கிருஷ்ணாய நமஃ..
"அநேகமாக எல்லோருமே கிருஷ்ண ஜெயந்தி பதிவை போட்டு விட்டார்கள். நீதான் தாமதம்.." தினமும் பார்க்கும் போதெல்லாம் கிருஷ்ணர் குற்றம் சொல்வது போல் ஒரு பார்வை பார்க்கிறார்.
"கிருஷ்ணா என்னை மன்னித்து விடு.. ஏதேதோ காரணங்களால் தாமதம்.. உனக்கு தெரியாதா? என்னுள் இருந்து எல்லாவற்றையும் நடத்தி வைப்பவனே நீதானே..!" பதிலாக என் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவனாய், " சரி. .! சரி...! நான் சொல்வதை எனக்கே திருப்பியா?ஏதோ மனிதர்களாகிய உங்களுக்கு புத்தி சொல்லப் போக என்னவோ, எல்லாவற்றிலும் என் பேச்சை மீறாத மாதிரியும், கிருணார்ப்பணம் என்று ஒரு சொல் சொல்லி கழற்றி விடுகிற மாதிரி ஒரு பாவனை....!" கிருஷ்ணர் மீண்டும் ஒரு குறும்பு பார்வையுடன் தொடர்ந்தார்.
" பகவானே...! என்ன இது அபச்சாரம்.. ! உன் பேச்சை மதிக்கிற மாதிரி ஒரு பாவனையா...! உன்னைத்தானே சதா சர்வ காலமும் நினைத்துக் கொண்டே இந்த மானிடப் பிறவியில் உழலுகிறோம். எந்த ஒரு கெட்ட செயலையும், நல்ல செயலையும் உன்னை நினைத்து கிருணார்ப்பணம் என்று சொல்லி உன்னிடம் ஒப்படைத்தால், முறையே அது பன்படங்காக பெருகி, பாவ புண்ணியங்கள் எங்களையே வந்து சாரும் என்பது நீ அறியாததா? அப்படித்தானே இந்த அர்ப்பணிப்பு அந்நாளிலிருந்து உதயமாகி வந்தது..." நான் படபடவென உணர்ச்சியில் தத்தளித்து மன்னிப்பு கேட்பதை ரசித்தபடி கண்ணன் மீண்டும் குறும்புடன் முறுவலித்தான்.
" பார்த்தாயா...! மறுபடி நான் சொன்னதையே என்னிடம் பிரசிங்கித்து கொண்டு...! ஆக மொத்தம் எனக்கு ஒன்று புரிந்து விட்டது.."என்றார். மீண்டும் அதே குறும்பு...
"என்ன கண்ணா.... என்றவளிடம், குருவுக்கு மிஞ்சிய சீடர்களாய்... நீங்கள் என்னை விட நன்றாக பேசக் கற்றுக் கொண்டு விட்டீர்கள். சரி. . ! நான் போய் வருகிறேன். நீ என்னை உன் நட்புகளுக்கு பார்வையாக்குகிறாயா என்பதை நான் மீண்டும் பார்க்க வருவதற்குள் என் அடுத்த பிறந்த நாள் வந்து விடும் போலிருக்கிறது." என்றவர் கண்களில் அதே சிரிப்பு.
சரி.. இன்று கிருஷ்ணருக்காகவேனும் எப்படியாவது பதிவை பகிர வேண்டுமென உடனே மெனக்கெட்டு எழுத ஆரம்பித்து விட்டேன். அதுவும் இன்று முதன் முதலாக மாறி வைத்திருக்கும் பிளாக்கர். முதலில் வந்திருக்கும் மாறுதலில் அவனைத் தொழுது எழுதுவதே ஒரு நல்ல செயல்தானே..! என்ன சொல்கிறீர்கள்...!
தன் அழகான பாதங்களை பதித்து மெள்ள மெள்ள வீட்டினுள்ளே நடந்து வந்த கிருஷ்ணர். பூஜையறைக்கு வந்தவர் அலங்கரித்து வைத்திருந்த தன்னுருவை கண்டதும் தன்னுள்ளே தானே ஐக்கியமாக்கி கொண்டபடி பூஜைகளை ஏற்றுக் கொண்டு எனக்குப் பிடித்த படசணங்கள் எங்கே என்றபடி ஒரு பார்வை...
" அட... இவ்வளவுதானா..! முன்பெல்லாம் நிறைய இருக்குமே என நான் குறை கூற மாட்டேன். நீ அன்புடன் அழைத்து ஒரு கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அவல் தந்தாலும் ஏற்றுக் கொள்வேன்... சந்தேகமாயிருந்தால் ருக்மணியிடம் கேட்டுப்பார்." அதே.. அதே . . சிரிப்புடன் என் மனதை கொள்ளையடிக்கும் குறும்புக்கார கிருஷ்ணர்..
இப்போதுதான் திருப்தியாக உள்ளது. நீ செய்து தந்திருக்கும் பட்சணங்களை விட, என்னையும், என் பூஜையையும், என் பிறந்த நாள் பரிசாக இந்தப் பதிவையும் அனைவரின் பார்வையாக்கி யிருக்கிறாய்... பார்.. இதை விட மகிழ்ச்சி எனக்கேது..? ஏனென்றால் உங்கள் மகிழ்ச்சியில்தான் எப்போதும் நானிருக்கிறேன்." என்கிறான் அதே சிரிப்புடன் அந்த யசோதை பாலகன்.
அவனை பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் ஒரு சந்தோஷம் எனக்குள்ளும் அப்போது எழுந்தது. உங்களுக்கும் மகிழ்ச்சிதானே...! அவன் நம் அனைவரின் மகிழ்விலுந்தான் இருக்கிறான் என்பதை அவனே சொன்ன பின் அதுதானே உண்மை.... என்றும் சாஸ்வதம்...
ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ.. ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ.. ஸ்ரீ கிருஷ்ணாய நமஃ...
எனதருமை சகோதர, சகோதரிகளுக்கும் ஸ்ரீ கண்ணனுடன் சேர்ந்து இந்தப்பதிவு பிடித்திருக்கும் நினைக்கிறேன். உங்களுக்கும் பிடித்து படித்தப் பின் கருத்திட வருபவர்களுக்கு என் அன்பான நன்றிகள். 🙏. 🙏. 🙏. 🙏.