Friday, October 25, 2019

பேய் வகைகள்....

நான்..

" ஆவி என்றால் பேய்தானேப்பா?" என்றான் என் மகன் விவேக்.

ஆமாம்..! அதற்கென்ன இப்போது? அர்த்த ராத்திரியில் இப்படி பிதற்றாமல் படுத்து தூங்கு..! என்றேன் சிறிது கண்டிப்பாக.

இல்லேப்பா.. ! சூடான காஃபி, டீ, ஏன் சமைக்கும் பொருட்களிலிருந்து பிரிந்து வெளிப்படும் புகையை "ஆவி பறக்குது" என்கிறோம். அது போல் உடலிலிருந்து உயிர் பிரிந்தால் அதையும் "ஆவி" பிரிந்து விட்டது என்கிறோம். அதனால்தான் அப்படி பிரிந்த "ஆவிகள்" புகை மாதிரி வடிவில் வந்து உலாத்துகிறதோ?  அதைத்தான் பேய்கள் என நாம் பெயர் வைத்து அழைக்கிறோம்.. இல்லையா? தன் கண்டு பிடிப்பில் அப்பா அசந்து சிக்கி விடுவார் என்ற நம்பிக்கையுடன் அவன் பேசினான்.

எனக்கும் லேசாக கண்ணெதிரே புகைகள் வருவது மாதிரி ஒரு நிமிடம் தோன்றியது.

"வேண்டாம் இந்த ஆராய்ச்சி..!  எப்போதும் இதைப்பற்றிய பேச்சா? இப்போது இரவு நடுநிசியை எட்டிப் பார்க்கிறது. பேசாமல் தூங்கு...! என்னை தொந்தரவு செய்யாதே..! என்றபடி திரும்பி அவனுக்கு முதுகை காட்டியபடி படுத்துக் கொண்டேன்.

இவன் இப்படித்தான்.. !  சிறு வயதில் ஏதோவொரு பயங்கரமான பேய் கதையை நண்பனின் உறவு யாரோ அருமையாக சொன்னார்கள் என என்னிடம் அதைவிட பயங்கரமாக வந்து சொன்னதோடு நிறுத்தாமல். மேலும், மேலும் என்னையும் அந்த மாதிரி கதைகளை சொல்லச் சொல்லி வறுப்புறுத்தினான்.

நானும் குழந்தை ஆசைப்படுகிறானே என்று எனக்குத் தெரிந்த பேய்களை யெல்லாம் உதவிக்கு அருகில் அமர்த்திக் கொண்டு, கற்பனை சாற்றையும் கதையெனும் கலவையோடு கலந்து வைத்துக் கொண்டு ஓரிரு தடவைகள் சொல்லியிருக்கிறேன்.

ஆனால், என் கதையே சிலசமயம் நான் தனியே இருக்கும் போது வந்து பயமுறுத்தி, எக்காளமிட்டு, முகத்தோடு முகம் வைத்து உரசிச் செல்வது போல் பிரமை கொடுத்து தோள் தட்டி ஆரவாரப்படுத்தி, தனியே வீட்டிலிருக்கவும் விடாமல், வீட்டிலிருந்து வெளிப்பட்டு வெளியுலக ஜனசந்தடியில் கலந்த பின் வெறுப்புடன் அடங்கிப் போகும். அது வேறு கதை...!

வளர வளர அவனுடன் பேயும் வளர்ந்தது. (அதாவது பேயைப்பற்றிய சிந்தனைகள்) அதற்கு நம்மைப்போல் கால் உண்டா? கால் இருந்தால், அது நடந்து வராமல் ஏன் பறந்து வருகிறது? இல்லை.. அது பறக்கும் போது நமக்கு இல்லாத அந்த சிறகை விரிக்குமா ?  பேய் வருதற்கு முன்பு ஏன் காற்று பயங்கரமாக அடிக்கிறது? காற்று பேயின் தூதனா? இல்லை விசுவாசியா? இல்லை, காற்றுக்கும் பேயைக் கண்டால் பயமா? அதுதான் அதற்கும் முன்னாடியாகவே ஓடி வந்து அச்சுறுத்தி ஒளிகிறதா?

 ஒரு குறிப்பிட்ட வீட்டிற்கு பேய்கள் வரும் முன் அந்த வீட்டின் கதவுகள், ஜன்னல் கதவுகள், திரைச்சீலைகள் என அனைத்தும் ஏன் படபடக்கிறது? அவற்றுக்கெல்லாம் பேயின் அறிகுறி கண்ணுக்கு புலப்படுமா ? அப்புறம் ஏன் அதையெல்லாம் உயிரற்ற பொருட்கள் எனச் சொல்கிறார்கள்?

இதெல்லாம் அவனிடமிருந்து என்னை தினசரி  துளைத்த கேள்விக் கணைகள்.  பொதுவாக பிறப்பிலேயே" புதன்"  உச்சத்திலிருந்தால் அறிவாளி என்ற ஜோதிடத்தின் கூற்றையும் என்மகன் மெய்படுத்தினான். படிப்பிலும் நன்றாக கவனம் செலுத்தி பள்ளியில் முதன்மையானவனாக விளங்கியதால், அவனை கண்டிக்காது,  அவனின்  "புதனருளால்" வந்த "கேள்விகளுக்கும்" தக்கபடி எனக்குத் தெரிந்த பதில்களைக் கூறி, சிலசமயம் தெரியாத கேள்விக்கு கோபத்தை அடக்கி வாசித்து அவனின் ஆராய்ச்சித் துறையை வளர்த்து வருவதில் நானும் ஒரு பங்காகியும் அங்கம் வகித்தேன்.

இப்போது பள்ளி முடிக்கும் தறுவாயிலும், தொணதொணவென்ற அவனின் கேள்விகள் பழக்கமாக விட்டதெனினும், "இவன் இன்னமும் நன்றாக வளர்ந்து நல்லதொரு நிலைமையை எட்டிப்பார்த்து பிடிக்க வேண்டுமேயென்ற உண்மையான தந்தை பாசம்... வாட்டிப்பார்க்க சற்று கடுமை காட்டி  அவனிடமிருந்து வரும் கேள்விகளுக்கு இப்படி முகம் திருப்பிப் போகச் செய்தன." என் புறக்கணிப்புகள்.

கொஞ்சம் போல மறுபடியும் அவனை திரும்பி பார்த்ததில், அவன் விழித்துக் கொண்டு ஏதோ சிந்தித்து கொண்டிருப்பது புரிந்தது. "விவேக்..! இப்போ தூங்கப் போறியா இல்லையா?  என  மறுபடியும் சிறிது கண்டிப்பு காட்டியதும் அவன் மறுபக்கம் திரும்பி படுத்து தூங்க ஆரம்பித்தான். அவனுடைய கேள்விகளின் தாக்கத்தில், கதவையும் ஜன்னல்களையும் பார்த்தபடி இயல்புடன் வந்த தூக்கமும் வராமல், பேய்களின் வரவை எதிர்பார்த்தபடி  கழித்த எத்தனையோ நாட்களில்,  அன்றும் ஒரு நாளாக  ஐக்கியமாகி சேர்ந்து கொள்ள அன்றைய தூக்கத்தையும் தொலைத்தேன்.

விவேக்...

