Sunday, June 15, 2014

அப்பா…


நன்றி கூகிள்...
பெரியப்பா!..” என்று அழைத்தபடி ஓடி வந்து அவர் கைகளை பற்றிக் கொண்டாள் பிரியா.



“வாம்மா! உனக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்! எப்படி இருக்கே? மாப்பிள்ளை நல்லா இருக்காரா?” அவள் தோளை பற்றி லேசாக அணைத்தபடி, அவளை வீட்டினுள் அழைத்துச் சென்றார் அவள் பெரியப்பா சேகர்

பெரியம்மா, அண்ணன், அண்ணி, தங்கை என அன்பு உறவுகள் அவளைச் சுற்றி நலம் விசாரித்து அன்பு கடலில் மூழ்கடித்து அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

“பிரியா! போய் குளித்து விட்டு சாப்பிட வா! உனக்கு பிடிச்ச அடையும் அவியலும் பண்ணியிருக்கேன்! சீக்கிரம் வா! சூடு ஆறிடும்.” என்று அன்பு கட்டளை இட்டபடி பெரியம்மா உள்ளே சென்றாள்.

அண்ணனும் அண்ணியும் “அதேயே சொல்லி விட்டு முக்கியமான  வேலை ஒன்றுக்காக வெளியில் சென்று வந்து விடுகிறோம்” என்று ௬றி அகல, தங்கை “உன் லக்கேஜை உன் அறையில் கொண்டு வைக்கிறேனக்கா!” என்றபடி மாடியேறி சென்றாள்.

“பெரியப்பா! தம்பி இன்னுமா வரவில்லை? என்ற பிரியாவுக்கு, “அவனுக்கு வேலை அதிகமா இருக்கிறதாலே, இன்னைக்கு புறப்பட்டு நாளை காலையிலே வந்துடுவாம்மா! மறுநாள்தானே நிச்சயதார்த்தம்! சரி! நீ போய் குளித்து விட்டு வா! சாப்பிடலாம்! என்ற பெரியப்பாவை கனிவுடன் பார்த்த பிரியா “சரி! இதோ! வந்து விடுகிறேன். நீங்கள் போய் சாப்பிட ஆரம்பியுங்கள். நான் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்!” என்றபடி தன் அறைக்கு சென்றாள்.

             இரண்டு நாட்களும் வீடு கலகலப்பாக இருந்தது. தன் ஒரே தம்பியின் நிச்சியதார்த்தம், உறவினர் ௬ட்டத்தின் கலகலப்போடு நன்றாக முடிய, அவன் திருமண தேதியும், இரு மாதத்திற்கு பின் முடிவு செய்யபட்ட சந்தோஷத்தில், அவள் தம்பியும், வேலை பார்க்கும் தன் ஊருக்கு திரும்பிச்செல்ல, பிரியாவும் தானும் ஊருக்கு கிளம்ப போவதாக சேகரிடம் சொன்னாள்.

      “கல்யாணத்துக்கு நிறைய வேலை இருக்கு பிரியா! அதனாலே நீ இப்ப வந்த மாதிரி வராம பத்து இருபது நாளுக்கு முன்னாடியே புறப்பட்டு வந்து விடு! எனக்கும் முன்பு மாதிரி தனியா எல்லா வேலையும் பண்ண முடியல்லை!” என்று இடையில் வந்து சொல்லிச் சென்ற பெரியம்மாவுக்கு “சரி பெரியம்மா!” என்றவள் “பெரியப்பா! உங்களிடம் கொஞ்சம் தனியா பேசனும்!” என்றவாறே அவரது அறையை நோக்கி நடந்தாள்.

    “அதற்கென்ன! பேசலாம் வா!” என்றபடி தன் அறைக்கு அவளை அழைத்துச் சென்ற சேகர், “என்னம்மா பிரியா? நானும் பார்த்தேன்! நீ நேற்றிலிருந்து ஒரு மாதிரியாகவே இருக்கறே! என்ன விஷயம்? என்றார்.

