Thursday, April 22, 2021

கனவு 3.

 கனவு 3..... 

முருகா.. கந்தா,.. எல்லோரையும் நல்லபடியாக காப்பாற்று.. ..! இதை ஒன்றைதான் நான் தினமும் உன்னிடம் வேண்டிக் கொள்கிறேன்.அந்த பூங்காவின்  நீண்ட பெஞ்சில் நான் அமர்ந்து கண்மூடி தியானித்தபடி இருந்தேன்.  

சுற்றிலும் சூரியனின் ராஜ்ஜியமான இந்த பகல் நேரத்திலும், இந்த நட்சத்திரங்கள் எப்படி ஒளி வீசுகின்றன. ஒரு வேளை இது இரவுதானோ? ஆனாலும், இரவுக்கான ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லையே? இரவின் துணையை ஆரம்பத்திலிருந்தே எப்போதும் தன் வசப்படுத்தி கொண்ட மமதையில், இருளின் தைரியமான எக்களிப்பு குரல் எங்கும் கேட்கவில்லை. அதன் பயமுறுத்தலுக்கு பணிந்து பிறந்து வளர்ந்ததிலிருந்து அமைதி காக்கும் பறவையினங்கள் கூட பயமின்றி அங்குமிங்கும் சலசலத்தபடி பறந்து கொண்டிருக்கின்றன. போட்டியாக மனித நடமாட்டமும், இறக்கை இல்லாத குறையாக அங்குமிங்கும்  எப்போதும் போல் பறந்து கொண்டே உள்ளது. என்ன இது விசித்திரம்.? 

ஆண்டவா..கடம்பா... கதிர் வேலா... ஏன் இந்த குழப்பம்? உன்னை இன்று  நிம்மதியாக நினைத்துப் பார்த்து மனம் விட்டு மனதுக்குள் பேசி, அதுவும்  வண்ண மயில்கள் பல உலாவும் இந்த பூங்காவில், உந்தனுடன் தனி"மையில்" (அது( மயில்) உன் "அருகாமையில்" இல்லாமல்) உன்னுடன் பேசி மகிழலாம் என்று நானும், " நீ அன்றொரு நாள் என்னிடம் விரும்பிக்  கேட்ட உணவை செய்து எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன். வந்து ருசி பார்த்து பசியாறி, என் அறிவு பசிக்கும் சிறிது விருந்தளிக்க வருவாயா?  மனம் சிந்தனை சொற்களை கொண்டு வண்ணம் குழைத்து தீட்ட  கண்களுக்குள் கந்தனின் வண்ண முகம் சித்திரமாக ஒளிவீச தொடங்கியது. 

ஹ்ம்ம்ம்..... ஹ்ம்ம்ம்  மயிலின் அகவல் ஓசை கண்ணின் கவனத்தை திசை திருப்பி விழித்துப் பார்த்தால், நிஜமாகவே வண்ணமயில் வேலவன் மயிலின் மேல் வீற்றிருந்தபடி  புன்னகைத்தான். (மயில் மட்டும் எப்போதும் போல் என்னை கோபத்துடன் முறைத்தது. "என் துணையின்றி, என் அருகாமை"(ம)யில்"  இல்லாத கந்தனை தனிமை"(ம)யில்" காண உனக்கு இவ்வளவு ஆசையா? பழைய சம்பவங்கள் உனக்கு மறந்து விட்டதா? இல்லை., உனக்கும், எனக்குமான நட்பை  என்னப்பன் கந்தன் கடைசிவரை காப்பாற்றுவார் என்ற அசட்டு நம்பிக்கையா? (அதன் கோபமான பார்வையில் வடிந்த வாசகங்களை படித்தேன். ) 

"என்ன இது...? உன் விருப்பப்படி வந்தவனை "வா" வென்று வாய் நிறைய அழைக்காது, என்னுடன் வந்த மயிலுடன் பார்வையில், பாடம் படித்தபடி இருக்கிறாய்? முருகனின் நமட்டுச் சிரிப்புடன் கேள்விக்கணை வந்து தாக்க என் கண்கள் அவசரமாக கந்தனின் கண்களை சந்தித்தன. 

