Monday, March 29, 2021

கதை பிறந்த கதை. .2.

 சுத்தம் என்ற இந்த வார்த்தைதான் எவ்வளவு சிறந்தது.  "சுத்தமாக அழுக்குப் போக குளித்து விட்டு வா" "சுத்தமாக கையலம்பி விட்டு சாப்பிடு" "சுத்தமாக வீட்டைப் பெருக்கித் துடைத்து விடு" என ஒவ்வொரு செயலுக்கு முன்பும் இந்த "சுத்தம்" என்ற வார்த்தையை  நாம் அன்றிலிருந்தே பயன்படுத்துகிறோம். 

நம் இளமைக் காலம் தொட்டே இந்த வார்த்தையில்தான் நாம் வளர்ந்தும் வந்துள்ளோம். (இதில் ஒரு சமயம் பிறர் பேசுவதை மற்றொருவர் சரியாக கவனிக்கவில்லையென்றாலும், இல்லை, நிஜமாகவே காது கேட்காத பேர்களிடம் பேசி அவர் அதற்கு தகுந்த பதிலேதும் கூறவில்லைையென்றாலும் இந்த "சுத்தத்தை" சற்று அழுத்தி" அட..!  சுத்தம்.. போ.... இவரிடமா இதைப்போய் பேசினோம்" என்ற அர்த்தத்தில் சொல்வது  உண்டு.   "ஆஹா" என்ற படத்தில், நடிகை ஸ்ரீ வித்யா  இப்படி சொல்லும்போது  அவர் முக பாவத்தை ரசித்திருக்கிறேன்.)

சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி. "அப்போ அசுத்தம் அதற்கு சாம்பார் (ஊத்துமா...) போடுமா? என்று அதற்கிணையாக வந்த புதுமொழியை கண்டுதான் இப்போது கொரோனா கோபத்தில் பொங்கி எழுந்துள்ளது.

சரி.. விஷயத்திற்கு வருகிறேன். முன்பு எப்போதோ படித்த கதைகளில் சிலதை மறக்கவே இயலாது என ஒரு தோசை புராணத்தை எழுதியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்படியும் நினைவுக்கு வரவில்லையெனில் நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறவர்கள் இந்த இடத்தை தொட்டால் உங்களை அங்கே அழைத்துச் செல்லும். 

அந்த வகையில் இதுவும்  எப்போதோ படித்த மறக்க முடியாத ஒரு சின்னக் கதை . அதை நான் நினைவுபடுத்தி என் கைப்பட நான் எழுதிய போது பெரிதான மாதிரி தோற்றமளிக்கிறது. 

கதை:-

அந்த வீட்டில் கணவனும் மனைவியும் ஒரு குழந்தையுடன் வாழ்கின்றார்கள்.  கூடவே அவள் தம்பியும் அந்த ஊரிலேயே வேலை என்பதால், கொஞ்ச மாதங்களாக அவர்களுடேனேயே வந்து தங்கி இருக்கிறான். மூவரும் ஒற்றுமையான குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். கணவனும், தம்பியும்  அலுவலக வேலை இல்லாத வார இறுதி நாட்களில்  கூட வெளியில் எங்கும் செல்லாமல், குழந்தையுடன் கொஞ்சியபடியும், ரேடியோவில் பாட்டுக்கள்  கேட்பதும், கதைகள் படிப்பதுமாக அந்நாட்களின் நேரம் முழுவதையும் கடத்துகின்றனர். மனைவிக்கும் அதைப்பார்க்கும் போது விடுமுறை நாட்களில் வீட்டிலிருக்கும் அவர்களைக்கண்டு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒரு கடை, கண்ணிக்கு  கூட அவர்கள் செல்லாமல் கூடமாட எந்த ஒத்தாசைக்கும் வராமல், சோம்பேறிதனமாக இருப்பதை கண்டு கொஞ்சம் எரிச்சலுமடைகிறாள். பொதுவாக அவள்தான் குடும்பத்தில் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவள். ((இது அந்த காலத்தில் நான்படித்த கதை. "எப்படி பெண்கள் மட்டும் வீட்டின் அத்தனை சுமைகளையும், தனி ஒருவளாக சுமக்கலாம்?  என யாரும் சண்டைக்கு வந்து விடாதீர்கள்.  இப்போதும் கூட இந்த மாதிரி பெண்கள் இருக்கிறார்கள்.  நான் கூட அந்த காலத்திலிருந்து இன்னமும்... ... வீட்டில்  நான்.....நானேதான்.... அத்தனை வேலைகளையும்.......தனியாக.... அடராமா.. ..! .அதற்குள் இப்படி ஒரு அவசரமா? சரி.. சரி.. உங்கள் கையிலுள்ள கல்லை  கீழேயே எறிந்து விட்டு கொஞ்சம் பொறுமை காத்து கதைக்குள் வாருங்கள்.:)))  ) 