   “ பெரியப்பா! நேரடியாக நான் விஷயத்துக்கே வருகிறேன். உங்களுக்கு பிறந்த இரு குழந்தைகளோடு என்னையும் என் தம்பியையும் நீங்கள்தான் சிறுவயது முதல் வளர்த்து ஆளாக்கி என்னையும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து இப்போ என் தம்பிக்கும் நல்ல இடத்தில் பெண் பார்த்து ஒரு அப்பா அம்மா ஸ்தானத்திலே நின்னு எல்லாம் பண்ணறீங்க! நடுவிலே இந்த ஆளுக்கு இங்கு என்ன பெரியப்பா வேலை? இவர் ஏன் என் திருமணத்திலேயும் கலந்துகிட்டாரு? இப்போ தம்பி நிச்சயத்திலேயும்…. இன்னமும் அவன் கல்யாணத்திலேயும் வந்து அசிங்கபடுத்துவாரா? பெரியப்பா! ஏன் எந்த விஷயத்தையும் அவருக்கும் சொல்லி அவரையும் ௬ப்பிடுறீங்க? என்று கோபமாக படபடத்தாள் பிரியா.   
        “ஏன்னா? அவன் உன் அப்பாம்மா! உன்னை பெற்றவன் அவன்… உங்களுக்கு நடக்கிற நல்லதுகளை பார்க்கிற உரிமை, சந்தோசம், திருப்தி அவனுக்கில்லியா? அதுக்கும் மேலே என் தம்பிக்கு நான் சொல்லி வரவழைக்காமே, இருக்க முடியுமா? சொல்லு!” என்று நிதானமாக ஆரம்பித்த பெரியப்பாவை இடைமறித்தாள் பிரியா.

               “அப்பாவா? அவரை அப்பா என்று அறிந்த நாள் முதல் கொண்டு மனதும் உடம்பும் ௬சுகிறது! பெரியப்பா! காதலிச்சு தன் விருப்படி, தன் பெற்றோர் பேச்சை ௬ட எதிர்த்து, கல்யாணம் செய்துகிட்ட அம்மாவை, கொன்ற கொலைகார பாவின்னு தெரிஞ்ச நாள் முதலாய் இவரும் போய் சேர்ந்திருக்க ௬டாதான்னு மனசு அடிச்சுக்குது, ஜெயில் வாசம் முடிஞ்சு எங்கேயோ கண்காணத இடத்திலே இருந்தவர், ஒருநாள் திடீர்னு எங்க ஞாபகம் வந்து இங்க வந்து, நான்தான் உங்கள் “அப்பான்னு” அறிமுகப்படுத்திண்டு நின்ன அந்த நாளை என்னாலே மறக்கவே முடியாது பெரியப்பா! நம்ம பெரியம்மா அந்த கதையெல்லாம் எங்களுக்கு சொன்ன, அந்த நிமிடத்திலிருந்து, அவரை பார்த்தாலே எங்களுக்கு பிடிக்கல்லே பெரியப்பா! ஆனா, அதுவரைக்கும் எங்களுக்கு எந்த விபரமும் சரியா தெரியாததாலே உங்களைதான் பெரியப்பா நாங்க அப்பா, அம்மாவா நினைச்சு வாழ்ந்துகிட்டு வந்தோம். இப்பவும் உங்களை தவிர வேறு யாரையும்……மனசாலே ௬ட அப்பாவா ஏத்துக்க முடியாது!” என்றபடி கண்கள் கலங்க பேச முடியாது, இன்னமும் சற்றும், கோபம் குறையாத குரலில் தடுமாறினாள் பிரியா. 

  அவள் அருகில் வந்து அன்புடன், அவள் கைபிடித்து கட்டிலில் அமர வைத்த சேகர், “நீங்க எப்பவுமே என் குழந்தைகள்தான், பிரியா! அதுலே எந்த மாற்றமும் கிடையாது! என்றதும் “அப்படியானால், இனி அவரை நீங்க தம்பி கல்யாணத்துக்கு வரச் சொல்லாதீங்க பெரியப்பா! தம்பியும் வருத்தபட்டான். நான்தான் உங்ககிட்டே பேசி உன் கல்யாணத்துக்கு அவரை வராமே தடுக்கறேன்னு, அவனை சமாதானபடுத்தி ஊருக்கு அனுப்பினேன் என்றாள் பிரியா.

         “இந்த கல்யாணத்தை மட்டும் அவன் பார்த்துட்டு அவன் பழையபடி தான் இது வரைக்கும் இருந்த இடத்துக்கே போயிடுவாம்மா! தன் குழந்தைங்க திருமணத்தை பார்க்கற வாய்ப்பை ௬ட அவனுக்கு நான் தராமல் போனால் எப்படி? அவ்வளவு பெரிய பாவத்தை நான் எப்படி செய்வேன்? பெரியப்பா குரல் கம்ம ௬றியதை கேட்டதும் பிரியாவுக்கு ஆத்திரமாக வந்தது.

             “ யார் பாவி? நீங்களா? இல்லை அவரா? அந்த பாவி மேல் ஏன்தான் இப்படி இரக்கம் காட்டுறீங்களோ தெரியல! தம்பி திருமணத்திற்கு அவர் வந்து பார்த்து விட்டு எங்கேயோ போவதற்கு முன், இப்போதே அவர் ஒரேடியாக போய் தொலைந்தால்தான் என்ன? கோபத்தில் வார்த்தைகள் பிரியாவிடமிருந்து வெடித்தன.

            “பிரியா!!!!! சேகர் ஆவேசமாக கத்தினார். பின் ஒரு நிமிடத்தில் சற்று சுதாரித்து கொண்டவராய் அவள் அருகில் வந்து கையை பிடித்தபடி, பிரியா! என் தம்பியை பற்றி உனக்கு தெரியாது! அதனால்தான் இப்படியெல்லாம் பேசுகிறாய்!

பிரியா! உங்களுக்கெல்லாம் தெரியாத உண்மையை நான் இப்போது அவனுக்கு தந்த வாக்குறுதியையும் மீறி சொல்லத்தான் போறேன். இப்போது நீ புரிந்து கொள்ளும் வயதையும் அடைந்து விட்டாய்! உன் பெரியம்மா சொன்னபடி உன் அம்மாவை அவன் கொல்லவில்லை! அவனைதான் கொன்று சிதைத்து விட்டாள் உன் அம்மா. அந்த பழியை அவன் மீது சுமத்தி விட்டு நீங்கள் சின்ன குழந்தைகள்”னு ௬ட இரக்கம் இல்லாமே தாய் பாசத்தையும், உதறி தள்ளி விட்டு தன் சுகந்தான் பெருசா நினைச்சு என் தம்பியை விட்டுட்டு அவ எங்கேயோ போயிட்டா! விபரம் அறிந்து சென்றேன், அங்கே என் தம்பி “அண்ணா. இந்த ரெண்டு பேரையும், உன் குழந்தைகளோடு நல்லபடியா வளர்த்து ஆளாக்கிற சிரமத்தை உன்கிட்டே கொடுக்கறேன். அம்மா இருந்தும், இல்லையென்று ஆகி விட்டது. “அவள் ஓடிப் போனவள்!” என்ற பேரோடு இந்த குழந்தைகள் இங்கு வளர்வதை விட அம்மா இறந்து போயிட்டா! அப்பா எங்கேயோ போயிட்டார்! அதனாலே அப்பா அம்மா இல்லாத குழந்தைகள் இதுங்கற, பரிதாபத்திலேயே வளரட்டும். அதுதான் இவங்க வாழ்க்கைக்கும் எந்த தொந்தரவும் வராமல் இருக்கும். இதை யாரிடமும் சொல்லாதே! எதையாவது சொல்லி சமாளிச்சுக்கோ! இந்த பிரச்சனைகள் முடிஞ்சதும் நான் எங்கேயாவது போய் என்னால் முடிஞ்ச அளவு உழைச்சு உனக்கு பணம் அனுப்புறேன். இந்த குழந்தைகளை காப்பாத்து!” அப்படின்னு என்கிட்டே சத்தியம் வாங்கிட்டு போனான். நானும் அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு உன் அம்மாவை, நல்லவளாக்கி, என் தம்பியை கெட்டவனாக்கி, ஊர் வாயை மூடி உங்களை வளர்த்தேன். உன் திருமணத்திற்கு சில மாதங்கள் இருக்கும் போது வந்தவன், உங்களை பற்றி கேள்வி பட்டு எவ்வளவு சந்தோசபட்டான் தெரியுமா? “என் குழந்தைகளா இப்படி”ன்னு எவ்வளவு பூரிப்படைந்தான் தெரியுமா? உன் திருமணத்திற்கும் யாரோ ஒருவன் மாதிரிதான் வந்து பார்த்து வாழ்த்திட்டு போனான். எல்லோரின் உதாசீனத்தையும், வெறுப்பையும் பார்த்தவன், உடனே கிளம்பிச் செல்வதாகதான் சொன்னான். நான் தான் “உன் பையனுக்கும் திருமணம் ௬டி வருகிறது. இருந்து பார்த்து விட்டுப் போ!” என்று தடுத்தேன். அவன் கொடுத்த பணத்தில்தான் உன் திருமணத்தை சிறப்பாக செய்தேன். ஒரு சிறந்த அப்பா இடத்திலே இருந்து, மறைமுகமா மறைஞ்சிருந்து, மானசீகமா, நீங்க நல்லா வாழனுன்னு நினைச்சபடி, வாழ்ந்து வந்திருக்கான் என் தம்பி! அவனையா ‘ஒரேடியா’ போகனுன்னு நினைக்கிறே! மனசாற சபிக்கிறே பிரியா! சொல்லு? உணர்ச்சியுடன் கண்களில் நீர் மல்க கேட்டார் சேகர்.

