எட்டுப் பறவைகள் நாங்கள். தினமும்,
எட்டும் வரையிலும் வானில் சிறகடிப்போம்..
எட்டி வைக்கும் உறவில்லை நாங்கள்…எங்களில்
எட்டிக்காயாய் எவரையும் வெறுத்ததில்லை.. நாங்கள்,
உண்ணும் உணவுக்கு ஏதும் பஞ்சமில்லை.. மற்ற
உடமைகள் எதுவும் கை விலங்கில்லை எமக்கு....
பட்டினிதான் இன்று என்றந்த நிலைவரும் போதும்.
பகிர்ந்துண்டு வாழும் நல்ல பக்குவ மனமுண்டு எமக்கு..
பேதங்கள் என்றுமில்லா வாழ்விங்கு கண்டு,
பேரின்பமாய் வாழ்ந்த
தாய் தந்தை வழி சென்று,
முன்னோர் சுட்டிய பாதையை மறவாது, மனதினிலே
முகஞ்சுழிப்பும்,
மற்றும் முணுமுணுப்பும் ஏதுமின்றி,
மரங்களுடன்,
மட்டில்லா
பசும் காடுகளை, நீங்களெல்லாம்
மனத்தகத்தில்
கழிவிரக்கம் சிறிதன்றி, சுயநலப்போர்செய்து
மதியின்றி கசடிதுவே என நினைத்து தினம் களைந்தும் ,
மறுவாழ்வும் எமக்குமுண்டு என ஐயமின்றி வாழுகிறோம்…
பிறப்பெய்தும் பல உயிரை படைத்ததும் “அவன்” செயலே…! இதில்
பிரிவென்ற பல தவறை செய்வதும் நம் வினையே.! இயற்கையும்
பிறவிதான் என்பதை ஒருபோதும் மறக்காமல், வேதனைகள்
பிறரையும் வருத்தும் என ஒரு நொடியேனும் நினையுங்கள்…
ஒற்றுமையின்
வலிமையை
அன்றொரு நாள் மனிதனுக்கு,
ஓங்கிச் சொன்னது எங்கள் இனம்… அறிவுகள் ஆறிருந்தும்,
ஒற்றுமையில்லா பிரிவுகள், பிரச்சனை பிரசவித்த மனபேதங்களும்
ஓங்கிப் பெரிதாக,
காடென்றும்
மேடென்றும் பாராமல்,
தனியாகிப் போனது உங்கள் இனம்… தடையென்றும்,
தவறென்றும்,
தறிகெட்டு நாங்கள் ஒன்றாகி சூழ்ந்தால்,
வானம் இருண்டு விடும்.. பூமியும் அரண்டு விடும்.. ஆனால்
வார்த்தையிலேனும் அவ்விதமாய் ஏதும் சொல்லோம்.. ஏனெனில்,
ஒற்றுமையை தீயதாக்கி வஞ்சம் தீர்க்க எங்கள் மனம்
ஒரு பொழுதும் நிச்சயமாய் ஒப்பவில்லை.. மாறாக,
ஒற்றுமைக்கு எங்கள் கதைகள், இன்னும் ஏதேனும்
ஒன்றிரண்டு உள்ளதென்றால், உங்கள் குலம் சிறப்புறவே,
தனிமை பெரும் தடங்கலென்று, தத்துவமாக அதைச்சொல்லி,
தனித்துப்போகும் தவறதனை திருத்தி, தாவரம் அழிக்காத பண்பைக்௬றி,
தப்பாமல் எங்களின் நிலையுணர்த்தி, எங்கள் வம்சமும் இனி அழியாது,
தரணியில் நாம் பிறந்த பயனை ஒருமையாக்கி இனி
வாழுவோம்..!
பறவைகளின் உபதேசம் வீணென்று பரிகாசங்கள் ஏதும்,
பகன்றிடாமல், பகலிரவு என்றும் பார்த்திடாமல், பலமாய்
யோசித்து பலன் பெறுங்கள்…! ஒற்றுமையின் வலிமைகள் மீண்டும்
யோசனைகளுடன் சிறந்திருக்க படைத்தவனை தினம் நாங்கள் யாசிக்கிறோம்! எங்கள் சிறகுகள் என்ற மலர் கொண்டு பூஜிக்கிறோம்...
படங்கள்: நன்றி கூகுள்