இந்த சமையல் பதிவு ஏற்கனவே "எங்கள் பிளாக்" கில் இடம் பெற்று எனக்கு பெருமையையும், மனத் திருப்தியையும் அதிகப்படியாக பெற்றுத் தந்தது. அப்போது அதற்கு (பதிவுக்கு) இடம் தந்த எங்கள் ப்ளாக் ஆசிரியர் சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு மிக்க நன்றி.
தற்சமயம் இன்னமும் எதையும் சரிவர எழுதி முடிக்கப் படாமலிருந்த எனது டிராப்ட் பகுதியைை ஆராய்ந்து கொண்டிருந்த போது இந்த "கோஸ்" பிட்லே," உனது வலைத்தளத்திலும் ஒரு ஓரத்தில் நானும் இடம் பெறட்டுமா பாஸ் ?" என்று ஆசையுடன் கேட்கவும், மீண்டும் படித்து "பேஷ்.. பேஷ்" என அனைவரும் "கோஸை" பாராட்டுவீர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், "சரி"! என சம்மதித்து நானும் இடம் தந்து விட்டேன். "மீண்டுமா? என "கோஸை" ஏதும் சொல்லி "ஏசாமல்" படிப்பதற்கும், பதிவதற்கும் (தங்களின் அன்பான கருத்துக்களை) என் மனமார்ந்த நன்றிகள்.
கோஸ் பிட்லே....
நறுக்கிய கோஸ்....
நல்ல கோஸ் வாங்கி பொடிதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ( நான் ஏன் நல்ல என்ற வார்த்தையை உபயோகித்தேன் என்றால் நான் வீட்டிலிருந்த வாங்கி நான்கு நாட்கள் ஆகி விட்ட நிலையில் இருந்ததை அவசரத்திற்கு பயன்படுத்தினேன். நீங்கள் ப்ரெஸ்ஸாக வாங்கி கொள்ளவும்.)
குளித்து முடித்து சமர்த்தாக
அமர்ந்திருக்கும் கோஸ்....
நறுக்கியதை நன்றாக அலம்பி விட்டு ஒரு வாணலியில் கொஞ்சம் சமையல் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து அதில் கடுகு உளுத்தம் பருப்பு போட்டு, தாளித்த பின் அலம்பிய கோஸைப் போட்டு கொஞ்சம் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
தண்ணீரிலிருந்து நீச்சலடித்து தப்பிக்கத்தெரியாமல் மூழ்கியிருக்கும் பருப்புகள்....
ஒரு கப் துவரம்பருப்பு, பாதி கய் கடலைப் பருப்பு எடுத்துக் கொண்டு அலம்பி விட்டு கோஸ் நறுக்கும் நேரத்தில் ஊற வைத்துக் கொண்டால், செளகரியமாக இருக்கும். அவ்வாறு ஊறிய பருப்பை குக்கரில் சாதத்துடன் வைத்து வேக வைத்துக் கொண்டு விடவும் .
கலரில் நான் எப்படி? சும்மா தகதகவென மின்னுகிறேனா? தானே பெருமிதபட்டுக் கொள்ளும் புளிக்கரைசல்....
ஒரு பெரிய எலுமிச்சை அளவு புளியை
எடுத்து ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.. கோஸ் நன்கு வெந்ததும் அதனுடன் இந்த கரைசலை சேர்க்க வேண்டும்.
நான் மட்டும் இங்கே, என்னுடன் சேரப் போகும் கூட்டணிகள் எங்கே? என அமரத்தலாய் கேட்கும் கோஸ்....
புளி கரைசலை வெந்த கோஸுடன் சேர்த்து கொஞ்சம் உப்பு போட்டு, ( முதலில கோஸ் வேகும் போது அதற்கு தகுந்த உப்பு மட்டுந்தான் போட்டோம்) கொஞ்ச நேரம் கொதிக்க விடவும்.
