Showing posts with label . நகைச்சுவைப் பதிவு.. Show all posts
Showing posts with label . நகைச்சுவைப் பதிவு.. Show all posts

Sunday, January 23, 2022

முரண்பாடுகள் .

எப்போதும் இந்த சண்டைதானா ....? வர வர இதற்கு ஒரு முடிவு காணவே இயலவில்லையே.. ?" காலையில் எழுந்ததுமே மனம் புழுங்கியபடி ஆழ்ந்த யோசனையில் இருந்தாள் தேன்மொழி.

கண்ணாடியில் தன் முகம்  பார்த்துக் கொண்டிருந்த முத்தரசனின் மனமும் இதே யோசனையுடன் கூடிய  வேதனையில்தான் இருந்தது. 

"அழகாய் அதிலும் அருமையாய்  இருந்த அந்த இளமை காலம் இனி வரவே வராதோ...?"  என ஒரு நொடி தோன்றியதும் , கண்ணாடியில் தன் முகம் பார்க்கப் பிடிக்காமல், மனது வெறுப்பில் சுடு தணலில் நின்ற மாதிரி சுணங்கி கொண்டது. 

"என்ன பேசாமல் காலையிலிருந்து இப்படியே கண்ணாடியை பார்த்தபடி இருந்தால்,  பொழுதுக்கென்று சாப்பிடும் வயிற்று பாட்டுக்கு ஏதாவது வழி செய்ய வேண்டாமா?சமைத்து வைத்ததெல்லாம் ஆறி அவலாக வேறு போகிறது...." முணுமுணுப்பது போல் சொன்னாலும், தேன்மொழியின்  பேச்சு  மாறி சற்றே கோபக் கூக்குரலாய் கேட்டது முத்தரசனின் காதுகளில். 

"என்னை என்ன பண்ணச் சொல்கிறாய்? தினசரி நானுந்தான் நாள் தவறாது உழைக்கிறேன். நம் உடம்பு  சிறிதளவாவது பலமாக இருக்க உன் வாயையும் நீ சிறிது கட்டிக் கொள்ள வேண்டும்...! காலையிலேயே இப்படி நாவுக்கு ருசிக்க செய்ததை சாப்பிடுவதா? அது மட்டுமின்றி பிறகு வேண்டுமென்றே என்னையும், வசை பாடும் வார்த்தைகளால் தோண்டித் துருவி ஆயிரம் ரணமாக்கி, நீயும் உன்னை வீணில் காயப்படுத்தி கொள்கிறாய்.... பிறகு  எதுவுமே அடிக்கடி முடியவில்லையே என்ற புலம்பல் வேறு..! " கொஞ்சம் கோபம் வரப்பார்த்தது முத்தரசனின் வார்த்தைகளில். 

" ஆமாம்... என்னவோ... உன்னைத்தான் நான் எப்போதும் குறை சொல்வதாய்  நீயாக கற்பனைச் செய்து கொள்கிறாய்...! எனக்கென்று வரும் என் வேதனைகளை நான் வேறு யாரிடம் புலம்பி தீர்த்துக் கொள்வதாம்....? " தேன்மொழியின் வார்த்தைகளில் சற்று வேகம் தெறித்ததும், முத்தரசன் வேறு வழியின்றி அடங்கிப் போக ஆரம்பித்தான். 

பதிலுக்குப் பேசப்பேச இப்போதெல்லாம் அது வீண் சண்டையில்தான் முடிகிறது. இறுதியில் வேதனையும் வருத்தமுந்தான் முத்தரசனுக்கு பரிசாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. 

  "சரி.. சரி நம்மிருவருக்குள் இப்போதே சண்டை வேண்டாம். இப்போதைக்கு உன்  வாயாற வேண்டியதை  திருப்தியாக  நீ உண்டு கொள். என்னை மட்டும் தொந்தரவு செய்யாதே...! "

" எப்படி நீயும் என் அருகில் இருக்கும் போது உன்னை மட்டும் விட்டு, விட்டு நான் எப்படி எனக்கு வேண்டியதை சாப்பிடவாம்....? அதுதான் எனக்கும் உனக்கும் கட்டிப் போட்ட வாழ்நாள் பந்தமென்ற ஒன்று இருக்கிறதே...! என்றாள் கடுப்பான தேன்மொழி. 

" அதை நினைத்துத்தான் எனக்கும்  எப்போதும் சங்கடமாக உள்ளது. அன்பான உறவாகவும் இருக்க முடியவில்லை. சட்டென உதறி விட்டும் போகவும்  முடியவில்லை. " அவனின் பதிலாக வார்த்தைகளின் முணுமுணுப்பை கேட்டதும், 

"என்ன சொல்கிறாய் ? சரியாக கேட்கவில்லை. ஏன் இப்படி பல்லை கடித்துக் கொண்டு பேசுவது போல் பேசுகிறாய்..? சொல்வதை சத்தமாகத்தான் சொல்லேன். ..! " என  தேன் மொழி புலுபுலுவென பிடித்துக் கொண்டாள். 

