Showing posts with label கவிதை.. Show all posts
Showing posts with label கவிதை.. Show all posts

Thursday, January 11, 2024

விதியின் சாகசம்.

பாதையை காட்டி பயணிகளை
பயணிக்க பணித்தான் ;
படைத்தல் ஒன்றையே அந்த 
பாழும் விதியிடம்
பரிசாக பெற்ற " படைத்தவன் ”


அண்டத்தையும், அகிலத்தையும்,
அழகாக, அமைத்து காட்டினான்.
அற்புதங்கள் பலவும் அதில்
அதிசயிக்கவே  நிகழ்த்தி வைத்தான்.


கோடி ஜீவ ராசிகளுக்கும் உயிர்,
தேடியே கொடுத்து 
உலாவச் செய்தான்.
பிழைப்பதற்கும் வழி காட்டினான், மனம் பேதலிக்கவும், வழி வகுத்தான்.


பந்தத்தையும், பாசத்தையும், இரண்டு
பகடை காய்களாக்கி, அதை
பாழும் பிறவிகள், உருட்டி 
பிரட்டி சூதாடுவதை
பார்த்து, பார்த்து ரசித்தான்.


இருப்பினும், இறுதியில்
இறப்பெனும், நிதர்சனத்தை,
விதியிடம், கொடுத்து விட்டு
வேதனையின்றி விலகி நின்றான்.


விதி அவனை படைத்ததா? அல்லது
விதியை அவன் வகுத்தானா?
விளங்காத கேள்விகளில்,
விடை தெ(பு)ரியாத, பதில்களில்,


தலைவிதியை ச(பி)கித்து கொண்டு,
தடுமாறி, தத்தளித்து, 
தவித்து கொண்டு,
படைத்தவன் காட்டிய வழியில்,
கண் மூடி, அவன் கட்டளைகளுக்கு


பய(ணி)ந்து, கடமை தவறாது,
அப்பாதையில், பயணிக்கும்
அப்பாவி பா(தை)த சாரிகள்...!! 
இன்னல்கள் பல பட்டாலும்,
இவர்களின் பிரிவுகள் இரு விதம்.


விதியிடம் அடி வாங்கி வெ(நொ) ந்து  
விருப்பமின்றி எழுந்தோர்க்கு,
விளங்காத கேள்வி….. "இந்த  அதியச
விநோதங்களையெல்லாம்,
விளைவிப்பவன் யார்? அவன் நம்
விரோதியா... இல்லை....நம் 
விருப்பமான நண்பனா??" 

விரும்பிய நண்பனானல், ஏன்
விரோதி போல் 
விலகி நிற்க வேண்டும்.
நண்பனல்லாதவனை, நமக்கு 
நன்மை நினைக்காதவனை, எவ்விதம் நாம்
நட்புடன், நினைக்க தோன்றும்.
( இப்படி ஒரு சாரார் )


விதி வகுத்துத் தந்த 
அதிர்ஷ்டங்களில்
அத்தனை இன்பங்களையும்
அள்ளி பருகுபவர்களுக்கு
ஆண்டவன் ஒரு அரிய வரப்பிரசாதம்’
அவனன்றி ஒர் அணுவும் அசையாது,
அவனன்றி எதுவும் நடக்காது என, 
அவன்பால், அசைக்க முடியாத 
அசாத்திய நம்பிக்கை.  
( இப்படி ஒரு சாரார் )


இவ்விதம் பிரிவுகள் இரண்டாயினும்,
இன்னல்களை பல அருளும் அந்த,
இறைவனின் இருப்பிடத்தை அறிய பல வகையான 
புராணங்களை புரட்டி பார்த்தால்,
புரண்டிருக்கிறான்...!! "அவனும்" விதியிடம்.

பாபங்களையும், அதன் விளைவான 
பல சாபங்களையும்
சந்தித்திருக்கிறான்,
சகித்திருக்கிறான்
விதைத்தலை ,விதியிடம்
விரும்பி பெற்றவன்...! 
அந்த விசுவாசத்திற்குதான் ,
அதற்கு பிரதிபலனாக,
பரிசாக பெற்ற பாவத்திற்காக,,
அறுவடை அத்தனையையும் 
ஆதாயமேதுமின்றி மொத்தமாக,
அதற்கே அள்ளி கொடுத்து
விட்டான் போலும்...! 


விதியின் வஞ்சனையின்,
விளைவால், அந்த விதியிடம்,
அத்தனை உ(ப)யிர்களும், 
ஓர்நாள் சென்றடைந்து 
மடியத்தான் போகிறது.

படைத்தவனையே தொடருமந்த 
விதி, படர விட்டவனால், 
படர்ந்திருப்பவைகளை
படராமல், சற்றும் தொடராமல், 
விட்டு விடுமா என்ன.? 
விதிக்கு முன்னால் யாரும்
விதி விலக்கல்ல போலும்...!!!! 
விதி வலியதுதான்..!! 


இது மன வேதனையில் எப்போதோ உருவானது.வலையுலகிலும் என பக்கத்தில் பதிந்திருக்கிறேன். பத்து வருடங்கள் கழித்து மீண்டும் உங்கள் அனைவரின் பார்வைக்காகவும்...! கருத்துக்கள் எப்போதுமே நேர், எதிரானதுதான். 

நாம் அனைவரும், ஒத்த வடிவமுடைய மனிதர்கள் என்றாலும், நம்முள்ளிருக்கும் மனங்கள் வெவ்வேறானதுதானே...!! கருத்தை தருவோர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வழக்கப்படி எதிர்பாராத சூழ்நிலைகளினால் பதில் தர தாமதமானால், பொறுத்துக் கொள்ளும்படியும் உங்களனைவரிடமும் விண்ணப்பித்துக் கொள்கிறேன். 

Sunday, March 8, 2020

பெண்மணியின் பெருமைகள்.

நிலா நிலை குலைந்து நின்றது.. !
"இந்நிலமாது என்னொளியை, எங்கணம்
தன்னொளியாய் தக்க வைத்து கொண்டாளென்று!!!!" 

நீள்வீச்சு கதிரவன், தன் நிம்மதியை,
நீண்ட பெருமூச்சொன்றில், தொலைத்தது.
"தன் அந்திச் செம்மை எவ்வாறு
தன் நிலை சிறிதும் மாறாது,
தன்னிடம் எதுவும் கேளாது ,
தன்னை தவிக்க வைத்து விட்டு, இந்த
தளிர் மேனியிடம் அடகாகப் போனதென்று!!!!"

வானம் வியந்து போனது! "தான்
வாரியிறைக்கும் வண்ண நிறங்களை,
வார்த்தைகளில் அடங்காத, தன்
வர்ண ஜாலங்களை, வெகு விரைவில் , இவ்
வஞ்சிக்கொடி  எப்படி தன் வசப்படுத்தி கொண்டாளென்று!!!!"

நட்சத்திரங்கள் சற்றே நாணி கோணியது.! 
"நானறியா பொழுதினிலே, நகருமென்னை
நங்கை இவள் சிறிதும் நலுங்காமல்,
காலங்காலமாய் கண் சிமிட்டி, மானிடரை
கவர்ந்திழுக்கும் தன் ஜொலிப்பை,
கண்ணிமைக்கும் நேரத்தில், சிறிது
கண்ணயர்ந்த வேளையிலே,
கவர்ந்து கொண்டது எப்படியென்று!!!!" 

 பெண்ணே ! "உன்னை 
இப்படி இயற்கையோடு இணைத்து,
இயன்ற வரை உனை இகழாமல், 
இன்னும் அனேக விதமாக
பூக்களுடனும் இணைத்து பாக்களாய்,
புகழ வைத்து, இறுமாப்புற செய்தும்,
புதுமைப்பெண்ணாய், நீ புவனத்தில்,
புதுத்தோ் ஏறி புறப்பட இயலாமல்,
புதுமலராகவே உதிர்ந்து நின்றது." 

            அது அந்தக்காலம்!!!!

" இன்று இமயம் தொட்ட குளிர்ச்சியில்,
இதயம் நிறைத்த மகிழ்ச்சியில்,
திக்கெட்டும் கொடி நாட்டி, வெற்றியுடன்,
திக் விஜயம் செய்து வருவது..." 

           இது இந்தக்காலம்!!!!

" இனி இயற்கை எப்பொழுதும்,
இயற்கையாகயிருக்கட்டும்.. ! 
இயற்கையோடிணைக்கும்
இந்த இனிய மதுவுக்கு,
வசப்படாத வண்டாக வளர்ந்து,
வானில் வட்டமிட்டு வருகிறவள்….. நீ….!" 

" படிப்பிலும், பணியிலும்,
பாரினில், சரிபாதியாக,
பரிமளித்து, பட்டங்கள் பல சுமந்து, புது
பரிதியாக பிரதிபலிப்பவள்……நீ….!"

" கடமையையும், கருணையையும், இரு
கண்களாகக் கருதி வீட்டின்,
கண்மணி இவளென கருதும்,
கணிப்பை உருவாக்கியவள்…..நீ…..!" 

" துன்பங்களை, துச்சமாக்கி,
துயர்களை, துகள்களாக்கி,
தூரத்தள்ளி, வாழ்க்கையின்,
தூணாகி போனவள்……நீ…..!" 

" நாட்டுடன், நன்றாய் வீடும்,
நலங்கெடாது சிறப்பாய் வாழ,
நன்மைகள் பல புரிந்து, பாரதியின்,
நல்லதோர் வீணையானவள்…..நீ…..!" 

" காலத்தோடிணைந்த, கணினியில்,
காலம் நேரம் பார்க்காமல், கவனமான
கருத்துடன் காரியமாற்றி,
கணினிப்பெண்ணாக உலா வருகிறவள்……..நீ….!"

"இனி இவ்வையத்தில்,
வாழ்வாங்கு காலம் 
வாழட்டும்  நின் புகழ்,
வளரட்டும் நின் பணி....!"

#########################################################################

மங்கையராய்  பிறந்து 
மாதவம் இயற்றிடும் 
அனைவருக்கும்  மனங்கனிந்த 
மகளிர் தின நல்வாழ்த்துகள். 

இது இன்றைய மகளிர் தினத்துக்காகவே பதிவிடவும்  காத்திருந்த  பழைய பகிர்வு. ரசித்தமைக்கு அனைவருக்கும் என் நன்றிகள். 🙏.