இப்படியிருக்கும் போது ஒரு நாள் தம்பிக்கு ஒரு  கடிதம் (அந்த காலத்தில் எல்லாம்  கடிதந்தானே... ) வருகிறது. தம்பிக்கு வந்த கடிதத்தை அவன் அலுவலகம் விட்டு வந்தவுடன் அவன் கையில் தருகிறாள் அவள். காஃபி குடித்து முகம் கழுவி வந்தவன் கடிதத்தை பிரித்து படித்ததிலிருந்து ஒரு மாதிரி வித்தியாசமாக இருப்பதை தெரிந்த பின் என்னவென்று இவள் வினவ, "ஒன்றுமில்லை.. என் நண்பன் எழுதியது" என்று சமாளித்து விடுகிறான் . ஆனால் தொடர்ந்த நாட்களிலும் அவனின் வித்தியாசத்தை அடிக்கடி அவள் சந்திக்க நேருகிறது. 

அதற்கடுத்த நாள் அவள் கணவனுக்கும் ஒரு கடிதம் வர, அவன் வீட்டிலிருந்த நேரத்திலேயே அதை பெற்று படித்த பின், அவனும், இவள் பார்வைக்கு முன். வித்தியாசமாகிறான். மனைவியும் தன் கணவனிடம் கடிதம் குறித்து கேட்டதும், அவனும் அவள் தம்பி கூறிய பதிலைச் சொல்லி விலகிப் போகிறான் . 

மேலும் இரு தினங்கள் அவர்கள் அதே வித்தியாசத்தில் நகர மறுபடி அவ்வார இறுதி நாட்கள் வருகிறது. சனிக்கிழமை காலையிலிருந்தே தம்பியும், தன் கணவனும் தங்களை அழகாக்கி கொள்வதில் அன்று அதிக நேரத்தை செலவிடுவதை கவனிக்கிறாள்." மறுநாள் காலையிலேயே நான்  வெளியே செல்ல வேண்டிய வேலை ஒன்று இருக்கிறது.. மதியம் வெளியில்தான் சாப்பாடு தனக்காக அன்று ஒன்றும் செய்ய வேண்டாம்.. " எனத் தனிதனியே  வந்து அவளிடம் சொல்வதை ஆச்சரியமாக கேட்டுக் கொள்கிறாள் . 

வெளியில் எங்குமே செல்லாமல் சோம்பி கிடக்கும் அவர்கள் மறுநாள் காலையில் விடிந்ததும் விடியாததுமாக தங்களை நீண்ட நேரம் அழகுபடுத்திக் கொண்டு ஒருவர் பின் ஒருவராக வெளியில் புறப்பட்டு செல்வதை கண்டதும், தன் ஒரு வயது குழந்தையிடம்,  "அந்த கடிதந்தான் இவர்களின் ஒரு வாரத்திற்கான வித்தியாசமோ?" என கேள்வி கேட்கும் மனோபாவத்தில்  கூறி அதனிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறாள். அது தன் பாஷையில் தத்தக்காவென ஏதோ கூற இவளும் சிரித்தபடி  சிறிது நேரம் குழந்தையை கொஞ்சி விட்டு,, தன் வேலைகளை கவனிக்க வேண்டியிருந்ததால்  குழந்தைக்கு உணவு புகட்டி விட்டு தூங்கச் செய்கிறாள். பின் வேலைகளை மடமடவென செய்கிறாள். 

மாலையில் வீடு திரும்பிய கணவனும், தம்பியும் சோர்வாக இருப்பதை உணர்ந்தவளாய் அவர்கள் கையில் காஃபியுடன் சிறிது அன்றே செய்திருந்த பட்சணங்களை தந்து சாப்பிடுமாறு வறுப்புறுத்துகிறாள். அவர்கள் வேண்டாமென கூறி விட்டு உற்சாகமில்லாமல் அவரவர் அறைகளுக்கு சென்று ஒய்வடுக்க சென்று விடுகின்றனர். 