" ஒன்றுமில்லை... ஏதோ என் மனக்குறையை சொன்னேன்... சரி வா.. இருப்பதை, வாய்க்கு ருசிப்பதை சாப்பிடலாம். .. ! என்றபடி, கண்ணாடியை விட்டு நகர முற்பட்டான் . 

"ஆமாம்... இந்தக் மனக்குறைவுக்கொன்றும் தினசரி குறைவில்லை." முகம் வளைத்து சுற்றி முணங்கி கொண்டாள் தேன்மொழி. 

இரவு. ... வீட்டில் அனைவரும் படுக்கையை விரித்து துயல துவங்கி விட்டனர். அமைதியான  அந்த பொழுதில், தேன்மொழி அவன்  உள்ளத்தின் வேதனை முனகல் கண்டு மறுபடி ஆரம்பித்தாள்.  "என்னவாயிற்று? ஏன் இப்படி அமைதியாக தூங்காமல், என்னையும் படுத்துகிறாய் ?" 

"ஒன்றுமில்லை..  காலை, மதிய உணவுகள் கொஞ்சம் ஒத்துக்கல்லை.." 

"ஏன் நன்றாய்தானே இருந்தது. அதில் என்ன பிரச்சனை உனக்கு....? என் நாவுக்கு எல்லாமே சுவையாகத்தான் இருந்தது... எனக்காக எதையும் விட்டுத் தந்துப் போகும் சுபாவம் உனக்கு இப்போதெல்லாம் வருவதேயில்லை..." என்றவள் தன் மனதில் அதன் ருசியை நினைத்தபடி அதில் திளைத்தாள்.  

"என்னையும் சாப்பிட வேண்டுமென்று தொந்தரவு செய்கிறாய்.... உன் ருசி வேறு..... உன் ரசனை வேறு.... உன் ஆரோக்கியமும் வேறு.... உன்னளவுக்கு என்னால் ஒத்துப் போக முடியுமா . என்பதை யோசிக்கவே மாட்டேன் என்கிறாய்...!" என்றான் சிறிது வலி தந்த கடுகடுப்புடன். 

"சரி... சரி.. பேசிப் பேசி உள்ளே அமைதியாய் தூங்கும் நம் குழந்தை மெளனமொழியை எழுப்பி விடாதே.  .. உன்னால் எனக்கும் அவளுக்கும்  இப்போதெல்லாம் தினமும் ஏதோவொரு  பிரச்சனை.... அவள் சின்னவள்தானே என்ற அலட்சியம் உனக்கு என்றுமே அதிகம்.... பேசாமல் வலிகளை பொறுத்துக் கொண்டு தூங்க முயற்சி செய்...!! நாளைக் காலையில் உன் பிரச்சனை எல்லாம்  சரியாகி விடும்..... " என்று உணவின் ருசியோடு ஒன்றியிருந்த தன் நினைவுகளை  கெடுத்து விட்டானே  என்ற கோபம் தலைக்கேற கடுகடுத்தாள் அவள். 

" ஏன் இப்படி கோபப்படுகிறாய்.. ? உனக்கு கொஞ்சமும் ஆறுதலாக பேசத் தெரியாதா? நீ இப்படி இப்போதெல்லாம், தினமும் வெறுப்போடு  பேசியே என் நிம்மதி போய் விட்டது. நம் இளமை கால  ஆரம்பத்தில், நான் பிறரிடம் பேசும் போதெல்லாம்  அடக்கவொடுக்கமாய் என் பின்னால் நின்றபடி அவரவருக்கு தக்கபடி பதில் சொல்வாய்....! அப்போது எனக்குப் பெருமையாயிருக்கும்....ஆனால், வரவர உன் பேச்சுகளில், என் உறவையே விரும்பாதவள் போல் அவ்வப்போது என்னையே ஒதுக்குகிறாய்...!  நான் என்ன சொன்னாலும், என் செயல்களில் ஏதோவோரு குற்றம் காணுகிறாய்..   காரணம்...! இப்போது கொஞ்ச நாட்களாக நான் உன் கண்களுக்கு  முன்பு இருந்ததை விட  அழகற்றவனாகி விட்டேன். இல்லையா..? அதனால்தான் இப்படி.. என்னை அவமதிக்கிறாய்.. இல்லையா... " படபடவென்று சொன்ன அவன் வார்த்தை அழுத்தங்களில், அவன் மனவலி, உடல் வலி இன்னமும் அதிகமானது அவனுக்கு தெரிந்தது. 