" வேலவா... நான் நினைத்தவுடன் வந்து அருள்தரும் உன் கருணையே கருணை... . உன் எத்தனையோ வேலைகளை எனக்காக ஒதுக்கி விட்டு, நான் வேண்டி அழைத்தவுடன் வரும் உன் அன்புக்கு நான் எப்படி..... .? மேற்கொண்டு பேச முடியாமல், என்" நாத் தத்தளிக்க..  ... "நன்றாகத்தான் நடிக்கிறாய்".. என்று பார்வையில் பேசியபடி மயில் முகம் சுழித்து வெறுப்பை உமிழ்ந்தது. 

" இல்லை முருகா!! இன்று நீ நான் நினைத்தவுடன் உடனே எனக்காக வந்திருக்கிறாய்..! அந்த ஆச்சரியத்தில் சிறிது நேரம்  வாய் வார்த்தைகளை மேலெழும்ப விடவில்லை.. வேறு ஒன்றுமில்லை.. . ... என்னை மன்னித்துக் கொள்.." என்றவளாய் அவன் இரு பாதம் பற்றித் தொழ குனிந்தேன்.. 

"பார்த்து... பார்த்து... காலைப் பற்றுகிறேன் பேர்வழி என்று சிலர் காலை வாரி விட்டு விடுவார்கள். எங்கள் ஐயன் முதலில் கீழே இறங்கட்டும். " மயில் அனல் கக்கும் வார்த்தைகளால் தடுத்து நிறுத்தியது. 

" அப்படியே வாரி விட்டாலும் தாங்கிக் கொள்ள நீ இல்லையா?"  கந்தனின் சின்னச் சிரிப்போடு கொஞ்சம் எனக்கும்  சாதகமாக வந்த பதிலை கேட்டதும், மயிலின் முகம் மாறுவதை கண்டு, என் இதழிலும் நகைப்புச் சாயல் வந்ததை கவனித்த மயில்., "என்ன நகைப்பு...? நான்தான் அவரை என்றுமே தாங்கி நிற்கிறேன். என்னுயிரை தாங்கிக் கொள்ள எனக்குத் தெரியாதா? நீயும் ஒன்றும் அவருக்கு ஆமோதிக்க வேண்டாம்." எரிச்சலான பார்வையோடு முறைத்தது மயில். 

"சரி... சரி...உங்களுக்குள் பூசல் வேண்டாம். நான் வேறு வேலையாக இந்த பூலோகத்திற்கு வந்தேன். வரும் வழியில் இந்தப் பூங்காவில் தமிழ் உரையாடல்கள் ஓரிடத்தில் கேட்கவே அங்கு சில நொடிகள் தாமதித்த பின்" நீ வேறு அழைக்கிறாயே"... என உன்னைக்காண இங்கும் வந்தேன். ஆமாம்.. ஏதோ பதிவர் என்ற பெயரோடு நாலு வார்த்தைகள் எழுதி வந்தாயே....  என்னவாயிற்று உன் எழுத்துப்பணி.. ? முற்றுப்புள்ளி வைத்து விட்டாயா? "என்று வேலவன் மடமடவென கேட்டதும், மயிலின் முகத்தில், எனக்கு மட்டும்" ஏளன சாயல்" தெரிந்தது. 

" எங்கே....! இங்கே வெட்ட வெளியில் அமர்ந்து வெட்டி வேலையாக ஏதோ சிந்தித்து கொண்டிருந்தால், சேர்த்தெழுத வரும் சில  வாக்கியங்களும் மறந்துதான் போகும். பின்னர் "வண்ண மயில் வேலவனே, மயிலேறி வந்தெனது அறிவெனும் விளக்கை சிறிதாவது தூண்டி விடுபபா...."என்ற புலம்பல்கள் வேறு.. .. முதலில் அது இருக்கும் இடத்தில்  இயல்பாக இருந்தால் அல்லவா தூண்டி விடுவதற்கு. ... " என மயில் தன்னோடு, கந்தனையும் இணைத்து கூறவே, அதன் விஷமத்தனமான கோபம் கண்டு கந்தன் வாய் விட்டு சிரித்தான். 