இரவு உணவும் விருப்பமில்லாமல் உண்ண ஆரம்பித்து அதே நிலையில் முடிவு பெற்று விடுகிறது. மறுநாள் காலையிலும் அலுவலகத்திற்கு கிளம்பும் இருவரும் உடையிலும் சரி.. உணவிலும் சரி, பிடிமானமில்லாமல் இருப்பதை கண்டதும், "என்னவாயிற்று உங்கள் இருவருக்கும்? நேற்றிலிருந்து ஏதோ பறி கொடுத்தவர்கள் போன்றே இருக்கிறீர்களே. ...என்ன காரணம்? அதுசரி.. உங்கள் அறைகளும் சரி, ஏன் வீடு மொத்தமும் இப்போது எவ்வளவு சுத்தமாக இருக்கிறது பார்த்தீர்களா?  அதை கவனிக்காது அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாது இப்படி உங்களை நீங்களே சோகத்தில் ஆழ்ந்தியிருந்தால் எப்படி?" என அவள் கொஞ்சம் கடுமையாக கூறியதும், அவர்கள் இருவரும் அப்போதுதான்   சுத்தமாக பளிச்சென்று இருக்கும் வீட்டை சுற்றிவரப்பார்த்து, ""அதற்கென்ன இப்போ... நேற்று முழுவதும் நாங்கள் வீட்டில் இல்லாத நேரத்தை பயனுள்ளதாகதான் செலவழித்திருக்கிறாய்.. இதற்கு நாங்கள் ஏதும் பரிசு தர வேண்டுமா? அதை எதிர்பார்க்கிறாயா ? என்று அவ்வளவு வெறுப்பிலும் பரிகாசங்கள் செய்தபடி  ஏதேதோ பேச ஆரம்பித்தனர். 

இவளும் தன் பங்குக்கு பேச்சை வளர்த்து வம்பிக்கிழுத்து அவர்கள் இருவரையும் ஒரளவுக்கு பழைய மாதிரி கலகலப்பாக்கினாள். 

"சரி... சரி. .  அலுவலகத்திற்கு செல்ல நேரமாகி விட்டது. நான் மதியத்திற்கு சாப்பாடு கட்டி வைத்து விட்டேன். டிபன் சாப்பிட்டு விட்டு  நீங்களும் உங்களை ரெடி பண்ணிக் கொண்டு கிளம்புங்கள். . ." என்று தம்பியையும், கணவரையும் பார்த்து  கூறியதும் அவர்கள்  கொஞ்சம் உற்சாக நிலைக்குச் மாறிச்  செல்வதை மனநிறைவுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். 

ஆயிற்று.... அலுவலகம் கிளம்பும் முன் சொல்லிக் கொள்ள அவளருகில் வந்த தம்பி கண்கள் கலங்க நிற்பதை கண்டதும், "என்னடா? ஏதேனும் சொல்லனுமா? என்ன விஷயம்? என்றதும்,  அவன்" அக்கா.. நீ எனக்கு எவ்வளவு பார்த்து பார்த்து  பாசத்துடன் செய்கிறாய்? ஆனால், நான் உனக்கு விடுமுறை நாட்களில் கூட உதவி செய்யாமல், எவ்வளவு சோம்பேறியாக இருந்திருக்கிறேன். இந்த வீட்டை நாங்கள் இல்லாத போது நீ சுத்தப்படுத்தியிருப்பதாக நானும் உன்னவருடன்  சேர்ந்து கேலி செய்தேன். அது எவ்வளவு சிரமம் என்பதை என் அறையை நீ பளிச்சென்று சுத்தம் செய்து வைத்திருப்பதை பார்த்து தெரிந்து கொண்டேன். புத்தக அலமாரியில் ஒழுங்காக புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதும், துணிகள் சிதறாமல் ஒழுங்காக மடித்து வைக்கப்பட்டு இருப்பதையும் பார்த்ததும் எனக்கு உன் வேலைகளின் சிரமம் புரிந்தது அக்கா... ! இனி விடுமுறை நாட்களில் என் உதவி கட்டாயம் உனக்கு உண்டு அக்கா....  வேறு எண்ணங்களில் இனி அநாவசியமாக மனதை  ஈடுபடுத்த  மாட்டேன்". என்றபடியே தன் கையில் மறைத்து வைத்திருந்த  கடிதத்தை கிழித்து குப்பை தொட்டியில் போட்டு விட்டு சென்றவனை மலர்ந்த முகத்துடன் பார்த்து  அவனை சமாதானப்படுத்தி அனுப்பினாள். 

கொஞ்ச நேரம் கழித்து கிளம்பிய அவன் கணவனும் தயங்கியபடி அருகில் வந்து, " "என்னை மன்னித்து விடும்மா.. இத்தனை நாள் உன் வேலைகளைப் பற்றிய கவலையில்லாமல் இருந்து விட்டேன். குழந்தையையும் பார்த்துக் கொண்டு, எனக்கும், உன் தம்பிக்கும் வேண்டிய உணவை தயாரித்து எங்களை எவ்வளவு அக்கறையுடன் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறாய்.... அதை உணராமல், வீண் சஞ்சலத்திற்கு மனதில் இடம் கொடுத்து விட்டேன். உன்னைப் போல் ஒரு மனைவி கிடைக்க நான் உண்மையிலேயே கொடுத்து வைத்திருக்க வேண்டும். இத்தனை நல்லவளான உனக்கு கெடுதல் செய்ய ஒரு நினைப்பு எப்படித்தான் எனக்குத் தோன்றியதோ ? அதற்கு பிராயச்சித்தமாக இனி வாராந்திர விடுமுறையில் என் உதவி உனக்கு உண்டு..." என்று  பரிவுடன்  கூறி அவள் கைகளைபற்றிக் கொண்டு  லேசாக கண் கலங்குவதை கண்ட அவளுக்கும் விழிகள் நிறைந்தது. 

அவனும் கைகளுக்குள் மறைவாக எடுத்து வந்த அந்த கடிதத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் ஏற்கனவே போட்டதை  அவள் கவனித்து கொண்டாள். 

அவர்கள் கிளம்பிச் சென்று கொஞ்ச நேரமானதும் ,,  தன்னிடமிருந்த  அதே போன்ற மற்றொரு கடிதத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தவளுக்கு தாங்க முடியாத சிரிப்பாக வந்தது. 

அன்புள்ளவருக்கு, 

ஒருமாதத்திற்கு முன் நீங்கள் உங்கள் வீட்டுக்கு கொஞ்சம் தொலைவிலுள்ள பாரதி பூங்காவிற்கு உங்கள்  குடும்பத்தினருடன் வந்த போது உங்களைப் பார்த்தேன். அன்றிலிருந்து உங்கள் நினைவாகவே உள்ளேன். எப்படியோ விசாரித்து உங்களைப்பற்றி விபரங்கள் அறிந்து கொண்டேன். நீங்கள் மட்டும்  வரும் ஞாயறன்று தனியாக காலை அல்லது மதியம் அங்கு வந்தால் நாம் சந்தித்து பேசலாம். மாலையில் வந்தால் என்னை சந்திக்க இயலாது. எனக்கு உங்களை மிகவும் பிடித்துள்ளது. நான் கருநீல கலரில் புடவையும் கருப்பு பிளவுஸும் அணிந்திருப்பேன். எனக்குப்பிடித்தமான  சிகப்பு ரோஜாவை கையில் வைத்திருப்பேன். இதுதான் என் அடையாளம். உங்களை  சந்திக்க காத்துக் கொண்டிருக்கிறேன். 

                                                     இப்படிக்கு 

                                                  உங்கள் அன்பு

                                                        மாதவி. 

வீட்டிலேயே சதாஅடைந்து கிடப்பவர்களை வெளியில் அனுப்பி வைப்பதற்காகவும், அன்றைய தினம் வீட்டை முழு மூச்சாக சுத்தபடுத்துவதற்காகவும், தானே இவ்வாறு கடிதம் எழுதி தம்பி பெயருகொன்றும், கணவன் பெயருக்கொன்றுமாக போஸ்ட செய்ததை எண்ணி எண்ணி சிரித்தாள். காலை, மதியம் என்ற நேரத்தையும் குறிப்பாக எழுதியிருந்த தன் சமார்த்தியத்தை மெச்சிக் கொண்டாள். 

அன்று முழுவதும் அந்த பார்க்கில் அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் தினுசில் அந்தப் பெண்ணை ஒவ்வொரு திக்கிலும் தேடியலைந்ததை கற்பனையில் கண்டு ரசித்துக் கொண்டேதான் அவள் வீட்டை சுத்தப்படுத்தியதை இப்போது நினைத்தாலும், அவளுக்கு  சிரிப்பு பொங்கி வந்தது. அது போக  அந்த செயல் , தன் தம்பியிடமும் கணவனிடமும் இந்த மன மாற்றத்தை வேறு ஏற்படுத்தும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. மனமாற்றத்தில் அவர்கள் தங்கள் தவறுக்கு பிராயச்சித்தமாக  ஒருவருக்கும் தெரியாமல் கடிதங்களை கிழித்துப் போட்டதையும் தனித்தனியே தன்னிடம் வந்து ஏதேதோ பேசியதையும் கண்டதும் அடங்கி இருந்த சிரிப்பெல்லாம் இப்போது அடக்க மாட்டாமல் வெடித்தெழுந்தது. அவளுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையும், தன் அம்மா தன்னைப்பார்த்துதான், தன் செயல்களைப்  பார்த்துதான்  சிரித்து மகிழ்கிறாள் என நினைத்தபடி அதுவும் சேர்ந்து வாய் விட்டு நகைத்தது. 