" இதற்குத்தான் எவ்வளவு  அழகாக இருந்தாலும், ஆரோக்கியமாகவும்  இருக்க வேண்டுமென்பது.... புரிகிறதா..? அழகாக இருக்கிறோம் என்ற எண்ணத்தில், அப்போது என்னைப்பற்றி சிறிதேனும் கவலைப்படாமல் எல்லோரிடமும் வலிய போய் சிரித்து, சிரித்துப் பேசினாய்..... அப்போது எனக்கு எப்படி வலித்திருக்கும்....?" அவளின் பழைய நினைவை அவன் மீட்டெடுத்து தந்த நினைவலைகளுக்குள் வந்து கோபமாய் சிடுசிடுத்தாள். 

" ஆமாம்.. ஆரோக்கியதிற்கு என்ன குறைச்சல்... உன்னுடன் வந்து வாழ ஆரம்பித்த போது, எனக்கு உன்னை விட ஒரு வயது குறைவு வேறு...!!!! ஆனால், அதற்காக நீயோ, நானோ அன்று குறையேதும் பட்டுக் கொள்ளவில்லை. அழகான திடமான ஆரோக்கியத்துடன்தான்  நம் ஆரம்பகால உறவு தொடர்ந்தது.. . அப்போதெல்லாம்  உன்னுடன் நான் ஒற்றுமையாக வாழவில்லையா?  நம் ஒற்றுமையை பார்த்து நம் குடும்ப உறவுகளும், நம்மை சுற்றியுள்ளவர்களும் புகழவில்லையா? எல்லாம் இத்தனை காலம் நல்லபடியாகத்தான் போயிற்று. ...! ஏதோ.. என் போதாத நேரம்....!! இப்போதெல்லாம்  உன்னிடம் அன்பை இழந்து வெறும் வசவுகளை மட்டுந்தான்  கேட்க வேண்டுமென்ற சாபங்கள் பெற்று வந்து விட்டேன்  போலும்.....!!!!"அவன் தனக்கும் கோபம் எப்போதேனும் இப்படி வருமென நிரூபித்தான்.

" சரி... இப்போது என்ன செய்ய வேண்டுமென்கிறாய்..? உனக்கு என்னுடன் வாழ பிடிக்கவில்லையென்றால், அன்றைக்கு நம் உறவுகள்  சொல்லியபடி,  உன் விருப்பப்படி பிரிந்து என்னை விட்டு வாழ வகை செய்து கொள்... அதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனையில்லை...." அவள் சட்டென்று சற்று விட்டேத்தியாக கூறியதும் அவன் ஒரு நிமிடம் தன்  வலி மறந்து அதிர்ந்துப் போனான். 

" என்ன இப்படி பட்டென்று  சொல்லி விட்டாய்.... .? இதுதான் இத்தனை நாள் நாம் வயது வித்தியாசத்தை பொருட்படுத்தாது சேர்ந்து வாழ்ந்தற்கு அடையாளமா.. .? அதை நினைவில் கொண்டு நீ இத்தனை நாள், வாழ்க்கையில், உன் கோபங்களுக்கிடையே  எத்தனையோ தடவைகள் மரியாதை குறைவாக என்னை அதட்டி பேசிய  போதெல்லாம் கூட நான் இப்படி வருத்தப்பட்டதில்லையே. .. இன்று என்னை கொஞ்சமும் அன்பின்றி, உன் விருப்பப்படி பிரிந்து போவதானால் போ.. என்கிறாயே....நான் விரும்பி வேண்டும் விருப்பமா இது..? " அவன் குரல் உடைந்து அழாத குரலில் குமுறினான். 

" பின்னே என்ன செய்வதாம் ? எப்படியும் ஆயுசு பரியந்தம் நாம் இணையாக சேர்ந்து வாழப் போவதில்லை....இதுவரை நாம், நீ சொல்கிறபடி, ஒற்றுமையுடனும், பிறர் கண்டு பொறாமைபடும்படிக்கும் நல்லபடியாக வாழ்ந்தாகி விட்டோம். எனக்கு மட்டும் உன்னைப் பிரிய ஆசையா? இல்லை, நீ இல்லாமல் சந்தோஷமாக இருப்பேன் என்று நினைத்தாயா.... ? நானும் நிலை குலைந்துதான் போவேன்.. நீயும் முன்னைப் போலில்லாமல், என்னையும், நான் சங்கடமில்லாமல் உண்டு உடுப்பதையும் எப்போதும் குறை கூறிக் கொண்டேயிருக்கிறாய்.... நான் பிறப்பிலிருந்தே இறைவன் எனக்களித்த என் கடமையைத்தான் செய்கிறேன்.  உனக்கு என்னுடன் இருந்து ஒத்துழைத்து வாழ முடியாவிடில், அல்லது, விருப்பமில்லாவிட்டால், இல்லை, உன் வலிகளும், உன் ஆசைகளுந்தான்  பெரிதாக தோன்றும் போது, நம் குடும்ப உறவுகள் சொல்படி கேட்டு அவர்களின்  குடும்ப மருத்துவரை சென்று பார்த்து நாம்  நிரந்தரமாக பிரிவதற்கு ஏற்பாடு செய்து கொள்... என்றேன்...  நான் கூறுவது சரியா, தவறா. . என நீயே இன்று இரவு முழுவதும் விழித்திருந்து யோசித்துப் பார்த்துக் கொள்.." என்று மடமடவென முடிவெடுத்தது போல  பேசிய தேன்மொழி" எனக்கு தூக்கம் வருகிறது.. . .." என்றபடி மெளனமானாள். 

