Showing posts with label மலரும் நினைவுகள்.. Show all posts
Showing posts with label மலரும் நினைவுகள்.. Show all posts

Sunday, August 14, 2022

பழைய நினைவுகள்.

வணக்கம் அனைவருக்கும். 

இன்றைய ஞாயிறு லால்பாக் பதிவை எ. பியில் பார்த்ததும்,  சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் அந்தப் பதிவொன்றுக்கு ஜூலை 31 ல் கருத்திட்ட அன்றே நான் எழுதி வைத்த இப்பதிவு  எனக்கு நினைவுக்கு வந்தது. உடனே இப்போது பகிர்ந்து விட்டேன். படித்து கருத்திடும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 

துரை செல்வராஜூ31 ஜூலை, 2022 அன்று பிற்பகல் 5:14

ஹிந்துப் பெண்களுக்கு பூக்கள் ஒரு இடைஞ்சலா!?...

தாழை மடல் வைத்து வைத்து பின்னிக் கொண்ட ஜடைகளைப் பார்த்து ரசித்த நாட்கள் எல்லாம் இனிமேல் வரவே வராது..

உண்மைதான்.. .இந்த கருத்தை எ. பியில்  அந்த ஞாயறன்று  நம் சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள்  லால்பாக் பதிவில் தனது கருத்தாக பதிந்ததை பார்த்ததும் எனக்கு பழைய நினைவுகள் வந்தன. எங்கள் அம்மா தாழம்பூ, மல்லிகை, செவ்வந்தி, மாதுளை பூக்கள் (என் இளைய பிராயத்தில் எங்கள் பிறந்த வீட்டில் மாதுளை பூக்கள் மட்டும் பூக்கும் பெரிய மரம் போன்ற செடி நீண்ட நாட்கள் இருந்தது. ஆனால் தப்பித்தவறி அதில் ஒரு காய் கூட வந்ததில்லை. இப்படியும் அதில் சில வகைகள் உண்டென விபரம் தெரிந்த அக்கம்பக்கம் உள்ள அனைவரும் கூறினார்கள். எங்களுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அது பூக்களை மட்டுமே வஞ்சனையின்றி தினமும் தந்து கொண்டிருந்தது. இறைவனுக்கும் மாலை தொடுத்து சார்த்துவோம். எனக்கும், அக்கம்பக்கம் உறவின் பெண்களுக்கும், எங்கள் அம்மா ஜடையில் வைத்து தைத்து விடுவார்கள். இரண்டு நாட்கள் ஆனாலும் வாடாமல் அப்படியே இருக்கும்.  சிகப்பான அதன் நிறம் கண்களை கவரும். நீளமான ஜடையில் அதை வைத்து தைத்து, மல்லிகை சரத்தை நெருக்கமாக தொடுத்து தலையில் அம்மா அழகாக வைத்து விடுவதை, பின்புறம் ஒரு கண்ணாடியில் அது தெரியுமாறு காட்டி, முன்னால் இருக்கும் கண்ணாடியில் பார்த்து மகிழ்வோம். அப்போது வீட்டில் காமிரா இல்லை. புகைப்படம் எடுக்கும் நிலையத்திற்கு  சென்று புகைப்படமாக எடுத்துக் கொள்ளும் திறனும் இல்லை. இப்படியே காலங்கள் என்றும் இருந்து விடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் மனதில் இருந்தது போலும்... அதனால், மனமெனும் காமிராவில் மட்டும் அது அழுத்தமாக பதிந்து கொண்டு விட்டது. இப்போது அதைச் சொல்லிச்சொல்லி ரசிப்பதை தவிர வேறு வழியில்லை. ) வைத்து ஜடையில் தைத்து விடுவார்கள். அது ஒரு காலம். இப்போது பெண்கள் அனைவரும் தங்கள் கூந்தலை வெறும் ஜடை பின்னிக் கொள்வதே உலக அதிசயமாக உள்ளது. 

சகோதரரின் இந்த பதிலை பார்த்ததும் எத்தனை விஷயங்கள் நம் காலத்தில் பார்த்து கேட்டு ரசித்திருக்கிறோம் என நினைக்கையில்  எனக்கு எப்போதோ வாட்சப்பில் வந்த உறவு யாரோ அனுப்பி வைத்த இந்த வாசகங்களும் நினைவுக்கு வந்தது. சுற்றி வரும் இதை நீங்களும் ஏற்கனவே படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அப்படிப் படிக்காதவர்கள் இங்கும் படித்து ரசிக்கலாம் என பகிர்ந்துள்ளேன். 

இதோ அந்த வாட்சப் வாசகங்கள். . 
 
நாம்தான் கடைசி தலைமுறைகள்....

1.ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ....

2.ஓனிடா டி வி பெட்டியை பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்

3.செல்போன்ல பட்டன் பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

4.மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாம தான்...!

5.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளா தான் இருக்கும்.

6.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

7.வெட்டிப் போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

8.தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்ம தான் .

9.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாத்தான் இருக்கும்.

10.காதல் கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான்
இருக்கும்.

11.நண்பர்களுக்கு, உறவுகளுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

12. 10th 12th ரிசல்ட் பேப்பர்ல பார்த்த கடைசி தலைமுறை நாம தான்

13.கதவு வச்ச டிவி யை பாத்த கடைசி தலைமுறை நாம தான்

14.ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.

15.சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறைதான்.

16.போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்

17.ஜவ்வு மிட்டாயில் வாட்ச் கட்டினது நாம தான்

18.நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது நாம்தான். 

19.கோனார் தமிழ் உரை, வெற்றி அறிவியல் உரை
இதெல்லாம் போச்சு.

20.நொண்டி, கிட்டிப்புள் (கிள்ளித் தாண்டு) பம்பரம், கண்ணாமூச்சி, கோலி என பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்...

21. 1,2,5,10,20,25,50 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,

22.தியேட்டரில் மண் தரையில் உட்கார்ந்து படம் பார்த்த கடைசி தலைமுறை நாமதான்,

23.ரேடியோவில் ஒலிச்சித்திரம் கேட்ட கடைசி தலைமுறை நாமதான்,

24.மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை நாமதான்

25.இதையெல்லாம் படிக்கும் போது பழைய நினைவுகளோடு  நம் கண்ணில் சிறுதுளி கண்ணீர் எட்டிப் பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.

இதை எழுதிப் பகிர்ந்தவருக்கு என் மனமார்ந்த நன்றி. அது போல் படித்து ரசித்த உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் . 🙏.