Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Saturday, March 21, 2026

தாமதங்களின் பிடியில் மலர்ந்த கதம்பம் .

இன்று (20 மார்ச் மாதம்) சிட்டென பறந்து சிறகடிக்கும் சிட்டுக் குருவிகளுக்கான தினம்  என்பதை யாவரும் அறிவோம். (இன்று என்பது இதை எழுதும் போது...ஆனால் சில, பல வேலைகளினால் நானும் இப்பதிவை நேற்றே முழுதாக முடிக்க இயலாமல்,சட்டென அமர்ந்து, பறந்து நிலை கொள்ளாமல் தவிக்கும் சிட்டுக்குருவியாய் தாவி, தாவி இன்றுதான் (21 ஆம் தேதிதான்) முடிக்கிறேன். ( இன்றும் காலையிலிருந்து வெளியில் வேலைகளின் காரணமாக சென்று விட்டு இப்போதுதான் வீட்டிற்கு வந்தோம்.) 

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தினங்கள் என கண்டு பிடித்தவர்கள் இன்று (இந்த மார்ச் 20ஆம் தேதி) இந்தப் பறவைக்கான  தினத்தை அறிவித்தது எப்போது என எனக்குத் தெரியாது. ஆனால், இந்தப் பறவைகள் கீச், கீச்சென மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபடி, அங்குமிங்கும் சிட்டாகப் பறப்பதை சிறு வயதிலிருந்தே பார்த்து ரசித்திருக்கிறேன் 

எங்கள் பிறந்த வீட்டில் பின்பக்கம், முன்பக்கம், முற்றமென சுற்றிலும் மரங்கள், இயற்கை சூழல்களை ரசித்தபடி  கவலையின்றி வாழ்ந்ததில், இந்தப் பறவைகளின் நேசம் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. 

பின்னர் என் பத்தொன்பதாவது வயதில் திருமணமானவுடன் புறப்பட்டு வந்த சென்னை வாசத்தில், புகுந்த வீட்டின் புதுப் பொறுப்புக்கள், அவ்வளவாக முகம் பழகாத புது உறவுகளின் ஆதிக்கங்கள், பிறந்த வீட்டின் பிரிவு, (அப்போதெல்லாம் நினைத்தவுடன் இப்போது போல் கைப்பேசியில் பேச முடியாதே..! மனதின் பிரிவின் சோகத்தை பற்றி ஒரு கடிதம் எழுதி அது அவர்களுக்குப் போய் சேர்ந்து, அவர்களிடமிருந்து பதில் கடிதம் வரும் வரை காத்திருந்து, வந்த பதிலைப்பார்த்ததும் மனமுருகி ஒரு பாட்டம் மனதிற்குள் அழுது எனறல்லவா காலங்கள் நகர்ந்தது.:(((  ) அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்கள் என வாழ்க்கை முழுதாகவே இதையெல்லாம் ரசிக்க இயலாது திசை திரும்பித்தான் போனது என்பதையும் சொல்ல வேண்டும். 

இந்த கால தேச வர்த்தமானங்களில், பிறப்போடு இருக்கும் ரசிப்புத் தன்மைகளும் குறைந்து போகுமோ என்னவோ..? அவ்வப்போது பிறந்தகம் செல்லும் போது, கடமைகள், உறவின் பாசங்கள் என்ற வலை விரிப்பில், இந்த நிஜமான பறவைகள் ஏதும் வந்து  விழாதபடி, மனதை எது கட்டிப் போட்டது..? என அப்போது யோசிக்கவில்லையென்றாலும், இப்போது யோசிக்கிறேன். (காலம் கடந்த யோசனை என சொல்கிறீர்களா .?) ஆனால், சினிமா படங்களில் சிட்டுக்குருவி பற்றிய பாடல்கள், மனதை தொடும். (மேலும் எதையும் படிக்கக்கூட இயலாத குடும்ப கால்கட்டுகள்... காலத்தை கரையச் செய்தது. ) 