கதை நிறைந்தது.. ... 

எப்போதோ படித்த நினைவிலிருந்து இந்தக்கதையை  சிறிது மாற்றி   எழுதி இருக்கிறேன் என நினைக்கிறேன். அவர்கள் (தம்பி, கணவர்) வெளியிலிருந்து சோர்வுற்று வந்தவுடனேயே கடிதம் எழுதியது அவள்தான் என்ற ரீதியில் கதை முடிந்து விடுமென நினைவு.  நான் கொஞ்சம் எனது கற்பனையை நீட்டி வேறு விதமாக மாற்றி முடித்திருக்கிறேன். எனக்கும் வீடு சுத்தம் செய்யும் போது இந்தக்கதை ஏனோ நினைவுக்கு வந்து கொண்டேயிருக்கும்.

அன்புடன் பொறுமையாக படித்த அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏. 

Thursday, March 18, 2021

மலர்ந்த நினைவுகள்.

 வலையுலக சகோதர சகோதரிகளுக்கு அன்பான வணக்கங்கள். 

இன்று நம் அன்பான சகோதரி வல்லி சிம்ஹன் அவர்கள் தபால்காரரைப் பற்றியும்  அந்தக்கால கடிதங்களின் சிறப்பைப் பற்றியும் தம் வலைப்பதிவில் எழுதியிருந்தார். அவரின் பதிவு பழைய காலத்திற்கே நம்மை கொண்டு சென்றது. அதிலும் பதிவின் முடிவில் "இணையத்தின் இணையற்ற தபால்காரர் நம் வலைப் பதிவுகள்.  "என அவர் முடித்திருக்ககும் வரிகளை ரசித்தேன். ஆம் . உண்மை.... இப்போது மறுபடியும் நம் எழுத்துக்களை வலைப்பதிவுகள் என்ற தபால்காரர் மூலம்  நாம் தினமும் ரசித்துப் படித்துக் கொண்டிருக்கிறோம். நன்றி சகோதரி. 

கடிதங்களின் இடத்தை இப்போதெல்லாம் கைப்பேசி பிடித்துக் கொண்டு விட்டது. கடிதம் எழுத இப்போது எவருக்கும் பொறுமையும், நேரமும் குறைவாக உள்ளது.  கைப்பேசியில் உடனுக்குடன் பேசி, எத்தனை மலைப்பான  தூரங்களையும் நெருக்கமாகி அருகில் வைத்துள்ளோம். 

அப்போதெல்லாம் கடிதங்களில் எழுதும் போது நிறைய விஷயங்கள் இருப்பது போல் தோன்றும். எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் நுணுக்கி எழுதிய பின்னும், இன்னமும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என்ற கவலையும் வரும்.  பெறுநர் முகவரி பக்கம் மட்டுமே கோடு தாண்டா நேர்மையோடு முகவரிக்கென்றே ஒதுக்குவோம். "அதையாவது விட்டு வை.....அதிலேயும் கிறுக்கினால்,  கார்டு போய் சேர வேண்டியவர்களுக்கு போய் சேராமல் நடுவிலேயே தத்தளித்து தவித்துப் போய் விடும்" என்ற கிண்டலான எச்சரிக்கைகள் வீட்டின் மூத்த உறவுகளிடமிருந்து  வந்து விழும் வரை இன்னமும்  என்ன எழுதுவது என்று யோசிப்பதை நிறுத்த மாட்டோம். 

அந்த காலத்தில் கவனக்குறைவால் தவறான முகவரிகள், இல்லை, மழை, புயல், (அக்காலத்திலெல்லாம் மழை காலத்தில் அவ்வப்போது வரும் புயலை கடும் சூறாவளி மழை   என ஒரே பெயரிட்டுதான் அழைப்போம். இப்போது அதற்கும்  விதவிதமான பெயர்கள் கிடைத்து விட்ட மகிழ்வில், வருடத்திற்கு அதன்  எண்ணிக்கைகள் நம்மை கேட்காமலேயே அதிகரித்து விட்டன.)  போன்றவற்றின் காரணங்களால் கடிதங்கள் அவரவர்களுக்கு சென்று சேராமல் போய் விடும். பதில்கள் வர வில்லையே என மீண்டுமொருமுறை விசாரித்து தெரிந்து கொள்வதற்கு எப்படியும் பத்து நாட்கள் ஆகிவிடும். அதற்குள் நம் மனம் படும் பாடு விவரிக்க இயலாது. 

அந்த நினைவுகளுடன், திரும்பி வராத இடத்திலிருக்கும் என் அன்னைக்கு ஒரு மடல் என நான் என் மன ஆறுதலுக்காக எப்போதோ எழுதினேன். வல்லி சிம்ஹன் சகோதரியின் பதிவுக்கு கருத்து எழுதும் போது கூட அங்கும் அவர்களைப் பற்றித்தான் (எங்கள் அம்மா) குறிப்பிட்டிருந்தேன்.

 திருமணத்திற்கு பின் என்னிடமிருந்து ஒவ்வொரு வாரமும் தவறாது மடல்களை எதிர்பார்க்கும் அன்னையின் நினைவு (அந்த உறவு மட்டுந்தான் நம்  எழுத்தை, அதன் மகிழ்வை, அதனுடன் இழையோடும் சோகத்தை தனதாக்கிக் கொண்டு,  தன் பங்குக்கும் அனைத்தையும்  பிரதிபலிக்க செய்யும் சக்தி வாய்ந்தது.) அதிகரிக்கவே இந்த அன்னைக்கு எழுதிய மடலுக்கு முன் மனதிலுள்ளதையும் பதிவாக இங்கு  எழுதினேன்.  இனி அன்னைக்கு ஒரு மடல். ...

கவிதை என்ற பெயருடன் இது பொருந்தாமல் போகலாம். ஆனால் கவிதை என நினைத்துதான் இதை ஆரம்பித்தேன். ஆரம்ப ஒரு வரியையே இடையில் நிறுத்தாமல் நீண்ட வரியாக எழுதி முடித்திருக்கிறேன். படிப்பவர்களுக்கு என் பணிவான நன்றிகள். 

அன்னைக்கு ஒரு மடல்.... 

அன்னை தந்தை வளர்ப்பினிலே,

அருமையாய் தினம் வளர்ந்து,

குலப்பெருமை குன்றாமல்,

பிறர் குறையேதும் கூறாமல்,

குன்றில் இட்ட விளக்காக திகழ,

விரும்புமந்த இரு உள்ளங்களுக்காக, 

பால் மணம் மறக்கா பருவத்திலே,

பள்ளிப் பாடங்களை

பாங்காய் தினம் கற்று,

மழலை மொழி சொற்களை,

மாற்றியமைக்க பாடுபட்டு,

கற்றதை கண்டு பிறர் களிப்புறவும்,

கல்லாதவைக்கு கடுஞ்சொல்லும் பெற்று,

சற்று, கடுமையும், கனிவுமாக வளர்ந்து,

கடுகளவும் எண்ணம் சிதறாமல்,

கருத்தொன்றி படித்து, 

களை எடுத்த நாற்றாய்,

பள்ளிப் பாடங்களை பரிசீலித்து,

பள்ளிக்கு பின் பல்வேறு கனவுகளுடன்,

கல்லூரியில் கால் பதித்து, 

கற்றதை மேம்படுத்தி,

பாரினில் பிரகாசிக்க, 

பட்டங்கள் பல சுமந்து,

பழுதில்லா பணி தேடி,

தினமும் பல மைல் பயணித்து,

சுமந்த பட்டங்களுடன், சுயமாகி நின்றிட.., 

சுகமான ஒரு வேலைக்காக, 

ஓராயிரம் சுகங்களை உதாசித்து, 

இறுதியில் ஈட்டதொரு,

நல்லதோர் பணியில், 

நாள் பார்த்து அமர்ந்து,

நலங்கள் குன்றினாலும், 

நாள்தோறும் உழைத்து,

நாடு விட்டு நாடு சென்றும், 

நற்பெயர்கள் பலவும்,

நன்கு வாங்கியதில், 

நாட்கள் வருடத்தை சுவைத்திட, ஓரிரு

நரை முடிகளை தலையில் காட்டியதால்,

மனம் பதறிய மாதாவின் சொல் தட்டாது,

அடுத்தவ(ளி)ரின் வாழ்க்கையில்

அ(நா)வசியமாக பிரேவேசித்து,

அனுதினமும் அனுசரிக்க பழகி,

புதிய சொந்தகளை சொர்க்கமாக்கி,

பழைய பந்தங்களை பரணில் கிடத்தி,

பகட்டு வாழ்க்கைக்காக, 

பகல், இரவு பாராது, 

பணத்தை  வாழ்வின் இலட்சியமாக்கி

நோய் துறந்து, பாய் மறந்து,

நேரம் மட்டுமே, நேர்த்தியாய் பார்த்து,

நிமிடங்களை வீணடிக்காமல், 

நிம்மதியை தானமாக்கி, 

சற்று நிதானிக்கும் போது 

நின்று திரும்பினால்,

நீண்ட வாழ்நாளில் 

பாதி காணாமல் போயிருக்க,

நிதர்சனத்தின் கண்கள் சுட்டெரிக்க,

துறந்த நோய்கள் பலவும் துரத்த,

வளர்ந்து விட்ட வாரிசுகளின்,

வசமாகியிருந்த மிகுந்தந்த 

காலங்களின் படிகளில்,

வழுக்கி விழுந்து எழமுடியாமல்,

வருத்தத்தின் பிடியில் வசமாகும் போது,

அம்மா, உன் நினைவு வருகிறது.

அம்மா.. .உன் நினைவு மட்டுந்தான் 

வருத்தங்களோடு வசமாகினாலும், 

வாசமாக  மட்டும் என்னுடன்

வசித்திருப்பேனென்று வருகிறது.... 

தாயே! அன்று என்னைக் காண நீ

தவித்த சோகங்கள் தளர்வின்றி 

இன்று எனைத் தழுவுகிறது.

காத்திருந்து, காத்திருந்து, 

கண் மூடிவிட்ட உன்னை,

காண வந்த என்னிடம் இமை மூடிய

கண்களின் வழியே, நீ 

கேட்ட கேள்விகள் ஓராயிரம்!

அவற்றிக்கு பதிலளிக்க,

அப்போது தெரியாததால்,

இயன்றவரை பதில்சொல்ல,

இப்போது உனைத் தேடுகிறேன்.

தாயே நீ எங்கிருக்கிறாய்?

தனித்திருக்கிறாயா? உன்

தாயுடன் இருக்கிறாயா? உன்

வயது விளைவித்த 

வலிகளின் வலிமையை 

விளக்க, உன் வாரிசுகளின் 

வரவை விரும்பித் தேடியும்

வாராத நிலை கண்டு உன்னை

வளர்த்தவளிடம் விமர்சிக்க

வானுலகம் சென்றனையோ?

எந்திரமாக வாழ்ந்த நான் இந்த

எதார்த்த வாழ்வின் விளக்கம் பெற,

எப்படியும் என்னுடைய

தள்ளாத வயதில், மனம் தளர்ந்து,

தவித்துப் போய் நான் வரும்போது,

தாங்கி பிடித்து அமரவைக்க,

தனியிடம் ஒன்று உன் அருகாமையில்

தக்க வைத்துகொள் தாயே....! 

எப்படியும் எனக்காக இதை நீ செய்வாய்.. 

ஏனெனில் நீ  தியாகங்களின் சிகரம்....

அது உன்னதங்களின் உயரம். 

சிகரங்களுக்கு  பகைமை பாராட்டி

சினம் கொள்ளத் தெரியாது. 


இப்படிக்கு,

உன்னிடம் விரைந்து வர விளையும்,

உன் .............


என் பழைய நினைவுகளை (பிதற்றல்களை என்று கூட சொல்லலாம். ) படித்தவர்களுக்கு என் அன்பான நன்றிகள். 🙏

Monday, March 8, 2021

பெண்ணின் சிறப்பு.

வணக்கம் அனைவருக்கும்.. .. 

ஒரு மாதத்திற்கு  ஒருமுறையேனும் ஏதாவது என் தளத்தில் கிறுக்கிக் கொண்டிருந்தேன். கொஞ்ச நாட்களாக எதுவும் எழுதவே இயலவில்லை. நானும் தினமும் வேலைகளுக்கு நடுவே எழுதுவதற்கென்று  ஏதேனும் விஷயங்களை யோசித்து வைத்துக் கொள்வேன். ஒரு வழியாய் கடமைகள் முடித்து ,கைப்பேசியை தொடும் போது, வடித்து வைத்த எண்ணங்கள் அத்தனையும்  காணமல் போய் மனதில் சஞ்லங்கள் மட்டுமே நிறைந்திருக்கும். 

இதோ..! இந்த மகளிர் தினத்திற்கு புதிதாக ஏதேனும் எழுத வேண்டுமென ஒரு மாத காலமாய் நினைத்துக் கொண்டேயிருந்தேன். ஆனாலும், என்னவோ இயலாததால், என்னிடமிருந்த பழைய சோற்றை, சிறிது தாளிப்புடன்  இனியதாக்கி, அதனால் சுவை சற்று கூடியிருக்கும் என்ற எண்ணம் தந்த அசட்டு தைரியத்தில் புதியதாக்கி  படைத்திருக்கிறேன்.  பார்த்து படித்து ரசிப்பவர்களுக்கு என் பணிவான நன்றிகள்.  🙏. 

உலகிலுள்ள அத்தனை மகளிர்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள். அத்துடன் அவர்களது சாதனைகளுக்கு அக்காலம் தொட்டு என்றுமே உறுதுணையாய்  நின்று அரவணைத்து கை கொடுக்கும் அத்தனை ஆண்மக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகளும், நன்றிகளும்.... 🙏. 

பெண்....

மண்ணில் பதிந்த பாதங்களை 

ற்றியிழுத்து விட்டு

மறுபடி ஓடிவந்து 

பாதங்களை தழுவி 

 தவறுக்கு வருந்தி

மன்னிப்பு கேட்கும் குழந்தை 

மனதுடன் நித்தம் நித்தம்

மருகி கொண்டு 

வந்து போகும் கடல் அலைகள்...

ஆனால், நீ அந்த கடல் 

மட்டுமல்ல......


விண்மீன்களின் நடுவே 

தனக்கென்று ஓர் இடத்தை,

விரும்பி அமைத்துக்கொண்டு 

கவிஞனுக்கு துணை செய்ய,

பாதியாகவே, பாதி நாட்கள் 

வந்து போனாலும் ஒளியில்,

பரிதிக்கு நிகராக 

பாரினில் உலா வரும் நிலவு.... 

ஆனால், நீ அந்த நிலவு

 மட்டுமல்ல..... 


மயக்கும் அந்தி சாயும் பொழுதில், 

கை விசிறியாக தான் மாறி,

மனதையும் உடலையும் குளிர்வித்து, 

தானும் குளிர்ந்து

மண்ணுலக மாந்தர்களை

 மகிழ வைப்பதே கடமையென,

மட்டற்ற மகிழ்ச்சியுடன் 

ஓடிவரும் தென்றல்......

ஆனால், நீ அந்த தென்றல் 

மட்டுமல்ல.... 


வாசமாக பிறந்து, 

வாசங்களுடன் வளர்ந்து, 

மனிதரின் சுவாசத்துடன் கலந்து, 

பிறப்பெய்தியதே பிறருக்குத்தான் 

எனும், மாபெரும் உண்மையை, 

மனிதருக்கு பாடமாக்கி இறுதியில்,

மடிவையும் இந்த மண்ணிலேயே 

சந்தித்து போகும் பூக்கள்.....

ஆனால், நீ அந்த பூக்கள்

மட்டுமல்ல.... 


பச்சைப் பயிரினங்கள் 

செழிப்பாக வளர அதற்குதவிடவே,

பாய்ந்தோடும் நீர் நிலைகள் 

என்றும் நிறைந்திருக்க,

விண்ணில் பிறந்து 

மண்ணில் தவழ்ந்து படைத்தவனின்,

விருப்பத்தை நிறைவேற்றும் 

மழைத் துளிகள்........

ஆனால், நீ அந்த மழை 

மட்டுமல்ல........


கடலின் கருணையும்.

நிலவின் பரிவும்,

தென்றலின் பொறுமையும்,

பூக்களின் தியாகமும்,

மழையின் பாசமும்,

குடக்கூலி எதுவும் 

கேட்காமல்...

உன்னிடம்.... 

என்றோ.... 

குடியேறி விட்டனவே.....!!!!. 


இவையணைத்தும் ஒன்றிணைந்து,

இயல்பாய் தோற்றுவித்த,

இயற்கையின் பொக்கிஷம் நீ.....

இறைவனின் இனிய படைப்பு நீ......

இவ்வுலகில் நீ அன்றும், 

இன்றும், என்றும்,

இன்றியமையாதவள்....!!!!.