"சரி... முருகா...! நான் நேராகவே விஷயத்திற்கு, இங்கு உன்னை வரும்படி வேண்டி அழைத்த விஷயத்திற்கு வருகிறேன். நான் அன்று உன் அண்ணன் கணபதிக்கு அவரின் பிறந்த நாளன்று அவருக்குப் பிடித்தமான நிவேதனங்கள் நிறைய செய்து பூஜித்த பின், அதை நிறைய படங்களும் எடுத்து   என் பதிவுலகத்திலும் பதித்து அது குறித்து விபரமாக எழுதி வைத்தேன்.  அங்கு அதைப்பார்த்து பாராட்டிய  சகோதர சகோதரிகள் எங்களை என்றேனும் சந்திக்கும் போது இந்த உணவுகளுடன் வர வேண்டும் என அன்புடன் கூறினார்கள்..... . 

அதன் பின் தொடர்ந்து  வந்த என் கனவுகளில் நீயும் வந்து, "என் அண்ணன் கணேசனுக்கு செய்து வைத்ததை போன்ற உணவுகளை எனக்கு மட்டும்  நீ எப்போதும் கண்களிலேயே காண்பிக்கவில்லையே? வெறும் பானகமும், பழங்களுடன், தேனும் திணைமாவும் இந்த முருகனுக்கு போதுமென்று நினைத்தாயா?" என்று கேட்கவும், இன்று அந்த நிவேதனங்களை அன்புடன் செய்து  உனக்கும், விரும்பி கேட்ட என்  பதிவுலக  நண்பர்களுக்குமாகவும், கொண்டு வந்திருக்கிறேன். அதனால்தான் உன்னை வறுபுறுத்தி இங்கு வரச்சொல்லி அழைத்தேன். நீ இதை அன்புடன் ஏற்றுக் கொண்டு என்  பதிவுலக  நண்பர்கள் இருக்குமிடத்திற்கும் என்னுடன் கூடவே  வர வேண்டும்."என்று பணிவுடன் கை கூப்பி  நான் விளக்கமாக கூறியதும், முருகன் இளமுறுவல் செய்தான். 

" ஓ... அதனால்தான் நான் வரும் போது ஓரிடத்தில் அத்தனை உரையாடல்களா? இப்போதெல்லாம்  பதிவுலக நட்புகள் உனக்கு ஒரளவு பெருகி விட்டது போலும். சரி.. சரி... என்னையும் அவ்வப்போது முன்பு மாதிரி நினைவின் ஓரத்தில் வைத்திரு.... மறந்து விடாதே... ! என்றான் சற்று  கேலியாக... 

 அதுவரையில் எங்கோ நடந்து சென்றபடி  இருந்த  மயில் பொறுமையாக வந்து கந்தனிடம் வந்து நின்று நாங்கள் பேசுவது அனைத்தையும் கேட்டதும்,  சிறிது பொறாமையுடன் முகம் சுழித்து நெளிவது தெரிந்தது. 

"ஐயனே... என்ன இது..! அபச்சாரமான வார்த்தைகள்.... உன்னை மறந்த பின் என் உடலிலும் உயிர் தங்குமா? தமிழுக்கு பிறப்பிடமான உன்னை  மறக்கும்  ஒரு பொழுதுதான் எனக்கு இந்தப் பிறவியில் உண்டாகியும் விடுமா? நினைக்கவே என் தேகம் நடுங்குகிறதே...! உன்னருளாலேதான் இந்த எழுத்துலகில் நான் பிறந்து தவழ்ந்து அடி எடுத்து நடக்க ஆரம்பித்திருக்கிறேன். அதை மறந்து விட்டாயா?  (இதை சுட்டினால் என்னப்பன் கந்தவேள் என்னுடன் உரையாடிய முதல் கனவு பதிவு வரும். மறக்காமல் இதையும் சுட்டி அங்கும் சென்று அனைவரையும்  படிக்க வேண்டிக் கொள்கிறேன்.🙏.)  தாயை சேய் மறப்பதா? முருகா.. ..நீ எப்போதும் என்னை ஒவ்வொரு நாளிலும்  சிறிதேனும் மறவாதிருக்க வேண்டும். அந்த வரத்தை எனக்கு இந்தப்பிறவியில் தந்தருள வேண்டும் "  நான் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க பேசுவதை கண்ட கந்தன்   "சரி.....சரி... எனக்கும் நேரமாகி விட்டது. உன்னை மட்டுமல்ல...   உலகில் அனைவரையும் நானறிவேன்.. உங்களை எழுத வைப்பதும் பேச வைப்பதும், இயக்க வைப்பதும் அனைத்தும் நானேதான். நீ அவர்களை உங்கள்  ஏற்பாட்டின்படி சென்று சந்தித்து கொள். நான் வருகிறேன்... "  என்றபடி கிளம்பினான். 

