Showing posts with label காதல் தினம். பொது.. Show all posts
Showing posts with label காதல் தினம். பொது.. Show all posts

Wednesday, February 14, 2024

பறவையின் சுதந்திரம்

சுதந்திரம் என்றாலே பொதுவாக பறவைகளைத்தான் மனிதர்களாகிய நாம் ஒப்பிடுவோம். "இந்தப்பறவை மாதிரி சுதந்திரமாக இருக்கனும்.. இந்தப் பறவைகளைப் பார்..! வானத்திலே தன் மனம் போன போக்கில் பறந்து திரிந்து எப்படி  உல்லாசமாக வாழுகிறது. இப்படி நம்மால் வாழ இயலவில்லையே.." என பறவைகளை உவமானபடுத்தி பெருமூச்சு விடுவோம். ஆனால், "ஆட்டுக்கும் வாலை அளந்துதான் வைத்தார் இறைவன்." என்பது போல ஆறு அறிவுகளையும் ஒவ்வொரு இனத்திற்கும் இவ்வளவுதான் எனவும், அளந்ததோடு மட்டுமின்றி இப்படித்தான் வாழவேண்டுமென்ற நியதியையும் இறைவன் தந்துள்ளார். 

பறவையை கண்டான் விமானம் படைத்தான்" என மனிதன் அதனிடமிருந்து சுயநலமாக நம் வசதிக்காக கற்றுக் கொண்டதும் அதிகம்."கிளிக்கு ரெக்கை முளைத்து விட்டது. அதனால் கூட்டை விட்டு பறந்து விட்டது.." என தங்கள் பேச்சை கேட்காத பிள்ளைகளை பெற்றோர் அந்தப் பறவைகளை துணைக்கழைத்து வசை பாடுவதும் அதிகம். ஆனால். பல பறவைகள் புத்திசாலிகளாய் சுயநலமிக்க மனிதனின் உணர்வை புரிந்து கொண்டவையாய் மனிதனை விட்டு விலகிப் போவதும் இப்போதெல்லாம் நடக்கத்தான் செய்கிறது. 

நம் அன்புக்கு கட்டுப்பட்டு நம்முடனே நம்மைக்கண்டதும் பாசத்துடன் ஓடி வரும் போதும், நம் விரோதத்தை புரிந்ததுவாய் நமக்கு தொந்தரவுகள் தராமல் வேறிடம் பார்த்து குடி பெயரும் போதும் அதனின் நல்ல மனதை வெளிப்படையாக  எடுத்துக் காட்டுகிறது. அறிவுகள் அளவென பெற்ற  அதனிடமிருந்து இந்த ஆறறிவு பெற்ற மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் ஏராளம். 

நம் பறவை நேசர் சகோதரி கோமதி அரசு அவர்களின் சமீபத்திய பறவை பதிவுக்கு நான் கருத்து தெரிவிக்கும் போது, இப்படி எதிர் வீட்டில் முட்களை (பிளாஸ்டிக் மாதிரிதான் தெரிகிறது.) வைத்திருக்கிறார்கள் என்று பதிலாக சொன்னதும் அவர் சட்டென மனம் கலங்கி விட்டார்.

இப்போதுதான் புதிதாக கட்டியிருக்கும் அவர்கள் வீட்டில் இந்த புறாக்கள் வந்தமர்ந்து அசுத்தப்படுத்துகிறது என்றுதான் அவர்கள் இந்த ஏற்பாடு செய்துள்ளார்கள். எனினும் அதனுடைய வாழும் இடமான பல மரங்களை அழித்து நம்முடைய சுயநலத்திற்காக, கூட்டு குடும்பத்திலிருந்து பிரிந்து தனித்தனியாக  வசிக்க வேண்டி இப்படி தனி இருப்பிடமாக அமைத்துக் கொள்ள நாமும் முயற்சித்து விட்டோமே எனவும் தோன்றுகிறது. 