அம்மா இல்லாத என்னை அப்பா நல்லபடி அம்மாவுக்கும் அம்மாவாக இருந்து பார்த்துக் கொள்கிறார் என்பதை நானும் அறிவேன். நானும் ஏதேதோ அசட்டுத்தனமான கேள்விகள் கேட்டாலும் எல்லாவற்றும் பொறுமையாக பதில் சொன்னபடி என்னையும். என் தேவைகளையும் கவனித்தபடி, தானும் அலுவலகம் சென்று தன்னையும் பார்த்துக் கொண்டு அப்பா இஸ் கிரேட்.. என் படிப்பு பாதித்து விடக்கூடாதே என்பதுதான் அப்பாவின் மொத்தக் கவலை. ஆனால் எனக்கு படிப்பின் மீது அக்கறை எதுவும் குறைந்து விடவில்லை.

மதுரை அருகே ஒரு கிராமத்தில் என் சிறு வயது பிராயம் நடந்து கொண்டிருந்த போது அம்மாவுக்கு உடம்பு முடியாமல், இருந்தது. . ஏதேதோ சிகிச்சைக்கு பிறகு ஒருநாள் அம்மா என்னையும்  அப்பாவையும் விட்டுச் சென்று விட்டாள். அம்மாவின் உடலை அனைவரும் தூக்கிச் செல்வதை பார்த்து நான் "அம்மாவை எங்கேப்பா கூட்டிப் போகிறார்கள்? இன்னொரு டாக்டர் வீட்டுக்கா?" என அப்பாவிடம் கேட்ட போது, "அம்மா குணமாகி மறுபடியும்  ஒருநாள் வருவாடா..! அது வரைக்கும் உன்னையும், வீட்டையும் என்னைப் பாத்துக்கச் சொல்லிட்டு போயிருக்கா.." அவ வர்ற வரைக்கும், எனக்கு நீதான் அம்மா... உனக்கு நான்... " என்று வார்த்தைகள் அடைக்கும் குரலில் கூறிவிட்டு அவர் வாய் விட்டு தேம்பி அழுதது இன்று வரை என மனதில் நிழல் படமாக பதிந்த ஒன்று.

வயது ஏற ஏற அம்மா வர முடியாத தூரத்திற்கு சென்று விட்டாள் என்ற மட்டும்  புரிந்தது. பக்கத்து வீட்டிலிருக்கும் பாட்டி வேறு " உன் அம்மா எதையோ பார்த்து பயந்து விட்டாளாடா...! அதனால்தான் உடம்பு தேறாமல் அதுகூடவே அவளும் சென்று விட்டாள்." என்னும் போது "அது யார் பாட்டி? சொல்லு... சொல்லு..! " என்ற என் தொணதொணத்த  கேள்விக்கு" வேற யார்? பேய்தானாடா" என்று சொல்லிய பிறகே இந்த என் தேடல் தொடங்கியது.

மேலும் என் கேள்விகளுக்கு பயந்தோ என்னவோ அந்தப் பாட்டியும் சொல்லிக் கொள்ளாமல்,  "அம்மா மாதிரியே"  ஒரு நாள் சென்று விட்டாள். நானும் என் பள்ளி மாணவர்களுடன்  "அம்மாவை அழைத்துச் சென்றப் பேயைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதை கண்ட உறவுகளின் பேச்சுக்கு கட்டுப்பட்டதால்,  அப்பாவும் நானும்  என் மனமாற்றத்திற்காக இங்கிருந்து போய் விடலாம்" என்ற அவர்களின் யோசனைகளின்  பேரில், அந்த இடத்தை விட்டு அப்பாவுக்கு வேலை மாற்றல் கேட்டுக் கொண்டு இந்த ஊருக்கு வந்து விட்டோம்.

இங்கு வந்த பின்னும் என் நண்பன் வீட்டில் கேட்ட பேய் கதைகள் அடி மனதில் ஆழமாக பதிந்தவை. எப்படியும் "நான் பயமின்றி அந்தப் பேய்களைப் பற்றி தெரிந்து கொண்டு என் அம்மாவை அதனிடமிருந்து எப்பாடுபட்டாவது, மீட்டு அழைத்து வர வேண்டுமென்ற எண்ணம் என் வாழ்க்கையின் லட்சியமாக  மனதில் பிடிவாதமாக அமர்ந்து விட்டது."

நாட்கள் செல்ல என் அம்மா  "மரணம்" என்ற இடத்திற்கு சென்று விட்டதையும், மரணித்தவர்கள் மீண்டும் வர இயலாது என்பதனையும் மெள்ள மெள்ள உணர்ந்து கொண்டேன். ஆனாலும் அம்மாவை மீட்டு வர வேண்டுமென்ற எண்ணம் மட்டும் மாறவேயில்லை. அதன் விளைவே அவ்வப்போது பேயின் வாழ்க்கை குறித்த ஆராய்ச்சி.

அப்பாவும், என் படிப்பு வாழ்வின் நலன் குறித்து சற்றே கண்டிக்க ஆரம்பித்து விட்டார். "சின்ன குழந்தையல்ல.. நீ..!  என் எதிர் காலத்தின் வாரிசாக கடவுளால் நியமிக்கப்பட்டவன். உனக்கென  ஒரு வாழ்வு, அதனைக்குறித்த தேடல் என வாழ்க்கை சக்கரத்தை விரிவாக்கி கொள்ள வேண்டுமேயன்றி, கடந்ததை, கடந்து கொண்டிருப்பதை "மனப்பேயின்" காலடியில் சமர்ப்பித்து, அப்பேயின் வலைக்குள் சிக்கி விடாதே... !" என்ற அறிவுரைகளை வழங்க ஆரம்பித்து விட்டார்.

என்றாலும். அம்மாவை நினைவு கூறும் சஞ்சலங்கள் பேய் ஆராய்ச்சியின் வடிவில் வடிகாலாக சிறு சிறு சமயங்களில் ஏற்பட்டு மனதை அலைக்கழிக்கிறது.. அவ்வேளையில் அப்பாவிடம் இந்த மாதிரியான பேய்களின் சாராம்சத்தை பற்றி இரவு, பகல் பாராது பேச தூண்டுகிறது. அப்பா சொல்படி மாற்றங்கள் நடந்தால் நல்லதுதான்..!

நான்...

நான் நினைத்தபடி விவேக் பள்ளி இறுதியாண்டில் மாநிலத்திலேயே முதலானவனாக தேர்ச்சிப் பெற்று  கல்லூரி படிப்பை நல்லபடியாக முடித்து  வேலைக்கு அமர்ந்து கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்து விட்டான். அவனிடமிருந்த பழைய ஆராய்ச்சி குணமெல்லாம் பள்ளிப்படிப்பை முடிக்கும் சமயத்திலேயே அவனிடமிருந்து விலகியே விட்டது. அதற்கு காரணமாக இருந்த என் நண்பனுக்குதான், நான் நன்றி சொல்ல வேண்டும்.

"உன்னிடம் தனிமையில் பேசும் போதெல்லாம், பேய் பிசாசுகள் பற்றிப் பேசும் உன் மகன் மனதில் ஏதோ ஆழமான காயம் உள்ளது. அதனுடைய தாக்கந்தான் அவன் நண்பர்கள், படிப்பு, விளையாட்டு, உன்னுடனான நேரங்களை சந்தோஷமாக செலவில் என்று போக, மிச்ச நேரத்தை உன்னுடன் அதைப்பற்றி பேசி உன் மூலமாக சமாதானமடைந்து கொள்கிறான்.
ஒரு அதிர்ச்சி வைத்தியமாக இப்படிச் செய்து பாரேன். .! " என்று அவன் சொன்ன வைத்தியத்தை செய்துப் பார்த்த பின் விவேக்கிடம் சற்று மாறுதல் தெரிய ஆரம்பித்தது.

முன்பு போல் கேள்விகளை, சிந்தனைகளை குறைத்திருப்பது தோன்றியது. நல்ல மதிப் பெண்கள் எடுக்க தன்னை தயார்படுத்திக் கொள்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடு பட்டு, மனம் ஒத்த கருத்துக்களுடன் முன்னேறி, இதோ இன்று நல்ல இளைஞனாக வளர்ந்திருக்கிறான். இவனுக்கு இப்படியே ஒரு திருமணத்தை முடித்து விட்டால் தந்தையாக, தாயுமாக இருந்து வளர்த்த என் கடமை செவ்வனே முடிந்து விடும்....

என்னுடைய மனதின் பூரிப்பில் கண்கள் நிறைந்தது. என் பர்சில் வைத்திருந்த மனைவியின் படத்தைப் பார்த்து, "என் கடமையை செய்யும் நல்ல நேரத்துக்கு நீயும், இதுவரை எனக்கு துணையாக  இருந்தது போன்று, இனியும் துணையாக இருந்து அவனை ஆசிர்வதித்து  அவன் வாழ்க்கையை சிறக்க வை....!" எனக் கூறிய போது கண்கள் இன்னமும் நிறைந்தன.

இவன் நினைப்பில் அன்னையின் பிரிவு தெரிய கூடாதென்றுதான் அவள் நினைவுகளை உண்டாக்கும் அவளது புகைப்படத்தைக் கூட மறைத்து வைத்து வாழப் பழகியிருந்தேன். அவனும் இதுநாள் வரை அம்மாவைப்பற்றி எதுவும் கேட்க வில்லை. அவள் இறந்து போன போது அவளைப் பற்றி கேட்டதுதான்...! அதன் பின் இந்த  விளையாட்டாக பேய் கதைகள் கேட்டு, கேட்டு அவன் சிந்தனையின் போக்கையே வேறு பாதையில் திருப்பி விட்டது. இனி அனைத்தும் நல்லவிதமாகத்தான் நடக்கும். ஊர் உறவுகளுடன் பேசி உறவிலேயே பெண் பார்க்க ஆரம்பிக்க வேண்டியதுதான்...  !
.
விவேக்...

நான் இப்போது  நல்ல  ஸ்திரமான வேலையிருக்கிறேன் என அப்பாவுக்கு பெருமை பிடிபடவில்லை. என்னைப்பற்றி நண்பர்களிடமும்  உறவுகளுடமும் சிறப்பாகத்தான் எப்போதும் பேசுகிறார். இப்படிப்பட்ட அப்பாவை, எனக்காக வாழும் அப்பாவை அன்றைய தினம் இழக்கப் பார்த்தேனே..! இனி காணும் கனவுகளில் கூட இதை மாதிரி ஒரு அசட்டுத்தனமான கனவு வராமல் இருக்க வேண்டும்.

பள்ளி இறுதியாண்டு நடந்து கொண்டிருக்கையில்  இப்படித்தான் ஒரு நாள் தேர்வுக்குத் தேவையானதை படித்து முடித்து படுதுறங்கப் போகும் நள்ளிரவு அப்பாவிடம்  இந்த பேய்கள் சம்பாஷணை நடத்தி விட்டு கண்ணயர்ந்த கொஞ்ச நேரத்தில், என் முன் வந்து அன்பாக ஏதேதோ பேசியபடியிருத்த  அப்பாவே தீடிரென ஒரு கொடுர பேயாக மாறி காட்சியளித்தார்.

அவர் முகம் படு விகாரமானதை நான் புரிந்து கொள்வதற்குள், "எப்ப பார்த்தாலும் பேய் பற்றியே பேசுகிறாயே..! பேய் எப்படியிருக்கும் என்று கேட்டாயே..! பார்த்துக் கொள். நான் ஒரு  பேயாக மாறிவிடுகிறேன். உனக்கு பேயின் கை வேண்டுமா? அல்லது காலா? இல்லை கண்களா? என்றவர் ஒவ்வொரு அங்கமாக அவர் உடலிலிருந்து பிய்த்து எடுத்துத் தந்தவர், இந்தா...! இதையும் வைத்துக் கொள். என கண்கள் இருந்த இடத்தில் ஒட்டையாக இருந்த தலையை திருக்கி ரத்தமும் சதையுமாக என்னிடம் தந்ததும், வாய் விட்டு அலறி விட்டேன். "அப்பா... அப்பா.. நீங்கள் அப்பாவாக மட்டும் எனக்கு எப்பவுமே இருந்தால் போதும். நீங்களாவது என்னுடன் எப்போதும் இருங்கள். அம்மாதான் பேயாக மாறி என்னை விட்டு போய் விட்டாள் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது கொண்டே இருக்கிறது. இப்படி நான் தினமும் பேயைப் பற்றி பேசிப்பேசி நீங்களும் பேயாக மாறி விட்டீர்களா? இனி உங்களிடம் இதைப்பற்றி பேசவே மாட்டேன்." என்று நான் வாய் விட்டு கத்தியதெல்லாம் தொண்டைக்குள் சிக்கி தடுமாறியபடி நெஞ்சையடைக்க, கண் விழித்ததும், அருகில் அப்பாவை காணாது, எதிரே மறுபடியும் ஒரு பேயுருவம்  கோரமாக கைகளை விரித்தபடி அருகில் வரவும், மீண்டும் அலறி, நான் படுக்கையில் விழுந்ததுதான் தெரியும்.

மறு நாள் அப்பா அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு அழைத்துப் போய் பூசாரியிடம் முகத்தில் நீர் தெளிக்க வைத்து, வீபூதி குங்குமமிட்டு "உங்கள் பையன்  எங்கோ பயந்திருக்கிறார். மூன்று தினங்கள் அம்மன் அபிஷேக நீர் தெளித்தால் சரியாகி விடும்." என்று அவர் பயமொன்றுமில்லை எனச் சொன்னதை நினைத்து  சந்தோஷமடைந்து கொண்டார்.

நானும் என் கனவை, கனவுக்கு பின் கண் விழித்ததும் பார்த்ததை எதுவுமே அப்பாவிடம் சொல்லவில்லை. அவரும் "எங்கு எப்படி பயந்தாய்..?  என்ற விபரம் கேட்கவில்லை. என்னைப்பார்த்ததும் கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென அவருக்கு  தோன்றியுள்ளது." ஏன்?"என நானும் கேட்கவில்லை. எனக்கும் அநாவசியமாக அவரை பயமுறுத்த விருப்பமில்லை. இப்படியாக அந்த சம்பவம் நடந்து முடிந்த பின் நான் படிப்பில் மட்டும் முழு கவனம் செலுத்த, இதோ...! இன்று முழு மனிதனாக வளர்ந்து நிற்கிறேன். அப்பாவும் என் திருமணதிற்கு சம்மதம் கேட்க. நானும் சரியென்றதில், பெண் பார்க்கும் படலங்கள் ஆரம்பித்துள்ளன.

 நான்..

நல்லபடியாக ஜாம்ஜாமென்று விவேக்கிற்கு திருமணம் செய்து விட்டேன்.  உறவிலேயே, அவனுக்கு ஒன்று விட்ட அத்தைப் பெண்.  இரு மனம் கூடி கலந்து பேசி திருமணத்திற்கு மனம்  ஒத்து என் மருகளாய் வந்தாள் என் தங்கை பெற்ற அன்பு மகளாம் காவேரி. .

அன்பும், அனுசரனையும், அவள் இரு கண்களாக இருக்கக்கண்டு என் மனம் உவகையடைந்தது. கிராமத்தில் படித்து வளர்ந்து வந்ததால் அந்த பண்பாடு விவேக்கை  இன்னமும் வளர வைக்கும் என்ற நம்பிக்கை மனதுள் வேரூன்றியது.

இருவரும்  ஊர் உறவு விருந்துக்கு என்று சென்று திரும்பி வந்து தேனிலவும் சென்று வந்து விட்டு விவேக் பழையபடி அலுவலகம் செல்ல ஆரம்பித்து விட்டான். நாட்கள் நல்லபடியாக மருமகளின் அன்பான கட்டுக்கோப்பில் நகர்ந்து கொண்டிருந்தன.

தனிமை சிறையும்,  தனிச்சூழலும், மனைவி பிரிந்ததிலிருந்து விவேக்கை அண்டி அரவணைத்து வாழ்ந்த காலங்களை நினைவு படுத்தினாலும், "இனி இதுதானே அவனுக்கும், நமக்குமான வாழ்க்கைச் சுழற்சி. " என்பதையும் அடிக்கடி  ஞாபகப்படுத்தி ஒரு விதமான வருத்தத்தை மனதில் தேக்க வைத்துச் சென்றதையும் தவிர்க்க முடியவில்லை.

ஒரு விடுமுறை நாளின் மகிழ்வான காலைப் பொழுது. "விவேக் எங்கேமமா?" எழுந்து பல் துலக்கி மருமகள் சூடாக கொண்டு வந்து தந்த காஃபியை பருகியபடி கேட்டேன்." ஏதோ நண்பரைப் பார்க்க வெளியில் சென்று விட்டு வரும் நேரந்தான் மாமா..! என்றாள்." ஏன் ஏதாச்சும் பேசனுமா?"என்றவளிடம்," இல்லேம்மா உன் கிட்டேத்தான் பேசனும்.  விவேக் எப்படிம்மா? உன்கிட்டே நல்லபடியாக அன்பாக பேசி பழகுறானா? இதை நான் கேட்க கூடாது. அந்த மகராசி இருந்திருந்தா அவ எல்லாத்தையும் பாத்துப்பா..! ஆனா அவ இடத்திலேயும், நானே இருந்து அவனை வளர்த்ததாலே நானே கூச்சத்தை விட்டு கேட்கிறேன்...! என்றேன் தயக்கமாக.

"அதுக்கென்ன மாமா..! ஒரு குறையும் இல்லை எனக்கு.. ஆனா பேய்க்கு வாக்கப்பட்டா முருங்கை மரம் ஏறித்தானே ஆகனும்." அப்படீன்னு எங்கம்மா அடிக்கடிச் சொல்வாங்க.. ..! என்று அவள் சொன்ன பதில் என்னை திடுக்கிடச் செய்த ஒரு நொடியில்...

"ஆமாம்மாம்..! பேய் பிசாசை மறந்துடலாம்னு நினைக்கிற நேரத்திலே அதுவே மீண்டும் வந்து உன்னை மறக்க மாட்டேன்னு ஒட்டிக்கிட்டா நான் எந்த மரத்திலே ஏறுவதாம்" என்றபடி வெளியில் சென்றிருந்த விவேக் வரவும், மருமகளின் கண்களில் அப்பியிருந்த வெட்கம் கீழே விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் அவள் அவசரமாக உள்ளே ஒடினாள்.

என் கேள்விக்கு பதில் கிடைத்து விட்ட திருப்தியில், நான் செய்தி தாளில் மூழ்கும் போது, அவளைத் தொடர்ந்து சென்ற  விவேக்கின் சிரிப்பொலி உள்ளேயிருந்து கேட்டது. கூடவே துணைக்கு மருமகளின் சிரிப்பொலியையும் உடனழைத்து கொண்டது. இனி கவலையில்லை..! விவேக்கிற்கு அவன் தாய் மீண்டும் கிடைத்து விட்டாள். நிறைந்த மனது செய்தித் தாள்களை புறந்தள்ள, செருப்பை மாட்டியபடி, "நான் கொஞ்சம் காலாற நடந்து வருகிறேன் விவேக்...!" என்றபடி வாசல் படியிறங்கினேன்.

"கொஞ்ச நாட்களாக நான் அமைதியாய் இருப்பதாகவும், எனக்கு நானே என்னுள்ளேயே  ஏதோ பேசிக் கொள்வதாகவும்" என் நண்பரிடம் என் மகன் புகார் தந்து, "இந்த மாதிரி அவரைப் பார்த்ததேயில்லை..! அவரை பழையபடி சந்தோஷமாக பார்க்க நான் என்ன செய்ய வேண்டுமென ஐடியா கேட்டதாக " என் நண்பர் சொல்லவும், "என் கையில் ஒரு பேரனோ, பேத்தியோ வளர வந்து விட்டால் எனக்கு ஏது அமைதி? என்று நீ சொல்ல வேண்டியதுதானே. !" என நான் சொல்லவும், "இதை உன்னிடம் கேட்டா நான் சொல்லுவேன். அவனுக்கான இந்த பதிலை அப்போதே தந்து விட்டேனே...! " என்றார் கடகடவென்ற சிரிப்புடன்.

அவர்  விடைபெற்று சென்றவுடன் மனது லேசாக கனத்தது." அவன் கேள்விக்கு மற்றொரு பதிலும்  இப்போது என்னுள் இருக்கிறது என்று கூற தயக்கமாக உள்ளது நண்பா...!  உன்னிடம் கூட கூற முடியவில்லை. என்னே தானே பேசத் தூண்டுகிறது..! பேசவும் வைக்கிறது.. அது வேறு ஒன்றுமில்லை..! அது தனிமைப் பேய்...!" என்றேன் சிறிது முணுமுணுப்பாக....!!!!

முடிந்தது....

நட்புறவுகள் அனைவருக்கும் என அன்பார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். 

Saturday, October 12, 2019

அவ(ளு)லும், நானும்....

அவல் உப்புமாவும்,
கூடவே கூட்டும்...

"அவல் உப்புமாவா" என ஆவலோடு வருபவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.  அவலை  சுத்தப்படுத்தி, சட்டென ஒரு தடவை நீருற்றி ஒரு அலம்பு அலம்பி வடித்து  அதை ஊற வைத்து விதவிதமாய் உப்புமா செய்யலாம் என்பது அனைவரும் அறிந்ததுதான்.!

 பொதுவாக தட்டை அவல், லேசான அவல் என்றால் அலம்பும் போதே ஊறிவிடும்.  ஆனால், கெட்டி அவலென்றால் ஒரு ஒரிரு வினாடிகள் குளியலைப் பொருட்படுத்தாது நம்முடன் ஒத்துழைக்கும். நான் இங்கு உப்புமாவிற்காக, எடுத்துக் கொண்டிருப்பது எதையும் சற்று தாங்கும் திடமான மனதுடையவைதான்.

இந்த உப்புமா செய்வதற்காக கொஞ்சம் கொத்தமல்லி விரைகள், தேவையான காரத்திற்காக மி. வத்தல், கொஞ்சம் மிளகு, சீரகம், சுவைக்காக கடலைப் பருப்பு ஒரு டீ ஸ்பூன், உளுத்தம்  பருப்பு ஒரு டீ ஸ்பூன் முதலியவற்றை எடுத்துக் கொண்டேன்.

கறிவேப்பிலை நான்கு ஆர்க்கு சுத்தப்படுத்தி அலம்பி வைத்த பின், ஒரு கடாயில், சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இந்த சாமான்களை  போட்டு வறுத்து, கடைசியில் கறிவேப்பிலையையும் சேர்த்து வறுத்து வைத்துக் கொள்ளவும்.

வறுத்த சாமானகள் நன்கு ஆறியதும், மிக்ஸியில் போட்டு பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அதே கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, உ. ப இரண்டொரு சிட்டிகை பெருங்காயம் (இல்லை  சிறு துண்டு பெருங்காயம்) தாளித்து கொண்டு, ஊற வைத்த அவலைப் போட்டு, தேவையான உப்பையும்  ஒரு சிட்டிகை மஞ்சள் தூளையும் போட்டு, இந்த அரைத்து வைத்த பொடியிலிருந்து காரத்தின் அளவை பொறுத்து கொஞ்சம்  கொஞ்சமாக சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும். அந்த காரம்,  உப்பு, எண்ணெய் சேர்த்து மணம் வீசும் நேரம் அடுப்பை நிறுத்தி, ( இந்த இடத்தில் அடுப்பை அணைக்கவும் என்றுதான் முதலில் எழுதினேன். "உப்புமா ரெடி செய்து சாப்பிடும் நேரத்தில் அடுப்பை போய் அணைத்தால் என்ன ஆவது?  அப்புறம்  "அவள் பறந்து போனாளே"..! என நான் பாடும்படி இருக்கும் என அவல்  கடுமையாக எச்சரிக்க, " நிறுத்து" என்று நான் சற்று  கடுப்பாக, " உனக்காக இவ்வளவு நேரம் உன்னுடன் ஒத்துழைத்தேன். சின்னதாக ஒரு  அறிவுரைக்கு இவ்வளவு கடுப்பா? அதையே அங்கேயும் போடு" என்றது புன்னகையுடன் திடமனதினை உடைய அவல்...! வேறு வழி.! அவச்(ல்) சொல்லால் என்னை பயமுறுத்தியதால் "நிறுத்தி" அங்கே பேசாமல் அரங்கேறியது. ஹா. ஹா ) உப்புமாவை வேறு பாத்திரத்தில் மாற்றி பின்னர் பறிமாறவும்.


வறுக்க தயாராக, வறுபடும் எண்ணத்தை  தங்களுக்குள் உண்டாக்கியபடி, "கடனே" என புகைப்படத்திற்கு போஸ் தரும் க. ப, உ. ப, சீரகம், கொ. ம. விரைகள். மி. வ, மிளகு முதலியவை.


மனதிடத்தை தன்னுள் ஊற வைத்தபடி, நமக்காக எதையும் தாங்கும் மனோ நிலையில், நீரில் மூச்சடக்கி ஊறிக் கொண்டிருக்கும் அவல்.


முன்பெல்லாம் "ஒருவருக்காக செய்யும் நற் பயன்களை பெற்ற பின்  தூக்கி எறியப் படுபவர்களை எனக்கு உதா"ரண" மாய் காட்டி, காட்டி என்னையும், "ரண"ப் படுத்தினீர்கள். இப்போது என்னை நல்ல விதத்தில் பயன்படுத்துவது கண்டு சந்தோஷம் அடைகிறேன்." என மலர்ச்சி காட்டி காத்திருக்கும் கறிவேப்பிலை.


" வறுக்கும் வேதனை பொறுக்கும் எங்கள் வலிகளின் விலை என்ன? " கேள்வி கேட்கும் சாமான் வகையறாக்கள்.


" இப்படி போட்டு வறுத்த பின்பாவது சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்..! இப்போதும் வெறும் மெளனந்தானா? என மெளனம் கண்டு முகம் சிவக்கும் அதே சாமான் வகையிறாக்கள்.


" தட்டில் மாற்றி குளிர வைத்தால் நாங்கள் சமாதானமாகி விடுவோம் என்ற நம்பிக்கையா? விடுவோம்...விடுவோம்.. ஆனால், எங்களுக்கும், மின் விசிறி போட்டு கொஞ்சம் உபசாரம் செய்யுங்கள்.. இல்லையென்றால், கொதிக்கும் சூட்டை சற்றேனும் குறைக்க விட மாட்டோம்..! என பிகு செய்யும் அதே சா. வகை.


"மறுபடியும் எண்ணெயுடன் கடாய்.. இதே வேலைதானா ? அவர்கள் போதாதென்று நாங்களுமா ? கோபத்தில் தன் கூடவே  உ. பாவை துணைக்கழைத்து கொண்டு படபடக்கும் கடுகு...


இவர்களின் கோபங்களை குறைக்க மனதிடத்தை ஊறி வளர்த்துக் கொண்ட அவலை (அவ(ள்)ல் வருவாளா..?) என கேட்டு  காத்திராமல் அழைத்து வந்து கடாயில். சேர்த்ததும்,  கோபம் தணிந்த கடுகு படபடப்பு அடங்கி அமைதியானது. 


வெந்தணலில் வறுத்த சூட்டை மின் விசிறியின்  சில்லென்ற காற்றில் பறக்க விட்டு, மனம் குளிர அனுபவித்தபடி இருந்த சந்தோஷத்திலேயே, மிக்ஸியில் பொடியாகி வந்ததும் தெரியாமல், குதூகலமாக தட்டில் ஒன்று கூடி குவிந்திருக்கும் மி. வ, உ. ப  க. ப., மி, சீ, கொ. ம. வி.


அழகுள்ள இந்த பிரபஞ்சத்திற்கு அணிகலன்களாக  இயற்கையும் ஒளி வீசி நட்பாகி களித்திருப்பது போல், அவலுடன் நட்பாக ஒன்று கூடி களித்த பொடிகள்.


முழுமை பெற்ற நிலையில், அவ(ள்) ல் தயாரிப்பு..(இல்லை.. இல்லை என் தயாரிப்பான, ) உப்புமா.


இது வேறு கதை. பொடித்த பொடி அதிகமாக தோன்றவே, பாதியை அவலுடன் சேர்க்காமல் எடுத்து வைத்திருந்தேன். அன்றைய காலை உணவுக்கு ஏற்பாடாகியிருந்த அவலுக்கு தொட்டுக் கொள்ள ஏதும் தேவையில்லையெனினும், மதியத்திற்கு தயாரான  சாதம்" என்னால் தனியாக  பவனி வர இயலாது" என்று மிகவும்  கவலைப்பட்ட காரணத்தால், 


போரடித்துக் கொண்டு கு. சா. பெட்டியில் ஜாலியாக பேசிக் கொண்டிருந்த காரட், பீன்ஸ்  கோஸிடம் சாதத்திற்கு துணையாக வர "சம்மதமா" எனக் கேட்டவுடன்,


சம்மதித்த அவைகளுடன் அந்த மீதமிருந்த பொடிகளுடன் கொஞ்சம் தேங்காயை அரைத்து விட்டு ஒரு கூ..ட்..டா..க.....


நாம பேசாமல் குளிர் காய்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். "சம்மதமா.. ! உங்களுக்கு சம்மதமா..! நீங்கள் எங்களுடன் வழித்துணையாக கூட வர சம்மதமா?" என்று" கண்ணால்" பாடி மயக்கி கூட்டாக ஆக்கி விட்டு எத்தனை படங்களாக இஷ்டத்துக்கும் "சுட்டு சுட்டு" வேறு பொசுக்குகிறார்கள்?

போகட்டும்... ! எப்படியிருந்தாலும், "ஒன்பது வாட்டி மாத்தி, மாத்தி படமெடுத்ததை வேஸ்ட்டாக்காமல் விட மாட்டா இந்த கமலாக்கா.. ! " என்று தேம்ஸ் பட்டமகிஷி வந்து காரசாரமாக கமெண்ட்ஸ் தரப் போறாங்க பார்.!! என்று கூடி பேசி மகிழும் கூட்டணிகள்.( ஹா. ஹா. ஹா.)

ஆகா....! இப்படி ஒன்னு இருக்கோ.. ! ஆனாலும் வளைத்து வளைத்து எடுத்ததை ஒன்று கூட விட மனமில்லை பாருங்கள். கோர்வையாகத்தானே இணைத்து எழுதியிருக்கிறேன். பார்த்து, படித்து தரும் பாராட்டுகளுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
மிக்க நன்றிகள்... 🙏... 

Friday, October 4, 2019

அன்பு மலரும் போது...

இதுவும் நான் என் பதினேழில், பிதற்றியதுதான். இத்தனை நாளாக வெளியிடவில்லை. இந்தக் கதையின் சம்பவங்களை இப்போதுள்ள காலகட்டத்திற்கு யாராலும் ஏற்றுக் கொள்ள இயலுமா? என வந்த சந்தேகங்களின் காரணங்கள் வெளியிட தாமதித்ததுவா எனத் தெரியவில்லை. ஆனால் தற்சமய காலங்கள் இதன் போக்கை மாற்றி எழுத அனுமதித்தாலும், எனக்கு என்னவோ என் டைரியிலிருந்து சில பக்கங்களை புரட்டி, கிழித்து ஒளித்து திசை மாற்றிப்போட மனது ஒப்பவில்லை. 

இப்பொழுது அந்த எழுத்துக்களை அப்படியே பதிக்கும் போது   எழுதிய "அன்றைய தினங்களில்"  இந்தக் கதைக்கான சிந்தனைகளின் சுவையை சுவாசித்த என் மனம் "இன்று" அந்த மலரும் நினைவுகளையும் சுவைத்து ரசிக்கிறது. அது தவறா? இல்லை சரியா? என்பதை உணர்ந்து படிக்கும் நீங்கள் என் சந்தேகங்களைப் தெளிவாக்குவீர்கள் என சந்தேகமற நம்புகிறேன். கதையை
படிப்பதற்கு என் நன்றிகளும்... 

அன்புடன், 
உங்கள் சகோதரி
கமலா ஹரிஹரன். 



சுமியின் கண்கள் கூடத்து அறையில் இருந்த பெரிய கடிகாரத்தில் தவழ்ந்தன. ஆயிற்று, இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளது உற்ற தோழி நளினியின் கழுத்தில் மாங்கல்யம் என்ற மலர் மலர்ந்து விடும். அந்த மலர் வாடிவிடாமல் என்றும் மணம் வீசிக்கொண்டே இருக்கவேண்டுமென இறைவனிடம் மனமுருகி பிரார்த்தித்து கொண்டாள் சுமி.

ஒரு மணி நேரத்தில் "ஒருவருக்கு" சொந்தமாகிவிடும் நளினி நாளை இந்த நேரத்தில் "அந்த ஒருவரின்" வீட்டில் இருப்பாள். அதன் பின்பு சுமிக்கு இந்த வீட்டில், ஏன், இந்த உலகத்திலேயே "அன்பு" என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. தெரியாமல் போய்விடும்.

இதோ! நளினி வருகிறாள். கழுத்து நிறைய நகைகளும் பட்டு சேலையும் மின்ன அவள் நடந்து வருவது  அழகுக்கே சவால் விடுவது போல் இருந்தது சுமிக்கு.

"சுமி" என்றபடி நளினி ஓடி வந்து சுமியை தழுவிகொண்டாள்.

ஓ! நாளையிலிருந்து இவள் அன்பில் திளைக்க  முடியாது. இன்று மட்டும்தான்! இனி எப்போதோ? சுமியின் கண்கள் மழை மேகங்களாக மாறுகின்றது.

"நளி, என்ன இது? அங்கே உன்னை எல்லோரும் தேட போறா, நீ இங்க வந்து உக்காந்திருக்கியேமா.."

"சுமி, பிறந்ததிலிருந்து என்னோட சந்தோஷத்திலும் துக்கத்திலும் பங்கெடுத்துகிட்ட நீ இப்ப மட்டும் வரமாட்டேங்கிறியே இது நியாயமா?" நளினி குரல் தழுதழுக்க கேட்டாள்.

"நளி இத்தன வருஷமா நீ என்ன புரிஞ்சிகிட்டது இவ்வளவுதானா? இந்த சமூகத்திலிருந்து, அதாவது ....இந்த ஜனங்களோட உள்ளத்திலிருந்து நான் விலக்கபட்டுடேன் நளி. இனிமே இவங்க மத்தியிலே வந்து என்னால உட்கார முடியாது. என்னோட வாழ்க்கைங்கிற பாலிலே இந்த  "ஊனமிங்கற " உப்பு விழுந்துடுச்சு நளி. அது இனிமே சுத்தமான தயிராகாவும், சுவையான மோராகவும் வெண்ணையாகவும் நெய்யாகவும் மாறமுடியாது. பழைய பாலாகவும் லாயிக்கியில்லை. இப்ப புரியுதாமா நான் ஏன் உன்னுடைய திருமணத்துக்கு வரலைன்னு" என்று கேட்டு விட்டு விரக்தியுடன் சிரித்தாள் சுமி.

நளியின் கண்களில் கண்ணீர் கரைகட்டியது.

"சுமி! ஐ'ம் சாரி! நான் உன்னோட மனசை புண்படுத்திட்டேன். என்ன மன்னிச்சிடு!"

"நோ நளி! நோ.. அப்படியெல்லாம் சொல்லாதே!"

"சுமி! இங்கேயே உங்கிட்டே ஆசீர்வாதம் வாங்கிக்கிறேன்" என்றபடி நளினி சுமி தடுப்பதற்குள் அவள் காலடியில் சரிந்து விட்டாள்.

பதறிபோய் அவளை தூக்கி அமர்த்திய சுமி, "நளி! உனக்கு எந்த ஒரு குறையும் வரக்கூடாது.. நீ நீடூழி வாழனும். அதோட ஒரு வேண்டுகோள் நளி! நீ எங்கே இருந்தாலும், என்னைக்கும், ஐ மீன் ...... ஐ மீன் என் உடலிலிருந்து உயிர் வெளியேறும் வரை நீ என்மீது  செலுத்தும் அன்பு மாறவே கூடாது நளி" கடைசி வார்த்தைகளை தழுதழுத்தபடி கூறினாள்.

"சுமி! இதை நீ சொல்லனுமா?"

" நளினா"! என்ற குரல் சிவபூஜையில் கரடிபோல், அந்த அன்பு சுவரின் நடுவில் விரிசில் கண்டது போல் எழுந்தது.

"நீ இங்கேயா வந்திருக்கிறே! உன்னை எங்கெல்லாம் தேடறது. மணமேடையிலே உட்காரவேண்டியவ இந்த நொண்டிகிட்டே வந்து உட்காந்திருக்கியா?" கோபமாக கேட்டாள் நளியின் தாய்.