வேலவா. .!    என்ன இது...? உன் துணையின்றி நான் எப்படி... .. ? எனக்கு பொதுவாகவே பேச்சறிவு குறைவு..... நீயும் என் அருகில் இருக்க வேண்டுமென்றுதானே உன்னிடம் வேண்டினேன். தவிரவும் உனக்காக  நான் கொண்டு வந்த உன்  அண்ணனுக்கு பிடித்தமான நிவேதனங்களை நீ உண்டு  ஏற்க வேண்டாமா?"  நான் அவசரமாக தடுக்கவும்  "எல்லாம் என் பார்வையில் விழுந்தாகி விட்டது. என் பார்வையாலேயே உங்களின் அன்பும், மற்ற அனைத்தும் ஏற்கப்பட்டு விடும் என உனக்குத் தெரியாதா?  என்று கூறியபடி மயிலேறி கொண்ட  முருகன், "வேண்டுமானால், என்னுடன் வா. . .! நான் வரும் போது கண்ட அந்த இடம் வந்ததும் உன்னை இறக்கி விட்டுச் செல்கிறேன்.... "என்றான். 

"ஆமாம்..ஆமாம்...வா...வா...என்ற மயிலும் அங்கு உன்னை "உதிர்த்து" விடுகிறேன்..."  (அந்த" உதிர்த்து" என்பதை எனக்கு மட்டும் சிறு குரலில் கூறியவாறே...) என்றது அதே விஷம பார்வையுடன். 

எனக்கு லேசாக பழைய நினைவுகள் நடுக்கத்தை வரவழைத்தது. 

எப்படியோ முருகனுடன் மயிலேறி குறிப்பிட்ட இடம் வந்ததும் அங்கு எவரையும் காணாமல் திகைத்தேன் .." இங்குதான் நிறைய மனிதர்கள் அமர்ந்திருக்க கண்டேன். இப்போது எவரையும் காணவில்லையே? விந்தையாக உள்ளதே....!" என்ற முருகன் மயிலை நோக்கி, "நீ சற்று, சுற்று முற்றும் பறந்து சென்று அவர்கள் எங்கேனும் உள்ளார்களா எனப் பார்த்து விட்டு வா.." என ஆஞ்கை பிறப்பித்ததும்,, மயில் கண வேகத்தில் காணாமல் போனது. 

"உனக்காக மறுபடியும் தாமதிக்கிறேன். உன் நண்பர்கள் இருக்குமிடத்தை மயில் வந்து சொன்னதும் நான் செல்ல வேண்டும்..நேரமாகிறது. . ." முருகன்  சிறிது தவிப்புடன் சொல்ல "சரி. வேலவா...! என் கைப்பேசியில் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என கேட்டுக் கொள்ளலாமா?" என நான்  அவன் உத்தரவை கேட்டதும், "கைப்பேசியா? அப்படியென்றால்,  ....?என முருகன் வியக்கவும், "ஆம்.. முருகா..  இதன் மூலம்தான் ஒருவர்  மற்றவரின் நலன்களை விசாரித்து தெரிந்து கொள்வதும் அவர்களுடன் தொடர்பு கொண்டு இப்படி சந்திக்கவும், பேசி ஏற்பாடுகளும் செய்து கொள்கிறோம்.""என்று பணிவுடன் சொன்னதும் கந்தன் மீண்டும் வியப்பிலாழ்ந்தான். 

