Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Saturday, July 3, 2021

தொடர் கதை.....

கதையின் 4 ம் பகுதி. 

 "அடாடா...சே... என்ன... இவன் இப்படியெல்லாம் பிரித்து பேச ஆரம்பித்து விட்டான்...? தெரிந்தவர்கள் குறை சொல்லும் போதெல்லாம் அவனுக்காக அவர்களிடம் பரிந்து பேசியதெல்லாம் நினைவுக்கு வந்தது. அப்படி யாருக்கு எடுத்து  கொடுத்து விட்டேன்...?  முகம் தெரியாத வேண்டாதவர்களுக்கா...? அவன் கூடப்  பிறந்த தங்கைக்கு, அவள் வாழ்க்கை  ஆரம்பிக்கும் முன்பே பிரச்சனை வந்து விடாமலிருக்கவும், அவனை பத்து மாதம் சுமந்து பெற்ற அவன் அம்மாவின் சிரமத்தையும் குறைக்கத்தானே கொடுத்தேன்... சொல்லபோனால் அவன் எப்பாடுபட்டாவது செய்ய வேண்டிய கடமையைதானே நான் செய்தேன்.... நான் ஏதோ குற்றம் செய்து விட்ட மாதிரி பேசுகிறானே....? " நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை. மொத்தத்தில் அன்று இரவு தூக்கம் முழுமையாக பறி போனது அவருக்கு.

அதன் பின் திருமணத்திற்கு தன்னுடன் வரச்சொல்லி மகன் அழைத்தபோது ௬ட, "நான் எதுக்குப்பா...? நீயும், உன் மனைவியும், போய் வாருங்கள். நான் வரவில்லை... ." என்று ஏதோ சாக்கு போக்கு சொல்லி தப்பித்து விட்டார். அங்கு சென்ற பிறகு இவன் தன்னை வைத்துக் கொண்டு ஏதாவது பேச போக பிரச்சனை பெரிதாகி அது  அந்தக் கல்யாணத்தை பாதித்து விட்டால்... பாவம்.. . .!  அந்த பெண்....! என்ற கழிவிரக்கத்தில் அவர் மனம் திருமணத்திற்கு செல்ல ஒப்பவில்லை. இந்த விஷயமெல்லாம் நண்பர் பாலுவுக்கு தெரியாது. இவரும் எதைப் பற்றியும் சொல்லாமல், வழக்கப்படி தன் மனதில் போட்டு புதைத்து விட்டார். ஏற்கனவே தன் மகனை பற்றி அடிக்கடி குற்றம் சொல்லி கொண்டிருக்கும் பாலுவுக்கு இது தெரிந்தால் தன் மகனை நிற்க வைத்து கேள்வி கேட்டு பிரிவை பெரிதாக்கி விடுவார் என்ற பயம் தந்த தயக்கத்தில் சதாசிவம் பாலுவிடம் எதுவும் கூறவில்லை.

இருவரின் யோஜனைகளிலும் சிறிது நேரம் மெளனமாகவே நகர்ந்தது. அப்போது சுசீலா கஞ்சியும் மாத்திரையும் கொண்டு கொடுத்து விட்டு, "கஞ்சி குடித்து விட்டு மாத்திரை போட்டுக் கொள்ளுங்கள் மாமா" என்று ௬றி விட்டுச் சென்றாள்.

சற்று நேரம் பொறுத்து மெளனம் கலைந்த பாலு, "சரி, சதா.... நா கிளம்புறேன். உன் மகனை பத்தி குத்தம் சொல்ல எனக்கு மட்டுமென்ன ஆசையா..? உன்னோட நிலையை பாக்க பொறுக்காமேதான் மனசுலே படறதை சொல்றேன். நீ தப்பா எடுத்துகிட்டாலும் சரி,... நான் இன்னொன்றும் உன் நல்லதுக்காக மறுபடியும் சொல்றேன், இந்த வீட்டை விக்கறதுக்கு மட்டும் நீ மறுபேச்சில்லாமல் சம்மதிக்காதே.... அவ்வளவுதான்..! என்னாலே சொல்ல முடியும். சரி...சரி.. நீ கஞ்சியை குடிச்சிட்டு, மாத்திரை போட்டுகிட்டு நல்லா ஓய்வு எடுத்துக்கோ... நா மறுபடியும் சாயங்காலம் வந்து பாக்கறேன்... " என்றபடி எழுந்தார்.

" சரி, போய்வா.. . "என்று நண்பருக்கு விடை கொடுத்த சதாசிவம் கஞ்சியை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.

அன்றொரு நாள் தன்னை சந்திக்க வெளியூரிலிருந்து வந்திருந்த நண்பனை என் அருகாமையில் நின்றபடி விடை கொடுத்து அனுப்பும் போது, இவர் மகன் அவனிடம் ௬றிக் கொண்டிருந்ததை, நானுந்தான் கேட்டேன்...  "ஆமாப்பா... இது ஒரு நல்ல சான்ஸ்.. இதை நா கோட்டை விட்டுட்டா அப்புறம் இதைப் போல கிடைக்கவே கிடைக்காது. எப்படியாவது இந்த  பதவி உயர்வை  பயன்படுத்திகிட்டு சென்னைக்கு போயிட்டா, அப்புறம் ஒரு ஆறு மாசத்திலே வெளிநாடு போற வாய்ப்பு கம்பெனி மூலமா வருது..... அது கிடைச்சா  என் வாழ்க்கையே பிரமாதமாயிருக்கும். அதுக்காகவே நான் சென்னைக்கு போக ஒத்துக்கனும், அப்பாவையும் ஒத்துக்க வைக்கனும். வேற வழியில்லை,.. ..! இந்த வீட்டை வித்துட்டு சென்னையிலே  கொஞ்ச மாதங்களாவது ஏதேனும் வாடகை வீடு பார்த்து செட்டிலாக வேண்டியதுதான்..... அங்கிருக்கும் என்  நண்பனிடம் சொல்லி அப்படி ஒரு நல்ல வீடு பார்க்க ஏற்பாடு  செய்ய சொல்லியிருக்கிறேன். " அவன் குரலில் பதவி உயர்வின் ஆசையும் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற வெறியும் தெரிந்தது...

"சரி.... நீ சென்னைக்கு போய் சில மாதங்களாவது  செட்டிலான பிறகு உனக்கு வெளிநாடு வாய்ப்பு வந்ததும் உன் குடும்பத்தை மட்டும் விட்டு விட்டு செல்ல முடியுமா,? அப்போது இந்த வீடு இருந்தால், அவர்கள் இங்கு வந்து வசிக்க வசதியாக இருக்குமே... " என்ற அவன் நண்பனின் கேள்விக்கு, " இல்லை, இல்லை. .. வெளிநாட்டில் எப்படியும் சில வருடங்களுக்கு மேலாக இருக்க வேண்டி வரும். அதனால் மனைவி, குழந்தையை விட்டுட்டு போக முடியாது. அப்பாதான் பிரச்சனை..  அவரை கூடவே அழைத்து செல்லவும் முடியாது. அவர் உடம்புக்கும் அந்த ஊர் ஒத்துக்காது.  முடிந்தால் அவர் அங்கேயே தனியாக இருக்கட்டும் இல்லையென்றால் ஏதாவதொரு முதியோர் இல்லத்தில் அவரை சேர்த்து விட்டுட்டு போக வேண்டியதுதான்.... " என்ற அவனின் அலட்சியமான பதிலில் நான் ஆடி போய் விட்டேன் இதை அவரிடம் நான் எப்படி சொல்வதென்று தெரியாமல் தவித்துக் கொணடிருந்த போதுதான் அவர் நண்பர் பாலு அது பற்றி அவரிடம் விவாதித்தது  எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது. தனக்காக தன் உழைப்பையும், வாழ்க்கையையும், தியாகம் செய்தவரை, வயதான காலத்தில் அவரை கவனித்து கொள்ள வேண்டியது தன் கடமை என்று உணராமல், சுயநலமாக மட்டும் திட்டமிடும் மகனுக்காக, இன்னும் வாதிடும் அவரை நினைத்து எனக்கு மிகவும் வருத்தமாகவும், கவலையாகவும் இருந்தது.

தொடர்ந்து வரும்... 

Thursday, July 1, 2021

தொடர் கதை...

 கதையின்  2.ம் பகுதி.... 

"சதா, நேற்று உனக்கு உடம்பு சரியில்லையாமே, இப்பத்தான் குமார் சொன்னான். உடனே ஓடி வர்றேன் இப்ப எப்படி இருக்கு....?" என்று கவலையுடன் கேட்டபடி பக்கத்து வீட்டை பார்த்தார். 

அப்போது சதாசிவத்தின் வீட்டிலிருந்து வெளிவந்த சுசீலாவை பார்த்ததும், "அடேடே, சுசீலா, நீ இங்கேதான் இருக்கியா? இப்பத்தான் குமார், சதா மாமாக்கு நேற்று நல்ல ஜீரம், அவரை கட்டாயபடுத்தி டாக்டரிடம் அழைச்சிகிட்டு போய் மருந்து மாத்திரை வாங்கி கொடுத்தேன். சுசீலாவையும் அவரை அடிக்கடி பாத்துக்கோன்னு சொல்லியிருக்கேன்னு , சொல்லிட்டு போறான்...." உடனே பதறி அடிச்சிகிட்டு ஓடி வர்றேன்... .நீதாம்மா இவனை பாத்துக்கணும், இந்த வயசில் இவனை தனியே விட்டுட்டு இவன் பையன் ஊருக்கு போகலாமா. . .? நீயே நியாயமா பதில் சொல்லு.... இவன் உறவை விடவா அந்த உறவு அவனுக்கு பெரிதாகி விட்டது... ?" என்று கோபத்துடன் வெடித்தார்.

"அவனை குத்தம் சொல்லாட்டா உனக்கு உறக்கமே வராதே, சரி விடு... எனக்கு நாளைக்கே சரியாகிடும் .. சாதாரண ஜீரந்தானே.... அவனும் இன்னும் இரண்டு நாளில் கல்யாணம் முடிந்ததும் வந்து விடுவான்.." மெல்லிய குரலில் மகனுக்கு ஆதரவாக பேசினார் சதாசிவம்.

"உன் மகனை ஒரு வார்த்தை சொல்ல விடமாட்டியே.... ஆனால், அவன் முந்தி மாதிரி இல்லை தெரியுமா....? உனக்கு தெரிஞ்சாலும் நீயும்  வெளியிலே காட்டிக்க மாட்டே. ... உன் சுபாவம் அப்படி...! மனசுகுள்ளேயே உன் கவலைகளை வச்சு பூட்டி மத்தவங்களோட மகிழ்ச்சியை மட்டும் பார்த்து சந்தோஷபடறவன் நீ..... உன் பையன் இப்ப ரொம்ப மாறிட்டான்... வளர்த்த கடா நெஞ்சிலேதான் முட்டுமுனு.. உனக்கு தெரியாததா?ஆனால், வளர்த்த பாசம் உன் கண்ணை மறைக்கிறது .. நான் எத்தனையோ தடவை சொல்லிட்டேன். நீ கொஞ்சமேனும் காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறே..." என்று அங்கலாயத்தபடி புலம்பி தள்ளினார் பாலு.

இவர்களது உரையாடலை சற்று தர்ம சங்டத்துடன் கேட்டுக்கொண்டிருந்த சுசீலா, "மாமா, ஒரு அரைமணி நேரம் கழித்து கஞ்சி போட்டு கொண்டு வரவா?" என்று வினவியபடி நகர யத்தனித்தாள்.

"சரியம்மா... .என்று அவளை அனுப்பிய சதாசிவம், நண்பரை பார்த்து, அட...! என்னப்பா...நீ... அந்த பொண்ணு முன்னாடி சொன்னதையே திருப்பி, திருப்பி சொல்லிகிட்டிருக்கே.... , அவ எம் பையனை பத்தி தப்பா நினைக்க மாட்டாளா..? " என்று முடியாமல் ௬றியவர் அலுப்புடன் கண்களை மூடிக் கொண்டார்.. 

நண்பரின் இயலாமையை கண்டு மனம் கசிந்த பாலு அவர் அருகில் அமர்ந்து அவர் கையை பற்றிக்கொண்டார்.

"சரி... சரி.. , ஏதோ.... உன்னை இந்த நிலைமையிலே பாத்தது மனசு தாங்கலே, என்னாலே முடியலே சதா.. அதான் சொல்லிட்டேன்.. இது  இந்த சுசீலாவுக்கும், ஏன் அவ புருஷன் குமாருக்கும் தெரியும். போன வாரம் குமார் கூட உன் பையனோட குணத்தை பத்தி என்கிட்டே சொல்லி எவ்வளவு வருத்தப்பட்டு பேசினான் தெரியுமா? இன்னொரு விஷயம், இந்த வீட்டை வித்துட்டு சென்னைக்கே உன்னையும் ௬ட்டிக்கிட்டு போக போறானாம்.... . உன்கிட்டே அது பத்தி சொல்லி இந்த வீட்டை விக்கிறதக்கு உன் சம்மதத்தை எப்படியாவது வாங்கனுன்னு குமார்கிட்டே உன் பையன் சொல்லியிருக்கான் தெரியுமா... ? நீ வாழ்ந்த இந்த வீட்டை விட்டு, இந்த ஊரை விட்டு, ஏன், பாசத்துடன் பார்த்து பார்த்து வளர்த்தியே.. இந்த மரத்தை விட்டு, எங்களையெல்லாம் விட்டு எப்படி போவே சொல்லு.... நாங்களும் உன்னை விட்டுட்டு எப்படி இருப்போம்? இத்தனை வருஷ பழக்கத்தில் உன்னைப் பார்க்காமல், சந்தர்ப்ப சூழ்நிலையில், வாரக்கணக்கில், ஏன், மாதக்கணக்கில் கூட இருந்திருக்கிறேன்.. . ஆனால், ,உன்னை விட்டு நிரந்தரமாக....... எப்படி சதா?" மேற்கொண்டு பேச முடியாமல் குரல் தளுதளுக்க கண்கள் கசிய நண்பரின் கையை இறுக பற்றிக் கொண்டார் பாலு.

நண்பரின் பாசம் சதாசிவத்தின் உள்ளத்திலும் இடம் பெயர்ந்தது. ஆறுதலாக பாலுவின் தோளில் தட்டியவர் தன் கண்ணில் வழிந்த நீரை துடைத்தவாறு, "வருத்தபடாதே பாலு...... நான் உங்களையெல்லாம் அப்படி விட்டுட்டு போயிடுவேனா.... , ஆனாலும் என் மகனின் பேச்சிலும் நியாயம் இருக்கு.... அவனுக்கு வேலை உயர்வில் சென்னைக்கு மாற்றியிருக்கிறார்கள். அவன் எனக்காக அதை வேண்டாமென்று மறுத்து என்னுடன் தங்கி விட்டால், நானே அவன் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பேனில்லியா... அவன் என்னிடமும் விபரங்கள் சொல்லி வருத்தபட்டு, என்னையும் விடமுடியாமல்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறான். மற்றபடி அவனிடம் எந்த தவறுமில்லை,... இனியாவது அவனை புரிந்து கொள் ... " என்று மகனுக்காக எப்போதும் போல் பரிந்து பேசினார்

தொடர்ந்து வரும்..... 

Tuesday, June 29, 2021

தொடர் கதை...

வணக்கம் சகோதர சகோதரிகள் அனைவருக்கும். எனக்கு வாரத்துக்கு ஒன்றாகவாவது  புதிதாக ஏதேனும் பதிவுகள் எழுதும் ஆவல் அப்போதிலிருந்து  இப்போது வரை என்றுமே உள்ளது.  முன்பு அது ஒரளவு கைகூடி வந்தது. ஏனோ கொஞ்ச நாட்களாக அது தடைப்பட்டு போகிறது. (மன, உடல் பாதிப்புகள்தான் காரணம்) சிலவற்றை எழுதி பாதி, பாதியாக நிறுத்தி உள்ளேன். அதனை நல்லபடியாக முடிக்க இறைவன்தான் துணையாக வர வேண்டும். இப்போது பதிவுலகில் அனைவரையும் என்னால் முடிந்த வரை தினமும் அவர்களின் பதிவுகளை படித்து கருத்துக்கள் இட்டு என் எழுதும் ஆவலை இறைவன் நிறைவேற்றி வைக்கிறான். அதற்கு "அவனுக்கு" என் தாழ்மையான நன்றிகள். இன்றைய பதிவும் மறு பதிவானலும் பரவாயில்லையென  இப்படி என்றோ ஒருநாள் பதிவிட்டு உங்களை சந்திக்கும் ஆவலில் வர முயற்சித்திருக்கிறேன் .கதைகள் பற்றிய பதிவுகளை படித்ததும், நாமும் ஒரு கதையுடன் ஆரம்பிக்கலாமே என்ற எண்ணமும் காரணம். இப்பதிவுக்கு வந்து கருத்துக்கள் தந்து ஊக்குவிக்கும் உங்கள் அன்புள்ளங்களுக்கு என் பணிவான நன்றிகள். 🙏. 

இந்தக்கதை நான் வலைப் பதிவில் கால் பதித்த போது  எழுதியது. அதை எப்போதும் போல் நீ.. ண்.. ட.. கதையாக எழுதியதில்  படிப்பதற்கு எவருக்கும் விருப்பம்  இருந்ததில்லை. அப்போது எனக்கு வலைத்தள நட்புகளும் குறுகிய வட்டம். ஆனாலும், அந்த சமயத்தில் என் வார்த்தைக்கு மதிப்பு தந்து நான் கேட்டுக் கொண்டதற்கிணங்கி வந்து இக்கதை படித்து கருத்திட்ட ஒரே ஒரு சகோதரருக்கு என். 🙏. எப்போதும். அவரும் வந்து இப்போது இதை படிக்கலாம். அதற்கு அவருக்கு இப்போதும்..🙏. ஆனால், இப்போது அவரும் அதை வெளிக்காட்டாமல் படித்தால் "அது யார்" என்பது சஸ்பென்ஸாக இருக்கும். கதையின் இறுதிப் பகுதியில் நானே அவரைக் குறிப்பிடுகிறேன்.  

அன்று அவரின் ஆலோசனைபடி கதையை கூறாக்கி (கூராக்கி அல்ல..) அப்படியே தந்திருக்கிறேன்.  இப்போது படித்து கருத்திடும் சகோதர சகோதரிகளுக்கும் அன்பான என் நன்றிகள். 🙏. 

இதோ அந்தக்கதை.....

கதை பகுதி. 1.

பகல், வெயிலின் தகிப்புக்கு ஈடு கொடுத்து நகர்ந்து கொண்டிருந்தது. அந்த வீட்டு வாசலிலிருக்கும், பெரிய மரத்தடியிலிருந்த கயிற்று கட்டில் அந்த வீட்டின் சொந்தகாரரும், பெரியவருமான சதாசிவத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. 

"நானுந்தான். .....! பொழுது விடிந்து இவ்வளவு நேரமாகியும் அவரை பார்க்காமலிருப்பது கண் இருந்தும் குருடனாய் இருப்பது மாதிரி தவித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாளேனும் பார்க்காமல் இருக்கும் உறவா எங்களுடையது. 

பக்கத்து வீட்டிலிருந்து வெளிப்பட்ட சுசீலா அவர் வீட்டின் கதவை தட்டி "மாமா, மாமா" என்று குரல் உசத்தி அழைத்து விட்டு பதில் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றாள்.

சதாசிவம் அந்த ஊருக்கு வேலை மாறுதல் காரணமாக வந்தவர், அந்த வேலை அவ்வூரிலேயே நிரந்தரமாக ஆனவுடன், இந்தவீட்டை கட்டிக்கொண்டு தன் மனைவியுடன் குடியேறினார். இயற்கையின்பால் அவர் கொண்ட பற்றின் காரணமாக, அவர் வீட்டின் முன்னும் பின்னும் செடிகொடிகளும் மரங்களும் செழித்து வளர்ந்தன. அன்பான நல்ல மனைவி, வீடு, நிறைந்த வேலை, என்று வாழ்க்கை வசதிகளை அவருக்கு தந்த இறைவன், கொடுக்க மறந்தது குழந்தைச் செல்வம். ஆனால் அவர் அதை ஒரு பெரிய குறையாக எடுத்துக் கொள்ளாமல் தன் உறவுக்கார குழந்தைகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் ஊரில் பழகியவர்களும் உறவும் நச்சரித்த காரணத்தால், மிகவும் சிரமத்துடன் நான்கு குழந்தைகளுடன், வறுமையில் காலம் கழித்து வந்த அவருடைய ஒன்று விட்ட சகோதரி முறையுடைய அகிலாவிற்கு கடைசியாக பிறந்த ஆண்குழந்தையை, அவள் சம்மதத்துடன் தத்து எடுத்து வளர்க்க ஆரம்பித்தார். குழந்தையும் அவரிடமும், அவர் மனைவியிடமும் நன்றாக ஒட்டிக்கொண்டது. அவருடைய முழு கவனமும், குழந்தையுடன் இருக்க, அவர் இதுநாளும் வளர்த்து வந்த செடி கொடிகள் சரேலென்று காணமல் போயின. ஆனாலும் வீட்டு வாசலிருந்த மரம் மட்டும், "நீ என்னை கவனிக்காது விட்டாலும் நான் உன்னை மறக்க மாட்டேன்" , என்று பாசத்துடன் அவரை அரவணைத்து கொள்வது போல, அவர் வீட்டின் மேல் சாய்வது போன்ற தோற்றத்துடன் வளர ஆரம்பித்தது. குழந்தையும் மரமும் ஒரு சேர நன்கு வளர்ந்தன.

வருடங்கள் உருண்டோடி சதாசிவத்தின் பையனை வாலிபனாக்கியது. அவனை நல்ல முறையில் படிக்க வைத்து, அவனின் படிப்புகேற்ற ஒரு வேலையும் கிடைத்தவுடன், அவனுக்கு உரிய வயதில் ஒரு திருமணத்தையும் நடத்தி, சிலவருடங்களில் பேரனுடனும் கொஞ்சி மகிழ்ந்தார் சதாசிவம். 

கணவருடன் அவர் மனம் கோணமல் இதுநாள்வரை சந்தோஷத்துடன் வாழ்ந்து வந்த அவர் மனைவி தன் கணவரையும், வீட்டையும் மகன், மருமகளிடம் ஒப்படைத்து விட்டு திருப்தியுடன் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாள். அன்பான மனைவியின் மறைவுக்குப்பின் வயதின் மூப்பும், தனிமையும் சேர்ந்து கொள்ள சதாசிவம், தன் மகனையும், வாசலில் இருக்கும் மரத்தையும் துணையாக கருதி வாழ்ந்து வந்தார்.

கட்டில் சப்தம் கேட்டு கலைந்தேன். சதாசிவம், "அப்பாடா, என்று முனகியவாறு வந்தமர்ந்தார். அவர் முகம் மனச்சோர்வை வெளிக்காட்டியது. அவர் உடல் நலமில்லாமலிருப்பதை முகம் கண்ணாடியாய் காட்டியது என்னை வருத்தியது. மனைவியின் மறைவுக்குப் பின் மனிதர் மிகவும் தளர்ந்துதான் போய் விட்டார், என்ன செய்வது,. ..? என்று நான் வருந்தி கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டிலிருந்து வெளிப்பட்ட சுசீலா இவரை பார்த்ததும் ஓடிவந்தாள். 

"மாமா, இப்ப உடம்பு எப்படியிருக்கு? காலையிலே நான் வந்து கதவை தட்டிப் பாத்தேன். நீங்க எந்திரிக்கலே, ஒரே கவலையாயிருந்திச்சி, இப்ப காய்ச்சல் குறைஞ்சிருக்கா? எப்படியிருக்கு மாமா", என்று வாஞ்சையுடன் விசாரித்தாள்.

"பரவாயில்லையம்மா, பாவம்; உனக்குத்தான் சிரமம். உன் வீட்டிலுள்ளவர்களை கவனிச்சிக்கிறது போறாது"னு, நடுநடுவே என்னை வேறே பார்த்துக்க வேண்டியதாயிடிச்சு, எல்லாம் என் நேரம்", என்று நொந்து கொண்டார்.

"இதுலே என்ன கஷ்டம் மாமா. .. , என் அப்பாவை நான் கவனிக்க மாட்டேனா, அதுமாதிரிதான் இதுவும்... இதுக்கெல்லாம் கவலைபடாதீங்க,.! " என்றவள்," உங்களுக்கு சாப்பிட இன்றாவது இட்லி எடுத்து வரட்டுமா?" என்றாள் அக்கறையுடன்.

"வேண்டாம்மா, கொஞ்ச நேரம் பொறுத்து சாப்பிட்டுகிறேன், அப்புறமா, நேற்று மாதிரி வெறும் கஞ்சி மட்டும் போட்டு கொடு போதும். இட்லிபெல்லாம்  வேண்டாம்.... வாய்க்கு இன்னமும் ஒன்றும் பிடிக்கவில்லை... ." என்று அவளை தடுத்தார்.

" சரி மாமா, உங்க விருப்பம்...  நான் உங்க வீட்டை பெருக்கி சுத்தபடுத்துறேன்", என்றபடி அவரின் அனுமதிக்கு காத்திராமல் அவர் வீட்டினுள் சென்றாள் சுசீலா.

"பாவம், இந்த பெண்... மகனும் மருமகளும் தவிர்க்க முடியாத உறவு வீட்டின் திருமணத்திற்கு ஒரு வாரம் அவரை தனிமையில் விட்டு சென்ற பின் இவள்தான் பாசத்துடன் அவரை கவனித்து கொள்கிறாள். இதில் இரண்டு நாட்களாக சற்று உடல் உபாதை வேறு... " என்று சதாசிவம் மனம் கனிந்து யோசித்துக்கொண்டிருக்கையில், அடுத்த தெருவிலிருக்கும் அவருடைய நண்பர் பாலு சற்று வேகமாக, ஓடி வராத குறையாக மூச்சிறைக்க வந்தார்.

தொடர்ந்து வரும்.... 

Thursday, January 14, 2016

இயற்கை கடவுள்


தட்சிணாயனம் ஆறு மாத காலம் முடிந்து உத்தராயணம் துவங்கும் நாளே தைத்திங்களின் முதல் நாள். தினமும் சூரியன் கிழக்கில் உதித்து, மேற்கில் மறைந்து முறையே ஏற்படுத்தும் பகல் இரவுகளில் மனிதன் முதற்கொண்டு சகல ஜீவ ராசிகளும் வாழ்க்கைப் பயணத்தில் வாழ்ந்து வருகிறோம். ஆனால்,, ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகவும், தை முதல் ஆடி வரை உத்தராயணம் பகல் பொழுதாகவும், நம் புராணங்கள் பகருகின்றன.
பொதுவாக இறை வழிபாட்டில் நம் கவலைகளையும், மனதின் எண்ணங்களையும், ஆத்மார்த்தமாக இறைவனிடம் ஒப்படைக்கும் சமயத்தில், நம் மனதில் ஓர் இனம் புரியாத நிம்மதி உண்டாகும். தேவர்களில் ஒருவரான இந்த இயற்கைக் கடவுளாம் சூரியனை தினமும் வழிபட்டு வருவது சிறப்பாயினும், தை மாதத்தின் முதல் நாள் அதற்கு  மிகவும் உகந்தாக கருதப்படுகின்றது. அந்த தை மாதத்தில், சூரியன் தென் திசையிலிருந்து வட திசை வாயிலாக தன் பயணத்தை துவக்குகிறார். ஆண்டின் முதல் ஆறு மாத காலம் தானியங்களின் வளம் பெருக, பூமியின் செழிப்பிற்காக மழையிலும், பனியிலுமாக தன் ஒளி குறைத்துக்கொண்டு பயணிக்கும் சூரியன் பிரகாசமான ஒளியுடன் தை மாதம் முதல் பவனி வருவதால், அன்றைய தினம் அவருக்கு நம் நன்றியை செலுத்தும் விதமாக சிறப்பாக வழிபட்டு வருவது பொங்கல் பண்டிகையாக உருவானது.
நம் வாழ்வின் இருளை அகற்றி, ஆடி துவங்கி மார்கழி வரையிலான காற்றையும், மழையையும், குளிரையும் களைந்தெறிந்து விட்டு புதுப்பொலிவுடன் பிரகாசமாக துவங்கும் இந்நாளில், நாம் ஒருவருக்கொருவர் மனதாற வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு மனித நேயங்கள் எந்நாளும் தழைத்தோங்க, அச்சூரியக்கடவுளின் பாரபட்சமற்ற தன்னலமற்ற பகல் இரவு என்று தோன்றும் கடமையின் செயலைப் போல நாமும் அன்புடன் செயலாற்ற வேண்டுமென்ற எண்ணத்தில் நம்முன்னோர்கள் துவக்கி வைத்த பண்டிகையாகக் ௬ட இருக்கலாம்.
நாராயணனின் அம்சமாக விளங்கும் சூரிய நாராயணனை வணங்குவது நம் தேக ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கை வளத்திற்கும் நல்லது.  சூரியனை, ஆதவன், அருணன். பாஸ்கரன் என்றும், உதித்தலின் காரணப் பெயராக, பகலவன், செங்கதிரோன் என்றும் இன்னும் ஏராளமான பல பெயர்களிலும் விளிப்பர். அவரின் போற்றுதலுக்குரிய “ஆதித்திய ஹிருதயம்” படித்து தினமும் அவரை வழிபட்டு வந்தால் நம் கண் பார்வை நம் வாழ்நாள் உள்ளளவும் சிறப்பாக அமையும்.
 இதிகாசங்களில் ராமாயணத்தில் ஸ்ரீ ராம பிரான் பதினான்காண்டு வன வாசத்தில் சூரியனை வழிபட்டு ஆதித்தய ஹிருதயம் ஜபித்து தன் பகையை வென்றார் எனவும், மஹாபாரதத்தில், பிதாமகரான பீஷ்மர் பாரத போரில் அடிபட்ட நிலையிலும், அம்பு படுக்கையில் காத்திருந்து, உத்தராயணம் துவங்கும் தை மாத்தில், சூரியனின் ரதம் வடதிசை திரும்பும் அந்நாளில், சப்தமி திதியில் தம் உயிரை உடலை விட்டுப் பிரியச் செய்தார், எனவும் ௬றுகிறது. மேலும் மனித குலத்திலும் உத்தராயணத்தில் மரணம் ஏற்பட்டால், இறைவனை அடைந்து பிறப்பில்லா முக்தியை அடையலாம் என்பதும் ஒரு நம்பிக்கையாக பேசப்படுகின்றது.
இவ்விதமான சிறப்புக்களை பெற்ற இந்த உத்தராயண புண்ணிய காலத்தில் ஆங்கிலப் புத்தாண்டுடன் இணைந்து ஆரம்பிக்கும் இந்த தைத்திருநாளை, தமிழர் திருநாளை, சங்கடங்கள் தகர்த்தெறியும் மஹா சங்கராந்தியை  சூரிய நாராயணனின் அருள் பார்வையுடன் அனைத்து வளங்களும் முழுமையாக அமையப் பெற்று, அனைவரும் களிப்புடன் கொண்டாட “அவன்” அருளையை வேண்டித்தொழுகிறேன்.
அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்…!

 படம்: நன்றி கூகுள்.

Friday, March 13, 2015

குரு தட்சனை….

காலங்காலமாய், கல்வி என்பதை ஒருவர் பயிற்றுவிக்க, ஏனையோர் அதை கற்பது என்பது மரபாகி போன விஷயம். பண்டைய காலத்தில், குருகுலவாசத்திற்கு தத்தம் குமாரர்களை சிறந்த குருவிடம், பெற்றோர்கள் அனுப்புவார்கள். குருகுலவாசத்திற்கு, 8 வயதிலிருந்து 12 வயது நிரம்புவதற்குள், ஆசிரமத்திற்கு குருவிடம் கல்வி கற்றுவர அனுப்பி வைப்பார்கள். அவர்கள் மேலும் அந்த குருவின் ஆஸ்மரத்தில், 12 வருடங்கள் தங்கி குருவுக்கு தேவையான பணிவிடைகளை செய்தபடி, அவர் கற்றுத்தரும் வேதங்கள் உபநிடதங்கள், சாஸ்த்திரம் வானவியல், சோதிடம், மருத்துவம் மற்றும் போர்ப்பயிற்சிகள் யோகா, மற்றும் அனேக கலைகளையும் கற்று தேர்ந்து சிறந்த மாணவனாக தம் இல்லம் ஏகுவர். அரசிளங்குமாரர்கள், நாட்டின் செல்வ பிரஜைகளின் செல்வங்கள், சாதாரண குடிகளின் புதல்வர்கள் என ஏழைப் பணக்காரன் என்ற பாகுபாடின்றி, அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாதி மத பேதமின்றி, கல்வியை கற்று கொள்வதே அங்கு பிரதானமாக இருக்கும். அக்கல்வியை கற்று முடிக்கும் வரை, மாணக்கர்கள் தங்கள் குடும்ப உறவுகளுடன் எவ்வித தொடர்புமின்றி, பந்த பாசங்களுக்கு ஆட்படாமல், குருவின் கண்காணிப்பில் அவருக்கு அடங்கிய பிள்ளைகளாய், கல்வியை கற்று தேர்வது ஒன்றே குறிக்கோளாய், நினைத்து வாழ்ந்து வருவார்கள்.

கல்வி முடிந்து அவர்கள் வீடு திரும்பும் சமயம், கல்வியை குறையற கற்று தந்தமைக்கு பரிசாக, அவரவர் வீட்டிலிருந்து அவரவர்களுக்கு இயன்ற வகையில், பொன், பொருள், போன்றவற்றை,  குருவுக்கு காணிக்கையாக  தந்து  விட்டு  அவரவர்  வீட்டு  குமாரர்களை  அழைத்துச்  செல்வர். சிலர்  குருவின்  தேவையை  கேட்டறிந்து,, அவர் கேட்கும்  எதையும்  தன் சக்தியால்  முடித்து  வைப்பர்.. குருகுலவாசத்தில், குருவுக்கு மிகவும்  பணிவிடை  செய்து  அவர்  அன்புக்கு  மிகவும்  பாத்திரமாய்  ஆன  பட்சத்தில்  அவன் ஏழையாயிருந்தாலும்,  அல்லது  பணமுடையவனாய்  இருந்தாலும்,  குரு, தன்  தட்சனையை  புறக்கணித்து விடுவார். மொத்தத்தில்  நிர்பந்தித்து  தட்சனை  வாங்கும்  பழக்கங்கள்  இல்லாதிருந்தது. மகா பாரதத்தில், அர்சுனனின் குரு  துரோணாச்சாரி யாரை,  தன்  மானசீக  குருவாக  ஏற்ற  வேடன்  ஏகலைவன்  திருட்டுத் தனமாக  குரு அறியாமல்  வில் வித்தையை  கற்றதற்காக,  குரு  கேட்கிறார்  என்பதற்காக, வில்  வித்தைக்கு  ஆதாரமாக  இருக்கும்   தன்  வலக்கையின்  கட்டை  விரலேயே  தட்சனையாக  கொடுத்தான்… அந்த அளவுக்கு  அக்காலத்தில்  குரு பக்தி  இருந்தது.

