வணக்கம் அனைவருக்கும்.. ..
ஒரு மாதத்திற்கு ஒருமுறையேனும் ஏதாவது என் தளத்தில் கிறுக்கிக் கொண்டிருந்தேன். கொஞ்ச நாட்களாக எதுவும் எழுதவே இயலவில்லை. நானும் தினமும் வேலைகளுக்கு நடுவே எழுதுவதற்கென்று ஏதேனும் விஷயங்களை யோசித்து வைத்துக் கொள்வேன். ஒரு வழியாய் கடமைகள் முடித்து ,கைப்பேசியை தொடும் போது, வடித்து வைத்த எண்ணங்கள் அத்தனையும் காணமல் போய் மனதில் சஞ்லங்கள் மட்டுமே நிறைந்திருக்கும்.
இதோ..! இந்த மகளிர் தினத்திற்கு புதிதாக ஏதேனும் எழுத வேண்டுமென ஒரு மாத காலமாய் நினைத்துக் கொண்டேயிருந்தேன். ஆனாலும், என்னவோ இயலாததால், என்னிடமிருந்த பழைய சோற்றை, சிறிது தாளிப்புடன் இனியதாக்கி, அதனால் சுவை சற்று கூடியிருக்கும் என்ற எண்ணம் தந்த அசட்டு தைரியத்தில் புதியதாக்கி படைத்திருக்கிறேன். பார்த்து படித்து ரசிப்பவர்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏.
உலகிலுள்ள அத்தனை மகளிர்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள். அத்துடன் அவர்களது சாதனைகளுக்கு அக்காலம் தொட்டு என்றுமே உறுதுணையாய் நின்று அரவணைத்து கை கொடுக்கும் அத்தனை ஆண்மக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகளும், நன்றிகளும்.... 🙏.
பெண்....
மண்ணில் பதிந்த பாதங்களை
பற்றியிழுத்து விட்டு
மறுபடி ஓடிவந்து
பாதங்களை தழுவி
தவறுக்கு வருந்தி
மன்னிப்பு கேட்கும் குழந்தை
மனதுடன் நித்தம் நித்தம்
மருகி கொண்டு
வந்து போகும் கடல் அலைகள்...
ஆனால், நீ அந்த கடல்
மட்டுமல்ல......
விண்மீன்களின் நடுவே
தனக்கென்று ஓர் இடத்தை,
விரும்பி அமைத்துக்கொண்டு
கவிஞனுக்கு துணை செய்ய,
பாதியாகவே, பாதி நாட்கள்
வந்து போனாலும் ஒளியில்,
பரிதிக்கு நிகராக
பாரினில் உலா வரும் நிலவு....
ஆனால், நீ அந்த நிலவு
மட்டுமல்ல.....
மயக்கும் அந்தி சாயும் பொழுதில்,
கை விசிறியாக தான் மாறி,
மனதையும் உடலையும் குளிர்வித்து,
தானும் குளிர்ந்து
மண்ணுலக மாந்தர்களை
மகிழ வைப்பதே கடமையென,
மட்டற்ற மகிழ்ச்சியுடன்
ஓடிவரும் தென்றல்......
ஆனால், நீ அந்த தென்றல்
மட்டுமல்ல....
வாசமாக பிறந்து,
வாசங்களுடன் வளர்ந்து,
மனிதரின் சுவாசத்துடன் கலந்து,
பிறப்பெய்தியதே பிறருக்குத்தான்
எனும், மாபெரும் உண்மையை,
மனிதருக்கு பாடமாக்கி இறுதியில்,
மடிவையும் இந்த மண்ணிலேயே
சந்தித்து போகும் பூக்கள்.....
ஆனால், நீ அந்த பூக்கள்
மட்டுமல்ல....
பச்சைப் பயிரினங்கள்
செழிப்பாக வளர அதற்குதவிடவே,
பாய்ந்தோடும் நீர் நிலைகள்
என்றும் நிறைந்திருக்க,
விண்ணில் பிறந்து
மண்ணில் தவழ்ந்து படைத்தவனின்,
விருப்பத்தை நிறைவேற்றும்
மழைத் துளிகள்........
ஆனால், நீ அந்த மழை
மட்டுமல்ல........
கடலின் கருணையும்.
நிலவின் பரிவும்,
தென்றலின் பொறுமையும்,
பூக்களின் தியாகமும்,
மழையின் பாசமும்,
குடக்கூலி எதுவும்
கேட்காமல்...
உன்னிடம்....
என்றோ....
குடியேறி விட்டனவே.....!!!!.
இவையணைத்தும் ஒன்றிணைந்து,
இயல்பாய் தோற்றுவித்த,
இயற்கையின் பொக்கிஷம் நீ.....
இறைவனின் இனிய படைப்பு நீ......
இவ்வுலகில் நீ அன்றும்,
இன்றும், என்றும்,
இன்றியமையாதவள்....!!!!.