அந்நேரம் அவன் ஆச்சரியத்தை போக்கவென்றே மயில் வந்து இறங்கியது. "வெகு தூரத்தில் சில மனிதர்கள் பேசிக் கொண்டே கடந்து சென்றார்கள். இந்தப் பெண்மணியிடம்  அவர்கள் அன்றைய ஓர் தினத்தில் ஏதோ" குளிர் சாதன பெட்டியில் " தங்களுக்கு சில பிடித்தமான உணவு வகைகளை வைத்திருக்க சொன்னதாகவும், அவர்களுக்கு இவர் தற்சமயம் அதைத்தான் கொண்டு வந்து விட்டதாகவும்," எப்போதோ செய்து வைத்திருந்த அதை உண்டால் எங்கள் உடல் நலம் என்னாவது?" என்று கூறிக் கொண்டே, எனவே  அவர்கள் இவர் வருவதற்குள் இந்த இடத்தை விட்டு அகன்று விட வேண்டுமென ஒருவடோரொருவர் பேசிக் கொண்டே சென்று விட்டார்கள். "என்று மயில் பெருமூச்சுடன் கூறி முடிக்கவும், முருகன்"குளிர் சாதன பெட்டியா.. ? அப்படியென்றால்., குளிர் சாதன பெட்டியென்றால்?" என மீண்டும் வியந்தான். 

" கந்தா.... செய்த அனைத்து உணவுகளையும் அன்றே எங்களால் சாப்பிடுவதற்கு முடியாதென்பதால், சிலவற்றை இந்த குளிர் சாதன பெட்டியில் வைத்து ஒரிரு நாட்களாக உண்போம். ஆனால்  இதையெல்லாம் நான் அதற்குள் வைப்பதில்லை. அன்று அவர்கள்  வேடிக்கைக்காக சொன்னது இத்தனை வீபரீதமான  அர்த்தமாக போகுமென்பதை நான் உணரவில்லை. இன்று அவர்களை சந்திக்க வரும் போது, அவர்களுக்கு ஒரு  தீடிர் எதிர்பாராத விருந்தாக, மனம் களிப்பாக இருக்கட்டுமென, புதிதாக இந்த உணவெல்லாம் செய்து கொண்டு  வந்துள்ளேன். ஆனால், அப்படி  செய்து கொண்டு வரப்போவதாகவும், நான் சொல்லவுமில்லை.  என் தவறுக்கு தகுந்த தண்டனைதான் எனக்கு கிடைத்துள்ளது.... " என்று நான் மேலும், மேலும் பேசி வருத்தப்படுவதை கண்ட முருகன்,  "சரி... சரி இப்போதென்ன...! மற்றொரு நாள் எல்லா ஏற்பாடுகளை, உங்களிடமிருக்கும் பேசும் உபகரணத்தின் மூலமாக விபரமாக பேசி செய்து கொண்டு  வந்து சந்தித்தால் போயிற்று... கவலைப்படாதே.... " இப்போது நான் புறப்படுகிறேன். .. . அடுத்த தடவையாவது  புத்திசாலிதனமாக நடந்து கொள்.... என்றபடி, திரும்பியவன் "வருகிறாயா? நீ வருத்தத்தில் இருப்பதால், தனியாக செல்ல வேண்டாம். உன்னிருப்பிடத்தில் விட்டு விடுகிறேன்....." என்று இரக்கத்துடன் முருகன் கூறவும், மயிலின் முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லாததது எனக்கு  அத்தனை வருத்தத்திலும் கொஞ்சம் ஆச்சரியத்தையும் தந்தது. 

மயில் எங்களை தன் முதுகில் ஏற்றியபடி மின்னல் வேகத்தில் பறக்கத் துவங்கிய சற்று நேரத்தில்,  "எப்படி....? எப்படி. .? என் திட்டம் வெற்றியடைந்தது பார்த்தாயா? என் துணை இல்லாமல் என்னப்பனை சந்தித்து பேச வேண்டுமென நீ நினைத்ததற்கு தண்டனை எப்படி கிடைத்தது பார்த்தாயா? நீ கந்தனுடன் பேசி நீ தயாரித்து கொண்டு வந்திருந்த உணவுகளை சிலாகித்து கொண்டிருந்த அந்த கண நேர "தனிமையில்" இந்த மயில் உன் நட்புக்களை வேறு மனித உருவத்தில், அதுவும் உன் சொந்தமென கூறிக் கொண்டு சென்று சந்தித்து நீ கொண்டு வந்திருக்கும் உணவுகளைப் பற்றி கூறி அவர்களை எப்படி அவ்விடம் விட்டு புறப்பட வைத்தேன் பார்த்தாயா? இனி என் உதவியில்லாமல் கந்தனை தரிசிக்க விருப்பபடுவாயா? சொல்... "என்றபடி முகம் வளைத்து  கந்தன் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த நேரம் எனக்கு மட்டும் கேட்கும்  குரலில்  மயில்  வன்மமாக கேட்கவும் திடுக்கிட்டேன் . 