இதையெல்லாம் பார்க்கும் போது மனது நொந்தாலும், உயிர்களை படைத்த இறைவன் அனைத்து உயிர்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவிகள் செய்தபடிதான் இருப்பான் எனவும் சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்...! வேறு என்ன செய்வது? 


இப்படி எங்கும் முட்கள், எதிலும் முட்கள் என்றால் எங்குதான் வந்து அமர்வது?
 

இப்படி நாம் ஆசுவாசமாக வந்தமரக் கூட தடையாக ஏதோ வைத்திருக்கிறார்களே என யோசிக்கிறது போலும்...! நம் வேதனைகளை வாய் விட்டு சொன்னாலும் இவர்கள் புரிந்து கொள்வார்களா எனத் தெரியவில்லையே...!! என மனதில் நினைத்தபடி அமர்ந்துள்ளது. 

மற்றொருவர் வீட்டை படம் எடுப்பது மிகத் தவறு. இந்தப் பறவைகளின் கூடு... அதன் வாழுமிடங்கள்... என அது நம்மோடு இணைந்து வருவதாலும், கோமதி அரசு சகோதரியின் பறவைகள் பதிவை படித்த தாக்கத்தினாலும், இப்படி படங்கள் எடுத்து விட்டேன். (இன்னும் நிறைய கோணத்தில் அது வழக்கப்படி வந்தமர்ந்த இடங்களில் எல்லாம் , இந்த முட்கள் வைத்தப்பின் எப்போதும் போல் வந்து அமர இடமின்றி தவித்த அந்த புறாக்களோடு எடுத்திருந்தேன். அவற்றையெல்லாம் அழித்து விட்டேன்.) ஏனெனில் இதற்கே இறைவன் என்னை மன்னிக்க வேண்டிக் கொள்கிறேன். அதோடு அவர்களும் (அந்த மற்ற வீட்டு உரிமையாளர்களும் மானசீகமாக ) மன்னிக்கட்டும்.


இப்போதும் சற்று ரிலாக்ஸாக அவ்வப்போது இவ்விரண்டும் வந்து முட்கள் இல்லாத இடமாக அமர்ந்து பேசி மகிழ்கிறது. 


"என்ன இடர்கள் வந்தாலும், நாம்  ஒருவருக்கொருவர் துணையாக வாழும் வரை பிரிவென்பதே இல்லாமல் இப்படியே சேர்ந்து இருப்போம்..." எனக் கூறி மகிழ்கிறதோ?


"இப்படி போட்டோக்கள் எடுத்து எங்களுக்கு என்ன நியாயங்கள் கிடைக்கப் போகிறது?" என்பதுதான் எங்கள் கேள்வி. இறைவன் இவ்வுலகில் பிறந்த உயிர்களுக்கு ஏதோ ஒரு வகையில் வழி காண்பித்து  துணையாக இருப்பதைப் போல எங்களுக்கும் துணையாக இருப்பார் என நம்புகிறோம். நீங்களும் எங்களுக்காக பிரார்த்தனைகள் செய்து கொள்ளுங்கள். அது போதும்.." என்கிறதோ நம்மைப் பார்த்து. 

இன்றைய தினத்திற்காகவும் இந்தப்பதிவு. பொதுவாக காதல் என்ற சொல் பலருக்கும் தவறாகத் தெரிவதுதான். அந்த சொல்லிற்கு அன்பு, பாசம், பந்தம் போன்றவைகளும், பக்க வாத்தியங்கள் போல் பக்க பலமாக இருந்துதவி செய்கின்றன. இந்தச் சொற்களின் அர்த்தங்களை புரிந்து கொண்டால், காதல் என்பது ஒரு அருமையான இசை. இந்த பாசம் மிகுந்த பறவைகளை பார்க்கும் போது எனக்கு அப்படித்தான் தோன்றியது. வாழ்க இந்த காதல் புறாக்கள். 

இதைப்படிக்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏.