இந் நன்நாளில் கண்களுக்கும், வயிற்றிக்குமாய் ஒரு சிறு விருந்து. இவ்விரண்டும் நிறைந்தால், மனதும் ஆனந்தமான நிறைவடையும் அல்லவா?
காக்கும் கடவுள் கணேசனை மனமுருக முதலில் அழைப்போம். . தூக்கிய துதிக்கையே துணை நமக்கு என நம்புவோருக்கு, அவனருள் கண்டிப்பாக என்றும் உண்டு. 🙏.🙏.
முழுமதியும்......
சேர்ந்தணைந்த சுந்தரனின் அருளும் கண்டிப்பாக நம் வாழ்வில் வளம் சேர்க்கும். 🙏.🙏.
பிறகு மலர்ந்து மணம் வீசி வரும் பொங்கல் திருநாளை, மங்களகரமான கோலங்கள் இட்டு பசும் மஞ்சளோடு வரவேற்கலாம்..
முதலில் இனிப்பான பால் கொழுக்கட்டைகள்.
பச்சரிசி மாவை வென்னீர் சேர்த்து வேக வைத்துக் கொண்டு, சிறு உருண்டைகளாக செய்து, ஆவியில் வைத்து ஒரளவு வேக வைத்துக் கொண்டு, பால், மற்றும் கொஞ்சம் தேங்காய் பாலுடன், சேர்த்து மீண்டும் கொஞ்சம் கொதிக்க வைத்ததும்,வேண்டிய வெல்லமும் சேர்த்து, அந்த வெல்ல வாசனை போகுமளவிற்கு (வெல்லம் முழுமையாக கரைந்தால் அதுதான் அடையாளம்) கொதிக்க வைத்துக் கொண்டு ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கினால், இனிப்பான பால் கொழுக்கட்டைகள் தயார்.
அடுத்து இனிப்பான சேமியா கேசரி, மற்றும் உருளை கிழங்கு போண்டா.
சேமியாவை தேவைக்கேற்ப எடுத்து வறுத்துக் கொண்டு, அத்துடன் மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து, அத்துடன் ஒரிரு சிட்டிகை கேசரி பவுடரையும் சேர்த்து பின், வேக வைத்துக் கொண்டு, சர்க்கரை ஒன்றரை பங்கு அதனுடன் சேர்த்து நெய் விட்டு அடி பிடிக்காமல் கிளறி ஏலக்காயும் சேர்த்த பின் மு. பருப்பு, உலர்ந்த திராட்சைகளை நெய்யில் வறுத்து போட்டு இறக்கினால், சுவையான சேமியா கேசரி பார்க்கவே அழகாக இருக்கும்.
உ. கி நான்கைந்து வேக வைத்துக் கொண்டு, தோல் நீக்கிய பின், பொடிதாக அரிந்த வெங்காயம், ப. மிளகாய் இவற்றை எண்ணெய்யுடன் வதக்கி, அத்துடன் உதிர்த்த உ. கி சேர்த்து, உப்பு, காரப்பொடி கலந்து நன்கு வதக்கி, ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
கடலைமாவையும், அரிசி மாவையும், பஜ்ஜி மாவுபோல கலந்து வைத்துக்கொண்டு, அந்த உ. கி உருண்டைகளை முக்கி எடுத்து எண்ணெய்யில் பொரித்தெடுத்தால், உகி போண்டா தயார். கூடவே தேங்காய் சட்னியும் செய்து சுடசுடப் பரிமாறலாம்...
வாழைப்பூவை கள்ளன் ஆய்ந்து நன்கு அலம்பி வைத்துக் கொள்ளவும். , ஏற்கனவே ஊற வைத்த, அரை கிளாஸ் பச்சரிசியை, உப்பு, மி. வத்தல், ஒன்றிரண்டு பச்சை மிளகாயுடன் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அத்துடன் ஊற வைத்த ஒரு கிளாஸ்( இது மொத்தமாக கலந்த கலவை) நான்கு பருப்பு வகைகளையும்,(அதாவது உ. ப, து. ப, க. ப, பா. பருப்பு வகைகளையும்) அரைத்துக் கொண்டு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை சேர்த்து, அத்துடன் அலம்பி வைத்திருக்கும் வாழைப்பூவையும் அரைத்தெடுத்து கொண்டு, அனைத்தையும் கலந்த பின் சிறுவடைகளாக தட்டி எண்ணெய்யில் பொரித்தெடுத்தால் சுவையான வாழைப்பூ வடை தயார்.
பொங்கலன்று, வழக்கமான இனிப்பான சர்க்கரை பொங்கலுடன், வெண் பொங்கலும் தயாரித்து கொண்டு, அதனுடன் மேற்கூறிய வகைகளையும் செய்து வைத்துக் கொண்டு பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என வேண்டியபடி, இறைவனுக்கு படைத்த பின் அனைவரும் உண்டு மகிழலாம்.
பொங்கலன்று இத்தனை ஐயிட்டங்களா...? எனத் திகைக்க வேண்டாம். சாதரணமாக அன்று மதிய சாப்பாடாக சர்க்கரை பொங்கல், வடை, அப்பளம், இரண்டு கறி, கூட்டு, தயிர் பச்சடி, ரசமென சாப்பிடுவது அன்றைய நாள் தொட்டு இருந்து வரும் ஒரு பாரம்பரிய பழக்கம். ( இப்போது அந்த பழக்க வழக்கங்கள் மங்கி வருகிறது. செய்யவும் நேரமில்லை. சாப்பிடவும் முடியவில்லை.) அதனால்தான் கிராமங்களில், பொங்கலன்று "பால் பொங்கியாச்சா.. வயிறு வீங்கியாச்சா.. " என்று கேட்பதும் ஒரு வழக்கம். இதில் சற்று வித்தியாசமாக காய்கறிகளை வைத்தே இப்படி செய்யலாம் (இந்த ஒவ்வொன்றையும் இப்படி செய்ய அன்றைய தினம் நேரம் கிடைப்பதும் அரிதுதான்) என இப்படி இத்தனை சமையல் தினுசுகளை பதிவிட்டேன்.
இன்னமும் என் விருப்ப இனிப்பான மைசூர் பாகையும் படங்களுடன் செய்முறையாக இதனுடன் இணைக்க மறந்து விட்டேன். அதையும் இணைக்கலாமென்றால்..... (ஆகா.. இதென்ன எல்லோரும் எங்கே ஓடுகிறீர்கள்...! ஹா.ஹா.ஹா சும்மா ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன். இல்லை.. .இல்லை.... இவ்வளவே அதிகம். மேலும் இரு இனிப்புக்களே, அன்றைய விஷேட தின இனிப்பான சர்க்கரைப் பொங்கலுடன் போதுமென்று நினைக்கிறீர்களா..! சரி. சரி.. 👍👍.)
பி. கு... அன்றைய தினம் உத்தராயண புண்ணியகாலம் என்பதினால், வடை, போண்டா போன்றவற்றிக்கு வெங்காயம் தவிர்ப்பவர்கள் அதை தவிர்த்து செய்து கொள்ளலாம். ஏனென்றால், இதில் சில எண்ணெய் பலகாரங்கள் எப்போதோ எங்கள் வீட்டில் மாலை நேர சிற்றுண்டிக்காக தயாரித்தது. அந்தப் படங்கள், விவரணைகளுடன் இந்தப் பொங்கல் சிறப்பு(சிறப்பிதழு)டன் "நானும் வருவேன்" என பிடிவாதமாக வந்து சேர்ந்து கொண்டது. சரி.. போனால் போகிறதென தவிர்க்க முடியாமல், நானும் அவைகளையும் சேர்த்து பகிர்ந்து கொண்டேன்.
இரண்டாவதாக நாம் வாழும் இந்த மண்ணுக்கு நன்றி சொல்லும் விதமாய் மண்ணுக்கு மேல் விளையும், பயிர்கள், செடி, கொடிகள் நமக்குத் தரும் காய்கறிகள், பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் கரும்பு, பூக்கள் பழம், வெற்றிலைப்பாக்கு, மஞ்சள் இலைகொத்துகள், மாவிலை, வேப்பிலை, வாழையிலை, போன்றவற்றிக்கு முக்கியத்துவம் தருவது போல், மண்ணிற்கு அடியில் விளையும் காய்கறிகளான கிழங்கு வகைகளையும் பிரியத்துடன் இன்றைய தினம் (பொங்கலன்றும், அதன் மறுநாளும், ) உணவில் சேர்ப்பதை அவசியமாகவும். வழக்கமாகவும் கருதுவோம். எனவேதான் இதன் பேச்சுக்களுக்கு மதிப்பளித்தேன். ("எங்களை வைத்துதான் இந்தப் பதிவே....அதை மறந்து விடாதே... ரொம்பவும் அலட்டிக் கொள்ளாதே.. ...! போதும்.. போதும்..!! உன் பிர(பரி)தாபம் .. " என்று அவைகள் கொஞ்சம் மெதுவாக இல்லாமல், சத்தமாகவே கோபத்துடன் முணுமுணுப்பது என் காதுகளில் மட்டுந்தானா ? இல்லை, உங்களுக்குமா ? ஆனால், உங்களுக்கு அது ஏற்கனவே கேட்டிருக்கும் எனவும் ஐயமுற நினைக்(நம்பு)கிறேன்.😀😁 😁. )
எப்படியிருந்தாலும் இந்தப் பதிவு, சிறப்பாக 👌உள்ளதாவென உங்களிடமிருந்து அன்புடனான 👏👏 தட்டல் கருத்துக்களை எப்போதும் போல் ஆவலுடனும், ஆர்வத்துடனும் எதிர்பார்க்கும் உங்கள் சகோதரி.... கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் மீண்டும் நன்றியுடன் கூடிய என் அன்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள். 🙏. 🙏.