மறுபடியும் பிரவேசம்.
இது எப்போதோ எழுதப் பெற்று தனக்கு (கவிதை மாதிரி உள்ள அதற்கு... ) வர வேண்டிய ஆதரவு மதிப்பெண்களை இழந்த கவிதை. இப்போதும் பெரும்பான்மையாக இல்லாவிடினும், சிறிதளவாவது கிடைக்கும் (அதுதான் ஆதரவு....! ) என்ற நம்பிக்கையில், ஆசை மலர்களை மனதுக்குள் சூடியபடி கிளை பரப்பி மறுபடி துளிர்தெழுந்துள்ளது.
சகோதரர் ஸ்ரீராம் ரெற்றோ கவிதை என எ.பியில் பகிர்ந்துள்ளதை பார்த்ததும், "நானும் பழையனவைதானே...!! என்னையும் மறு முறை ஒரு தடவை தூசு தட்டி வெளியிட்டால்தான் என்ன..? " என என்னிடம் அது முறையிட அதன் வார்த்தையை அரைமனதாக அங்கீகரித்து பதிவுக்குள்அனுப்பலாமா வேண்டாமா என தயங்கியபடி யோசித்தேன்.
"இது அந்த மாதிரியா என்பதெல்லாம் எனக்கு தெரியாதே. .!!!! அது எங்கே... நீ எங்கே.....!!!! நீயாக இப்படியொன்றை கற்பனை செய்து கொண்டால் எப்படி? மேலும், உன்னை நான் அன்று உருவாக்கிய வரிகளில், வார்த்தைகளில் குற்றங்கள் குறைகள் இருக்கலாமே. .!!! " என முதலில் பிகு செய்தபடி ரொம்பவே தயங்கினேன். "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை....! என்பது யாரும் அறியாததல்லவே.. ." என்ற அதன் ஆழமான மறு பதிலில் அதன் பின் எழுந்த என் மறுபேச்சுகள் பயனின்றி போகவும் தைரியமாக அதுவே பதிவுக்குள் வந்தமர்ந்து விட்டது.:))))
இதோ அந்தக் கவிதை.. .
காலம் மாறிப் போச்சு...
கடல் போன்ற வீடு...! அதில்
கணக்கற்ற நிறைய மனிதர்கள்...!
சுற்றங்களும், சுகங்களுமாக,
சுமை தாங்கும், உறவுகள்..!
அன்பும் , அரவணைப்புமாக ,
அரண் போன்ற மனங்கள்...!
தவழும் பேரன்களோடு, சேர்ந்து ,
தளர்வின்றி,தவழ்ந்தாடும் தாத்தாக்கள்...!
பாட்டும், கதையுமாக, பேத்திகளை,
பாசத்துடன் பார்த்துப் பார்த்து
பாரபட்சங்கள் ஏதுமின்றி,
பக்குவமாக்கும் ,பாட்டிகள்...!
விடியலில் உதிக்கும் விறகடுப்பு,
வீதி அசந்து உறங்கும் வரை,
அனல் கக்கும் அதிசயம்,
அண்டை அசலெங்கும் தொடரும்..!!!!
உணவுகளுக்கும், பஞ்சமில்லை...!!
உடைகளுக்கும். வஞ்சமில்லை....!!
உறவுகளின், உணர்வுகளும்,
உரிமைகளும் , என்றுமே,
அங்கு உடைந்ததில்லை....!!
நான்.. நீ...என்ற பேதமில்லை….!அங்கு
நாணயம் தவறிய பேச்சுக்களுமில்லை...!
மதிப்பும் , மரியாதையும்
குறைந்ததில்லை...!!
மற்ற சண்டைகளும் என்றும்
வந்ததில்லை..!!.
ஆனால் , இது அந்தக் காலம்....!
இன்று அந்த கடல்கள், கணிசமாக வற்றி,
கரையோரங்களும்,கவனிப்பின்றி,
கடுகளவாய் சிறுத்து விட்டது...!!
அடுப்பும், மரித்து விட்டது...!!மக்களின்,
உடுப்பும், மாறி விட்டது...!! மனிதரின்
சுயநலமெனும் போர்வைக்குள்,
சுற்றங்களின் சுகங்களும்,
சுமைகளும், சிறிதளவும் சிரமமின்றி,
சுகமாக சுருண்டோடி கொண்டு விட்டன...!
௯டி வாழ்ந்தால் கோடி நன்மையென,
௯டி வாழ்ந்த குடும்பங்கள்,இன்று,
நான்.... நீ... என நாலும் ௯றிக்கொண்டு,
நான்காய் பிரிந்ததில், நன்றாகவிருந்த
நாகரீகங்கள் , தடு(தடம்)மாறி விட்டதில்,
நலம் குலைந்த நகர(நரக)மாயிற்று...!!
"என் வாழ்விலேயே இப்படி மாறிப் போன
இந்த காலத்தின் கோலங்கள்..!!
உன் காலத்தில் எப்படி மாறுமோ?.." என்று
புலம்பிக்கொண்டிருந்த என் பாட்டியின்,
புலம்பல்கள் இன்றும், இன்னாளிலும்,
காதருகே, கால் கடுக்க நின்றபடி
காதுகளில் ஓதியபடிதான் உள்ளது..!!!
"விபரறிந்து பாட்டி... நீ..! அன்று
விசனத்துடன் சொன்ன வாக்கு ... .!
விந்தை நிறைந்த இவ்வுலகில்
விரைவாய் அவ்வாறே மாறிப் போனதில்
வியப்பொன்றும் இல்லையம்மா...!!!"
கடல் கடந்து சென்று வாழ்வதுதான்,
தன் கருமம் எனக்௯றி,
காரியத்தை சாதித்தான் ஒரு பிள்ளை....!!
காசிருந்தும், கார்கள் பலவிருந்தும்,
எங்கள் கால் பதிக்க அங்கு இடமில்லை,
என்றான் மற்றொருவன்....!!
இல்லத்தில் இணைந்திருந்து
இன்பமாக வாழ பழகியிரு ....! என்
இல்லத்தில் பிறகு உங்களை
இணைத்துக் கொள்கிறேன்
என்றான் ஒரு பிள்ளை....!!
சிறிய பிரச்சனை எனக்கு...!!
அது தீர்ந்து முடிந்ததும்
சில காலத்துக்குள் நீங்கள்
என்னுடன்தான் …!! என்றான்
இன்னொருவன்....!!
இயந்திரமயமான இக்காலத்தில்,
இளமை விரட்டிய, எங்களுக்கு ,
இந்த இல்லம் என்ற ஒன்றிடம்
இல்லாமலிருந்தால், இன்னும் பல
இன்னல்களுடன் இணைந்திருப்போம்....!
நான்கு பிள்ளைகள் பிறந்திருந்தும் ,
நான்கும் நாலுவிதமாய் போனதில் ,
இன்று முகமறியாத ,
உறவுகளுடன் வாழ்க்கையும்,
முதுமையுடன் அன்பாய்
முறியாமல் தொடர்கின்றது....!!
உன் சோகத்தை சுமக்க , பாட்டி...!அன்று
உன் பேத்தி நானிருந்தேன்....!!
என் வார்த்தை உரைக்க வகையாய்,
என் பேத்தி இன்று
என் அருகிலேயே இல்லையே.....!!!!
இந்த இல்லத்தின் உறவுகளுக்கும்
இன்று இதே நிலமைகள்தான்...!!
இந்நிலை எந்நாளில் மாறுமோ? அந்த
இறைவனுக்கே வெளிச்சம்...!!!
கடல் போன்ற வீடு....!!அதன்
காலங்கள் மாறிப் போச்சு...!!என, நீ. .
கடவுளிடம் புலம்புவது இப்போதும் என்
காதுகளில் ஒலிக்கிறது … பாட்டி!!!! ஆம்!
காலம் மாறித்தான் போச்சு...! அது
கணிசமாக மரித்தும் போச்சு....!!!!
***********************************************************************
கவிதை நன்றாக இருந்தால், (இல்லாவிட்டாலும்) இதற்கு ஆதரவு தர வேண்டுமாய் சகோதர சகோதரிகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் இனி வரும் காலங்களும் ஏதாவது ஒரு வகையில் மாறிப் போக வாய்ப்பு உள்ளதால், இது மூன்றாம் முறையாக இங்கு வருவதற்கு சற்று அதிகமாகவே வெட்கப்படுமாம்:)))) எனவே படித்துப் பார்ப்பவர்களுக்கும், ஆதரவாக விமர்சிப்பவர்களுக்கும் என் பணிவான நன்றிகள். 🙏.