அனைவருக்கும் என்அன்பான வணக்கம்...
இதுவும் நான் 1976 - ல் எழுதியதுதான். அப்போது எனக்கு கதைகள் எழுதுவதில் நிறைய ஈடுபாடு இருந்தது. நிறைய கதைகள் வெறும் தாளில் எழுதி வைத்திருந்தேன். .என் திருமணத்திற்கு பின் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக எழுத்தில் கருத்து செலுத்த இயலவில்லை. பத்திரிக்கைகளில் வெளியிட விரும்பவும் இல்லை. அப்படியே வெளியிட அனுப்பி வைத்தாலும் நான் எழுதியவை ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற ஐயப்பாடுதான் காரணம்.
குழந்தைகள் உதவியுடன் கணினி செயல் பாட்டை கற்றுக் கொண்டு வலைத் தளத்திற்கு வந்த பின்னும் எப்போதேனும் கதைகள் எழுதுகிறேன். ஆனால் அதையே இங்கு பதிவிட்டவுடன் அனைவரும் வந்து படித்து பாராட்டும் போது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது. ஆகையினால் 1976-ல் எழுதியவைகளையும் அவ்வப்போது இங்கு பதிவிட்டு அதற்கு வரும் உங்களின் அன்பான கருத்துரைகளை கண்டு மிகுந்த சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் என்ற நினைப்பில் பதிவிடுகிறேன். இது அப்போதைய கருக்கள் ஆனபடியால் அந்த கால சூழலுக்கு தக்கபடிதான் கதையின் போக்கும், எழுத்தும் இருக்குமென்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றிகளுடன்..
உங்கள் சகோதரி ..
"என்னை ஏன் காப்பாற்றினீர்கள்?" அவள் விம்மினாள்.
இதுவும் நான் 1976 - ல் எழுதியதுதான். அப்போது எனக்கு கதைகள் எழுதுவதில் நிறைய ஈடுபாடு இருந்தது. நிறைய கதைகள் வெறும் தாளில் எழுதி வைத்திருந்தேன். .என் திருமணத்திற்கு பின் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக எழுத்தில் கருத்து செலுத்த இயலவில்லை. பத்திரிக்கைகளில் வெளியிட விரும்பவும் இல்லை. அப்படியே வெளியிட அனுப்பி வைத்தாலும் நான் எழுதியவை ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற ஐயப்பாடுதான் காரணம்.
குழந்தைகள் உதவியுடன் கணினி செயல் பாட்டை கற்றுக் கொண்டு வலைத் தளத்திற்கு வந்த பின்னும் எப்போதேனும் கதைகள் எழுதுகிறேன். ஆனால் அதையே இங்கு பதிவிட்டவுடன் அனைவரும் வந்து படித்து பாராட்டும் போது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது. ஆகையினால் 1976-ல் எழுதியவைகளையும் அவ்வப்போது இங்கு பதிவிட்டு அதற்கு வரும் உங்களின் அன்பான கருத்துரைகளை கண்டு மிகுந்த சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் என்ற நினைப்பில் பதிவிடுகிறேன். இது அப்போதைய கருக்கள் ஆனபடியால் அந்த கால சூழலுக்கு தக்கபடிதான் கதையின் போக்கும், எழுத்தும் இருக்குமென்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றிகளுடன்..
உங்கள் சகோதரி ..
கன்னி, ஆனால் தாய்.
"என் நிலையில் யார் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்கள். தவிர,இன்னும் சில மாதங்களில் இந்த உலகைக்காண ஆவலோடு இருக்கும் ஒரு ஜீவனைக்கொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கிறது", அமைதியாக கேட்டாள் நிர்மலா.
"அவமான சின்னத்தை சுமந்து கொண்டிருக்கும் என்னால் உங்களுக்கு ஏன் அவப் பெயர் வரவேண்டும், அதனால்தான் கேட்கிறேன், இந்த அநாதையை என்னை ஏன் காப்பாற்றினீர்கள் என்று?", அவள் கலங்கிய குரலில் கேட்டாள்.
"உன் பெயர் என்ன?"என்று நிதானமான குரலில் கேட்டாள் நிர்மலா.
"நளினா", முணுமுணுப்பாக பதில் வந்தது அவளிடமிருந்து.