ஒரு நிமிடம் தெறிக்கும் வலிகளையும் பொருட்படுத்தாது திகைத்து நின்றான் முத்தரசன். 

" இவள் பேசுவதும் நியாந்தானே.....!!  உலகில்  வாழும் அனைவரைப் போலவும் தனியாகத்தான் பிறந்தோம்.... தனியாகத்தான் பிரியப் போகிறோம்....உறவுகள் என்றும் நிரந்தரமல்ல.. ..!!! இடையில் வரும் உறவுகளால் பிரிவையும், பாசத்தையும் அதையும் தங்கள் சுயநலங்களுக்காக காட்ட முடியுமே தவிர்த்து நம் தலைவிதியை அவர்களால்  மாற்ற முடியுமோ...? " என்ற வேதாந்த தத்துவத்தில் ஆழ்ந்த முத்தரசன் "கோபத்துடன் பேசினாலும் அவள் பேச்சில் வெளிப்பட்ட உண்மையை உணர்ந்தவனாய், "இனி தன் வலிகளை பெரிதுபடுத்தி, இல்லை, தன் உயிரே கூட போனாலும், அவள் விருப்பத்திற்கு தடைகளை போடக் கூடாதென்ற" உறுதியை எடுத்தபடி, நாளைப் பொழுதில் விடியும் நல்லதொரு விடியலை எதிர்பார்த்து வேறு வழியில்லாமல் வலியுடன் தூங்க முயற்சித்தான். 

வணக்கம் சகோதர சகோதரிகளே. ..

கதையை புரிந்து கொள்ள முடிந்ததோ ..? ஒன்றுமில்லை....!! இப்படி வலிகளுடன் வேதாந்தமும், தத்துவங்களும் சேர்ந்து  இணைந்து நம் மனதில் தோன்றி விட்டால், நம்மால் பொறுக்க  முடியாத வலிகளைக் கூட ஒரளவு பொறுத்தபடி சமாளித்து விடலாம் என்பது என்னை ஆண்டு வரும்  தற்போதைய  காலமாகிய இந்த "பல்லவர்களின் ஆட்சியில்" நான் பெறும்/பெற்று வரும் கீதோபதேசங்கள். அதன்படி  தூங்காத இரவுகளில்,  என் கற்பனை குதிரையுடன் கடிவாளம் ஏதுமின்றி பயணித்ததில் சேர்ந்து  எழுந்த கதை   இவை. ..  .:))  புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். புரிந்து படித்ததற்கு சகோதர சகோதரிகளுக்கு மிக்க நன்றிகள். 🙏. 

இது போன வருடமே என் ப(ல்)ல தொந்தரவுகளின் காரணத்தால் பிறந்த கதை. இந்த கதையை படிக்கும் பொறுமை அப்போது அனைவருக்கும் இருக்க சாத்தியமில்லை. ஏனெனில் அப்போது அனைவருக்குமே ஏதோ ஒரு வகையில் ஏகப்பட்ட தொந்தரவுகள் இருந்து கொண்டேதான் இருந்தன. சரி.. நாமும் இதைப் படிக்கச் சொல்லி தொந்தரவு தர வேண்டாமென இதை தூக்கி கிடப்பில் போட்டு விட்டேன். இப்போது மறுபடியும் பத்து நாட்களாக என்னை மிகவும் இந்த கதையின் விஷயங்கள் தொந்தரவிப்பதால், எங்கோ மறைவில்  கிடந்த  இந்தக்கதையை  அது நினைக்க வைத்து விட்டது. :)))) 

இடுக்கண் வருங்கால் நகைத்துதானே ஆக வேண்டும். அதுவும் நட்புகளோடு சொல்லி மனம் விட்டு சிரிக்கும் போது  வலி தரும் வேதனைகள் குறைந்து விடும் அல்லவா...!! ஆனால் இப்போதும் உங்கள் அனைவருக்கும் தொந்தரவு தருவதற்கு பொறுத்துக் கொள்ளவும். அதெல்லாம் ஒன்றுமில்லையென ஆர்வத்துடன் படித்தவர்களுக்கு என் பணிவான நன்றிகள் . 🙏.