Showing posts with label புதுசு. Show all posts
Showing posts with label புதுசு. Show all posts

Friday, September 2, 2022

பிணக்கும் பிரிவும்.

வணக்கம் என் அன்பான சகோதர, சகோதரிகள் அனைவருக்கும்.

ஒரு வார காலத்திற்கும் மேலாக எங்களுக்குள் இருந்த அதிகப்படியான பிணக்குகள் காரணமாக  ஒருவர் மீது ஒருவருடன் அதிகபட்ச வெறுப்புக்கள் தோன்றியது. கடந்த சில மாதங்களாகவே இந்த நிலைதான். இருப்பினும்  இணைந்து விட்ட ஏதோ ஒரு அன்பின் ஈர்ப்புடன்  எங்கள் வாழ்க்கை இதுநாள் வரை ஓடிக் கொண்டிருந்தது.  

நாங்கள் அன்பாக இணைந்து பல வருடங்களுக்கு மேலாகவே ஆகி விட்ட இந்த நிலையில் "இப்போது இது தேவைதானா" என்ற வருத்தம் இருவருக்குமே ஒரு புறம் மனதை அலைக்கழிப்பதாக எனக்குள் தோன்றியது.

சரி...சரி....விடு அம்மா."காலுக்கு உதவாததை" என்ற பழமொழியை என் குழந்தைகள் வலியுறுத்தவே ஆரம்பித்து விட்டனர். ஆனால் எனக்கு மனம் வரவில்லை. "கொஞ்ச நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்" என்று சொல்லும் போதே மனசு வலித்தது. என்னதான் அவ்வப்போது பிரச்சனைகள் பெரியதாகிப் போனாலும்  ஒரு அநாவசியமான பிரிவை தாங்கவே என் மனதில் தைரியம் இல்லை‌.

போன வாரம்... "அம்மா.. விரைவில் உனக்கு ஒரு.... ..."என்று இளைய மகன் ஆரம்பித்ததும், நான் பதறியபடி எவ்வளவோ தடுத்தும் அது நடந்து விட்டது. எனக்குத்தான் மனம் தாங்காமல் ஒரு மாதிரி தளர்ந்து போனது.

எந்தவொரு பிரச்சனைகளின் இறுதி வடிவம் பிரிவுதானா? வேறு சமரச மார்க்கமே இல்லையா? இப்படி எடுத்தற்கெல்லாம் சட்டென்று முடிவெடுக்கும் பிரிவென்றால அந்த காலத்தில் எந்தவொரு தடுமாற்றமுமின்றி அனைத்து மக்களும் நலமுடன் வாழவில்லையா? என் மனதில் எழுந்த ஏகப்பட்ட கேள்விகளால் புது உறவு பூக்க சற்று தாமதமானது. ஆயினும் என் குழந்தைகளின் மனதில் பாசத்தோடு வளர்ந்த செடி இலைகளின் அன்பான ஆதரவோடு மொட்டு விட்ட பூ மலர்ந்து விட்டது.

அட...... பிரச்சனை வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் குழம்பி தவிப்பதற்குள் புதிரை விடுவித்து விடுகிறேன்.

இது என் புது கைப்பேசி வந்த வரலாறு.

பிரிவுக்கு ஒரு மனதாக தயாரான என்னிடமிருந்த  கைப்பேசி புகைப்படங்கள் வீடீயோ எதையும் சரியாக பார்க்க விடாது, நீண்ட நேரங்கள் தன்னைப் பார்க்கும் என் கண்‌ நலம் கருதி படிக்க விடாமலும் படுத்த ஆரம்பித்து விட்டது.

"எல்லாம் உன் நலத்திற்ககாகத்தானே இப்படி......" என்ற  கேள்வி வேறு அதனிடமிருந்து அடிக்கடி எழும்புவதால், சரியென்று நானும் ஆமோதித்தபடி என்னை அமைதிபடுத்திக்  கொள்வேன். இறுதியில் புதுசு வந்தாக வேண்டுமென்ற விதியின் விளையாட்டிற்கு முன்  அதன் விளையாடல்கள் செல்லுபடி ஆகவில்லை.

ஆனாலும், அதை அதன் உடல்நலம் பாதிக்கப்பட்ட உடனே  மருத்துவரிடம்‌ முறையாக சென்று காண்பித்திருக்க வேண்டுமோ என்ற தவிப்பு இன்னமும்‌ என் மனதில் அதைப் பிரிந்த வேதனையோடு இணைந்து உறவாடியபடி உள்ளது. எதுவுமே நமக்கென்று  நிரந்தரமில்லாத இந்த  உலகத்தில் வாழும் போதும், அதனின் இயல்பான ஒத்துழைப்புக்கள் அடிக்கடி நினைவுக்கு வருகிறது. அதனின் இயல்பை இந்த புதிதாக வந்திருக்கும் இதனிடம் கற்றுக் கொள்ள எனக்கு சற்று காலதாமதம் ஆகலாம்.

இந்த கைப்பேசி வந்து அது என்னுடன் பழகும் பொழுதினில் ஏற்பட்ட தாமதத்தில் முந்தைய முள்ளங்கி பரோட்டாவை‌ பார்வையிட்டு தங்களின் கருத்துக்களை பதிய வைத்த சகோதரர்கள் ஸ்ரீராம், கில்லர்ஜி, நெல்லைத்தமிழர் அனைவருக்கும் என் மனம் நிறைந்த அன்பான நன்றிகள். மற்றும்,அனைத்து சகோதர, சகோதரிகளின் நிறைய பதிவுகளையும் நான் தவற விட்டிருக்கிறேன். அனைவரிடம் என் மனமார்ந்த மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறேன். இனி எப்போதும் போல் வலைத்தளம் வர இறைவன் அருளை வேண்டிக் கொள்கிறேன்.