" இது உன் வேலையா?  கண நேரத்தில் இப்படி செய்ய உன்னால் எப்படி முடிந்தது.? ஏன் இப்படி செய்தாய்? நானும் உன்னைப் போல், உன்  தெய்வம் கந்தனை மனதாற வழிபட்டு நேசிப்பவள்தானே...! நீ இப்படிச் செய்யலாமா? " என்று அழாத குறையாய் கூறி சமாதானபடுத்துவற்குள், கொஞ்சமும் அதற்கு செவி மடுக்காமல், " அதுதான்.. நான்... சரி.  சரி. . உன் இருப்பிடம் வந்தாகி விட்டது.  இறங்கிக் கொள்..." என்றபடி மயில் முதுகை சிறிது ஆட்டவும், (அதன் பாணிப்படி உதிர்க்கவும்) நான் மடமடவென்று  "ஆ"வென்றுஅலறியபடி கீழே வந்து விழுந்தேன். 

" அம்மா... என்ன இது? ஏன் கத்துகிறாய்? கனவா? " என   என் பெண் உலுக்கியதில், "ஆம். .. பதிவு கனவு மூன்று...." என்றேன். 

" இப்ப மணியும் மூன்று. ....தூங்கும் நேரத்தில் வரும் கனவிலும்  பதிவுலக நினைவா? கொஞ்சம் நேரம் நிம்மதியாக மறுபடி  படுத்து தூங்கு...!" என்ற அவளது குரலின் அன்புக்கு கட்டுப்பட்டு படுத்து, கனவையும், கந்தனையும் நினைத்தபடியிருக்க உறக்கம் மறுபடி சிறிது நேரத்தில் வராவிட்டாலும், விடியலின் அருகாமை பொழுதில் வந்து என்னை அணைத்துக் கொண்டது.  

இப்போதுள்ள சூழ்நிலைகளில் ஒருவரையும் சந்திக்க இயலாவிடினும், கனவிலும் உங்கள் அனைவரையும்  என்னால் சந்திக்க முடியாமைக்கு அனைவரும் மன்னிக்கவும். அதனால்தான் பதிவின் மூலம்  கனவையும் எடுத்துக் கொண்டு உங்களை சந்திக்க இங்கு வந்து விட்டேன். அன்புடன் வந்து கனவுடன் சேர்ந்து வந்த பதிவையும்  சந்தித்த அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏🙏🙏🙏🙏. 

Wednesday, April 7, 2021

விரும்பும் வேண்டுதல்.

பல்லாயிரம்  ஏன்.. அதற்கும் மேலாக பல கோடி செயல்கள் தன்னால்தான் நடக்கிறது என்று இந்த மானிடம் தற்பெருமை கொண்டு தறிகெட்டு சுய மகிழ்ச்சியில் இல்லை, பிறர் புகழ்ச்சியில் பாடி, ஆடி மகிழ்ந்திருந்தாலும், உலகில் இரண்டு விஷயங்கள் (பிறப்பு, இறப்பு) கண்டிப்பாக இறைவன் என்றொருவன் நம்மை (மானுடப் பிறவியை) ஆட்டுவிக்கும் கலையில் தேர்ச்சிப் பெற்று நம்முடனேயே இருப்பதை உணர்த்தி சொல்கிறது. 

மனம், பணம், பயிற்சி, முயற்சி, பெருமை, சிறுமை, வாழ்வு. தாழ்வு, எல்லாவற்றிலும் நம்மை பிணைத்தெடுக்கும் நூல் "அவன்" கையில்தான் உள்ளது. அதனைக் கொண்டு பொம்மைகளாகிய நம்மை ஆட்டி "அவன்" பெறும் மகிழ்ச்சி "அவனுக்கு" மட்டுமே உரித்தானது. 

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான். 

செய்ய முடியாதவன் போதிக்கிறான். 

இது இன்றைக்கு நான் படித்த வாசகம். இதில் முடிந்தவனின் / முடியாதவனின், சாதிப்பதும்  போதிப்பதும் "அவன்" யோசனையில் வந்ததுதானே....! ஆக "அவனின்றி ஓர் அணுவும் அசையாது." 

ஆகா..! இவர்கள் இன்று போதிக்க ஆரம்பித்து விட்டார்களே..!  "ரம்பத்தை" எப்போதும் கையில் வைத்திருக்கும் இவர்களுக்கு இன்று "ரொம்பவும்" முத்தி விட்டதா....? என நீங்கள் எண்ணும் முன்,  உண்மையை சொல்லி விடுகிறேன். இன்றுதான் இந்தப்பதிவுக்கு நாள் நன்றாக இருப்பதாக  என் ஆஸ்தான ஜோதிடர் (அதுவும்" அவன்"தான்) சொன்னார்.  (அதனால்தான் இந்த அவசரப் பதிவும், அதன் விளைவாய்  கூடவே தொத்திக் கொண்ட என்னுடைய முந்தைய பதிவும்.) ஏனென்றால்் என்னை இந்த நாளில்  உலகத்தில் தான் விளையாடும் ஒரு பொம்மையாக உருவாக்கியவன் "அவன்"தானே....! 

இதோ என் முந்தைய பதிவு. இதில் "என்"என்ற வார்த்தையில் அகங்காரம் தெரிகிறது.  மன்னிக்கவும். அதனால் அவன் எழுத வைத்தப் பதிவு என்றே  இதனை குறிப்பிடுகிறேன். 


முருகா, 
உன் ஒரு திரு முகத்தின்
இரு விழிகள்என்னைக் 
கொஞ்சம் பார்த்தும்
பாராமலுமிருக்க
மற்ற இரு முகத்தின்,
இரு விழிகளின்,
ஓரப்பார்வை
என்னைச்சிறிது
தொட்டும்
தொடாமலுமிருக்க
தொடர்ந்திருக்கும்,
மூன்று முகங்களின் 
முழுப்பார்வையும்,
முழு திக்கிலும்
பரவி விரிந்திடவே,
முயற்சிக்கும் போதினிலும்
முருகா!
முழுமதியான உன் முகத்தில்,
மெளனமாக 
உன் இதழ் சிந்தும்,
மெளனப் புன்முறுவல்
என் வாய் பேசாத,
மெளனத்தை கலைத்து 
உன்னிடமிருந்துமறு
மொழியொன்றையும்
தினம் தினம் 
எதிர்பார்க்கின்றதே!


 பறவையாய் நான் 
பிறந்திருந்தாலும்என்
பறக்கும் திறனினால்
பந்தென கிளம்பி,
உன்னைச்சுற்றும் 
சில பறவைகளோடு,
உள்ளம் களிக்க 
உன்னைத் தொட்டுஎன்
சிறகுகளால்உனை 
தினம் வருடி,
சிறகடித்துவானில் 
வட்டமிடும் பிற
பறவைகளோடுஒரு 
பறவையாய்உன்னை
பலகாலம் பரவசமாய் சுற்றி 
வந்திருபபேன்.


 

மலர்களாய்நான் 
மலர்ந்திருந்தாலும்,
மணம் வீசும் அச்சிறு 
பொழுதில்உன்
மார் மீதும்தோள் மீதும்
மணம் மிகும்,
மலர் மாலைகளாக நான் 
மாறி மணந்திருக்க
மகிழ்ந்திருப்பேன்.
வசமுள்ள மனதுடனே,  
உன்னருளினால்,
வாடாத மல்லியாய் என்றும்நான்
வாழும் வரை வசித்திருப்பேன்


மேகமாய்நான் 
ஊர்ந்திருந்தாலும்
மோகமுற்ற மனதுடனேகடும்
வேகமாய் அவ்விடம் விட்டு 
நகராது,
வேறிடம் ஒன்றிருப்பதையும் அறியாது,
ஏகமாய் உனை விரும்பும் 
விருப்பத்துடனே,
எத்திக்கும் பொழியும் மழை மேகமாகி,
தாவி உன் பூ முகம் 
அணைந்திடவே,
தங்கு தடையில்லாநீர் 
தாரையாகியிருப்பேன்.



வான் நிலவாய் நான் 
நீ(வாழ்)ந்தி(யி)ருந்தாலும்,
நீக்கமுற நிறைந்திருக்கும்
என்
தண்ணொளியால்
உந்தன் தங்கத்
தளிர் வதனம் கண்டு 
மனமுவந்து,
இரவின் பொழுதெல்லாம்
உன்னை
இரசித்துகரையாமல்
கரைந்திடவும்,
இமையோன் மைந்தா
உன்னிடம் என்
இமை மூடா வரம் கேட்டுப் 
பெற்றிடவும்,
இயன்றவரை 
முயன்றிருப்பேன்


உமையவளின் அருமைந்தா!
உன்னைச் சுற்றிச் 
சூழ்ந்திருக்கும்மற்ற
மரங்களினிடையே
ஒரு மரமாக
மண்ணோடு நான் 
நின்றிருந்தாலும்என்
கிளைகள் ஆடும் 
அவ்வேளையில்,
கிளுகிளுக்கும் மணியோசை போல்,
காற்றுடன் காற்றாக 
நான் கலந்துஉன்
காதோடு தினம் உறவாடி
என்னை
"காக்ககாக்க!," என்றே 
துதி பாடிநின்
கழலடியை மறவாதிருக்க 
பண் பாடிஎன்
மனதின்எண்ணமெல்லாம்இந்த
மால் மருகனை விட்டகலாது, என்றேனும் ஒருநாளில்,
மண்ணின் மடியில் 
சாய்ந்தாலும்,
மமதையின்றி வீ்ழ்ந்திடும் 
வரத்தை,
கண் மூடிமனம் கசிந்து நான் பெற்றிடவே,
கண்ணின் கருமணியாம்
எந்தன்
கந்தனை வேண்டியபடி
நின்றபடியிருந்தாலும்,
காலமெல்லாம் 
களித்திருப்பேன்.


ஆனால், 
இவற்றிலொன்றிலும்
நான் பிறவாமல்,
இந்த மண்ணுலகின் 
மாந்தரென்று,
பிறந்து விட்ட ஒரு 
காரணத்தால்,
பிறவியின் பயன் தொட்டு
உன்னைத்
தொடவும் நேரம்  
பிறக்கவில்லை!
தொடரவும்வழி 
அமையவில்லைஎன்னைத்
தொடர்ந்து வரும் 
பாபங்களினால்,
கடமையெனும் கயிறானது
இறுகவே
கட்டி விட்டது கண்களையும்,
கைகால்களையும்
தற்சமயம் நின் கருணைஅக்
கட்டவிழ்த்து போனதில்
உந்தன்
காட்சி கிடைத்திட
என் கவலை அகன்றிட,
கந்தாஎனை நோக்கி 
இனியேனும்மனம்
களிப்புற கருணைக்கண் 
திறவாய்.!
   என் சிந்தனை என்றென்றும்,
உன்னிடம் 
சிரத்தையோடிருக்க,
கந்தனேஉன் சிந்தைதனில்நீ
எந்தனையும்சற்று 
நினைத்திருக்க, வேண்டுமென
வந்தனையோடு 
துதிக்கின்றேன்.! அவ்
வரம் வேண்டி தவிக்கின்றேன்
என்
மரணம் என்னை தொடும் 
வரைஉன்னை
மறவாத வரம் தந்தருள 
வேண்டுகின்றேன்.! 
மறவாது அவ்வரத்தை
தந்திடுவாய் என,
மனமாற வணங்கிப் 
போற்றுகின்றேன்.!!!!
மனதாற துதித்து 
யாசிக்கின்றேன்.!!!!

இதைப் இப்பிறவியில் "அவன்" தந்தருள வேண்டுமென இந்நாளில் மட்டுமல்ல.. . . எந்நாளும் வேண்டிக் கொள்கிறேன். 🙏. மனிதபிறவிக்கென்றே தோன்றும் சுயநல எண்ணங்கள் எனக்குள்ளும் எழுவது இயல்புதானே.. ! இன்று இதை அன்போடு படிக்கும் வலைத்தள உறவுகளின் பண்பான உள்ளங்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். 🙏. 🙏.