தன் தாயின் தவறை மறைக்க, அதுவும் தங்கள் நலத்துக்காக, தங்களுக்கு அவப்பெயர் ஏதும் வரக்௬டாது என்பதை கருத்தில் கொண்டு, தன் வாழ்வையே தியாகம் செய்தது அப்பாவா? அவரையா இத்தனை நாள் தவறாக புரிந்து வெறுத்தோம்? இதயத்தில் ௬ரிய கத்தி கொண்டு அறுத்தது போல் பிரியாவுக்கு வலித்தது. தன் தாயினால் தன் அப்பா பட்ட துயரங்களை கேட்டதும் விக்கித்து போனவளுக்கு, இத்தனை நாள் தவறான கண்ணோட்டத்தில் தந்தையை நினைத்த தன் செய்கைக்கு மனதும் கனத்ததால் அவள் விழிகளி்ல் கண்ணீர் ஆறாக பயணித்து ஓடியது.

சட்டென்று எழுந்து பெரியப்பாவின் கைகளை பற்றியபடி, “பெரியப்பா இப்பவே, எங்கள் அப்பாவை பார்க்க போவோமா?” எனக்கு உடனே எங்கப்பாவை பார்க்கனும். அவர் காலில் விழுந்து கதறனும் போல இருக்கு!” என்றபடி விம்மி விம்மி அழலானாள் பிரியா.

நன்றி கூகிள்...

 

Friday, June 13, 2014

காலத்தின் மாற்றம்..


அந்த காலத்தில் பெண்களுக்கு, கட்டிய கணவனே கண் கண்ட தெய்வம். அந்த நிஜமான தெய்வமே நேரில் வந்து நின்று “வேண்டிய வரத்தைக் கேள்! தருகிறேன்!” என்றாலும், கணவன் சற்று கண் அசைத்தால்தான், காரிகை பேச வாய் திறப்பாள். அந்த அளவுக்கு அவளுக்கு பதி மேல் பக்தி! கணவன் நலமே தன் நலமென்று கருதி, தனக்கென்று எந்த விருப்பங்களையும், ஏற்படுத்திக் கொள்ளாமல், தன் கணவனையும் அவ(ர்)ன், வீட்டு உறவுகளையுமே, முறையே, கோவிலின் கருவறை தெய்வமாகவும், பிற பிரகார தெய்வங்களாகவும் நினைத்து வாழ்ந்து வந்தாள். அப்போது அவள் சொல்லும் பேச்சுக்கெல்லாம், பஞ்ச பூதங்களும் (காற்று, நெருப்பு, பூமி, ஆகாயம், மழை) கட்டுப் பட்டது. தெய்வங்களும் அவள் கேட்காமலே, வரங்களை அள்ளி தருவதற்கு தயாராயிருந்தார்கள். இவள்தான்  (கணவனுக்கு தேவையானதை தவிர) தனக்கென்று எதுவுமே கேட்பதில்லை!


          அந்த காலங்கள், காலத்திற்கே போரடித்ததால், சற்று மாற நினைத்ததில், பெண்களும், எண்ணத்தில் சிறிது மாறினார்கள், தங்களுக்கு தேவையானதை, உணர தொடங்கினார்கள். கணவனை தெய்வமாக நினைத்தாலும், தனக்கும் பசி, தாகமென்று ஒன்று ஏற்படுகிறது! என்பதை புரிந்து கொண்டார்கள். நாளாக, நாளாக, கல்விக் கண் எத்திக்கிலும் கண் திறக்க தத்தம் திறமைகளை, ஆணுடன் சேர்ந்து பெண்ணும் உணர தலைப்பட்டாள். கேள்விகளுக்கு, பதில் தெரியாமல், இருந்த நிலை மாறி, பதிலேதும் சொல்லாமல், மெளனித்த நிலை மாறி, பதிலளிக்கும் பக்குவத்திலும், கேள்விகளை தொகுக்கும் திறனிலும், மெள்ள மெள்ள படியேறி வந்தார்கள்.


