Sunday, November 5, 2023

இடுக்கண் வராததற்காக நகுக. ...

"இடுக்கண் வருங்கால் நகுக.."என்பது ஐயன் வாக்கு. துன்பங்கள் வரும் போது அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, ( இந்த இடுக்கண்ணினால், உடலை விட உள்ளம் எவ்வளவு ரணமானாலும், அதை சுலபமாக கடத்திக் கொண்டு கடந்து வருவதைத்தான் "சாதாரணம்" என்ற சொல் உணர்த்துகிறது.) ஒரளவு சிரித்த முகத்தோடு (மனபான்மையோடு) இருந்து விட்டால், மனதின் பாரங்கள் நம்மை அதிகமாக அழுத்தாமல் அது பாட்டுக்கு தானாகவே வந்த வழியோடு அகன்று விடும் என்பதே அதன் பொருள். 

இந்த துன்பங்கள் என்பது பொதுவாகவே சராசரியாக மனிதர்களின் வாழ்வில் வருவது இயற்கைதான். ஒரு மனிதர் இன்பங்களை மட்டுமே அனுபவித்து கொண்டிருந்தால், அவர்களுக்கு அவர்களின்  வாழ்வு போரடித்து விடுமென்றுதான், இறைவன் துன்பங்களையும் நடுநடுவே சற்று எட்டிப் பார்க்க வைக்கிறார். இரண்டாவதாக அப்போதுதான் "அவன்" நினைவும் ஒரு மனிதருக்கு இருந்து கொண்டேயிருக்கும் என்ற உறுதியான எண்ணத்தினால்தான். இல்லையெனில், "அவனை"ப்பற்றிய நல்ல சிந்தனைகள் "அவன்" படைத்து உருவாக்கிய மனிதரின் மனதில் உதிக்காமலே போய்விடும் என்னும்படியான அப்பழுக்கில்லாத சுயநலத்தினால், தான் படைத்த மனிதரை  பற்றிய பச்சாதாபத்தினால், ஒரு மனிதருக்குள் நற்சிந்தனைகளை கற்றுத்தர/ மற்றும் தோற்றுவிக்க... (அதில் "அவனே" சிலசமயம் சோர்ந்து தோற்று விடலாம்.:)))).) இப்படியான பல காரணங்களையும் கூறலாம்

ஒரு நல்வழிக்காக நெருங்கிய உறவில் நம் பேச்சை ஒருவர் கேட்கவில்லையெனில், "சாம, தான, பேத தண்டத்தையும் உபயோகித்து விட்டேன்.இன்னமும் அவர் நல்லதிற்காக  நான் பேசுவதை காது கொடுத்து கேட்கவில்லை." என அவரைப்பற்றி முடிவில் அங்கலாய்ப்போம். 

சாம, தான, பேத, தண்டம் என்றால், எனக்கு தெரிந்தவரை ஒரு விளக்கம் சொல்வேன். 

சாம வேதம் இனிமையானது. இறைவனை இனிமையான பல கானங்கள் கொண்டு கூறிப் புகழ்ந்து மயக்குவித்து பாடி நம் வேண்டுதலுக்காக, உள்ளத்தின் மகிழ்வுக்காக ஆராதனை செய்வது. அதைப்போல் நம் சொல் பேச்சை கேட்பதற்காக, எதிராளியை புகழ்ந்து பேசி அவரை நயமாக நம் பேச்சினால் மயக்கி நம் பேச்சை கேட்க வைப்பது. 

தானம் என்றால் நம்மால் இயன்றதைச் வாங்கித் தந்து அந்தப் பிறரை மகிழ்விப்பது. அதன் மூலமாவது அவர் நம் பேச்சுக்கு கட்டுப்படுகிறாரா என சோதிப்பது. 

பேதம் என்றால், நமக்கும் எதிராளிக்கும் இடையே பல அபிப்பிராய பேதங்களை வரவழைத்து அதன் மூலம் நமக்கு அவரை சாதகமாக திசை திருப்ப வைத்து பின் பக்குவமாக பேசி சமரச சமாதானங்களின் மூலம் அவரை நல்வழிப்படுத்துவது.

தண்டம் என்றால் இத்தனைக்கும் நமக்கு வசப்படாதவரை ஒரு அடியாவது (நம் கைகளினாலோ, இல்லை ஒரு கோலினாலோ அடித்து விடுவது, இல்லை அடிப்பது போல் பாவனை செய்வது.) வைத்து விடலாம் என அடிக்கும் நிலைக்குப் போவது. அதிலாவது அவர் திருந்தி நாம் சொல்லும் பல நல்ல வழிகளுக்கு உடன்படுகிறாரா என்று முயற்சிப்பது. அதாவது நம் கோப எண்ணங்கள் இந்த நாலாவது கட்டத்தில் நம்மையும் கேட்காமல், இறுதியில் தன் முடிவுக்கு தலை வணங்கி, நம்முள் உதிப்பது. 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். எவ்வளவு செல்வம் இருந்தாலும், அங்கு ஊழ்வினைகளின்பால் எழும் நோய்கள் ஏதுமின்றி உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனதும், அதை சார்ந்துள்ள எண்ணங்களும் நன்றாக இருக்கும். 

ஒரு தலைவலி அல்லது காய்ச்சல் வந்தாலே அதன் மூலம் படும்பாடு அது வந்தவர்களுக்குத்தான் தெரியும். அதனால்தான் "தலைவலியும், திருகு வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்" என்ற அனுபவ பழமொழி உருவானது என்பதையும் யாவரும் அறிவோம். 

ஒரு காய்ச்சலே அதன் பல விதங்களில மனிதரை அவதிக்குள்ளாக்கும் போது, அம்மை நோய் எத்தனைப்பாடாக படுத்தும் என்பதும் யாவரும் அறிந்ததே...! 

அந்த காலத்தில் ஒரு வீட்டில் ஒருவருக்கு அம்மை நோய் கண்டால், அந்த வீட்டில் உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார்கள். அம்மனை மனதார வழிபடுவது. "அவள்" பத்திரமாக கருணையுடன்  நோயுற்றவரை விட்டு இறங்கி செல்ல வேண்டுமென பிரார்த்திப்பது. அம்மனின் அடையாளமாக வேப்பிலையை (வீட்டு வாசல் நிலைப்படியில் கொத்தாக வைப்பது முதல்) பக்தியுடன் உபயோகிப்பது, அந்த நேரத்தில், வீட்டிலுள்ள மற்றவர்கள் வேறு எந்த வீட்டுக்கும் செல்லாமல் இருப்பது,. அக்கம் பக்கம் உறவாக இருப்பினும், அவர்கள் வீட்டிலிருக்கும் உணவுகளை அம்மை போட்டவருக்கு கொண்டு வந்து தராமல் இருப்பது, வீட்டில் அம்மை போட்டவர்களுக்கு தலைக்கு தண்ணீர் விடும் வரை நமக்கு நெருங்கிய உறவினர்களுக்கு கூட கடிதம் மூலமாக செய்தியை தெரிவிக்காமல் இருப்பது, தம் வீட்டில் செய்யும் உணவுகளையே கவனத்துடன் எண்ணெய் அதிகம் விடாமல், கடுகு மிளகாய் தாளிக்காமல், காரம், புளிப்பு, உப்பை குறைத்து, பழங்களுடன், காய்கறிகளையும், மற்ற உணவுகளையும், சூடான நிலையில் இல்லாமல், நன்கு ஆறிய பின் அவருக்கு சாப்பிட தருவது, வாசனைகள் நிறைந்த பூக்கள், சோப்பு, முகப்பூச்சுகளை எண்ணெய் போன்றவற்றை வீட்டிலுள்ள மற்றவர்களும் உபயோகிக்காமல், இப்படியெல்லாம் ஒரு விரதம் மாதிரி, கவனத்துடன் இருப்பதென, எத்தனை எத்தனை கண்டிப்புக்கள்... .! இன்னும் "அவள்" மேல் வீட்டிலுள்ளவர்கள் கொள்ளும் ஆயிரம் நம்பிக்கைகளுக்காக  அவரை (அம்மை நோய் கண்டவரை)  அந்த அன்னை கண்டிப்பாக பத்திரமாக  நலமடைய செய்து விடுவாள். 

இப்போது எல்லாவற்றிறகும்,  மருந்து மாத்திரை என வந்து விட்டது போல், இதற்கும் வைத்தியங்கள் என்ற விஞ்ஞான வளர்ச்சி வந்து விட்டது. அவரவர் மன இயல்புபடி காலங்களின் மாறுதல்களுக்கு மக்கள் அடியணிய ஆரம்பித்து விட்டனர். அக்கால சில  திரைப்படங்களில் கூட இந் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி நம்முள் ஒரு தெய்வீக பயபக்தியை ஏற்படுத்தியிருந்தும், விஞ்ஞானம் இயல்பாகவே வென்று விட்டதோ என்ற ஐயம் சிலசமயம் நிறையவே  வருவதை தடுக்கவியலவில்லை. 

என்னடா இவள்..! சம்பந்தமில்லாமல் ஏதேதோ எழுதுகிறாளே என எண்ணம் வருகிறதா?  வேறு ஒன்றுமில்லை...! இந்த கொரோனா வந்து முடிந்த பிறகு, குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் செல்வதில் ஒரு பிணக்கு வந்து விட்டது. ஆனால் அதன் பின் வந்த ஒரு வருடத்தில் குழந்தைகள் பழைய பழக்கத்திற்கு வந்து விட்டனர். சிலர் மனதில் ஏதோ சுணக்கமுடன் பெற்றோருடன்  ஒத்துழைக்க தயங்குகின்றனர். அது நம் வீட்டு குழந்தையாய் இருக்கும் போது நம் மனதுக்கும் தீர்க்க முடியாத ஒரு வேதனைதான். தினம் தினம் ஒரு வகையான  போராட்டந்தான்..!  என்ன செய்வது? "அவன்" தரும் பயன்களை அனுபவிக்கத்தானே இந்தப் பிறவி...! அதில் சிறிதேனும் நன்மை பயக்கும் வண்ணம் மாறுதல்கள் தந்து  விட தினமும் "அவனிடமே" நிறைய பிராத்தனைகள்.. என மூன்று மாதங்களாக நாட்தோறும் க(ந)டந்து வந்த/ வரும்  எங்கள் வாழ்வில், அது  போதாதென்று, இங்கு வந்திருந்த பெரிய மகனுக்கும், அவருக்கு சற்றே குணமாகும் தருணத்தில், அடுத்து மகளுக்கும், அன்றே அவள் மகளுக்குமென அனைவரும் அம்மை நோய்க்கு    (chickenpox), ஆளாகி, அவர்கள் பத்து, பதினைந்து நாட்களாகும் மேலாக  படும் அவஸ்தைகளையும் பாரென்று இறைவன் கட்டளையிட வாழ்வே மாயமென்ற சிந்தனைகள் வலுப்பெற்று தத்தளித்த காலங்கள் இப்போதும் மறக்க முடியாத காலங்கள் ஆகி விட்டன.

இதில் உலகமாதா அன்னை வீட்டில் இருப்பதை கண்டு, வருடந்தோறும் கலகலப்பாக வீடுகள்தோறும் வந்து நம்முடைய உபசரிப்புகளை ஏற்கும் கடவுளார்களாகிய, ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ விநாயகர் என இந்த தடவை எவரும் எங்கள் வீட்டிற்கு வரவில்லை.  

இதை நான் உடனே எழுதும் (இதையும் அப்போதே எழுத ஆரம்பித்து இப்போதுதான் முடிக்கிறேன்:))  ) போதிருந்த மன இறுக்கத்திலிருந்து மீண்டு இப்போது இங்கு  (பதிவுலகிற்கு) வந்தபின் சற்றே குறைந்துள்ளதெனினும், இன்னமும் இயல்பாக இருக்க, இயல்பாக எப்போதும் போல் நீ.. ண்.. ட கருத்துரைகளுடன் அனைவரின் பதிவுகளுக்கும் உடனே வர இயலவில்லை. (அப்படியும் நீண்ட கருத்துக்களுடன் வரத்தானே செய்கிறீர்கள் என நீங்கள் அனைவரும் மனம் அலுத்தபடி நினைக்கலாம். :))) மன்னித்துக் கொள்ளுங்கள். அது என் மாற்ற முடியாத ஒரு பழக்க தோஷமாகி விட்டது.) இதில் எழுதி வைத்து இன்னமும் முடிக்காமல் இருக்கும் பல பதிவுகளும், எழுத நினைத்திருந்த பல பதிவுகளாகிய எழுத்துக்களும், என்னுடனேயே தங்கி விட்டன./ தங்கி கொண்டிருக்கின்றன. ஆனால், குறிப்பாகச் சொன்னால் படிக்கும் அந்த "இடுக்கண்"களிலிருந்து நீங்கள் எல்லோரும் கொஞ்ச காலமாக தப்பி விட்டீர்கள்தானே:))) அதனால்தான் இந்தப் பதிவுக்கு இந்த  தலைப்பு..:)))) 

இருப்பினும், இந்த மாதிரி எப்பவாவது நானும் வருவேன் எனவும் . (அனைவரின் சிரிப்பிற்கும் இடையூறாக) சொல்லிக் கொள்கிறேன். ஏனென்றால், பதிவுலக நட்புகளிடம் இப்படி மனம் விட்டு பேசினால், அதற்கிணையானது வேறு ஒன்றுமில்லை அல்லவா? வலையுலகில் இப்படிபட்ட சிறப்பான நட்புகளை தந்ததற்கே நான் தினமும் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.🙏. 

நடுவில் எல்லோருக்கும் வீட்டு விஷேடங்கள் (கிருஷ்ண ஜெயந்தி, to சரஸ்வதி பூஜை) என வந்து கொண்டிருந்ததால், இதையும்  படிக்கும் சூழ்நிலை உண்டாக்கி யாரையும் தொந்தரவு பண்ண வேண்டாமென்று நினைத்தேன்.(அதற்குள் தீபாவளி விரைவில் வர யத்தனமாகி கொண்டிருக்கிறது.) அதனால் நீண்ட மாதங்கள் கழித்து வெளியிட்டிருக்கும்  இந்த என் பதிவை (சொ.க, சோ. க) பொறுமையுடன் படிக்கும் உங்களனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏.