Sunday, February 22, 2015

நெஞ்சம் நிறைந்த நன்றிகளுடன்.., பதிவாக ஒரு பயணம்..!


அனைவருக்கும்  வணக்கம்.!  என்  எழுதும் எண்ணங்களுக்கிடையே  நிறைய  இடைவெளியை  ஏற்படுத்தியது  எனக்கு  மிகவும் மன வருத்தத்தை  உண்டாக்கினாலும், பிறந்த  மண்ணின் (திருநெல்வேலி )  பாசங்களை  இந்த  இரு வாரத்தில், கடந்த ஒரு வருடத்திற்குப் பின்  எனக்கு  மீண்டும்  தந்த அந்த இறைவனுக்கு மனமாற நன்றியும்௬றிக் கொள்கிறேன். நாம்  சூழ்நிலைகளின் காரணமாக எங்கு தங்கியிருந்தாலும், பிறந்த  மண்ணின், அதுவும்  நமது  தாய் அன்புடன் சீராட்டி பாராட்டி வளர்த்த,  அன்புத் தாயின்  இல்லத்திற்கு  சென்று தங்கி வரும் போது, நமக்கு எத்தனை  வயதாகி  இருப்பினும், ( நாமும்  ஒரு தாயாகி, தந்தையாகி,  நம்  குழந்தைகளை  மனதில் சுமக்கும்  காலகட்டத்திலும் ௬ட…!)  மனதில்  ஏற்படும் அதீத மகிழ்ச்சிக்கு ஒரு அளவென்பதேயில்லை என்பது  நாமறிந்த ஒன்றாகும்…!  நான் அங்கிருந்த  நேரத்தில் சகோதரி திருமதி  உமையாள் காயத்திரி அவர்கள் வலைச்சர  ஆசிரியர்  பொறுப்பேற்று,  உள்ளம்  சொல்லுமேஅம்மாஅம்மா…!!! ‘என்ற  கருத்தில்  அன்பான அம்மாவை  பற்றி  அழகாக ஒரு பதிவிட்டு,  அதில்  சிறந்த  பதிவர்கள்  அனைவருடனும், என்னையும், அம்மா பற்றி  நான்  எழுதிய  ஒரு பதிவுக்காக அறிமுகப்படுத்தி, பெருமைபடுத்தி இருந்தது  என்னை உண்மையிலேயே  கண்  கலங்கச் செய்து விட்டது. என் அம்மாவே  வந்து  என்னை  ஆசிர்வதித்த மாதிரி,  என் மனம் நிறைந்து விட்டது  தாயன்பின்  சிறப்பை இன்னமும் சிறப்பித்துச் சொல்ல,  வார்த்தைகளின்  வகையின்றி  என் மனதுக்குள்  தவிக்கிறேன்…! நான்  என்  தாய் வீட்டிலிருந்த  போது, தாயின் பாசத்திற்காகஅதே தாயின் பாசத்தோடு என்னை நினைவு  ௬ர்ந்த  சகோதரிஉமையாள் காயத்திரிக்கு,”  என் அன்பான  பணிவான  நன்றிகள்…! 

அது போலவே, வழக்கமாக என் பதிவுகளுக்கு கருத்துப் பகிர்வதுடன், என் வருகைக்கு தடையாய் இருப்பது என் உடல்நலக்குறைவா ? என்ற ஐயத்துடன், பரிவாக மீண்டும் என் தளத்திற்கு வந்து அக்கறையுடன் கேட்டு கருத்திட்டிருக்கும், சகோதரர் திரு பரிவை சே. குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும், என் எழுத்துக்களை உடனுக்குடன் படித்து  உடனடியாக வந்து கருத்திடும் சகோக்கள், திரு. கில்லர்ஜி,அவர்கள், திரு.திண்டுக்கல் தனபாலன், அவர்கள், திரு.ரமணி அவர்கள், திரு.வெங்கட் நாகராஜ் அவர்கள்,திரு.ரூபன், அவர்கள் திரு. யாழ்பாவாணன், அவர்கள்  மற்றும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றிகளை தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன்.இன்னும் சொல்லப் போனால் என் பதிவை பார்வையிடும், அனைவருக்குமே என் உளமார்ந்த நன்றிகள்.!

  
(என்ன இது? ஒரே நன்றி நவிலும் பதிவாக உள்ளதே  என சலிப்பதற்குள், தலைப்புக்கு ஏற்றால் போல் எழுத நினைத்ததை, எழுதி விட்ட மனநிறைவுடன் இனித் தொடர்கிறேன்.)

எங்கள்  வீட்டின்  பிள்ளையார் கோவிலில்  வருடந்தோறும்  நடைபெறும் வருஷாபிஷேகம்  கண்டு மகிழ  தீடீர் பயணம்  செல்ல  வாய்ப்பு  கிடைத்தது.. வந்ததிலிருந்தே கோவிலின்  வருஷாபிஷேகத்தைப் பற்றி  விரிவாக  ஒரு பதிவு எழுத  எண்ணம்  வந்து கொண்டேயிருந்தது.  இதற்கு பிறகு, அதை எழுத அந்த  முழு முதற் கடவுள் என்னை அனுமதிக்க வேண்டுமென  பிராத்தித்துக்கொண்டு, இங்கு ( பெங்களூர் ) வந்த  பின்  நாங்கள் சென்ற  சிவபெருமான் கோவிலைப்பற்றி  மஹா  சிவராத்திரிபதிவாக எழுதலாம் என்று  நினைத்தேன். ஆனால், அதிலும் சூழ்நிலைகள்  சில தடைகளை சுமந்தபடி வந்துதாமததத்தை உருவாக்கி வெற்றி கண்டு,  இன்று வரை என்னை எந்த பதிவையும் எழுத விடாமல் செய்து விட்டது
 

நாங்கள் சென்ற சிவன் கோவிலின் அமைப்பு  கண்ணுக்கு விருந்தாக  இருந்தது. உருவாக்கி பத்து வருடங்கள் இருக்கலாம் என்ற தகவல் கிடைத்தது. கோவிலின் உள்ளே, சுற்றிலும் நிறைய சிவலிங்கங்கள், (ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாநிலத்தின் பிரபலமான  சிவ சன்னதியின் பெயர்களுடன்..)  நடுவே பிரதானமாய்,  சற்று பெரிய அளவில் குறிப்பிட்ட கோவிலின்  சிவ லிங்கமாக, அமைத்து கோவிலை கட்டியுள்ளார்கள். கோவிலின்  உள்ளே புகைப் படம் எடுக்க அனுமதியில்லாததால் எடுக்க இயவில்லை..! சிவராத்திரிக்காக நிறைய வேலைகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தது. சிவராத்திரியன்று  சென்றிருந்தால், இன்னும் சிறப்பான அலங்காரங்களுடன், விஷேஷ பூஜைகளுடன், கோவில் தரிசனம் நன்றாக இருந்திருக்கும் என நினைத்துக்கொண்டேன். 
   
கோவிலின் அருகில்  சிறிது கற்ப்படிகளுடன், சற்று உயரத்தில்  மச்சமூர்த்தியாய் மச்ச நாராயணனாக இயற்கை எழில் சூழ வேங்கடவனின் கோவில் இருக்கிறது. நாங்கள் சென்ற போது இரவு மணி 7 க்கு மேல் ஆகி விட்டதால்,  இயற்கையை இயல்பான வெளிச்சத்தில் ரசிக்க இயலவில்லை. அங்கு புகைப்படம் எடுக்க தடையொன்றும்  இல்லை.! கோவில் வாசல் பிரகாரத்தில் ஒரு சேர அனைத்து தெய்வங்களும் சம்மதமாய்  இணைந்திருப்பது கண் நிறைந்த காட்சி..! தெய்வங்கள் அனைத்தும்  என்றுமே ஒன்றுதான்.!  எந்த ஒரு பிரதிபலனை எதிர்பாராமல், மற்ற மனிதரை மதிக்கும் மனித நேயத்தோடு, உன்  கடமையை மட்டும் செய்து கொண்டே  இரு.! மற்றதை நான்  பார்த்துக் கொள்கிறேன்.!’ என்ற வகையில் அவர்கள் போதிக்கும்  கருத்துக்களும் ஒன்றுதான்..!   நாம்தான் மனித நேயத்தை தொலைத்து விட்டு, என்றுமே சுயநலமாய்  மட்டுமே சிந்தித்து, அனைவரையும்  அவஸ்தைக்குள்ளாக்கி,  நாமும் அவஸ்தைபடுகிறோம்..! என்று எனக்குத் தோன்றியது.  மொத்தத்தில் அன்று அனைத்து தெய்வங்களின்  தரிசனங்கள்  மனதிற்கு  மகிழ்வாக நிறைவாக  இருந்தது.. !
 
அந்தப் புகைப்படங்களை  உங்களுடன்  பகிர்ந்து கொள்வதிலும், இதைத் தெரிவித்து ஒரு பதிவாக எழுதியதிலும் இன்றும் நான் மகிழ்வடைகிறேன்.!     
                                காணும்  அனைவருக்கும்  என் நன்றிகள். ..!