் நோக்க, அவர்  எப்போதோ காணாமல் போயிருக்க, அருகிலிருந்தவரை பார்த்தேன்.. இவர்…அட ..! நம் தேசத்தின் தந்தை.! சுதந்திர இந்தியாவுக்காக தன் வாழ்நாள் முழுதும் அர்ப்பணித்தவர்.. அத்தனையும் மறந்து அவரை கண்ட மகிழ்வோடு, பேச ஆரம்பித்தேன். நலம் குறித்த உரையாடல் முடிந்ததும், "சிவனே என்று அமர்ந்திருந்தவரை இப்படி எழுந்து போக வைத்து விட்டாயே.! அப்படி என்ன கேட்டாய்.?" என்று வினவ, நான் விளக்கமளித்தேன். ௬டவே உங்களைப் பற்றியும் பரபரப்பாக எழுத எனக்கு உதவுவீர்களா.? என்ற கோரிக்கையை வைத்ததும், தடி ஊன்றி எழுந்து நின்றார். “ஏற்கனவே ஒருவர் கண்ட கனவில், என்னை சந்தித்து   நிறைய கேள்விகள் கேட்டு, பதிலளித்து அவர் திறமையை கண்டு வியந்து, அவர் அன்பை தட்ட முடியாமல் அவரின் நண்பர்களையும் கண்டு அளவளாவி அந்த மகிழ்வோடு இருக்கிறேன். அந்த மகிழ்ச்சியை முறியடிக்கலாம் என்று இன்று என்னைத் தேடி வந்தாயா.? அவர் எழுதாததையா நீ எழுதப் போகிறாய்?, இல்லை அவர்கள் அளவுக் கெல்லாம் உன்னால் சிந்தித்து எழுத முடியுமென்று நினைக்கிறாயா.? என்று கேள்வி மேல் கேள்வி வந்து விழவும், அவர் என்னிடம் நம்பிக்கையில்லாமல் பேசியதைக்௬ட கண்டு கொள்ளாமல், அவர் குறிப்பிடுபவரை அறிந்து கொண்ட மகிழ்வில். ம்.!“அவர்தானே! அவரை நான் அறிவேன் அவர் பெயர்….” என்று நான் கேட்டு ஊர்ஜித படுத்துவதற்குள், “ஆமாம் !  இந்த காந்திஜீயின் , இரும்பான  மனதேயே கவர்ந்த அவரும் ஒரு காந்தஜீதான்..! அதில் சந்தேகமேயில்லை.! என்றபடி என்னை சட்டை செய்யாமல், வேகமாக நடந்து மறைந்தார்..!

காணும் அனைவரும் இப்படி “பொசுக் பொசுக்”கென்று மறையும் வேதனையில், இன்னமும் தெரிந்த முகங்கள் யாரென்று கவனித்து,  எழுதும் ஆற்றலை வளர்க்க விரும்பிய போது, தள்ளாத வயதிலும், திடமான முகத்துடன் கண் மூடி மந்திரங்கள் ஜெபித்தபடி, “முருகா.!” என்று வாய் விட்டு அரற்றியபடி திரும்பினார். அந்த அம்மையார். அட.! இவர்  நம் தெய்வத்தை வாய் நிறைய அழைக்கிறாரே.! இந்த அம்மையார்  ஔவையார்தான் சந்தேமேயில்லை.! என நினைத்து  “வணக்கம் தாயே,  நானும் தங்களைப் போல் என்னப்பன் முருகனை தினமும், என்பதற்குள்  “கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து, தானும் தன்”  என்று கணீரென்ற குரலில் பாடி முடித்தார். நாம் வாய்த் திறப்பதற்குள், முந்தி கொண்டாரே, என்ற கவலையில் ஏதும் கேட்கத் தோன்றாமல் மெளனித்திருக்க, "குழந்தாய்.! முருகனிருக்க பயமேன்.! முருகனை நேசிக்கிறாய்..! ௬டவே தமிழையும் நேசிப்பதாய் அர்த்தம் அல்லவா.! முருகனும், தமிழும் உன்னை அரவணைப்பார்கள்.! என்றபடி “முருகா! அனைவரையும் காப்பாற்று.! என்று அவரும் நடந்து மறைய, இளநகையுடன் அமர்ந்திருந்த தெய்வங்கள்  அனைவருமே, “சர், சர்” என்று காணாமல் போக, நான் மட்டும் இருளில் தனித்திருந்து  திருதிருவென தவிக்க, பளீரென்ற மயிலுடன் முருகன் ௬டவே முகம் தெரியாத ஒருவருடன் “விர்” ரென்று வந்திறங்கினான்.

முருகா.! முருகா..! நீயாவது என்  தனிமையை விரட்ட வந்தாயே.!  நீதான் எனக்கு என்றும் துணை.! நீ என்றுமே உன்னை மறவாத வரத்தை தந்தருள வேண்டும்.! என்று என் வாய் அரற்ற ஆரம்பிக்க, “சரி.! சரி! நான் ஒருவன்தான் உன்னை பொறுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால்., அன்றே உனக்காக இரக்கப்பட்டு தொலைத்து, உன் அழகு தமிழை சகிக்க கற்று கொண்டேன். என்னுடன் இவரும் மாட்டிக்கொண்டார். இப்போது ௬ட வழியில் சந்தித்த அவ்வைக்காகத்தான்  வந்தேன். சொல்லு! என் பெயர் சொல்லி என்ன எழுதி வைத்திருக்கிறாய்.?” என்றவன். “வேறு வழியில்லை! சகித்துதான் ஆகவேண்டும். என்னுடன் சேர்த்து  நீங்களும்.” என்று அருகிலிருந்தவரிடம் முணுமுணுத்தான். அது அவனை பொறுத்தவரை முணுமுணுப்பாயினும், எனக்கு நன்றாய் கேட்டது.

“நீயாவது என்னை புரிந்து கொண்டாயே முருகா.! என்றபடி, மனதில் எழுதி மனனம் ஆகியிருந்ததை, ஒப்புவிக்க ஆரம்பித்தேன்.

முருகா…
.
அன்றிலிருந்து, இன்றுவரை  நான் இப்பூவுலகில்,
ஆணவமின்றி ஆசைப்படுவது ஒன்று தான்..  முருகா.!
இயல்பான   தமிழால்,   உன்னழகு  நடையோடு,
ஈன்ற  என் கவியை,  புவியில்  சிறப்பாக்குவாய்….முருகா..!
உலகம் முழுவதுமே, போற்றிப் புகழ வேண்டுமென,
ஊமை  நான்,  கனவெல்லாம் கண்டதில்லையே… முருகா..!
எண்ணுவதெல்லாம்  எளிதாக உணர்த்தும் எழுத்தினிலே,   
ஏற்றங்களை மட்டுமே,  பெரிதாக்க வேண்டினேன்… முருகா…!
ஐயம்  களைந்து  உன் அருமைகளை  தினம் சொல்ல,
ஒப்புதல் “தா” வென உன்  மலர்த் “தாள்” பற்றினேன்… முருகா..!
ஓங்கி  உயர்ந்திருக்கும்  உன் புகழை என் “நா”விசைக்க,
ஔவையாய்  என்னை,  அரைநொடியாவது  மாற்றுவாய்…. முருகா..!
அஃத்தொன்றையே, இப்பிறவியில் அருந்தவமாய் நான் பெற்றிடவே,
அல்லும், பகலும்  உன் அடி பணிந்து  துதிக்கின்றேன்..!  முருகா..!

என்று நான் எழுதி வைத்ததை மனப்பாடமாக  ௬றியதும், போதுமா.? சகித்தாயிற்றா.? என்று அருகில் அவரைப் பார்த்து கேட்ட முருகன், என்னைப் பார்த்து, “இனி இவரையும் இடைவிடாது தொழு.! ஏனென்றால் இவர் அருள் இல்லையென்றால் உன் அறுவை எழுத்துக்கள் எதுவும் மேடையேறாது.! என்றான்.

முருகா.. ஒரு சிறு ஐயம்?  இவர் யார் எந்த ஆண்டவர் என  தெரிந்து கொள்ளலாமா? என்றேன்.

இவர்தான் ௬குளாண்டவர்..! இனி எந்தவொரு எழுத்தையும் இவரை வணங்கியே பிரசுரித்து விடு.! என்னை தொந்தரவு செய்யாதே.! என்றபடி மறுபடியும் விருட்டென்று, மயிலுடனும் வந்தவருடனும் பறக்க,” ஓ இவர்தான் ௬குளாண்டவரா ? என்று நான்  பிரமித்து அத்தனை தெய்வங்களையும் கண்ட மகிழ்வுடன்  இருட்டிலிருந்து தீடிரென்று வெளிச்சம் கண்ணில் பட கண் ௬ச விழி  மலர்ந்தேன்.

என்னம்மா.! பதிவு எழுதுகிறேன், பதிவுஎழுதுகிறேன்  என்று பையித்தியமாய் ராத்திரியெல்லாம் அ, ஆ, ன்னாவெல்லாம் சொல்லி புலம்ப ஆரம்பித்து விட்டாய்? என்று மகன் உலுக்கிய மாதிரி இருந்தது. கண்ணைத் திறந்தால், கண்டது அனைத்துமே கனவென்று புரிந்தது. சரி.! மேலும் சிலரை கனவினில் கண்டதாக சேர்த்து  இதையே ஒரு பதிவாக எழுதலாமே என்று தோன்றியது .  இதற்கு “கனவு 2 “ (கனவு 1 ல் ஏற்கனவே முருகனுடந்தான் பேச்சும், வார்த்தையும்) என்று பெயரிட்டு கொஞ்சம்  கற்பனை குழைத்து கட்டிடமாக்கினாலென்ன  என்று  தோன்றியது. கற்பனையாக, கனவில் வந்தவர்களுக்கும், கனவுடன் வந்தவர்களுக்கும் நன்றி…! முடிவில் கொஞ்சம் கற்பனை கலந்து இதையே ஒரு அறுவை  (வழக்கப்படி நீள் பதிவாகத்தான்) பதிவாக எழுதி விட்டேன். மனதில் முருகனை நினைத்து எழுதி வைத்திருந்த கவிதையையும், இந்த பதிவிலேயே இணைத்து விட்டேன். படித்தவர்களுக்கு நன்றி.! (பொறுமையுடன் என்று சொல்லவும் வேண்டுமோ..?)