இப்போது வலைத்தள அறிமுகங்களுக்குப் பின் சகோதர, சகோதரிகளின் பதிவுகளை படிக்கும் போது இந்த சிட்டுக்குருவியின் நினைவுகள் என் மனதை மிருதுவாக வந்து தொடுகின்றன. அந்த தாக்கத்தில், நானும் ஏதோ  சிட்டுக்குருவியைப் பற்றி ஒரு சில பதிவை எழுதியுள்ளேன். என்ற பெருமிதமும் சில சமயங்களில் வந்து போகின்றன. 

இன்று நான் ஏற்கனவே மகன் வீட்டில் இந்த  சிட்டுக்குருவியை நோக்கிப் பேசி, வடித்து வைத்த ஒரு கவிதையை (அட..!  இது என்ன கவிதையோ என என் மனம் அங்கலாய்கிறது. "இதெல்லாம் ஒரு கவிதையென வீணாக பீற்றிக் கொள்கிறாயே..!" என மனதின் ஓரத்தில் ஒரு குரல் எழும்பி, இதை இத்தனை நாட்கள் தடை செய்து வைத்திருந்ததை நான் மட்டுமே உணர்வேன். ) இன்றைய நாளில் வெளியிடலாமா என்ற அற்ப ஆசையை, சகோக்கள் துரை செல்வராஜ், கோமதி அரசு அவர்களின் எழுத்துக்கள் தூண்டி விட்டு விட்டன. எனவே கவிதையோடு என் எண்ணங்களும் தொடர்ச்சியாக.... 


 

இதோ அந்த கவிதை.
 

கூண்டுக்குள் கிளியாக

குந்தி அமரும் இனமல்ல நீ..!

படபடவென்று பறந்து எங்களின்

பார்வையை பரிசோதிக்கும்

பட்டுடல் பறவை நீ...! ஆனால்

இங்கு பார்த்து ஏன் குடி வந்தாய்.. ? 

வாழ்ந்து பார்க்கும் ஆசையா? 

இல்லை, இயன்றவரை

வாழ்ந்துதான் காட்டுவோமே என்ற

பேராசையா.? உன் 

சின்ன சின்ன அலகால், தினம்

சின்ன சின்னதாய் இளம்

இலைகளை கிழிக்க எத்தனை

இன்னல்கள் பட்டாயோ... நீ.. ? மேலும் 

உனக்கு உற்சாகமளித்து

இன்முகம் காட்டி வரவேற்க

நன்மனம் கொண்டோராகவும்

நாங்களில்லையென அறியாயோ..? 

அதிலும், அன்றாடம் 

சமையலில எழும் புகையை

சாதூர்யமாய் வடிகட்டி தன்

சாகசத்தை மெய்படுத்தும்

சாதனத்தை ஏன் சற்றும்

சந்தேகமின்றி குடிப்புகும் 

சந்தோஷத்தோடு தேர்ந்தெடுத்தாய் . .

ஒவ்வொரு நாளும் பல தினுசாக

சமையலின் விதங்களிலும் கசியும்

ஒவ்வொரு துளி எண்ணெய்யும்

பகட்டான பார்வைக்காக

பளிங்கு போல வடிவமைத்த 

பிளைவுட் மரவடிவுகளில்

பாங்காக வந்தமருவதை தடுக்க 

பார்த்துப்பார்த்து வாங்கி

பதித்த  சாதனமல்லவா அது..! 


சென்ற வருடம் உன்னைப் போன்றே

செதுக்கிய அழகுடைய, அந்த 

மஞ்சள் விழியழகி, மைனாவின்

மறைவுக்கு வழி வகுத்தது இந்த

வழிதான் என்பதையும் அறியாயோ..? 


இந்த இடம் போதுமா என்ற ஆலோசனை வேறு நடக்கிறது. 



கூடிக்கலந்து ஆலோசனைகள்.. 


பின் வந்த துயர் கண்டு  அவைகளும் மனம் கலங்கிப் போதல்...எங்களையும் அதன் முடிவு கண்டு மனம் கலங்கச் செய்ததுடன், சுத்தம் செய்பவரை அழைத்து அந்த புகைப் போக்கி குழாயையே வேறு மாற்றி அங்கெல்லாம் சுத்தபடுத்திய செலவு மூன்று ஆயிரங்களை வேறு தொட்டது. 
. . . 

என்னவோ போ..!  உங்களினத்தை

எப்படியோ இவர்(எங்)களோடு 

வாழ்ந்து மு(ம)டி என ஆணையிட்ட 

அந்த இறைவனை

எஞ்சிய இவ்வாழ்வின்

ஓர் நாளில் நான் காண வேண்டும். 

பாவ மன்னிப்புக்களை அந்த

பரமனோடு கூட்டிக் கழித்து

பகிர்ந்து பேசும் அந்நாளில் 

"உன் படைப்பில் இனியாவது, 

இச்சுதந்திரப் பறவைகளுக்கு 

இம்மண்ணின் மனிதர்களின் 

சுயநலன்களைப் பற்றி  விளக்கிச்

சுட்டிக்காட்டி, இனி 

மனிதரோடு அண்டி வாழாமல், 

மற்றைய ஜீவன்களோடு 

மனம் ஒன்றி வாழ்" என

இரக்கத்தோடு வரமளிக்க  

இயலாதென மட்டும்

மறுத்து விடாதேயென

இறைஞ்சி கேட்க வேண்டும். 🙏. 


எப்போதும் போல் என் மனதில் எழுந்த இக்கவிதையை (அறுவையை) படித்து கருத்து தெரிவிக்கும் உங்கள் அன்புள்ளங்களுக்கு என் கோடானுகோடி நன்றிகள். 🙏. 


கிராமங்களில் இன்றும் குருவி கூட்டை கலைப்பது பாவம் என்கிறார்கள். ஒரு சிலர் கூட்டை தொட்டு கும்பிடவும் செய்வார்கள். இப்படியெல்லாம் சொல்லி வைத்தால் தான் மனித இனம் மற்றொரு இனத்தை தொந்தரவு செய்யாது என்ற காரணத்திற்காக சொன்னார்களா? என தெரியவில்லை.

குருவி கூடு கட்டினால் அடிக்கடி விஷேச எண்ணங்கள் ஏற்படும் அதாவது மன அழுத்தங்கள், எதிர்மறை எண்ணங்கள் போன்றவை இல்லாமல் எப்போதுமே புத்துணர்வாக இருக்க முடியும். வீட்டில் சுறுசுறுப்பாக பறவை இனங்கள் இருக்கையில், அதனை பார்க்கும் போது நமது மனமும் லேசாகி விடும்.

மலேசியா போன்ற நாடுகளில், காடுகளில் வாழ்ந்து முடித்த பறவையின் கூட்டை கடைகளில் விற்பனை செய்கிறார்கள். இதன் விலையோ லட்ச கணக்கில்.. இதனை வாங்கி வீடுகளில் வைக்கும் போது, வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து விரைவில் விஷேச நிகழ்வுகள் ஏற்படுவதாக நம்புகிறார்கள்.

நம்மூரில் ஒன்றை பின்பற்றினால் மூடத்தனம் எனும் சொல்பவர்கள், வெளிநாட்டில் அதே செயலை செய்யும் போது மறுப்பு தெரிவிக்காமல் நம்புகிறார்கள். அப்படியென்றால் நமது முன்னோர்கள் குருவி கூட்டை தொட்டு கும்பிட்டதும் கூட்டை கலைத்தால் பாவம் என சொன்னதெல்லாம் சரிதான் போல... 

இத்தகவல்களுக்கு நன்றி. கூகுள். 

பின் குறிப்பொன்று.. நான் இந்த வருடம் பதிவுகள் எழுதியே மாதங்கள் பல ஆகிறது. எத்தனையோ பதிவுகள், மேலும், சென்ற வருடம் பிரயாணங்களில் சென்ற கோவில்களைக்குறித்து  பதிவுகள் என எழுத தினமும்  நினைப்பேன். என்னவோ ஒன்றைக்கூட எழுத இயலாமல் போய் விடும். சரி...! அதுதான் அப்படியென்றால் என் வலைத்தள நட்புகளின் எல்லோரின் எல்லா  பதிவுகளுக்கும் உடனடியாக செல்ல முடியாமல், தாமதமும் ஆகி விடும். இருப்பினும் எப்படியோ மாலைக்குள் படித்து மறுநாளேனும் கருத்துகள் கூறி விடுவேன். (இதற்காகவும் அனைவரும் மன்னிக்கவும்.)

இப்போது கூட ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஒரு பத்து நாட்கள் அடங்கிய நெடுந்தூர பயணம் வந்துள்ளது. (அது நல்லபடியாக சென்று வந்த பின் அந்தப்பயணம் பற்றி/ அதைப்பற்றியாவது பகிர இறைவன் அருள வேண்டும்.) அதற்கான யத்தனங்களில் நேரம் பறக்கிறது. எனவே ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து மாதத்தின் பாதி நாட்களுக்கு மேல் என்னால் நம் நட்புகளின் பதிவுகளுக்கு வர இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான, பணிவான நன்றிகள். 🙏. 

Friday, August 3, 2018

பயணித்த காதல்....

சகோதரர் கில்லர்ஜி அவர்கள் ஆயிரம் அர்த்தங்கள் என்ற பதிவில், மாற்றுத் திறனாளிகளின் உன்னத குணங்களைப் பற்றி எழுதியிருந்தார். அதைப் படித்ததும், அவர்களின் தன்னம்பிக்கை குறித்து நான் எழுதி வைத்திருந்தது நினைவுக்கு வந்தது. அதனால் அதை உடனே பதிவிட்டு விட்டேன்.

நினைவூட்டியமைக்கு, 
நன்றி சகோதரரே..... 

பயணித்த காதல்..... 

நீ பயணித்த பேருந்தில்
நீண்ட நாட்களாக நானும் பயணித்ததில், 
            அமர்ந்து வர 
இருக்கைகள் இல்லாத காரணத்தால்,
இருவரும் பரிச்சியமானோம்!
பரிச்சியத்தின் வேர்களை
பார்வை  என்ற உரமிட்டு
"பார்த்து பார்த்து" பேணிய உன்
பாசத் தொல்லை பொறுக்காமல்,
மாறா என் உள்ளத்தை முற்றிலும்
மாற்றிக்  கொண்டு மறுத்தளிக்காது

பரிச்சியத்தின் பாசப்பிணைப்பை
மொழிகளில் அல்லாது வெறும்
விழி வழி பரிமாறிய என்னைப் பற்றிய
விபரங்கள் அறிய நீ அழைத்த
விலாசத்திற்கு ஓடி வந்தேன்... என்
விதி அங்கு தான் விளையாடியது.

பார்வையால் மட்டுமே பேசமுடிந்த என்
பரிதாபத்தை உணர்ந்த உன் 
பாசத்தில் சற்று விரிசல் விழுந்ததை 
பாவை நான் அன்று உணரவில்லை.

இதோ... இன்றும் உனக்காக
அதே பேருந்தில் பயணிக்கிறேன்
ஆனால் உன் வருகை தான் ஏனோ..  
அரிதிலும் அரிதாகி விட்டது.

இன்று அரிதாய் அமர கிடைத்த
ஜன்னலோர இருக்கையில் அமர்ந்ததும்
என் விழிகள் கண்டது உன் உருவை...
எங்கு போனாய்....என்னவனே.. என
கண்ணின் மொழியில் கேட்பதற்கு முன்
வழித்தடம் மாறிய வேறொரு பேருந்தில்
மற்றொரு மங்கையின் தோள் சாய்த்து
மயக்கத்தின் போதையில்  நீ மிதந்தாய்...

அவளின் இரு அதரங்கள் சப்தித்த
அசைவுகளில் அமிர்தமாய் இடை வரும்
ஒலி கற்றையின் ஓசையின் பால்... நீ
ஒடுங்கி கிடந்த கோலம் கண்டு
என் சப்தநாடியும் ஒடுங்கி போனது.

உன் உள்ளத்தின் உதாசீனத்தை
உணர்ந்த என் ஊமை விழிகள்
உணர்ச்சிகளை கட்டுபடுத்த இயலாது
உடைப்பெடுத்துக் கொண்டது.

மௌன மொழிகளின் மேன்மையை
உணராத, நீ... மன்னிக்கத் தகாதவன்.
பாசமொழிகளை பயன்படுத்தி நேசம்
பரிமாறி, வஞ்சித்த உன்னை அந்த
பாசமே என்றும் மன்னிக்காது.

இழிவான உன் செய்கையால்
இடிந்துபோன என் உள்ளத்தை
இயல்பான நிலைக்குக் கொண்டுவர
இறுகிய என் மனதில் பயணித்த வரிகள்..
                           
                                    இதோ....
"நீயோ.. மாற்றுத்திறனாளி !
அவனோ ஏமாற்றுவதில் திறனாளி !
தீயில் விழுந்தும் கருகாமலர் நீ !
திறமையுடன் திசை திரும்பும் 
தீயினும் கடுமையான தீ அ(ய)வன்..

இனி உன் வாழ்வு வசந்தமாகும்
வழியில் சந்தித்த அவன் வரவினால்.. 
விதி உனக்கு சாதகத்தை தந்ததன்றி,
பாதகத்தை ஈன்று தந்து பாரினில்,
பறைசாற்றிக் கொள்ளவில்லை...
மனதை மாற்றிக்கொள் ! மனம் மகிழ,
மகாராணியாக வாழ்வாய். "
                              இப்போது

மன தைரியம் கொடுத்த 
மாற்று வழி" தன்"னம்பிக்கையில்
நீ இல்லா பேருந்தில், உன்
நினைவுகளை மறக்கடித்து
நிம்மதியாக பயணிக்கிறேன்...

Friday, July 4, 2014

புதியது கேட்கின்….


கந்தன் கருணை படத்தில் ஔவையிடம் கேள்விகள் கேட்டு பாட்டாலேயே பதிலளிக்க ௬றும் முருகப்பெருமான் என்னிடமும் வந்து (அவரும், நானும் சத்தியமாக ஒன்றாகி விட முடியாது.) புதியது கேட்கின், (தலைப்புகேற்றவாறு ஏதோ சுற்றுகிறேன்.)

          புதியது கேட்கின்! பன்னிரு விழியழகா!
          என் பயணமும் புதிது! உந்தன்
      பார்வையின் விளைவால், எந்தன் பாதையும் புதிது!
          உன் புது அருளாலே! உனை
        புனைந்ததும் புதிது! இனி புனைவதும் புதிது!

என்று ராகம் போட்டு பாடுவதற்குள் விட்டால் போதுமென்று, மாயமாய் மறைந்திருப்பான். ஆனால் உங்களை தப்பிக்க விட மாட்டேன். “புதியது கேட்கின்” உரைநடையாய் வருகிறது. சற்று படித்துதான் பாருங்களேன்.

              சிறுவயதில் நிறைய பயணங்கள் எனக்கு அவ்வளவாக கிடைத்ததில்லை! நாங்கள் வசித்தவிடத்தில் அப்போது 1960,70, பதுகளில், ஆங்காங்கே, பேருந்துகளும், புகை வண்டிகளுமாக நிறைய ஆக்கிரமிக்கவில்லை! அரைமணி நேரத்திற்கு, சற்று ௬டுதலாக நடைபயணம் சென்றால்தான் பேருந்து நிலையத்தை அடைய முடியும். இல்லையென்றால், மாட்டு வண்டியோ, குதிரை வண்டியோ, அமர்த்திக்கொண்டு செல்ல வேண்டும். நான்கு பேர்கள் சிரமத்துடன்தான் அதில் அமர்ந்து பயணிக்க முடியும். வண்டி சாயும் போதும், அல்லது, வண்டிக்காரரின் மிரட்டலுக்கு பயந்து மாடு வேகமாக ஓடும் போதும் வண்டியில் தலை இடித்துக்கொள்ளும் அடிகள் இன்னமும் பசுமையாக மனதில் இருக்கிறது. (ஆனால், அந்த வண்டியை பிடித்துக்கொண்டே, வண்டியின் பின்னாலேயே, ஓடி குறிப்பிட்ட இடம் வரைச்செல்ல எங்களுக்கெல்லாம் (எனக்கும், என் அண்ணாவுக்கும்.) அப்போது ஆசையாக இருக்கும். ஆனால், அம்மாவின் பாசமான கண்டிப்பு அந்த ஆசையை தடை செய்து விடும். ஏனைய உறவின் சிறுவர் சிறுமியர் “இந்த செயலைக்௬ட உங்களால் செய்ய முடியவில்லையே!!” என்ற பாவனையில் மட்டம் தட்டி கேலி செய்யும் போது சுருக்கென்ற கோபம் தீயாய் தகிக்கும். அம்மாவிடம் ௬ட சற்று கோபம் வரும். ஆனால், அம்மாவின் பாசம் மிகுந்த சமாதானத்தில் மனம் கரைய, “எங்கள் அம்மாவை போல் உங்கள் அம்மா உங்களிடத்தில் உயிராக இல்லை! அதனால்தான் நீங்கள் கால் வலிக்க ஓடி வர சம்மதித்திருக்கிறார்கள்!” எனறு பதிலடி கொடுத்து சமாளித்திருக்கிறேன். சிறு பிராயம் மாறி, வந்த காலங்களில், “மொத்தத்தில் இந்த ஊரின் சிறந்த ஓட்ட பந்தய வீரர்கள் இவர்கள்! என்று சொல்லும் வாய்ப்பை பெற இந்த ஊர் கொடுத்து வைக்கவில்லை! என்று நம் மனதை தேற்றிக்கொள்ளலாம்”!!! என்று நான் என் அண்ணாவிடம் சொல்லுவேன்.) பயணங்கள் சுலபமாக இல்லாவிடினும், அந்த சந்தோசமான காலங்கள் இனி வராது. காலங்கள் ஓடி ஓடி நிறையவே முன்னேறி விட்டது. (இப்போதெல்லாம் பிறந்த குழந்தைகள் ௬ட, பெற்றோருடன் இரண்டு சக்கர, மூன்று, நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கின்றனர்.)

                    இப்படியான நாட்கள் முன்னேறி (சென்னையில் வாழ்க்கைப்பட்ட பின்,) இன்று வரை என் வாழ்க்கையில் பேருந்துகளிலும், புகைவண்டிகளிலுமாக, நிறைய தடவைகள் பயணத்தை ஏற்படுத்தி கொடுத்து விட்டன. ஆனாலும், விமானத்தில் எங்கும் ஒரு தடவை ௬ட செல்லவில்லையை!! என்ற என் சிறு குறையையும், சென்ற வாரம் என் மூத்த மகன் அகற்றி விட்டான். “ஏர் ஏசியா” வின் புதிய வருகையை ஒட்டி பெங்களுரிலிருந்து  சென்னை, மீண்டும் சென்னையிலிருந்து, பெங்களுர். என இருதடவை அந்த பயணமும் அமைந்து விட்டது. இதுவரை செல்லாத புதிதான பயணமாகையால், சற்று பயமாகத்தான் இருந்தது. (மாட்டு வண்டியின் பின்னால் ஓடியே செல்ல வேண்டுமென ஆசைப்பட்ட அந்த வயதிற்கும், நிறைய வயதாகி விட்டதால், ஆசைக்கு ஒரு படி முன்னதாவே, பயம் காலூன்றி நிற்கிறது போலும்! என்று நினைத்துக் கொண்டேன்.)

              நீல வானத்தினிடையே, நீந்துவது போன்ற உணர்வுடன் பறந்ததும், தலைக்கு மேல் அண்ணாந்து பார்த்து ரசித்த கருமையும் வெண்மையுமான மேகங்கள், நம் காலுக்கடியில் விரைவாக ஓடி கண்களுக்கு விருந்தளித்த காட்சிகளும், மனதை விட்டு அகலாதிருந்தாலும், “இந்த இரு வாரங்கள் (போன வாரமும் ரயிலிலும், பேருந்திலுமாக தமிழ் நாட்டு பயணம்!) எதுவுமே எழுதவில்லேயே! அறிந்த, தெரிந்த, எழுத்துக்களையும், ரசித்து படிக்க முடியவில்லையே!” என்ற எண்ணங்கள் வேறு மிகப் பெரிய குறையாக மனதில் வந்து பயணத்தின் ரசிப்பை குறைத்துச் சென்றன. பேருந்திலோ, ரயிலிலோ பெங்களுரிலிருந்து சென்னை செல்ல குறைந்தது ஆறு மணி நேரத்திற்கு மேல் ஆகும் பயணம், விமானத்தில் அரை மணி நேரம் ௬ட ஆகாதது ஆச்சரிய அனுபவத்தை ஏற்படுத்தியது. எப்படியோ! புதிதாய் (எனக்கு) ஒரு வாகனத்தில், முதல் முறையாக (கடைசி??) பயணப்பட்டு வந்தாகி விட்டது. மனிதர்களையும், (மிதி வண்டி) விலங்குகளையும் நீண்ட பயணத்திற்கு நம்பியிருந்த காலங்கள் மாறி, நிமிடங்களின் இடைவெளியில் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று வரும் அரிய வாய்ப்பை ஏற்படுத்திய, இக்கால அறிவியல் மாற்றங்கள் பெருமைபடக்௬டிய வியக்கத்தகு அருமையான மாற்றங்கள்தாம்.

       இது முக்கால்வாசி அனைவருக்குமே பழகி போன விஷயமாக இருக்கலாம். இப்போது அனைவருமே கடல் கடந்து சென்று வேலை பார்த்து வருவதால், இது மிகவும் சாதரணமாக தோன்றலாம். (என் மகனும் தான் வேலை பார்க்கும் அலுவலகத்தின், வேலை நிமித்தம் சில மாதங்கள் வெளி நாட்டில் இருந்து வந்தவன்தான்.) ஆனால் என்னை போலவும் சிலர் இருப்பார்கள் என்ற அசட்டு நம்பிக்கையில் இந்த பயணம் குறித்த எண்ணங்களை பகிர்ந்து விட்டேன். (ஆனாலும் இன்னமும் என் மாதிரி சிறுவயதில் மாட்டு வண்டிக்கு பின்னாலேயே ஓடி வர வேண்டுமென்ற ஆசை கொண்ட சிறுவர், சிறுமியர் எங்காவது ஒரு மூலையில் இருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது அப்போது இருக்கும் அறிவியல் மாற்றங்கள் அவர்களையும் வியக்க வைக்கலாம்.)

            பொறுமை(யின்றி)யுடன் படித்தமைக்கு நன்றி.