நாங்கள் மூவரும் சேர்ந்திருந்தாலும், தனிகட்சியா? "என்னவோ ஒன்னும் புரியலை போ" அலுத்துக் கொள்ளும் வெந்தயம் தக்காளி கறிவேப்பிலை...
நாங்கள் மூவரும் சேர்ந்திருந்தாலும், தனிகட்சியா? "என்னவோ ஒன்னும் புரியலை போ" அலுத்துக் கொள்ளும் வெந்தயம் தக்காளி கறிவேப்பிலை...
ஒரு தக்காளியை சுத்தப்படுத்தி அதன் காம்பு பகுதியை நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். (இந்த காம்பு பகுதியில் ஏராளமான பாக்டீரியா இருக்கிறது எனவே அதை நீக்கி விடுவது நல்லது. ) கறிவேப்பிலை மூன்று ஆர்க்குகள் அலம்பி வைத்துக் கொண்டு ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வெறும் வாணலியில் சற்று சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். இந்த மூன்றையும் ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
தனியாக அரைபட்டாலும் நாங்கதான் முதலாக்கும்....
தனியாக அரைபட்டாலும் நாங்கதான் முதலாக்கும்....
புளிக் கரைசலுடன் சேர்ந்து கொதித்துக் கொண்டிருக்கும் கோஸ் கலவையில் இந்த அரைத்த விழுதை சேர்க்கவும்.
வறுக்க ஆஜராகியும் வட்டமேஜை மாநாட்டில் கலந்து பேசிக் கொண்டிருக்கும் பொருட்கள்....
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு என தலா ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். கொத்தமல்லிவிரை நாலு ஸ்பூன், வத்தல் பத்து ( இது காரத்தைப் பொறுத்து அவரவர் விருப்பம்) என்று எடுத்துக் கொண்டு ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்த பொருட்களை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அட, தட்டில் இடமில்லையென்றால், என்னை மறந்து விடுவீர்களா என்ன? நான் இல்லாமலா? என கோபமாய் எட்டிப்
பார்க்கும் தேங்காய்....
அந்த தேங்காய் மூடியில் பாதி துருவி, அரைக்க வறுத்த மசாலா பொருட்களை ஆறுவதற்காக ஒரு தட்டில் கொட்டிய பின் அதே வாணலியில் அதையும் லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.
நாங்கள் வாசமாக இருந்தாலும் அடுத்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். கூடிப் பேசி விவாதம் எழுப்பலாமென்றால், வட்ட மேஜையை காணவில்லையே? பெரும் சோகத்தில் விழுது....
புளி கலவையுடன் சேர்ந்து கொதித்து வெந்தயம் வாசம் வந்ததும் வறுத்து வைத்திருக்கும் ஆறிய மசாலா பொருட்களையும், தேங்காயையும் மிக்ஸியில் போட்டு ஒரளவு நைசாக அரைத்துக் கொண்டு அந்த, விழுதையும் கலந்து கொதிக்க விடவும்.
கடைசியில் நானும் இதில் சேர்ந்தாச்சு. இப்ப திருப்தியா என்ற கடைந்த பருப்பு.....
பத்து நிமிடங்கள் கொதி வந்ததும் வெந்த பருப்புகளையும் நன்கு மசித்து அதனுடன்கலந்து கொதித்து சேர்ந்து வரும் போது
அடுப்பை அணைத்து விடவும்.
ஆயிரம் இன்னல் பட்டு பெருங்காயத்துடன் உங்களுக்காக நான் தயார்...
கடைசியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கடுகு உ.. ப தாளித்துக் கொண்டு அதனுடன் பெருங்காயத்தை போட்டு பொரித்து சேர்த்தால் பிட்லே வாசனையாக தயாராகி இருக்கும்.
நாங்கதான் ஒன்னு சேர்ந்துட்டோமே இப்ப நீங்க சாப்பிட தயாரா? ? கோஸ் பிட்லே....
சாதத்தில் நெய் விட்டு இந்த கோஸ் பிட்லே கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். தோசை சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்.