      ஒரு  கால  கட்டத்தில்  குருகுல வாசங்கள்  நிறைவுக்கு  வந்து அதன் பிரதி பலிப்பாக  திண்ணைப் பாடசாலைகள்  வந்து, மரத்தடி பள்ளிகள், ஓலை  போட்ட,  ஓடு  வேய்ந்த  பள்ளிக்  ௬டங்கள்..  நாளடைவில்  கட்டங்களுடன்  கல்விச்சாலைகள்  வந்து  நிறையவே  கல்விச்சாலையின்  தராதரங்கள்  மாற்றியமைக்கபட்டு விட்டது. ஆனால்  குருதட்சனை  மட்டும்  முன் ௬ட்டியே  கொடுத்து விடும்  அளவுக்கு  கட்டுப்பாடுகளும்,  கல்வியின்  அம்சங்களும்  மாறி  விட்டன.. காலங்கள்  மாறி  விட்டன  அந்த கால  கல்லூரிச்  செலவுகளும்,  இந்த  கால  பாலர்  கல்விகளும்  சமமாகி விட்டன. குரு தட்சனைகள்  நிறையவே  மாறித்தான்  வருகின்றன.  

முன்பெல்லாம், இயற்கையோடு மக்கள் பிணைந்திருந்தார்கள். இயற்கையும் மக்களோடு இணைந்திருந்தது. அந்தந்த காலத்திற்கு மழை, வெயில், பனி, காற்று என மக்களோடு ஒத்துழைக்கும்  காலங்களை தெரிந்து வைத்துக்கொண்டு, மக்களும் அந்தந்த காலங்களுக்கு அனுசரனையாக வாழ்ந்து வந்தனர். தமிழர்கள் இளவேனில், முதுவேனில், கார் (மழை), ௬திர் (குளிர்), முன்பனி, பின்பனி, என ஆறுகாலமாய் பிரித்து, முறையே ஆங்கில நாட்காட்டி, ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை அதுசமயம் நடந்து கொண்டிருக்கும் தமிழ் மாதம் சித்திரை, வைகாசி எனவும், ஜூன் 15 முதல் ஆகஸ்டு 14 வரை தமிழ் மாதம் ஆனி ஆடி எனவும்,  ஆகஸ்டு 15 முதல் அக்டோபர் 14 வரை தமிழ் மாதம் ஆவணி புரட்டாசி எனவும், அக்டோபர் 15 முதல் டிசம்பர் 14 வரை, தமிழ் மாதம் ஐப்பசி கார்த்திகை எனவும், டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 14 வரை, தமிழ் மாதம் மார்கழி தை எனவும், பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 15 வரை , தமிழ் மாதம் மாசி பங்குனி எனவும், பிரித்து அந்தந்த காலங்களுக்கு ஏற்ப தத்தம் பணிகளை, பயிர், உழவு நெசவுத் தொழில்களை  சிறப்புற செய்து செவ்வனே வாழ்ந்து வந்தனர்.

அதுபோல் இந்தியாவிலும், இந்து நாட்காட்டியிலும், ஆறு பருவங்களை பஸந்த் (இளவேனில்), ஷரத் (முதுவேனில்), வர்ஷா (மழை), ரிது ஹேமந்த் (முன் குளிர்), ஷிஷிரா (குளிர்), கிரிஷ்மா (கோடை) என்ற பெயருடன் அழைத்து வந்தனர்.  இப்போது எங்கு பார்த்தாலும் ஒரே சீதோஷ்ணம். ஆறு பருவங்களின் தடங்கள் திடீரென தப்பி விடுகிறது... மழை போதாமல் பஞ்சத்திற்கு வழி வகுக்கிறது. திடீரென அம்மழையே நன்றாய் விளைந்த விளைச்சலையும் அழிக்கிறது. (இங்கு பெங்களூரில் நான் வரும்போது 8 வருடத்திற்கு முன்பிருந்த காலநிலை இப்போது இல்லை. எப்போதும் குளு குளு வென்றிருந்த நிலை மாறி வெய்யிலின் தாக்கம் அதிகமாயிருப்பதாக தோன்றுகிறது.) “யாதும் ஊரே.! என அனைவரும் இடம் பெயர்ந்தால், நான் என்ன செய்வது?” என்ற இயற்கையின் புலம்பல்களும் காதுகளில் கேட்காமலில்லை!. நாமும் என்ன செய்வது? தற்சமய கால, தேச, வர்த்தமானம் அப்படி உள்ளதே.? காலத்தின் மாற்றங்களில் புதிதான பெயர்களுடன் வியாதிகள் உருவாகிறது. வியாதிகளின் சூழலுக்கேற்ப மருந்துகளின் பெயர்களும் விலைகளும், மாறுகின்றது. வேறு வழியில்லை.! அனைத்தையுமே (மாறி வரும் சூழல்) சகித்துதான் ஆகவேண்டும்.

பகவான் நாராயணன் உலகில் தர்மங்கள் அழிந்து அதர்மங்கள் தலைவிரித்து ஆடியபோது தர்மத்தை ஸ்தாபித்து, அதர்மத்தை வேரோடு அழிக்க, தானே வித விதமான ரூபங்களுடனும், மானுட பிறவியுடனுமாக பத்து அவதாரங்கள் எடுத்தார். அதனையே தசாவதாரம் என்று சொல்வர். (“தசம்” என்ற சொல்லுக்கு தமிழில் பத்து என்று பொருள்.)

மச்ச, ௬ர்ம (௬ர்மம் என்றால் ஆமை) வராஹ (வராஹம் என்றால் பன்றி), நரசிம்ம, வாமண, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி என்ற பத்து அவதாரங்கள் எடுத்து உலகினை நல்வழியில் இயங்கச் செய்தார். இதில் ராமாவதாரமும், கிருஷ்ணாவதாரமும் மானிடராகவே பிறந்து மானிடர்களுக்கு நடுவில் வாழ்ந்து, பிறப்பெய்தும் ஒவ்வொரு மானிடரும் எவ்வழியில் நடந்து கொள்ள வேண்டுமெனவும், தத்தம் வாழ்வின் தாத்பரியங்களை உணர்ந்து கொள்ள ஏதுவாய் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாகவும், இருந்தே காட்டினார் பகவான்.

இந்த தசாவதார திருக்கோவில், மூலவர்களாக பத்து விதமான அவதாரங்களின் சிறப்புடன் காட்சி தரும் கோவில், தமிழ் நாட்டிலுள்ள திருவரங்கத்தில் உள்ளது. மச்ச, ௬ர்ம வராக நரசிம்மம் ஆகிய நான்கு அவதாரத்துடன் கையில் சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கிறார் எம்பெருமான். கையில் தாழம் குடையுடன் வாமணராகவும், கோடரியுடன் பரசுராமராகவும், வில் அம்புடன் ராமராகவும், கலப்பையுடன் பலராமராகவும், கை நிறைய வெண்ணையுடன் கிருஷ்ணருமாகவும், வாளும் கேடயமும் கொண்டு கல்கி அவதாரமுமாக, பத்து திருவுருவங்களும், ஒரே கோவிலில் குடிகொண்டுள்ளன. எம்பெருமானின் அடியவர்களாகிய, பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரின் விருப்பத்தி்ற் கிணங்கி எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் தான் எடுத்த அவதாரங்களின் உருவத்துடன், அவருக்கு காட்சி தந்து அந்த தலத்தில் ஒரே இடத்தில் குடி கொண்டுள்ளதாக புராணங்கள் ௬றுகின்றன.

பொதுவாக கோவில்களில் மூலவருக்கு பல உற்சவ மூர்த்திகள் உண்டு. ஆனால் இந்த கோவிலில், பத்து மூலவருக்கும் ஒரே ஒரு உற்சவ மூர்த்தியாக லட்சுமி நாராயணராக சுவாமி அருள்பாலிக்கிறார். அந்தந்த அவதாரங்களின் உருவத்தோடு ஒவ்வொரு கலசமாக விமானத்தில் பத்து கலசமாக கண்கொள்ளா காட்சியாக பெருமாளின் இந்த தசாவதாரக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஒன்பது கிரகங்களின் தோஷ நிவர்த்தி தலமாக விளங்குவதால், ஒன்பது அவதாரங்களையும் ஒவ்வொரு கிரக தோஷமுடையவர்கள் பரிகார பூஜை செய்து பிரார்த்தித்து பலன் அடையலாம். அவரவர்களின் கிரக தோஷங்களை முறையே எம்பெருமான் நிவர்த்தி செய்து சகல செளபாக்கியத்திற்கும் வழி வகுப்பார். நாமும் திருவரங்கம் சென்று தசாவதார கோவிலை கண்டு தரிசித்து தசாவதார மூர்த்திகளை வழிபட்டு வியாதிகளின்றி நலமுடன் வாழ பிரார்த்தித்து வருவோமா.?

என்னடா இது? மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள சம்பந்தமாய் என்ன இது? என்று நீங்களும், இயற்கையோடிணைந்து  புலம்புவதற்குள் முடித்து விடுகிறேன். இந்த இயற்கையின் மாறுபாட்டால், வந்த சளி ஜுரந்தானே! என்று கடந்த 15 நாட்களாக உடல்நலக் குறைவை கவனித்தும், கவனியாமலும் இருந்து வந்தேன். (கவனித்தது ஆயுர்வேதத்தோடு.! கவனியாதது அலோபதியை.!) அது நான் உன்னை விட்டு போக மாட்டேன் என்று அழும்பாக அடம்பிடிக்க, கவனியாத அலோபதி தட்சனையை நினைவுபடுத்தி நிர்பந்தமாய் அழைக்க, தட்சனையை விரைந்து சென்று செலுத்தி “கவனித்து” வந்தேன். (விரைந்து ஓட காரணம், வராக மூர்த்தியின் மேலிருக்கும் பயந்தான்… வராக மூர்த்திக்கு உன்னை பிடித்து விட்டால் என்ன செய்வது..? என்று அதைச் சொல்லி வீட்டில் பயமுறுத்த, சரி! தட்சனை கொடுத்தாலாவது சரியாய் போகிறதா பார்ப்போம்..! என்று கொடுத்து விட்டு வந்தேன்.) தட்சனை கொடுத்தும், எப்போது குணமாகுமோ அந்த நேரத்தில்தான் அது நிவர்த்தியாகும். ஆனால் அதோடு கடமைகள் கைகளை கட்டியவண்ணம் அதன் போக்கில் இழுத்துச் செல்கிறது.

எப்படியோ குருதட்சனையோடு, இயற்கையை இணைத்து அந்த கால கல்வியை பற்றிய அலசல்களையும், காலங்களின் மாறுதல்களை பற்றியும், படித்ததை  சொல்ல  சான்ஸ்  கிடைத்ததே  என்று  ஆரம்பித்த  போது எம்பெருமான் கடவுளின் அவதாரங்களை பற்றியும் பகிர்ந்து கொள்ள தூண்டினார்… (நன்றி லட்சுமி நாராயணா) இதையெல்லாம் பகிர்ந்து ஒரு (தேவையற்ற) பதிவாக்க உதவியதே இந்த வராகமூர்த்தி மேலிருக்கும் பயபக்திதான்... என்னை பரிசோதித்த பிறகு வேறு எந்த பயமும் கொள்ள தேவையில்லை! சாதாரண காய்ச்சல்தான்! என ௬றிய குருவுக்கும், அந்த சாட்சாத் வராக மூர்த்திக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்…! என்ன சரிதானே..?   
    

ஓம் நமோ நாராயணாய நமஃ

நன்றி: விக்கிபீடியா, தினமலர், கூகுள்