"இதோ பார் நளினா!, அநாதைகளுக்கு அநாதைதான் இடம் தரவேண்டும், இதோ பார் நானும் ஒரு அநாதைதான்.... முப்பது வருடங்களை மலை போல் முழுங்கி விட்டு ஒரு தைரியமான பெண்ணாய் நிற்கவில்லையா! இந்த உலகில் தனியே வாழ்க்கையை அமைத்து கொண்டவர்களுக்கு தைரியந்தான் தேவை.. அதுசரி, நீ இந்த நிலைமைக்கு வர காரணம் என்னம்மா?" பரிவுடன் அவள் தலையை தடவி விட்டவாறு கேட்டாள் நிர்மலா.
"தயவு செய்து அதை மட்டும் இப்போது கேட்காதீர்கள், உங்கள் பரிவான பேச்சினால் என் மனதிலுள்ள காயம் சற்று ஆறிப்போயிருக்கிறது. அதை மீண்டும் கிளறி விடாதீர்கள்", என்று விம்மினாள் நளினா.
"ஸாரி நளினா, இனிமேல் நீ என் உடன் பிறவா சகோதரி உனக்கு எப்போது உன் கதையை சொல்ல தோணுகிறதோ அப்போது கூறலாம், நான் உன்னை வறுப்புறுத்த மாட்டேன். நீ இங்கு என்னுடன் தைரியமாக தங்கலாம், இது இனி உன்னுடைய வீடு மாதிரி நினைத்து கொள். நான் உன்னை என் காலம் உள்ள வரை காப்பாற்றுவேன், கவலைபடாதே!" என்று உருக்கமான குரலில் கூறிய நிர்மலா அவளை அன்போடு கட்டியணைத்துக் கொண்டாள்.
"நளினா, உன் கனவில் கூட இனி தற்கொலை எண்ணம் வரக்கூடாது, தெரிகிறதா?" அன்புடன் கூறியபடி லேசாக அவள் கண்ணத்தை தட்டினாள் நிர்மலா.
சரி, என்கிற மாதிரி இருந்தது நளினாவின் தலையசைப்பு.....
"குட் கேர்ள்" பாராட்டி விட்டு அவ்வறையை விட்டு அகன்றாள் நிர்மலா..
சோம்பல் ஒன்றை விடுத்தபடி படுக்கை யிலிருந்து எழுந்தாள் நிர்மலா. தினமும் கண்விழித்தவுடன் காப்பியுடன் நிற்கும் நளினாவை காணவில்லை. நளினா அவளுடன் தங்கியிருக்க சம்மதித்தது நிர்மலாவுக்கு சந்தோஷத்தை தந்தது அவள் கூறியபடி உடன்பிறந்த தங்கையை விட ஒரு படி மேலாகவே நளினாவை கவனித்துக் கொண்டாள்.
ஐந்தாறு மாதங்களில் ஒரு பெண் குழந்தைக்கு தாயான நளினா, நி்ர்மலாவின் அன்பான அரவணைப்பில் நலம் பெற்று, தன்வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்படுத்திய நிர்மலாவிடம் அளவு கடந்த அன்பை பொழிந்து அவளை தன் தெய்வமாகவே கருதி வாழ்ந்து வந்தாள். நிர்மலா எவ்வளவோ தடுத்தும் வீட்டு வேலைகளை அவளே பொறுப்பெடுத்து ஏற்றுக்கொண்டு நிர்மலாவையும், குழந்தையையும், நன்றாக கவனித்து வந்தாள்.
வழக்கப்படி இன்று கண் விழித்ததும் நளினாவை காணாததால், "பாவம்! வேலை மிகுதியில் இன்று கண் அசந்து உறங்குகிறாள் போலிருக்கிறது, இன்று நாம் காப்பியுடன் அவளை எழுப்பலாம்" என்று எண்ணியபடி எழுந்து பல் துலக்கி சமையலறைக்குள் நுழைந்தாள்.
சில மாதங்களாக தினமும் நளினா தயாரித்த காப்பியை குடித்த நாக்கு, இன்று சற்று வேறுபட்ட சுவைக்கு குறைகூற, மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.
"என்ன இது! எவ்வளவு அயர்ந்து உறங்கினாலும் சிறிய சப்தத்திற்கு எழுந்து விடும் நளினா இன்னமும் எழுந்து வரவில்லையே? ஒருவேளை உடம்பு சரியில்லையோ?" இந்த எண்ணம் வந்ததும் மடமடவென்று நளினாவின் அறைக்கு ஒடினாள் நிர்மலா.
கட்டிலில் நளினாவை காணவில்லை, அருகிலிருந்த மரத்தொட்டிலில் ஐந்து மாதகுழந்தை ஷீலா புன்னகையுடன் உறங்கி கொண்டிருந்தாள். "ஒருவேளை வீட்டின் பின்பக்கம் போயிருக்கிறாளோ?" பதட்டத்துடன் வீடு முழுவதும் தேடினாள் நிர்மலா.
நளினாவை எங்கும் காணவில்லை. திகில் மின்னலென பாய்ந்தது நிர்மலாவின் உள்ளத்தில்... மறுபடியும் நளினாவின் அறைக்கு ஒடினாள் சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டியபோது தொட்டில் அருகில் இருந்த டேபிளில் கடிதம் ஒன்று மேலே பாரத்தை சுமந்து கொண்டு அமர்ந்திருந்தது.
பரபரப்புடன் அதை எடுத்து படித்தாள் நிர்மலா.
"அன்பும், பாசமும், மிகுந்த என் உயிரினும் மேலான அக்காவுக்கு, எத்தனையோ நாட்களாக என்னைப் பற்றி உங்களிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்திருக் கிறேன், ஏதோ ஒன்று என்னை சொல்ல விடாமல் தடுத்துக் கொண்டேயிருந்தது. ஆனால் அக்கா இன்றுதான் அதற்கான சந்தர்ப்பம் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
நான் கல்லூரியில் கால் பதித்த நாட்கள். தோழிகளுடன் படிப்பும் நட்புமாக நன்றாகத்தான் நகர்ந்து கொண்டிருந்தது வாழ்க்கை. என் போதாத நேரம், நெருங்கிய தோழிகளுடன், ஒரு தோழி வீட்டில் தங்கி வரும் தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டிருந்தோம்.
அப்போது அந்த தோழி வீட்டின் எதிர் வீட்டின் மாடியில் குடியிருந்த வாலிபன் ஒருவனிடம் சாதரணமாக தொடங்கிய நட்பு என் வாழ்க்கையை பாழாக்கியது. தேர்வுகள் முடிந்தவுடன் என் வீட்டில் எங்கள் உறவுக்கார பையன் ஒருவனுடன் என் திருமணம் பற்றி பேச்சு வந்ததும் நான் அதிர்ந்து போனேன். என் திருமணத்தை நிறுத்த நான் செய்த முயற்சிகள் வீணாயின.
என் நிலைமை பற்றி அவனிடம் விவாதித்த போது நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் நேசிப்பதை உணர்ந்தோம். "நான் உன்னை ராணி மாதிரி வைத்து காப்பாற்றுகிறேன்" என்று அவன் செய்து கொடுத்த சத்தியத்தை நம்பி, பத்து மாதம் சுமந்து பெற்று அத்தனை தூரத்துக்கு ஆளாக்கிய பெற்றோர்களை உதாசீனபடுத்தி விட்டு, அவனுடன் புறப்பட்டு விட்டேன்.
இரண்டு மாதங்கள் மனம் போனபடி சுற்றி விட்டு, இங்கு வந்தபின் அவன் நண்பன் அறையில் ஒண்டி கொண்டு வாழ்க்கை பயணத்தை துவக்கிய போது திருமணத்தின் அவசியத்தை அவனிடம் அடிக்கடி உணர்த்தி கொண்டே இருந்தேன். அவனும் இன்று, நாளை,.. என நாட்களை தள்ளியதில் மாதங்கள் ஒடியது.
ஒரு நாள் என் வயிற்றில் அவன் குழந்தையை நான் சுமப்பதை தெரிவித்ததும் திகைத்து போய், "திருமண ஏற்பாட்டை விரைவில் செய்து விட்டு வருகிறேன்" என்று போனவன், நாட்கள் பல ஓடியும் திரும்பவில்லை. கண்ணீருடன் இன்னும் சில வாரங்களை தள்ளிய போதும் அவன் வந்த பாடில்லை. முதலில் ஆறதல் கூறி என்னை தேற்றி வந்த அவன் நண்பனின் போக்கும் வரவர மாறியது.
"இவளை என் தலையில் கட்டி விட்டு அவன் தப்பித்து விட்டான், என்ன செய்வதென்று தெரியவில்லை" என்று தன்னுடைய மற்றொரு நண்பனிடம் புலம்புவதையும், அதற்கு அந்த மற்றொருவன் கொடுத்த மோசமான யோஜனைகளையும், நான் கேட்க நேர்ந்ததால் என்னை அவர்கள் இல்லாத நேரம் பார்த்து அங்கிருந்து தப்பிக்க வைத்தது.