"அம்மா" மகள் பார்வையில் தெறித்த உக்கிரத்தில் தாய் மகளை பார்த்து "வா" என்றவாறு மேற்கொண்டு ஏதும் பேசாது அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

"சுமி! எனக்காக அம்மாவை.........."

"நளி! இந்த ஊனம் எனக்கு ஏற்பட்ட நாளிலிருந்து இந்த மாதிரி சொல்றவங்களுக்காக நீ மன்னிப்பு கேட்டுகிட்டு தான் இருக்கே.. ஆனா! என் இதயம் எல்லாத்தையும் தாங்கி தாங்கி பழகிப்போச்சு. நீ போயிட்டு வாம்மா" என்றாள் சுமி.

கண்களை துடைத்தபடி நடந்தாள் நளினி.

"ஏய்! நொண்டிக் கழுதை! சமையலறைக்கு வந்து கொட்டிக்கிட்டு போயேன். பெரிய மகாராணி! கையிலே கொண்டு வந்து தட்டை வைக்கனுமாக்கும்," சித்தியின் குரல் பன்னிரண்டு மணி வெயில் மாதிரி தகித்தது.

"சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் மகாராணி தான். இதோபார் என்னுடைய சிம்மாசனம்." என்று சிரித்தபடி கூறியவாறே தன் சக்கர நாற்காலியை தட்டி காண்பித்தாள் சுமி.

"கால் இல்லைன்னாலும் வாயாவது இருக்கே", முகத்தை நொடித்தவாறு உள்ளே சென்றாள் அலமேலு.

எப்படி இவர்களால் இப்படியெல்லாம் பேசமுடிகிறது. இவர்களுக்கு இதயமே இல்லையா! அந்த இதயத்திலே இருக்கும் அன்பெனும் ஊற்று அடைத்துப் போய் விட்டதா? அதை எப்படி அடைத்தார்கள்!

இதயத்திலிருக்கும் காயத்தை ஆற்ற முயற்சி செய்யாவிட்டாலும் போகிறது. அதை இப்படியா கிளறி விட வேண்டும்.

"அம்மா" என்றபடி வேதனையுடன் நிமிர்ந்தாள் சுமி.

"அம்மா"... அந்த அம்மா மட்டும் இப்போது இருந்திருந்தால் சுமியின் கால்களாகவே மாறியிருப்பாள்.

அந்த பாக்கியந்தான் அவள் செய்யவில்லையே! செய்திருந்தால் ஏழாவது வயதில் பெற்ற தாயைபறிகொடுத்து விட்டு ஒரு மாத விஷக்காய்ச்சலின் விளைவால் இந்த நிலைக்கு வந்து இப்படியெல்லாம் எல்லோரிடமும் பட வேண்டியதிருக்காதே.!!

பக்கத்து வீட்டில் இருக்கும் நளினி மட்டும் சுமியின் உலகத்தில் இருந்திடாவிட்டால் அவள் இந்த உலகைவிட்டு எப்பொழுதோ சென்றிருப்பாள். பிறந்ததிலிருந்து இருவருக்குமிடையில் இறுகிய பாசம் அந்த எமனால் கூட பிரிக்கமுடியாத அளவுக்கு வளர்ந்து விட்டது.

சுமியின் தந்தையை சொல்லிக் குற்றமில்லை. மந்திரவாதியின் கையிலிருக்கும் மந்திரகோல் மாதிரி சித்தியின் கையில் அகப்பட்டுக்கொண்டு திணறுகிறார்.

ஏதோ இவளுக்கென்று செய்யும் கடமைகளில் தந்தை சற்று கண்டிப்பு காட்டுவதால், அச்சமயங்களில் சித்தியும் ஏதும் குற்றம் குறை சொல்லாது வாளாதிருக்கிறாள்  அவளுக்கு தனக்கு ஒரு குழந்தை பிறக்கவில்லையே என்ற ஏக்கம் வந்து போய் நாளாகி விட்டதாலும், தன்னிடம் வெறுப்புடன் கூடிய அன்பையும், தந்தையின் கண்டிப்பிற்காக அவ்வப்போது காட்டுகிறாள் என்பது சுமி அறிந்ததுதான்.!!

 இவளின் தேவைகளை சமயத்தில் அறிந்து அவள் செய்வதால், சித்தியின் "சுள்"ளென்ற பேச்சுக்கள் சிலசமயத்தில் வெப்பமாய் தகிப்பதை இவளாகவே சமாதான நீருற்றி அணைத்துக் கொள்வாள்.

தன் வாழ்க்கையில், அறிவு சார்ந்த விஷயங்களுக்கும், அன்புக்கும் நளினி ஒருத்திதான் கடவுள் தனக்காக கொடுத்திரும் வரம் என்பதில், அசைக்க முடியாத நம்பிக்கையில் தைரியமாக  இருந்த சுமிக்கு அவளின் பிரிவு கொஞ்சம் வேதனையை தந்தது.

தனக்கென்று இறைவன் அளவிட்டு கொடுத்திருப்பதை பெற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும். வேண்டாம் என்று மறுத்தாலும், வருவதிலுள்ள அளவீடுகள் கூட்டிக் குறையப் போவதில்லை என்ற தத்துவ எண்ணங்கள்  அவளுக்கு எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளும் மனதையும்  தாராளமாக தந்திருந்தது.

ஏதோ யோசனையில் இருந்தவள் சித்தியிடமிருந்து மீண்டும் ஒரு சத்தம் வரவே, ஒரு பெருமூச்சுடன் சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டு போனாள்.

"அலமேலு! சுமித்ராவுக்கும் கல்யாணத்தை எப்போ நடத்த போறே?" வாசலில் எதிர் வீட்டுகாரி சித்தியிடம் அக்கறையுடன் விசாரிப்பது துல்லியமாக சுமியின் காதில் விழுந்தது.

"ஆமாம்! அது ஒன்னுதான் அவளுக்கு கொறைச்சல்! எவன் வந்து இந்த நொண்டியை கட்டிக்கப் போறான்?"

ஊசியால் குத்துவது போன்ற உணர்ச்சி ஏற்ப்பட்டது சுமிக்கு.

மறுநிமிடம் சற்று வாய்விட்டு சிரித்துகொண்டாள் சுமி. நொண்டி,.. நொண்டி, நொண்டி.. ஒவ்வொரு வார்த்தை பேசும் போதும் இந்த வார்த்தையையும் உபயோகிக்க தவறுவதில்லை சித்தி. சொல்லிவிட்டு போகட்டுமே! இல்லாததையா சொல்லுகிறாள்? உண்மையை தானே சொல்லுகிறாள் உண்மைக்கு ஏன் வருத்தப்படவேண்டும்.