         அந்த காலம் இன்னும் சிறிது சுற்றி மாறி வந்தமையால் ஆண், பெண் சுதந்திரத்திலும் நிறைய மாற்றங்களை உண்டாக்கியது. ஆணுக்கு சரிநிகர் சமானமாக படிப்பிலும், பணியிலும் பெண்கள் தங்களை வளர்த்து கொண்டதால், எப்போதும் வழிபாட்டை மட்டும் கொண்டேயிருக்கும் தன்மையை தவிர்த்து, “வாழ்வில் இனி நானும் ஒரு அங்கம், நாமிருவரும், ஒன்றிணைந்து முடிவெடுத்தால் குடும்பம் எனும் வீட்டையே கோவிலாக்கலாம்!” என்ற மனப்பக்குவத்துடன் பெண்கள் செயலாற்ற துவங்கினார்கள். காலம் களிப்புற்றது!!! தன் விளைவுகள் மனித இனத்துக்கு நன்மைகள் பலவும் செய்கிறதே! என்று இறுமாப்புடன் சற்று கர்வமும் கொண்டது!!!!
                      

                அந்த காலம் தன்னிச்சையாக சிறிது சுழல, காலச் சுழலில் சிக்கிய பெண்களின் மனமும் தன்னிச்சையாக சுழல ஆரம்பித்தன. பெற்றவர்களின் முடிவுக்கு மாறாக, தன் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்வை தேர்ந்தெடுக்கும் துணிவை பெற்றனர். (அது தன்னை பெற்றவர்களின் மனதை துன்பபடுத்துகிறது என்பதை நன்கு உணர்ந்த பிறகும்! அது பற்றி சிறிதும் கவலையின்றி!!) அப்படி தேர்ந்தெடுத்த வாழ்வில் சிறிது பிரச்சனை என்றாலும், சிறிதும் விட்டுக் கொடுககாமல், விட்டு கொடுக்கும் எண்ணங்களை, பின்னுக்குத்தள்ளி தன் விருப்பபடி வேறு வாழ்வையும், அல்லது தனித்திருக்கும் வாழ்வையும், தன்னிச்சையாக பிரகடனபடுத்தும் உரிமையையும் பெற்றனர். (அதுவும், தன்னை பெற்றவர்களுக்கு வேதனையையும், நெருங்கிய உறவுகளுக்கு சங்கடங்களையும், தரும் என்பதையும் புரிந்து கொள்ளாமலே!!) சுதந்திரம் தந்த ஊக்கத்தில் மனித தன்மைகள் குறைய தொடங்க, அந்த காலமே, நாமும் சற்று அதிகமாத்தான் சுழன்று விட்டோமோ?என்று கவலை கலந்த,பயத்துடன் வேதனையடைந்திருந்தாலும், ஆச்சரியபடுவதிற்கில்லை! இது யோசிக்க வேண்டிய விஷயமாகத்தான் தோன்றுகிறது. 


           நான் இங்கு எல்லோரையும் குறிப்படவில்லை! மாறி வரும் சில பெண்களின் மனதை மட்டுந்தான் குறிப்படுகிறேன்.(தவறெனின் வருந்துகிறேன்.)  எங்கள் நெருங்கிய உறவில் நடந்த இது போன்ற ஒரு சம்பவத்தால் ஏற்பட்ட மன வேதனையில் இதை எழுதிவிட்டேன். அந்த பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் வேதனையை இன்னமும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை! இருப்பினும் தங்கள் பெண் வாழ்வை தன் விருப்பபடி தேர்ந்தெடுத்தும் அந்த வாழ்வுடன் வாழாமல் இப்படி தனிமையுடன் தனித்திருக்கிறாளே! என்ற கவலையில் அவர்கள் வேதனைபடுவதை காண கஷ்டமாக இருக்கிறது. காலத்திற்கேற்றவாறு மாறும் பெண்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்வை சிறப்புற அமைத்துக் கொண்டால்,அவளை பெற்றவர்களும் மனமகிழ்ச்சியுடன் இருப்பார்கள். முக்கியமாக நான் சொல்ல வந்த விஷயத்தை விட்டு வேறு பாதையில் செல்கிறேன் என்று நினைக்கிறேன். அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை நாகரீகம் மாறி வருவதால் ஒரு பெண்ணின் மனநிலை எவ்வாறு மாறியுள்ளது என்பதை நகைச்சுவையுடன் இந்த பதிவில் எழுத ஆரம்பித்து அதுவும் எப்படியோ மாறி விட்டது. அடுத்த பதிவிலாவது அது கை௬டி வர வேண்டும். அதற்கும் அந்த காலந்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும். செய்யுமா? பொறுந்திருந்து பார்ப்போம்!!!!!