பெற்றவர்களின் மனம் புண்படும்படி நடந்து கொண்டதற்காக ஆண்டவன் சரியான தண்டனை கொடுத்து விட்டான் என்று எண்ணிய வருத்தத்தில் மனம் பாறையாய் கனக்க, வாழ பிடிக்காமல் சாகத்துணிந்தேன்.
அப்போதுதான் நீங்கள் வந்து காப்பாற்றினீர்கள். தாய் தந்தையை இழந்த நிலையிலும் நீங்கள் தவறான வாழ்க்கையை தேர்ந்தெடுக்காமல், நேர்மையான முறையில் வாழ்ந்து வரும் உங்களிடம் என் அவல வாழ்க்கையை சொல்ல மனம் வராமல் இதுநாள் வரை சொல்லாமல் இருந்தமைக்கு என்னை மன்னித்து விடுங்கள்.
உண்மையிலேயே, உங்களை மாதிரி நல்ல மனது உள்ளவர்களை நான் இதுவரை சந்தித்ததே இல்லையக்கா... நம் முதல் சந்திப்பில் நீங்கள் என்னைப் பற்றி விசாரித்த போது, "அதை இப்போது கேட்காதீர்கள்", என்று நான் கேட்டுகொண்டதற்காக நீங்கள் இதுநாள் வரை என்னை பற்றி ஒரு வார்த்தை கேட்காமல், என்னை உங்கள் உடன்பிறந்த தங்கையாகவே நினைத்து என்னையும், என் குழந்தையையும், எப்படியெல்லாம் பார்த்து, பார்த்து கவனித்து கொண்டீர்கள்.
அதற்கு நான் இந்த பிறவியில் மட்டுமல்லாது இனி எடுக்கும் எத்தனை பிறவிகளில் நன்றிக்கடன் படபோகிறேன்று எனக்கு தெரியாது. ஆனால் இனி வரும் ஒவ்வொரு பிறவிகளிலும் உங்களுடன் இணைந்திருக்கும் உறவு வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
இனி நான் போகும் பாதையில் உங்களை மாதிரி நல்லவர்களை சந்திக்க வேண்டுமென்றும், பிரார்த்தித்து கொண்டும் போகிறேன்.
போகிறேன் என்றதும் முன்பு மாதிரி முட்டாள்தனமான முடிவை நான் எடுத்து விடுவேனோ.... என்று நீங்கள் கலங்க வேண்டாம். உங்களிடம் பழகிய நாட்களில் உங்களது தைரியத்தை பார்த்து வியந்திருக்கிறேன்... அந்த தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், மூலதனமாக வைத்துக்கொண்டு, நான் படித்த கல்வியறிவின் மூலம் ஒரு நல்ல நிலைமைக்கு வந்து உங்களை மாதிரி தைரியமான திறமையான பெண்ணாக உங்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் இங்கிருந்து போகிறேன்.
என் வாழ்நாள் முழுக்க உங்களுக்கு பாரமாக இருக்க விருப்பமில்லாததால் இந்த முடிவை உங்களை கேட்காமல் எடுத்திருக்கிறேன்.. என் முடிவு உங்களுக்கு தவறாக பட்டால் தயை கூர்ந்து என்னை மன்னிக்கவும்.
என் வயிற்றிலிருந்த பாரத்தை இறக்கி உங்கள் மேல் ஏற்றிவிட்டு செல்வதற்காக என்னை மன்னித்து விடுங்கள். குழந்தையுடன் செல்லும் என் பயணம் சிக்கலை ஏற்படுத்துமோ என்ற சிறிய பயத்தில் உங்களை சிரமத்தில் ஆழ்த்திவிட்டுச்செல்கிறேன். என்னை விட நீங்கள் அக்கறையுடன் குழந்தையை பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.
நான் நினைத்த மாதிரி ஒரு நல்ல நிலைமையில் உங்களையும், என் குழந்தையையும், சந்திக்கும் போது, கன்னியாய் இருக்கும்போதே, ஒரு தாயாயிருந்து ஒரு குழந்தையை வளர்த்த சிரமத்திற்க்காக உங்கள் காலில் விழுந்து கதறி அழுது மன்னிப்பு கேட்பேன்.. அந்த நாளை விரைவில் தர வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக்கொண்டு உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்".
இப்படிக்கு
உங்களை எந்த நிமிடமும் மறவா,
உங்கள் அன்புத்தங்கை,
நளினா.
இனியும் ஒரு நாள் தொடரும்.....