காலமும், இளமையும் போட்டி போட்டுகொண்டு பறந்தது. காலம் சுமியின் தலையில் ஆங்காங்கே சில வெள்ளிக் கம்பிகளை உண்டாக்கி இருந்தது. இளமை அவளது அழகிய முகத்தில் சற்று முதிர்ச்சியை அளித்திருந்தது. ஆனால் அவள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. கடந்த நான்கைந்து மாதங்களாக நளினியிடமிருந்து ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவள் திருமணமாகி சென்றதிலிருந்து சுமிக்கு வாரம் இருமுறை கடிதம் எழுதிக்கொண்டு இருந்தாள். நாளாக நாளாக அவளது கடிதம் வருவதும் அரிதாகிவிட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்றதடவை அவளிடமிருந்து வந்த கடிதத்தில் அவள் தாயாகும் விபரம் குறித்து எழுதி இருந்தது சுமிக்கு மிகவும் சந்தோஷத்தை தந்தது. திருமணத்திற்கு பின் நீண்ட வருடங்கள் கழித்து அவள் தாயாகும் பேறு பெற்றிருப்பதால் அவளின் நலம் குறித்து சுமியும் அடிக்கடி விசாரித்து வந்தாள். ஆனால் தற்சமயம் அவளிடம் இருந்து எந்த தகவலும் இல்லாததாலும், அவளைப்பற்றி விசாரித்துக்கொள்ள இயலாமல் அருகிலிருந்த அவளது பெற்றோர்களும் அவளுக்கு திருமணமான ஓரு வருடத்திலேயே, வேறு ஊருக்கு குடி பெயர்ந்து விட்டதாலும்,  வேறு எவரிடமும் எதுவும் கேட்கமுடியாமல் தோழியின் நினைவை மௌனத்திலேயே கரைத்து வந்தாள் சுமி.

வாசல் கதவை தட்டும் ஓசை கேட்டது.

"வெளியில் சென்றிருந்த சித்திதான் வந்துவிட்டாளோ?"

சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு போய் கதவை திறந்தாள் சுமி.

உள்ளே நுழைந்த நளினியின் கணவன் மகேந்திரனை பார்த்து அடையாளம் கண்டு கொண்டதும், திகைத்துப் போனாள்  சுமி.

"வாருங்கள், எதிர்பார்க்கவே இல்லை.. நலந்தானே? அமருங்கள்.. வார்த்தைகள் சமந்தமில்லாமல் குளறி குளறி வெளிவந்தன சுமிக்கு.

"என் நளி சௌக்கியந்தானே?"

அவன் அவளை மெளனமாக ஏறிட்டு நோக்கிய விதம் அவளை என்னமோ செய்தது.

"நளினி நம்மையெல்லாம் மோசம் பண்ணிவிட்டு நிம்மதியாக போய் சேர்ந்து விட்டாள் சுமித்ரா!"

என்ன? அதிர்ச்சியில் கண்கள் நிலைகுத்த முன்னால் சாய்ந்தவளை தாங்கி பிடித்துக் கொண்டான் மகேந்திரன்.

"சற்று அமைதிபடுத்திக் கொள் சுமி!"

திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் சுமி.

"சுமி" அதேகனிவு! "அவள் மட்டுமே அழைக்கும் சொல்!" கண்ணீர் அணை உடைந்து சிதறியது.

"நீங்கள் ஏன் எனக்கு தெரியபடுத்தவேயில்லை?" விம்மலுக்கிடையிலும் கோபத்துடன் எழுந்தது சுமியின் குரல்.

"என்னை மன்னித்துவிடு சுமித்ரா! மூன்று மாததிற்கு முன்பு ஒரு புதிய ஜீவனை இந்த உலகத்திற்கு தந்துவிட்டு அவள் இந்த உலகைவிட்டு மறைந்துவிட்டாள். இறப்பதற்கு இரண்டு நாள்முன்பு இந்த கடிதத்தை என்னிடம் கொடுத்து, "என்றைக்கு உன்னிடம் இதை நான் சேர்பிக்கிறேனோ, அன்றுதான் தான் இறந்ததைப் பற்றியும் கூற வேண்டுமென்று நிபந்தனை போட்டாள்". என்ன செய்வது? அவள் கட்டளைப்படிதான் என்னால் நடக்க முடிந்தது." என்றபடி கடிதத்தை சுமியிடம் கொடுத்தான் மகேந்திரன்.

சுமியின் கைகள் கடிதத்தை பிரித்தன; கண்கள் படித்தன.

"என் ஆருயிர் தோழி சுமிக்கு,

இதுவே நான் எழுதும் கடைசி கடிதமாக இருக்கலாம். ஏனோ, இந்த தடவை நான் பிழைக்கமாட்டேனென்று என் உள்ளத்தில் ஏதோ ஒன்று உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. என் அன்பு சுமி.... என் திருமண நாளன்று நீ சொன்னது நினைவு இருக்கிறதா? என் வாழ்க்கைங்கிற பாலிலே ஊனமிங்கிற உப்புகல் விழுந்து திரிந்து போய்விட்டது. அதை இனி சாக்கடையில் தான் கொட்ட வேண்டுமென்று சொன்னாய்.!! ஆனால் அது என் சுமியின் வாழ்க்கை.! அந்த வாழ்க்கைப் பால் திரிந்தே போயிருந்தாலும் சரி, அதை நான் உபயோகபடுத்தி கொள்வேனே தவிர சாக்கடையில் கொட்டவிடமாட்டேன். புரியவில்லையா சுமி?

என் குழந்தைக்கு என் ஸ்தானத்தில் நீ வர வேண்டும். நீண்ட நேர விவாதத்திற்கு பின், அவரிடம் சம்மதம் வாங்கி விட்டேன். நீயும் சம்மதிப்பாய் என்று எனக்குத் தெரியும். என் தோழியை எனக்கு தெரியாதா? இதை நீ செய்தால்தான் என் ஆத்மா சாந்தியடையும்."

இப்படிக்கு
உங்களை என் மாறா அன்புடன் வாழ்த்திக் கொண்டிருக்கும்,
உன் "நளி".   


கடிதத்தை படித்துவிட்டு கதறியழுதாள் சுமி...

"சுமி! இந்த மனிதர்கள் இதயத்தில்தான் அன்புங்கிற மலர் மலருகிறது. அந்த மலர் சில சமயங்களில் தியாக கனியாக கனிந்துவிடுகிறது. அப்படிப்பட்டவர்களில் ஒருத்தி நளி. ஆனால் ஒவ்வொருவர் மனதிலே அந்த மலர் மலராமல் வெறும் மரமாகவே மாறிடறாங்க," குரலடைக்க கூறினான் மகேந்திரன்.

"உண்மைதான்! அன்னிக்கு ஒருநாள் நா அவக்கிட்ட ஒருவேண்டுகோள் விடுத்தேன். இப்போ அவ ஒரு பெரிய தியாகத்தை செஞ்சிட்டு என்கிட்டேயே......". முடிக்க முடியாது விம்மினாள் சுமி.

"சுமி! அவளே போனபிறகு எனக்கு இன்னொரு கல்யாணம் அவசியமே யில்லை. ஆனாலும் அவளோட ஆத்ம திருப்திக்காகத்தான் சம்மதிச்சேன். அவ கட்டளைக்காகத்தான் தலை வணங்குகிறேன். நா கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்காதே சுமி! என்னை மணக்க உனக்கு சம்மதந்தானே!" உணர்ச்சியற்ற குரலில் கேட்டு கொண்டே அவள் எதிரே தன் கரத்தை நீட்டினான் மகேந்திரன்.

அவன் கண்களில் தெரிந்த வெறுமை அவளை அவன் சொன்னது உண்மை என நம்ப வைத்தது....

"என் நளினியின் திருபதிக்காக நான் என் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கேன்" என்ற சுமி தன் சம்மதத்தை தெரிவிக்கும் பாவனையில் அவன் கைகளில் தன் கையை பதித்தாள்.

அங்கே அன்பு மலர் மலர்வது கண்டு மேலேயிருந்து அந்த தியாகக்கனி நிறைவுடன் சிரித்தது.

நிறைந்தது.